Saturday 30 December 2023

தெய்வ தசகம் - 8, 9, 10: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி


பாடல் - 8

அகவும் புறவும் திங்கும்
மஹிமாவார்ன்ன நின்பதம்
புகழ்த்துன்னு ஞங்களங்கு
பகவானெ ஜயிக்குக

அகமும் புறமும் நிறைவது
உன் புகழே
போற்றுகிறோம் உன்னை
இறையே வெற்றி கொள்க!

அகவும் புறவும் திங்கும் மஹிமாவார்ன்ன நின்பதம் - அறிபவன்-அறிவு (க்ஷேத்ரஞன்-க்ஷேத்ரம்) என்றும், அறிபவன்-அறிபடுபொருள் (விஷயி-விஷயம்; ஞாதா-ஞேயம்) என்றும், நுகர்பவன்-நுகர்வு (போக்தா-போக்யம்) என்றும், அக உணர்வு-புற உணர்வு (ப்ரத்யங்க சைதன்யம்-ஆபாச சைதன்யம்) என்றும் அறிவினை இரண்டாகப் பிரித்தால், அறிபவன், நுகர்பவன் என்பனவற்றை அகமென்றும் அறிவு, நுகர்வு என்பனவற்றை புறமென்றும் கூறலாம். மீபொருளில் இவையெல்லாம் கற்பனை மட்டுமே. அதாவது, வேறுபாடு உண்டென்றாலும் அவற்றிலெல்லாம் ஒன்றேபோல் நிறைந்துநிற்பது இறையின் பெருமையே.

புகழ்த்துன்னு ஞங்கள் - அவ்வாறான உனது பெயரை (திருவடியை) நாங்கள் வாழ்த்துகிறோம்.

அங்கு பகவானே ஜயிக்குக - இறைமை, வயப்படுத்தல் போன்ற எட்டுவகை சித்திகள் கைவரப்பெற்றவர் எவரோ அவரே கடவுள். கடவுளுடன் நமக்குண்டான பிணைப்பு முன்னரே நிறுவப்பட்டது. கடவுள் புகழும் வெற்றியும் பெறட்டும்!

(தெய்வமே, உனது பெருமை அகமும் புறமும் நிறைவது. நாங்கள் எப்போதும் இறையை போற்றுகிறோம். நீ எப்போதும் வெற்றிபெறுவதாக!)

பாடல் - 9

ஜயிக்குக மஹாதேவ
தீனாவனபராயண
ஜயிக்குக சிதானந்த
தயாஸிந்தோ ஜயிக்குக

வெற்றி கொள்க பேரிறையே
நலிந்தோர்தம் துணையே
வெற்றி கொள்க அகமகிழ்வே
கருணைக்கடலே நீ வெல்க!

ஜயிக்குக மஹாதேவ - தன்னொளி கொண்ட பேரிறையே, அனைத்தையும் ஒளிரச்செய்யும் நீ வெல்வாயாக! தீனாவன பராயண - துன்பத்தாலும் விழைவாலும் நாங்கள் நலிந்துபோகையிலெல்லாம் அருள் கூர்ந்து உனது அனைத்தறிகையையும் அனைத்தியல்கையையும் எங்களுடன் பகிர்ந்து எங்களை ஆற்றுப்படுத்தும் அனைத்திறையே (நீ வெல்க!)

ஜயிக்குக சிதானந்த - எதனை அறிவதால் அனைத்துத் துன்பங்களையும் கடந்து நிறைமகிழ்வை எய்த முடியுமோ அத்தகைய அறிவுவடிவாகத் திகழ்பவனே, மகிழ்வும் நீ; மகிழ்வையளிப்பவனும் நீ. அகமகிழ்வே வடிவானவனே, நீ வெற்றி கொள்க!

தயாஸிந்தோ ஜயிக்குக - கருணையுடைவர்க்கும், தீயவர்க்கும், அறவுணர்வு கொண்டவர்க்கும், கிருமிகளுக்கும், பேரரசர்களுக்கும் என எல்லோர்க்கும் ஒன்றேபோல் அடைக்கலமாய் இருப்பவனும், அவரனைவருக்கும் ஒன்றேபோல் அருளைப் பொழிபவனுமான இறையே, நீ வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க எமக்கு உதவுவதோடு விளக்கவியலா கருணைக்கடலெனும் உன்னில் எங்களை ஆழ்த்தவும் செய்கிறாய்.

(பேரிறையே நீ வெல்க! நலிந்தோர் நலனையே எப்போதும் கருதுகிறாய். அறிவும் மகிழ்வுமே வடிவாகக் கொண்டவனே நீ வெற்றி கொள்க! அருட்கடலே நீ வெல்வாயாக!)


பாடல் - 10

ஆழமேறும் நின்மஹஸ்ஸா
மாழியில் ஞங்ஙளாகவே
ஆழணம் வாழணம் நித்யம்
வாழணம் வாழணம் சுகம்

ஆழம்நிறை நின்பெருமையெனும்
ஆழியில் ஆழ்ந்து நாங்கள்
வாழ்தல் வேண்டும் என்றென்றும்
பெருக வேண்டும் இன்பம் என்றும்

ஆழமேறும் நின் - தெய்வத்தின் பெருமை ஆழத்தில் துலங்குவது என்று முன்னரே கண்டோம். கடலை இருவகையில் நோக்கலாம். குறுக்குவெட்டாகப் பார்த்தோமென்றால், சிறியதும் பெரியதுமான எண்ணிலடங்கா அலைகள் எழுந்து ஓய்வின்றி ஒன்றையொன்று பின்தொடர்ந்துகொண்டிருப்பதை காணலாம். அதைப் போலவே, பொருட்களின் மெய்மையை மட்டும் காண்பவர்களுக்கு இந்த அண்டம் முழுவதுமே நிலையின்மையின் துன்பியல் நாடகம் போலத் தோன்றும். ஆனால் அதே கடலின் ஆழத்திற்கு இறங்கிச் சென்று மேலே பார்த்தால், அங்கே அலைகளின் பன்முகத்தன்மையோ, மாறிக்கொண்டே இருக்கும் நிலையின்மையின் காட்சியோ இருக்காது. அனைத்தையும் தன்னுடன் அரவணைத்துக்கொள்ளும் ஒருமையே தெய்வத்தின் நிலைத்த பெருமை. இந்த வேண்டுலின் துவக்கத்தில் நாம் வாழ்வெனும் பெருங்கடலில் வீழ்ந்துகிடக்கும் துன்பம்கொண்டவராய் சித்தரிக்கப்பட்டோம். அதன் பின், தெய்வத்தை பெருங்கடலின் ஆழமாகவும் நம்மை அதன் மேற்பரப்பில் அலைகளாயும் கூறக்கண்டோம். பின்னர் தெய்வத்தை முடிவிலா அருட்கடலாகவும் நம்மை அக்கடலின் விளக்கவியலா பெருமையைப் போற்றும் பக்தராகவும் சொல்லக் கேட்டோம். இறுதியாக, நாமே தெய்வத்தின் ஆழம்நிறைந்த பெருமையுள் நுழைந்து அதனோடு ஒன்றெனக் கலந்தவர்களானோம்.

ஞங்ஙளாகவே ஆழணும் - உயிர் பன்முகத்தன்மை கொண்டது போல் தோன்றினாலும் ஆன்மாவுக்கு ஒருபோதும் அது கிடையாது. எனவே, எனக்கு வீடுபேறு கிடைக்கட்டும் என்று வேண்டுதல் இயலாத ஒன்று. அனைத்துயிரிலும் உள்ள ஆன்மாவோடு ஒன்றுதல் முதலில் நிகழவேண்டும். தெய்வத்தின் பெருமையில் ஆழ்வதன் மூலம் நிகழும் பெருலயம் எல்லோருக்குமானது. அதனால்தான், உன்னுடைய பெருமையில் ‘நாங்களாகவே’ ஆழ வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

வாழணம் நித்யம், வாழணம் வாழணம் சுகம் - இந்த வேண்டுதலின் நோக்கம் வீடுபேறடைவது அல்ல. துறக்கம் இன்பமயமானதுதான். ஆனால் அந்த இன்பம் அழிவற்றதல்ல. அறம் குறைவுபடும் வரை மட்டுமே நிலைநிற்பது. என்றென்றைக்குமாக அடையக்கூடுவது மறுபிறப்பில்லா வீடுபேறு மட்டுமே. நாங்கள் அவ்வாறான வீடுபேற்றை - நித்யநிர்வாணத்தை - அடைவோமாக! மெய்யறிவு (ஆன்மஞானம்) சுருங்குவதாலும், அதனால் வேற்றுமை உணர்வு மேலிடுவதாலும், இன்பம் என்பது நிலைபேறற்றதாகவும் திரையிடப்பட்டதாகவும் உள்ளது. ஆனால், எல்லோரும் ஒருமித்து ஒன்றேபோல் தெய்வத்தின் பெருமையில் கரைகையில் ‘நான்’ என்றும் ‘எனது’ என்றும் தன்முனைப்பு கொள்வதும், ‘நீ’ என்றும் ‘உனது’ என்றும் வாதிடுவதும் எஞ்சுவதில்லை. இப்படியாக அறிவானது நிபந்தனைகளற்றதாகி, காலம், இடம், பெயர், வடிவம் என்பவையெல்லாம் இல்லாமலாகி, தூய மகிழ்வு மட்டுமே எஞ்சுகிறது.

(தெய்வமே, ஆழம்நிறை உன் பெருமையெனும் ஆழியில் நாங்கள் ஆழ்ந்து மகிழ்ந்து, ஒருபோதும் குன்றாத பேரின்பத்தை எய்துவோமாக!)

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:


தமிழில் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

தெய்வ தசகம் : நாராயண குரு - தொடர்

ஆனந்த் ஶ்ரீனிவாசன்

தெய்வ தஶகம்: தெய்வம் - இறை, தஶகம்- பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர்.


நாராயண குரு (1856-1928)


இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.


நித்ய சைதன்ய யதி (1923-1999)


நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.

ஆனந்த் ஶ்ரீனிவாசன்


தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.


ஆனந்த் ஶ்ரீனிவாசன் தமிழ் விக்கி