நாம் நம்பமுடியாத விஷயங்கள் பலவற்றை அறிவியலாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணமாக, நாம் சிம்பன்சிகளுக்கு மிக நெருக்கமான உயிரினம் என உயிரியலாளர்கள் சொல்கின்றனர். நிலவியலாளர்கள் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் முற்காலத்தில் ஒன்றாக இருந்தன என்கின்றனர். இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்கின்றனர் பிரபஞ்சவியலாளர்கள். ஆனால் யாரும் பிரபஞ்சம் விரிவடைவதையோ, ஒரு கண்டம் மற்றொரு கண்டத்தில் இருந்து பிரிந்ததையோ, ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினம் பரிணாமம் அடைவதையோ நேரில் பார்த்தது கிடையாது. பின் எப்படி அறிவியலாளர்கள் இது போன்ற முடிவுகளுக்கு வருகின்றனர்? இதற்கான பதில், அனுமானம் (Inference or reasoning) மூலமாகவே அறிவியலாளர்கள் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு வருகின்றனர். அனுமானத்தில் இருவகைகள் உள்ளன - பகுத்தல் அனுமானம், தொகுத்தல் அனுமானம். இவைகளின் இயல்புகள் என்ன?
டேவிட் ஹுயும் |
பகுத்தல் (Deduction) மற்றும் தொகுத்தல் (Induction)
தர்க்கவியலாளர்கள் பகுத்தல் அனுமானம், தொகுத்தல் அனுமானம் ஆகியவற்றிற்கு ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கொடுக்கிறார்கள். பகுத்தலுக்கு பின்வரும் ஒரு அனுமானத்தை உதாரணமாகப் பார்க்கலாம்:
பிரான்சை சேர்ந்த அனைவருக்கும் சிவப்பு ஒயின் பிடிக்கும்.
பியர் பிரான்சை சேர்ந்தவர்.
-------------------------
எனவே, பியருக்கும் சிவப்பு ஒயின் பிடிக்கும்.
முதல் இரண்டு கூற்றுகளும் கருத்துப்புலங்கள் (premisses). மூன்றாவது கூற்று முடிவு, இரு கருந்துபுலங்களில் இருந்து அடைந்த அனுமானம். பகுத்தல் அணுமானம் ’கருத்துப்புலங்கள் சரியாக இருந்தால் முடிவும் நிச்சயமாக சரியாக இருக்கும்’ என்ற பண்பைக் கொண்டது. அதாவது, பிரான்சை சேர்ந்த அனைவரும் சிவப்பு ஒயினை விரும்புவார்கள் என்பதும், பியர் பிரான்சை சேர்ந்தவர் என்பதும் சரியென்றால், பியருக்கு சிவப்பு ஒயின் பிடிக்கும் என்பதும் நிச்சயமாக சரியே. இதில் கருத்துப்புலங்கள் முடிவைக் கொண்டு வருகின்றன. ஆனால் இந்த உதாரணத்தில் கருத்துப்புலங்கள் முழுமுற்றான உண்மைகள்ல்ல. எனென்றால் பிரான்சை சேர்ந்தவர்களில் ஒயின் பிடிக்காதவர்களும் இருப்பார்கள். எனினும் அது இங்கு முக்கியமல்ல. கருத்துப்புலங்களுக்கும் முடிவுக்கும் இடையில் உள்ள தொடர்பே இங்கு முக்கியம். இரு கருத்துப்புலங்களும் தன்னளவில் சரியானவை. அவை நிஜமாகவே உண்மையா தவறா என்பது வேறு விஷயம்.
இரண்டாவது உதாரணம்:
ஒரு பெட்டியில் இருக்கும் முதல் ஐந்து முட்டைகள் நன்றாக உள்ளன.
அந்தப் பெட்டியில் உள்ள அனைத்து முட்டைகள் மீதும் ஒரே காலாவதி நாள் குறிக்கப்பட்டுள்ளது.
-------------------------
எனவே, ஆறாவது முட்டையும் நன்றாக இருக்கும்.
இது பகுத்தறிதல் முறை போலத்தான் தென்படுகிறது. ஆனால் நிச்சயமாக பகுத்தல் அல்ல. ஏனென்றால் கருத்துப்புலங்கள் முடிவைக் கொண்டுவரவில்லை. முதல் ஐந்து முட்டைகள் நன்றாக இருந்ததாலும், அனைத்து முட்டைகள் மீதும் ஒரே காலாவதி நாள் குறிக்கப்பட்டுள்ளது என்றாலும், ஆறாவது முட்டை அழுகியிருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன. அதாவது, அனுமானத்தின் கருத்துப்புலங்கள் சரியாக இருந்தாலும், முடிவு தவறாக இருப்பதற்கு தர்க்கரீதியாக சாத்தியங்கள் உள்ளன. எனவே இந்த அனுமானம் பகுத்தல் அல்ல. இது தொகுத்தல் அனுமானம். ஆய்வு செய்த பொருள்களைப் பற்றிய கருத்துப்புலங்களில் இருந்து ஆய்வு செய்யாத பொருள்களைப் பற்றிய முடிவுக்கு செல்கிறோம். இந்த உதாரணத்தில் ஆய்வு செய்யாத பொருள் ’ஆறாவது முட்டை’.
தொகுத்தல் அனுமானத்துடன் ஒப்பிடும் போது பகுத்தல் பாதுகாப்பானது. நாம் பகுத்தல் முறையில் அனுமானிக்கும் போது சரியான கருத்துப்புலங்களைக் கொண்டிருந்தால், சரியான முடிவில் நிறைவுசெய்வோம் என உறுதியாக நம்பலாம். இதற்கு மாறாக தொகுத்தல் முறை சரியான கருத்துப்புலங்களில் இருந்து தவறான முடிவுக்கு இட்டுச் செல்லக்கூடியது. இக்குறைபாடு உள்ள போதிலும் நம்முடைய வாழ்வு முழுவதும் தொகுத்தல் முறையை நம்பித்தான் செயல்படுகிறோம். உதாரணமாக, காலையில் உங்களுடைய கணினியை இயக்கத் துவங்கும் போது அது வெடித்து உங்கள் முகத்தில் தெரிக்காது என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள், ஏன்? ஏனென்றால் இன்றுவரை நீங்கள் கணினியை இயக்கத் துவங்கும் போது அது வெடித்து உங்களுடைய முகத்தில் தெரித்தது கிடையாது. அகவே ‘இன்றுவரை என்னுடைய கணினியை இயக்க ஆரம்பிக்கும் போது வெடித்ததில்லை’ என்பதில் இருந்து பெற்ற அனுமானம் ‘இப்போது இயக்கத் துவங்கும் போது என்னுடைய கணினி வெடிக்காது’ என்பது தொகுத்தல் அனுமானம், பகுத்தல் அல்ல. ஏனென்றால் இதற்கு முன்பு உங்களுடைய கணினி வெடித்ததில்லை என்றாலும் இந்த முறை வெடிப்பதற்கு தர்க்கரீதியாக சாத்தியங்கள் உள்ளதல்லவா.
அறிவியலாளர்களும் தொகுத்தல் முறையை பயன்படுத்துகிறார்களா? ஆம் என்பதே இதற்கான பதில். உதாரணமாக Down's syndrome (DS) என்ற மரபணு நோயை பார்க்கலாம். மனிதர்கள் வழக்கமாக குரோமோசோம் 21-னின் (chromosome 21) இரண்டு நகல்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் DS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரோமோசோம் 21-னின் நகல்கள் மூன்று இருக்கும் என மரபணுவியலாளர்கள் சொல்கிறார்கள். இது எப்படி அவர்களுக்குத் தெரியவந்தது? இதற்கான பதில்: அவர்கள் DS-ஆல் பாதிக்கப்பட்ட பலரை பரிசோதனை செய்து, ஒவ்வொருக்கும் குரோமோசோம் 21-னின் நகல் ஒன்று கூடுதலாக இருப்பதை அறிந்தார்கள். ஆகவே DS-ஆல் பாதிக்கப்பட்ட ஆனால் பரிசோதனைக்கு உட்படாதவர்களுக்கும் ஒரு நகல் கூடுதலாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இந்த அனுமானம் தொகுத்தல். ஆனால் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகள் தவறான மாதிரிகளாக இருக்கவும் சாத்தியங்கள் உள்ளன. அறிவியலாளர்கள் எப்பொழுதெல்லாம் குறைந்த தரவுகளைக் கொண்டு மிக பொதுத்தன்மை வாய்ந்த முடிவை நோக்கி செல்கிறார்களோ அப்பொழுதெல்லாம் தொகுத்தல் முறையை பயன்படுத்துகிறார்கள்.
நம்முடைய அன்றாட பேச்சுவழக்கினால் தொகுத்தல் முறையின் முக்கியத்துவம் பலசமயம் மறைக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் செய்தித்தாளில் ”மரபணு மாற்றப்பட்ட சோளம் மனிதர்களுக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. இதை அறிவியலாளர்கள் பரிசோதனை வழியாக நிரூபித்துள்ளனர்” என்பது போன்ற செய்திகளைப் படிக்கிறீர்கள். இதற்கு அர்த்தம், அறிவியலாளர்கள் பலவேறுபட்ட மனிதர்களிடம் மரபணு மாற்றப்பட்ட சோளத்தை சோதனை செய்துள்ளனர், அவர்கள் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்ப்படவில்லை என்பதே. இதையே மிகத்துல்லியமாக பிதொகராஸ் கோட்பாட்டை நிரூபிப்பது போல சொன்னால் ’சோளம் பாதுகாப்பானது என்று அந்த சோதனை நிரூபிக்கவில்லை’. ’சோதனை செய்யபட்டவர்களுக்கு சோளம் எந்த தீங்கையும் ஏற்படுத்தவில்லை’ என்பதில் இருந்து அடைந்த ‘சோளம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது’ என்ற அனுமானம் தொகுத்தல் முறை. செய்தித்தாள் இப்படி சொல்லியிருக்க வேண்டும்: ”மனிதர்களுக்கு சோளம் பாதுகாப்பான உணவு என்பதற்கு அறிவியலாளர்கள் ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்”. பகுத்தல் அனுமானத்தைக் கையாளும் போது மட்டுமே ’நிரூபனம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இந்த சொல் எல்லைக்குட்பட்டே பயன்படுத்தப்படுகிறது. எப்போதாவதுதான் அறிவியல் கருதுகோள்கள் தரவுகளின் மூலமாக நிரூபிக்கப்படுகின்றன என்பதையே இது காட்டுகிறது.
அறிவியல் பெரும்பாலும் தொகுத்தல் முறையையே சார்ந்துள்ளது என பல தத்துவவாதிகள் கருதுகின்றனர். இது மிகக்கண்கூடாகத் தெரிவதால் இதைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை என்பது அவர்கள் கருத்து. ஆனால் இதை கார்ல் பாப்பர் நிராகரிக்கிறார். மேலும் அறிவியலாளர்கள் பகுத்தல் அனுமானத்தை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்கிறார். அறிவியலாளர்கள் பகுத்தல் முறையை மட்டும் பயன்படுத்தினால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஏனென்றால் பகுத்தல் அனுமானம் தொகுத்தலை விட பாதுகாப்பனது.
கார்ல் பாப்பர் |
பாப்பர் ”எல்லைக்குட்பட்ட தரவுகளை மட்டுமே கொண்டு ஒரு அறிவியல் கோட்பாட்டை (அல்லது கருதுகோளை) சரி என நிரூபிப்பது சாத்தியமற்றது என்பதால் அதை தவறு என நிரூபிக்கலாம்” என்கிறார். உதாரணமாக, ஒரு அறிவியலாளர் ’அனைத்து உலோகங்களும் மின்னோட்டத்தைக் கடத்தும்’ என்ற கருதுகோளை சோதனை செய்கிறார் எனக் கொள்வோம். இவர் சோதனை செய்த அனைத்து உலோகங்களும் மின்னோட்டத்தைக் கடத்துகிறது என்றால்கூட அக்கருதுகோள் சரியென நிரூபனமாகாது. இதற்கான காரணத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். எதாவதொரு உலோகம் மின்னோட்டத்தைக் கடத்தவில்லை என அவர் கண்டறிந்தால் அக்கருதுகோள் தவறானது என நிரூபனமாகிவிடும். எனவே அவர் ’இந்த உலோகம் மின்னோட்டத்தைக் கடத்தவில்லை’ என்ற கருத்துப்புலத்தில் இருந்து ’அனைத்து உலோகங்களும் மின்னோட்டத்தைக் கடத்தும் என்பது தவறு’ என்ற அனுமானத்திற்கு வரவேண்டும் என்கிறார் பாப்பர். இது பகுத்தல் அனுமானம். ஏனென்றால் கருத்துப்புலங்கள் முடிவைக் கொண்டு வருகின்றன. ஒரு அறிவியலாளர் தனது கோட்பாடை உண்மை என நிரூபிப்பதற்கு பதிலாக, அதைத் தவறு என நிரூபிக்க முயன்றால் தொகுத்தலின் உதவி இல்லாமலேயே அதைச்செய்ய முடியும்.
பாப்பரின் இந்த வாதத்திலுள்ள குறையை மிகத்தெளிவாகக் காணலாம். அறிவியலாளர்கள் கோட்பாடுகளை தவறு என நிரூபிப்பதை மட்டுமே தங்கள் நோக்கமாக கொண்டிருக்கமாட்டார்கள். தங்கள் கோட்பாடுகள் சரியானதா (அல்லது கிட்டத்தட்ட சரியா) என்பதை நிரூபிக்கவே பெரும்பாலும் முயல்வார்கள். ஒரு அறிவியலாளர் ஒரு கோட்பாட்டை தவறு என நிரூபிக்க ஆய்வுசெய்யலாம். ஆனால் அதை விட தனது கோட்பாடு சரியானது என மக்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருப்பார். இதை செய்ய அவர் தொகுத்தல் முறையை ஓரளவு பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். எனவே தொகுத்தல் இல்லாமல் அறிவியலை நிகழ்த்திவிடலாம் என்ற பாப்பரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
ஹுயும் முன்வைக்கும் சிக்கல்
தொகுத்தல் (induction) முறை தர்க்கரீதியாக முழுக்க முழுக்க பிழையற்றது அல்ல. எனினும் இது வலுவான நம்பிக்கைகளை கட்டமைப்பதற்கு சிறந்த வழிதான். இன்றுவரை சூரியன் ஒவ்வொரு நாளும் உதித்துள்ளது என்ற மாறாவுண்மை (fact) நாளை சூரியன் உதயம் என நம்புவதற்கு நல்ல காரணமாகுமா? நாளை சூரியன் உதயமாகும் என்பதை நம்மால் அறியமுடியாது எனச்சொல்லும் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவரை எப்படி பார்ப்பீர்கள்? விசித்திரமாகத்தானே!
எது தொகுத்தல் முறை மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை நியாயப்படுத்துகிறது? இதற்கு ஸ்காட்லாண்டை சேர்ந்த தத்துவவாதி டேவிட் ஹுயும் (David Hume, 1711-1776) எளிமையான ஆனால் மிகவும் அடிப்படையான பதிலைக் கொடுக்கிறார். இவர் தொகுத்தலை ஏன் பயன்படுத்துகிறோம் என்பதை நம்மால் தர்க்கரீதியாக நியாயப்படுத்த முடியாது என்கிறார். ஆனால் இந்த முறையை நாம் நம்முடைய தினசரி வாழ்விலும் அறிவியலிலும் எல்லா நேரங்களிலும் பயன்படுத்துகிறோம் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அதேசமயம் இப்படிப் பயன்படுத்துவதை காட்டுமிராண்டித்தனமான விலங்குகளின் இயல்பு என்றும் சொல்கிறார். தொகுத்தல் முறையைப் பயன்படுத்துவதற்கு ஒரு நல்ல காரணத்தைக் கொடுக்க முடியுமா என சவால்விட்டால் ’முடியாது’ என்பதே ஹுயுமின் பதிலாக இருக்கும்.
ஹுயும் எப்படி இந்த ஆணித்தரமான முடிவிற்கு வந்தார்? எப்பொழுதெல்லாம் நாம் தொகுத்தல் வழியாக அனுமானிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் ‘இயற்கையின் சீர்மைத் தன்மை’யை (Uniformity of nature) நாம் முன்னதாகவே மனதில் வைத்திருக்கிறோம் என்கிறார். ஹூயும் சொல்வதை புரிந்துகொள்ள மேலே பார்த்த உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். ‘பெட்டியிலுள்ள முதல் ஐந்து முட்டைகள் நன்றாக இருந்தன’ என்பதில் இருந்து ‘ஆறாவது முட்டையும் நன்றாக இருக்கும்’ என அனுமானிக்கிறோம், ‘பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட DS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு குரோமோசோம் உள்ளது’ என்பதிலிருந்து ‘DS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு குரோமோசோம் இருக்கும்’ என்ற அனுமானத்தை அடைகிறோம், மேலும் ’நேற்றுவரை என்னுடைய கணினி வெடிக்கவில்லை’ என்பதிலிருந்து ‘என்னுடைய கணினி இன்று வெடிக்காது’ என அனுமானிக்கிறோம். இந்த உதாரணங்கள் ஒவ்வொன்றும் ’ஆய்வு செய்யாத பொருள்கள் ஆய்வு செய்த பொருள்களை ஒத்திருக்கும்’ என்ற ஊகத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த ஊகத்தையே ஹூயும் ’இயற்கையின் சீர்மைத் தன்மை’ என்கிறார்.
இந்த ‘சீர்மை’ ஊகம் சரியானதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இதன் உண்மைத்தன்மையை எந்த வகையிலாவது நிரூபிக்க முடியுமா? இக்கேள்விகளுக்கு ’முடியாது’ என்பதே ஹுயுமின் பதில். ’இயற்கையின் சீர்மை’ ஊகத்தை நிரூப்பிக்க முடியாவிட்டாலும்கூட இதன் உண்மைத்தன்மைக்கு புலனறிவு சார்ந்த நல்ல ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முடியுமா என பார்க்கலாம். இயற்கையின் சீர்மை ஊகம் இன்றுவரை சரியாகவே இருந்துள்ளது. எனவே சீர்மை ஊகம் சரியானது என்பதற்கு இதை சான்றாக எடுத்துக்கொள்ளலாமா? ஆனால் இந்த வாதம் ஒருவகை தர்க்கப்பிழை (Beg the question) என ஹுயும் சொல்கிறார்! (Beg the question என்பது ஒரு தர்க்கபிழை (Fallacy). அதாவது எந்த ஊகத்தை அல்லது கூற்றை ஆதாரம் வழியாக நிரூபிக்க வேண்டுமோ அந்த கூற்றையே ஆதாரமாக காட்டி வாதம் செய்வது. இது Circular reasoning எனப்படுகிறது.) இன்றுவரை இயற்கை பெரும்பாலும் சீராகவே இயங்கி வந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளகிறோம். ஆனால் இந்த மாறாவுண்மையைக் கொண்டு இயற்கை இனிமேலும் சீராகத்தான் இயங்கும் என வாதிட முடியாது. ஏனென்றால் இது ’இறந்த காலத்தில் நடைபெற்ற ஒன்று எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அறிவதற்கான நம்பகமான ஒரு வழிகாட்டி’ என்ற ஊகத்தை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஊகத்தையே ’இயற்கையின் சீர்மை’ ஊகம் என்கிறார் ஹுயூம். ஆகவே முழுக்க முழுக்க புறவயமான புலனறிவு (empirical) தளத்தில் இருந்து கொண்டு இயற்கையின் சீர்மை சரி என ஒருவர் வாதிட ஆரம்பித்தால் சீர்மை ஊகத்தையே ஆதாரமாக கொள்ள வேண்டிவரும். அதாவது எந்த ஊகத்தை ஆதாரம் வழியாக நிரூபிக்க வேண்டுமோ அந்த ஊகத்தையே ஆதாரமாக காட்டி வட்டமடிப்பது.
தொகுத்தல் முறை மீது நம்பிக்கை இல்லாத ஒருவரை நீங்கள் எப்படி மாற்ற முயற்சிப்பீர்கள் எனக் கற்பனை செய்யுங்கள். இதன் வழியாக நீங்கள் ஹுயும் சொல்வதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். உதாரணமாக அவரிடம் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்: ‘இதைப்பார், தொகுத்தல் இன்றுவரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் அணுக்களைப் பிரித்தார்கள், நிலவில் மனிதர்களை இறக்கினார்கள், லேசரைக் கண்டுபிடித்தார்கள். தொகுத்தலைப் பயன்படுத்தாதவர்கள் மோசமான முறையில் இறக்க வாய்ப்புள்ளது. அவர்கள் ஆர்சனிக்கத்தை ஊட்டச்சத்து கொடுக்கும் என நம்பி சாப்பிடக்கூடும், பறக்க முடியும் என நம்பி கட்டிடத்திலிருந்து குதிக்கக்கூடும். ஆகவே தொகுத்தலை நம்பு’. எனினும் இது அவரை நிச்சயமாக சமாதானப்படுத்தாது. ஏனென்றால் நீங்கள் ’தொகுத்தல் நம்பகமானது, ஏனென்றால் தற்போதுவரை இது நன்றாக செயல்பட்டு வருகிறது’ என்றே வாதிடுகிறீர்கள், இதுவும் தொகுத்தல் முறையே. இதுபோன்ற வாதங்கள் தொகுத்தலை நம்பாத ஒருவரிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதுவே ஹுயும் சுட்டிக்காட்டுகின்ற முக்கியமான விஷயம்.
இந்தப் புதிரான வாதம் அறிவியல் தத்துவத்தில் இன்றுவரை செல்வாக்கு செலுத்திவருகிறது. ஹுயூம் தொகுத்தலை நியாயப்படுத்த முடியாது என்பதைக் காண்பித்துவிட்டார் என பாப்பர் நம்பினார். இந்த நம்பிக்கை தான் ’அறிவியலுக்கு பகுத்தலை மட்டுமே பயன்படுத்தினால் போதும்’ எனக் காட்ட முயன்ற பாப்பரின் செயலுக்குத் தூண்டுதலாக அமைந்தது. ஹுயுமுடைய வாதத்தின் விளைவைப் புரிந்துகொள்ளது கடினமானதல்ல. வழக்கமாக அறிவியலை பகுத்தறிவான செயல் என நாம் நினைக்கிறோம். அறிவியலாளர்கள் சொல்பவை மீது மிகுந்த நம்பிக்கை வைக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் விமானத்தில் பயணிக்கும் போதும் நம் உயிரை அவ்விமானத்தை வடிவமைத்த அறிவியளர்களின் கைகளில் கொடுக்கிறோம். ஆனால் அந்த அறிவியலோ தொகுத்தல் அனுமானத்தை சார்ந்துள்ளது. ஹுயுமின் வாதம் தொகுத்தல் முறையை தர்க்கரீதியாக நிரூபிக்க முடியாது எனக் காட்டுகிறது. இவரின் விவாதம் சரியென்றால் அறிவியல் கட்டமைக்கப்பட்டுள்ள அடித்தளமானது நாம் நினைப்பது போல உறுதியானதல்ல. இந்தப் புதிரான விஷயமே தொகுத்தல் முறை மீது ஹுயூம் வைக்கும் சிக்கல்.
பீட்டர் ஸ்ட்ராவ்சன் |
ஹுயுமுடைய சிக்கலுக்கு தத்துவவாதிகள் பல வழிகளில் எதிர்வினையாற்றி உள்ளனர். பல ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெறுகின்றன. ஒரு தரப்பு ’தொகுத்தல் முறையை நிரூபித்தாகவேண்டும் என எதிர்பார்ப்பது முற்றிலும் பொறுத்தமற்றது’ என சொல்கிறது. 1950-களில் ஆக்ஸ்ஃபோர்டை சேர்ந்த தத்துவவாதி பீட்டர் ஸ்ட்ராவ்சன் (Peter Strawson) இவ்வாறு சொல்கிறார்: ”ஒரு செயல் சட்டத்திற்கு உட்பட்டதா என ஒரு வழக்கறிஞர் குழம்பினால் அவர் சட்ட நூல்களைப் படித்து அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்ப்பார். ஆனால் அப்புத்தகங்களில் உள்ள விதியே சட்டத்திற்கு உட்பட்டதா என அவர் குழம்பினால்! இதை தீர்க்க முடியாதல்லவா. ஏனென்றால் விதி என்பது தீர்ப்பளிக்கப்பட்ட விஷயங்களின் சட்ட நடவடிக்கைகளைப் பொருத்து நிலைநாட்டப்பட்ட அலகு. அந்த அலகு தன்னளவில் சட்டத்திற்கு உட்பட்டதா இல்லையா என விசாரனை செய்வது அர்த்தமற்றது. தொகுத்தலுக்கும் இதுவே பொருந்தும்” என்கிறார் ஸ்ட்ராவ்சன். தொகுத்தல் என்பது இவ்வுலகை பிரபஞ்சத்தை பற்றிய கூற்றுகள் சரியானதா இல்லையா என முடிவெடுப்பதற்கு நாம் பயன்படுத்தும் ஓர் அலகு. எனவே தொகுத்தல் தன்னளவில் நியாயமானதா இல்லையா எனக் கேட்பது அர்த்தமற்றது.
ஃப்ரான்க் ராம்சி |
ஹுயுமின் சிக்கலைக் களைவதில் ஸ்ட்ராவ்சன் உண்மையிலேயே வெற்றியடைந்துவிட்டாரா? சில தத்துவவாதிகள் ஆம் என்கின்றனர், வேறுசிலர் இல்லை என்கின்றனர். ஆனால் தொகுத்தலை ஒரு திருப்திகரமான வழியில் நிரூபிப்பது மிகக்கடினம் என்று பலர் ஒத்துக்கொள்கிறார்கள். 1920-களில் கேம்ப்ரிட்ஜில் இருந்து வந்த ஃப்ரான்க் ராம்சி (Frank Ramsey) என்ற தத்துவவாதி தொகுத்தலுக்கு நிரூபனத்தைக் கோருவது ‘குழந்தை நிலா வேண்டும் என அழுவதை’ போன்றது என்கிறார். இந்த சிக்கல் நம்மை குழப்புலாம், அறிவியல் மீது நாம் வைத்த நம்பிக்கையை கலைக்கலாம். இது மிகவும் கடினமானது, நீங்களே ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டியது.
=================
அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி
முந்தைய பகுதிகள்:
1.அறிவியல் என்றால் என்ன?
2.அறிவியல் தத்துவம் என்றால் என்ன?