Thursday 30 November 2023

அறிவியல் ரியலிசமும், ரியலிச மறுப்பும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா

அவதானிக்க இயல்பவை / இயலாதவை வேறுபாடு 

ரியலிசம் மற்றும் ரியலிச மறுப்புவாதத்திற்கு இடையேயான மைய விவாதம் என்பது எவை அவதானிக்க இயல்பவை மற்றும் எவை அவதானிக்க இயலாதவை என்பதற்கு இடையே உள்ள வேறுபாடே. இதுவரை இவ்வேறுபாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். உதாரணமாக, நாற்காலி, மேஜை போன்றவை அவதானிக்க இயல்பவை, அணுக்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் அவதானிக்க இயலாதவை. ஆனால் இவ்வேறுபாடு உண்மையிலேயே தத்துவார்த்தமாக சிக்கலானது. ’அடிப்படையிலேயே அவதானிக்க இயல்பவைக்கும் இயலாதவைக்குமான வேறுபாட்டை வரையறுக்க முடியாது’ என்பது ரியலிசம் முன்வைக்கும் முக்கியமான வாதங்களில் ஒன்று. 

ஏன் இது ரியலிசத்திற்கு முக்கியமான வாதமாக உள்ளது? ஏனென்றால் அறிவியல் அவதானிக்க இயலாத புறப்பிரபஞ்சம் பற்றிய அறிவை நமக்குத் தராது என ரியலிச மறுப்புவாதம் சொல்கிறது. அவதானிக்க இயல்பவை மற்றும் அவதானிக்க இயலாதவை ஆகியவற்றுக்கு இடையே தெளிவான வேறுபாடு இருப்பதாக கருதுகிறது. இந்த வேறுபாட்டை திருப்திகரமாக வரையறுக்க முடியாது என்றால் மறுப்புவாதம் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் அல்லவா. இதனால் தான் ரியலிசவாதிகள் அவதானிக்க இயல்பவைக்கும் இயாலதவைக்குமான வேறுபாட்டுடன் தொடர்புடைய சிக்கல்களை முன்னிறுத்துகிறார்கள்.

அவற்றில் ஒன்றுதான் அவதானிப்புக்கும் (observation), இருப்பை அறிவதற்கும் (detection) இடையேயுள்ள தொடர்பு. எலெக்ட்ரான் போன்ற தனிப்பொருள்களை சாதாரணமான புலன்களைக் கொண்டு அவதானிக்க இயலாது. ஆனால் துகள்களை அறிய உதவும் சிறப்பான கருவிகளைக் கொண்டு அவற்றின் இருப்பை அறிய முடியும். முகிலறை (cloud chamber) துகள்களின் இருப்பை அறிவதற்கு பயன்படும் எளிய கருவி. இது அதிக ஈரப்பதமான, காற்றால் நிரம்பிய, மூடிய கலன். எலெக்ட்ரான் போன்ற மின்னூட்டம் பெற்ற துகள்கள் அந்தக் கலன் வழியே செல்லும் போது அவை காற்றில் உள்ள நடுநிலையான அணுக்களுடன் மோதி அவ்வணுக்களை அயனிகளாக (ions) மாற்றுகின்றன. இந்த அயனிகளை சுற்றியுள்ள ஈரப்பதம் நீர்த்துளிகளை உருவாக்குகிறது. அவற்றை நாம் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இந்த நீர்த்துளிகளின் தடங்களைப் பார்ப்பதன் மூலம் முகிலறையின் வழியே சென்ற எலெக்ட்ரானின் வழித்தடத்தை நாம் காணமுடியும். ஆகவே நாம் எலெக்ட்ரானை அவதானித்துவிட்டோம் என்று சொல்லமுடியுமா? பல தத்துவவாதிகள் இல்லை என்றே சொல்கின்றனர். முகிலறையைக் கொண்டு எலெக்ட்ரானின் இருப்பை அறியத்தான் முடிகிறது, அவற்றை நேரடியாக அவதானிக்க அல்ல. உதாரணமாக, அதி வேகமாக ஒரு ஜெட் செல்கிறது, அது பின்னால் விட்டுச் செல்லும் நீராவித் தடத்தின் மூலம் அதன் இருப்பை அறியமுடியும். அந்த தடத்தை பார்ப்பது ஜெட்டை அவதானிப்பது அல்ல. ஆனால் இது போலவே எல்லாவற்றிலும் இருப்பை அறிவதற்கும் அவதானிப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெளிவாக உள்ளதா?

க்ரொவெர் மேக்ஸ்வெல் (Grover Maxwell) என்ற அமெரிக்க தத்துவவாதி 1960களில் மறுப்பாளர்களுக்கு ஒரு சிக்கலை கட்டமைக்கிறார். மிகவும் பிரபலமான இந்த சிக்கல் ரியலிசத்திற்கு சாதகமானது. அச்சிக்கலை ஒரு தொடர் நிகழ்வுகளின் மூலம் பார்க்கலாம். ஒன்றை நாம் வெறும் கண்களால் பார்க்கிறோம், பிறகு அதை ஒரு சட்டகத்தின் வழியாகப் பார்க்கிறோம், பின் அதை ஒரு ஜோடி தடிமனான கண்ணாடி வழியாகப் பார்க்கிறோம், பின் ஒரு தொலைநோக்கி வழியாக பார்க்கிறோம், திறன் குறைந்த நுண்ணோக்கி வழியாக பார்க்கிறோம், திறன் மிகுந்த நுண்ணோக்கி வழியாக பார்க்கிறோம், மேலும் பல ஊடகங்களின் வழியாகவும் அதைப் பார்க்கிறோம். இந்த நிகழ்வுகள் ஒரு சீரான தொடர்ச்சியில் இருப்பதாக மேக்ஸ்வெல் வாதிடுகிறார். இவற்றில் எதன் வழியாக பார்ப்பதை அவதானித்தல் என்றும், எதன் வழியாக பார்ப்பது அவதானித்தல் அல்ல என்றும் எப்படி முடிவுசெய்வது? ஒரு உயிரியலாளர் நுண்ணுயிர்களை திறன் மிகுந்த நுண்ணோக்கியைக் கொண்டு நேரடியாக அவதானிக்கிறாரா அல்லது இயற்பியலாளர்கள் முகிலறையின் மூலம் எலெக்ட்ரானின் இருப்பை அறிவது போல நுண்ணுயிர்களின் இருப்பை மட்டும் அறிகிறாரா? ஒன்றை அதிநவீன அறிவியல் கருவியின் உதவியைக் கொண்டு மட்டுமே பார்க்க இயலும் என்றால் அதை அவதானிக்க இயல்வது என எடுத்துக்கொள்வதா, இல்லை அவதானிக்க இயலாதது என எடுத்துக்கொள்வதா? அவதானிப்பதற்கு பதிலாக ஒன்றின் இருப்பை அறிவதற்கு உதவக்கூடிய கருவி எவ்வளவு அதிநவீனமாக இருக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முறையான வழிமுறைகள் இல்லை. எனவே தனிப்பொருள்களை அவதானிக்க-இயல்வது, அவதானிக்க-இயலாதது என வகைப்படுத்தும் ரியலிச மறுப்பாளர்களின் முயற்சி படு தோல்வியை அடைகிறது என மேக்ஸ்வெல் வாதிடுகிறார்.

சிலசமயம் அறிவியலாளர்களே நவீன சாதனங்களை கொண்டு துகள்களை ’அவதானிப்பதை’ பற்றிப் பேசுகின்றனர். இதுவே மேக்ஸ்வெலின் வாதத்திற்கு உறுதுணையாக உள்ளது. தத்துவத்தில் எலெக்ட்ரான்கள் வழக்கமாக அவதானிக்க-இயலா தனிப்பொருள்களுக்கான சிறந்த உதாரணமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் அறிவியலாளர்களோ துகள்களின் ’இருப்பை அறியும்’ கருவிகளின் உதவியுடன் எலெக்ட்ரான்களை ’அவதானிப்பது’ பற்றி மகிழ்சியாக பேசுகிறார்கள். நிச்சயமாக இவை தத்துவவாதிகள் சொல்வதை தவறு என்றும், எலெக்ட்ரான்கள் ஒருவழியாக அவதானிக்கப்பட்டுவிட்டன என அறிவியலாளர்கள் பேசுவதை சரி என்றும் நிரூபிக்கவில்லை. இந்த வகையான பேச்சுக்களை அறிவியலாளர்களின் வழக்கமான சொல்லாடல் (façon de parler) என கருதுவதே சிறந்தது. இதைப்போலவே நாம் பகுதி 2லும் ஒரு உண்மையைப் பார்த்தோம் - அறிவியலாளர்கள் ஒரு கோட்பாடுக்கு ’பரிசோதனை அடிப்படையிலான ஆதாரங்கள்’ உள்ளன என சொல்வது பரிசோதனைகள் நிஜமாகவே அக்கோட்பாடை சரி என நிரூபிக்கும் என்று பொருளாகாது. ரியலிச மறுப்பாளர்கள் சொல்வது போல நிஜமாகவே அவதானிக்க இயல்வதற்கும் இயலாதவற்றிற்குமான வேறுபாடு தத்துவார்த்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்றால், இது அறிவியலாளர்கள் பேசும் முறைமையுடன் ஒத்திருக்கவில்லை என்பது வினோதமானது. 

மேக்ஸ்வெலின் வாதங்கள் வலுவானவை, ஆனால் அறுதியானவை அல்ல. பாஸ் வென் ஃப்ராஸென் (Bas van Fraassen) என்ற சமகால முதன்மை ரியலிச மறுப்பாளர் ’அவதானித்தல்’ என்பது ஒரு தெளிவற்ற சொல் என்பதைத் தான் மேக்ஸ்வெல்லின் வாதங்கள் காட்டுகிறது என்கிறார். தெளிவற்ற சொல் என்பது தெளிவான இரு பிரிவுகளில் எந்தவொன்றுக்கும் முழுவதுமாக பொருந்தாமல் இரண்டையும் பிரிக்கும் கோட்டின்மீது இருப்பவற்றை குறிப்பது. உதாரணமாக வழுக்கை என்பது தெளிவற்ற சொல். ஆண்கள் பலருக்கு முடி உதிரத் துவங்கினால் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் வரை அவர்களின் தலை வழுக்கையா இல்லையா எனச் சொல்வது கடினம். எனினும் முடியுள்ள தலைக்கும் வழுக்கைக்கும் வேறுபாடு உள்ளது. வழுக்கை என்பது தெளிவற்ற சொல் என்பதால் வழுக்கை உள்ளவர்களுக்கும் முடியுள்ளவர்களுக்கும் இடையில் எந்த வித்யாசமும் கிடையாது என யாரும் எளிதாக சொல்லமாட்டார்கள். இவ்விரு நிலைகளுக்கும் இடையில் ஒரு கூர்மையான பிரிவுக்கோட்டை வரைய முற்பட்டால் நிச்சயமாக அது சீராக இருக்காது. ஆனால் வழுக்கைத் தலையுள்ள ஆண் மற்றும் வழுக்கையில்லாத ஆண் என்ற இரு திட்டவட்டமான நிலைகள் இருப்பதால், இவற்றை துல்லியமாக பிரிக்கும் கோடு இல்லாதது ஒரு பொருட்டல்ல. இந்த உதாரணம் அப்படியே ’அவதானிக்க-இயல்பவை’க்கும் நன்கு பொருந்தும் என்கிறார் வென் ஃப்ராஸென். அதாவது நாற்காலி போல அவதானிக்கக-இயலும் தனிப்பொருள்கள் என்ற திட்டவட்டமான நிலையும், எலெக்ட்ரான் போல அவதானிக்க-இயலாதவை என்ற திட்டவட்டமான நிலையும் உள்ளன. மேக்ஸ்வெல்லின் வாதம் இந்த இருநிலைகளில் அல்லாமல் பிரிவுக்கோட்டில் அமைந்த நிலைகள் இருப்பதை காட்டுகிறது. அதாவது கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு தனிப்பொருள் அவதானிக்க இயல்வதா அல்லது இருப்பை மட்டும் அறிய இயல்வதா என்று நாம் உறுதியாக பிரிக்க முடியாத நிலையிலும் இருக்கும். இவ்விரு நிலைகளையும் பிரிக்கும் ஒரு கூர்மையான பிரிவுக்கோட்டை வரைய முயற்சித்தால் அது நிச்சயமாக சீராக இருக்காது. ஆனால் இது அவதானிக்க இயல்வது/இயலாதது என்ற வேறுபாடு நிஜமாகவே இல்லை என்பதைக் காட்டவில்லை. 

இது வலுவான வாதமா? பிரிவுக்கோட்டில் அமைந்த நிலைகள் இருக்கின்றன என்றும் மற்றும் சீரான பிரிவுக்கோட்டை வரைவது சாத்தியமற்றது என்றும் வென் ஃப்ராஸென் சொல்வது அனேகமாக சரியாக இருக்கலாம். இது அவதானிக்க இயலக்கூடியவை/இயலாதவைக்குமான வேறுபாடு நிஜமாகவே இல்லை என்று காட்டவில்லை. அதுவரையில் மேக்ஸ்வெல்லுக்கு எதிரான இவருடைய வாதம் வெற்றியடைந்துள்ளது. எப்படியிருந்தாலும் இந்த வாதம் இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது. ஒன்று: அவதானிக்க இயல்பவைக்கும் இயலாதவைக்கும் இடையில் நிஜமான வேறுபாடு உள்ளது. மற்றொன்று: அந்த வேறுபாடு ரியலிச மறுப்பாளர்கள் முன்வைக்கும் வாதத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. ’அவதானிக்க இயலா தனிப்பொருள்கள் திட்டவட்டமாக உள்ளன, மறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு இதுவே போதுமானது’ என்ற வென் ஃப்ராஸென் கருத்தை நாம் ஏற்றுகொண்டாலும் ’ஏன் உலகில் (அல்லது பிரபஞ்சத்தில்) உள்ள அவதானிக்க-இயலாதவை பற்றிய அறிவை பெறுவது சாத்தியமற்றது’ என மறுப்பாளர்கள் சொல்வதை நாம் இன்னமும் விவாதிக்க வேண்டியுள்ளது. 

குறைதீர்மானிப்பு (underdetermination) விவாதம்:

ரியலிச மறுப்பாளர்கள் முன்வைக்கும் ஒரு வாதம் அறிவியலாளர்களின் தரவுகளுக்கும் (empirical data) அவர்களின் கோட்பாடுகளுக்குமான (theory) தொடர்பை மையமாக கொண்டது. ஒரு அறிவியல் கோட்பாட்டின் தரவுகள் அவதானிக்க-இயலும் தனிப்பொருள்கள் மற்றும் செயல்முறைகள் பற்றிய மாறாவுண்மைகளையே (fact) கொண்டுள்ளன என்று மறுப்பாளர்கள் சொல்கின்றனர். இதை விரிவாகப் பார்க்க மீண்டும் வாயுக்களின் இயக்க கோட்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். ‘எந்த குறிப்பிட்ட அளவிலுள்ள வாயுவும் இயக்கத்தில் இருக்கும் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன’ என இக்கோட்பாடு சொல்கிறது. அந்த மூலக்கூறுகள் அவதானிக்க இயலாதவை என்பதால் வாயுக்களை வெவ்வேறு அளவுகளில் எடுத்து அக்கோட்பாட்டை சோதிக்க முடியாது. எனவே நாம் நேரடியாக சோதிக்கத்தக்க சில கூற்றுகளை கோட்பாடிலிருந்து எடுக்க வேண்டும். அந்த கூற்றுகள் அவதானிக்ககூடிய தனிப்பொருள் பற்றியதாக இருக்க வேண்டும். உதாரணமாக முன்பு நாம் பார்த்த கூற்றையே எடுத்துக்கொள்ளலாம்: வாயுக்களை வெப்பப்படுத்தும் போது அதன் அழுத்தம் மாறாமலிருந்தால் அவை விரிவடையும். ஆய்வகத்தில் தகுந்த கருவியைக் கொண்டு இக்கூற்றை நேரடியாக சோதனை செய்ய முடியும். இந்த உதாரணத்தில் இருந்து ’அவதானிக்க-இயலும் நிகழ்வின் மாறாவுண்மைகள் அவதானிக்க-இயலா தனிப்பொருள்கள் மற்றும் செயல்முறைகளைக் கொண்ட கோட்பாடுகளுக்கு உச்சபட்ச தரவுகளை வழங்குகின்றன’.

தரவுகள் (empirical data) அறிவியலாளர்கள் முன்வைத்த கோட்பாடுகளை ’குறைபாடுடன் தீர்மானிக்கிறது’ (underdetermine) என மறுப்பாளர்கள் வாதிடுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? அடிப்படையிலேயே தரவுகள் ஒன்றுக்கொன்று பொருந்தாத பல்வேறுபட்ட கோட்பாடுகளால் விளக்கப்படும் தன்மை கொண்டவை. மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் தரவுகளுக்கு கொடுக்கப்படும் ஒரு சாத்தியமான விளக்கமே ’வாயுக்கள் அதிக எண்ணிக்கையிலான இயக்கத்திலிருக்கும் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது’ என ரியலிச மறுப்பாளர்கள் கூறுகின்றனர். இது இயக்க கோட்பாடு தரும் விளக்கம். ஆனால் இயக்க கோட்பாடுடன் முரண்படக்கூடிய வேறு சாத்தியமான விளக்கங்களும் இருக்கும் என மறுப்பாளர்கள் சொல்கிறார்கள். எனவே ரியலிச மறுப்பாளர்களின் படி, அவதானிக்க-இயலா தனிப்பொருள்களை அடிப்படையாக கொண்ட அறிவியல் கோட்பாடுகள் தரவுகளினால் குறைபாடுடன் தீர்மானிக்கப்படுகின்றன - ஏனென்றால் அந்த தரவுகளுக்கு சமமான அளவில் பொருந்தக்கூடிய வேறு பல முரண்பாடான கோட்பாடுகளும் எப்போதுமே இருக்கும். 

குறைதீர்மானிப்பு வாதம் ரியலிச மறுப்பாளர்களின் அறிவியல் பார்வைக்கு சாதகமாக உள்ளது. இது ஏன் என பார்ப்பது எளிது. ஒரு கோட்பாடு அதிக அளவிலான தரவுகளை விளக்குகிறது என்பதால் ஒரு அறிவியலாளர் அக்கோட்பாட்டை நம்புகிறார் எனக் கொள்வோம். அந்தத் தரவுகளுக்கு ஒன்றுக்கொன்று பொருந்தாத பல மாற்றுக்கோட்பாடுகளின் மூலம் விளக்கம் தர முடியும் என்றால் அந்த அறிவியலாளரின் நம்பிக்கை தவறாகிவிடும். எந்த காரணத்தினால் ஒரு அறிவியலாளர் மாற்றுக் கோட்பாடுகளில் ஒன்றை தெரிவு செய்யாமல் தற்போது நம்பிக்கை வைத்துள்ள கோட்பாட்டைத் தெரிவு செய்தார்? ஆகவே அவதானிக்க-இயலா பகுதிகள் பற்றிய கோட்பாடுகளை அறியொணாமை (Agnosticism) எனக் கொள்வதே பகுத்தறிவான அணுகுமுறை என்ற மறுப்பாளர்களின் முடிவுக்கு குறைதீர்மானிப்பு வாதம் இயல்பாகவே இட்டுச்செல்கிறது. 

ஆனால் ரியலிச மறுப்பாளர்கள் சொல்வது போல தரவுகள் எப்போதுமே பல்வேறுபட்ட கோட்பாடுகளால் விளக்கப்படும் என்பது சரிதானா? ரியலிசவாதிகள் எளிமையான சில இடங்களில் மட்டுமே இது சரியாகிறது என்கின்றனர். அவதானிப்புகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியமான விளக்கங்கள் கொள்கையளவில் சாத்தியம்தான். ஆனால் அவை அனைத்துமே சமமாகப் பொருந்தக்கூடியவை அல்ல என ரியலிசவாதிகள் சொல்கின்றனர். உதாரணமாக இவற்றில் ஒரு கோட்பாடு மற்றதை விட எளிமையானதாக இருக்கலாம் அல்லது வேறு அறிவியல் துறையின் கோட்பாடுக்கு நன்கு பொருந்தலாம் அல்லது மறைந்துள்ள சில காரணிகளை முன்வைக்கலாம். கோட்பாட்டைத் தெரிவு செய்வதற்கு அது தரவுகளுடன் பொருந்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அதற்கு அப்பாற்ப்பட்ட அளவுகோல்களும் உள்ளன என்பதை நாம் ஒத்துக்கொண்டால் குறைதீர்மானிப்பின் சிக்கல் இல்லாமலாகிவிடும் என ரியலிசவாதிகள் சொல்கின்றனர்.

’நிஜமாகவே அறிவியல் வரலாற்றில் குறைதீர்மானங்களுக்கு மிகச்சில உதாரணங்கள் தான் இருக்கின்றன’ என்ற உண்மையே இதற்கு வலுசேர்க்கிறது. மறுப்பாளர்கள் சொல்வது போல புலனறிவு தரவுகளை எப்போதுமே பல்வேறு கோட்பாடுகளால் விளக்க முடியும் என்றால், நிரந்தரமாக கருத்து வேறுபாடுகளைக் கொண்ட அறிவியலாளர்களைப் பார்க்க முடியும் என நாம் எதிர்பார்க்கலாம் அல்லவா? ஆனால் வரலாற்றில் இருந்து நாம் கண்டறிந்தது இதுவல்ல. வரலாற்றைத் துழாவும் போது குறைதீர்மானிப்பு வாதம் நம்மை எங்கு கொண்டுசெல்லும் என்று நினைத்தோமோ அதற்கு நேர்மாறாகவே நிலைமை உள்ளது. அறிவியலாளர்கள் தங்களின் தரவுகளுக்கு ’அதிக’ எண்ணிக்கையில் முரண்பாடான விளக்கங்களை எதிர்கொள்வதற்கு பதிலாக தரவுகளுக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய ’ஒரு’ கோட்பாட்டைக் கண்டுபிடிக்கவே பெரும் சிரமப்படுகின்றனர். ஆகவே ’குறைதீர்மானிப்பு என்பது தத்துவவாதிகளின் கவலை மட்டுமே, அது நிஜமான அறிவியல் நடைமுறையுடன் சிறிய தொடர்பையே கொண்டுள்ளது’ என்ற ரியலிசவாதிகளின் வாதத்தை இது நிலைநாட்டுகிறது. 

இந்த பதில் ரியலிச மறுப்பாளர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. என்னதான் இருந்தாலும் தத்துவார்த்தமான கவலைகள் அனைத்தும் நிஜமானவையே, அவற்றின் நடைமுறை விளைவுகள் குறைவானதாக இருந்தாலும் கூட. போட்டியிடும் கோட்பாடுகளில் ஒன்றை தெரிவுசெய்ய ’எளிமைத்தன்மை’ போன்ற அலகைப் பயன்படுத்தலாம் அல்லவா. எளிமை போன்ற அலகுகளைக் கொண்டு நம்முடைய தரவுகளுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்களை பிரிப்பதனால் நடைமுறையில் குறைதீர்மானிப்பின் சிக்கலை தீர்க்க முடியும் என்பதை ரியலிச மறுப்பாளர்கள் பொதுவாக ஏற்கின்றனர். ஆனால் இது போன்ற அலகுகள் உண்மைத்தன்மையை நம்பகமாக சுட்டிக்காட்டும் என்பதை மறுக்கின்றனர். எளிமையான கோட்பாடுகள் கையாள்வதற்கு மிகவும் வசதியானவையாக இருக்கலாம், ஆனால் சிக்கலானவற்றை விட சரியாக இருப்பதற்கு அதிக சாத்தியங்கள் கொண்டது அல்ல. எனவே குறைதீர்மானிப்பு வாதம் இங்கு நிறைவடைகிறது: அடிப்படையிலேயே தரவுகளுக்குப் பல்வேறு விளக்கங்கள் எப்போதும் இருக்கும், அவற்றில் எது சரியானது என்பதை அறிவதற்கு எந்த வழியுமே கிடையாது, எனவே அவதானிக்க-இயலாதவை பற்றிய அறிவு இருக்கவியலாது. 

எனினும் கதை இங்கு முடியவில்லை. ஏனென்றால் ரியலிசவாதிகள் இன்னொரு எதிர்வாதத்துடன் வருகிறார்கள். மறுப்பாளர்கள் குறைதீர்மானிப்பு வாதத்தை சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பொருத்திப்பார்க்கின்றனர் என ரியலிசவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த வாதத்தை ஒரேமாதிரி அனைத்திற்கும் பொருத்திப் பார்த்தால் அவதானிக்க-இயலாதவை மட்டுமல்ல அவதானிக்க-இயல்பவை பற்றிய அறிவையும் அடையமுடியாது என்று தெரியவரும் என்கின்றனர். அவர்கள் ஏன் இதை சொல்கிறார்கள் என்பதற்கு பின்வருவதைக் கவனிக்கவும்: அவதானிக்க-இயலும் பல பொருள்கள் நிஜமாகவே எப்போதும் அவதானிக்கப்படாமலேயே உள்ளன. உதாரணமாக, உலகில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் மனிதர்களால் அவதானிக்கப்படாமல் இருக்கின்றன. ஆனால் அவை நன்கு அவதானிக்க-இயல்பவை. ஒரு பெரிய விண்கல் பூமியின் மேற்பரப்பில் வந்து மோதியது என்ற நிகழ்வை கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வை இதுவரை யாரும் பார்த்ததில்லை. இது நிகழ்ந்த இடத்தில் நேரத்தில் எந்த ஒரு மனிதனும் இல்லை. இருந்தாலும் இது நன்கு அவதானிக்கக் கூடியதே. எவையெல்லாம் அவதானிக்க இயலுமோ அவற்றின் ஒரு சிறு பகுதி மட்டுமே நிஜமாக அவதானிக்கப்பட்டுள்ளன. 

முக்கியமாக விஷயம் இதுதான்: பிரபஞ்சத்தின் அவதானிக்க-இயலாத பகுதி அறிவியல் அறிவின் எல்லைக்கு அப்பால் உள்ளது என ரியலிச மறுப்பாளர்கள் சொல்கிறார்கள். எனவே அவதானிக்கக்கூடிய ஆனால் இன்னமும் அவதானிக்கப்படாமல் இருக்கின்ற பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய அறிவை நாம் பெற முடியும் என்பதை மறுப்பாளர்கள் ஏற்கின்றனர். ஆனால் அவதானிக்கப்படாமல் இருக்கும் பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கோட்பாடுகளும் அவதானிக்க இயலாதவற்றின் கோட்பாடுகளைப் போலவே தரவுகளால் குறைபாடுடன் தீர்மானிக்கப்படும். உதாரணமாக, ’நிலவில் ஒரு விண்கல் 1987ஆம் ஆண்டு மோதியது’ என்ற கருதுகோளை ஒரு அறிவியலார் முன்வைக்கிறார் எனக்கொள்வோம். இந்தக் கருதுகோளுக்குத் துணையாக பலதரப்பட்ட தரவுகளை அவர் மேற்கோள் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, நிலவில் ஒரு பெரிய பள்ளமிருப்பதை காட்டும் செயற்கைகோள் படங்களில் அந்தப் பள்ளம் 1987க்கு முன்னுள்ள படங்களில் இல்லை. ஆனால் இந்த தரவை வேறுபல கருதுகோள்களின் மூலமும் விளக்க முடியும் - எரிமலையினாலோ அல்லது நிலநடுக்கத்தினாலோ இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் அல்லது அந்த செயற்கைகோள்-படங்களை எடுத்த புகைப்படக் கருவி தவறாக படம் எடுத்திருக்கலாம், நிஜமாகவே அங்கு பள்ளம் இல்லாமலும் இருக்கலாம். எனவே அறிவியலாளரின் கருதுகோள் நிலவில் ஒரு விண்கல் மோதியது என்ற அவதானிக்ககூடிய நிகழ்வைப் பற்றியதாக இருந்தும் அது தரவுகளால் குறைபாடுடனேயே தீர்மானிக்கப்படுகிறது. ரியலிசவாதிகள் சொல்வது போல குறைதீர்மானிப்பு வாதத்தை ஒரே மாதிரியாக அனைத்திற்கும் பொருத்திப்பார்த்தால் பின்வரும் முடிவிற்கு நாம் வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம்: அவதானிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றிய அறிவை மட்டுமே அறிவியல் நமக்குத் தர முடியும்.

இந்த முடிவு பல அறிவியல் தத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒன்று. அறிவியல் நமக்கு சொல்வதன் பெரும்பகுதி அவதானிக்கப்படாத விஷயங்களைப் பற்றியதே - பனிக்காலம், டைனோசரஸ், கண்டங்களின் பிரிவு போன்றவை. அவதானிக்கப்படாதவை பற்றிய அறிவை பெறுவது சாத்தியமற்றது என சொல்வது அறிவியல்-அறிவு என்று பெரும்பாலும் எதையெல்லாம் குறிப்பிடுகிறோமோ அவை நிஜமாகவே அறிவு அல்ல என சொல்வதற்கு நிகர். ரியலிசவாதிகள் இந்த கூற்றை குறைதீர்மானிப்பு வாதம் தவறானது எனக் காட்டுவதற்காக எடுத்துக்கொள்கின்றனர். அறிவியல் நமக்கு அவதானிக்கப்படாதவை பற்றிய அறிவைத் தருகிறது என்பதை நாம் மிகத்தெளிவாக அறிவோம். எனவே அவற்றைப் பற்றிய கோட்பாடுகள் நம்முடைய தரவுகளால் குறைபாடுடன் தீர்மானிக்கப்பட்டாலும் அது அறிவுக்கு ஒரு தடை அல்ல. எனவே அவதானிக்க இயலாதவை பற்றிய நம்முடைய கோட்பாடுகளும் தரவுகளினால் குறைபாடுடன் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கான பொருள் அவதானிக்க இயலாதவை பற்றிய அறிவை அறிவியல் தராது என்பதல்ல. 

இதன் விளைவாக ரியலிசவாதிகள் குறைதீர்மானிப்பு சிக்கலை ஹுயும் முன்வைக்கும் தொகுத்தல் சிக்கலின் மற்றொரு பதிப்பே என்கிறார்கள். தரவுகள் பல்வேறு மாற்றுக்கோட்பாடுகளுக்குப் பொருந்தக்கூடியது என குறைதீர்மானிப்பு வாதம் சொல்கிறது. இதன் சாரம் என்னவென்றால் தரவுகள் கோட்பாட்டை உள்ளடக்கி இருக்கவில்லை. அதாவது தரவுகளிலிருந்து கோட்பாட்டை அனுமானிப்பது பகுத்தல் முறையில் செய்யப்படுதில்லை. கோட்பாடு அவதானிக்க-இயலாதவை பற்றியதாக இருந்தாலும், அல்லது அவதானிக்க-இயல்வது ஆனால் அவதானிக்கப்படாதது பற்றியதாக இருந்தாலும் அவைகளுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை - இரண்டிலும் நிலைமை ஒன்றே. குறைதீர்மானிப்பு வாதத்தை தொகுத்தல் சிக்கலின் ஒரு பதிப்பு மட்டுமே எனக் குறிப்பிடுவதால் அது புறக்கணிக்கத் தகுந்தது என்று அர்த்தமாகாது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் அவதானிக்க இயலாத தனிப்பொருள்களுக்கு மட்டுமான தனித்த சிக்கல் என்று எதுவுமில்லை. எனவே ரியலிச மறுப்பாளர்களின் இடம் முற்றிலுமாக சீரற்ற ஒன்று என்கின்றனர் ரியலிசவாதிகள். எலெக்ட்ரான் மற்றும் அணுக்கள் பற்றிய அறிவை அறிவியல் எப்படித் தரும் என்பதை புரிந்துகொள்வதில் என்னென்ன சிக்கல்கள் இருந்தாலும் அவை எல்லாமே கண்களுக்கு புலப்படக்கூடிய பொருள்கள் பற்றிய அறிவை அறிவியல் எப்படித் தரும் என்பதை புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களுக்குச் சமமானதே. 

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்