Saturday 21 January 2023

அறிவியல் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா

அறிவியல் என்றால் என்ன? பதில் சொல்வதற்கு இது எளிய கேள்வியாக தோன்றலாம். ஏனென்றால் இன்று அனைவருக்கும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் போன்றவை அறிவியல் துறைகள் என தெரியும். அதேசமயம் இசை, கலை, இறையியல் போன்றவை அறிவியல் துறைகளுக்குள் வராது என்றும் தெரியும். ஆனால் தத்துவவாதியாக இருந்து கொண்டு அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் இது போன்ற ஒரு பதிலை எதிர்பார்க்கமாட்டோம். இங்கு நாம் பொதுவாக அறிவியல் என சொல்லப்படும் செயல்பாடுகளின் பட்டியலை கேட்கவில்லை. நாம் கேட்பது இந்த பட்டியலிலுள்ள அனைத்திற்கும் பொதுவாக என்ன அம்சம் உள்ளது? எது அவற்றை அறிவியலாக ஆக்குகிறது? என்பது. இதைப் புரிந்து கொண்டால் நம்முடைய கேள்வி அவ்வளவு எளிமையானதல்ல என்பது தெரியும். 

நிகோலஸ் கோபெர்நிகஸ்

ஆனால் இன்னமும் கூட நீங்கள் இந்த கேள்வி எளிமையானது தானே என கருதலாம். அறிவியல் என்பது நாம் வாழ்கின்ற உலகத்தை புரிந்து கொள்ளவும், விளக்கவும் கணிப்பதற்குமான முயற்சிகள்தானே என நீங்கள் பதில் சொல்லலாம். இது ஒரு நியாயமான பதில் தான். இருந்தாலும் முழுமையான பதிலல்ல. மதங்கள்கூட இந்த உலகத்தை புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயல்கின்றன, ஆனால் நாம் அதை அறிவியல் துறையாக எடுத்துக்கொள்வதில்லையே. இதேபோல ஜோதிடமும் எதிர்காலத்தை கணிக்க முயல்கிறது. இருந்தும் பலர் இதை அறிவியல் செயல்பாடாக ஏற்றுக்கொள்வதில்லை. வரலாறுகூட அறிவியலாக கருதப்படுவதில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் சென்ற காலங்களில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் செய்கிறார்கள். ஆனால் வரலாறு கலைத்துறையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது, அறிவியலாக அல்ல. ஆகவே பல தத்துவக் கேள்விகளைப் போலவே ‘அறிவியல் என்றால் என்ன?’ என்ற கேள்வியும் முதலில் எளிமையாக தெரிந்தாலும் கடினமான ஒன்றுதான். 

அறிவியலின் தனித்துவமான அம்சம் அறிவியலாளர்கள் ஆய்வு செய்யப் பயன்படுத்தும் முறைகளில் உள்ளது. பல அறிவியல் துறைகள் தனித்துவமாக ஆய்வு முறைகளைக் கொண்டுள்ளன. அவற்றை அறிவியல் அல்லாத மற்ற துறைகளில் பார்க்கமுடியது. நன்கு தெரிந்த உதாரணம் ’பரிசோதனை’ (experiment). ஆய்வுகளில் பரிசோதனைகளைப் பயன்படுத்தியதே வரலாற்றுரீதியாக நவீன அறிவியல் முன்னேற்றத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவியல் துறைகளும் பரிசோதனைகளை செய்யக் கூடியதல்ல. உதாரணமாக வானியலாளர்களால் விண் மீது தங்களது பரிசோதினைகளை செய்ய முடியாது. அதற்கு பதிலாக அவை அவதானிப்புகளைக் (Observations) கொண்டிருக்கும். இது பல சமூக அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். அறிவியலின் மற்றொரு முக்கியமான அம்சம் கோட்பாடுகளைக் கட்டமைப்பது. அறிவியலாளர்கள் தங்களது பரிசோதனை முடிவுகளையும் அவதானிப்புகளையும் வெறுமனே பதிவேடுகளில் குறித்து வைத்துக்கொள்வதில்லை. அந்த முடிவுகளை ஒரு பொதுவான கோட்பாடின் மூலம் விளக்குகின்றனர். இது எப்பொழுதுமே எளிமையான ஒன்றாக இருந்ததில்லை. எனினும் இதில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளும் நிகழ்ந்துள்ளன.  அறிவியலாளர்கள் பரிசோதனை, அவதானிப்பு, கோட்பாடைக் கட்டமைத்தல் ஆகியவற்றை கொண்டு எவ்வாறு இயற்கையின் பல ரகசியங்களை கட்டவிழ்க்கின்றனர் என்ற நுட்பத்தை புரிந்துகொள்வதே அறிவியல் தத்துவம் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சினை. 

நவீன அறிவியலின் தோற்றம்

இன்றைய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவியல் பெரும்பாலும் வரலாற்று ரீதியாக கற்பிக்கப்படுவதில்லை. பாடநூல்கள் அறிவியல் துறையின் முக்கிய கருத்துக்களை முடிந்தவரை வசதியாக புரிந்துகொள்ளும் வகையில் கொடுக்கின்றன. அந்த கருத்துக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்பதைப் பற்றி அந்நூல்கள் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் அவை பெரும்பாலும் நெடிய சிக்கலான வரலாற்றைக் கொண்டிருக்கும். கல்வித்துறையின் அணுகுமுறைப்படி இது சரியானது தான். ஆனால் அறிவியல் கருத்துக்கள் எவ்வாறு உருவாகி வந்தன என்ற வரலாற்றை கொஞ்சமாவது தெரிந்திருப்பது அறிவியல் தத்துவவாதிகள் கவனம் செலுத்தும் பிரச்சனைகளை புரிந்துகொள்ள உதவும். 

நவீன அறிவியலின் தோற்றம் ஐரோப்பாவில் அறிவியல் முன்னேற்றம் வேகமாக நடைபெற்ற காலகட்டமான 1500க்கும் 1700க்கும் இடையில் நிகழ்ந்தது. இதுவே அறிவியல் புரட்சி என குறிப்பிடப்படுகிறது. அறிவியல் ஆய்வுகள் பண்டைய காலங்களிலும் அதைத் தொடர்ந்த இடைக்காலத்திலும் கூட நடைபெற்றுள்ளன. அதாவது அறிவியல் புரட்சி அறிவியலே இல்லாத இடத்திலிருந்து புதிதாக முலைக்கவில்லை. பண்டைய கால அறிவியலில் அரிஸ்டாடிலின் நோக்கு ஆதிக்கம் செலுத்தியது. இவர் இயற்பியல், உயிரியல், வானியல், பிரபஞ்சவியல் போன்றவற்றில் விரிவான கோட்பாடுகளை முன்வைத்தவர். ஆனால் இவருடைய கருத்துக்களும் ஆய்வு முறைகளும் ஒரு நவீன அறிவியலாளருக்கு மிகவும் வித்தியாசமாகத் தென்படும். உதாரணமாக இவர் உலகிலுள்ள அனைத்து பொருள்களும் மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு கூறுகளால் ஆனவை என நம்பினார். இந்த நோக்கு நவீன வேதியியல் நமக்கு சொல்லியவைகளுடன் முரண்படுகிறது. 

நவீன அறிவியல் உலகநோக்கின் (worldview) முதல் நகர்வு கோபெர்நிக்கன் (Copernican) புரட்சி. நிகோலஸ் கோபெர்நிகஸ் (1473-1543) என்ற போலந்தை சேர்ந்த வானியலாளர் 1542ல் ஒரு நூலை வெளியிட்டார். அந்நூல் அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த புவிமையக் கோட்பாட்டை மறுக்கிறது. புவிமையக் கோட்பாடு பிரபஞ்சத்தின் மையமாக நிலையான பூமியை வைத்து சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றிவருகின்றன என்கிறது. இதற்கு ப்டோல்மியின் வானியல் என்றும் பெயர். ப்டோல்மி (ptolemy) ஒரு கிரேக்க தத்துவவாதி. அரிஸ்டாடில்வாத பார்வையை அடிப்படையாக கொண்ட இக்கோட்பாடு 1800 வருடங்களாக எந்த எதிர்ப்பையும் சந்திக்காமல் இருந்தது. ஆனால் கோபெர்நிகசிஸ் இதற்கு மாறான ஒன்றை பரிந்துரைத்தார். சூரியன் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் நிலையாக உள்ளது, பூமி முதலான கோள்கள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றுகின்றன. இது சூரிய மைய கோட்பாடு. இதன் படி பூமியும் மற்ற கோள்களைப் போலவே வெறும் ஒரு கோள் தான். இதனால் மனிதர்கள் மரபாக பூமியின் மீது வைத்திருந்த தனித்துவமான நிலை இல்லாமலாகிறது. கோபெர்நிக்கசின் கோட்பாடு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்தது. கத்தோலிக்க திருச்சபை இந்த கோட்பாட்டை புனித நூலுக்கு எதிரானதாக எடுத்துக்கொண்டது. இதனால் 1616ல் புவியின் இயக்கம் சார்ந்த நூல்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த நூறு வருடங்களுக்குள் கோபெர்நிகஸ்வாதம் அறிவியலில் மிக முக்கியமான ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டது.

ஜொன்னெஸ் கெப்ளர்
கோபெர்நிகசின் முன்னெடுப்புகள் வானியலின் முன்னேற்றங்களுக்கு மட்டும் வழியமைக்கவில்லை. மறைமுகமாக ஜொன்னெஸ் கெப்ளர் (Johannes Kepler, 1571 - 1630), கலிலியோ கலிலி (Galileo Galilei, 1564 - 1642) ஆகியோரின் செயல்பாடுகள் வழியாக நவீன இயற்பியலின் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. கோபெர்நிகஸ் கூறியது போல் புவி முதலான கோள்கள் சூரியனை வட்ட பாதையில் சுற்றவில்லை, நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார். இது கோள்களின் இயக்கத்தைப் பற்றிய இவரின் முதல் விதி. இவருடைய இரண்டாவது, மூன்றாவது விதிகள் சூரியனை சுற்றும் கோள்களுடைய சுழற்சியின் வேகத்தை குறிக்கின்றன. முன்பிருந்ததை விட கோள்களைப் பற்றிய மிகச்சிறந்த கோட்பாடை கெப்ளரின் விதிகள் கொடுத்தன. மேலும் பல நூற்றாண்டுகளாக வானியலாளர்களை குழப்பிக்கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வையும் கொடுத்தன. கலிலியோ கோபெர்நிகஸ்வாதத்தை தனது ஆயுள் முழுவதும் ஆதரித்தார். இவரே தொலைநோக்கியின் முன்னோடியும் ஆவார். எப்பொழுது தன் தொலைநோக்கியை வின்னை நோக்கி திருப்பினாரோ, அப்பொழுதிருந்து பல அற்புதமான கண்டுபிடுப்புகளை நிகழ்த்தத் துவங்கினார். நிலவிலுள்ள மலைகள், நட்சத்திரங்கள், சூரியப் புள்ளிகள், வியாழனை சுற்றும் நிலவுகள் போன்றவை அவற்றில் சில. இவை அனைத்தும் அரிஸ்டாடில்வாத பிரபஞ்சத்துடன் முரண்படுபவையே. மேலும் இவை அறிவியல் சமூகத்தை கோபெர்நிகஸ்வாதத்தை நோக்கி திருப்புவதில் மிகமுக்கியமாக பங்கை வகித்தன. 

கலிலியோ கலிலி

கலிலியோவின் பங்களிப்புகளில் மிக நீடித்த பங்களிப்பை கொண்ட துறை வானியல் அல்ல, இயக்கவியல். அதில் இவர் அரிஸ்டாடிலின் கோட்பாடான ’அதிக நிறை கொண்ட பொருள் குறைந்த நிறை கொண்ட பொருளை விட வேகமாக கீழே விழும்’ என்பதை நிராகரித்து இதற்கு நேர்ரெதிரான கோட்பாட்டை முன்வைத்தார். காற்று தடை இல்லாத வெற்றிடத்தில் அனைத்து பொருள்களும் அவற்றின் எடையை பொருட்படுத்தாமல் சமமான வேகத்தில் கீழே விழும் என்றார் (நடைமுறையில் ஒரு பீரங்கி குண்டையும் ஒரு இறகையும் சமமான உயரத்தில் இருந்து கீழே போடும் போது நிச்சயமாக குண்டு தான் முதலில் தரையைத் தொடும். ஆனால் இது காற்று தடையின் காரணமாகவே நிகழ்கிறது என கலிலியோ சொல்கிறார். எந்த தடையும் இல்லாத வெற்றிடத்தில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை தொடும் என்கிறார்). மேலும் தடையில்லாத இடத்தில் கீழ் நோக்கி விழும் பொருள்கள் ஒரேசீராக முடுக்கமடையும் (Accelerate) என்றார். அதாவது அவற்றின் வேகம் ஒரே சீராக ஒரே சமயம் அதிகரிக்கும். இதுவே கலிலியோவின் தடையில்லா-வீழ்ச்சி விதி (free-fall law). கலிலியோ இந்த விதிக்கு முழுமுற்றான ஆதாரத்தை தரவில்லை என்றாலும் நம்பத்தகுந்த ஆதாரத்தை வழங்கினார். இந்த விதியே இவருடைய இயக்கவியலின் மையத்தை கட்டமைத்தது. 

கலிலியோவை முதல் நவீன இயற்பியலாளர் என்கிறார்கள். இவர்தான் முதன்முதலாக பொருள்களின் (Material objects) பண்புகளை வரையறுக்க கணித மொழியைப் பயன்படுத்த முடியும் என காட்டினார். இயற்பியல் மட்டுமல்லாமல் உயிரியல், பொருளியல் போன்ற அறிவியல் துறைகளும், அறிவியல் கோட்பாடுகளும் கணித மொழியையே பயன்படுத்துகின்றன. இன்று இது நமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் கலிலியோவின் காலத்தில் அப்படியல்ல. கணிதம் முற்றிலும் அருவமான விஷயங்களுடன் தொடர்புடையது, ஆகவே புற யதார்த்தத்தை (physical reality) வரையறுக்க பயன்படாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. மேலும் கலிலியோ கருதுகோள்களை பரிசோதனை வழியாக சோதிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். நவீன அறிவியலாளருக்கு இதுவும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவரின் காலத்தில் அறிவை பெருவதற்கான நம்பகமான வழிமுறையாக பரிசோதனைகள் கருதப்படவில்லை. பரிசோதனை வழியாக சோதனை செய்வதற்கு கலிலியோ முக்கியத்துவம் கொடுத்ததே இயற்கையை ஆராய்வதற்கு இன்று வரை தொடரும் புலனறிவு அணுகுமுறையின் (Empirical approach) துவக்கம். 

ரெனெ டெகார்த்ஸ்

கலிலியோவிற்கு பின் அறிவியல் புரட்சி வேகமாக முன்னேறியது. 1596 - 1650-ல் வாழ்ந்த ரெனெ டெகார்த்ஸ் (Rene Descartes) என்ற பிரான்சு தத்துவவாதி-அறிவியலாளர் இயக்கவியல் தத்துவத்தை (Mechanical philosophy) வளர்த்தெடுக்கிறார். இது ’பிரபஞ்சம் (Physical world) மிக நுண்ணிய துகள்கள் ஒன்றோடொன்றுடன் கொண்டுள்ள தொடர்பு மற்றும் மோதல்களினால் ஆனது’ என்ற விதியின் அடிப்படையில் அமைந்தது. நுண்துள்களின் இயக்கத்தை சொல்லும் இவ்விதி கோபர்னிகஸ்வாத பிரபஞ்சத்தின் அமைப்பை புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானது என நம்பினார். அவதானிக்க இயலும் அனைத்து நிகழ்வுகளையும் நுண்ணிய உணரமுடியாத துகள்களுடைய இயக்கத்தின் வழியாக விளக்க முடியும் என இயக்கவியல் தத்துவம் உறுதியளித்தது. இவரின் பார்வை 17ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் அறிவியல் நோக்கில் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக உடனடியாக மாறியது. இந்த ஆதிக்கம் குறைந்த அளவில் இன்றும் நீடிக்கிறது. இவரை தொடர்ந்து இயக்கவியல் தத்துவம் ஹ்யூஜென்ஸ் (Huygens), காஸ்ஸெண்டி (Gassendi), ஹூக் (Hooke), பாயில் (Boyle) போன்றவர்காளால் முன்னெடுக்கப்பட்டது. இந்த பார்வை பரவலான ஏற்றுக்கொண்டதே அரிஸ்டாட்டில்வாத உலகநோக்கின் முடிவாக கருதப்படுகிறது.

நியூட்டன்
இதுவரை நிகழ்ந்த அறிவியல் புரட்சி நியூட்டனுடைய (1643 - 1727) செயல்களால் உச்சத்தை அடைந்தது. இவரின் முக்கியமான நூல் Mathematical principles of natural philosophy 1678ல் வெளிவந்தது. பிரபஞ்சம் நுண்ணிய துகள்களால் ஆனது என இயக்கவியல் தத்துவாதிகள் சொல்வதை நியூட்டன் ஒத்துக்கொள்கிறார். அதேசமயம் டெகார்த்துடைய கோட்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கருதினார். எனவே டெகார்த்தாவின் கோட்பாடுகளை இன்னும் ஆழமான அதிக வீச்சுடைய கோட்பாடாக நியூட்டன் மாற்றி அமைத்தார். அதுவே நியூட்டனின் மூன்று இயக்க விதிகளையும், அவரது புவி ஈர்ப்பு கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட இயக்கவியல் கோட்பாடு. இதன்படி, பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருட்களும் மற்ற பொருட்களின் மீது ஈர்ப்பு விசையை செலுத்துகின்றன (இரு பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை என்பது அப்பொருட்களின் நிறை மற்றும் தொலைவின் இரு மடங்கின் பெருக்கல் தொகைக்கு சமம்). ஈர்ப்பு விசை எவ்வாறு பொருள்களுடைய இயக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இயக்க விதிகள் குறிப்பிடுகின்றன. நியூட்டன் நுண் கணிதவியலை கண்டுபிடித்ததன் மூலம் தனது கோட்பாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் மிகத்துல்லியமாகவும் கறாராகவும் விரிவுபடுத்தினார். கோள்களின் இயக்கம் பற்றிய கெப்லரின் கோட்பாடும், கலிலியோவுடைய தடையில்லாத-வீழ்ச்சி விதியும் (இரண்டையும் சிறிய மாற்றங்களுடன்) தன்னுடைய புவியீர்ப்பு விதி மற்றும் இயக்க விதிகளின் தர்க்கரீதியான விளைவுகளே என்று நியூட்டன் நிரூபித்தார். இது ஆச்சரியமான ஒன்று. வேறுவிதமாக சொல்வதென்றால், பூமியில் இருக்கும் பொருள்களின் இயக்கத்தையும், விண்ணில் இருக்கும் பொருள்களின் இயக்கத்தையும் ஒரே விதிகள்தான் விளக்குகின்றன என்றார். மேலும் நியூட்டன் அவ்விதிகளை மிகத்துல்லியமான ஒரு கணித வடிவத்தில் (quantitative form) முறைப்படுத்தினார். 

நியூட்டனின் இயற்பியல் அடுத்த 200 வருடங்களுக்கு தேவையான கட்டமைப்பை அறிவியலுக்கு கொடுத்தது. மேலும் கார்டீசியன் இயற்பியலை வெகுசீக்கிரத்தில் அகற்றிவிட்டது. நியூட்டனுடைய கோட்பாடு அடைந்த வெற்றியினால்  அறிவியலாளர்களின் நம்பிக்கை இந்த காலகட்டத்தில் வேகமாக அதிகரித்தது. நியுட்டனின் கோட்பாட்டை கொண்டு இயற்கையின் உண்மையான செயல்பாடுகளை வெளிக்கொண்டுவர முடியும் என்றும் குறைந்தபட்சம் அனைத்தையும் கோட்பாட்டு அளவிலாவது விளக்கிவிட முடியும் என்றும் நம்பினர். நியூட்டனின் விளக்க முறைகளை பல நிகழ்வுகளுக்கு பொருத்தும் முயற்சி மிக விரிவாக நடைபெற்றது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வேதியியல், ஒளியியல், ஆற்றல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல் போன்ற ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடைபெற்றன.  அவற்றில் பெரும்பகுதி நியூட்டன் கோட்பாட்டின் பிரபஞ்சப் பார்வைக்குள் வருவதாகவே கருதப்பட்டன. அறிவியலாலர்கள் நியூட்டனின் நோக்கு முற்றிலும் சரியானது என ஏற்றுக்கொண்டனர். ஆகவே இனி செய்ய வேண்டியதெல்லாம் விடுபடல்களை நிரப்புவது மட்டுமே என கருதினர். 

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் நியூட்டனின் பார்வை மீதான நம்பகத்தன்மை சிதைய ஆரம்பித்தது. இதற்கு இயற்பியலில் நடந்த புரட்சிகரமான இரண்டு முன்னேற்றங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஒன்று சார்பியல் கோட்பாடு, மற்றொன்று குவாண்டம் இயக்கவியல். நியூட்டனின் கோட்பாடை மிக அதிக நிறை கொண்ட பொருட்களுக்கோ அல்லது அதிக திசை வேகத்துடன் நகரும் பொருள்களுக்கோ பொருத்திப் பார்க்கும் போது சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்பதை ஐன்ஸ்டினால் கண்டுபிடிக்கப்பட்ட சார்பியல் கோட்பாடு (Relativity Theory) காண்பித்தது. இதற்கு நேரெதிராக குவாண்டம் இயற்பியல் மிக நுண்ணிய நிறை கொண்ட பொருட்களுக்கு அதாவது நுண்துகள்களுக்கு நியூட்டனின் கோட்பாடு பொருந்தவில்லை என்பதை காண்பித்தது. சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகிய இரண்டுமே (குறிப்பாக குவாண்டம் இயற்பியல்) மிகவும் வித்தியாசமானவை, அதேசமயம் முக்கியமான கோட்பாடுகளும் கூட. இவை பொதுமக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள கடினமான பல கூற்றுகளை தருகின்றன. இவற்றின் தோற்றம் கணிசமாக கருத்தியல் எழுச்சியை இயற்பியலில் உருவாக்கியது, அது இன்றுவரை நீடிக்கிறது.

இதுவரை நாம் பார்த்த அறிவியல் வரலாற்றின் சுருக்கம் இயற்பியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. இது தற்செயலானதல்ல. ஏனென்றால் வரலாற்றின் படி இயற்பியலே அனைத்து அறிவியல் துறைகளுக்கும் மிக அடிப்படையான அலகு. மற்ற துறைகள் ஆய்வு செய்யக்கூடிய பொருள்கள் அனைத்துமே கூட்டுபொருள்களால் ஆனவை. உதாரணமாக தாவரவியலாளர்கள் ஆய்வு செய்யும் தாவரங்கள் செல்களால் ஆனவை, செல்கள் உயிர்-மூலக்கூறுகளாலும், உயிர்-மூலக்கூறுகள் அணுக்களாலும், அணுக்கள் இயற்துகள்களால் (physical particles) ஆனவை. ஆகவே இயற்பியலுடன் ஒப்பிடும் போது தாவரவியல் மேல் நிலை, அதாவது இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலுள்ள கூட்டுபொருள்களை ஆய்வுசெய்கிறது, அடிப்படை அலகை அல்ல. இருந்தாலும் தாவரவியல் முக்கியமான துறையல்ல என்று கருதப்படாது. மேலும் நவீன அறிவியலின் தோற்றத்தைப் சொல்லும் எந்தவொரு சுருக்கமாக வரையறையும் இயற்பியல் தவிர்த்த மற்ற துறைகளை ஒதுக்கிவிட்டால் முழுமையடையாது.

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவினாசி

தொடர்ச்சி: அறிவியல் தத்துவம் என்றால் என்ன?