Sunday 15 September 2024

இந்தியக் கவிதையியல்: பகுதி - 1: தோற்றுவாய், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

அறிமுகம்

முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலக்கியக் கொள்கைகளையும், திறனாய்வையும் கற்பிக்கும் பாடநூல்களை அத்துறை அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் நூல்களில் ஐரோப்பிய இலக்கியக் கொள்கைகளை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவே விளக்கியிருக்கிறார்கள். இலக்கிய நுண்ணுணர்வு முற்காலத்தில் தமிழ்ச்சூழலில் எவ்வாறு விளங்கியது என்பதையும் இவர்களின் பாடநூல்கள் எடுத்துக்காட்ட தவறவில்லை. 

அதே சமயம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் நிகழ்ந்துள்ள இலக்கிய உரையாடல்கள் குறித்து தமிழில் மிகக் குறைவாகவே அறிந்துகொள்ள முடிகிறது. இந்தியக் கவிதையியல் என்ற இந்த மொழிபெயர்ப்பு நூல் அந்தத் தேவையை நிறைவு செய்யுமென்று நம்பலாம்.

கீழை மற்றும் மேலை இலக்கியக் கொள்கைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஒப்பீட்டு நிலையில் கன்னட மாணவர்களுக்கு அதிகமாகவே இருப்பதை, திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்தே கவனித்து வருகிறேன். பேராசிரியர் தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்கள் எழுதி, இன்று ஒரு செவ்வியல் தகுதியைப் பெற்றுவிட்ட, "பாரதீய காவ்ய மீமாம்சே" (இந்தியக் கவிதையியல்) என்னும் நூலைக் கன்னட அறிவுலகம் மிகுந்த ஈடுபாட்டுடன் பயின்று வருகிறது.

இந்த நூல் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது. இலக்கண வளர்ச்சி என்னும் முதல் பகுதியில் ஏழு அத்யாயங்கள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் அலங்காரம்(அணி), ரீதி(வெளிப்பாட்டு முறை), த்வனி(குறிப்பு) முதலிய கவிதையியல் கொள்கைகள் வரலாற்று நோக்கில் விளக்கப்பட்டிருக்கின்றன. பரதரின் நாட்டிய சாஸ்திரம் குறித்து ஒரு விரிவான அறிமுகமும் காணப்படுகிறது. கவிதையியல் என்னும் துறை சம்ஸ்கிருத அறிவு மரபில் வளர்ந்து வந்த இயல்பை, முதலாவதாக அமைந்த தோற்றுவாய் பகுதி விளக்குகிறது.

இரண்டாவது பகுதி ஏழு அத்யாயங்களைக் கொண்டது கவிஞர், கவிதை, இணைமனத்தார் என்னும், கவிதையியல் அடிப்படைகளை விளக்குகிறது. கவிஞரின் படைப்பாற்றல் என்பது இயல்பாக அமைவதா? அல்லது பயிற்சியால் அடையப் பெறுவதா? என்னும் வினா உட்பட, படைப்பாளியின் தகுதிகள், அவர் செய்யவும் தவிர்க்கவும் வேண்டியவை, கவிதை மூலங்கள், அதன் வகைகள், இலட்சிய வாசகரின் இயல்புகள் இவைப் பற்றியெல்லாம் விளக்கும் அத்யாயங்கள் சுவை மிக்கவை.

பத்து அத்யாயங்களைக் கொண்ட, மூன்றாம் பகுதியின் பெயர் சுவைக்குறிப்பு (இரசத்வனி) என்பதாகும். இந்தப் பகுதியே அளவில் பெரியது. சுவை எவ்வாறு கவிதையில் மறைமுகமாக வெளிப்படுகிறது என்னும் விவாதம், சம்ஸ்கிருத கவிதையியலில் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அது குறித்த விவரிப்புகளை இப்பகுதியில் காணலாம். சுவை, அதன் வகைகள், சுவை மறைமுகமாக புலப்படும் இயல்பு முதலியவைக் குறித்து விரிவாகவும், க்ஷேமந்திரரின் ஔசித்யா(பொருத்தப்பாடு) கவிதைக் கொள்கை குறித்து மிகச் சுருக்கமாகவும் ஆசிரியர் தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்கள் நூலின் இறுதிப்பகுதியில் விளக்கியுள்ளார். இவற்றைத் தொடர்ந்து கன்னட மொழியில் காணப்படும் கவிதையியல் கருத்துகள் ஆசிரியரால் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மரபால் பண்பட்டது ஆசிரியர் ஶ்ரீகண்டய்யா அவர்களின் உள்ளம். முதற்பதிப்பின் முன்னுரையில் உள்ள முதல் வாக்கியத்தை படிக்கும் போதே இதனை உணர்ந்து கொள்ள முடியும். அதே சமயம் நவீன இலக்கியம் குறித்த ஒரு நேர்மறை நோக்கும் அவரிடம் இருக்கிறது. இதனை இரண்டாம் பதிப்பின் முன்னுரை எடுத்துரைக்கும். 

தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

தம் காலத்தில் ஒரு முதன்மையான அறிவாளுமையாக விளங்கியவர் பேராசிரியர் தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்கள். 26.10.1906 அன்று கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவைச் சேர்ந்த தீர்த்தபுரம் என்ற ஊரில் பிறந்தார். தந்தையார் நஞ்சுண்டய்யா. ஒரு கிராமக் கணக்கர். தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்கள் ஆறு பாடங்களில் தங்கப் பதக்கங்கள் பெற்று இளங்கலைக் கல்வியை நிறைவு செய்தார். எம். சி. எஸ் பட்டம் பெற்றார். கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மைசூர் மகாராஜா கல்லூரியில் 24 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிநிறைவு செய்தார். திறனாய்வு, யாப்பு, மொழியியல், கவிதையியல் துறைகளில் ஈடுபாடு மிக்கவர். இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். பம்பர், ஹரிஹரர் ஆகிய கன்னடப் புலவர்களின் படைப்புகள் குறித்து இவர் ஆய்வு செய்து நூல்களை எழுதியுள்ளார். இந்தியக் கவிதையியல் என்னும் நூல் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த நூலுக்காக பேராசிரியர் தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்களுக்கு கர்நாடக அரசின் கௌரவமிக்க பம்பர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளராகவும், கல்வியாளராகவும் திகழ்ந்த கே.வி.புட்டப்பா அவர்கள், ஆசிரியப் பெருநூல் என்று இந்தியக் கவிதையியலை போற்றியிருக்கிறார்.

ஒருவேண்டுகோள் இந்த நூலில் இலக்கண நூற்பாக்கள், உரைப் பகுதிகள், எடுத்துக்காட்டுச் செய்யுள்கள் என சம்ஸ்கிருதத்திலிருந்து அதிகமான மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. இவை சில பொழுது, வாசிப்பு அனுபவத்தை பாதிக்கலாம். ஆனால் இவற்றுக்குரிய பொருளையும் நூலாசிரியர் தீ.ந.ஶ்ரீ கண்டய்யா அவர்கள் மிகப் பெரும்பாலான இடங்களில் வழங்கியிருக்கிறார். இதனை மனத்திற்கொண்டு நண்பர்கள் நூலை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கு.பத்மநாபன்
குப்பம்
10.09.2024

அணிந்துரை- கே. வி. புட்டப்பா

கன்னட இலக்கிய மறுமலர்ச்சி பல கிளைகளாகத் தளிர்த்து வளர்ந்து செழித்து வருகிறது. கவிதையியல், இலக்கிய விமர்சனம் ஆகிய பகுதிகளும் ஆங்காங்கு கண்களைக் கொள்ளை கொள்கின்றன. இருந்தும், மொத்தமாகப் பார்க்க அவை வாடிய நிலையில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக இலக்கிய விமர்சனத்தை விட கவிதையியல் மிகவும் நலிந்தே உள்ளது. 

1.ஆய்வியல் விமர்சனம், 2.விளக்கவியல் விமர்சனம், 3.பார்வைசார் விமர்சனம் என்று இலக்கிய விமர்சனத்தை மூன்று பகுதிகளாகப் பாகுபடுத்தலாம். கவிஞரின் காலம், இடம், சமயம் முதலியவைத் தொடர்பாக நம்மிடம் ஆய்வு சார்ந்த விமர்சனம் போதுமான அளவு சிறப்பாக வளர்ந்திருப்பதாகவே சொல்ல முடியும். ஆய்வுசார் விமர்சனத்துக்கு எந்த அளவு மதிப்புள்ளது என்றால், அறிவின் அடியும் முடியும் இதனுள் அடங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ஓர் எண்ணம் ஏற்பட ஆய்வுசார் விமர்சனம் காரணமாகிவிட்டது. அளவிலும் மதிப்பிலும் ஆய்வுசார் திறனாய்வின் முன்பு தலைதாழ்த்தி நிற்கும் நிலையே இரண்டாவதாக உள்ள விளக்கவியல் திறனாய்வின் நிலையாக உள்ளது. இருந்தும் நம் கவிஞர்கள் இயற்றியுள்ள படைப்புகளின் சிறப்புகள் விளக்கவியல் திறனாய்வின் துணையால் தான் இணைமனத்தார் [சஹ்ருதயர்கள்] பலருக்கும் தெரியவருகின்றன. மூன்றாவதாக உள்ள பார்வைசார் திறனாய்வு நம்மிடம் மிகவும் அரிது. ஆங்காங்கு உயர்வான விளக்கவியல் இலக்கிய விமர்சனப் பகுதியாக பார்வைக் கோணம் ஓரளவு வெளிப்படுவதைக் காண முடியும். அது மட்டுமல்ல, பார்வைக் கோணத்தின் இயல்பையும், வெளிப்பாட்டையும் பொருத்து விளக்கவியல் விமர்சனம் உயர்வான இடத்தைப் பெறுவதையும் ஏற்றுக்கொள்ளலாம். அவ்வாறில்லாத, வெறும் விளக்கமாக மட்டுமே அமையும் எழுத்துகள் பத்திரிக்கைகளின் மிகச் சாதாரணமான நூலறிமுக நிலைக்கும் இறங்கிவிடக்கூடும். ஆக, பார்வைசார் விமர்சனம் வளர, ஒரு கோட்பாட்டு நிலை சார்ந்த கவிதையியல் அறிவு விமர்சகர்களிடமும், இணைமனத்தாரிடமும் வளர்ந்திருக்க வேண்டும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் சிறந்த இலக்கிய விமர்சனத்துக்கு கவிதையியலின் துணை இன்றியமையாதது. கவிதையியல் வளராமல் அதன் பயன்பாட்டு வடிவமான உயர்ந்த இலக்கிய விமர்சனம் வளர வாய்ப்பில்லை.

மேலைத் தொடர்பால் நமது இலக்கியப் படைப்பு புதுப்புது பாதைகளில் புத்தம் புதிய அடிகளை வைத்து நடைபோட்டு வருகிறது. மேற்கத்திய இலக்கிய விளைவால் நம் பார்வை முறையும் மாற்றமடைந்து பொருத்தமான படைப்புச் செயல்பாட்டுக்கு இடம் வழங்கியும் இருக்கிறது. அதேசமயம் மேற்கத்திய கவிதையியல் மற்றும் இலக்கிய விமர்சனக் கல்வியின் விளைவாக நம்மிடம் ஒரு புதிய விமர்சனப் பிரதி தோன்றியிருக்க வேண்டும். அவ்வாறல்லாமல் புதிய விமர்சனப் பார்வைமுறை மட்டுமே ஓரளவு வந்திருப்பதாக கூறமுடியும். 

பன்முகப்பட்டு வடிவம் கொண்ட ஓர் இலக்கியப் படைப்பு நம் கவனத்தில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் அளவுக்கு, கவிதையியலும் இலக்கிய விமர்சனமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது நிகழும் காலமும் தற்போது அருகணைந்துள்ளது. பேராசிரியர் தீ. ந. ஸ்ரீகண்டய்யா அவர்களின் “இந்தியக் கவிதையியல்” என்ற புகழ்மிக்க நூல் அந்தப் புதுமையை உணர்த்தும் துவக்கவிழாவின் அடையாளம். மேலை மனிதர்களிடம் கவிஞர், கவிதை வடிவம் குறித்த ஆழ்ந்த சிந்தனைக்கு இணையாக அதன் பயன்பாட்டு வடிவமான இலக்கிய விமர்சனமும் இயல்பாகவே வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். அணி இலக்கணத்தையும், யாப்பிலக்கணத்தையும் தன்னுள் கொண்ட கவிதையியல், நம்மிடையே ஆச்சரியகரமான அளவுக்கு விரிவாக பரந்துபட்டு வளர்ந்து வந்திருக்கிறது. விரிவுரைகளாகவும், விளக்கவுரைகளாகவும் எல்லைக்குட்பட்டு கவிதையியலின் பயன்பாட்டுத்தன்மை சிறப்பாக வெளிப்பட்டும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாலும் கூட, நம்மிடம் இலக்கிய விமர்சனம் மிகவும் நலிந்தே காணப்படுகிறது. இலக்கிய விமர்சனத்தின் நலிவைப் போக்கி அதனைப் பொலிவுறச் செய்வது நம் கடமை. இந்தப் பணியில் சுவையுணர்வின் உயிர்த்ததும்பும் ஆலயத்துக்கு இந்தியக் கவிதையியல் என்ற நூல் அடிக்கல்லாக அமையும். இந்தியக் கவிதையியலில் காணப்படும் கவிஞர், இணைமனத்தார், கவிதை வடிவம், கவிதையின் நோக்கம், பயன், அணி, ரீதி, குறிப்பு, சுவை முதலிய மனம் கவரும் கருத்துகளின் எள்ளளவு அறிமுகமாவது இல்லாத நிலையில் உயர்வான கவிதை விமர்சனம் நம்மிடையே உருவாகாது. இலக்கியப்படைப்பில் எவ்வாறோ, விமர்சன நோக்கிலும் அவ்வாறே மேற்கை முற்றாகப் போலிச்செய்வதும், இந்தியத்தன்மையை முற்றாகப் போலிச்செய்வதும் உயர்வான விமர்சனப்படைப்பு தோன்றக் காரணமாகாது. அப்படியிருக்க, முழுமைப்பெற்ற வடிவிலான ஒரு புதிய முறைமையில் தன் முக்கியத்துவத்தைக் கன்னட கவிதையியல் விமர்சனம் நிறுவவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உலக கவிதை விமர்சனத்துக்கும் தன் பங்களிப்பை கன்னட கவிதையியல் விமர்சனம் முன்வைக்கமுடியும். 

கன்னட இலக்கியத்தில் இதுவரை உருவாகியுள்ள கவிதை விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், எல்லாம் சம்ஸ்கிருதத்தின் மங்கிய நிழல் போலவே இருக்கின்றன. எதிர்காலக் கவிதையியல் மற்றும் இலக்கிய விமர்சனம் மேற்கின் மங்கிய நிழலாக இருந்தால், சுயத்தை இழந்துவிடும் போக்கு காரணமாக அது தற்போதைய நிலையை விடவும் அபாயம் விளைவிக்கும். 

மேற்கத்திய மற்றும் இந்தியக் கவிதையியலிலிருந்து மட்டுமல்ல, தத்துவத்துறை, யோக அறிவு இவற்றிலிருந்தும் கூட கவிதையியலும், இலக்கிய விமர்சனமும் ஒளியைப் பெற்றுக்கொண்டு மேலும் உறுதியாகவும், சுதந்திரமாகவும் முழுமை நோக்கை முன்வைத்து நடைபோடவேண்டும். அந்தப் புத்தொளியில் நம் தொன்மையான கொள்கைகள் தமது மர்மமான ரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி நம்மை புதிய புதிய சுவையனுபவங்களுக்கும், வலிவுக்கும் பொலிவுக்கும் அழைத்துச்செல்லக் கூடும்.

எதிர்காலத்தில் கவிதையியல், இலக்கிய விமர்சனச் சாதனைகளை கன்னட மொழியில் வழிநடத்தும் பொருட்டு இந்தியக் கவிதையியல் என்னும் பெருமுழுமைப் பெற்ற ஓர் ஆசிரியப் பெருநூலைத் திரு. தீ. ந. ஸ்ரீகண்டய்யா அவர்கள் வழங்கியிருக்கிறார். கன்னட மறுமலர்ச்சியில் இந்த நூலுக்கு இணையாக, மேலைக் கவிதையியல் என்ற நூல் உருவாக்கத்திலும் மைசூர் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. அந்த முயற்சியும் விரைவில் ஈடேறி இருவகை நோக்குகளின் பயிற்சி காரணமாக புதிய விமர்சனப் படைப்பு தோன்றும் வாய்ப்பு அமைந்து கன்னடக் கவிதையியலும், இலக்கிய விமர்சனமும் வளர்ந்து சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

கே. வி. புட்டப்பா.
மைசூர் 
16-1-1953

முதற்பதிப்பின் முன்னுரை 

இது போன்ற ஒரு நூல் எழுதவேண்டும் என்று எனக்கு தூண்டுதல் வழங்கி, பணியமர்த்தி, நீண்ட என் காலதாமதத்தால் வருத்தம் கொள்ளாமல், தொடர்ந்து ஊக்கம் நல்கியவர் மைசூர் பல்கலைக்கழக கன்னட நூல் பதிப்புக்குழுவின் முதல் தலைவர் வணக்கத்துக்குரிய ஆசிரியபிரான் பேராசிரியர் ‘பி. எம். ஸ்ரீகண்டய்யா’ அவர்கள். தேவைப்படும் முன் தயாரிப்பு, கருத்துச் சேகரிப்பு இவற்றை உகந்தவாறு மேற்கொண்டு நூலை எழுதி முடிக்கப் பல ஆண்டுகள் வேண்டியிருந்தது. அதனால், 1947 ஜனவரித் திங்களில் தான், தூண்டுதல் நல்கிய ஆசிரியர் கரங்களில் நூலின் கையெழுத்துப் படியை ஒப்படைக்க முடிந்தது. வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு ஆசிரியர் நூலை பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்தது. அதன் காரிருள் நம் நாட்டையும் நன்கு சூழ்ந்து கொண்டுவிட்டது. போரும் அதன் நிமித்தமும் அன்றி வேறு எந்த ஒன்றுக்கும் ஆதரவு இல்லாத அந்த இடைவிலகாக் கொடிய நாட்களில் நூல் அச்சகத்தை அடைவதே கடினமாக இருந்தது. அதன் பிறகும் நிறையத் தடைகள், இடையூறுகள். தேசத்தின் கொந்தளிப்பும் நூல் அழிவதற்குரிய காரணங்களுள் ஒன்று என்ற இராஜசேகரரின் விளக்கம் நினைவில் வந்தது. எங்கே அனுபவத்திற்கும் வந்துவிடுமோ என்ற அச்சமும் அவ்வப்போது ஏற்படாமல் இல்லை. உலகப்போர் முடிந்தும் தொடர்புடையவர்களின் கைகளுக்கு அப்பாற்பட்ட பல காரணங்களால் நூல் அச்சாக்கம் நிறைவடைவதற்குள்ளாக பல ஆண்டுகள் கடந்துவிட்டன. எவ்வாறோ மிக நீண்ட கருவறைவாசம் முடிவடைந்து நூல் வெளிச்சத்தைக் காணும் வேளை அமைந்ததே என திருப்தியடைய வேண்டியதுதான். 

எழுத்தாக்கம் இந்த அளவிலேனும் வடிவம்கொள்ள என் வணக்கத்துக்குரிய ஆசிரியர் பேராசிரியர் ‘எம். ஹிரியண்ணா’ அவர்களின் ஆசிர்வாதமும், அறிவுரையும் முக்கியக் காரணங்கள். ‘சுவைக்குறிப்பு’ [ரசத்வனி] கொள்கையை நான் முதன்முறை கேள்விப்பட்டதே அவரிடமிருந்துதான். ‘காவ்ய ப்ரகாசம்’ நூலின் பல உல்லாசங்களை [இயல்களை] அவரிடமிருந்து கற்கும் வாய்ப்பு கல்லூரி மாணவனாக இருந்த போது எனக்கு அமைந்தது. நான் இந்த நூல் பணியை ஒப்புக்கொண்ட செய்தியை தொடர்ந்து அவர் செவிமடுக்குமாறு செய்தேன். அதில் இறங்கும் துணிவு ஏற்பட எனக்கு த்வன்யாலோகத்தைப் பாடம் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். பேராசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்று தம் ஓய்வுப் பொழுதை எழுத்துப் பணிக்காகவே ஒதுக்கி வைத்திருந்த பெரும்பேராசிரியர் மாணவன் மீதுள்ள பற்றின் காரணமாக விரிவுரை நிகழ்த்தும் சுமையை மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவருடைய திருவடிகளின் கீழ் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் உட்கார்ந்து விளக்கங்களைக் கேட்டவாறும், கவிதையின் ரகசியத்தையும் இலக்கணச் சிக்கலையும் புரிந்துகொண்டபடி அவரின் நுண்மான் நுழைப்புல ஒளியில் சந்தேகங்களைப் போக்கிக்கொண்டும், நான் பெற்ற அனுபவம் சொற்களுக்கு அப்பாற்பட்டது. ஆசிரியரின் அருள் இந்த அளவில் நிற்கவில்லை. நூலின் எழுத்தாக்கம் முடிந்ததும் இதன் பல இயல்களை [ஒன்று முதல் ஏழு, 15, 19, 21, 22 ஆகியவற்றை] முழுமையாக வாசித்துக் குறைபாடுகளைப் பரந்த உள்ளத்துடன் அவர் தெரிவித்தது மட்டுமின்றி, அவற்றைத் திருத்தியும் மேலான உதவி மேற்கொண்டார். ஆனால், நூலின் அச்சுப்படியை அவர் கரத்தில் வைத்து நிறைவடையும் பேறு மட்டும் தான் எனக்கு இல்லை என்று ஆகிவிட்டது. 

‘இந்தியக் கவிதையியல்’ என்று இந்த நூலுக்குப் பெயர்வைத்திருந்தாலும், இது சம்ஸ்கிருத மொழிக் கவிதையிலக்கண நூல்களையே மூலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. கன்னடத்தில் கிடைக்கும் இலக்கண நூல்கள் பற்றிய ஓர் இயல் இதன் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. பரதக்கண்டத்தின் மற்ற மொழிகளில் கவிதையியல் எவ்வாறு வளர்ந்துள்ளது, எவ்வாறு வடிவம் கொண்டுள்ளது என்பதை ஆய்வுசெய்து சான்றுகளுடன் விளக்க என்னால் இயலவில்லை. இருந்தபோதும், சில விளக்கங்களிலும், தனித்தன்மையான சில இயல்புகளிலும் வேறுபாடுகள் இருக்கலாம். இது மட்டுமின்றி, கன்னடத்தைப்போல நம் தேசத்தின் எல்லா மொழிகளுக்கும் சம்ஸ்கிருதமே பொருண்மையையும், வடிவ அமைதியையும் வழங்கியிருப்பதாக நம்பலாம். அந்த வகையில் சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கவிதையியல் இந்தியக் கவிதையியலாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

சம்ஸ்கிருதத்தில் உள்ள கருத்துகள் எல்லாவற்றையும் இங்கு தொகுக்கவில்லை. நமது கவிதையியலின் சாரமெல்லாம் ‘சுவை’ [ரசம்], ‘குறிப்பு’ [த்வனி], ‘பொருத்தப்பாடு’ [ஔசித்யா] ஆகிய சொற்களில் பொதிந்திருக்கிறது. இந்தக் கொள்கைகள் கவிதையியல் ஒப்பாய்வுத் துறைக்கு [Comparative Poetics] பரதக்கண்டத்தின் கொடை.

இவற்றின் சாரத்தை உரிய அளவு விரிவாக எடுத்துக்கூறும் நவீன நூல் எதுவும் கன்னடத்தில் நான் நூலெழுதிய காலகட்டத்தில் இல்லை. அதன் காரணமாக நூலின் பெரும்பகுதியை இவை தொடர்பான செய்திகளுக்கே வழங்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ‘அணி’, ‘குணம்’, ‘குற்றம்’, ‘ரீதி’, ‘மார்கம்’ முதலிய சிந்தனைகளை இலக்கண வளர்ச்சி என்ற பகுதியில் அறிமுக அளவில் கூறி திருப்திபட்டுக்கொண்டேன். விரிவாகக்கூறுதல், விளக்கியுரைத்தல் எவற்றிலும் ஈடுபடவில்லை. கவிதை வகைகள், நாடக இலக்கணம், கதைப்பொருள் மற்றும் கதைமாந்தர்கள் பகுப்பு, கவிஞரின் கற்பனை எல்லைகள் முதலியவை சார்ந்த நுட்பங்களை விளக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விருப்பம் இருந்தது; ஆனால் இயலவில்லை. எதிர்ப்பார்ப்பை மீறி நூல் இப்போதே வளர்ந்துவிட்டது. இந்த நிலையில் இவை எல்லாவற்றையும் உரிய அளவில் கூற, நூல் இன்னும் இரு மடங்கு பெரிதாகிவிடும். மேலும், இவற்றை இங்கு விளக்காததால் கன்னட மாணவர்களுக்கு அதிக இன்னல்கள் ஏற்படப்போவதில்லை என்பதும் என் எண்ணம். ஏனென்றால், தொடர்புடைய விவரிப்புகள் மைசூர் பல்கலைக்கழக வெளியீடாகிய ‘கன்னட கைபிடி’ என்ற நூலில் அணி குறித்தப் பகுதியில் ஏற்கனவே விரிவாக இடம்பெற்றுள்ளன. தொடர்ந்துவந்த கன்னட நூல்களிலும் பல விளக்கங்கள் உள்ளன. 

இவ்வாறாக, த்வன்யாலோகம் முன்வைக்கும் உயர்வான தர நிர்ணயத்தையே நானும் தொலைவிலிருந்து பின்பற்றி இருக்கிறேன். கவிதை என்ற உடற்பரப்பின் இழைஇழையான விவரிப்பை தவிர்த்திருக்கிறேன், மேலும், முன்புவந்த கவிதை இலக்கண நூல்கள் குறித்து பொதுவாகச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, நூலின் நோக்கத்துடன் தொடர்புடைய முக்கிய இயல்புகளை உரிய முறையில் கவிதை இலக்கண நூல்களிலிருந்தே எடுத்துக்கொண்டும் இருக்கிறேன்.

 *1மேலே தெரிவித்திருப்பதுபோல நூலின் முக்கிய நோக்கங்கள் சுவை மற்றும் குறிப்புக் கொள்கைகளை விளக்குவது தான். சிடுக்கானவையும், நம் கால நோக்கில் பயனற்றவையும் ஆகிய பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் அதிகம் பொருட்படுத்தவில்லை. மாறாக, சுவை மற்றும் குறிப்புக் கொள்கைகளின் சாரத்தை என் அறிவிற்கு எட்டியவரை விரிவாக எடுத்துரைக்க நூலின் மூன்றாம் பகுதியில் முயன்றிருக்கிறேன்.
 
சம்ஸ்கிருத மொழியின் புகழ்ப்பெற்ற கவிதையியலாளர்கள், அவர்களின் படைப்புகள், அவர்கள் வாயிலாக கவிதையியல் வளர்ந்து வடிவம் கொண்ட பாங்கு, கவிதையியலின் சிறப்பியல்புகள் ஆகியவற்றைச் சுருக்கமாகவும் அதேசமயம் முக்கிய இயல்புகள் விடுபடாமலும் நூலின் முதல் பகுதியில் புலப்படுத்தியிருக்கிறேன். இங்கும் கூட சுவை மற்றும் குறிப்புக் கொள்கைகளின் வரலாறு ஓர் சரடுபோலத் தொடர்ந்து வந்து, எடுத்துரைப்பிற்கு இன்றியமையாத ஒருமுகத்தன்மையை வழங்கியிருப்பதாகவே நினைக்கிறேன்.

கவிஞர், கவிதை, இணைமனத்தார் என்பது நூலின் இரண்டாவது பகுதி. கவிதைப்படைப்பு, கவிதையுலகம், கவிதையின் பயன் இவை உள்ளிட்ட செய்திகளை நமது இலக்கண நூல்களில் ஓரிரு வாக்கியங்களில் சுட்டிக் கடந்து விடுவதே வழக்கம். இவை குறித்து ஆங்காங்கு கிடைக்கும் விளக்கங்களையும், குறிப்புணர்த்தல்களையும் ஒன்று திரட்டி நூலின் இரண்டாம் பகுதியில் போதுமான அளவு விரிவாகப் புலப்படுத்தியிருக்கிறேன். பத்து மற்றும் பதினொன்றாம் அத்தியாயங்கள் பெரும்பாலும் ‘இமாஜினேஷன் இன் இண்டியன் பொயட்டிக்ஸ் (IMAGINATION IN INDIAN POETICS) ‘ என்ற என் ஆங்கிலக் கட்டுரையின் தழுவல் என்றே சொல்லலாம். மேலைக் கவிதையியலில் கவிஞரின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்தப் பொருண்மையில் இந்தியர்களின் பார்வை என்ன என்பதை அறிந்துகொள்ள நூலின் இரண்டாவது பகுதி மூலம் உதவி கிடைக்கலாம்.
 
நவீன கவிதை விமர்சனத்தில் நடை [ஸ்டைல்] குறித்த சிந்தனை முக்கிய இடம் பெறுகிறது. எனவே, “ரீதி”, “மார்கம்” ஆகியவற்றுடன் “நடை” கொண்டுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து, இவற்றுக்கும் சுவைக்கும் உள்ள தொடர்பை மிக விரிவாக உணர்த்தியிருக்கவேண்டும். அது மட்டுமல்ல, சுவை என்னும் இலக்கியச் சாரம் வெவ்வேறு இலக்கிய வகைகளில் எவ்வாறு வெளிப்படுகிறது? என்பதை விளக்கியிருக்கவும் வேண்டும். பெருங்காப்பியம், மெல்லிசைப்பாடல், நாடகம் முதலிய ஒவ்வொன்றிலும் வெளிப்படும் சுவையின் தனித்தன்மை உரைநடைப் படைப்புகளில் [சிறுகதை மற்றும் நாவல்களில்] சுவையின் இடம் என்ன என்ற அம்சம் உட்பட எல்லாவற்றையும் பாகுபடுத்தி விளக்கவேண்டியதும் தேவைதான். ஆனால் இவை அனைத்திலும் ஈடுபட நூல் வெகுவாக வளர்ந்துவிடக்கூடும் என்ற அச்சம் ஒருபுறமும், தனித்த சிந்தனைக்கும் வெளிப்பாட்டு முறைக்கும் உரியவையாக இருக்கும் இவை அனைத்தும் மற்றொரு தனி நூலுக்கே பொருண்மையாக அமைய வேண்டிய செய்திகள் என்ற அறிவு மறுபுறமும் என்னைக் கட்டுப்படுத்தின.
 
நம் நாட்டுக் கவிதையியல் பேரறிஞர்கள் முன்வைத்துள்ள கருத்துகளின் சாரத்தைத் தொகுத்து அவர்களின் கூற்றுகளுக்கு மாறுபடாமல் விவரிக்கவேண்டும் என்பதே என் இலக்கு. இது ஒரு செய்தியாளர் பணி. இந்தப் பணியுடன் உரையாசிரியர் பணியையும் ஆங்காங்கு கைக்கொண்டு குறிப்பு வடிவில் மூலநூல்களில் இடம்பெற்றிருக்கும் சில அம்சங்களை விளக்கியுரைத்திருப்பதும் உண்டு. ஓரிரு இடங்களில் இலக்கண அறிஞர்களின் நோக்கங்களை அவ்வாறே சில அடிகள் முன்னெடுத்திருப்பதும் உண்டு. இன்றைய நோக்கில் சரியெனத் தோன்றாத சில அம்சங்களை விமர்சித்திருப்பதும் கூட உண்டு. இதுபோன்ற பணிகளில் விவரித்துக் கூறுபவரின் ஆற்றல் எல்லைக் காரணமாக சில இடங்களில் குறைத்துச் சொல்வதும், திரித்துச் சொல்வதும் நிகழலாம். இவற்றைத் தவிர்க்க இயலாது. இருந்தாலும் முற்கால இலக்கண அறிஞர்களின் கருத்துகளுக்கு மாறுபட்டவற்றையும், அவர்களின் சிந்தனைகளுக்கு உட்படாதவற்றையும் நான் அவர்கள் மீது அறிந்தே சுமத்தவில்லை என்பது என் நம்பிக்கை. அப்படிப் பார்த்தால் அவர்கள் விவரிப்புகளில் கருக்கொண்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் என் விழியிலிருந்து நழுவி தெரிவுக்கு அகப்படாமல் விடுபடவே வாய்ப்பதிகம். 

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள் பல கன்னடக் கவிதைகளிலிருந்து இயல்பாகத் தெரிவு செய்யப்பட்டவை. சம்ஸ்கிருதத்திலிருந்து வந்திருக்கும் கவிதைகள் கூட பெரும்பாலும் என்னுடையத் தெரிவுகள் தாம். கவிதைவடிவில் அமைந்த அவற்றின் மொழிபெயர்ப்புகளுக்குப் பொறுப்பும் என்னையே சாரும். இந்த உதாரணங்களைத் தொகுப்பதிலும், அவற்றின் உட்பொருளைப் புரிந்துகொள்வதிலும் சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஏனென்றால் கவிஞரின் உணர்வுகள் பல தருணங்களில் மிகவும் நுட்பமானவை. மெல்லிய உணர்வுகளைக் கவிஞர் வரவேற்று வெளியிலிருப்பவர்களின் வெற்றுப்பார்வைக்குப் புலப்படாதவாறு அவர் படைப்பில் பாதுகாப்பாக பொதிந்துவைத்திருக்கிறார். “Timid thoughts, be not afraid of me. I am poet” *2 இந்த இடத்தில், இப்படிப்பட்ட குறிப்புப்பொருள் என்று விவரித்துக் கூற அனுபவமே ஆதார அளவுகோல். எனவே அங்கெல்லாம் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இருக்கவே செய்யும். மொத்தத்தில் "தேவம் விக்ரீய தத்யாத்ரோத்ஸவம் ஆகார்ஷீத்" (கண்களை விற்று சித்திரம் வாங்குதல்) என்ற இகழ்ச்சிக்குக் களமாக அமையாமல் சுவைக் குறிப்பாக [மறைமுகமாக] வெளிப்படும் முறைமையை உரிய அளவில் இந்த நூல் எடுத்துரைத்துவிட்டால் போதும். 

முடிவாக நன்றியை வெளிப்படுத்தும் சில சொற்கள்.
 
என் ஆசிரியர்களுள் ஒருவரான “திரு. ஏ. ஆர். கிருஷ்ண சாஸ்திரி “அவர்கள் இந்த நூலை மதிப்பிட்டு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவர் கன்னடப் பதிப்புக்கழகத் தலைவராக இருந்தபோதுதான் இதன் அச்சாக்கம் தொடங்கியது. என் நண்பரும் சிறந்தக் கவிஞரும் ஆகிய “திரு. கே. வி. புட்டப்பா” அவர்களின் தலைமையில் தற்போது நூல் வெளியீடு காண்கிறது. “திரு. டி. எல். நரசிம்மாச்சாரியார்”, கன்னட வெளியீட்டுக்கழகச் செயலர் “திரு.ஜி. ஹனுமந்தராயர்” ஆகிய நண்பர்களின் விழிகளையும் நூல் கடந்து வந்திருக்கிறது. இவர்களுடன் மேலும் சில நண்பர்கள், மாணவர்கள் நூலின் அச்சுப்பணி எதுவரை வந்திருக்கிறது? எப்போது நூல் வெளிவரும் என்று அவ்வப்போது நம்பிக்கையுடன் கேட்டு குறைவுபட்டுவந்த என் ஊக்கத்தைக் கிளர்ந்தெழச் செய்தார்கள். நலம் விழையும் எல்லோருக்கும் என் நன்றிகளை அர்ப்பணிக்கிறேன். என் வணக்கத்திற்குரிய ஆசிரியர்கள் இருவர் மட்டுமே நூல் உருவாகக் காரணமாக இருக்க, அவர்களுக்கு என் பக்தியை மறைமுகமாகவே பணிந்து முன்வைக்க வேண்டியிருக்கிறது.

தீ. ந. ஸ்ரீ
13. 7. 1952

அடிக்குறிப்புகள்:

1.“தத்ர வாச்யஹ ப்ரசித்தோயஹ ப்ரகாரை ரூபமாதிபிஹி பஹுதா வாக்ருதஹா சோன்யஹெ ததோன்யேஹ ப்ரதன்யதே கேவலம் அனோத்யதே யதோபயோஹம்” [த்வன்யாலோகம் 1.3 மற்றும் விருத்தி]

2.ரபிந்திரநாத் தாகூர்: ஸ்ட்ரே பேர்ட்ஸ் (Stray Birds) ப-238 

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

இந்தியக் கவிதையியல் வெளிவந்த நாள் முதல் இது தொடர்பாக அறிஞர்களும் மாணவர்க் குழாமும் காட்டும் அங்கீகாரத்திற்கும் மதிப்பிற்கும் நிறைமனத்துடன் நன்றியை முன்வைக்கிறேன். நூல் தொடர்பாக எழுந்த ஓரிரு விமர்சனக் குறிப்புகளில் பாராட்டுதல்களுடன் சில விமர்சனங்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன. இவ்வாறு அமைவதும் இயல்புதான். ஓரிரு நண்பர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இரண்டாம் பதிப்புக்கு நூலை மேம்படுத்தியபோது இயன்றவரை இவற்றைக் கருத்தில் கொண்டிருக்கிறேன். மேலும், இன்றியமையாதவை எனத் தோன்றும் இடங்களில் சிற்சில திருத்தங்களைச் செய்திருப்பது மட்டுமல்ல, சில அம்சங்களைப் புதியதாகச் சேர்த்தும் இருக்கிறேன். நூல் இறுதியில் உள்ள மூன்று சுட்டிகள் [INDEX] தான் முக்கியமான சேர்க்கைகள். 

இப்படிப்பட்ட நூல்களில் அகரவரிசைச் சுட்டிகள் இடம்பெறவேண்டும் என்பது எனக்கு முன்பே தெரியும். இருந்தும் அதனை முதற் பதிப்பில் கொடுக்கத் தான் இயலவில்லை. இந்தமுறை என் மாணவ நண்பர்கள் “திரு. என்.எஸ்.லஷ்மிநாராயண பட்.,எம்.ஏ” மற்றும் “திரு. எம்.வீ.ஸ்ரீனிவாச மூர்த்தி.,எம்.ஏ” ஆகிய இருவரும் தாமாகவே முன்வந்து இந்தப் பணிச்சுமையை ஏற்றுக்கொண்டார்கள். அரிய உழைப்பாலும், முழுத்திறனாலும் அவர்கள் சூத்திரம் மற்றும் உதாரணச் செய்யுள்கள், நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள், கலைச்சொல்லடைவுகள் ஆகியச் சுட்டிகளை உருவாக்கிக் கொடுத்து நூலில் இருந்துவந்தக் குறையைப் போக்கினார்கள். அவர்களுக்கு என் எண்ணற்ற நன்றிகள். 

இந்த நூலை நான் எழுதியதைத் தொடர்ந்து தற்போது மேலைக் கவிதையியலிலும் அதன் ஆதரவில் ஓரளவு நம் இலக்கிய உலகிலும் கவிதைப்படிமம் [POETIC IMAGE] என்னும் இலக்கியக் கொள்கை பிரபலமடைந்துள்ளது. நமது மொழியிலும் நவீனத்துவக் கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. கால, இடப் பின்னணி மற்றும் ரசனைக் காரணமாகக் கவிதை வடிவமும் சிறிதே வேறுபட்டிருக்கலாம். ஆனால், அதன் சாரம் ஒன்றுதான். இந்த நோக்கில் மறைமுகமாக சுவை வெளிப்படுவதை விளக்கும் நம் குறிப்பு கொள்கையைக் (த்வனி) தற்காலக் கவிதைக் கொள்கைகளுடன் பொருத்திப் பார்த்து மதிப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்து விரிவாக ஒப்பிடும் பணி இனிதான் நடைபெற வேண்டும். குறிப்பு [த்வனி] எனப்படும் கருதுகோள், படிமம் என்ற கருதுகோளை எளிதில் உள்வாங்கி அதைவிடவும் பரந்துபட்டதாக நிலைபெறக்கூடும் என்பது என் எண்ணம். ஆனால் இவற்றை விளக்க வேறொரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்தச் சூழலில் “டாக்டர் எஸ். கே. டே” அவர்களின் ‘தி ப்ராப்ளம் ஆஃப் பொயட்டிக்ஸ் எக்ஸ்ப்ரஷன் (THE PROBLEM OF POETICS EXPRESSION) ‘ என்ற மிக விரிவானக் கட்டுரையைக் குறிப்பிடவேண்டும். இது அண்மையில் வெளிவந்துள்ள அவருடைய ‘ஸம் ப்ராப்ளம்ஸ் ஆஃப் ஸான்ஸ்க்ரீட் பொயட்டிக்ஸ் (SOME PROBLEMS OF SANSKRIT POETICS)’ என்னும் கட்டுரைத் தொகுப்பில் முதல் கட்டுரையாக அமைந்து எனக்குப் பார்வையிடக் கிடைத்தது. இந்தியக் கவிதையியல் சிந்தனைப்பள்ளியில் ஆய்வு நடத்தியிருக்கும் தற்கால அறிஞர்களுள் “டாக்டர் டே” அவர்கள் முக்கியமானவர். நம்மவர்களின் கவிதைக்கொள்கைகள் மற்றும் அவற்றின் எல்லைகள் குறித்து அவர் மதிப்பீட்டு நோக்கில் முன்வைக்கும் கருத்துகள் கவனிக்கவும், சிந்திக்கவும் வேண்டியவை. இருந்தும் டாக்டர் எஸ். கே. டே அவர்களின் கருத்துகள் மீதான விமர்சனங்களுக்கு இந்த முன்னுரையில் இடமில்லை.

இந்த நூலில் பரிசீலிக்க இயலாமல் போன எத்தனையோ விஷயங்கள் குறித்து தொடர்ந்து சிந்தித்து கவிதை இயல்பு தொடர்பாக ஒரு தனிநூல் எழுதவேண்டும் என்னும் விருப்பத்தை முதற்பதிப்பின் முன்னுரையில் வெளிப்படுத்தியிருந்தேன். அது இன்னும் விருப்பமாகவே எஞ்சியிருக்கிறது. ஆனால் அது என்றேனும் ஒருநாள் நிறைவேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் குறையவில்லை. அகத்தில் ஆசிகளும் புறத்தில் தூண்டுதல்களும் இருக்கும்வரை அது குறைவுபடுவது எங்ஙனம்!

===========================


பகுதி- 1 இலக்கண வளர்ச்சி
தோற்றுவாய்

வால்மீகி இராமாயணத்தை சம்ஸ்கிருத ஆதி கவிதை என்று அழைப்பது வழக்கமென்றாலும், வெகுகாலம் முன்பே இந்தியப் பெருநிலத்தில் கவிதைப் படைப்பாக்கம் துவங்கிவிட்டது என்று கூறலாம். ஆரியர்களின் பழமையான நூல் வேதசம்ஹிதை. இதன் பல சூக்தங்களும், உபநிடதங்களின் பல பகுதிகளும் உன்னதமானக் கவிதைகள். அவற்றிலிருந்து ஒருவர் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லது தவிர்த்துவிடலாம். எது எவ்வாறு இருந்தாலும் அவற்றின் எடுத்துரைப்பு அழகியலை ரசிக்கமுடியும். உலகியலை விளக்கும் இலக்கியத்திலும் ஆதிகவிக்கு முன்பே கவிஞர்கள் இருந்திருக்கவேண்டும். இராமாயணம் தோன்றிய பிறகு சம்ஸ்கிருத கவிதை பன்முகப்பட்டு வளர்ச்சியடைந்தது. பதஞ்சலியின் காலத்தில் [கி.பி.150] வரருசியின் கவிதை என்ற பெயரில் ஒரு படைப்பு இருந்தமைக்கான பதிவு உள்ளது. தம்முடைய பேருரையில் நீதி, காதல், பற்றுருதி ஆகியவற்றை எடுத்துரைக்கும் கவிதைப்பகுதிகளைப் பதஞ்சலி மேற்கோள் காட்டியுள்ளார்.*1

இவ்வாறு, கவிதைப் படைப்பு தொன்மையானதாக நமது தேசத்தில் இருந்தபோதும், அவற்றைப் பாகுபடுத்தும் முயற்சியில் பேரறிஞர்களின் உள்ளம் சிறப்பாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இலக்கணம், யாப்பு உள்ளிட்ட ஆறு வேதத்துறைகளில் கவிதையியல் இலக்கணம் இடம்பெறவில்லை. பதினான்கு சாத்திரங்களின் பட்டியலில் அதன் பெயர் இல்லை. வியாஸ்கர் இயற்றிய நிருக்தம் என்ற நூலிலும், பாணினியின் அஷ்டாத்யாயியிலும் உவமை பற்றிய உரையாடல்கள் இயல்பாக வந்திருப்பதால் மட்டுமே அணியிலக்கணம் அன்றே தோன்றிவிட்டதாகச் சொல்லிவிட முடியாது.*2 

இராஜசேகரர் [கி.பி. 900] தம் காவ்யமீமாம்சை என்ற நூலில் கவிதையியலின் மூலத்தைச் சிவனுடன் தொடர்புபடுத்தியுள்ளார். மேலும் அவர், கவிதைக்கூறு ஒவ்வொன்றையும் தொன்மையான ஓர் ஆசிரியரின் பெயருடன் இணைத்து இவ்வாறு வழங்கியுள்ளார். 

“அதாதஹா- காவ்யம் மீமாம்சீ ஷ்யாமஹெ | யதோபதீதேஷஹ ஸ்ரீகண்டஹ பரமஸேஷ்டி||

வைகுண்டாதிப்யஹ சது ஸஷ்டயெ ஸிஷ்யேப்யஹ ஸோபிக் பஹவான் ஸ்வயம்பூஹு இச்சா ஜன்மப்யஹ | ஸ்வாந்த்தே வாசிப்யஹ தேஶு ஸாரஸ்வதேயஹ... காவ்ய புருஷ ஆஸித்... ஸோஷ்டாதஸாதிப் கரணீம் ||

திவ்யேப்யஹ காவ்யவித்யாத்ஸ்நாதகாயேப்யஹ சத் ப்ரபஞ்சம் ப்ரோ வாச்ச தத்ர கவிரஹஸ்யம் சஹஸ்ராக்ஷ்யஹ ஸமம்நாஸீத் | ஔதிகம் உக்திகர்பஹ ரீதிநிர்ணயம் ஸ்வர்னநாபஹ அனுப்ராஸிகம் ப்ரசேதயனஹ யமகானி ||

சித்ரம் சித்ராங்கதஹ ஸப்த ஸ்லேஷம் ஸேஷஹ வாஸ்தவம் புலஸ்தயஹ ஔபம்யம் ஔபகாயனேஹ அதிஷயம் பாராசரஹ | அர்த்த ஸ்லேஷம் உதர்ஸ்தயஹ உபயாலங்காரிகம் குபேரஹ வைநோதிகம் காமதேவஹ ||
 
ரூபஹ நிருபநீயம் பரதஹ ரஸாதிகாரிகம் நந்திகேஸ்வரஹ தோஷாதிஹரணம் திஷணஹ | குணௌபாதாநிகம் உபமன்யு ஔபநிஷதகம் குசமார இதி ததஸ்தே ப்ருதக் ப்ருதக் ஸ்வஸாஸ்த்ரானீ விரச வ்யாங்சக்ரஹு ||

இந்த வாக்கியங்களின் சாரத்தை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்.

“இனி காவ்ய மீமாம்சைப் பகுதி. பிரம்மன், விஷ்ணு உள்ளிட்ட அறுபத்து நான்கு சீடர்களுக்குச் சிவனும், தம்முடைய மானஸ புத்திரர்களுக்கு பிரம்மனும் கற்பித்ததையே நாங்கள் பின்பற்றுகிறோம். 

பிரம்மனின் அந்த சீடர்களுள் சரஸ்வதி மைந்தன் காவ்யபுருஷனும் இருந்தான். கவிதைத்துறை விற்பன்னர்களாகிய உயர்ந்த ஆளுமைகளுக்கு பதினெட்டு அதிகரணங்கள் இருக்கும் இந்த இலக்கணத்தை அவன் மிகவிரிவாக எடுத்துரைத்தான். கவிதையின் நுட்பத்தை அங்கிருந்த ஆயிரம் கண்ணுடையோன் விளக்கினான். சொல், பொருள் குறித்த சிந்தனையை முதலில் நிகழ்த்தியவன் உக்திகர்பன். முறைமைசார் முடிபுக்கு உரியவன் ஸ்வர்ணநாபன். ஓரடியில் ஒரெழுத்து மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஆதிப்ராசம், யமகம்,*3 சித்திரபந்தம், சொற்சிலேடை ஆகியவை சொல்லணிப் பிரிவுகள். இந்தப் பிரிவுகளுக்கு முறையே ப்ரெசேதாயனன், சித்திராங்கதன், சேஷன் ஆகியோர் உரிமையாளர்கள். இயல்புநவிற்சி, உவமைநலன், உயர்வு நவிற்சி, சிலேடைப்பொருள் ஆகியவை பொருளணிப் பிரிவுகள். இவற்றுக்கு புலஸ்தியன், ஔபகாயனன், பராசரன் மற்றும் உதர்த்யன் ஆகியோர் முறையே உரியவர்கள். இருவகை அணிகள் குறித்த சிந்தனைக்கு உரியவன் குபேரன். பண்பட்டவர்களுக்கு உரியவையான வைபவங்கள் தொடர்பான சிந்தனைக்கு உரியவன் காமதேவன். நாடக விளக்கத்திற்கு பரதர், ரசம் எனப்படும் சுவைக்கு நந்திகேஸ்வரர் ஆகியோர் உரியவர்கள். தீஷானன் குற்றம் சார் ஆய்வுகளுக்குப் பொறுப்பாளன். கவிதை குணங்களுக்கு உபமன்யுவும்; யந்திரம், மந்திரம் தொடர்பான உபாசனைக்கு குசமாரனும் உரியவர்கள். இவ்வாறிருக்க, தொடர்ந்து அவர்கள் தமக்குரிய இலக்கணங்களை தனித்தனியே வகுத்தார்கள். 

இந்த மரபு எந்த அளவுக்கு மெய்யானது? பரதர், நந்திகேஸ்வரர் முதலிய சிலரைத் தவிர்த்துவிட்டால் மற்றவர்கள் வரலாற்றில் எந்த அளவுக்கு வாழ்ந்தவர்கள்? தெரியவில்லை. 

“சித்ரம் சித்ராங்கதஹ, ஸப்த ஸ்லேஷம் ஸேஷஹ” இவை போன்ற இடங்களில் எழுத்துகளின் மீள் வருகை சார்ந்த ரசனையே கருத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்பு ஏற்படக் காரணம். இது ஒருபுறம் இருக்கட்டும்,*4 கிறித்து பிறப்புக்கு முற்பட்ட கவிதை இலக்கண நூல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், அந்தக் காலகட்டம் முதல் அணி இலக்கணம் ஒரு முறைமைக்கு உட்பட்ட வடிவில் நிலைப்பெற்றிருந்தது என்று சொல்லவும் போதுமான சான்றுகள் இல்லை.*5 

இவ்வாறு, நம் நாட்டு இலக்கணத்துறைகளில் கவிதையியல் பிற்பட்டதாக இருந்தாலும், நூல்களின் எண்ணிக்கை, கொள்கைப் பொருத்தப்பாடு இவற்றில் கவிதையியல் மற்றத் துறைகளை விடப் பின்தங்கியிருக்கவில்லை. படைப்பாற்றலும் அறிவுக்கூர்மையும் மிக்க அறிஞர்கள் இதனை வளர்த்தெடுத்தார்கள். எக்காலத்திலும், எந்த இலக்கியத்திற்கும் பொருந்தக்கூடிய பல ரகசியங்களை வெளிக்கொண்டு வந்தார்கள். இலக்கணம் முதலிய துறைகளில் புலப்படாத ஓர் ஆச்சரியமான அம்சமும் இதில் உண்டு. தொடக்கநிலை ஒன்றைத்தவிர கவிதையியலின் மற்ற ஒவ்வொரு மாற்றத்தையும் பிற்கால அணியிலக்கண நூல்களில் பார்க்கலாம். இதில் தொடக்கத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு கொள்கையை புறம்தள்ளி மற்றொன்று மேலெழும். அதன் மீது மறுப்பும் விமர்சனமும் தோன்றும். துறையின் வாய்ப்புகள் பரந்துபட்டு அமைய, அதன் கொள்கைகள் செரிவடைந்தபடிச் செல்லும். இங்கு அறிவுக்கூர்மை மிக்கவர்களின் கருத்துலகப் பெரும்போர் நிகழும். எனவே விவாதத்தில் உயிரோட்டமும் இருக்கும். அதுமட்டுமல்ல, கவிதையியலின் தீவிரமான எழுச்சிக்காலகட்டத்தில் எழுதிய பலர் இயல்பாகவே கவிஞர்கள். அவர்களின் எழுத்தாக்கங்கள் சுவை நிறைந்து ததும்புகின்றன. அவர்களின் ஆளுமைப் படிமங்கள் இந்த நூல்களில் நிலைத்திருக்கின்றன. 

வாசிக்கவும் அல்லது கேட்கவும் உரியது ஓர் எளிய கவிதை. நிகழ்த்தப்படும்போது காண்பதற்கு உரியது நாடகம்.*6 சம்ஸ்கிருதக் கவிதையியலைப் பொருத்தவரை கவிதை என்பது இந்த இரண்டையுமே உள்ளடக்கியிருக்கும் சொல் ஆகும்.

“காவ்யேஷூ நாடகம் ரம்யம்” என்னும் புகழுரை மேற்கண்ட கூற்றுக்கு ஒரு வெளிப்படையானச் சான்று. ஆனால், தொடக்கக் காலகட்டத்தில் இந்த இரு கவிதைப்பிரிவுகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு ஒரே திட்டத்தில் பாகுபடுத்தி உரைக்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. கவிதையிலக்கணம் [அணியியல்], நாடக இலக்கணம் [நடனவியல்] ஆகிய இரண்டும் வெவ்வேறு மரபுகளாகவே வளர்ந்தன. இதற்கு உரிய காரணத்தை ஊகிப்பது சுலபம். நாட்டியம் ஒரு கூட்டுக்கலை. இதில் கவிதைத்தன்மைக்கு முழு சுதந்திரமான இடம் இல்லை. ஆடல், பாடல், வேட ஒப்பனை இவற்றுடன் கவிதை என்பது நடிப்பின் பகுதியாக இடம்பெறும். *7

மற்றக் கலைகளை பரிசீலிக்கும்போது அவை நிகழ உதவும் கவிதைப்பகுதிகள் குறித்து ஆராயும் வழக்கமும் நிலைப்பெறத் தொடங்கியது. இவ்வாறு, தம் மற்ற கூட்டாளிகளின் செல்வாக்குக்கு உட்பட்டுவந்த நாடகமும் மற்ற கவிதைப் பிரிவுகளிலிருந்து தனித்து விளங்கியது. இது ஒரு புறமிருக்க, கவிதை இலக்கணத்தை வெளிப்படுத்தவேண்டும் என்று முயன்றவர்கள் பொதுவாக நாடகம் பற்றிய சிந்தனைகளை வேண்டுமென்றே தவிர்த்தார்கள். அதனை ‘ஆகமாந்தரா’ *8 [மற்றொரு துறை] என்றே கருதினார்கள்.

அதுமட்டுமல்ல, காட்சிக்கவிதை, கேட்புக்கவிதை இரண்டின் சாரமும் ஒன்றுதான். தொன்றுதொட்டு நாடகத்தில் சுவைக்குக் கிடைத்துவந்த முக்கியத்துவம் அனைத்து வகை இலக்கியங்களுக்கும் உரிய ஒன்றுதான் என்பதை இலக்கணவாதிகள் அங்கீகரிக்கச் சிறிது காலம் தேவைப்பட்டது. அவ்வாறு நிகழ அணி இலக்கணத்தில் பெரும் புரட்சியே விளைந்தது. இது பின்னர் விரிவாக விளக்கப்படும். 

இத்தனைக்குப் பிறகும் தனியே நாடக இலக்கணத்திற்கு என்று சிறப்பாக நூல்கள் தோன்றுவதும், கவிதை இலக்கண நூல்களில் நாடகம் குறித்து எதையும் கூறாமல் தவிர்த்துவிடுவதும் ஆகிய இரு போக்குகளும் இறுதிவரை தொடரவே செய்தன.

கட்டுரை, உரை முதலியவற்றின் வடிவம், கட்டமைப்பு, கூற்றின் நுட்பம் இவற்றைப் பாகுபடுத்தி ஆராயும் அணி இலக்கணம் [ரெடரிக்ஸ்] எனப்படுகிறது. கவிதை சாரம், அதன் உருவாக்கமுறை முதலியவற்றை விளக்கும் கவிதையியல் [பொயட்டிக்ஸ்] என்று அழைக்கப்படுகிறது. எல்லாக் கவின்கலைகளிலும் பொதுவாக இருப்பதன்றி, பிரம்மனின் படைப்பு அனைத்திலும் காணப்பெறும் அழகின் இயல்பைச் சிந்திக்கும் துறைக்கு அழகியல் [ஈஸ்தடிக்ஸ்] என்று பெயர். இவை மூன்றும் முக்கியமானத் துறைகள். இந்த மூன்று துறைகளும் மேலை உலகில் பெரும்பாலும் தனித்தனியாக வளர்ந்தன. இவற்றில் கடைசியாக சொல்லப்பட்ட அழகியல், அங்கு தத்துவத்தின் பகுதியாக வளர்ந்தது. புகழ்ப்பெற்ற பல தத்துவ அறிஞர்கள் அழகியல் சிந்தனைக்கு தமது தரிசனத்தில் ஒரு தனியிடம் வழங்கியவர்களே. அணிப்பகுப்பு, கவிதையியல், அழகியல் தரிசனம் இந்த மூன்றையும் வேறுபட்ட துறைகளாகக் கருதிப் பாகுபடுத்தி விளக்கும் மரபு நம் நாட்டில் தோன்றவில்லை. ஒரே அடியில் எழுத்துகளின் மீள்வருகை [அனுப்ராசம்], உவமை உள்ளிட்ட அணிகளின் அமைவு முதலியவை கவிதைக்கொள்கை பற்றிய உரையாடலின் பகுதியாக மட்டுமே இங்கு இடம்பெற்றது. 
தொடக்க கால அணியியலாளர்கள் கவிதையில் இனிமைத் தோற்றுவிக்கும் எல்லாவற்றையுமே அலங்காரம் என்று அடையாளப்படுத்தினார்கள்.*9 

ஆனால் அவர் விழிகளில் பட்டது யமகம், எழுத்துகளின் மீள்வருகை, உவமை, மிகைப்படுத்துதல் முதலிய சொல்லணிகள் மட்டும்தான். அங்கிருந்து பகுப்பு இன்னும் நுட்பமடைந்து கவிதையின் சாரம் என்பது வேறு, அணிகள் அனைத்தும் அதன் அங்கங்கள் மட்டுமே என்னும் புரிதல் ஏற்பட்டது. 

சொல்லையும் பொருளையும் சார்ந்த அணிகள் என்ற எல்லைக்கு உட்பட்ட பொருள்வரையறை அலங்காரம் என்னும் சொல்லுக்கு அமைந்துவிட்டது. அதன் பிறகும் அழகியல் என்னும் முந்தைய பரந்துபட்ட பொருள் மறைந்துவிடவில்லை.*10

எனவேதான் அணியிலக்கணம், கவிதையியல் ஆகிய இரண்டும் நம்மிடையே இணையான சொற்களாக நிலைப்பெற்றிருக்கின்றன.*11

வரலாற்று நோக்கில் பார்க்க வெறும் அணியிலக்கணமாக முதலில் இருந்த ஒன்றே, காலம் செல்லச்செல்ல மிகவும் ஆழ்நிலையை அடைந்து, மிகவும் பரந்துபட்டுக் கவிதையியலாகப் பரிணமித்தது என்று சொல்லலாம். ஆக நமக்குள் எப்போதும் இவை இரண்டும் வெவ்வேறு துறைகள் என்ற உணர்வே தோன்றவில்லை. வெறுமனே அணிகளையே பட்டியலிடும் நோக்கத்துடன் கிளம்பியவர்களும் கூட கவிதையில் அணிகளின் இடம் என்ன என்பதை மறக்கமுடியாத நிலை ஒன்று ஏற்பட்டுவிட்டதே இதன் முக்கியப் பயன். எல்லாக் கவின்கலைகளையும் ஒரேநிலையில் வைத்துச் சிந்திக்கும் அழகியலும் நம் நாட்டில் தனித்து வளர்ச்சியடையவில்லை. மேலைநாட்டவர்களைப் போல இந்தப் பகுதியைச் சேர்ந்த தரிசனவாதிகள் அதனை மிக விரிவாக எந்த இடத்திலும் விளக்கியுரைக்கவில்லை. 

எல்லாக் கலையழகும் ஒருவகை தோற்றம்தான் என்றும், எல்லாக் கலைச்செயல்பாடும் ஒருவகை மனவிகாரம் மட்டுமே என்றும் அவர்கள் கருதியதால், அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தவில்லை போலும். ஆனால் கலையின் மகத்துவத்தை இந்தியர்கள் யாருமே குறைத்து மதிப்பிடவில்லை.*12

கவிதைக்கலை பகுப்பாய்வில் ஈடுபட்டவர்களுள் எத்தனையோபேர் முதன்மை தத்துவவாதிகளாகவும் இருந்தார்கள். கவிதையியலாளர்கள் பொதுவாக மற்ற கலைகளுக்குப் பெரிய அளவில் பங்களிக்கவில்லை என்றாலும், அனைத்துக் கலைகளின் அடிப்படை இயல்பும் ஒன்றுதான் என்ற அறிவு அவர்களுக்கு இருக்கவே செய்தது. இந்த அம்சம் இனி வரவிருக்கும் அத்யாயங்களில் விரிவாகத் தெரியவரும். இவ்வாறு நமது கவிதையியல் நூல்களின் உள்ளேயே அழகியலும் போதுமான அளவுக்கு இடம்பெற்றுள்ளது. 
 
அடிக்குறிப்புகள் 
1.A.B.Keith; Sanskrit Literature pp.-45-7

2.S.K.De : Sanskrit Poetics, Vol.I.p.4ff

3.யமகங்கள் குறித்து விளக்கும் ஆசிரியரின் பெயர் காவ்யமீமாம்சையின் மூலப்பிரதிகளில் விடுபட்டிருப்பது போல் தெரிகிறது

4.ராஜசேகரரின் கூற்று குறித்த சிறப்பான ஆராய்ச்சிக்கு பார்க்கவும் – P.V. Kane, Alankara Literature, pp i-ii; kāvyamīmāṃsā(GOS), Explanatory Notes, pp 116-128

5.வாத்சாயணரின் காமசூத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலில் காவ்யக்ரியா [கவிதைச்செயல்பாடு], அபிதானகோஷம் [நிகண்டுப்பயிற்சி], சந்தோக்ஞானம் [யாப்பறிவு] இவற்றுடன் க்ரியாகல்பம் என்ற பெயரும் இடம்பெற்றிருக்கிறது. கவிதைச்செயல்பாட்டின் பகுதிகளாகிய நிகண்டு மற்றும் யாப்பு குறித்த அறிவுடன் இது வந்திருப்பதையும் கவனிக்கவேண்டும். ஜயமங்களம் என்னும் காமசூத்திர உரையும் “க்ரியா கல்பஹ இதி காவ்ய கரண விதிஹி காவ்யலங்கார இத்யர்தஹ” என்று புலப்படுத்துகிறது. இதன்மூலம், க்ரியா கல்பம் என்னும் சொல்லுக்கு கவிதை இலக்கணம் என்பதே பொருள் எனத் தெளிவாகிறது. 

கி. பி ஒன்றாம் நூற்றாண்டில் தோன்றிய லலித விஸ்தாரம் என்ற நூலில் காணப்பெறும் பட்டியலிலும் க்ரியா கல்பம் இடம்பெற்றுள்ளது (ப-156). க்ரியா கல்பத்தை அறிந்தவர்கள் குறித்த பதிவு இராமாயண உத்தரகாண்டத்திலும் உள்ளது (94.7). இராமாயண உத்தரகாண்டம் வால்மீகி படைப்பு அல்ல என்பது அறிஞர்கள் கருத்து. ஆக, க்ரியா கல்பம் என்ற சொல் கி. பி முதல் நூற்றாண்டில் வழக்கில் இருந்துள்ளது என்று ஊகிப்பது தவறாகாது. ஜயமங்களம் உரையில் க்ரியாகல்பம் என்னும் சொல்லுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொருளும் இவ்வளவு முற்பட்டதாக இருக்க, சம்ஸ்கிருத அணி இலக்கணத் தொன்மையை உறுதிப்படுத்த ஒரு சான்று கிடைத்திருப்பதாகக் கருதலாம். இந்தப் பொருள் குறித்த விரிவான விவரங்களுக்கு வி. ராகவன் அவர்களின் ‘நேம்ஸ் ஆஃப் ஸான்ஸ்க்ரீட் பொயட்டிக்ஸ்’ ‘(Names of Sanskrit Poetics - Some concepts, pp.264-7)’ என்ற கட்டுரையைப் பாக்கவும்.

6.சம்ஸ்கிருதத்தில் காட்சிக்கவிதைக்கு ரூபகம் என்பது ஒரு பொதுப்பெயர். இதன் வகைகளுள் நாடகம் என்பதும் ஒன்று. கன்னடத்தில் நாடகம் என்னும் சொல்லை பரந்துபட்ட பொருளில் பயன்படுத்துவது வழக்கம். மேலும் ஓர் அணியின் பெயராக ரூபகம் விளங்குகிறது. எனவே கன்னடச்சூழலைப் பொருத்தவரை நாடகம் என்னும் சொல்லின் பொருள்விரிவை மாற்றாமல் அமைத்துக்கொள்வதே சரியானது. நம்முடைய நூலில் நாடகம் என்பது ஒரு வகைமைப் பெயராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. பரதரின் நாட்டிய சாத்திரத்திலேயே இப்படிப்பட்ட சொற்பயன்பாடு ஆங்காங்கு இடம்பெறத் துவங்கிவிட்டது (சான்று.vi.60). இதற்கு உரையாக அபிநவகுப்தர் “நாடக ஷப்தோ ரூபஹ மாத்ர வ்ருத்திஹி” என்கிறார்.

7.“அபிநயத்ரயம் கீதாத்தோத்யே சேதி பஞ்சாங்கம் நாட்யம்” (அபிநவபாரதி, 1.p.264). அங்கிகா அபிநயம் [உடலசைவு], வாச்சிகா அபிநயம் [மொழிப்பயன்பாடு], அஹார்ய அபிநயம்[ஒப்பனை], பாட்டு, இசைக்கருவிகள் இவ்வாறு நாட்டியம் ஐந்து உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் வாச்சிகா அபிநயம் என்பது நடிகர்கள் உச்சரிக்க வேண்டிய கலைப்பகுதி. இதுவே நாடகம்.

8. தண்டி:காவ்யாதர்சம் 1. 31, II.366: பாமஹர், காவ்யாலங்காரம். 1.24

9.“காவ்ய ஷோபாகராந்த் தர்மானு அலங்காராந்த் ப்ரசக்ஷதே”(தண்டி:காவ்யதர்ஸம்,II.I), அரம் [அலம்] என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு ‘சிறந்த’, ‘பொருத்தமான’ என்ற பொருள் தொடக்கத்தில் இருந்தது. பழங்காலத்தில் மந்திர ஆற்றலை எழுப்பும் ஒரு கருவிதான் அணியியல். வேதமந்திரங்களில் காணப்படும் எழுத்துகளின் மீள்வருகை, மொழி இனிமை உள்ளிட்டவை தெய்வீக ஆற்றல் தோன்றுமாறு செய்யும் என்ற காரணத்தாலேயே அவற்றை அலங்காரங்கள் என கருதும் இயல்பு முதலில் இருந்திருக்கவேண்டும். மொழி சிறப்பாக அமைய அது முதலில் பண்பட்டு விளங்கவேண்டும், அவ்வாறே மொழி ஆற்றலுடன் விளங்க அது நன்கு அணிகொள்ளவும் வேண்டும். காலம் செல்லச்செல்ல எடுத்துரைப்பின் அழகு பற்றிய கவனம் அதிகரித்து அலங்காரம் என்பது பொலிவுக்குக் காரணமான அணிகலன் என்பதாக மாற்றமடைந்தது. எழுத்துகளின் மீள்வருகை, யமகம், உவமை முதலியவை கவிதையின் அணிகளாக நிலைப்பெற்றன. இவ்வண்ணம் அறிஞர் ஒருவர் விளக்கியிருக்கிறார்.(J. Gonda: The Meaning of the Word ‘Alankara’, Thomas commemoration. Vol- pp.97-114)

10.“காவ்யம் க்ராஹ்யம் அலங்காராத் ஸௌந்தர்யம் அலங்காரஹா” வாமனர் : காவ்யலங்காரம் சூத்திரப் பகுதி (I.i.1-2.)

11. அலங்காரம் அல்லது காவ்யாலங்காரம் என்பதே கவிதையியல் துறையை குறிக்க முதலில் பயின்றுவந்த சொல். பாமகர், உத்படர், வாமனர், ருத்ரடர் உள்ளிட்டவர்கள் இயற்றியுள்ள நூல்களின் பெயர்களைக் கவனிக்கவும். த்வன்யாலோகத்தின் “க” என்று எண்ணிடப்பட்டுள்ள பனுவலில் “சஹ்ருதயா லோகா நாம்நீ காவ்யாலங்காரே” (p.59) என்று இடம்பெற்றுள்ளது. குந்தகரும்
“க்ரந்தஸ்யஸ்ய அலங்கார இத்யபி தானம்” (வக்ரோக்திஜீவிதா, p.3) என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.
 
அண்மையில் தான் காவ்ய மீமாம்சை (கவிதையியல்) என்னும் சொல் பயின்றுவரத் தொடங்கியிருக்கிறது. அதனை முதலில் பயன்படுத்தியவர் நாமறிந்து இராஜசேகரர் தான். 

“ரஸ கங்காதரா நாம்நீம் கரோதி குதுகேன காவ்ய மீமாம்சாம்” (ரஸகங்காதரா p.3) என்னும் ஜகநாத பண்டிதரின் வாக்கியத்தையும் கவனிக்கவேண்டும். கவிதையியலை நடைமுறையில் குறிக்கும் பெயர் தான் காவ்ய மீமாம்சை என்று ஜகநாத பண்டிதர் வாக்கியத்தால் தெளிவாகிறது. ஓர் அறிவுத்துறை தொடர்ந்து நுட்பமடைய இவ்வாறு நிகழ்வது பொருத்தமானதுதான். இருந்தபோதும் அலங்கார சாத்திரம், அலங்காரிகம் ஆகிய சொற்கள் இன்றளவும் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன.

12. M. Hiriyanna: The Indian conception of values, (ABORI, XIX, pp.20- 21) = The Quest of perfection (pp.31-33)

கன்னட மூலம்: தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

கன்னடத்திலிருந்து தமிழாக்கம்: கு. பத்மநாபன்






தீ.ந.ஶ்ரீ கண்டய்யா (தீர்த்தபுர நஞ்சுண்டயா ஸ்ரீகண்டய்யா) (26 நவம்பர் 1906 - 7 செப்டம்பர் 1966) கன்னட கவிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், மொழியியலாளர் மற்றும் பேராசிரியர். 'பாரதிய காவ்யாமிமாம்சே' என்ற தலைப்பில் இரண்டாயிரமாண்டுகளைக் கொண்ட இந்தியக் கவிதைகளின் வரலாறு மற்றும் பாரம்பரியம் குறித்த அவரது பணிக்காக அவருக்கு பம்ப பிரஷஸ்தி விருது வழங்கப்பட்டது. 1952இல் இந்திய அரசியலமைப்பின் கன்னடப் பதிப்பைத் தயாரித்து வெளியிடுவதில் ஸ்ரீகண்டய்யா முக்கியப் பங்காற்றினார். எஸ். அனந்தநாராயணன் மற்றும் எம். சிதானந்த மூர்த்தி போன்ற கன்னட இலக்கியவாதிகளின் முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கு ஸ்ரீகண்டய்யா வழிகாட்டியாக இருந்திருக்கிறார். கன்னட அகராதி திட்டத்தில் தீவிர பங்கேற்பாளராஎ இருந்துள்ளார். 

கு.பத்மநாபன்

கு.பத்மநாபன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். முதன்மையாக கன்னடமொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். குப்பம் திராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆய்வாளர் சா.பாலுசாமிக்கு கீழ் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.   இனி ஓநாய்களுக்கு அஞ்சுவதில்லை, உயிர்காடு ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.