Wednesday 25 January 2023

எனக்கு டேபிள் வொர்க் செய்வதை விட கள ஆய்வு செய்வது சுலபம் - கரசூர் பத்மபாரதி நேர்காணல்

கரசூர் பத்மபாரதி, தமிழின் முக்கியமான மானுடவியல் ஆய்வாளர். வெளிஉலகுடன் அதிகம் கலக்காத மூடுண்ட சமூகங்களான  திருநங்கைகள் குறித்தும்,  நரிக்குறவர்கள் குறித்தும் ஆய்வுநூல்கள் வெளியிட்டிருக்கிறார். புதிதாக மானுடவியல் ஆய்வு செய்யும் யாரும் முன்மாதிரியாக கொள்ளவேண்டிய ஆய்வுப்பணிகள் இவை என்று நாட்டார் ஆய்வாளர் அ.கா. பெருமாள் கூறுகிறார். அவ்வளவு விரிவாகவும், நுட்பமாகவும் களஆய்வு மேற்கொள்வதுதான் பத்மபாரதியின் சிறப்பு.  கரசூர்,  ஒரு சிறு கிராமம், திருச்சிற்றம்பலத்துக்கு அருகே உள்ளது. பத்மபாரதியால் தான் அது இன்று அறியப்படுகிறது. கரசூரில் பத்மபாரதியை சந்தித்த நண்பர் கடலூர் சீனு செய்த நேர்காணல். 


முதலில் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம் பற்றிய அறிமுகத்துடனும் ஆரம்பிக்கலாமா?

என்னுடைய இயற்பெயர்  பத்மாவதி கரசூர் என்பது என்னுடைய ஊர் பெயர். நான் ஒரு தரம் கவிதைக்கு பரிசு பெற்றதால் என்னுடைய ஆசிரியர்கள் என்னை பாரதி என்று கூப்பிட்டார்கள். அந்த இரண்டையும் சேர்த்து என்னுடைய நூல்கள் வெளியிடும்போது ‘கரசூர் பத்மபாரதி’ என்று வைத்துக் கொண்டேன். என்னுடைய அப்பா குப்புசாமி அம்மா  ராஜேஸ்வரி.  என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர் நான் தான் கடைசி. 

ஐந்தாவது வரை கரசூரில் படித்தேன். ஆறாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு  வரை வில்லியனூர் பள்ளியிலும் புதுவை பல்கலைக்கழகத்தில்  M.A வரையிலும் படைத்தேன். பிறகு புதுவை மொழியியல் மற்றும் பண்பாடு ஆராய்ச்சி நிறுவனத்தில் பக்தவத்சல  பாரதியின் கீழ் P.hd முடித்தேன்.

நீங்க  கசடதபற  இதழ் பற்றி ஆய்வு செய்து இருக்கீங்க. எப்படி ஒரு இலக்கிய இதழை ஆய்வு செய்யலாம்னு தோன்றியது?

என்னுடைய M.Phliலில் ஒரு பாடம் சிற்றிதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும். அதை படித்த போது சிற்றிதழ்களின் மேல் ஆர்வம் ஏற்பட்டது. அதை மேலும் தெரிந்து கொள்ள எண்ணம் தோன்றியது. அப்போது ஒரு புத்தக கண்காட்சிக்கு செல்லும்போது கசடதபற  இதழில்  தொகுப்பை பார்த்தேன். எழுத்தாளர் சா.கந்தசாமி தொகுத்தது.  அந்த இதழின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு போர் வீரன் வாள் ஏந்தி போர் புரியும் காட்சியை சித்தரிப்பது. நான் அந்த நூலை திறனாய்வு  செய்யலாம் என்று நினைத்தேன்

பொதுவா கள ஆய்வு செய்வது இடர்பாடுகள் கொண்டதாக தெரிகிறது. அப்படியிருக்க அதிகம் வெளித்தெரியாத கூடுதல் கள ஆய்வை கோரும் கூத்தாண்டார் கோவில் சம்பந்தமா ஏன் கள ஆய்வுகள் செய்ய நினைச்சீங்க?

நான் M.A. படிக்கும் போது  நறிக்குறவர் பற்றி  ஆய்வு செய்திருந்தேன். அந்த ஆய்வு நன்றாக வந்ததால் பக்தவத்சல பாரதி சார் என்னை திருநங்கைகள் பற்றிய ஆய்வை என்னிடம் செய்ய சொல்லி கேட்டார். என்னால்  table work செய்வதை விட    கள ஆய்வு சுலபமாக செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் எனக்குத் திருநங்கைகள் பற்றி ஒன்றும்  தெரியாது அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்றும் தெரியாது. என் நண்பர்களுக்கும் தெரியவில்லை.

அப்போது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு நிருபரின் உதவியுடன் நானும் என் சிநேகிதிகளும் விழுப்புரத்தில் இருக்கும்  திருநங்கைகளை சென்று சந்தித்தோம். அப்போது சித்ரா பௌர்ணமி நாள் நெருங்கி கொண்டிருந்தது. நண்பர்களுடன் சென்று கூத்தாண்டவர் திருவிழாவை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டேன் அப்படியே ஆய்வை செய்ய ஆரம்பித்து விட்டேன். 


உங்களுடைய ஆய்வு நெறியாளர் பக்தவத்சல பாரதி அவர்களை பற்றி சொல்லுங்கள்.

பாரதி சார் தான் ஆய்வு நுணுக்கங்களை எனக்கு கற்று தந்தார். கள ஆய்வு செய்வதற்கு முன் என்னென்ன தயாரிப்பு தேவை, கள ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, களஆய்வு செய்துகொண்டு வரும் தரவுகளை எப்படி ஆய்வாக ஆக்குவது என்று எனக்கு நிறைய கற்பித்துள்ளார். அவரின் நெறிபடுத்தலின் கீழ்  நரிக்குறவர் இனவரைவியலை எழுதினேன். அந்த புத்தகம் எழுதுவதில் அவருடைய வழிகாட்டல் என்னை ஆய்வாளராக்கியது. அந்த அனுபவத்தில் திருநங்கை இனவரைவியல் நூலை நானே எழுத அவருடைய நெறிப்படுத்தல் வழியமைத்துக் கொடுத்தது.

ஆய்வு செய்யும் போது ஆய்வு முறைமைகள் என்று சொல்லப்படுபவற்றை தவிர நீங்கள் உங்களுக்கான ஆய்வு முறைமைகள் என்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

எனக்கான தனி ஆய்வுமுறைமைன்னு ஒன்றும் இல்லை. கடினமாக hard work பண்ணனும்னு நினைப்பேன். பின் கள ஆய்வு செய்யும் போது அங்கு எதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாடியே யோசித்து வைத்துக் கொள்வேன். எங்கே ஆய்வு குறிப்புகள் எடுக்குனுமோ அங்கே குறிப்புகள் எடுப்பதற்கு  முன்னமே சிலமுறை சென்று  அவைகளை பார்த்து தொகுத்து கொள்வேன். பின் அங்கு சென்று அதை குறிப்பெடுத்துக் கொள்வேன். இல்லை என்றால் நேரம் வீணாகிவிடும்.

திருநங்கை இனவரைவியல் நூலை எழுதுவதற்கு உங்களுக்கு குழு என்று சொல்லக்கூடிய நட்பு வட்டங்கள் ஏதாவது இருந்ததா?

குழு என்று சொல்லக்கூடிய அளவு நண்பர்கள் எல்லாம் இல்லை. நான் தனியாள் தான். கள ஆய்வு செய்ய வேண்டிய நாளில் என் நண்பர்கள் யார் இருக்கிறார்களோ அவர்களை உடன் அழைத்து செல்வேன், யாரும் வரமுடியாத சூழல் இருக்கும்போது தனியாகவே செல்வேன். ஆய்வு செய்யும் நாட்களில் அந்த இடம் பழகும் வரை தான் துணை தேவைப்படும். பழகி விட்டது என்றால் தனியாகவே சென்று வந்து விடுவேன்.

திருநங்கைகள் பற்றிய ஆய்வின் போது  முதல் நாள் திருநங்கைகள் இருக்கும் வீட்டிற்கு சென்றோம். அங்கு இருபதற்கும் மேல் திருநங்கைகள் இருந்தார்கள். அவர்களுக்கு ராதா என்பவர் தலைவராக இருந்தார் பயமாகத்தான் இருந்தது.  நாங்கள் மாணவர்கள் என்று தெரிந்துகொண்ட பின் எங்களுடன் பேச ஒப்புக்கொண்டார்கள்.

எங்களை அழைத்துக்கொண்டு வந்த நிருபர் ஆண் என்பதால் அவரை சாப்பாடு வாங்கி வர அனுப்பி விட்டு எங்களுடன் பேச ஆரம்பித்தார்கள். கள ஆய்வில் முக்கியமானது நரிக்குறவரோ திருநங்கைகளோ அவர்களின் ஒருவராக நம்மை அவர்கள் நினைக்கும் போது அவர்கள் நம்முடன் சகஜமாக பேசு ஆரம்பிப்பார்கள்.

அவர்களுடைய அந்தக் குழுவின்  தலைவர்கள் பெரிதாக தகவல்கள் சொல்ல மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தங்கள் குழுவை பாதுகாக்கும் நிலையில் இருப்பதால் தான் சொல்லும் தகவல்களால் ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று நினைப்பார்கள். நரிக்குறவர் திருநங்கைகள் பற்றிய ஆய்வுகள் எல்லாம் கல்லூரி படிக்கும் காலத்தில் செய்தது விடுமுறையிலும் வார இறுதியிலும் சென்று செய்தது அதனால் நண்பர்களுடன் தான் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தேன்.


திருநங்கைகளின் மொழியை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?

திருநங்கைகள் சாதாரணமாக தமிழில் தான் பேசுகிறார்கள் தங்களுக்குள் பேசும்போது கவடிபாஷை என்று ஒரு மொழியை பேசுகிறார்கள் அவர்களுடன் ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களின் தலைவி வெளியில் சென்று இருந்ததால் நிறைய தகவல்கள் பற்றி பேச முடிந்தபோது தான் ஒரு திருநங்கை அவர்கள் மொழி பற்றிய தகவல்களை சொன்னார்கள். நரிக்குறவர் மொழி திருநங்கைகளின் மொழியை விட புரிந்து கொள்வதற்கு மிக கடினமாக இருந்தது. அவர்கள் பேசும்போது அங்கேயே குறிப்பெடுத்துக் கொள்வேன் அன்றே வீட்டிற்கு வந்து அங்கு குறிப்புப்பெடுத்துக் கொண்டதை விரிவாக எழுதிக் கொள்வேன். 

திருநங்கைகளுடைய சடங்குகளை எப்போதாவது நேரில் பார்த்ததுண்டா?

அவர்கள் தவிர மற்ற யாரையும் சடங்குகள் செய்யும் போது பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடன் என்னை இருக்க அனுமதித்த நேரம் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தான். அதற்குப் பின் என்னை அவர்களுடன் இருக்க அனுமதித்ததில்லை. நானும் அது பற்றி அவர்களிடம் கேட்க கேள்வி கேட்டதில்லை.

சடங்குகள் பிற்றிய விவரம் அனைத்தும் நிறைய திருநங்கைகளிடம் பேசி திரட்டியது. விழுப்புரத்திற்கு தமிழ் பேசும் திருநங்கைகள் தவிர நிறைய பேர் வருவார்கள். வடநாட்டிலிருந்து திருவிழாவின்போது தங்கி இருப்பார்கள். அவர்களிடம் பேசி தகவல்கள் சேகரித்து இருக்கிறேன் அந்த மாதிரி திருநங்கைகளின் பஞ்சாயத்து முறையும் அவர்களிடம்  கேட்டு தெரிந்து கொண்டது தான், நேரில் பார்த்தது இல்லை. நரிக்குறவர்கள் பஞ்சாயத்து செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன்.

ஆய்வுக்கான என்னென்ன வசதி உங்களிடம் இருந்தது. என்னென்ன வசதி உங்களுக்கு தேவையாக இருந்து அந்த வசதி  இல்லாமல் இருந்தது?

எங்கள் வீட்டில் ஒரு விசேஷத்தின் போது எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். அதில் வாக்மேன் ஒன்று வாங்கிக் கொண்டேன். நான் ஆய்வு செய்த ஆண்டு 2005 அப்போது மொபைல் போன்கள் இவ்வளவு புழக்கத்தில் இல்லை ரெக்கார்ட் செய்ய கேசட் போடும் வாக்மேன் தான்,  அதை பயன்படுத்தி சிலவற்றை பதிவு செய்திருக்கிறேன். சில சமயம் அது பதிவு செய்யாமல் இருந்திருக்கிறது மற்றபடி கள ஆய்விலேயே குறிப்பெடுத்துக் கொள்வதும் ஆய்வு செய்ய வேண்டியதை கூர்ந்து கவனிப்பதும் தான் பெரிதும் உதவியிருக்கிறது.

எனக்கு மிகவும் தேவையாக இருந்தது அந்தந்த குழுவை சேர்ந்த படித்த மொழிபெயர்ப்பாளர் அப்படி ஒருவர் எனக்கு அறிமுகமாகியிருந்தால் அவர்களின் மொழியை நான் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டிருக்க  வேண்டியதில்லை. அப்படி யாராவது கிடைத்திருந்தால் மாத சம்பளத்துக்கே கூட மொழிபெயர்ப்பாளரை அமர்த்தி  கள ஆய்வில் உதவி செய்யுமாறு கேட்டு கொண்டியிருக்கலாம்.

அடுத்து என்னிடம் கேமரா இல்லை. அது மிக முக்கியமாக தேவைப்பட்டது, கள ஆய்வில் கேமராவில் பதிவு செய்து கொள்வது அவசியமானதாக இருந்தது. தெரிந்தவர்களிடம் ஒவ்வொரு தரமும் மன்றாடித்தான் கேமராவை பெற்றுக் கொண்டேன். பின் விழுப்புரம் திண்டிவனம் செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு தொடர் பயணம் செய்ய வேண்டி இருந்தது. டைப் செய்ய கம்ப்யூடரோ, லேப்டாப்போ என்னிடம் இல்லை முழுக்க முழுக்க நான் ஆய்வுககளை கைகளில் எழுதி சேர்த்தது தான்.

உங்களுடைய முக்கியமான இன்னொரு ஆய்வு நூல் நரிக்குறவர் இனவரைவியல் அதற்குள் எப்படி சென்றீர்கள்?

என்னுடைய  M.A ப்ராஜெக்ட்  நரிக்குறவர் இனவரைவியல். அதை செய்ய தூண்டியது நாங்கள் கரசூரிலிருந்து புதுவை வர பஸ் பிடிக்கும் இடத்திலிருந்த ஒரு நரிக்குறவர் அன்னை. அவள் தன் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்  திறந்தவெளியில் தன் கணவர் அருகில் இருக்கும் போது. குழந்தைகள் ரோட்டில் திரிந்து கொண்டிருக்கும் நமக்கு புரியாத மொழியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அதைப் பார்க்கும்போது அவர்கள் மேல் ஆர்வம் ஏற்பட்டது அவர்களைப் பற்றி ஆய்வு செய்தால் என்ன என்று தோன்றியது.  என்னுடைய ஆசிரியர்  அறிவுநம்பி சாரிடம் அதைப் பற்றி கூறும்போது முதலில்  பெண்களுக்கு கள ஆய்வு செய்ய சிரமமாக இருக்கும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். நான் அவரை மேலும் வற்புறுத்தவே அந்த ஆய்வை செய்ய அனுமதித்தார். 

M.A ப்ராஜெக்டில் நரிக்குறவர் சடங்குகள் என்று இரு அத்தியாயம் தான் செய்திருந்தேன் மேலும்மேலும் கொஞ்சம் கொஞ்சமாக தேடி தகவல்கள் சேர்த்து நரிக்குறவர் இனவரைவியல் என்ற நூலை வெளியிட்டேன்.


நரிக்குறவர் வைத்திருக்கும் சாமிமூட்டை பற்றி எழுதி இருக்கீங்க அதை பற்றி சொல்லுங்கள்.

பொதுவாக சாமிமூட்டையை பெண்கள் பார்க்கக்கூடாது. விழுப்புரம் அருகில் ஒருவர் சாமி முட்டையை வைத்திருப்பதாக தெரிந்தது. சாமிமூட்டையில் உள்ள பொருட்கள் என்னென்ன என்று தகவல்கள் சேகரித்துவிட்டேன். இருந்தாலும் எனக்கு சாமிமூட்டையை நேரில் பார்க்க வேண்டும் போல் இருந்தது. விழுப்புரம் சென்று அதை  வைத்திருப்பவரிடம் கேட்டேன் அவர் பெண்களுக்கு காட்டுவதில்லை என்பதால் காட்ட மறுத்துவிட்டார்.

நானும் பெண்ணாக சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் கள ஆய்வாளனாக என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நரிக்குறவர் சாமிமூட்டையை தலைமுறை தலைமுறையாக வைத்திருக்கிறார்கள். அந்த சாமிமூட்டையை வைத்திருப்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள்.  மகளும் மகனும் நான் சாமிமூட்டையை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்ததால் என்னை தூரத்தில் இருந்து பார்க்க அனுமதித்தார்கள் போட்டோவும் எடுத்துக் கொண்டேன்.

அதன்பின் விழுப்புரத்தின் அருகில் நரிக்குறவர் குழுவில் இறப்பு சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது அவர்கள் சாமியை எடுத்து முறைப்படி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அங்கிருந்தவர்களிடம் என்னென்ன சாமி என்று கேட்டு தெரிந்து கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சமீபத்தில் மத்திய அரசு நரிக்குறவர்களை பழங்குடி  இன பட்டியலில் சேர்க்கும்  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி  அது நல்ல மாற்றம் என்று நினைக்கிறேன். நரிக்குறவர் இனவரைவியல் நூல் வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது அந்த நூலிலேயே அப்போது நரிக்குறவர்களில் படித்தவர்களிடம் கேட்டு இருக்கிறேன். அவர்கள் தங்களை பழங்குடி இன பட்டியலில் சேர்த்தால் சலுகைகள் கிடைக்கும் அதை வைத்து மேலும் நாங்கள் முன்னேறுவதற்கு வழி வகுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். இத்தனை வருடங்கள் கழித்து அது நடந்தாலும் அது நடந்ததில் மகிழ்ச்சியே.

உங்களுடைய இன்னொரு முக்கியமான புத்தகம் அடித்தள மக்கள் குழந்தை பிறப்பு வைத்திய முறைகள் என்ற நூல் இந்த நூலுக்கு முன்  மானுடவியலிலும், நாட்டாரியலிலும் இரு ஆய்வு நூல்கள் எழுதிவிட்டு வைத்தியம் பற்றி எழுத வேண்டும் என்று எப்படி தோன்றியது.

இந்த நூல் என்னுடைய முதல் Ph.d ஆய்வுக்காக செய்யப்பட்டது. மரபு வழி மருத்துவத்தை பற்றி இதற்கு முன் நிறைய ஆய்வுகள் வந்துள்ளன அதிலிருந்து இந்த நூல் எவ்வாறு தனித்து எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்று அலோபதி மருத்துவம் குழந்தை பிறப்பு சம்பந்தமான அனைத்து விதமான மருத்துவத்தையும் வழங்குகிறது. அப்போது மரபு வழி மருத்துவம் நவீன மருத்துவத்தின் பின் சென்று விட்டதா அல்லது தனக்கான மருத்துவ முறையை பேணிக்  கொண்டுள்ளதா என்று ஆய்வு செய்ய நினைத்தேன். இந்த ஆய்வு இரு விஷயங்களை முன்வைத்து ஆராய்கிறது. ஒன்று உயிரியல் மருத்துவம்  (biomedicine) இரண்டு பண்பாடு வழி மருத்துவம்.  (Cultural medicine) 

உதாரணமாக ஒருவருக்கு அம்மை நோய் வருகிறது என்று வைத்துக்கொள்வோம் இதற்காக மருத்துவம் பயோ மெடிசன் வழியாக செய்கிறார்களா அல்லது கல்ச்சுரல் மெடிசன் வழியாக செய்கிறார்கள் என்று பார்த்தோம் என்றால் அவர்கள் கைகொள்வது கல்ச்சுரல் மெடிசன். அந்த மருத்துவத்தை பின் பற்றுவதில் அம்மன் மேல் உள்ள பக்தி மட்டும் முக்கியமானதாக இருக்கிறதா? அல்லது அந்த மருத்துவ முறையில் எவ்வளவு மருத்துவம் இக்கிறது சடங்குகளின் பங்கு எவ்வளவு என்ன என்று பார்ப்பது. இப்படி பெண்கள் பிள்ளைபேறு இல்லாமல் இருந்தால் என்ன மரபு வழி மருத்துவம் செய்கிறார்கள் என்று  ஒவ்வொரு நோய்க்கும் மரபுவழி மருத்துவம் நோயை எப்படி கையாள்கிறது என்று இந்த நூல் ஆராய்கிறது.

இந்த நூல் நான்கு பகுதிகளை கொண்டுள்ளது முதல் பகுதி இன்று உள்ள அலோபதி, சீன மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளின் தோற்றம் வளர்ச்சி பற்றிய அறிமுகம். இரண்டு உடல் ரீதியான வகைப்பாடுகள் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் ஆகியோரின் உடல் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று மரபு வழி மருத்துவம் வகைபடுத்துகிறது அதை சொல்வது இரண்டாவது அத்தியாயம். மூன்றாவதாக தாய் சேய் நல கூறுகள் என்ற பகுதி கருத்தரித்தல் குழந்தை வளர்ப்பு  பெண்ணின் உடல் பிரசவத்திற்கு முன் பின் என குழந்தை பிறப்பு சம்பந்தமான மருத்துவமும் சடங்குகளை பற்றியும் கூறுவது. நான்காவது அடித்தள மக்களிடம் மரபு வழி மருத்துவம் இப்போது இருக்கிறதா இல்லையா இன்றைய காலத்தில் மாற்றங்கள் அவர்களின் மருத்துவத்தில் எப்படி ஏற்பட்டு இருக்கிறது என்று ஆராய்வது.

நவீன இலக்கியம் அதாவது கவிதை சிறுகதை நாவல் ஆகியவற்றை ஒப்பிடும்போது ஆய்வு நூல்கள் வாசிக்கப்படுவது குறைவு, அப்படி இருக்க எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்  இருவரும் உங்கள் நூல்கள் பற்றி பேசியிருகிறார்கள் அதற்கு முக்கியமான காரணம், தமிழினி வசந்தகுமார் அந்த நூல்களை  பிரசுரித்தது.  அவருடைய கவனத்திற்கு இந்த நூல்கள் எப்படி சென்றது.

என்னுடைய கல்லூரி நூலகம் மிகத் தரமான ஆய்வு நூல்களை கொண்டிருந்தது. அங்கு வாசிப்பதற்காக ரூம் எடுத்து தங்கி தமிழினி வசந்தகுமார் அவர்கள் வருவார்கள். அப்போது ஒருமுறை எங்களுடைய ஆசிரியர் வசந்தகுமாரை அறிமுகப்படுத்தி என்னுடன் படித்த மாணவர்கள் ஆய்வுகளுடன் என்னுடைய ஆய்வு நூலும் சேர்த்து 15 நூல்களை அவரிடம்  அளித்தார். அந்த 15 நூல்களையும் வாசித்து அவர்  என்னுடைய ஆய்வு நூலை பிரசுரிப்பதாகச் சொன்னார். இப்படியாகத்தான் என்னுடைய மூன்று ஆய்வு நூல்களையும் அவரே தமிழினி பதிப்பகம் மூலம் பிரசுரித்துள்ளார்.


சந்திப்பு: கடலூர் சீனு

படங்கள்: சந்தோஷ்

தொகுப்பு: அனங்கன்

கரசூர் பத்மபாரதி- தமிழ் விக்கி பக்கம்