Sunday 14 May 2023

கொடுங்கல்லூரில் கண்ணகி - அ.கா. பெருமாள்


கேரளம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகவதியை கண்ணகியாகவே கொள்ளும் மரபு காலங்காலமாய் இருந்து வருகிறது. மதுரையை எரித்த பின்னர் நெடுக நடந்த கண்ணகி நின்ற இடம் திருச்செங்குன்றூர். அது கொடுங்கல்லூர் அருகே உள்ள ஊர் என்கிறார் அடியார்க்கு நல்லார். இதனால் கிபி 12-ஆம் நூற்றாண்டிலேயே கொடுங்கல்லூர் பகவதி கோவில், கண்ணகி கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டது தெரிகிறது.

கொடுங்கல்லூர் பகவதி கோவில் கண்ணகி கோவிலே

ஆரம்பகால ஆய்வாளர்களில் சிலர் கொடுங்கல்லூர் பகவதி கண்ணகி அல்லள் என கூறியது முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டதல்ல. கொடுங்கல்லூர் பகவதியின் வழிபாடுச் சடங்குகள், கோவில் குறித்த பழையமரபுக் கதைகள், வழிபாட்டுப் பாடல்களில் அடங்கிய செய்திகள், விழாவின் நிகழ்வுகள் என பல்வேறு செய்திகளைத் தொகுத்து கண்ணகி வழிபாட்டுடன் பொருந்திப் பார்க்கும்போது உண்மை வெளிப்படும். இத்தகு ஆய்வு தமிழில் பெரிய அளவில் நடக்கவில்லை. கேரள அறிஞர்களில் வி.ஐ. இந்துசூடன், வி.ஆர். சந்திரன், கே.கே.என் குரூப் எனச் சிலர் இந்த ஆய்வை நெறிமுறையுடன் செய்துள்ளனர்.

கொடுங்கல்லூர் பகவதி அம்மனுடன் கண்ணகியை தொடர்புப்படுத்தும் வாய்மொழிச் செய்திகளும் கதைகளோ இல்லையென பி.எல். சாமி கூறுகிறார். (தமிழ் இலக்கியத்தில் தாய் தெய்வ வழிபாடு-1976-ப110). இது தவறான கருத்து. கொடுங்கல்லூர் பகவதி கண்ணகியே என்பதற்குரிய சான்றுகள் நிறையாகவே கிடைக்கின்றன.

இந்த சான்றுகள், இக்கோயிலின் அமைப்பு, இது தொடர்பான மலையாள இலக்கியங்கள், கோவிலின் கருவறை படிவம், பரிவார தெய்வங்கள் தொடர்பாக பேசப்படும் பழைய தகவல்கள், பகவதி கோவிலின் சடங்குகள் விழாக்கள் ஆகியவற்றின் எச்சமாக திகழும் சில அடையாளங்கள். 

பகவதியையும் கண்ணகியையும் இணைக்கும் வாய்மொழிப் பாடல்கள், சடங்குப் பாடல்கள் பாடல்கள் தெறிப்பாடுப் பாடல்கள். பகவதியைத் துதித்து வேண்டும் பாடல்கள்-ஸ்லோகங்கள் என பலவற்றிலும் கண்ணகியின் அடையாளங்களை இன்றும் தேட முடியும்.

விதவையான கண்ணகி

கொடுங்கல்லூர் தேவியை வாழ்த்திப் பாடும் தோத்திரப் பாடல்களில் “விதவா ரூபையாம் தூமவதியை நான் தொழுதேன்னேன் திங்கள் சூடும் பகவான்டே பத்தினியை நான் தொழுன்னேன்” என்பதும் ஒன்று. இங்கு கொடுங்கல்லூர் பகவதியை விதவை, பத்தினி என்னும் சொற்களால் குறிப்பிடப்படுவதை காணலாம்.

கோவலனை இழந்த கண்ணகி விதவையாகவே கொடுங்கல்லூர் வந்தாள் என்பதும் அவளை பத்தினி கடவுளாகவே கொள்ளும் பழைய மரபு தொடர்பான வாய்மொழி வழக்காறுகள் உள்ளன. இதுபோன்ற வேறு தோத்திரப் பாடல்களும் உள்ளன.

பழைய கோவில்

கொடுங்கல்லூர் பகவதி கோவில் விழாவின் கூறான தாலப்பொலி நிகழ்வு ஊரின் மற்றோர் இடத்தில் உள்ள ஒரு தேவி கோவிலிலிருந்து தொடங்குகிறது. இந்தச் சிறிய கோவிலே மூலக்கோவில் என்ற நம்பிக்கை உள்ளது. 1970-ஆம் ஆண்டில் இங்கே தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அப்போது கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பழமையான அமைப்பும், இக்கோவிலைப் பற்றிய வாய்மொழிச் செய்திகளும் இதைப் பத்தினிக்கோவில் என்றே முடிவு செய்யத் தூண்டுகின்றன. இதுபோன்ற சான்றுகளின் அடிப்படையில் சேரன் செங்குட்டுவன் கட்டிய பத்தினிக்கோவில் தாலப்பொலி தொடங்கும் கோவில் என்றும் வி.ஆர். சந்திரன் கூறுகிறார்.

இச்சிறு கோவில் இப்போது ஸ்ரீ குறும்பா பகவதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இப்போதும் பக்தர்கள் “என்றே குறும்பா பகவதி அம்மே கண்ணகி அம்மா”எனச் சொல்லி வழிபடுகின்றனர். இங்கிருந்து தாலப்பொலி சடங்கு ஊர்வலம் செல்லும்போது குறும்பா தேவி கண்ணகி தேவி என்ற வாசகம் பொதிந்த பாடல்கள் பாடப்படுகின்றன (கட்டுரை ஆசிரியர் இதை நேரில் கண்டார்). இக்கோவில் தொடர்பான வாய்மொழிப் பாடல்களிலும் இது கண்ணகி கோவிலே என்பதற்குச் சான்று உண்டு.

இரகசிய அறை

கொடுங்கல்லூர் பகவதி கோவிலில் உள்ள இரகசிய அறையைக் கண்ணகியுடன் தொடர்புபடுத்திப் பேசும் செய்திகளை இந்துசூடன், வி.ஆர். சந்திரன், அச்சுதமேனன் எனப் பலரும் பதிவு செய்துள்ளனர். இந்துசூடன், கொடுங்கல்லூர் பற்றிய தன் ஆங்கில நூலுக்கு இரகசிய அறை (The Secret Chamber) என்ற தலைப்பைக் கொடுத்திருக்கிறார். அது கண்ணகியின் சமாதி அல்லது எலும்புகள் அல்லது அவளது நினைவு எச்சங்கள் வைக்கப்பட்ட இடம் என்றும் கூறுகிறார்.

இந்த இரகசிய அறை பகவதி கோவிலின் கிழக்கு பக்கம் உள்ளது. இதன் நான்கு புறமும் சுவரால் அடைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை உண்டு, கெட்டித்தகடு வேயப்பட்டது. பகவதி கோவில் கிழக்கு சுவரில் உள்ள கதவைத் திறந்தால் இந்த இரகசிய அறையின் வடக்குச்சுவர் தெரியும்படி அமைந்துள்ளது. இச்சுவரின் நடுவே கருஞ்சிவப்பு துணி தொங்குகிறது. இந்தத் துணிக்குப் பூசையும் சடங்கும் உண்டு.

இந்த இரகசிய அறையில் தான் முதலில் மூலவிக்கரகம் பிரதிட்டை செய்யப்பட்டிருந்தது என்கின்றனர். இந்த அறையில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீமேரு சக்கரம் உள்ளது, விலை மதிப்பற்ற நவமணிகளும் உள்ளன என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்த இரகசிய அறையை ‘மூலஸ்தானம்’ எனப் பொதுவாகக் கூறுகின்றனர். இதில் உள்ள கண்ணகியின் சக்தியைப் பகவதிக்கு ஆவாகனம் செய்யும் தாந்திரிகச் சடங்குகள் தினமும் நடக்கின்றன. காலையில் இரகசிய அறையிலிருந்து, பகவதிக்கு ஆவாகனம் செய்யப்படும் சக்தி மறுபடியும் இரவில் இரகசிய அறைக்குத் திருப்பி அனுப்பப்படும். இதன் பிறகே மூலக்கோவிலின் வாசல் மூடப்படும்.

இக்கோவில் ஒரு பெருங்கல் பதுக்கை அல்லது புனிதமான புதைகுழி இருக்குமிடம் என்கிறார் இந்துசூடன். முனிவர்கள், ரிஷிகளின் சித்தர்கள் சமாதியான இடங்களைக் கோவிலாக மாற்றுவது என்றமரபு உண்டு. பிற்காலத்தில் கண்ணகியின் சமாதி, காளியை வழிபடும் கோவிலாக மாறியிருக்கலாம்.

இந்த இரகசிய அறை பற்றிய செய்தி மர்மமாகவே உள்ளது. இது பற்றிய ஊகங்களே நிறைய உள்ளன. ஆனால் எல்லா ஊகங்களிலும் உள்ள பொதுவான முடிவு கண்ணகியுடன் நெருங்கிச் செல்வதுதான். இரகசிய அறையில் தொங்கும் சிவப்புத் துணியை வழிபடும்போதும் கண்ணகியாக நினைத்து வழிபடுவதை இன்றும் காணமுடியும். இந்தத் துணியை விலக்கினால் அசம்பாவிதம் ஏற்படும் என்ற நம்பிக்கை இப்போது உள்ளது. 

இந்த இரகசிய அறையிலிருந்து கிழக்கு நோக்கி 100 மீட்டர் தூரத்தில் ஒரு சுரங்கப்பாதை உண்டு. இதன் வாயில் இப்போது அடைக்கப்பட்டுவிட்டது. இது 1940 அளவில் இருக்கலாம் என்கிறார் இந்துசூடன். மகரமாத தாலப்பொலி விழாவில் கோவிலைச் சுற்றி யானை பவனி வரும் வழக்கம் உண்டு. அப்போது தென்கிழக்கு மூலைக்கு வந்ததும் (சுரங்கப் பாதை வாசல்) யானை திரும்பிவிடும். யானைகளின் எடையை சுரங்கப்பாதை தாங்காது என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தச் சுரங்க அறையில் முந்திய காலங்களில் பத்தினிப் பூசை இரகசியமாக நடந்தது என்றும் கூறுகின்றனர்.

கண்ணகிக்கு இழைக்கப்பட்ட கொடுமையான பழியை நீக்கும் இரகசியக் கோவிலாக கொடுங்கல்லூர் கோவிலும் இரகசிய அறையும் இருந்தன. இது குறித்த நம்பிக்கை 19-ஆம் நூற்றாண்டில்கூட இருந்தது என்கிறார் பி.பொன்னம்பலம் பிள்ளை. 

வேலன் பூசை

கொடுங்கல்லூர் பூசைகளில் அஸ்வதி பூசையும் ஒன்று. அஸ்வதி நட்சத்திர நாளில் திருநடை திறக்கும்முன் செய்யப்படுவது. இப்பூசையைப் பாலக்காடு மாவட்டம் வேலன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் செய்கிறார். இவர் சிவப்பு ஆடை அணிந்திருப்பார். இவர் கோவிலின் மேற்கு வாசலில் அமர்ந்து இப்பூசையைச் செய்வார்.

வேலன் எனக் குறிப்பிடப்படுபவர் மண்ணாடி சாதியினர் ஆவர். இவர்கள் வடகேரளத்தில் தெய்யம் ஆடுவர், மந்திரவாதம் செய்வர், வைத்தியம் பார்ப்பர். சங்கப்பாடல்கள் குறிப்பிடும் வேலன் வெறியாடல் நிகழ்த்திய வேலன் மரபினரே இவர்கள். கேரளத்தில் சங்ககால தமிழ் அடையாளங்களில் எஞ்சியிருப்பது தொடர்பான வேலன் சடங்குகளும் ஒன்று. இவர்கள் கண்ணகி-பகவதிக்குச் செய்யும் வழிபாடு முக்கியமாகக் கருதப்படுகிறது. இது பழமையின் தொடர்ச்சி. வேலனின் இக்கோவில் உரிமை, கண்ணகி வழிபாடு தமிழ் அடையாளம் இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

கொடுங்கல்லூர் அரசர் தமிழ் மரபினர்

கொடுங்கல்லூர் கோவிலின் பல சடங்குகளுக்கும் கோவில் உரிமைக்கும் பாத்தியதைப்பட்ட கொடுங்கல்லூர் அரச வம்சத்தினரின் பூர்வீகம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அவர்களின் மூதாதையர்கள் பிற்காலச் சோழ வம்சத்தினர் என்பது. இது குறித்து அச்சுதமேனன் “கொடுங்கல்லூர் அரசர்கள் முதலாம் இராஜேந்திர சோழனின் படைத்தலைவனாக இருந்த ஒருவனின் மரபினர், இவர்களின் மூதாதையர் தமிழர்” என்கிறார் வி.ஆர். சந்திரன்.

திராவிட மரபு

கேரளத்திற்கும் தமிழகத்திற்கும் பொதுவான பண்பாட்டு ஒற்றுமைகளில் தாய்த்தெய்வ வழிபாடு தொடர்பானவை முக்கியமானது. இரு பண்பாட்டிலும் காளி வழிபாடு உண்டு. இதில் பொதுவான திராவிடக் கூறுகளைக் காணமுடியும். இவற்றின் சடங்குகள், இரு மொழிகளுக்கும் உள்ள உறவைக் காட்டுவன. இதனால் கண்ணகி வழிபாடு இதில் இணைய ஏதுவாயிற்று.

கொற்றவை - கண்ணகி

தமிழகத்தின் சங்ககாலத் தெய்வமான கொற்றவை வழிபாட்டுடன் கண்ணகி வழிபாடு இணைந்தது என்ற கருத்தாக்கத்தை அச்சுதமேனன் முன்வைக்கிறார். இந்துசூடன், வி.ஆர். சந்திரன் உட்பட பிற கேரள அறிஞர்களும் இதை ஒத்துக்கொள்ளுகின்றனர். திராவிடப் பண்பாட்டின் கூறுகளில் ஆதிவேரான கொற்றவை கண்ணகியுடன் இணைவதற்கேற்ற சூழல் கேரளத்தில் இருந்தது. சங்க காலத்துக்குப் பிற்பட்டு வந்த களப்பிரர்களின் சூழல் அதற்கு இடமளிக்காமல் இருந்திருக்கலாம்.

அச்சுதமேனன் கொற்றவை கண்ணகி இணைப்பு வடகேரளத்திலிருந்து தொடங்கி தென்பகுதிக்குச் சென்றது என்கிறார். இதனால்தான் வடகேரளத்தில் கொற்றவை, வேலன் வெறியாடல் சடங்கில் இன்றும் சங்க வழிபாட்டுப் பண்பாட்டைப் பார்க்கமுடிகிறது என்கிறார். அதோடு வடகேரளத்தில் கண்ணகி வழிபாடு தொடர்பான ஒரு வாய்மொழிப் பாடலையும் சான்று காட்டுகிறார்.

கண்ணகி - பகவதி

ஆரம்பகாலக் கொற்றவை கண்ணகியாக மாறியதும், காளி கண்ணகியாக இணைக்கப்பட்டதுக்குமான சான்றுகளை நிறையவே காட்டமுடியும். கொடுங்கல்லூரை அடியார்க்குநல்லார் குறிப்பதால் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் மலையாளச் சிற்றிலக்கியமான சுகசந்தேசம் என்னும் நூலில் கொடுங்கல்லூர் கண்ணகி பகவதியாகக் காட்டப்படுகிறாள். கண்ணகி பகவதியாக மாறியது மகோதயப் பேரரசுக் காலத்தில் இருக்கலாம்.

கண்ணகியைப் பகவதியாக மாற்றும் முயற்சி இக்காலத்தில் நடந்தாலும் மூலப்படிவத்தின் அமைப்பும் வழிபாட்டுக் கூறுகளும் பண்டைய கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையன என்பதை இன்றும் அடையாளம் காணமுடியும். அதனால் கண்ணகியின் கொடுங்கல்லூர் கோவிலில் பகவதி கோவிலாக மாறியதே ஒழிய பழைய மரபை விட்டுவிடவில்லை.

பத்தினி வடிவம்

ஆரம்பகாலத்தில் பத்தினித் தெய்வம் இளம்பெண் வடிவில் இருந்திருக்கலாம். ஒடியும் இடை, வாளிப்பான அழகு, என அமைந்த வடிவம் காளியாக மாற்றப்பட்ட பிறகு பல கைகளும் ஆயுதங்களும் உடையவளாகக் காட்டப்பட்டாள். இப்படியான வடிவமாற்றம் தென்கேரளத்தில் முதலில் நடந்து பின் வடபகுதிக்குச் சென்றிருக்கலாம்.

தாருகன் தொன்மம்

கண்ணகியையும் தாருகனையும் இணைக்கும் தொன்மக்கதைகள் கேரளத்தில் மட்டுமே உண்டு. தமிழகத்தில் இல்லை. தாருகன் பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது. இதே காலகட்டத்தில் சேர நாட்டிலும் வழக்கில் இருந்திருக்கலாம். தாருகனும் பாண்டியனும் ஏன் இணைக்கப்பட்டனர் என்பது புரியாத புதிர். இதற்குச் சமூகக் காரணங்கள் இருந்திருக்கலாம். சேரர் பாண்டியர் தொடர்பில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடு அல்லது சமூக முரண்பாடு தாருகனைப் பாண்டியனாகச் சித்திரித்திருக்கலாம்.

திருவஞ்சைக்களம்

கொடுங்கல்லூரின் அருகே உள்ள திருவஞ்சிக்களம் சிவன் கோவில், சேரன் செங்குட்டுவன் வழிபட்ட கோவில் என்ற கருத்து உண்டு. சிலப்பதிகாரம் கூறும் குணவாயில் கோட்டம், கொடுங்கோளூர் குறும்பாதேவி கோவிலிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கண மதிலகம் என கோகசந்தேசம் என்ற மலையாள நூல் கூறும் வஞ்சிக்களம் சிவன் கோவில் இதனருகே உள்ளது.

சேரன் செங்குட்டுவன் இந்த சிவன் கோவிலை அடுத்த ஓரிடத்தில் கல்மாடத்தை எழுப்பி கண்ணகியின் உடலையோ உடலின் எஞ்சிய பாகத்தையோ வைத்திருக்கலாம்.

கருவறைத் தெய்வம்

கொடுங்கல்லூர் தேவி கோவில் இருக்கும் கருவறையும், தேவியின் படிமமும் கி.பி. 14-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தது என்கின்றனர். கருவறை தெய்வம் வடக்கு நோக்கி அமைந்தது. இக்காளியின் படிமம் வருக்கைப்பலாவின் வேரும் மூட்டுப்பகுதியும் சந்திக்கும் இடத்தைத் தனியே வெட்டி தயாரிக்கப்பட்டது.

மூலப்படிமம் எட்டு கைகள் கொண்டது. வலது முதல் கையில் தாருகன் தலை. இது காளியின் தலைக்குக் கால் பங்கு. வலது இரண்டாம் கையில் ஓலைச்சுவடி; மூன்றாம் கையில் திரிசூலம்; நான்காம் கையில் வாள் (கட்கம்), இடது பக்கக் கரங்களில் நாகம், சிலம்பு, வட்டிகை, மணி ஆகியன உள்ளன. மூலப்படிமம் பலமுறை மாற்றப்பட்டிருக்கிறது. என்றாலும் இதன் கையில் உள்ள சிலம்பு மட்டும் அப்படியே உள்ளது. பிற ஆயுதங்கள்தாம் மாறியுள்ளன. இப்படிமம் கண்ணகிக்குரியது என்பதற்கு இது ஒரு சான்று.

தேவி 60 செ.மீ. உயரமுள்ள பீடத்தில் இருக்கிறாள். படிமம் 120 செ.மீ. உயரம்; பீடத்தையும் சேர்த்து 180 செ.மீ; தேவி அமர்ந்த கோல வடிவமுடையவள். வலதுகால் மடித்து இருப்பது போன்ற தோற்றமுடையது. முகத்தில் வீரப்பல்; இது பயங்கரமான தோற்றத்தைக் காட்டுகிறது. தேவியின் மகுடம் கதகளி மகுட அமைப்புடையது. வலது காதில் சிங்கமும் இடது காதில் யானையும் குழைகளாக உள்ளன. மூலப்படிமத்திற்கு அபிஷேகம் இல்லை. மூலிகை எண்ணெய் காப்பு உண்டு. அதனால் படிமம் கறுப்பு நிறத்தில் உள்ளது. பக்தர்கள் நேர்ச்சையாகக் கொடுத்த பலவகை தங்க அணிகள் தேவியின் கழுத்தில் அலங்கரிக்கின்றன.

சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்ணகி படிமத்திலிருந்து சக்தியை ஆவோகணம் செய்து இப்படிமம் உருவாக்கப்பட்டது என்கிறார் வி.ஆர். சந்திரன். இதே கருத்தை கள ஆய்வின்போது (2014) கேட்க முடிந்தது. கருவறைப் பூசகரான சந்திர அடிகள் என்னிடம் ‘ஆவோகனம் செய்யப்பட்ட படிமம் இது என்று மூதாதையரும் கூறியுள்ளனர்’ என்றார். 2000 வருஷத் தொடர்ச்சி இது. எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் இப்படிமத்தைக் கண்ணகியாகக் கருதுவது விந்தையான விஷயம்.

கொடுங்கல்லூர் கோவில் மூலப்படிமம் பற்றிய செய்திகள் குழப்பமானது. இது தாருகனைக் கொன்ற காளியின் வடிவம் அல்ல. இவளது இடது மூன்றாம் கையில் சிலம்பு உள்ளது. தாருகனைக் கொன்ற காளி கையில் சிலம்பை வைத்திருப்பாளா? இது ஒன்றே இப்படிமம் கண்ணகிக்குரியது என்பதைப் பறைசாற்றும்.

பிராமணன் ஒருவன், இக்கோவில் வழியே சென்றபோது ஒதுங்கிச் சென்றான் என கோகசந்தேசம் கூறும். இதுபற்றி இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை “இது ஜைனக் கோவில் என்பதால் பிராமணன் இக்கோவிலைக் கவனிக்காமல் போயிருக்கலாம், கண்ணகி சமணப்பெண் என்ற வழக்காறும் உள்ளதே” என்று கூறுவதை இந்துசூடன் மேற்கோள் காட்டுகிறார். அதனால் இக்கோவில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கண்ணகிக் கோவில் எனக் கூறுகிறார்.

தாலப்பொலி

கொடுங்கல்லூர் கோவில் விழாக்களில் முக்கியமானது தாலப்பொலி. ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களின் பங்கும் இதில் உண்டு. இந்த விழா, சடங்கு தை மாதம் (மகரம்) முதல் நாளில் தொடங்குகிறது. தமிழகத்துப் பொங்கல் விழாவை ஒட்டி வருகின்ற சடங்கு. பொங்கல் விழா கேரளத்திற்கு உரியதல்ல. கேரளத்தில் வாழும் தமிழர்களில் விசுவகர்மா, வேளாளர், தமிழ் பிராமணர் எனச் சில சாதியினரே பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கொடுங்கல்லுர் மகரவிழா பொங்கலை நினைவூட்டுவதாக உள்ளது. கண்ணகி கோவிலான பகவதி கோவிலில் மகரவிழா (தை) கொண்டாடுவதும் இக்கோவில் தமிழ்ச்சார்பை எடுத்துக்காட்டுகிறது எனக்கொள்ளலாம். 

இந்த விழா நான்கு நாட்கள் நடக்கிறது. மகர மாதத்திற்கு (தை) ஆறு நாட்களுக்கு முன்பு கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளைக் குவித்துப் பெருக்கி எரிக்கின்றனர். கோவில் வளாகத்தில் கொடித் தோரணங்களால் அலங்கரிக்கின்றனர். கோவிலின் வடகிழக்கில் உள்ள திறந்தவெளியிடம் சந்தையாக மாறுகிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இச்சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். விவசாயிகள் வியாபாரிகளாக மாறுகின்றனர்.

மகர விழாவிற்கு மத்திய கேரளத்தில் கடற்கரை பகுதிகளில் வாழ்கின்ற கொங்கிணி மொழி பேசும் பிராமணர் அல்லாத மக்கள் வருகின்றனர். குடும்பிகள் எனப்படும் இவர்கள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். கோவில் வளாகத்தை அடுத்த பகுதிகளில் சமைத்து உண்கின்றனர். இவர்கள் கொடுங்கல்லூர் கோவிலுக்குத் தெற்கே உள்ள குரும்பாயம்மா கோவிலில் கூடுகின்றனர். இந்தக் கோவிலுக்கு மேற்கூரையில்லை. கோவிலின் பெண் தெய்வம் குரும்பாயியம்மா. அமர்ந்த கோலம். இடது கால் செங்குத்தாக மடக்கி பீடத்தில் வைத்த அமைப்பு. தாலப்பொலி ஊர்வலம் இந்தக் கோவிலிலிருந்து தொடங்குகிறது.

குரும்பாயி அம்மா கோவிலே கொடுங்கல்லூர் கோவிலின் மூலக்கோவில் என்ற நம்பிக்கை இப்போதும் (2014) உள்ளது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு எடுத்த நடுகல் இருந்த இடம் இது என்கிறார் இந்துசூடன். ஒரு காலத்தில் குரும்பாயி (கண்ணகி) சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாள். இவளது சக்தியைத் தாந்திரிக மந்திரம் வழி கொடுங்கல்லூர் கோவிலுக்கு மாற்றிவிட்டனர் என்ற கருத்து காலங்காலமாய் பேசப்படுகிறது.

தாலப்பொலி ஊர்வலம் மாலை இரண்டு மணிக்கு ஆரம்பமாகிறது. ஊர்வலத்துடன் செம்மறியாடுகளும் வருகின்றன. செண்டைமேளம் முழங்குகிறது. தங்கமுலாம் பூசப்பட்ட முகபடாம் போர்த்த யானைகள் வட்டுக்குடைகள் மேலே அழகு செய்ய ஊர்வலத்துடன் வருகின்றன.

கோவிலின் கிழக்கு வாசலில் தானியங்கள் நிறைந்த பாத்திரங்களுடன் பெண்கள் நிற்பர். இது ஒரு சடங்கு. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணாவது இச்சடங்கில் பங்கேற்கின்றனர். இப்பெண்கள் நிற்கும் இடத்திற்கு ஊர்வலம் வரும். மக்கள் கோவிலுக்குரிய வரியைக் (தாலா) கொடுக்கின்றனர். முந்திய காலங்களில் தாலப்பொலி சடங்கில் தேவதாசிகள் நடனமாடினர்.

தாலப்பொலி ஊர்வலம் நான்கு நாட்கள் நடக்கிறது. எல்லா நாட்களிலும் குரும்பாயியம்மா கோவிலிலிருந்துதான் ஊர்வலம் புறப்படும். மூன்றாம் நாள் மட்டும் தேவி கோவிலின் வடமேற்கில் உள்ள ஒரு ஆலயத்திலிருந்து (இது ஒரு காலத்தில் அரசர் வாழ்ந்த இடம்) புறப்படுகிறது.

தாலாப்பொலி ஊர்வலம் இரவில் கோவில் வளாகத்தில் புரட்டு நாடகம், சங்கக்களி போன்றவை நடக்கும். தாலப்பொலி நிகழ்வில் முதல் நாளுக்கு முந்தைய நாளில் சங்கக்களி நடக்கும். தாலப்பொலி முதல் நாளில் கோவில் வடக்குப் பகுதியில் விளக்குகளின் நடுவே “நாறுபட” சங்கக்களி நடக்கும். அப்போது காளி, சிவன் பற்றிய பாடல்கள் பாடப்படும். இரண்டாம் நாளில் கொடுங்கல்லூர் ஊர்த்தலைவர் முன்னே நடக்கும். மூன்றாம் நாள் கோவில் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தைப் பெறுவர். இக்கலை இன்று பெயரளவில் தான் நடக்கிறது. இச்சடங்குக் கலை நிகழ்வில் கொடுங்கல்லூர் கோவிலில் வைதீகம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோது வந்த எதிர்ப்பு முக்கியமாகக் காட்டப்பட்கிறது.

தாலப்பொலி சடங்கில் ஆடப்படும் ‘யாத்ரகாளி’யில் நாயர்களின் சடங்குகள் கிண்டல் செய்யப்படும். யாத்ரகாளி கலைஞர் கொட்டாங்கச்சியைத் தூக்கிப் பிடித்தபடி குடுமியை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு பிரகாரத்தில் ஆர்ப்பரித்தபடி ஓடுவார். இது வெளிச்சப்பாடுகளைக் கிண்டல் செய்வது; சங்கக்களியின் பிறப்பிடம் திருக்காரியூர் என்பர்.

மகர சங்கிராந்தி நாளில் கொடுங்கல்லூர் கோவிலுக்குப் புலையர் சாதியினர் புதுநெல் கொடுப்பது வழக்கம். இது உரிமை. ஒரு காலத்தில் இது தேசியச் சடங்காக நடந்தது. புலையர் நெல்லைச் சுமந்து வந்து கோவில் வாசலில் வைப்பர். பின் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கண்ணகி பாட்டைப் பாடுவர். முக்கியமாகத் தோற்றம் பாட்டைப் பாடி ஆடுவர். அப்போது சிவந்த ஆடை உடுத்தியிருப்பர். இந்த நிகழ்ச்சி, இக்கோவில் கண்ணகி கோவில் என்பதற்கு மற்றொரு ஆதாரம்.

மீனபரணி

கொடுங்கல்லூர் பகவதி கோவிலின் முக்கிய விழாக்களில் மீனபரணியும் ஒன்று. இது பிராமணர் அல்லாத சாதியினரில் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்கும் விழா. கோவில் வைதீக மரபைப் பெரிதும் பின்பற்றினாலும் மீனபரணி நடைமுறைகளும் சடங்குகளும் பெரிய அளவில் மாற்றமின்றி நிகழ்கிறது. இந்த விழாவின் சடங்குகள், வழிபாட்டு முறைகள் வாழ்த்திப்பாடும் பாடல்கள் சடங்கு, நம்பிக்கை, பண்டை நம்பிக்கைகள் தொடர்பான வழக்காறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கோவிலைக் கண்ணகி கோவில் என நிறுவமுடியும்.

கேரள வரலாற்றாசிரியரான பத்மநாபமேனன் இவ்விழா பற்றி விரிவாகப் பேசுகிறார். இந்த விழா கும்ப மாதம் (மாசி, பிப்ரவரி - மார்ச்) பரணி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. விழாவிற்கு முதல் உரிமை பொற்கொல்லருக்கு. மலையான் தட்டான் என்ற சாதியின் மூப்பன் கொடுங்கல்லூர் அரசமரபினரில் மூத்தவரைக் கண்டு வணங்கி கோவிலில் விழா நடத்த அனுமதி கேட்பார். அரசராய் கருதப்படுபவர், தட்டானும் அவரது மருமகனும் அணிய இரண்டு பவளமாலைகளைக் கொடுப்பார். இந்த மாலைகளை அணிந்துகொண்டு அவர்கள் அடுத்த நாள் மூலப்படிமத்திற்கு வரகரிசிப் பாயசம் படைக்கப்படும். இதன்பிறகு தச்சர் சாதியினர் ஒருவர் கோவிலின் கிழக்கே விளக்குமாடம் அருகே நடப்பட்டிருக்கும் கமுகு மரத்தில் கொடி ஏற்றுவார். தச்சருக்கு இந்த உரிமை ஏன்? இது கண்ணகி கோவில் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்று.

பரணியின் அடுத்த நாளான கார்த்திகையில் கோவில் பிரகாரம் கழுவிவிடப்படும். கோவில் சுத்தப்படுத்தப்படும். நம்பூதிரிகள் புண்யாகவாசனம் செய்த தீர்த்தத்தை தெளிப்பர், பசுதானம் கொடுப்பர். இதன்பின் முறைப்படியான பூசைகள் ஆரம்பமாகும். இரவு 8 மணிக்கு உள்கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்படும். பூசைகள் நடக்கும். பின்னர் கதவுகள் அடைக்கப்படும். அடுத்தநாள் காலை 9 மணிக்குப் பூசைகள் ஆரம்பமாகும். இறுதியில் சந்தனம், மஞ்சள் கலந்த சாந்தும் வறுத்த அரிசியும் பிரசாதமாகக் கொடுக்கப்படும். கும்பப்பரணியின் ஏழாவது நாள்தான் முதல் முதலாக வடக்கு வாசல் திறக்கப்படும். காளியின் நேர்பார்வையிலிருக்கும் வடக்கு வாசல் அடைக்கப்பட்டிருக்கும்போது இரகசிய அறையைச் சுற்றிய கிழக்கு மேற்கு நடைகளிலேயே விழா மையம் கொண்டிருப்பதுபோல் தோன்றும். உண்மையில் இப்போது தேவிக்கான சடங்குகள் பின் தள்ளப்படுகின்றன. அப்போதைய சூழலில் ஒரு துக்கத்தைக் காணமுடியும். இந்தத் துக்கம் மரபின் எச்சம். இது கண்ணகியாக இருந்த இந்த பகவதியின் பழைய துக்கம்.

கிழக்கு மேற்கு வாசல் சடங்குகளுக்கும் கண்ணகிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க முடியுமா? கும்பப்பரணி நாளில் காலை 7 மணிக்குப் பொற்கொல்லர் மணியடித்தவாறே கோவிலை வலம் வருகிறார். இவரே விழாவின் ஆரம்பகர்த்தா. பிற சாதியினரை விட்டுவிட்டு ஏன் பொற்கொல்லரைத் தேர்வு செய்ய வேண்டும்? கண்ணகி துன்பியல் நாடகத்தின் எதிர்த்தலைவன் பொற்கொல்லன் என்பதனாலா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இந்துசூடன்.

அதோடு தீயர், ஈழுவர், அரையர், புலையர், மீனவர் முதலிய சாதியினரும் கோவிலைத் தீட்டுப்படுத்துவது என்ற நம்பிக்கை சிலப்பதிகார காலத்திற்குப் பிற்பட்டு உருவாகியிருக்கலாம். பிற்காலத்தில் மலையாள தாந்திரீக ஆகம முறைகள் இக்கோவிலில் நுழைந்தபோது பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்.

வெளிச்சப்பாடு

தமிழகக் கோவில்களில் சாமியின் அருள் வந்து ஆடுகின்றவரை மருளாயி, அருளாயி, சாமியாடி, கோமரத்தாடி எனும் பல பெயர்களால் அழைக்கின்றனர். கேரளத்தில் இவர்கள் வெளிச்சப்பாடு எனப்படுகின்றனர். ஆனால் தமிழக சாமியாடியினின்றும் கேரளத்து வெளிச்சப்பாடுகள் வேறானவர்கள். கேரள வெளிச்சப்பாட்டிற்குச் சமூக அந்தஸ்து உண்டு. தனிமரியாதையைப் பெறுபவர்கள்.

கொடுங்கல்லூர் கோவிலுக்கு வருகின்ற வெளிச்சப்படுகளில் எல்லா சாதியினரும் உண்டு. இந்துசூடன் கருத்துப்படி வெளிச்சப்பாடு கண்ணகியின் அடையாளம். தேவி கோவிலில் குருதிபலி ஆரம்பித்ததிலிருந்தே கண்ணகி வழிபாட்டின் எச்சங்களைச் சடங்குகள் வழிக் காணமுடியும். தேவியின் பிரதிநிதியாக உள்ள வெளிச்சப்பாடு காளியைப் போல் ஆடை அணிகிறார். இடுப்பில் சிவந்த ஆடை, அதில் மணிகள், கால்களில் சிலம்பு, கைகளில் வளை, கழுத்தில் பலவகை அணிகள், கைகளில் கொடுவாள், முடி நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.

வெளிச்சப்பாடு கண்ணகியின் அடையாளமா? பொற்கொல்லர்களின் குருதிக்குப் பதில் மிருகம், பறவைகளின் ரத்தத்தைக் கேட்பவர்களா? வெளிச்சப்பாடுகளின் அசைவிலும் சடங்குகளிலும் பாசுபத சைவப் பிரிவின் அடையாளத்தைக் காணமுடியும். கண்ணகிக்குக் கல் கொண்டுவரப் புறப்பட்ட சேரன் சிவன்கோவிலுக்குச் செல்லுகின்றான். கண்ணகியைக் கண்ட குறவர்களின் தெய்வம் முருகனின் தந்தை சிவன். இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு நோக்கினால் வெளிச்சப்பாடுகளைக் கண்ணகியின் அடையாளமாகக் கொள்ளலாம் என்கிறார் அச்சுதமேனன்.

தெறிப்பாட்டு

முந்தைய காலங்களில் மீனபரணி விழாக்களில் ஏழு நாட்களும் தெறிப்பாட்டு பாடப்பட்டது. இப்போது காவுதீண்டல் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் முன் இரவில் பாடப்படுகிறது. அதுவும் கோவில் வளாகத்தில் சுவரை ஒட்டிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று பாடுகின்றனர். ஆண் பெண் உறுப்பு பற்றியும் உடலுறவு பற்றியும் வெளிப்படையாகப் பேசுவது தெறிப்பாட்டின் அம்சங்கள். ஒரு காலத்தில் கோவிலின் வெளியே எல்லா பகுதிகளிலும் பாடப்பட்டன. எழுபதுகளில் கூட எல்லா ஆண்களும் பெண்களும் பாடினார்கள். இக்காலத்தில் இது அரசியலாக்கப்பட்டு பெரிதுபடுத்தப்பட்டதும் உண்டு. எண்பதுகளில் சமூக விரோதிகள், கேளிக்கை பிரியர்களான குடிகாரர்கள் தெறிப்பாட்டு பாடிய கூட்டத்தில் புகுந்து கோவில் பக்தர்களான பெண்களைப் பார்த்து காமக்கிளர்ச்சியுடன் பாடியதால் அரசு தலையிட வேண்டி வந்தது. அப்போதும் இது தடை செய்யப்படவில்லை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போது (2014) நிலை வேறு.

பெரும்பாலும் மரபுவழித் தெறிப்பாடல்கள் பல்லவியாகப் பாட பழைய மெட்டில் புதிதாக உருவாக்கிய பாடல்களும் பாடப்பட்டன. தெறிப்பாட்டுக் கிண்டலில் அகில இந்திய அரசியல் பெண் பிரமுகரும் பாடுபொருளாக இருந்தார்.

தெறிப்பாட்டு எத்தனை ஆண்டுகளாகப் பாடப்படுகிறது என்பதற்குச் சரியான தகவல் இல்லை. ஆனால் தென்னிந்தியக் கோவில்கள் சிலவற்றில் இருப்பதைப் போல விழாக்களில் விருப்பமுடைய ஆணும் பெண்ணும் புணர்ந்து கொள்ளாலாம் என்ற வழக்கம் இங்கு எப்போதும் இருந்ததில்லை.

ஆய்வாளர்கள் பாட்டைப் பதிவு செய்ய, பாடியவர்கள் தடை செய்யவில்லை. அவர்கள் சிரிப்புடனோ எக்காள தொனியிலோ பாடவில்லை. அவர்கள் பாடிய இடத்தின் வழிச் சென்ற இளம்பெண்களைப் பார்த்து கிளர்ச்சியுடனும் பாடவில்லை. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. இப்படிப் பாடிய கூட்டத்திற்குக் காவலாகவோ பெண்களுக்குக் காவலாகவோ யாரும் இல்லை.

ஆணும் பெண்ணும் குழுக்களாக நின்று பாடுவது என்ற வழக்கம் எழுபதுகளில் கூட உண்டு. சமூகம் காலங்காலமாய் இந்தப் பாடல்களைப் பாட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. அறுபதுகளில் கூட கொடுங்கல்லூர் அரசரின் முன்னே நின்று பாடும் வழக்கம் இருந்தது. கோவிலைச் சுற்றி வந்த இளம் பெண் பக்தர்கள் கூட இந்தப் பாடல்களைக் கேட்டார்கள். அதனால் பாடியவர்கள் வருணனையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் இயல்பாகப் பாடினார்கள். பெண் பக்தர்கள் நின்று கேட்கவும் செய்தார்கள்.

ஐம்பதுகளில் தெறிப்பாட்டு பாடும் போது உடல் உறுப்பு வருணனையைப் பாடிய போதும், புணர்ச்சி வருணனையைப் பாடிய போதும் நடித்தும் காட்டினார்கள். பாடியவர் தன் உடலை அதற்கேற்ப அசைத்து கைகாட்டி நாடகியப்படுத்தியவாறே பாடினார். இப்பாடல்களையும் நடிப்பையும் பகவதி பார்த்துக்கொண்டிருக்கிறாள், கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பிப் பேசிய பேச்சுக்களை இந்துசூடன் பதிவு செய்திருக்கிறார்.

கவுள (காளிமார்க்கம்) மார்க்கத்தில் பஞ்ச மகரபூஜை முக்கியம். இது மது, மாமிசம், மந்திரம், மைதுனம் ஆகியவை அடங்கியது. மைதுனம் என்பது உடலுறவைக் குறிக்கும். கூட்டமாக உறவு கொள்ளும் ஒரு சடங்காக இது இருந்தது. இது காலப்போக்கில் மருவி இப்படி மொழிவடிவில் உறவைத் தீர்க்கும் சடங்காக மாறியிருக்கலாம்.

இது சாக்தேய வழிபாட்டின் கூறு. பழங்குடி மக்கள் சிலரிடமிருந்து இந்த வழியைச் சாக்தம் பின்பற்றி இருக்கலாம். பழங்குடி மக்கள் சிலரிடம் இருந்த கூட்டுப்புணர்ச்சி சடங்கு தாய்த்தெய்வ கோவில் விழாக்களில் நடந்தது என்பர்.

இக்கோவிலில் நடக்கும் பத்திரகாளிப் பாட்டு, பத்திரகாளி நாடகம், தெய்யம், தோற்றப்பாட்டு முதலியவற்றைப் போன்றே சடங்குக் கூறாக இது நடந்திருக்கலாம்.

இப்படியான காரணங்களுடன் செழிப்பு, விளைச்சல் என்னும் காரணங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மழைபெய்ய பயிர்செழிக்க பூமித்தாயையும் இந்திரனையும் வழிபடுதல் உண்டு. மனிதனின் இனவிருத்தியும் தாவரங்களின் இனவிருத்தியும் ஒன்று எனக் கருதியதால் மானிடச் செழிப்பின் மூலம் வேளாண்மைச் செழிப்பை அதிகரிக்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை புராதன சமூகத்தில் இருந்தது.

கொடுங்கல்லூர் மீனபரணி தெறிப்பாட்டைக் கண்ணகியுடன் இணைத்துப் பேசுவதும், இப்பாடல் கண்ணகிக்காக என்ற கருத்தும் உள்ளது.

கண்ணகி மதுரையை எரித்தபின் நோயும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. மழை இல்லாமல் ஆனது. இதனால் கண்ணகியைக் குளிர்விக்கக் கோவில் எடுத்தனர். அப்போது பூமித்தாயையும் இந்திரனையும் வாழ்த்திப் பாடியிருக்கலாம். ஆரம்பகாலத்தில் நடந்த இதன் எச்சமே தெறிப்பாடல்கள் என்று கூறுகின்றனர்.

கண்ணகி கோவலனிடம் உடல் ரீதியன சுகத்தை அனுபவிக்கவில்லை. அவளைத் திருப்திப்படுத்தவே தெறிப்பாடல்கள் பாடப்பட்டன என்பது ஒரு செய்தி. இலங்கைக் கண்ணகி கோவில்களில் கண்ணகியை மகிழ்விக்க குளிர்த்திப் பாடல்கள் பாடப்படும். இது மதுரையை எரித்து கோபத்தில் நின்ற கண்ணகியைக் குளிர்விக்கப் பாடியது. இங்கே விழாவில் கொம்பாட்டம் என்னும் ஆடல் பாடலை யாதவ இளைஞர் நடத்துவர். இவை காமக்களியாட்டப் பாடல்கள். இப்பாடல்கள் இலங்கை ஈழவர் மூலமாக கேரளத்திற்கு வந்திருக்கலாம். ஈழத்துக் கொம்பாட்டப் பாடலே கேரளத்துத் தெறிப்பாடல் என்பது ஒரு கருத்து.

தெறிப்பாட்டுப் பாடல்கள் சில…

தானாரோ தன்னாரோ - தக
தானாரோ தன்னாரோ

கொடுங்கல்லூர் அம்மயே ஓக்கணு மெங்கில்
கொடிமரம் போலொரு குண்ண வேணம்

அம்மயிந் அரமுடி அசயும் அழக
விலகியால் தெரியிம் ரோமக்காடு

பஞ்சுபோலவே விரியும் ரோமக்குவியல்
விரிஞ்ஞால் தெரியும் ஆழக்கிணறு

குருவாயூரப்பன்றெ தாக்கோல் கொண்ட
கொடுங்கல்லூர் அம்மயிட பூட்டு திறக்கணம்

அம்மயின்றெ பிரஷ்டம் கண்டாலறியும்
கண்டதும் குண்ண எழும்பி நிற்கும்

ரண்டு பந்தெ தூக்கி கட்டி
இடயில் இடவெளி இல்லதாக்கிய
பிரஷ்டத்தில் ஓப்பதே சுகமெந்து அறியாம்

அம்மனின் பிரஷ்டங்கள் இடயில் செருகியால்
இழுத்து திருப்பி எடுக்கான் பாடில்லா

கருத்ததாயி ஒள்ள ரோமக்காட்டில்
கைவிட்டு தடவியால் அம்மக்கு சுகமே

கொடுங்கல்லூர் அம்மெயெ பண்ணந மெங்கில்
கொடிமரம் போலொரு குந்தம் வேணம்

கொடிமரம் போலொரு குண்ண இல்லாஞிட்டு
பீமன்ற குண்ணெய்க்கு போய் விளிக்கு

இக்கொல்லம் பரணிக்கு கொடை யொண்ணும் வேண்டாந்து
தேவியுடெ பூச்சிந்தும் கம்பி வந்து

காரு வாங்ஙானாயி மெட்ராசு போயப்போள்
காரு இல்லாஞிட்டு பூரு வாங்கி

===============

அ.கா. பெருமாள்


நியு சென்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ள “கொடுங்கல்லூர் பகவதி என்னும் கண்ணகி கோவில்” என்ற புதிய நூலில் இருந்து சில பகுதிகள்).

நன்றி - நியு சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

மீனபரணி விழா புகைப்படங்கள் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

அ.கா.பெருமாள்

அ.கா. பெருமாள் நாட்டாரியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகத்தில் உள்ள ஆய்வாளர்களில் முதன்மையானவர். தென்குமரி நாட்டார் ஆய்வு, குமரி மாவட்ட வரலாற்று ஆய்வு, இலக்கிய ஆய்வு என தொண்ணூறுகும் மேல் நூல்கள் எழுதியுள்ளார். பழைய சுவடிகளை பதிப்பித்தும் உள்ளார். தொல்லியல் துறை, ஆய்வுத்துறை, தமிழக வளர்ச்சித் துறை என ஆய்வு சமந்தப்பட்ட முக்கியமான துறைகளில் தொடர்ந்து, தனது ஆய்வு பங்களிப்பை தருபவராகவும் ஆலோசகராகவும் இருந்தும், தமிழகம் கேரளம் மற்றும் இந்திய ஆய்வு பணியில் பெரும் பங்களிப்பாற்றி வருகிறார்.

அ.கா. பெருமாள் - Tamil Wiki