Saturday 8 April 2023

அறிவியல் தத்துவம் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா

அறிவியல்-தத்துவத்தின் முதன்மையான பணி பல்வேறுபட்ட அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி முறைகளை பகுப்பாய்வு செய்வது. இந்த பணி அறிவியலாளர்களிடம் அல்லாமல் ஏன் தத்துவவாதிகளிடம் விழுந்தது? தத்துவார்த்த கண்ணோட்டத்தின் மூலமே அறிவியல் ஆய்வு முறையில் மறைமுகமாக இருக்கும் ஊகங்களை வெளிக்கொண்டுவர முடியும். அந்த ஊகங்கள் அறிவியளாலர்களிடையே வெளிப்படையாக விவாதிக்கபடுவதில்லை. இதை விரிவாக பார்க்க அறிவியல் பரிசோதனை முறையை கவனியுங்கள். அறிவியலாளர் ஒருவர் ஒரு பரிசோதனை வழியாக முடிவு ஒன்றை பெறுகிறார் எனக் கொள்வோம். அவர் அதே பரிசோதனையை மேலும் பல முறை திரும்ப செய்து அதே முடிவை எட்டுகிறார். பிறகு தனது சோதனையை நிறுத்திக்கொண்டு, மிகச்சரியாக இதே நிலையில் அந்த பரிசோதனையை எத்தனை முறை திரும்ப செய்தாலும் அந்த முடிவையே அடைவோம் என்ற உறுதிக்கு வருகிறார். இந்த ஊகம் தெளிவானதாக இருந்தாலும், தத்துவவாதியாக இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இந்த பரிசோதனையை எதிர்காலத்தில் செய்தாலும் அதே முடிவையே கொடுக்கும் என ஏன் ஊகிக்க வேண்டும்? அந்த முடிவு சரியானது என்று நாம் எப்படி தெரிந்துகொள்வது? இது போன்ற விசித்திரமான கேள்விகளை கொண்டு குழம்பிக்கொள்ள அறிவியலாளர்கள் நேரத்தை ஒதுக்கமாட்டார்கள். எனென்றால் அவர்களுக்கு இதை விட சிறப்பாக செய்ய பல விஷயங்கள் உள்ளன.

கார்ல் பாப்பர்

ஆகவே அறிவியல் தத்துவத்தின் ஒரு பணி அறிவியலாளர்கள் பொருட்படுத்தாத ஊகங்களை கேள்விக்கு உள்ளாக்குவது. இதன் காரணமாக அறிவியளாலர்கள் தங்களுக்குள் தத்துவார்த்த சிக்கல்களை விவாதிக்க மாட்டார்கள் என எடுத்துக்கொள்வது தவறானது. பல அறிவியலாளர்கள் அறிவியல் தத்துவத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தனர். டெகார்த்ஸ், நியூட்டன், ஐன்ஸ்டின் போன்றோர் நன்கு தெரிந்த உதாரணங்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி அறிவியல் தொடர வேண்டும்? எந்த ஆராய்ச்சி முறைகளை அது பயன்படுத்த வேண்டும்? அந்த முறைகள் மீது எந்த அளவிற்கு நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்? அறிவியல் சார்ந்த அறிவிற்கு எல்லைகள் உள்ளனவா? என்பது போன்ற தத்துவ கேள்விகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த கேள்விகள் இன்னமும் சமகால அறிவியல் தத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. எனவே அறிவியல் தத்துவவாதிகள் கவனம் செலுத்தும் கேள்விகள் சில சிறந்த அறிவியலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. எனினும் இன்றுள்ள அறிவியலாளர்கள் பலருக்கு அறிவியல் தத்துவத்தைப் பற்றி பெரும்பாலும் தெரியாது, இதன் மீது ஆர்வத்தையும் காட்டுவதில்லை. இந்த போக்கு தவிர்க்க இயலாதது என்றாலும், தத்துவ சிக்கல்கள் இனி முக்கியமற்றதாக மாறிவிட்டன என்பதற்கான அறிகுறியாக இதை எடுத்துக்கொள்ள கூடாது. அறிவியலில் தனித்தனி துறைகள் பெருகுவதும், நவீன கல்வி முறையை வடிவமைக்கின்ற அறிவியல் துறைகளுக்கும் வாழ்வியல் துறைகளுக்கும் (humanities) இடையிலான துருவப்படுத்துதல் அதிகரிப்பதுமே இதற்கு காரணம். 

இன்னமும் கூட நீங்கள் அறிவியல் தத்துவம் என்றால் என்ன என்று யோசிக்கலாம். மேலே பார்த்தது போல இது ‘அறிவியல் முறைகளை ஆராய்கிறது’ என சொல்வது எந்த ஆழமான புரிதலையும் நமக்கு அளிக்கவில்லை. இதற்கென மேலும் சில வரையறைகளை பார்ப்பதற்கு பதிலாக நாம் நேரடியாக அறிவியல் தத்துவத்திலுள்ள ஒரு அடிப்படை பிரச்சனைக்கு செல்லலாம். 

அறிவியல் மற்றும் போலி அறிவியல் (Pseudo-science)

நாம் முதலில் துவங்கிய கேள்வியான ’அறிவியல் என்றால் என்ன?’ என்பதை எடுத்துக்கொள்வோம். 20ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு செலுத்திய அறிவியல் தத்துவவாதி கார்ல் பாப்பர் (Karl popper) அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை அம்சம் என்பது அக்கோட்பாடு தன்னளவில் பொய்ப்பிக்கும் தன்மை (falsifiable) கொண்டதாக இருக்க வேண்டும் என கருதினார். கோட்பாடு பொய்ப்பிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு அந்த கோட்பாடு தவறாக (false) இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, கோட்பாடு கொடுக்கின்ற சில திட்டவட்டமான கணிப்புகள் அனுபவ அறிவின் மூலமாக சோதித்து பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம். அந்த கணிப்புகள் தவறானதாக மாறிவிட்டால் அக்கோட்பாடு பொய்ப்பிக்கபட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது என்று பொருள். ஆகவே பொய்ப்பிக்கும் தன்மையுடைய ஒரு கோட்பாடானது பின்னர் நாம் தவறானது என கண்டறிக்கூடிய ஒரு கோட்பாடாக இருக்கும். எந்தவொரு அறிவியல் கோட்பாடும் நம் அனுபவ அறிவிற்கு பொருந்தாமல் போகும் பட்சத்தில் அது தவறு என நிரூபிக்கும் வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும். இதை அறிவியல் கோட்பாடுக்களுக்கான நிபந்தனையாக கார்ல் பாப்பர் முன்வைக்கிறார். அறிவியல் கோட்பாடு என சொல்லப்படும் சில கோட்பாடுகள் இந்த நிபந்தனைக்கு பொருந்தவில்லை, எனவே அவற்றிற்கு அறிவியல் என அழைக்கப்படும் தகுதி கிடையாது, அவை ’போலி அறிவியல்’ என்று கூறினார்.

ப்ராய்டின் உளப்பகுபாய்வுக் கோட்பாடு பாப்பருக்கு பிடித்தமான போலி அறிவியலுக்கான உதாரணங்களில் ஒன்று. பாப்பரை பொறுத்தவரை ப்ராய்ட்டின் கோட்பாடு புலனறிவு (empirical) சார்ந்த எந்த கண்டுபிடிப்புகளுக்கும் ஒத்துப்போகுமாறு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியது. நோயாளியின் குணம் எதுவாக இருந்தாலும் ப்ராய்டியர்கள் தங்களுடைய கோட்பாட்டிலிருந்து ஒரு விளக்கத்தை அளிப்பார்கள். கோட்பாடு தவறு என்று ஒருபோதும் ஒப்புகொள்ள மாட்டார்கள். பாப்பர் இதை ஒரு உதாரணத்தை கொண்டு விளக்குகிறார். ஒருவன் ஒரு குழந்தையை கொலை செய்யும் நோக்குடன் ஆற்றில் தள்ளிவிடுகிறான், இன்னொருவன் அந்த குழந்தையை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்கிறான் என கற்பனை செய்யுங்கள். இந்த இருவரின் நடத்தைகளையும் ஃபிராடியர்கள் மிக எளிதாக விளக்கிவிடுவார்கள். முதலாவது நடத்தை மனிதனின் கட்டுப்பாடற்ற (repressed) செயல், இரண்டாவது நடத்தை உன்னத செயல் என விளக்கம் தருவார்கள். கட்டுப்பாடற்ற செயல் (repressed), உன்னதமான செயல் (Sublimation), நனவிலி இச்சைகள் போன்ற கருத்துக்களைக் பயன்படுத்துவதன் மூலம் ப்ராய்டுடைய கோட்பாடு எந்தவிதமான மருத்துவ தரவுகளுக்கும் ஒத்துப்போகுமாறு தன்னை வசதியாக சரிசெய்து கொள்கிறது. ஆகவே இது பொய்ப்பிக்கும் தன்மை அற்றது.

இது மார்க்ஸ் முன்வைத்த வரலாறு கோட்பாடுக்கும் பொருந்தும் என்கிறார். உலகம் முழுவதுமுள்ள தொழில் மையமாக்கபட்ட சமுதாயங்களில் முதலாளித்துவம் சோசியலிஸத்திற்கு வழிவிடும், இந்த சோசியலிஸம் கம்யூனிஸத்திற்கான பாதையாக அமையும் என்கிறார் மார்க்ஸ். ஆனால் அப்படி நடக்காத போது மார்க்சியர்கள் இக்கோட்பாடை தவறு என்று ஒத்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக, வேறொரு புதிய விளக்கத்தை கண்டுபிடித்து அக்கோட்பாடின் படிதான் அனைத்தும் சரியாக நடக்கிறது என்று கூறுவார்கள். உதாரணமாக, ’நலம் நாடும் அரசுகள்’ (Welfare state) தோன்றியதால் கம்யூனிஸத்தை நோக்கிய தவிர்க்க முடியாத நகர்வு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்கள். இதுவே பாட்டாளி மக்களின் எழுச்சியை அடக்கியது என்றும் அவர்களில் புரட்சியை பலவீனமாக்கியது என்றும் சொல்வார்கள். சுருக்கமாக சொல்லபோனால், ப்ராய்ட்டின் கோட்பாடு போலவே மார்க்ஸின் கோட்பாடும் சாத்தியமான அனைத்து நிகழ்வுகளுடனும் ஒத்துப்போகும் வகையில் தன்னை சரிசெய்துகொள்ளும். எனவே பாப்பரின் விமர்சனப்படி இவை இரண்டும் உண்மையான அறிவியல் என்பதற்கு தகுதி இல்லாதவை.

ப்ராய்ட் மற்றும் மார்க்ஸின் கோட்பாடுகளை பாப்பர் ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதி எனப்படும் பொது சார்பியல் கோட்பாட்டுடன் (General relativity theory) ஒப்பிடுகிறார். ப்ராய்ட் மற்றும் மார்க்ஸின் கோட்பாடுகளை போல் அல்லாமல் ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு நன்கு வரையறுக்கப்பட்ட கணிப்புகளைக் கொடுக்கிறது. தொலைவில் உள்ள நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சூரியனின் ஈர்ப்பு புலம் காரணமாக விலகலடையும் என்ற கணிப்பைக் தருகிறது. இந்த விளைவை சூரிய கிரகணத்தை தவிர மற்ற நேரங்களில் அவதானிக்க முடியாது. சர் ஆர்தர் எடிங்டன் (Sir Arthur Eddington) என்ற இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி இயற்பியலாளர்  (astrophysicist) 1919ல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க இரண்டு ஆய்வுப்பயணங்களை ஏற்பாடு செய்தார். ஒன்று பிரேசிலுக்கு, மற்றொன்று ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் இருக்கும் ப்ரின்சிப்பி தீவுக்கு. இரண்டுமே ஐன்ஸ்டினின் கணிப்பை சோதித்து பார்ப்பதையே நோக்கமாக கொண்டிருந்தன. நேராக வரும் நட்சத்திர ஒளிக்கதிர்கள் ஐன்ஸ்டினுடைய கணிப்பின் படி மிகச்சரியான அளவில் சூரியனின் ஈர்ப்பு புலத்தால் விலகலடைகிறது என்பதை இந்த பயணங்கள் மூலமாக கண்டுபிடித்தார். இது பாப்பரை மிகவும் கவர்ந்தது. ஐன்ஸ்டினின் கோட்பாடு கொடுத்த வரையறுக்கப்பட்ட துல்லியமாக கணிப்பு அவதானிப்பின் மூலமாக உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு நிகழாமல் அதாவது அதற்கு நேரெதிராக, சூரியனின் ஈர்ப்பு புலத்தால் அந்த ஒளிக்கதிர்கள் விலகலடையாமல் இருந்திருந்தால் அக்கோட்பாட்டு தவறாகியிருக்கும். எனவே ஐன்ஸ்டினின் கோட்பாடு பொய்ப்பித்தலுக்கான அளவுகோளின் படி உள்ளது.

அறிவியலை போலி அறிவியலில் இருந்து பிரித்து காண்பிக்கும் பாப்பரின் முயற்சியை முதலில் பார்க்கும் போது நம்பத்தகுந்தது என்றுதான் தோன்றும். ஒரு கோட்பாடு புலனறிவு சார்ந்த எல்லா தரவுகளுடனும் (empirical data) பொருந்தும் என்றால் அக்கோட்பாட்டின் மீதான ஐயத்தை இது உருவாக்குகிறது. ஆனால் பல தத்துவவாதிகள் பாப்பரின் இந்த அளவுகோலை மிகவும் எளிமைபடுத்தப்பட்ட அளவுகோல் என்கிறார்கள். ப்ராய்டியர்களும் மார்க்சியர்களும் தங்களுடைய கோட்பாடு மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அவர்களின் கோட்பாட்டுடன் முரண்படும் தரவுகளுக்கு விளக்கமளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் பாப்பர் அவர்களை விமர்சிக்கிறார். ப்ராய்டியர்களும் மார்க்சியர்களும் பின்பற்றிய இதே செயல்முறையை ’மதிப்புமிக்க’ அறிவியலாளர் பலர் அடிக்கடி பயன்படுத்தியுள்ளனர். போலிஅறிவியல் செயல்பாட்டில் ஈடுபட்டதாக பாப்பர் அவர்களை குற்றம் சாட்ட விரும்பமாட்டார். எனென்றால் அந்த செயல்பாடுகள் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. இது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம்.

இதற்கு வானியலில் துறையில் நிகழ்ந்த உதாரணம் ஒன்றை பார்க்கலாம். நியூட்டனின் ஈர்ப்பு கோட்பாடு கோள்கள் சூரியனை எந்த சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன என்பதற்கான கணிப்புகளை கொடுக்கிறது. இந்த கணிப்புகள் அவதானிப்பின் வழியாக சரிபார்க்கப்பட்டன. இதன்படி கணிக்கப்பட்ட யுரேனஸின் சுற்றுவட்டப்பாதை அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட பாதையில் இருந்து வேறுபட்டே காணப்பட்டது. இந்த புதிர் 1846ல் இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்ஸ், பிரான்ஸை சேர்ந்த லிவிரியர் (leverrier) என்ற அறிஞர்களின் தனித்தனி ஆய்வுகள் மூலம் விடுவிக்கபட்டது. அவர்கள் சூரியனின் வட்டப் பாதையில் கண்டுபிடிக்கப்படாத மற்றொரு கோள் உள்ளது, அந்த கோள் யுரேனஸின் மீது தனது ஈர்ப்பு விசையை செலுத்துகிறது என்ற பரிந்துரையை முன்வைத்தனர். யுரேனஸின் வித்தியாசமான பண்பிற்கு நிஜமாகவே அந்த கண்டுபிடிக்கப்படாத கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கும் பட்சத்தில் அக்கோளின் நிறை மற்றும் சுற்று வட்டத்தையும் அவர்களால் கணக்கிட முடிந்தது. பின்பு வெகுசீக்கிரமாகவே நெப்டியூன் என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆடம்ஸ் மற்றும் லிவிரியர் ஆகியோரின் கணிப்புக்கு கிட்டத்தட்ட சரியாக பொருந்தியது. 

இப்பொழுது நாம் ஆடம்ஸ் மற்றும் லிவிரியரின் நடத்தைகளை அறிவியல் அற்றது என விமர்சிக்க மாட்டோம். ஏனென்றால் இது ஒரு புதிய கோளின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. எந்த காரணத்திற்காக பாப்பர் மார்க்ஸை விமர்சித்தாரோ, மிகச்சரியாக அது போலவே இவர்களுடைய செயலும் உள்ளது. இவர்கள் ஒரு கோட்பாடில் (நியூட்டனின் ஈர்ப்பு விதி) இருந்து துவங்கினர், இது கணித்த யுரேனஸின் சுற்றுவட்டப் பாதையும் அவதானிக்கப்பட்ட பாதையும் வேறுவேறாக இருந்தன, எனவே இவர்கள் நியூட்டனின் ஈர்ப்பு கோட்பாடு தவறு என தங்கள் ஆய்வை முடித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக இதே கோட்பாடில் நின்று கொண்டு, ஒரு புதிய கோளை முன்வைத்து, அக்கோட்பாடு முரண்படுகின்ற அவதானிப்புகளை விளக்க முயற்சித்தனர். இது போலவேதான் முதலாளித்துவம் கம்யூனிசத்திற்கு வழிவிடும் என்பதற்கு எந்த அறிகுறியையும் காட்டாத போது மார்க்கசியர்கள் மார்க்ஸின் கோட்பாடு தவறானது என்ற முடிவுக்கு வர மாட்டார்கள். அதற்கு பதிலாக, அக்கோட்பாடில் நின்று கொண்டு, அக்கோட்பாடு முரண்படும் அவதானிப்புகளை வேறு வழிகளில் விளக்க முயற்சிக்கிறார்கள். எனவே ஆடம்ஸ் மற்றும் லிவிரியர் செய்தது சரியானது, அறிவியலுக்கு ஒரு முன்மாதிரி என்று நாம் ஏற்றுக்கொள்வோமானால் மார்க்சியர்களை மட்டும் போலிஅறிவியலில் ஈடுபட்டுள்ளர் என குற்றம் சாட்டுவது நிச்சயமாக நியாயமற்றதே. 

போலிஅறிவியலில் இருந்து அறிவியலை பி்ரித்தறியும் பாப்பரின் முயற்சி முதலில் நம்பத்தகுந்ததாக இருந்தாலும் முழுவதும் சரியானதல்ல என்பதையே மேற்கூறியது காட்டுகிறது. ஆடம்ஸ்/லிவிரியர் உதாரணம் எந்த வகையிலும் வித்தியாசமானது அல்ல. எனென்றால் தங்களுடைய கோட்பாடு என்னதான் அவதானித்த தரவுகளுடன் முரண்பட்டாலும் அறிவியலாளர்கள் அதை கைவிட மாட்டார்கள். கோட்பாடுகளை கைவிடாமல் முரண்பாடுகளை அகற்றுவதற்கான வழிகளைத்தான் வழக்கமாக தேடுவார்கள். கிட்டத்தட்ட எல்லா அறிவியல் கோட்பாடுகளும் சில அவதானிப்புகளுடன் முரண்படும். அனைத்து தரவுகளுக்கும் மிகச்சரியாக பொருந்தக்கூடிய ஒரு கோட்பாடை கண்டுபிடிப்பது மிகக் கடினமானது. ஒரு கோட்பாடு தொடர்ந்து பற்பல தரவுகளுடன் முரண்படுகிறது, அந்த முரண்பாடுகளை விளக்குவதற்கு எந்த வழியையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்ற போது இறுதியாக அந்த கோட்பாடு நிராகரிக்கப்படும். ஆனால் பிரச்சனையின் முதல் அறிகுறி தெரியும் போதே அறிவியலாளர்கள் தங்களின் கோட்பாடுகளைக் கைவிட்டிருந்தால் எந்த முன்னகர்வும் ஏற்பட்டிருக்காது.

பாப்பருடைய பிரித்தறிதல் நிபந்தனையின் (demarcation criterion) தோல்வி முக்கியமான வினா ஒன்றை எழுப்புகிறது. அறிவியல் என்று நாம் அழைக்கும் துறைகளுக்கு மட்டும் பொதுவாக உள்ள சில அம்சங்களைக் கண்டுபிடிக்க முடியுமா? பாப்பர் இந்த கேள்விக்கு விடை உள்ளது என கருதுகிறார். ப்ராய்ட், மார்க்ஸின் கோட்பாடுகள் கண்டிப்பாக அறிவியல் அல்ல என்று பாப்பர் கருதுவதால், உண்மையான அறிவியலின் அம்சங்கள் இவற்றில் நிச்சயமாக கிடையாது என்கிறார். மார்க்ஸ், ப்ராயிட் மீதான பாப்பரின் எதிர்மறை விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும், ’அறிவியலுக்கு அடிப்படையான இயல்பு ஒன்று உள்ளது’ என்ற அவருடைய ஊகம் கேள்விக்குரியதே. எல்லாவற்றிற்கும் அப்பால், அறிவியல் என்பது பல செயல்பாடுகளின் தொகுதி. அறிவியல் பரந்துவிரிந்த பல்வேறுபட்ட துறைகள் மற்றும் கோட்பாடுகளை கொண்டது. அந்த துறைகள் ஏன் அறிவியல் துறையாக இருக்க வேண்டும் என்று வரையறை செய்ய அவற்றிற்கு இடையில் சில நிலையான அம்சங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். தத்துவவாதி லுட்விக் விட்ஜென்ஸ்டீன் (Ludwig Wittgenstein) ஒரு விளையாட்டு ஏன் விளையாட்டாக உள்ளது என்பதை வரையறுக்க எந்த நிலையான அம்சங்களும் கிடையாது என்கிறார். மாறாக பெரும்பாலான விளையாட்டுகள் பொதுவான தளர்வான அம்சங்களை கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் அந்த பொது அம்சங்களில் சிலது இல்லை என்றாலும் அவை விளையாட்டாகவே இருக்கும். இது அறிவியலுக்கும் பொருந்தும் என்கிறார். அப்படியென்றால் போலிஅறிவியலில் இருந்து அறிவியலைப் பிரிக்கும் ஒரு அளவுகோலை கண்டுபிடிப்பதற்கு சாத்தியங்களே கிடையாது. 

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

முந்தைய பகுதி - அறிவியல் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா