Saturday 8 June 2024

தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 3: உளவியல் - சமீர் ஒகாஸா

மனம் கூறுகளால் ஆனதா (modular)?

நோம் சாம்ஸ்கி

மனிதர்களால் பல்வேறு அறிதகு பணிகளை (Cognitive tasks) செய்ய முடியும். அப்பணிகள் பெரும்பாலும் குறைந்த பிரக்ஞையுடனேயே செய்யப்படுகின்றன. அறிதகு பணி என சொல்வது குறுக்கெழுத்துப் புதிர்களை தீர்ப்பது போன்ற செயல்கள் மட்டும் அல்ல, சாதாரணமான செயல்களான பாதையை பாதுகாப்பாக கடப்பது, ஒரு பந்தைப் பிடிப்பது, வேறு மனிதர்கள் சொல்வதைப் புரிந்துகொள்வது, முகங்களை அடையாளம் காண்பது போன்ற பலவற்றையும் குறிக்கிறது. இத்தகைய பணிகள் நமக்கு மிகவும் பரிச்சயமானவையாக இருந்தாலும் அவற்றை செய்யும் நம்முடைய திறன் நிஜமாகவே சிறப்பு வாய்ந்ததுதான். இது போன்ற பணிகளை ஒரு சராசரி மனிதர் செய்யும் அளவுக்கு எந்திரமனிதனால் செய்ய இயலாது. எப்படியோ நம்முடைய மூளை அத்தகைய சிக்கலான அறிதகு பணிகளை குறைந்த ஆற்றலைக் கொண்டு நம்மை செய்ய வைக்கிறது. இவற்றை எப்படி செய்ய முடிகிறது என விளக்க முயற்சிப்பதே அறிதகு உளவியல் (அல்லது அறிதல்சார் உளவியல் - cognitive psychology) துறையின் முக்கியமான பகுதி. 

இங்கு நாம் கவனம் செலுத்தவிருப்பது அறிதகு உளவியளாலர்கள் மத்தியில் நடைபெற்று வரும் மனித மனதின் கட்டமைப்பை பற்றிய விவாதத்தை. இந்த விவாதத்தில் உள்ள ஒரு தரப்பிற்கு மனித மனம் என்பது ’பொது பயன்பாட்டுக்கான சிக்கல் தீர்வி’ (general-purpose problem-solver). இதற்கு அர்த்தம் என்னவென்றால் மனம் ’பொதுவான சிக்கலை தீர்க்கும் திறன்களின் தொகுப்பு’ அல்லது ’பொதுவான அறிதிறனை’ (General intelligence) கொண்டது. இந்த திறன்கள் எண்ண முடியாத அளவு பல்வேறுபட்ட பணிகளை செய்யப் பயன்படுகிறது. இதன்படி அறிதகு திறன்களின் ஒட்டுமொத்தமான ஒரு தொகுப்பையே ஒருவர் கற்களை எண்ணுவதாக இருந்தாலும் சாப்பிட ஒரு உணவகத்தை தெரிவுசெய்வதாக இருந்தாலும் அல்லது வேற்றுமொழி ஒன்றை கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துகிறார். இதற்கு எதிரான தரப்புக்கு, மனித மனம் என்பது தனித்துவம் வாய்ந்த உள்-பகுதிகள் அல்லது உட்-கூறுகளைக் கொண்டது. இந்த ஒவ்வொரு கூறும் ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பணியை மட்டுமே செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, வேறெந்த பணிகளையும் அவை செய்யாது. இதுவே ’மனதின் கூறுநிலைமை’ (modularity of mind) கருதுகோள் எனப்படுகிறது.

கூறுநிலைமைக்கான ஒரு உதாரணம் 1960களில் மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) செய்த ஆய்வுகளில் இருந்து வருகிறது. இந்த ஆய்வுகள் மொழியை கையகப்படுத்தல் குறித்தவை. ஒரு குழந்தை பெரியவர்களின் உரையாடலைக் கவனித்து, தனது ’பொதுவான அறிதிறனை’ கொண்டு மொழியை பேசுவதற்கான விதிகளைத் தெரிந்துகொள்வதில்லை என்று சாம்ஸ்கி சொல்கிறார். இது சாத்தியமற்றது என அவர் வாதிடுகிறார். ஏனென்றால் குழந்தைகளைச் சூழ்ந்துள்ள மொழியியல் தரவுகள் மிகக் குறைவு, அவை ஒவ்வொரு குழந்தைக்கும் அதிக அளவில் வேறுபடுகின்றன, இருந்தாலும் அனைத்து குழந்தைகளும் சமமான வயதிலேயே மொழியைக் கையகப்படுத்திவிடுகின்றன. ஆகவே குழந்தையின் மூளைக்குள் ‘மொழியை கையகப்படுத்தும் தனித்த கருவி’ ஒன்று உள்ளது என சாம்ஸ்கி வாதிடுகிறார். அது தானாகவே செயல்படுகிறது. அதன் ஒரே பணி குழந்தைகளுக்கு ஒரு மொழியை கற்க வழிவகை செய்வது மட்டுமே. எல்லா மனித மொழிகளும் ’உலகளாவிய இலக்கணத்தின்’ (Universal grammar) கொள்கைகளை பின்பற்றுகின்றன. அக்கொள்கைகளை குறியீடாக ஆக்குவதன் மூலம் அக்கருவி மொழியைக் கற்க உதவி செய்கிறது. குழந்தையை நன்றாக ஊக்கப்படுத்தும் பட்சத்தில் இக்கருவி எந்த மொழியின் இலக்கணமாக இருந்தாலும் அதை அக்குழந்தை கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. மொழியைக் கையகப்படுத்துதல் ஒரு தனித்த அல்லது கூறுநிலை திறன் என்பதற்கு சாம்ஸ்கி பல சுவாரஸ்யமான சான்றுகளைத் தந்துள்ளார். ’பொதுவான அறிதிறன்’ குறைந்தவர்கள் கூட நன்றாக பேசக் கற்றுக்கொள்கின்றனர் என்ற உண்மையும் இதில் ஒன்று. 

கூறுநிலைமை கருதுகோளுக்கு மிக முக்கியமான சில சான்றுகள் ’குறைபாட்டு ஆய்வுகளில்’ (deficit studies) இருந்து பெறப்படுகின்றன. இது மூளை பாதிப்படைந்த நோயாளிகளை பற்றிய ஆய்வுகளாகும். மனித மூளை ஒரு ’பொது பயன்பாடுக்குரிய சிக்கல் தீர்வி’ என்றால் மூளையில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் அறிதகு திறன்கள் எல்லாவற்றையும் சமஅளவில் பாதிக்க வேண்டும் அல்லவா. ஆனால் நாம் கண்டறிந்தது இதற்கு நேர்மாறாக உள்ளது. மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் சில அறிதகு திறன்களை மட்டுமே பாதிக்கின்றன, மற்றவற்றை நெருங்குவதில்லை. உதாரணமாக, மூளையில் உள்ள வெர்னிக்கின் பகுதியில் (Wernicke's area) ஏற்படும் பாதிப்பு நோயாளிகளை மற்றவர்களுடைய பேச்சை புரிந்துகொள்ள முடியாமல் செய்துவிடுகிறது, ஆனால் அவர்களால் இலக்கணப்படி சரளமாக வாக்கியத்தை அமைத்து பேச முடியும். இது வாக்கியத்தை அமைப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் தனித்தனி கூறுகள் உள்ளன என்பதை வலுவாகக் காண்பிக்கிறது - அதாவது புரிந்துகொள்ளும் திறனை இழப்பதால் ஏன் வாக்கியம் அமைக்கப்படும் திறன் இழக்கப்படவில்லை என்பதை இது விளக்குகிறது. வேறுவிதமாக மூளை பாதிப்படைந்தவர்கள் நீண்டகால நினைவுகளை இழக்கின்றனர் (amnesia). ஆனால் அவர்களின் குறுகியகால நினைவுகள், பேசும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள் பாதிப்படையாமல் உள்ளன. இவ்விரு உதாரணங்கள் கூறுநிலைமைக்கு சாதகமாகவும், ‘பொது பயன்பாட்டுக்குரிய சிக்கல் தீர்வி’ என்ற பார்வைக்கு எதிராகவும் உள்ளன. 

இது போன்ற நரம்பு உயிரியல் உதாரணங்கள் மனம் ஒரு கூறுநிலைபட்டதா என்ற பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்துவைக்கவில்லை. ஆனால் இந்த ஆய்வுகள் குறைந்தபட்சம் மனதின் கூறுநிலைமையை தவறு என மறுக்கக்கூடியச் சான்றுகளைத் தருகின்றன - மனிதர்களின் அறிதகு திறன்கள் பாதிப்படைந்துள்ளனவா என்பதை அறிவதற்கு அவர்களின் மூளையை நம்மால் பிளந்து பார்க்க முடியாது. மேலும் வழக்கமாக அறிவியலில் இருப்பது போலவே இதிலும் தரவுகளுக்கு எப்படி விளக்கமளிப்பது என்பதில் தீவிரமான முரண்பாடுகள் உள்ளன. எனவே மூளை பாதிப்படைந்த நோயாளிகளிடம் அவதானித்த அறிதகு குறைபாடுகளின் கட்டமைப்பு மனம் கூறுநிலைப்பட்டது என்பதைக் காட்டவில்லை என்கின்றனர் சிலர். மனம் ஒரு ‘பொது பயன்பாடுக்குறிய சிக்கல் தீர்வி’, அதாவது கூறுநிலையற்றதாக இருந்தால் கூட மூளையில் ஏற்படும் பாதிப்பினால் எல்லா அறிதகு திறன்களும் பாதிப்படைவதில்லை எனக் காண்பிக்க முடியும் என்கின்றனர். எனவே மனதின் கட்டமைப்பை ’குறைபாட்டு ஆய்வு’களின் மூலம் சுலபமாக அறிந்துவிட முடியாது, அந்த ஆய்வுகள் மனதின் கட்டமைப்புக்கு தவறான சான்றுகளைக் கொடுக்கின்றன.

Jerry Fodor

ஜெர்ரி ஃபோடோர் (Jerry Fodor) என்ற அமெரிக்க தத்துவவாதி மற்றும் உளவியலாளரின் படைப்புகளே கூறுநிலைமை மீது சமீபத்தில் அதிக கவனம் குவிவதற்கு காரணம். 1983ல் ஃபோடோர் மனதின் கூறுநிலைமை (The Modularity of Mind) என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்த நூல் கூறு என்றால் என்ன என்பதை சொல்கிறது. மேலும் அறிதகு திறன்களில் எவை கூறுநிலைப்பட்டது, எவை கூறுநிலையற்றவை என்பதை பற்றிய சுவாரஸ்யமான கருத்துக்களையும் தருகிறது. மனதின் கூறுகள் ஒவ்வொன்றும் பல தனித்தனி அம்சங்களை கொண்டுள்ளன என அவர் சொல்கிறார். அவற்றில் மூன்று அம்சங்கள் மிகவும் முக்கியமானவை: 1) கூறுகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட துறைக்கு மட்டும் பிரத்யேகமானவை, 2) அவற்றின் செயல்பாடுகள் கட்டாயமானது (Mandatory), 3) அவற்றால் மனதிலிருக்கும் தகவல்களை அணுக முடியாது. கூறுநிலையற்ற அமைப்பு இந்த அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. பின்னர் ஃபோடோர் மனம் பகுதியளவு கூறுநிலைப்பட்டது, முழுவதுமாக அல்ல என்கிறார். நாம் சில அறிதகு பணிகளை அவற்றுக்கே உரிய சிறப்பு கூறுகளைக் கொண்டு தீர்க்கிறோம், மற்ற பணிகளுக்கு ‘பொதுவான அறிதிறன்களை’ பயன்படுத்துகிறோம் என்கிறார்.

முதல் அம்சமான ஒரு அறிதகு அமைப்பு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் பிரத்யேகமானது என்பதற்கு அது ஒரு வகையான செயல்களில் மட்டும் நிபுணத்துவம் வாய்ந்தது என்ற பொருளாகும்: அதாவது அந்த அமைப்பு ஒரு வரையறுக்கபட்ட, துல்லியமாக எல்லைக்குட்பட்ட பணிகளை மட்டுமே செய்யும். நாம்ஸ்கி சொல்லும் ‘மொழியைக் கையகப்படுத்தும் கருவி’ இதற்கு நல்ல உதாரணம். இதன் ஒரே செயல்பாடு குழந்தைகள் மொழியை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்வதே. இது குழந்தைகள் சதுரங்கம் விளையாடுவதை கற்றுக்கொள்வதற்கோ, கணக்கிடுவதற்கோ அல்லது வேறு ஏதாவது செயல்களை செய்வதற்கோ உதவாது. இந்த கருவி மொழியை தவிர்த்த எந்த உள்ளீடுகளையும் ஏற்றுக்கொள்ளாது. இரண்டாவது அம்சமான ஒரு அறிதகு அமைப்பின் செயல்பாடுகள் கட்டாயமானது என்பது அந்த அமைப்பு செயல்பட வேண்டுமா என நம்மால் தெரிவு செய்ய முடியாது என்பதை காட்டுகிறது. மொழியை புரிந்துகொள்ளும் செயல்பாடு இதற்கு நல்ல உதாரணம். உங்களுக்கு தெரிந்த மொழியில் ஒரு வாக்கியம் உச்சரிக்கப்படும் சத்தத்தை கேட்கிறீர்கள் என கொள்வோம். அப்போது நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும் அந்த சத்தத்தை ஒரு வாக்கியத்தின் உச்சரிப்பாகவே கேட்பீர்கள். ஒருவர் உங்களிடம் ஒரு வாக்கியத்தை ’வெறும் ஒலியாக’ மட்டும் கேளுங்கள் என்கிறார். எவ்வளவு கடினமாக முயன்றாலும் உங்களால் அவ்வாறு கேட்க இயலாது. ஆனால் எல்லா அறிதகு செயல்பாடுகளும் கட்டாயமானதல்ல என்பதையும் ஃபோடோர் குறிப்பிடுகிறார். சிந்திக்கும் செயல் அவற்றில் ஒன்று. ஒருவர் உங்கள் வாழ்கையில் நடந்த மிக பயங்கரமான சம்பவத்தையோ அல்லது உங்களுக்கு லாட்டரி அடித்தால் என்ன செய்ய விரும்புவீர்கள் என்பதையோ சிந்திக்க சொன்னால் அவர் சொல்வது போல செய்வீர்கள். எனவே இதன்படி பார்த்தால் சிந்தித்தலும் மொழியைப் புரிந்துகொள்தலும் வேறுபட்டவை. 

மூன்றாவது அம்சமான ’கூறுகளின் செயல்களால் மனதிலிருக்கும் தகவல்களை அணுகமுடியாது’ என்றால் என்ன? ஒரு உதாரணத்தின் மூலம் இதை சிறப்பாக விளக்களாம். கீழேயுள்ள படத்தில் இருக்கும் இரண்டு கோடுகளை பாருங்கள். 

முல்லெர் லெயர் மாயை (Muller-Lyer illusion)
 

இந்த படத்தைப் பார்க்கும் பலருக்கு மேலே உள்ள கோடு கீழே இருப்பதை விட சற்றே நீளமாக தெரியும். ஆனால் இது காட்சிமாயை. இது முல்லெர் லேயர் மாயை எனப்படுகிறது. உண்மையில் இரண்டு கோடுகளும் சம அளவு நீளமானவையே. ஏன் மேலே உள்ள கோடு நீளமாக தெரிகிறது என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன, அவற்றில் நாம் கவனம் செலுத்தப்போவதில்லை. நாம் பார்க்கப் போவது என்னவென்றால் ’காட்சிமாயை என உங்களுக்கு தெரிந்திருந்த போதும் கூட’ அக்கோடுகள் பார்ப்பதற்கு சமமற்றதாகவே தென்பட்டன. இந்த எளிய உண்மை மனதின் கட்டமைப்பை புரிந்துகொள்வதில் முக்கியமான பங்குவகிக்கிறது என்கிறார் ஃபோடோர். இதன் மூலம் நாம் ’இரு கோடுகளும் சம அளவு நீளமானவை என்ற தகவல் அறிதகு மனதில் சேமிக்கப்பட்டுள்ளது, அவ்விடத்தை பார்வைக்கண்ணோட்ட செயல்முறையால் (perceptual mechanisms) அணுக முடியவில்லை’ என்பதை அறிகிறோம். ஒருவேலை காட்சி வழியாக புரிந்துகொள்ளும் செயல்பாடு தகவல்களை அணுகக்கூடியதாக இருந்தால் நம் மனதில் பதிவாகியிருக்கும் எல்லா தகவல்களையும் அதனால் பயன்படுத்தியிருக்க முடியும், பின்னர் அக்கோடுகள் சம அளவு நீளமானது என நம்மிடம் சொல்லப்பட்டவுடன் அந்த மாயக்காட்சி மறைந்துவிட்டிருக்கும். 

தகவல்களை அணுகமுடியாமைக்கான வேறுசில உதாரணங்களை மனிதர்களின் பயப்படும் குணத்திலிருந்து எடுக்கலாம். அதில் ஒன்று பாம்புகளின் மீதான பயம் (odiophobia). இந்த பயம் பல மனிதர்களுக்கு உள்ளது. ஒரு பாம்பு ஆபத்தானதில்லை என்று உங்களுக்கு தெரிந்திருந்தாலும், உதாரணமாக அதனுடைய விஷசுரப்பிகள் நீக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் நீங்கள் அதை பார்க்கும் போது சற்று பயப்படுவீர்கள், தொடுவதற்கும் தயங்குவீர்கள். நிச்சயமாக இந்த பயத்தை பழக்கதினால் தவிர்க்க முடியும், ஆனால் இது வேறு விஷயம். முக்கியமானது என்னவென்றால் அந்த பாம்பு ஆபத்தானதில்லை என்ற தகவல் அணுகமுடியாத பகுதியாக இருப்பதே அதைப் பார்த்தவுடம் நீங்கள் பயப்படுவதற்கு காரணம். இது பாம்புகளில் மீதான பயத்திற்கு காரணமான மற்றும் தகவல்களை அணுக இயலாத ஒரு கூறு ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. 

ஏன் தத்துவவாதிகள் மனதின் கூறுநிலைமை சிக்கலை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்கிறார்கள் என நீங்கள் ஆச்சர்யபடலாம். மனம் கூறுநிலைப்பட்டதா இல்லையா என்பது வெறும் அறிவியல் மாறாவுண்மை (fact) சார்ந்த கேள்வி தானே? ஒருவகையில் இது சரிதான். ஆனால் இந்த வாதம் பல தத்துவார்த்த கோணங்களைக் கொண்டுள்ளன. அதில் ஒன்று, எவ்வளவு அறிதகு பணிகள் மற்றும் கூறுகள் உள்ளன என்பதைக் கணக்கிடுவதில் கவனம் செலுத்துகிறது. கூறுநிலைமைக்கு ஆதரவாக இருப்பவர்கள் வெவ்வேறுபட்ட அறிதகு பணிகளைச் செய்வதற்கு தனித்துவம் வாய்ந்த கூறுகள் உள்ளன என்கிறார்கள். இவர்களின் மாற்றுத்தரப்பு இதை நிராகரிக்கிறது.

ஆனால் இரண்டு அறிதகு பணிகள் ஒரே கூறுக்கு சேர்ந்ததா இல்லை இரு வேறு கூறுகளுக்கு சேர்ந்ததா என்பதை நாம் எப்படி முடிவெடுப்பது? முகத்தை அடையாளம் காணும் செயல் ஒரு அறிதகு பணியா அல்லது இரண்டு அறிதகு பணிகளை உள்ளடக்கியதா? வகுத்தல் மற்றும் பெருக்கல் கணக்குகளைச் செய்வது வெவ்வேறு அறிதகு பணிகளா அல்லது அவைகளுக்கு பொதுவாக உள்ள கணித பணியின் பகுதிகளா? இந்த வகையான கேள்விகள் நேரடியான நிரூபணம் சார்ந்த கேள்விகள் அல்ல. மாறாக, இவை கருத்துவடிவமானது (conceptual) அல்லது தத்துவார்த்தமானது. மேலும் இது கூறுநிலைமை விவாதத்திற்கு மிகவும் முக்கியமானது. கூறுநிலைமையின் மறுப்பாளர் ஒருவர் ’பல்வேறுபட்ட அறிதகு பணிகளைச் செய்வதற்கு நாம் ஒரே அறிதகு திறனை மட்டும் தான் பயன்படுத்துகிறோம்’ என்பதற்கு சான்றுகளை கொடுக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். இவரின் மறுப்பாளர் அந்த பரிசோதனை தரவை ஏற்றுக்கொள்ளவார். ஆனால் முதல் நபர் எடுத்துக்கொண்ட அறிதகு பணிகள் அனைத்தும் ஒரே கூறை சார்ந்தவை, அதனால்தான் தரவுகள் கூறு நிலைமையுடன் நன்கு பொருந்துகின்றன என்று பின்னர் வாதிடக்கூடும். எனவே கூறுநிலைமை வாதம் நன்கு வரையறுக்கப்பட்டதாக இருப்பதற்கு அறிதகு பணிகள் மற்றும் கூறுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் ஒரு திட்டவட்டமான வழிமுறை தேவை.

கூறுநிலைமையின் ஆதரவாளர்களும் மறுப்பாளர்களும் தங்களின் பார்வைக்கு ஆதரவாக நேரடியான புலனறிவு சான்றுகளை மட்டுமல்லாமல் முன்னறிவு (a priori) சார்ந்த வாதங்களையும் எடுத்துக்கொள்கின்றனர். இதனால் இரண்டாவதாக இன்னொரு தத்துவார்த்த கோணம் உருவாகிறது. ஃபோடோர் ”கண்ணோட்டம் (perception) மற்றும் மொழி ஆகியவை வேண்டுமானால் கூறுகளாக இருக்கலாம், சிந்தித்தல் மற்றும் பகுத்தறிதல் ஆகியவை கூறுகளாக இருக்க முடியாது, ஏனென்றால் அவை முழுமையானவை (holistic)” என்று வாதிடுகிறார். இவர் சொல்வதைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு ஜூரியாக அமர்ந்துள்ளீர்கள் என கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒருவரை குற்றவாளியா இல்லையா என தீர்ப்பளிக்க முயல்கிறீர்கள். இந்த பணியை நீங்கள் எப்படி செய்வீர்கள்? குற்றம் சாட்டப்படவரின் வாதம் தர்க்கரீதியில் சீராக உள்ளதா இல்லையா - அதாவது முரண்பாடுகளற்று உள்ளதா? என்பதில் தான் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். பின்பு குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் உண்மையில் எவ்வளவு வலுவாக உள்ளன என உங்களையே கேட்டுக்கொள்வீர்கள். இங்கு நீங்கள் பின்வரும் பகுத்தறிவு திறன்களைப் பயன்படுத்துவீர்கள்: தர்க்கரீதியாக சீராக உள்ளதா என சோதிப்பது மற்றும் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்வது ஆகியவை. இவை பொதுவான திறன்களாகும். இவை ஜூரி பணிக்கு மட்டும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதே திறன்களை நீங்கள் வேறு பல துறைகளுக்கும் பயன்படுத்தலாம். எனவே குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என முடிவெடுப்பதற்கு நீங்கள் பயன்படுத்திய அறிதகு திறன்கள் குறிப்பிட்ட துறைக்கானதல்ல. மேலும் இந்த திறன்களின் செயல்பாடுகள் கட்டாயமானதும் அல்ல. ஏனென்றால் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா என பிரஞ்கைப்பூர்வமாக நீங்கள் சிந்திக்கிறீர்கள். இதை எப்பொழுது வேண்டுமானாலும் உங்களால் நிறுத்திக்கொள்ள முடியும், உதாரணமாக மதிய உணவு இடைவேளையின் போது தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாம். அனைத்திற்கும் மேலாக இங்கு தகவல்கள் அணுகமுடியாதவகையில் இல்லை. உங்களுடைய பணி குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என அனைத்து ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது. இதற்கு நீங்கள் மனதில் வைத்திருந்த எந்த தகவலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, குற்றம்சாட்டப்பட்டவர் குறுக்கு விசாரனையின் போது திடீரென பதட்டமடைகிறார், இதை குற்றம் செய்ததற்கான அறிகுறியாக நீங்கள் நம்பினீர்கள் என்றால் இந்த நம்பிக்கையை உங்கள் தீர்ப்பை எழுதுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே தீர்ப்பை எழுதுவதற்கு நீங்கள் பயன்படுத்திய அறிதகு திறன்களுக்கு உங்கள் நினைவிலிருந்த எந்த தகவலும் அணுகமுடியாதவகையில் இல்லை (நீதிபதி வேண்டுமானால் சில தகவல்களை தவிர்க்க சொல்வார்). சுருக்கமாக சொல்லப்போனால், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என தீர்ப்பளிப்பதற்கு எந்த தனித்த கூறும் இல்லை. இந்த அறிதகு பணியை உங்களுடைய ‘பொதுவான அறிதிறனை’ கொண்டுதான் செய்கிறீர்கள்.

சில உளவியலாளர்கள் ஃபோடோரையும் தாண்டிச் சென்று மனம் முழுவதுமாகவே கூறுநிலைப்பட்டது என்கின்றனர். இது ‘பிரம்மாண்ட கூறுநிலைமை கருதுகோள்’ (Massive modularity hypothesis) எனப்படுகிறது. இதன் ஆதரவாளர்கள் மனித மனம் ஒரு கூறுநிலை கூட்டமைப்பாக இருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு வாதிடுகிறார்கள். இவர்களின் மைய வாதம் டார்வினிய தகவமைப்பு கருத்துக்களில் இருந்து வந்துள்ளன. இக்கருத்துக்களின் படி மனித மனம் பெரும்பாலும் பிளைஸ்டோசீன் காலகட்டத்தில் (Pleistocene epoch) பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். இது நம்முடைய ஹோமினைட் மூதாதை இனம் சந்தித்த சமூக மற்றும் இயற்கைச் சூழல் சவால்களைத் தீர்த்தது. இச்சவால்களைத் தீர்க்க மிகவும் திறமையான வழிகளை ஒரு கூறுநிலைக் கூட்டமைப்பு கொடுத்தது. மேலும் நன்கு சூழலுக்கு ஏற்றார் போல தகவமைந்து நடக்கும் தன்மையையும் கொடுத்தது. ஒவ்வொரு பணியிலும் சிறப்பு வாய்ந்த கூறுகளின் ஒரு தொகுப்பு சிக்கல்களை வேகமாக மற்றும் மிகத் துல்லியமாக தீர்க்கிறது. இங்கு சுவிஸ் ராணுவ கத்தி ஒப்புமை நன்கு பொருந்தும். கேன்களை திறத்தல், குப்பியைத் திறத்தல், திருகாணியை திருகுதல் போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கருவிகளை வைத்திருப்பது, இவை அனைத்தையும் செய்யும் ஒரு அனைத்து-பயன்பாட்டு கருவியை வைத்திருப்பதை விட அதிக மேம்பட்டது. இதைப் போலவே முகங்களை அடையாளம் காணுதல், மொழியைக் கையகப்படுத்துதல் மற்றும் இணையைத் தெரிவு செய்தல் போன்றவற்றிற்கு தனித்தனி கூறுகளைக் கொண்ட ஒரு மனமானது ‘பொது-பயன்பாட்டுக்குறிய சிக்கல்-தீர்வி’யாக இருக்கும் ஒரு மனதை விட அதிக திறன் கொண்டதாக இருக்கக்கூடும். எனவே இந்த விவாதம் மனதுடைய கட்டமைப்புக்கு உகந்த வடிவம் கூறுநிலைமைக்கு சாதகமாகவே உள்ளது என சொல்கிறது.

கூறுநிலைமை வாதத்திற்கு தொடர்புடைய மற்றொரு வாதம் பின்வருமாறு சொல்கிறது: ஒரு மனிதன் தனது வாழ்நாளில் தகவமைந்து (Adaptive) நடந்துகொள்ள தேவையான அனைத்து தகவல்களையும் கையகப்படுத்துவது சாத்தியமற்றது. ஏனென்றால் ஒரு வாழ்நாளில் மனிதன் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே என இந்த வாதம் சொல்கிறது. எனவே மனம் ஒவ்வொரு கூறுக்குள்ளும் பொதிந்திருக்கும் பிறவி-தகவல்களை (Innate information) கொண்டிருக்க வேண்டும். அவையே அக்கூறுக்கு பொருத்தமான அறிதகு திறன்களை வளர்த்துக்கொள்ள குழந்தைக்கு உதவுகின்றன. ஆகவே குழந்தை தகவமைந்து நடந்துகொள்கிறது. சாம்ஸ்கியுடைய மொழியைக் கையகப்படுத்தும் கூறு இதை விளக்கும். இந்த கூறு மனித மொழிகளின் இலக்கணம் பற்றிய பிறவி-தகவல்களைக் கொண்டுள்ளது. இந்த தகவல்களே குழந்தை வெளியிலிருந்து பெறும் மிகக்குறைந்த தகவல்களுடன் அது ஒரு மொழியைக் கையகப்படுத்த உதவி செய்கிறது. ஒரு அறிதகு பணியை தீர்க்க தேவைப்படும் தகவல்களுக்கும் கற்றல் மூலமாக கையகப்படுத்தகூடிய தகவல்களுக்கும் உள்ள ’இடைவெளி’யானது கூறுநிலைப்பட்ட அறிதகு திறன்களின் கூட்டமைப்பிற்கு சாதகமாக வாதிடவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இது மனதின் பிறவி-தகவல்கள் பற்றிய வாதம், கூறுநிலைமை பற்றியதல்ல. தர்க்க ரீதியாக இவை இரண்டும் தனித்தனி கருத்துக்கள். ஆனால் நடைமுறையில் கூறுநிலைமையின் ஆதரவாளர்கள் பிறவி-தகவல்கள் இருப்பதை நம்புகின்றனர். அதுபோலவே பிறவி-தகவல் கருத்தின் ஆதரவாளர்களும் கூறுநிலைமை இருப்பதை நம்புகின்றனர். 

கூறுநிலைமை மற்றும் பிறவி-தகவல்தன்மை ஆகியவற்றிற்கு இடையிலான இந்த தொடர்பானது கூறுநிலைமை விவாதம் தத்துவார்த்தமாக முக்கியம் வாய்ந்தது என்பதைக் காட்டும் இன்னொரு அம்சத்தை வெளிக்கொணர்கிறது. மனம் பிறவித் தகவல்களை கொண்டுள்ளது என்ற கருத்து மரபான புலனறிவுவாதிகளின் தத்துவத்திற்கு முரண்பாடானது. இவர்களைப் பொருத்தவரை அனைத்து அறிவும் அனுபவத்தில் இருந்து வருவதே. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஜான் லோக்கி மற்றும் டேவிட் ஹுயூம் போன்ற புலனறிவுவாதிகள் ‘மனிதர்கள் பிறக்கும் போது அவர்களின் மனம் வெறுமை நிலையில் (Tabula rasa or Blank state) இருக்கும், அதில் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை’ என்றனர். அனுபவத்தில் மூலமாக மட்டுமே ஒரு மனிதன் கருத்தாக்கங்களையும் அறிவையும் அடைகிறான். புலனறிவுவாதம் மதிக்கத்தக்க ஒன்றுதான். முதன் முதலில் பார்க்கும் போது அதன் பல கருத்துக்கள் சரியானதாக தென்படும். ஆனால் ’மொழியைக் கையகப்படுத்தும் கூறானது உலகளாவிய இலக்கணம் பற்றிய பிறவி-தகவல்களைக் கொண்டுள்ளது’ என்ற சாம்ஸ்கியின் வாதம் இந்த அம்சத்தில் புலனறிவுவாதிகளின் தத்துவத்தை நேரடியாக நிராகரிக்கிறது. சாம்ஸ்கி சொல்வது சரியாக இருந்தால் இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகள் மரபான தத்துவ விவாதங்களை உயிர்ப்புடன் வைத்துள்ளது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் - இதுவே ஒரு பரபரப்பான விவாத புள்ளியும் கூட.

பிரம்மாண்ட கூறுநிலைமை என்ற விவாதக்கருத்து நிரூபிக்கக்கூடியதா இல்லையா என்பதை இவ்வளவு சீக்கிரமாக சொல்லிவிட முடியாது. முன்னறி வாதங்கள் (அதற்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ) இந்த சிக்கலைத் தீர்க்காது. இதற்கு நேரடியான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஃபோடோரும் பிரம்மாண்ட கூறுநிலைமையை நிராகரிக்கிறார். இதன் விளைவாக, அறிதகு உளவியல் மனித மனதின் செயல்பாடுகளை விளக்குவதற்கான சாத்தியம் சந்தேகத்திற்கு உரியதாகிறது. கூறுநிலை அமைப்புகளை மட்டுமே அறிவியல் ரீதியாக ஆராய முடியும் என அவர் நம்பினார் - கூறுநிலையற்ற அமைப்புகளுக்கு தகவல்கள் மூடிமறைக்கப்படாமல் இருப்பதால் அவற்றை புரிந்துகொள்வது மிகவும் கடினம். எனவே ஃபோடோரைப் பொருத்தவரை அறிதகு உளவியலாளர்களுக்கான சிறந்த ஆய்வுயுக்தி என்பது சிந்தனை மற்றும் பகுத்தறிதலை விட்டுவிட்டு கண்ணோட்டம் (perception) மற்றும் மொழியில் கவனம் செலுத்துவதே. ஆனால் ஃபோடோருடைய சிந்தனையின் இந்த அம்சம் மிகவும் சர்ச்சைக்குறியதாக உள்ளது, இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்