Sunday 14 May 2023

இன்று ஐயர் பதிப்பு என்று சொல்வது போல் நாளை சரவணன் பதிப்பு என்று சொல்ல வேண்டும் - ப. சரவணன் நேர்காணல்

ப.சரவணன் தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், எழுத்தாளர். சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் என்ற தமிழ் ஆய்வாளர்கள் வரிசையின் இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். தம் இருபத்தொன்றாம் வயதில், அருட்பா-மருட்பா என்ற வரலாற்று நூலை எழுதித் தமிழ் ஆய்வுப் புலத்தில் பெரும் கவனத்திற்கும் உள்ளானார். சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தமிழ்விடு தூது, திருவாசகம் ஆகிய நூல்களுக்கு இன்றைய தமிழில் எளியமுறையில் உரையெழுதி வெளியிட்டிருக்கிறார். அவற்றை ஆய்வுரைகளாகவும் கருதலாம். அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு, உ.வே.சா-வின் அனைத்து முன்னுரைகள் கொண்ட சாமிநாதம், வேங்கடம் முதல் குமரி வரை ஆகிய தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். நவீன நோக்கில் வள்ளலார், கானல்வரி ஒரு கேள்விக்குறி போன்ற நூல்கள் தரமான ஆய்வுகள் கொண்டது. தமிழக அரசு அங்கீகரித்த நாற்பத்தோரு செவ்வியல் இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிய உரையுடன் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடும் திட்டத்தின் கீழ், செவ்விலக்கியங்களுக்கு உரை எழுதிப் பதிப்பிக்கும் பணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.

ப. சரவணன்

ப.சரவணன் மேல்மலையனூர் கிராமத்தில் 1973-ல் ஜூலை மாதம் 31-ஆம் தேதி பிறந்தார். தந்தை பழனிச்சாமி; தாய் பிரேமாவதி. மேல்மலையனூர் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தபின், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வியில் பி.லிட்., படித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றார். இந்திய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகப் பதினைந்து வருடங்களுக்கும்மேல் பணியாற்றியிருக்கிறார். சென்னை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின்பு தலைமையாசிரியராகப் பதவி உயர்ந்தார். இவரது மனைவி தேவியும் ஓர் ஆசிரியர். மகன் இரவிவர்மன், பள்ளி மாணவன். குடும்பத்துடன் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கிறார்.

உங்களுடைய குடும்பத்தில் தந்தை, தாத்தா ஆகியோர் தமிழ் இலக்கியம் தெரிந்தவர்கள், தாத்தா தான் வள்ளலாரை அறிமுகப்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய ஆளுமையில் அவர்களின் பங்களிப்புப் பற்றிச் சொல்ல முடியுமா?

மரம் வளர்ந்து எவ்வளவு பெரியதானாலும் விதையிலிருந்தே அது முளைத்தெழுகிறது இல்லையா. என்னுடைய தாத்தா, அப்பாவிடமிருந்து முளைத்தெழுந்தவன் நான். எங்கள் குடும்பம் பக்தியும் தமிழும் கமழும் இடமாக இருந்தது. தாத்தா கூத்துவாத்தியார், நாடகங்கள் எழுதுவார். எனது அப்பாவின் சிறு வயதில் தாத்தா இறந்துவிட்டார். இன்னொரு தாத்தா, அப்பாவுடைய பெரியப்பா, திண்ணைப் பள்ளி ஆசிரியர், ஊர் மணியம் பார்க்கக்கூடியவராகவும் இருந்தார். இயல்பாகவே சைவக் குடும்பத்தில் உள்ளபடி திருவாசகமும், தேவாரமும், கந்தசஷ்டி கவசமும் பெரிய தாத்தாவிடமிருந்து கேட்க முடிந்தது. நான் திருவாசகம் ஓதினால் எனக்குப் பிடித்ததைப் பெரிய தாத்தா வாங்கித் தருவார். அவர் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதுண்டு, கருடனைப் பார்க்காமல் சாப்பிடமாட்டார். சைக்கிளில் தாத்தாவை உட்காரவைத்து ஏரிக்கரையோரம் கருடனைக் காணக் கூட்டிக்கொண்டு போவேன். பின்னாளில் காந்தியின் சுயசரிதை வாசிக்கும் போது காந்தியும் தன் அம்மாவின் விரத நாட்களில் அம்மாவிற்காகச் சூரியனைத் தேடிக் கொண்டிருப்பார். காந்தியின் அம்மா, எனது தாத்தா மாதிரி, மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

அப்பா பள்ளி ஆசிரியர். சைவம் மேல் கொண்ட ஆர்வத்தைவிட நாவல் போன்று நவீன இலக்கியம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக அப்பா இருந்தார், தமிழில் நிறைய வாசிப்பார். அவரிடமிருந்துதான் வாசிப்புப் பழக்கம் வந்தது. பள்ளி நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்து வந்து வாசிக்கச் சொல்லுவார். அவருக்கு பைண்டிங் செய்யத் தெரியும், நூலகங்களிலிருந்து எடுத்து வந்த புத்தகங்கள் கிழிந்திருந்தால் தானே பைண்ட் செய்து பாதுகாப்பார். குடும்பமாக நாங்கள் நூலகப் பராமரிப்பில் ஈடுபட்டோம். நூலகங்களுக்கு வரும் புத்தகங்களுக்கு எண் எழுதுவது அட்டை போடுவது எல்லாம் நாங்கள் செய்வோம். நூலகத்தின் சாவியும் எங்களிடம்தான் இருக்கும். இதழ்களில் வரும் தொடர்கதைகளைக் கிழித்து பைண்ட் பண்ணி வைப்போம். அவ்வாறே கல்கி, சாண்டியன் ஆகியோரை வாசித்தோம். இவர்களுடைய தூண்டுதல் எனக்குத் தமிழ்மேல் ஆர்வம் வர மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது.


பெரும்பாலும் உங்களுடைய ஆர்வம் ஆய்விலும் பதிப்பிலும் தான் உள்ளது. இவற்றின் மேல் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

என் சகோதரர்களும் நானும் நூலகங்களிலிருந்து அனைத்து வித நூல்களையும் கொண்டு வந்து படிப்போம். ஆனால் எனக்குப் புனைவின்மேல் இருந்த ஈடுபாட்டை விட புனைவு இல்லாத அறிவார்ந்த ஆய்வுப் பூர்வமான படைப்புகளின் மேல் ஆர்வம் இருந்தது. அப்பா நாவல் வாசிக்கும்படி தூண்டினாலும் எனக்கு அவற்றின் மேல் பெரிய ஈடுபாடு வரவில்லை.

தாத்தா சமயம் சார்ந்த நூல்களைச் சேர்த்து வைத்திருந்தார். இரண்டு, மூன்று முறை காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள ஊர்களுக்கு யாத்திரை செய்து அதன் தல புராண நூல்களை வாங்கிவருவார். அதில் ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘ஊரும் பேரும்’ தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் ‘வேங்கடம் முதல் குமரி வரை‘ நூல்களை எடுத்து வாசிப்பேன். அந்த நூல்களில் உள்ள தகவல் சார்ந்த விஷயங்களை மிக விரும்பி வாசித்திருக்கிறேன். வாசிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல் கொண்ட நூல்களைத்தான் நிறைய வாசிப்பேன். பொதுவாக வாசிக்கக் கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படும் ஆய்வு சார்ந்த நூல்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். 

தாத்தா சமயம் சார்ந்த விஷயங்களிலும் அப்பா தமிழ் இலக்கியத்திலும் எனக்கு ஆர்வத்தைத் தூண்டினர். அப்பா அரசியல் கூட்டங்களுக்குச் செல்பவராக இருந்தார். அறிஞர் அண்ணாவின் பேச்சை மிக விரும்பிக் கேட்பார். நான் டீக்கடையில் முரசொலி வாசித்தே தமிழ் கற்றுக்கொண்டேன். எங்கள் ஊர்களில் இருந்த கலைஞர் படிப்பகங்களில் உள்ள அனைத்துத் தரப்பு நூல்களையும் இதழ்களையும் வாசித்து விடுவோம். 

அப்பா அனைத்து வித நூல்களையும் விரும்பி வாசிப்பார். அவர் பல இயல்புகள் கொண்டவராக இருந்தார். அவற்றுள் ஆய்வு சார்ந்த கூறு மட்டுமே என்னிடம் ஒட்டிக் கொண்டது.

உங்கள் சிறுவயது ஆர்வம் எவ்வாறு வளர்ந்து பதிப்பாளராகவும் ஆய்வாளராகவும் உங்களை மாற்றியது?

ஊரில் இருக்கும்போது கையெழுத்துப் பிரதி நடத்துவது, திமுக கூட்டங்களில் பேசுவது என்று நாட்கள் சென்றுகொண்டிருந்தன. அப்பா ‘இப்படியே இருந்தால் சரியா வரமாட்டேன்னு’ என்னைச் சென்னைக்கு அனுப்ப நினைத்தார். அதே நேரத்தில், நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது! அது ஏமாற்று வேலை என்று தெரிந்துகொண்டேன். அந்த ஏமாற்றத்தால் சென்னையில் அக்காவின் வீட்டிலேயே இருந்துவிட்டேன். அப்போது எனது மாமா சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். ஆய்வு சார்ந்த நூல்களை வாசித்தால் Ph,D., படிக்கும் போது வசதியாக இருக்கும் என்று சொன்னார். அவ்வாறு தமிழ்நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், ஆய்வேடுகள் என வாசித்துக் குவித்தது, என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது. 

குடும்பத்துடன் ப. சரவணன்

சிலப்பதிகாரம், கலிங்கத்துபரணி ஆகிய மரபு இலக்கியங்களுக்குத் தொடர்ந்து இன்றைய தமிழில் உரை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எளிதாக வாசிக்கக்கூடிய உரையை எழுதும் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது. உரையை எழுத என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்? 

கல்லூரி மாணவனாக இருக்கும்போது சிலப்பதிகாரத்திற்கு உரை எழுத ஆரம்பித்துவிட்டேன். அங்கும் இங்குமாக சிலப்பதிகாரத்தை வாசித்திருந்தாலும் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய ‘சிலப்பதிகார ஆராய்ச்சி’ சிலப்பதிகாரத்தின் மேல் மாறுபட்ட வாசிப்பை அளிக்க வேண்டிய தேவை இருப்பதைக் காட்டியது. சிலப்பதிகாரத்திற்கு உரைகள் பல இருந்தாலும் அவை கடினமாகவே இருந்தன. எனக்குப் பொருள்கொள்வதிலும், புரியாத பகுதிகளையும் தடை ஏற்படும் பகுதிகளையும் குறிப்பெடுத்துக்கொள்வேன். பின் அவற்றைக் குறித்துப் பாவலர் மணி ஆ.பழநி அவர்களுக்கு கடிதம் எழுதுவேன். அவர் உரிய நூல்களை வாசிக்கும்படி வழிகாட்டுவார். உரைகளில் உள்ள குழப்பங்களைச் சுட்டிக்காட்டுவார். அவ்வாறு நான் புரிந்துகொள்வதற்காகவே எழுதியதுதான் சிலப்பதிகாரம் உரையின் முதல் பகுதிகள். நான் உரை எழுதியதை ஆ.பழநி-யிடம் தெரிவித்தபோது அவர் என்னைக் காத்திருக்கும்படி சொன்னார். பின் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தே சிலப்பதிகாரத்தை முழுவதுமாக உரை எழுதி வெளியிட்டேன்.

நான் சிலப்பதிகாரத்தை வாசிக்கும்போது பட்ட இன்னல்களை வாசகர்களும் படக் கூடாது என்பதுதான் எளிய உரையை நோக்கி என்னைச் செலுத்தியது. ஒரு வாசகன் எங்கெல்லாம் தடுமாறுவானோ அந்த இடத்தில் என்னை வைத்துப் பார்த்துக்கொள்வேன். 

ஆசையோடு ஒர் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பிக்கிறோம்; ஆனால் அதில் குழப்பம் ஏற்படுகிறது, மூலம் விளங்கவில்லை என்று உரையை வாசித்தால், அந்த உரை, மூலத்தையும் சேர்த்துக் குழப்பிவிடும். உரையாசிரியரோ தமக்கு விளங்காத இடங்களைத் தாவிச் சென்றிருப்பார். நாவலர் வேங்கடசாமியுடைய உரை சற்றுக் கடினமானதாக இருக்கும். ஐயருடைய உரை, குறிப்புரையாக இருக்கும். 

பெரும்பாலும் சங்க இலக்கியங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது புலியூர் கேசிகன்தான்! அதில் மாற்றுக் கருத்து இல்லை. ரொம்ப எளிமையான உரை. சங்க இலக்கியங்களைத் தமிழ்நாடு முழுக்கவும் அறியச் செய்தார். அவருடைய பங்களிப்பு என்பது சங்க இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் அனைவரிடமும் கொண்டு சென்றது. ஆனால் அவர் நிறைய இடங்களைத் தாவிச் சென்றிருப்பார். சில இடங்களில் இது தேவையற்ற வர்ணனை என்று நினைத்திருக்கலாம், செய்தி மட்டும் சென்று சேர்ந்தால் போதும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அதற்குள்ளேயும் நமது பண்பாடு ஒளிந்து கொண்டிருக்கிறது. அது நமக்கு முக்கியமாக இருக்கிறது. 

ஒரு பாட்டில் ‘இலங்குதல்’ என்ற சொல் வருகிறது என்றால் அதற்குப் பொருள் விளங்குதல் அல்லது ஒளிர்தல். அவன் மார்பில் அணிகலன் இலங்கியது என்று இருந்தால், உரை எழுதுகிறவர்கள் பாட்டில் உள்ளதையே கொடுப்பார்கள் அல்லது அவன் மார்பில் அது இருந்தது என்று சொல்லிச் சென்றுவிடுவார்கள். அவன் மார்பில் அணி ஒளிர்ந்து விளங்கியது என்று சொல்லாம் என்று பார்ப்பதில்லை. இது சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அந்த இடத்தில் அந்த நூல் என்ன சொல்கிறது என்று தெரியாமல் ஆக்கிவிடும். இத்துடன் உரை எழுதுபவரின் புலமையைக் காட்டுவது, சொல் பிரித்துப் பொருள் கொள்வது, சொல் சேர்த்துப் பொருள் கொள்வது என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய போதாமைகள் இல்லாமல் பதிப்பிக்கவேண்டும் என்று நினைத்தேன்.

நல்ல உரைக்கான அடிப்படை இலக்கு, உரையின் மூலக் கவிதையை வாசிக்கத் தூண்டவேண்டும். அப்படி வாசிக்கையில் எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் தெரியாமல் திணறக் கூடாது. அதனால் ஓர் அசைச் சொல்லைக் கூட விடாமல் பொருள்கூறி, உரை எழுதவேண்டும். அந்த உரையானது, வாசகனின் வாழ்நாளில் அதைத் திரும்பிக்கூட பார்க்கவிடாமல் செய்துவிடக்கூடாது. வாசகன் பக்கம் நான் இருந்து உரை செய்யவே விழைகிறேன். 

உங்களிடம் பேசினால் உ.வே.சாமிநாதையரை பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. அவ்வாறு அவரைத் தேடித் தேடிப் பதிப்பித்திருக்கிறீர்கள். உங்கள்மேல் அவர் இத்தனைப் பாதிப்பு செலுத்தியது எப்படி? பொதுவாக, திமுகவில் ஈடுபாடு கொண்டவர்கள் அவரைக் கண்டுகொள்வதில்லையே. 

உ.வே.சா-வை நான் கண்டுகொண்டதைவிட அவர் என்னை ஆட்கொண்டார் என்றே சொல்லவேண்டும். நாம் என்ன அவரைக் கண்டுகொள்வது. உலகமே அவரைக் காண்கிறது. ’திராவிட இயக்கங்களுக்கும், பெரியாருக்கும் அவருக்குமான நட்பு பற்றியும், பெரியாரிடம் அவர் உதவி பெற்றது’ ஆகியவற்றையெல்லாம் சுவாமிநாதம் என்ற நூலில் பதிவு செய்துள்ளேன்.

திராவிட இயக்கங்களோ மற்றவர்களோ அவரைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்ல மாட்டேன். திராவிட இயக்கங்கள் தூக்கிப் பிடித்துப் பேசுவதற்கோ அல்லது வேறு ஒரு தளத்திற்குத் தமிழை நகர்த்திச் செல்வதற்கோ உ.வே.சா.தான் அடிப்படைக் கருவி நூல்களான சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றைக் கொடுத்துள்ளார் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் மறைமுகமாகப் பங்காற்றியது உ.வே.சா. என்று சொன்னால் மிகையாகாது. 

மேலும், திராவிட இயக்கம் சமூக நீதியை மையமாகக் கொண்டு இயங்கியது. அவ்வியக்கத்தின் தலைவர்களாக இருந்த அறிஞர் அண்ணாவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் உ.வே.சா.வின் தமிழ்ப் பணியைக் குறைத்து மதிப்பிட்டதில்லை. இன்றைய முதல்வரும் உ.வே.சா.வின் பணியைப் போற்றியமை கண்கூடு. எனவே தமிழ்ப் பணியை விரும்பியவர்கள் தாம் சார்ந்த இயக்கங்களைத் தாண்டியே உ.வே.சா.வை நேசித்துவருகின்றனர் என்பதே உண்மை.

அவர் ஒரு நூலை எப்படிப் பதிப்பிக்கவேண்டும் என்று அறிவியல் தன்மையுடன் செயல்பட்டிருக்கிறார். அறிவியல் தன்மை என்று நான் சொல்வது அவருக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் பதிப்பித்த நூல்கள் அறிவியல் தன்மையுடன் இருந்தன. அந்த அடிப்படையில் உ.வே.சா எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர். 

விகடனில் வெளியான அவருடைய என் சரித்திரத்தை வீட்டில் பைண்ட் செய்து வைத்திருந்தார்கள், சின்ன வயதில் அதை வாசிக்கும்போது வியப்பாக இருக்கும் எத்தனை அழகிய நடை என்று! அவர் தன் கிராமத்தைப் பற்றி எழுதும்போதும் தன் ஆசிரியர் பற்றிக் கூறும்போதும், எனக்கு அது என் கிராமத்தை கூறுவதுபோல அத்தனை அணுக்கமாக இருக்கும். அவர்மேல் ஏற்பட்ட பக்திக்கு ‘சாமிநாதம்’ தொகுக்க ஆரம்பித்ததுதான் காரணமாக இருந்தது. ஒவ்வொறு முன்னுரையும் சரித்திரம் என்று தோன்றியது. என்னை சாமிநாதம் நூலைச் செய்ய சொன்ன எழுத்தாளர் பெருமாள் முருகன் அந்த நூலின் முன்னுரையில் ’அது எத்தனை அரிய விஷயம்!’ என்று குறிப்பிட்டிருப்பார்.

எனக்கு ஆய்வுப் பதிப்புகள்மேல் இருந்த விருப்பத்தை இன்னும் பெரிதாக்கியது சாமிநாதம். மேலும் அவரது கட்டுரைகளை ஆய்வுடன் பதிப்பிக்கவும் தூண்டியது. என்னுடைய ஆய்வுக்கும் பதிப்பிக்கும் நேர்மைக்கும் என்றும் அவர்தான் ஆதர்சம். 


சிலப்பதிகாரம் காவிய மரபைச் சேர்ந்தது, திருவாசகம் பக்தி இலக்கியத்தைச் சார்ந்தது. அவ்வாறு இருக்க, இவற்றுக்கு உரை எழுதும்போதும் பொருள்கொள்ளும்போதும் எப்படி உணர்கிறீர்கள். இவ்விரண்டுக்கும் உரை எழுதும்போது ஏதாவது சிரமங்கள் இருந்ததா? 

திருவாசகத்திற்கு உரை எழுதியது இறைவன் அளித்த பேறு என்றே கருதுகிறேன். முதலில் திருவாசகத்திற்கு உரைக்கொத்து தயார் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். திருக்குறளுக்கு இருப்பதைப் போல. அவ்வாறு திருவாசகத்திற்கு எழுதிய உரைகளை வாசிக்கையில் அவை அனைத்தும் ஒன்று போலவே இருந்தன. திருக்குறளுக்குப் பலர் பல விதங்களில் உரை எழுதியிருப்பார்கள் கருத்துக்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால் திருவாசகத்திற்கு வரும்பொழுது அவை ஒன்றாகவே இருந்தன. அதைத் தொகுப்பதினால் பயன் இருப்பதாக தோன்றவில்லை. இதை, சந்தியா பதிப்பகம் நடராசனிடம் சொல்லவே அவர் என்னையே உரை எழுதச்சொன்னார். நான் மறுத்தும்கூட அவர் விடாப்பிடியாக நின்றதால் இதுவும் அவன் ஆணை என்று உரை எழுதினேன்.

சைவப் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தாலும் சைவசிந்தாந்தம் பற்றிய அறிதல் குறைவாகவே இருந்ததால் உரை எழுத ஆரம்பித்தாலும் சிரமமாகவே இருந்தது. பின் சைவ மடங்களுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றும் சைவ புராணங்கள், சைவ சமய நூல்கள் வாசித்தும், தண்டபாணி தேசிகர் தொடங்கி திருவாசகத்திற்கு எழுதப்பட்டுள்ள உரைகள் அனைத்தும் வாசித்தே நான்காண்டுகளில் அதற்கு உரை எழுதினேன். அதையும் மீறி முட்டுப்பாடுகள் வரும்பொழுது எனக்குக் கைகொடுத்த நூல், கோயம்புத்தூர் கண்ணாயிரம் எழுதிய திருவாசகம் ஏழு தொகுதிகள். ஓர் உரையாசிரியருக்குத் தடை ஏற்படாமல் இருக்காது, தடைகளை மீறிச் செயல்படுவதில்தான் மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கின்றன.

திருவாசகத்தை பக்தி மட்டும் சார்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அதில் எத்தனையோ கதைகள் உள்ளன. பண்பாட்டுச் செய்திகள் உள்ளன. கா.நா.சு தன் நாவலுக்குப் பொய்த்தேவு என்று பெயர் வைத்தது அங்கிருந்துதானே. தமிழ் இலக்கியத்திற்கு உரை எழுதுவது வேறனுபவமாக இருந்தது என்றால் திருவாசகத்திற்கு உரை எழுதியது மெய்ஞான அனுபவமாக இருந்தது. 


நீங்கள் விரும்பி வாசிக்கும் உரையாசிரியர் யார்?

பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார். நான் தமிழ் இலக்கியத்திற்காக எவ்வாறு உ.வே.சா-வை மனதில் நினைக்கிறேனோ, அவ்வாறே உரைக்கு சோமசுந்தரனார். அவர் உரைகளில் நேர்மையும் பரந்துபட்ட வாசிப்பும் எளிமையும் தர்க்கபூர்வமானவையாக இருப்பதை நீங்கள் காணலாம்.

உங்களுடைய தமிழ் ஆசிரியர் வடலூர் சீனி.சட்டையப்பனார் பற்றி சொல்லுங்கள்.

அவர் வள்ளலார் குருமரபு வரிசையில் வந்தவர். வள்ளலாரின் நேரடி சீடர்களின் சீடரிடம் பாடம் கேட்டவர். பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் இருந்தபோது, தீவிரமான நாத்திகராக இருந்தார். பின்னர்க் காலவோட்டத்தில் வள்ளலாரின் ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டார். இருந்தாலும் கண்மூடித்தனமான நம்பிக்கையை அவர் கொண்டிருக்கவில்லை. வள்ளலாரின் சீர்திருத்த ஆன்மீகத்தைத் தன் வழியாகக் கொண்டிருந்தார். எங்கள் ஊரில் கடுமையான உயிர்ப் பலி தந்துகொண்டிருந்தார்கள். ஆசிரியர் சீனி.சட்டையப்பனார் விழுப்புரத்தில் இருந்த சமண ஜீவ காருண்ய அமைப்புடன் இணைந்து அதைத் தடுத்து நிறுத்தினார்.

அவரிடம் கடைசிவரை வங்கிக் கணக்கெல்லாம் இல்லை. வாங்கும் சம்பளத்தில் தான தருமங்கள் செய்துவிட்டு மீதத்தை அந்தந்த செலவுகளுக்காக வைத்துக்கொள்வார். வள்ளலாருக்குத் தன் சொந்த செலவில் கோவில் ஒன்று கட்டி ஆண்டுதோரும் அதில் அன்னதானம் செய்து வந்தார். உயிர்கொலைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்கெல்லாம் ஆதாரமாக இருந்த வள்ளலாரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு வள்ளலாரின் படம் எங்கள் வீட்டில் இருந்துதான் கிடைத்தது. எங்கள் அப்பா அவருடன் ஆசிரியராக இருந்தார். நானும் அவருடனேயே இருப்பேன். அவரைச் சீண்டி கேள்வி கேட்கும் அளவிற்கு மிக நெருக்கமாக இருந்தேன். நானும் அவரும் சேர்ந்து திருவருட்பாவிற்கு அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளோம். அவர் என் தமிழிற்கு ஆசிரியர், ஆன்மீக குரு.


உங்களுக்கெனத் தனிப் பதிப்புமுறை என்று முறைமை ஏதாவது வைத்துக்கொண்டிருக்கிறீர்களா?

ஆம், இருக்கிறது. நாங்கள் தமிழ் வளர்ச்சித் துறைக்காகத் தமிழ் இலக்கியங்களை உரை எழுதிப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதில் சில வழிமுறைகளைக் கையாள்கிறோம். தொடக்கக் காலத்தில் வரிகளுக்கு முற்றுப்புள்ளியோ, அரைப்புள்ளியோ இல்லாமல், பின்னால் படிப்பவரின் வசதிக்காக இவற்றைச் சேர்த்துக்கொண்டது போலத்தான் சிலவற்றைச் செய்கிறோம்.

பாடல், அதன் கீழ்ப் பதவுரை. அதன் தொடர்புடைய செய்திகள் இருப்பின் அங்கேயே பொருத்தப்பாட்டோடு அடைப்புக் குறியிட்டுச் சொல்வது. பின்னிணைப்பில் நூல்களில் இடம்பெற்றிருக்கும் குறிப்புகள், படங்கள், தகவல்கள் தருவது என்று வைத்துள்ளோம். இந்த முறைமையைத் திருவாசகம் உரையிலிருந்து செய்துவருகிறேன். யாரும் சொல்லிச் செய்ததில்லை, நானே வாசகர் இடத்தில் இருந்து பார்த்து, படிப்பவருடைய வசதிக்காகச் செய்தது.

உ.வே.சா பின்னிணைப்பாக நூல் சார்ந்து மேலும் தகவல் சொல்லும் தன்மையை கொண்டிருந்தார். அதை முன்மாதிரியாக கொண்டுசெய்தது. இதையே எங்கள் குழுவிற்கும் செய்முறை முறைமையாகப் பின்பற்றச் சொல்லியிருக்கிறேன். பத்தாம் வகுப்பு மாணவன் எடுத்து வாசித்தாலும் அவனுக்கு புரிய வேண்டும். எளிமைதான் முக்கியம், புலமையைக் காட்டுவதல்ல. ஏனென்றால் எளிமைதான் நிலைத்து நிற்கும்.

இதை ப.சரவணன் முறைமை என்று சொல்லலாமா?

சொல்லலாம். நான் கையாளும் இந்தப் பதிப்பாய்வு முறைமையை இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

உ.வே.சுவாமிநாதையர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோர்களின் காலத்தில் பின்பற்றி வந்த பதிப்பு முறைமையை இன்று எப்படிக் கையாளவேண்டும்? 

பதிப்பாசிரியர் என்பவர் வேறு, உரையாசிரியர் என்பர் வேறு. சில சமயம் இருவருமே ஒருவராக இருக்கலாம். இன்று இருவருமே இல்லாமல் ஆகிவிட்டார்கள். அதன் கடைசி கண்ணியாக என்னை நினைத்துக்கொள்வேன். அதனால் எனக்குப் பின் சில உரையாசிரியர்கள் கொண்ட ஒர் குழுவை உண்டாக்க முயற்சியும் செய்துவருகிறேன். உரையாசிரியராக இருப்பவர்களுக்கு பரந்துபட்ட அறிவு வேண்டும். பொருள் விளங்காத இடத்தில் பொறுமையாக அதை ஆராய்ந்து தெளிய வைக்க வேண்டும். அவர் ஆய்வு செய்யும் இலக்கியத்துடன் தொடர்புடைய நூல்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும். இன்று நான்கு புத்தகத்தை பார்த்து உரை எழுதிவிடலாம், இருக்கும் பதிப்பை மறுபதிப்பு செய்துவிட்டால் பதிப்பு ஆகிவிடுமே என்னும் மனப்பான்மை வந்திருக்கிறது. அதுவல்ல பதிப்பு; அதன் பெயர் மறுஅச்சு. அப்படிச் செய்பவர் பதிப்பாளர் இல்லை, வெளியீட்டாளர். 

உரையாசிரியன் என்பவர் வாசகன் எங்குத் தடுமாறுவான் என்று முன்கூட்டியே அறிந்துகொள்பவன். அவன் குழம்பும் இடத்தில் சரியான வார்த்தைகளை இட்டுத் தரவேண்டும், அந்த வார்த்தை பொருத்தமானதா என்று பார்க்கவேண்டும். உதாரணமாகக் ‘கண்ணி’ என்பதும் மாலையைக் குறிக்கும், ‘தார்’ என்பதும் மாலையைக் குறிக்கும். இப்போது கண்ணி எங்கே சூடுவான் தார் எங்கே சூடுவான் என்று பார்க்கவேண்டும். இரண்டுமே சூடுவதுதானே என்ற சொல்லக்கூடாது. யானையின் காலில் கட்டும் சங்கிலிக்கு நீர்வாரிச் சங்கிலி என்று பெயர் அதன் முதுகில் கட்டும் சங்கிலிக்கு வேறு பெயர். இந்த மாதிரியான நுணுக்கங்களை அந்த உரையாசிரியர் அறிந்து கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான தகவல்கள் பழைய உரையிலும் இருக்கும், ஆனால் அவை எங்காவது மறைந்து கொண்டிருக்கும். இன்றைய உரையாசிரியன் இதை வெளிக்கொணரவேண்டும். உ.வே.சா. சொல்லாத புது விவரணைகளா? சி.வை.தாமோதரம் பதிப்பிக்காத சொற்களா? ஆனால் அவை எவற்றைச் சொல்கின்றன? அதற்குச் சமமான சொல் இன்று என்ன உள்ளது? மூலப்பாடல் இதைத்தான் சொல்கிறதா? என்று உள்வாங்கிக்கொண்டு ஓர் உரையாசிரியன் செயல்படுவது மிக முக்கியமானது. 

இப்போது நாவல்களுக்குக் கூட, பாடபேதம் நிறைய வந்துள்ளது. கமலாம்பாள் சரித்திரம் நாவலைப் பதிப்பிக்கும்போது அதை உணரமுடிந்தது. நான் நாவல்தானே என்று கடந்துவிட மாட்டேன் அதற்குள்ளும் என் பதிப்பு முத்திரையைப் பதிவுசெய்ய நினைப்பேன். அன்று ஐயர் பதிப்பு என்று சொன்னதுபோல், இன்று சரவணன் பதிப்பு என்று சொல்கின்றனர். எனக்குப் பின்னும் உரைகள் வரவேண்டும். அதற்கு இடம் கொடுக்கும் வகையில்தான் என் உரைகள் இருக்கும். மேன்மேல் உரைகள் வரும்போது இந்தச் சமூகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்களுடைய இருபத்தி ஒன்றாம் வயதில் அருட்பா மருட்பா வரலாறு நூல் எழுதி அந்தப் பெயராலேயே அறியப்பட்டவர் நீங்கள். அந்த இளம் வயதில் ஒரு சமயத்தில் பெரும் பேசுபொருளாக இருந்த ஒரு வரலாற்று நிகழ்வை ஆய்வு செய்து வெளியிட உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது?

ஒரு குருட்டுத் தைரியம்! என் கல்லூரி ஆசிரியர் வீ.அரசு என்னிடம் M.A ஆய்வுக்கு ‘ரத்தினம் நாயுடு பதிப்பு வரலாறு’ செய்யச் சொன்னார். அது முக்கியமான ஆவணமாக இருந்தாலும் எனக்கு உடன்பாடு வரவில்லை, திருப்தி இல்லாமல் இருந்தது. நான் அப்போதுதான் நான் சென்னைக்கு வந்திருந்த சமயம், என் ஆசிரியர் சடையப்பனாரின் தாக்கம் மிகுதியாக இருந்தது. ஆசிரியர் மீண்டும் என்ன செய்ய போகிறாய் என்று கேட்டார் அருட்பா-மருட்பா செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 

அருட்பா-மருட்பா பதிப்புக்கு நிறைய விதங்களில் உதவி எதிர்பாராமல் கிடைத்தது. பெரும்பாலும் உதவியது தனி மனிதர்கள். இலங்கையிலிருந்து ஒரு கருத்தரங்கிற்கு வந்த சொக்கன் என்பவர் எனக்கு வேண்டிய துண்டு பிரசுரங்கள், தகவல்களை இலங்கையிலிருந்து அனுப்பிவைத்தார். இன்றுவரை அவர் யாரென்று தெரியாது. இந்த நூல் பெயராலேயே அழைக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. இவையெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வள்ளலாரே என் மூலமாகச் செய்துகொண்டாரோ என்று நினைத்துக்கொள்வேன்.


தமிழ் வளர்ச்சி சார்ந்து இப்பொழுது அரசு முன்னெடுத்துள்ள 41 தமிழ் செவ்வியல் இலக்கிய நூல்களை வெளியிடும் திட்டத்திற்கு நீங்கள் தலைமை பொறுப்பில் உள்ளீர்கள். இந்த சென்னைப் புத்தகத் திருவிழாவில் வெளிவந்த பத்துபாட்டு நூல்கள் அத்தனையும் விற்றுத்தீர்ந்துள்ளன. இந்த திட்டத்தை விளக்கமுடியுமா?

தமிழக அரசின் மானிய கோரிக்கையின்போது சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிய மக்களும் வாசிக்கும்படி வெளியிடவேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு முன்னர் செய்தபோது பிழை ஏற்பட்டுவிட்டது. அதைக் களைந்து தெள்ளிய உரையுடன் செம்பதிப்பாகக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தார்கள். அரசு இதில் ஈடுபாடுடன் இருக்கும் ஆசிரியர்கள் வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, எங்களை உரை எழுதச் சொல்லி என்னை இத்திட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறது. இந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் பள்ளி ஆசிரியர்களே. இதுவரை தனியாகச் செயல்பட்டவர்கள் சேர்ந்து ஒரு குடும்பமாக இப்போது உரை செய்கிறோம். 

மூன்றாண்டுகளுக்குள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் என்று திட்டம். அதனால் எங்களால் முடிந்தவரை உழைத்து இந்த நூல்களை வெளிக்கொணர்கிறோம். அதற்காக அதன் தரத்தில் எந்தவிதச் சமரசமும் செய்துகொள்வதில்லை. தனியார்ப் பதிப்பகங்கள் வெளியிடும் அச்சின் தரத்திற்கு நூல்களைக் கொண்டுவந்திருக்கிறோம். வாசகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அறுநூறு தொகுப்புகள் விற்பனை ஆகின. ஆறாயிரம் பிரதிகள் விற்று தீர்ந்தன. இந்த வெளியீடு மூலம் சங்க இலக்கியத்தின் மேல் இருக்கும் பயம் இல்லாமல் ஆகும், படிக்க எளிமையானது என்று மக்கள் உணர்வார்கள். அதே நேரம் சங்க இலக்கியம் என்றால் இளக்காரமாக நினைக்கிறவர்களையும் மாற்றும். அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு நூல்களை மானியத்தில் அளித்தது. பத்து நூல்கள் வெறும் அறுநூறு ரூபாயில் கிடைப்பதனால் அனைவராலும் வாங்க முடிகிறது. இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியும் பொறுப்புணர்வும் கூடியுள்ளது.


நீங்கள் அண்ணன் என்று அழைக்கும் ஆய்வாளர் ஆ.ரா வேங்கடாசலபதிக்கும் உங்களுக்கும் உள்ள உறவு குறித்துச் சொல்லுங்கள்.

அவருடைய பாதிப்பு என்னிடம் நிறைய இருக்கிறது. அவர் புதுமைப்பித்தன் ஆய்வு மேற்கொண்டிருக்கும்போது அவருக்கு உதவியாளனாக இருந்தேன். அப்போது மயிலை சீனி.வேங்கடசாமி-யின் நூல்களை தொகுத்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு தகவல் தெரிவிப்பதற்காகக் கடிதம் எழுதியிருந்தார். அதன்மூலம் இருவருக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவருடன் பழகிப் பதிப்பு அடிப்படைகள், நுணுக்கங்கள், முறைமைகளை கற்றுக்கொண்டேன். நான் நன்றிப் பட்டியல் போடுவதும் அவர் சொல்லிச் செய்தது. அவர் யாருடைய பெயரையும் விட்டுவிடக்கூடாது என்று சொல்வார். அவர் கண்ணோட்டம் இல்லாமல் என் நூல்கள் வெளிவந்தது இல்லை. என்றும் எங்கள் உறவு குடும்ப உறவாக நீடிப்பதற்குத் தமிழ் காரணமாக இருக்கிறது. 

ஆய்வாளர் ஆ.ரா. வேங்டாசலபதி, காலச்சுவடு கண்ணனுடன் ப. சரவணன்

இந்த இலக்கியத்தைப் பதிப்பிக்கலாம், உரை எழுதலாம் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்?

உ.வே.சா உரையுடன் கூடியதை முதலில் பதிப்பிக்க வேண்டும் என்பார். எந்த இலக்கியத்திற்குப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கிறதோ அதை முதலில் செய்யவேண்டும். ஒர் இலக்கியம் மிகப் பிரபலமாக இருப்பதனாலேயே பிழையுடன், விளங்காமல், கடுநடையுடன் உரை எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு பிரபலமான இலக்கியமே இன்னும் முழுமையாக மக்களிடம் சென்று சேரவில்லை என்று மனம் நொந்து அந்த இலக்கியத்தைக் கையில் எடுக்கிறேன். அதை முதலில் செம்மையாக வெளிக்கொணர வேண்டும். பிழையில்லாமல் வாசகன் எளிமையாக வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


உ.வே.சா, தாமோதரம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த காலம் தமிழ்ப் பதிப்புக் கலையின் பொற்காலம் என்று சொல்லலாம். அக்காலத்தில் இருந்த பதிப்பு வசதிகளைக் கொண்டே அவர்கள் சாதித்து உள்ளனர். அவ்வாறு இருக்க இன்று அச்சுத்தொழில் தொழில்நுட்பத்தால் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் தமிழ் இலக்கியப் பதிப்பு மேலும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழ்ந்திருக்கிறதா?

நம்மிடம் இன்று புரிதலின்மை, தேக்கம் ஆகியவற்றுடன் அலட்சியமும் நிறைந்துவிட்டது. சி.வை.தாமோதரம் பிள்ளையோ, ஐயரோ தொடர்ச்சியாக அந்தப் புத்தகத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். ஐயர் அவர் முதல் பதிப்பை வெளியிட்டுவிட்டார் என்றால், இரண்டாம் பதிப்பை அவர் மாணவர்கள் செம்மை செய்வார்கள். மூன்றாம் பதிப்பு வரும்போது மீண்டும் அவரே அந்தப் பிரதியை மேம்படுத்துவார். தொடர்ந்து அந்த நூலுடன் இருந்துகொண்டிருந்தார்கள். நான் அவ்வாறு செய்வதில்லை. ஒரு நூல் வெளிவந்த பின் எனக்கும் அந்த நூலுக்குமான தொடர்பு விட்டுப்போய் விடுகிறது. அடுத்த நூலுக்குத் தாவி விடுகிறேன். நானும் அந்த நூலில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும். 

இன்று நம்முடைய பங்களிப்புப் போதவில்லை, நம்மிடம் அனைத்துவித வசதிகளும் இருக்கலாம். ஆனால் அவர்கள்போல் மேதைமை இல்லை.

நமக்கு மிக நீண்ட தமிழறிஞர் மரபு இருக்கிறது, இன்றைய தலைமுறையாக நீங்கள் இருக்கிறீர்கள். அந்த மரபின் தொடர்ச்சியாக இருப்பது எவ்வாறான உணர்வை உங்களுக்கு ஏற்படுத்துகிறது? 

ஐயர் நடந்த பாதையில் பயணிப்பதே நிறைவு. அவர் இருப்பது கடலில் என்றால் நான் கரையில் இருப்பது போல் இருக்கிறது. இருப்பினும் தமிழ் என் வாழ்வில் நிறைவை, மகிழ்ச்சியைத் தருகிறது. 

சந்திப்பு - அனங்கன் 

ப. சரவணன் ஆய்வாளர் - Tamil Wiki


ப. சரவணனின் சில நூல்கள்

பதிப்பு மற்றும் உரை:

  • சிலப்பதிகாரம் - சந்தியா பதிப்பகம்
  • கலிங்கத்து பரணி - சந்தியா பதிப்பகம்
  • தமிழ் விடு தூது - சந்தியா பதிப்பகம்
  • திருவாசகம் - சந்தியா பதிப்பகம்

தொகுப்பு மற்றும் பதிப்பு:

  • அருட்பா - மருட்பா கண்டன திரட்டு- காலச்சுவடு
  • சாமிநாதம் - (உ.வே.சா-வின் முன்னுரைகள்) காலச்சுவடு
  • தாமோதரம் - (சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைகள்) - காலச்சுவடு
  • வேங்கடம் முதல் குமரி வரை - சந்தியா
  • கமலாம்பாள் சரித்திரம் - சந்தியா 

எழுதியவை:

  • அருட்பா-மருட்பா வரலாறு - காலச்சுவடு
  • கானல்வரி ஒரு கேள்விக்குறி - தமிழினி பதிப்பகம்
  • நவீன நோக்கில் வள்ளலார் - காலச்சுவடு

அகரமுதலி:

  • திருவருட்பா அகரமுதலி - வடலூர் வள்ளலார் இளைஞர் மன்றம்.