Sunday 14 May 2023

தெய்வ தசகம் - 2: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி


இரண்டாவது பாடல்: 

ஒன்னொன்னா யெண்ணியெண்ணித்தொ
ட்டெண்ணும் பொருளொடுங்கியால்
நின்னிடும் த்ருக்குபோலுள்ளம்
நின்னிலஸ்பந்தமாகணம்

ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி
தொட்டெண்ணிய பொருளொடுங்கியபின்
எஞ்சும் பார்வைபோல் (எமது) அகம்
உன்னுள் ஒடுங்கவேண்டும்

ஒன்னொன்னா யெண்ணியெண்ணி: புலன்கள் வழியே அறியக்கூடிய பொருள்களை ஒவ்வொன்றாய் எடுத்து பகுப்பாய்வு செய்து நோக்கி

தொட்டெண்ணும் பொருளொடுங்கியால்: புலனறிவின் வழியே எட்டப்படும் மெய்ப்பொருளை ஆராய்ந்து பார்த்தால், கண்ணுக்குப் புலப்படுபவை எல்லாம் வெறும் தோற்றங்கள் மட்டுமே என்பது புரியும். அத்துடன் அவற்றுக்குக் காரணமான பார்வை பொருள்களிலிருந்து தானே பின்னடையவும் கூடும்.

நின்னிடும் த்ருக்குபோலுள்ளம்: காட்சிகளின் மெய்ப்பொருளை ஆராயும் பார்வை, இறுதியில் பார்வையிலேயே (கண்ணிலேயே) மெய்ப்பொருளை கண்டடைந்து ஒடுங்கிவிடும். அதே போல், தெய்வத்தைத் தேடும் அகம் தன்னை தெய்வத்தில் நிலைபெற்றதாய் அறியும்போது, இருமையற்ற நிலையில் எய்தக்கூடிய பேரமைதி கிட்டுகிறது.

நின்னிலஸ்பந்தமாகணம்: இவ்வாறான ஒளிவுமறைவற்ற உணர்வனுபவத்தால் நாம் தெய்வத்திலிருந்து வேறுபட்டவரல்லர் எனும் போதம் வசப்பட வேண்டும்.

(அண்டத்தில் உள்ளவற்றை ஒவ்வொன்றாய் ஆராய்ந்து கொண்டே சென்றால் புலன்கள் வழியே அறியக்கூடிய பொருள்கள் எல்லாம் வெறும் தோற்றங்கள் மட்டுமே என்பது புரியும். அத்துடன் பார்வை தன்னிலேயே நிலைகொள்கிறது. அதுபோல தெய்வத்தை தேடுகின்ற அகம், தனக்கு அடிப்படையாக இருப்பதும் தெய்வம்தான் என்று அறியும்போது இருமையற்ற நிலை எய்தப்படுகிறது. அத்தகைய வாழ்வனுபவம் கிடைப்பதற்கு தெய்வம் அருள்வதாகுக!)

புலன்கள் வழியே அறியக்கூடிய ஒவ்வொன்றின் மெய்ப்பொருளையும் ஆராய்ந்து பார்த்தால் மனமானது சொற்களுக்கு அப்பாற்பட்ட அளவிட முடியாத ஒரு பேருண்மையில் சென்று நிற்கும். அத்துடன் அறிவு சார்ந்து தோன்றும் பார்வைக்கும் காட்சிக்கும் இடையேயான வேறுபாடு இல்லாமலாகி அசைவற்ற பேரமைதியை சென்றடையவும் முடியும். ப்ரபஞ்சம் குறித்து ஆராய்ந்து, அகத்தைச் சென்றடையக்கூடிய இரண்டு நெறிகள் உபநிடதங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு நெறிகளிலும் தொட்டெண்ணக்கூடிய பொருள்கள் ஒவ்வொன்றாய் பரிசோதிக்கப்படுகின்றன. ‘தத்வமஸி’ எனும் பெருஞ்சொல்லுக்கான பொருள் ப்ரபஞ்சம் சார்ந்த புலனறிவின் அடிப்படையிலும், ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்ற பெருஞ்சொல்லின் பொருள் அறிவெல்லை கடந்ததன் வழியாகவும் விளக்கப்படுகின்றன.

முதலில் ப்ரபஞ்ச அறிவுசார்ந்த முறைமையை பார்ப்போம். சாந்தோக்ய உபநிடதத்தில் ஆறாவது அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: ஆருணிகன் தனது மகன் சுவேதகேதுவிடம் “நீ ப்ரம்மசரியம் மேற்கொள்வாயாக! நமது குலத்தில் கல்விகற்று ப்ரம்மத்தின் அணுக்கராகாத ஆண்கள் பிறந்ததில்லை” என்றார். அவன் தன் பன்னிரண்டாம் வயதில் உபநயனம் முடிந்து, பன்னிரண்டு வருடங்கள் வேதம் கற்று பெரும் பண்டிதனாக, பேரறிவாளனாக, உரையாசிரியனாக பெருமையுடன் வீடு திரும்பினான். அவனிடம் தந்தை கேட்டார்: “இனியவனே, நீ இவ்வாறு பண்டிதனானது எப்படி? உனக்கு கற்பிக்கப்பட்டது என்ன? எதனால் கேட்கப்படாதது கேட்கப்படுவதாகிறது? உணரப்படாதது உணரப்படுவதாகவும், அறியப்படாதது அறிவாகவும் ஆவது எதனால்?”

இது கேட்ட சுவேதகேது “அது என்னவென்று நீங்களே சொல்லி அருள்வீராக!” என்றான்.

தந்தையாகிய குரு, “ஒரு மண்ணாங்கட்டியைக் கொண்டு மண்ணை அறிய முடியும்; மண்ணிலிருப்பதாகக் கருதப்படும் வடிவ வேற்றுமைகள் வெறும் சொற்கள் மட்டுமே. உண்மையில் இருப்பது மண் மட்டுமே; அதற்கு வழங்கப்படும் வெவ்வேறு பெயர்களல்ல. ஒரு உலோக மணி கொண்டு உலோகத்தினால் செய்யப்படும் எல்லாவற்றையும் அறிய முடியும். உலோகம் மட்டுமே மெய்; அதன் வெவ்வேறு வடிவங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பல பெயர்களல்ல” என்றார். அதுகேட்டு சுவேதகேது “இந்த அறிவு நிச்சயமாக என் குருநாதரிடம் இருக்கவில்லை. எனவே, நீங்களே எனக்கு இந்த அறிவை உபதேசிக்க வேண்டும்” என்று கேட்டான். இதுகேட்ட தந்தை, “இனியவனே, அவ்வாறே ஆகட்டும்” என்று ஏற்றுக்கொண்டார்.

பின்னர், பன்னிரண்டு காண்டங்களிலாக, வாழ்வில் அனுபவம் வழியே அறியக்கூடிய ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் நுண்மையான பொருள் ப்ரம்மம் மட்டுமே என்பதை, தந்தை மகனுக்கு புரியவைத்தார். அதன் பின்னர் பெருஞ்சொல்லை இவ்வாறு உபதேசித்தார்:

குரு: ஒரு ஆல மரத்தின் பழத்தை கொண்டு வா!

சுவேதகேது: இதோ கொண்டு வந்தேன்

குரு: அதை இரண்டாகப் பிள!

சுவே: இதோ பிளந்தேன்

குரு: அதில் நீ காண்பதென்ன?

சுவே: அணுவடிவில் பலப்பல விதைகள்

குரு: அதில் ஒன்றை எடுத்து பிள!

சுவே: அப்படியே செய்தேன்

குரு: அதில் என்ன காண்கிறாய்?

சுவே: ஒன்றுமில்லை

குரு: இந்த ஆல்விதையில் அணுவடிவில் உன் கண்ணுக்குப் புலப்படாததாக எது உள்ளதோ அதுவே இப்பெரிய ஆல மரமாய் நின்றிருக்கிறது. அந்த நுண்பொருளே இவையெல்லாம். அதுவே மெய். அதுவே ஆன்மா. அது நீயே!


இவ்வாறாக ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாவற்றின் மெய்ப்பொருளும் ஆன்மாவே என்பதும், அதன் தரிசனத்தை காண்பித்த பார்வை (கண்) அந்த ஆன்மாவிலிருந்து வேறுபட்டதல்ல என்பதும் தெளிவாகிறது.

இனி, ப்ருஹதாரண்யக உபநிடதம் கூறும் அறிவெல்லை கடந்த முறைமையை பார்ப்போம். ப்ருஹதாரண்யகம் மூன்றாம் அத்யாயத்தில் இவ்வாறு கூறப்படுகிறது:

“விதேஹ நாட்டின் அரசனான ஜனகன் ஒரு யாகத்தை முடித்து பலவற்றையும் தானமாக அளித்தார். அதற்காக குருபாஞ்சாலத்தில் இருந்த பார்ப்பனரெல்லாம் அவரது அரண்மனையை வந்தடைந்திருந்தனர். அவர்களில் ப்ரம்மஞானி யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜனகனுக்கு தோன்றியது. அதற்காக அவர் ஆயிரம் பசுக்களை சேர்த்து நிறுத்தி அவற்றின் கொம்புகளில் தங்கத்தை அணிவித்து பார்ப்பனர்களிடம் கூறினார்: “உங்களில் ஆகச் சிறந்த ப்ரம்மஞானி இந்தப் பசுக்களை பெற்றுக்கொள்ளலாம்”. நான் ப்ரம்மஞானி என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ள எவருக்கும் துணிவிருக்கவில்லை. அதைக் கண்ட யாக்ஞவல்கியர் தன் சீடனான சாமக்ரவஸ்ஸிடம் அந்தப் பசுக்களை தனது ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லும்படி கூறினார். அவனும் அவ்வண்ணமே செய்தான். அதைக் கண்ட மற்ற பார்ப்பனர்கள் சினம் கொண்டனர். அஶ்வலன் என்பவன் கேட்டான்: “யாக்ஞவல்கியரே, நீங்கள் எங்கள் எல்லோரை விடவும் சிறந்த பார்ப்பனரா?” அதற்கு யாக்ஞவல்கியர் “நான் பார்ப்பனர் எல்லோரையும் மதிக்கிறேன். ஆனால் இந்த நல்ல பசுக்கள் நமக்குக் கிடைத்தால் நல்லதுதானே என்று நினைத்தேன்” என்றார். இதைத் தொடர்ந்து ஒவ்வொருவராக அவரது ப்ரம்மஞானத்தை பரிசோதிக்க கேள்விகளைக் கேட்டனர். அவர் கூறிய பதிலால் தோற்று ஒதுங்கினர். இறுதியாக, கார்கி என்னும் பெயர்கொண்ட ஆசிரியை கூறினார்: “போற்றத்தக்க பார்ப்பனரே, நான் தங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க விழைகிறேன்; எனது இரண்டு கேள்விகளுக்கும் தாங்கள் பதிலிறுத்துவிட்டீர் என்றால் அதன் பின் தங்களை ப்ரம்மவித்தையில் யாராலும் தோற்கடிக்க முடியாது”.

“யாக்ஞவல்கியரே, ஆகாயத்திற்கு மேலும், பூமிக்குக் கீழும், ஆகாயத்திற்கும் பூமிக்கும் நடுவிலும் உள்ளதும், எதிர் நிகழ் கழிவென்று சொல்லப்படுவதும், அதன் ஊடும் பாவுமாக இருப்பதும் எது?”

யாக்ஞ:  கார்கி, ஆகாயத்திற்கு மேலும், பூமிக்குக் கீழும், அவை இரண்டிற்கு நடுவிலும் உள்ளதும், எதிர் நிகழ் கழிவென்று சொல்லப்படுவதும், அதன் ஊடும் பாவுமாக இருப்பதும் ஆகாயமே.

கார்கி: சரிதான் யாக்ஞவல்கியரே. தங்களுக்கு வணக்கம். சரியான விடையை சொல்லியிருக்கிறீர். நான் எனது இரண்டாவது கேள்வியை கேட்கிறேன். ஆகாயத்தின் ஊடும் பாவுமாக இருப்பது எது?

யாக்ஞ: கார்கி, மெய்யியலை அறிந்த ப்ரம்மஞானிகள் அதனை அழிவற்றது (அக்ஷரம்) என்பர். அது பொருண்மை கொண்டதல்ல, நுண்மையானதல்ல, சிறியதல்ல, பெரியதல்ல, ஒளிர்வதல்ல, ஒழுகுவதல்ல, அதற்கு நிழலில்லை, இருண்மை இல்லை, அதற்கு ஆகாயமோ, காற்றோ இல்லை. அதற்கு எதனோடும் இணைவில்லை, மணமில்லை, சுவை இல்லை, கண்ணில்லை, காதில்லை, ஒலியில்லை, ப்ராணன் இல்லை, பேச்சிலை, வாயில்லை, பரிணாமம் இல்லை, அகமில்லை, புறமில்லை, அது எதையும் உண்பதில்லை, அது எவருடைய உணவாகவும் ஆவதில்லை. கார்கி, அந்த அக்ஷரம் காணப்படாத கண், கேட்கப்படாத செவி, சிந்திக்கப்படாத சிந்தனையாளன். அறியப்படாத இந்த அறிவே அக்ஷரம். அதுவே எல்லாவற்றிலும் ஊடும் பாவுமாய் இருக்கிறது. (ப்ரு உ 3. 2. 8. 8)

இதைக் கேட்ட கார்கி நிறைவடைந்து மௌனமானார்.


இந்த வகை எண்ண ஓட்டத்தை ‘நேதி’ ‘நேதி’ சம்பிரதாயம் என்று வேதாந்திகள் கூறுவர். புலன்களைக் கொண்டு அறியும் பொருள்களின் பண்புகளை எண்ணிப்பார்த்து ஒவ்வொன்றாய் இதல்ல இதல்ல என்று நிராகரித்துச் செல்லுகையில் அக்ஷரமாகிய ஆன்மா மட்டுமே மெய் என்று அறிந்து பார்வை சலனமற்று ஒடுங்கும். இவ்வாறு காணப்படும் காட்சியிலிருந்து பார்வைக்குச் சென்று அகத்தை தேடுவதை சங்கரர் ‘த்ருக்த்ருஷ்யவிவேகம்’ என்பார். அதனை இவ்வாறு தொகுத்துக் கூறலாம்:

வடிவம் என்பது காட்சி (த்ருஷ்யம்), அதை காண்பது கண் (த்ருக்). கண் என்பது காட்சி, அதை பார்ப்பது மனம். மனதின் செயல்பாடுகளை காண்பது சாட்சி. ஆனால், அந்த சாட்சி எதனாலும் பார்க்கப்படுவதில்லை. பார்வைக்கு நீலம், மஞ்சள், பெரியது, சிறியது, பொருண்மை, நுண்மை என வேறுபாடுகள் பல உண்டென்றாலும் அவற்றை எல்லாம் காணும் கண் ஒன்றே. காட்சியில் உள்ள வேறுபாடுகள் பார்வையின் ஒருமையை (த்ருக்கின் ஏகத்வம்) இல்லாததாக்குவதில்லை. குருட்டுத் தன்மை, கண்புரை, மங்கலான பார்வை என்பவற்றை எல்லாம் மனம் நன்றாக அறியும். கண்ணை பார்க்கும் மனதை, கண்ணின் குறைபாடுகள் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை. மனம் என்பது சித்தத்தோடு தொடர்புடையதாகும்போது த்ருஷ்யமாகிறது, சித்தம் த்ருக்காகிறது. மனதில் உண்டாகும் காமம், கற்பனை, சந்தேகம், கவனம், கவனமின்மை, வீரம், வணக்கம், புரிதல், அச்சம் முதலியவற்றை சித்தம் அறிவதில்லை என்றாலும் மனதின் இந்த சலனங்கள் எதுவும் சித்தத்தை பாதிப்பதில்லை. இந்த சித்தம் தோற்றம்-மறைவு, வளர்ச்சி-தேய்வு என்பதெல்லாம் இல்லாத தன்னொளிகொண்ட ஒன்று. தோற்றத்தை மெய்யென்று கருதுகையில் ஆன்மா தோற்றம்கொண்ட ஜீவனாகவும், இருத்தல் சார்ந்த உலகம் மெய்யென்று கருதும்போது இருத்தல்கொண்ட ஜீவனாகவும் இருக்கிறது, ஆனால், தோற்றங்களை ஒவ்வொன்றாய் பரிசோதித்து, இருத்தல் மெய்மை கொண்டு நிராகரித்தும், எல்லாவற்றையும் அறியும் ஆன்மாவின் ஒருமையைக் கொண்டு ஐயங்களை அகற்றியும் பேருண்மையை அறியும்போது திருஷ்யங்கள் எல்லாம் ஒடுங்கி, அந்த த்ருக்கு ஆன்மாவில் சலனமற்று ஒடுங்குகிறது.


அகத்தே எண்ணி, ஜீவனும் ஈஸ்வரனும் பிரிக்கமுடியாத, எங்கும் பரந்துள்ள ஒரே பரம்பொருள் மட்டுமே என்று உணருகையில், இங்கே பார்க்கப்படுகின்ற அண்டமும் உணவு-உறையுள் முதலான பலதரப்பட்ட தேவைகளும் என்றைக்குமாக புலப்படாமல் போகுமென்றும், எவ்விதத் தோற்றமும் அற்ற வெற்று சூன்யத்தில் ஒடுங்கிவிடும் என்றும் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால் யதார்த்த உலகத்தை மெய்யெனக் கொள்ளும்போது கற்றறிந்தவர் எந்தவொரு யதார்த்தத்தையும் இழக்காமல் மெய்யுணர்வு பெறுகிறார் என்பதையும், எவருடைய் வாழ்வனுபவங்களையும் யதார்த்தம் குறித்த முழுமையான போதத்துடனேயே ஞானியானவர் கையாள்வார் என்பதையும் அடுத்த பாடல் தெளிவாக்குகிறது.


முந்தைய பகுதி: தெய்வ தசகம் - பாடல் 1

தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்

(பிரார்த்தனை என்பது மதம் சார்ந்த ஒரு செயல் அல்லது பழக்கம், எல்லா மதங்களிலும் ஏதோவொரு வகையில் அது இருக்கும். கடவுள் அல்லது ஆன்மாவின் இருப்பை நிராகரிக்கும் மதங்களில் கூட அது இருந்துகொண்டிருக்கும். தீவிர நிகிலிஸ்டுகள் மற்றும் நாத்திகர்கள் கூட பிரார்த்தனை போன்ற சில பழக்கங்களை கொண்டிருப்பர். பிரார்த்தனை கடவுளுக்கு முன் சொல்லப்படும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில்லை, நம்பிக்கை தரும் வாழ்த்தாகவும் இருக்கலாம். பிரார்த்தனை செய்யாதவர்கள் கூட, குறைந்தபட்சம் நல்வாழ்த்துக்களை மற்றவர்களிடன் பகிர்ந்திருப்பர். அத்தகைய வாழ்த்துக்களும் ஒரு வகையான பிரார்த்தனைகளே. சுருக்கமாக சொன்னால், பிரார்த்தனை என்பது அனைத்து மனிதர்களிடமும் வெளிப்படுவது, ஒரு உளவியல் நிகழ்வு, மதம் சார்ந்த, சாராத அனைவரிடமும் வெளிப்படுவது. ’ஸ்வாமி முனி நாராயண பிரசாத் - தெய்வ தசகம் முன்னுரையிலிருந்து’) 

தெய்வ தசகம்: தெய்வம் - இறை, தசகம் - பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர். 

நாராயண குரு ( 1856- 1928)

இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.

நித்ய சைதன்ய யதி (1923 - 1999)

நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.  

ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்' என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.