Saturday 8 April 2023

ஆடல் - 2: செவ்வேள் ஆடல் தாமரைக்கண்ணன், புதுச்சேரி

கோயில் கலை, கோவில் பண்பாடு ஆகியவை பல்லவர்களின் காலத்தில், அவர்களின் கலை ஆர்வத்தால் பெரும் விசையுடன் தமிழகத்தில் வளரத் தொடங்கியவை. கோயில் கட்டிடக்கலை, சிற்பம் ஆகிய துறைகளில் இன்று தனித்து தெரியும் பல்லவர் கலைப்பங்களிப்பு அந்நூற்றாண்டில் பெருவிசையோடு பரவிக்கொண்டிருந்த பக்தி இயக்கத்துடன் இணைந்து வளர்ந்தது. 

படம் 1 - சோழர் கால சோமாஸ்கந்த வார்ப்புரு

மனிதனுக்கு உருவங்கள் கனவிலிருந்து கண்களுக்கும், சொல்லிலிருந்து வண்ணங்களுக்கும் புலம்பெயர்ந்து கொண்டேயிருந்தன. அவன் அதை பாறை ஓவியம், பாறைச்செதுக்கு என்று வெளிப்படுத்த ஆரம்பித்தான். பின் அவை மண், மரம், கல், உலோக சிற்பங்கள் என எழுந்தன. அவ்வாறு சிறந்த உலோகச்சிற்பங்களைத் தயாரிப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் நாம் கண்டடைந்ததற்கு நம்முடைய கோவில் பண்பாடுதான் அடித்தளமாக இருந்தது.

படம் 2 - திருவண்ணாமலை ஆலய பஞ்சமூர்த்தி புறப்பாடு

சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தி. இந்த உருவில் சிவன், உமை, கந்தன் மூன்று கடவுளரும் உள்ளனர். சிவ ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் முக்கியமாக பிரம்மோற்சவ காலத்தில் ஐந்து மூர்த்தங்கள் (உலோகச்சிலைகள்) ஊர்வலத்திற்கு எழுந்தருளச் செய்யப்படும். அவை விநாயகர், சிவன், உமை, முருகன் மற்றும் சண்டேச நாயனார். இதில் எழுந்தருளும் சிவன் தனித்த சிவன் உருவம் இல்லை, சோமாஸ்கந்த மூர்த்தமே. தமிழகத்தில் அதிகமாக காணப்படும் இந்த சோமாஸ்கந்த வடிவம் ஓவியம், கற்சிலை, வார்ப்புச்சிலை என்ற மூன்று வகைகளாகவும் நமக்குக் கிடைக்கிறது. 

படம் 3 - தர்மராஜ ரதம், பஞ்சபாண்டவர் ரத சிற்பத்தொகுதி, மஹாபலிபுரம்

மகாபலிபுரம் பஞ்சபாண்டவர் ரத தொகுதியில் முதலாவதாக அமைந்த தர்மராஜ ரதத்தில் சோமாஸ்கந்தர் வடிவம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. சிவனின் பல வடிவங்களை வெளிப்புறத்தே கொண்டுள்ள இந்த ஒற்றைக்கல் ஆலயத்தின் கோபுரத்தின் இரண்டாவது அடுக்கில்தான் அந்த சோமாஸ்கந்த வடிவம் உள்ளது, இதை வெளியிலிருந்து காண முடியாது. பல்லவ கலைப்பாணியான இந்த சோமாஸ்கந்த வடிவே தமிழகத்தில் இந்த வகை சிற்பங்களுக்கு மூத்ததாக இருக்கலாம். 

அடலிற் கொதிக்கும் படையாழி
யண்ணன் முதலோ ரேத்தெடுப்பத்
தடவுச் சீயப் பிடர்த் தலையிற்
கவினு மணிப்பூந் தவிசும்பர்க்
கடவுட் பிராட்டி யுடங்கிருப்பக்
கதிற்வேற் காளை நள்ளிருப்ப
நடலைப் பிறவி மருந்தாக
வைகுநாதன் திருவுருவம்

   - சோமாஸ்கந்த வடிவத்தை விவரிக்கும் காஞ்சிப்புராணம்

படம் 4 - சோமாஸ்கந்தர் சிற்பம், தர்மராஜ ரதம்

தர்மராஜா ரத சோமாஸ்கந்தர் அமைப்பு இருபுறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் நிற்க, சிவன் பார்வதியுடனும், குழந்தை முருகனுடனும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். நீண்ட ஜடாமகுடத்துடன் நான்கு கரங்களுடன் உள்ள சிவன் சுகாசன மூர்த்தி வடிவத்தை ஒத்திருக்கிறார், தேவி நேர்முகமாக அல்லாமல் இறைவனை பார்த்தபடி சற்று திரும்பி அமர்ந்திருக்கிறார், இவர்கள் இருவரின் இடையில் குழந்தை முருகன் தந்தையை நோக்கியபடி அமர்ந்துள்ளார், அம்மை கரம் இளமுருகின் மீதிருக்கிறது. இறைவனின் கை அமைப்பைக்கொண்டு அவர் போதிக்கும் உருவிலும், அம்மை அவரை செவிமடுப்பதாகவும் கொள்கின்றனர், அரியும் அயனும் தம் கைமுத்திரையால் இதை விதந்தோதுகின்றனர், இருபுறமும் வானோர் பறந்தபடி வாழ்த்துகின்றனர். 

ஆகமங்களின்படி சிவபெருமானுக்கு அருவம், உருவம், அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனிகள் உண்டு. வழக்கமாக சொல்லப்படும் சிவபெருமான் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவாகவும் திகழ்கிறார் என்ற கருத்திலிருந்து இது சற்று வேறுபட்டது, அதாவது சிவனின்  சிலைவடிவங்களில் உள்ள மூன்று வகைமையை சொல்கிறது. அவ்வாறு பார்த்தால் அருவத்துக்கு லிங்க வடிவையும், உருவத்திற்கு பிச்சாடனரையும், அருவுருவத்திற்கு சதாசிவ மூர்த்தத்தையும் உதாரணமாகக் கொள்ளலாம். ஆகமங்கள் இந்த மூன்று பிரிவுகளையும் முறையே தத்துவம், மூர்த்தி, பிரபாவம் என்று குறிப்பிடும். இதனடிப்படையில் சிவ வடிவங்களை 25 மகேஸ்வர மூர்த்தங்கள் என்றும் அதிலிருந்து பெருகி 64 சிவ வடிவங்கள் என்றும் வகுத்துரைப்பார்கள்.

இந்த இருவகைமையிலும் குறிப்பிடப்படும் சோமாஸ்கந்த வடிவம் சிவ உருவங்களில் போக மூர்த்தியாக உள்ளது. சிவ வடிவங்களை யோக மூர்த்தி, போக மூர்த்தி, வீர மூர்த்தி என்று மூன்று வகையாக பிரிக்கும்போது குடும்ப சகிதமாக இருக்கும் சிவன் போகமூர்த்தி எனப்படுகிறார. இறைவனின் யோக வடிவங்கள் மன்னுயிர்க்கு ஞானம் ஏற்படவும், போக வடிவங்கள் உலகியல் இன்பங்களை அளிப்பதாகவும், வீர (வேக) வடிவங்கள் துன்பங்களை நீக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. ஐந்து குண சிவமூர்த்திகளில் சோமாஸ்கந்தர், கருணா மூர்த்தி எனக்கொள்ளப்படுகிறார்.

சோமாஸ்கந்த தொகுதியின் தேவிக்கு புத்ர சௌபாக்ய பிரதாயினி என்ற பெயரும் உள்ளது. இல்வாழ்க்கை, குழந்தைப்பேறு முதலிய விழுமியங்களை சுட்டும் வடிவமாக விளங்குவதால் பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கடவுளாக சோமாஸ்கந்தர் பிரசித்தி பெற்றிருக்கலாம். சோமாஸ்கந்த மூர்த்தம் நிலைபெற உள்ளர்த்தமாக அது சச்சிதானந்த தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருப்பதும் ஒரு காரணம். சத்-சித்-ஆனந்தம் என்ற மூன்று கூறுகளில் சோமாஸ்கந்த வடிவில் சிவன் ‘சத்’தாகவும், உமை ‘சித்’தாகவும், கந்தன் ஆனந்தமாகவும் விளங்குகிறார்கள்.

மூன்று சக்தி தத்துவத்தில், இச்சா சக்தி ஈசனாகவும், கிரியா சக்தி உமையன்னை எனவும், இவற்றால் உருவாகும் ஞான சக்தி முருகன் வடிவாகவும் கொள்ளப்படுகிறது. மற்றுமோர் திசையில் முருகன் மன்னுயிர்களின் வடிவாகவும் சிவன் பார்வதி உலகத்தின் தாய் தந்தையராகவும் உருவகப் படுத்தப்படுகின்றனர். 

படம் 5 - சோமாஸ்கந்தர் சிற்பம் - ராஜசிம்மன் பாணி,
கடற்கரைக்கோவில், மஹாபலிபுரம்

இரண்டாம் நரசிம்மனான இராஜசிம்மனின் பெருவிருப்பத்திற்குரிய வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. இந்த பல்லவமன்னன் கட்டிய கோவில்களின் கருவறை எல்லாவற்றிலும் சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவியிருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவில், மகாபலிபுரம் கடற்கரைக்கோவில் ஆகிய இடங்களில் மூல மூர்த்தமாக சோமாஸ்கந்த வடிவமே உள்ளது. 

கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட காஞ்சிபுரத்தின் பல கோவில்களில் இது பின்பற்றப்பட்டாலும் அங்கெல்லாம் சோமாஸ்கந்தருக்கு முன்பாக சிவலிங்கமும் நிறுவப்பட்டுள்ளது. இராஜசிம்மனின் மிக நீண்ட கிரந்த கல்வெட்டு காணப்படும் சாளுவன்குப்பம், அதிரண சண்டேஸ்வர குடைவரைக்கோவிலில் மூலவர் மட்டுமில்லாது பல சோமாஸ்கந்தர்கள் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளனர். “அதிரண சண்டனால் உருவாக்கப்பட்ட இந்தக்கோவிலில், பார்வதி, குகன் இவர்களோடு கணங்களால் சூழப்பட்ட பசுபதி எப்போதும் வசிப்பதில் மகிழ்ச்சி கொள்ளட்டும்” என்கிறது இராஜசிம்மனின் கல்வெட்டு வரிகளில் ஐந்தாவது பகுதி.

படம் 6 - பிச்சாடனர் கோட்டம், கைலாசநாதர் ஆலயம்

படம் 6.1 - பிச்சாடனர் கோட்ட முகப்பில் சோமாஸ்கந்தர்

மகாபலிபுரத்தில் பழைய கலங்கரை விளக்கமாக கருதப்படும் மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தின் மேலுள்ள ஒலக்கனீஸ்வரர் ஆலயத்தின் மையத்திலும் சோமாஸ்கந்தர் வடிவமே செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லை முகுந்த நாயனார் கோவில், காஞ்சி மதங்கீஸ்வரர் கோவில் போன்ற பல்லவர் கட்டிய பெரும்பாலான கோவில்களில் சோமாஸ்கந்தர் வடிவம் ஆலயத்தின் மூலவராக பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. பாண்டியர் குடைவரைகளில் திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே சோமாஸ்கந்த வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. 

பல்லவர் காலத்தில் துவங்கிய இந்த சிற்ப வடிவம் வடதமிழகத்தின் பல இடங்களில் ஆலய வளாகங்களிலும், வயல்வெளிகளிலும் பலகைக்கல் சிற்பமாக காணக்கிடைக்கிறது. சில சிற்பங்கள் முற்றிலும் பல்லவ பாணியை விடுத்து நாட்டார் சாயலில் வடிக்கப்பட்டிருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிடைத்த சிலை ஒன்றில் அம்மையப்பனுக்கு நடுவே இளமுருகன் குதிரை மேல் அமர்ந்திருக்கிறார். 

படம் 7 - சோமாஸ்கந்தர் பலகைக்கல் சிற்பம், தச்சூர்

இந்தியா முழுவதும் சிவவடிவங்கள் வழிபாட்டில் உண்டு. பெரும் சிவாலயங்களில் லிங்க மூர்த்தியே மையக்கருவறையில் உள்ளது. நடராஜர், கஜசம்ஹாரர், கல்யாண சுந்தரர் போன்ற சிவ வடிவங்களை வடஇந்தியாவின் எல்லோரா போன்ற தொன்மையான இடங்களில் காணமுடியும். இந்த பாணி குடைவறைகளில் சிவனும் பார்வதியும் பிரதான கடவுள்களாக உமா மஹேஸ்வர வடிவில் விளங்க ஏனைய தேவர்கள் மற்றும் பூதகணங்கள் அளவில் சிறியவர்களாக சூழ்ந்திருக்கிறார்கள், குழந்தை முருகன் அந்தச்சிற்பங்களில் இல்லை. பாண்டியர் கலைப்பணியில் கழுகுமலை வெட்டுவான் கோவில் உமா மகேஸ்வரரும் இவ்வாறே விளங்குகிறார். 

வட இந்தியாவில் மிகப்பெரிய சிற்ப தொகுதியாக உள்ள இதில் வெகு சில இடங்களில் முருகன் கடவுளர் குழாமில் ஒருவனாக மட்டும் இருக்கிறான். தம்பதியினராக சிவனும் உமையும் இணைந்தும், ஊடியும், காதல் கொண்டும் இருக்கும் அழகிய சிற்பங்கள் முதன்மையானவை. பின்னர் இந்த வடிவத்தில் சாக்த தாய்த்தெய்வங்களின் பிரதிநிதித்துவப்படுத்தலாக பார்வதி குழந்தை முருகனுடன் வடிக்கப்படுகிறாள். இதில் பிரேம பாவம் குறைகிறது, பெற்றோர் என்னும் சகஜ பாவம் மிகுந்திருக்கிறது. 

படம் 8 - உமா மஹேஸ்வரர், சென்னை அருங்காட்சியகம்
படம் 9 - வெட்டுவான் கோவில், கழுகுமலை

சோமாஸ்கந்த வடிவம் எல்லோராவின் ஒரு குகையில் மட்டும் சிறு சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கண்டடைந்திருக்கின்றார்கள். இதில் சிவன் ரிஷபத்தின் மீது சாய்ந்தவாறு இருக்க, அருகில் பார்வதி முருகனை கையில் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். முருகக் குழந்தை சிவன் பார்வதி இருவருக்கும் நடுவில் இல்லை, பார்வதியின் அப்புறம் இருக்கிறான். தமிழகத்தை தவிர இந்தியாவிலும், நேபாளத்திலும் அரிதாக கிடைக்கும் சிவ குடும்ப சிற்பங்கள் இது போலவே இருக்கின்றன. எனினும் இவை பல்லவர் காலத்திற்கு முன்பு மைய வழிபாட்டில் இல்லை. பல்லவ சோமாஸ்கந்த வடிவை தவிர ஏனைய சிற்பங்கள் சிவகுடும்ப சிற்பமாக பாவிக்கப்படுகின்றன. அரிதாக விநாயகரும் இதில் இடம்பெறுகிறார். அம்மையப்பருக்கு நடுவில் முருகன் இருக்கும் வடிவமே சோமாஸ்கந்த இலக்கணத்துக்குட்பட்ட வடிவாகவும் தத்துவார்த்தமான விளக்கங்களுக்கு எதுவாகவும் அமைகிறது. 

***********************

படம் 10.1 காஞ்சி கைலாசநாதர் ஆலய சோமாஸ்கந்த ஓவியங்களுள் ஒன்று

படம் 10.2  சோமாஸ்கந்த ஓவியத்தின் முருகன் 

காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் சுற்றாலயங்களில் அனேகமாக அனைத்திலும் ஓவியமாக சோமாஸ்கந்த மூர்த்தி (படங்கள் 10.1, 10.2, 10.3) வரையப்பட்டுள்ளார். இதுவும் பல்லவர் கலைப்பாணி. நாம் காணும் இந்த சுவர் ஓவியங்கள் பெரும்பாலும் சிதைந்துவிட்டன. சற்றேனும் தெளிவாகத் தெரியும் ஒரேயொரு சுவரோவியத்தில் உமையின் உருவொடு அவள் மடியில் அமர்ந்திருக்கும் முருகனையும் காணமுடிகிறது. பிள்ளைக் கந்தனது ஒரு கரம் பூ ஏந்தும் பாணியில் எழிலாக வரையப்பட்டுள்ளது. சிவந்த நிறமுடைய முருகன் கரண்ட மகுடம் அணிந்து, மார்பில் சன்னவீரம் என்னும் வீரர் அணியை தரித்தபடி அன்னை மடியில் அமர்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றம் ஆலயத்தில் ஓவியங்கள் இருந்ததாக சங்க இலக்கியச் சான்று உள்ளது. ஆனால் காஞ்சி கைலாசநாதர் ஆலய ஓவியங்களே நாம் காணக்கூடிய தொன்மையான ஆலய ஓவியங்கள். கந்தபுராணப்பாடல் ஒன்று, கந்தன்  உமைக்கும் ஈசனுக்கும் நடுவே அமர்ந்திருப்பதை, ஒருபுறம் இரவும் மறுபுறம் பகலும் இருக்க நடுவே இருக்கும் அந்தியின் செக்கர் வானம் போல இருப்பதாக உவமிக்கிறது. 

படங்கள் 10.3, 11 
படம் 10.3-ல் உள்ள முருகன் சித்திரம்

இந்த அனைத்து சோமாஸ்கந்தர் வடிவங்களிலும் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக முருகன் தனது தாயான பார்வதியின் மடியில் அல்லது அவளை ஒட்டியபடியே அமர்ந்திருக்கிறான், பார்வதியின் ஒரு கரம் அவனை தொட்டுக்கொண்டிருக்கிறது (விதிவிலக்காக திருமழபாடியில் சோமாஸ்கந்த சிவன் மடியில் இளமுருகன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது.) 

படங்கள் 12, 13, 14, 15 - ஸ்கந்தமாதா வடிவில் இருந்து
சோமாஸ்கந்த மூர்த்தியாக மாறுதல் அடைதல்

இந்து மரபில் ஒன்பது துர்க்கைகளுள் ஸ்கந்தமாதா என்பதும் ஒரு வடிவம். மடியில் கந்தனை அமர்த்தியிருக்கும் தேவி இவள். வீரனான கந்தன் தனது தாயுடன் குழந்தையாக அமர்ந்திருக்கும் தொல்படிமம் இந்தியாவெங்கும் இருந்திருக்கக்கூடும். அதை பல்லவர்கள் மேம்படுத்தி சைவத்துடன் பிணைத்து சோமாஸ்கந்த வடிவாக ஆக்கியிருக்கலாம். பல்லவர்களுக்குப் பின்னர் தமிழகம் தாண்டியும் நுளம்பர் கலைப்படைப்புகளில் சோமாஸ்கந்த மூர்த்தியை அதே வடிவில் காண முடிகிறது. 

உலகுக்கே பெற்றோரான நீங்கள் ஒரு குழந்தையை மட்டும் மடியிலமர்த்தி முத்தாடி, உச்சி முகர்ந்தால் அது ஒருதலைப்பட்சமாகாதா? நாங்களும் உலகன்னையின் குழந்தைகள்தானே.. என்று குமரகுருபரர் சோமாஸ்கந்த வடிவைக் கண்டு ஏக்கத்தோடு , மதுரைக்கலம்பகத்தில் பாடுகிறார். 

வள்ளை வாய் கிழித்துக் குமிழ் மறித்தமர்ந்த
மதாரிக் கண்ணியும் நீயும்
மழலை நாறமுதக் குமுத வாய்க் குழவி
மடித்தலத்து இருத்தி, முத்தாடி,
உள்ள நெக்குருக, உவந்து மோந்தணைத்து
ஆங்கு உகந்து நீர் இருத்திரால் உலகம்
ஒருங்கு வாய்த்திருக்கு ஒருதலைக் காமம்
உற்றவா என்கொலோ? உரையாய்

படம் 16 - திருமழபாடி சோமாஸ்கந்தர்
படம் 17 - நுளம்பர் தூணொன்றில் சோமாஸ்கந்தர் 

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஒரு தேவாரப்பாடல்பெற்ற தலம், மூவரும் பாடியிருக்கும் காவிரி வடகரைத்தலம். இத்தலத்தில் அப்பர் பெருமானுக்கு இறைவன் பொதிசோறு அளித்த கதை பிரபலம், இங்கு மட்டுமே தலமரமாக உள்ள கல்வாழை மரத்தின் பெயரால் தலம், பைஞ்ஞீலி என்று அழைக்கப்படுகிறது, ஞீலி எனில் வாழை. கோவில் வளாகத்தில் உள்ள குடைவரையொன்றில் சோமாஸ்கந்த மூர்த்தி புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார். இச்சன்னதி தரைத்தளத்திற்கு கீழேயுள்ளதால் குடைவரை என உணருதல் கடினம். சோமாஸ்கந்த சிவனின் காலடியில் உள்ள முயலகனை யமன் என்று மாற்றிச் சொல்கின்றனர். அதை அடிப்படையாக வைத்து, திருக்கடையூரில் இறந்த யமனுக்கு இங்கு உயிரளித்து பதவியையும் மீள கொடுத்ததாக கதைகள் வழங்கி வருகின்றன. நீளாயுள், இழந்த பதவி பெற பரிகார பூஜைகள் என்று 'அதிகார வல்லபர்’ சிலையைச்சுற்றி பல சடங்குகள் பெருகிவிட்டன. 

படம் 18.1 -"அதிகார வல்லபரான" திருப்பைஞ்ஞீலி சோமாஸ்கந்தர்
படம் 18.2 - திருப்பைஞ்ஞீலி ஓவியம்

மகாபலிபுரம் பகுதி தவிர்த்த குடைவரைகளில் திருப்பரங்குன்றமும் திருப்பைஞ்ஞீலியும் மட்டுமே சோமாஸ்கந்த மூர்த்தங்களை கொண்டுள்ளன. பைஞ்ஞீலி குடைவரை பல்லவர் குடைவரை என்றும், முத்தரையர் குடைவரை என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடம் உள்ளது. தி இராசமாணிக்கம், கலைக்கோவன் ஆகியோர் தங்கள் ஆய்வு நூல்களில் இந்த குடைவரையை பதிவு செய்திருக்கின்றனர். தச்சூர் பாணியில் இத்தொகுதியில் ஈசனும் உமையும் இடவலம் மாறி அமர்ந்துள்ளனர். பைஞ்ஞீலி சோமாஸ்கந்த சிவன் கரங்களில் அக்ஷ மாலையும், மானும் ஏந்தியிருக்கிறார், தெளிவான படங்கள் இல்லை எனினும் ஒன்றை உறுதியாக கூறலாம், பைஞ்ஞீலியில் குழந்தை முருகன் உட்காராமல் எழுந்து நிற்கிறான். 

பைஞ்ஞீலி சோமாஸ்கந்த முருகன், செப்புச்சிலை சோமாஸ்கந்த முருகன் ஒப்பீடு

***********************

முருகனின் அடியவர் அருணகிரிநாதர் சந்தங்கள் நிறைந்த இசைப்பாடல்கள் எழுதியவர், தமிழிசையின் புதிய சாத்தியங்களை பக்தியின் வழி கண்டடைந்தவர். சைவம் வைணவமென்ற பேதங்களை தனது பாடல்களின் வழி களைந்து ஒன்றாக்கியவர். அருணகிரிநாதர் கதையின் படி, முருகனின் நடனக்காட்சியை அவர் திருச்செந்தூரில் கண்டார். இதை முருகனின் காலழகை பாடி "தண்டையணி வெண்டையம்" என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழின் "கொண்ட நடனம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளுங் கந்தவேளே" என்ற வரிகளின் மூலம் முருகனின் ஆடலை குறிப்பிடுகிறார்.

படம் 19 - அருணகிரிநாதர்

அவர் கதையிலே சுவையான இன்னொன்று, சம்பந்தாண்டான் என்னும் காளி பக்தன் முருகனை அனைவர் முன்னாலும் வரவழைக்க முடியுமா என அருணகிரியாரிடம் சவால் விடுகிறான், அவரும் ஏற்கிறார். சம்பந்தாண்டானோ தேவியிடம் நீ உனது மகனை பிடித்து வைத்துக்கொள் விட்டுவிடாதே என்று சொல்லிவிடுகிறான். 

படம் 20 - துள்ளியோடும் முருகனை, கைப்பிடித்து நிறுத்தும் உமை, 
சோமாஸ்கந்தர் - திருவீழிமிழலை 

அடுத்த நாள் அருணகிரியார் வேண்டுகிறார், முருகன் வரவில்லை அருணகிரி நடந்ததை அறிந்து "அதல சேதனாராட அபிந காளி தானாட" என்ற திருப்புகழை பாடுகிறார். முருகன் அவனது அம்மையிடம் நடனம் ஆடிக்காட்டுகிறான், குழந்தையின் அழகிய நடனத்தில் தன்னை மறந்துவிடுகிறாள் காளி. அந்த நேரத்தில், அருணகிரியார் "மயிலுமாடி நீயாடி வரவேணும்" என்று பாட முருகன் திருவருணை கோவிலில் உள்ள மண்டபத்துத் தூணில் மயிலின் மீதே தோன்றுகிறார். பிரபுடதேவ மகாராஜா உள்ளிட்டவர் அனைவரும் இதைப் பார்க்கிறார்கள். முருகன் தூணில் தோன்றியதாக சொல்லப்படும் கம்பத்திளையனார் சந்நிதி திருவருணை ஆலயத்தில் ராஜ கோபுரத்தை கடந்ததும் உள்ளது. இந்த ஆலயத்தில் மேலும் பல இளையனார் சன்னதிகள் உண்டு, முருகனுக்கு திருவண்ணாமலை ஆலயத்தில் இளையனார் என்று பெயர். சம்பந்தாண்டான் முன் காளியை தோன்றவிடாமல் தேவியை சிந்தை மயக்கும்படி இளையனார் நடனமாடியதாகவும் இதே கதை சிறிய வேறுபாட்டோடு சொல்லப்படுகிறது 

                                       படம் 21 - அருணகிரிநாதர் படக்கதை

 அதல சேட னாராட அகில மேரு மீதாட
 அபின காளி தானாட...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
 அருகு பூத வேதாள...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
 மருவு வானு ளோராட...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
 மயிலு மாடி நீயாடி...... வரவேணும்

படம் 22
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
 கருத லார்கள் மாசேனை...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீத
 கனக வேத கோடூதி...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
 உவண மூர்தி மாமாயன்...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
 னுளமு மாட வாழ்தேவர்...... பெருமாளே

உலகின் அடிமுதல் முடிவரை ஆட, காளியுடன் சிவன் ஆட, அருகில் பூத வேதாளங்கள் ஆட, வாணியும் பிரமனும் ஆட, தேவர்களும் மதியும் ஆட, அதனுடன் பிறந்த லட்சுமியும் ஆட திருமால் ஆட, இவர்கள் யாவரோடும் நீ ஊரும் மயிலும் ஆடி நீ ஆடி என்முன்னே வரவேண்டும். வீமனுக்கும், விஜயனுக்கு அருள்செய்ய சங்கம் முழக்கியவனும், கன்றுகாலிகள் கதறலை தணிக்க குழலூதியவனுமாகிய திருமால், பாற்கடலில் துயிலவும், தன் அடியால் விண்ணை மூடவும், கருட வாகனனுமாகிய அந்தப்பெருமாளின் மருமகனாகிய நீ பிரபுட தேவ மகாராஜன் மனமும் மகிழ்ச்சியில் ஆட, முன்னே தோன்றவேண்டும். 

***********************

சோமாஸ்கந்த வடிவம் போலவே அம்மையப்பனோடு முருகன் குழந்தையாக காணப்படும் இன்னொரு சிலை வடிவம் கஜசம்ஹார மூர்த்தி. ஆரம்ப காலத்தில் இந்த உருவங்களிலும் சிவனும் உமையும் மட்டுமே உள்ளனர், எல்லோரா குகைச்சிற்பத்தில் இவ்வாறாகவே உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில் சிற்பங்களில் சிவன் தனித்தும் கரியுரித்த கோலத்தில் உள்ளார்.  யானையைப் பிளந்து வெளியே வரும் சிவனைக்கண்டு பார்வதி அஞ்சியதாக தேவார காலகட்டத்தில் பாடல் பாடப்பட்டது, 

"விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே”

இதையே காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலும், இறவாதேஸ்வரர் ஆலயத்திலும் காணலாம். இந்தக்காலகட்டத்தில் உமை மட்டுமே அஞ்சி விலகுகிறாள், உடன் முருகன் இல்லை. பிற்காலத்தில் இதே உருவத்தை செதுக்கும்போது இன்னும் நயம்சேர்க்கும் விதமாக, யானையை உரித்த பிரானை கண்டு குழந்தை முருகன் பயப்படுவான் என்று பார்வதி அவனை இடையில் தூக்கிக்கொண்டு விலகி நிற்பதுபோல வடிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை முருகன் தந்தையை கண்டு உற்சாகமாகவே துள்ளுகிறான்.

அழகிய கற்சிற்பமாக இதை இரண்டாம் ராஜராஜசோழனின் காலத்தில் தாராசுரம் கோவிலில் வடித்திருக்கிறார்கள். சிலை தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது, அதுவே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் உலோக வார்ப்புச் சிற்பமாகவும் இருக்கிறது. இன்னொமொரு அழகிய உதாரணமாக புள்ளமங்கை கஜசம்ஹாரர் குறுஞ்சிற்பத்தை சொல்லலாம். 

படம் 23 - கஜசம்ஹாரர், காஞ்சி இறவாஸ்தானம்
படம் 24 - கஜசம்ஹார வடிவங்களில் உமையும் முருகனும், தஞ்சை அருங்காட்சியகம்

படம் 25 - கஜசம்ஹாரர், புள்ளமங்கை

***********************

ஆதியில் கற்களை சார்ந்து வளர்ந்த மனித நாகரிகம் உலோகங்களை பயன்படுத்தத் துவங்கியது 4500 ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார்கள். மனித குலத்துக்கு உலோகங்களுடனான அறிமுகத்தை வைத்தே செம்பு மற்றும் வெண்கல காலம் இவற்றிற்கு அடுத்து இரும்புக் காலம் என்று வகைப்படுத்துகிறார்கள். நமது தொல்காவியமான மகாபாரதத்தின் வயதையே அதில் பயன்படுத்தப்பட்ட இரும்பை அடிப்படையாக கொண்டுதான் நிர்ணயித்திருக்கிறோம். 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரும்பு மற்றும் இரும்பற்ற உலோகப்பொருள்கள் (Ferrous & Non-Ferrous) நமக்கு கிடைக்கின்றன. இவற்றுடன் உலோகத்தாலான பெண் சிலை ஒன்று கிடைத்துள்ளது. தமிழக அகழாய்வுகளை பொறுத்தமட்டில் அது ஒரு துவக்கம். பின்னர் கொடுமணல் அகழாய்வில் இரும்பை உருக்கும் பட்டறைகள் கண்டறியப்பட்டன. இரும்பு ஆயுதங்கள், செம்பாலான பொருள்கள், பொன் அணிகள், நாணயங்கள் ஆகியவை அடுத்த காலகட்டத்தின் சான்று. இவ்வாறாகத்தான் நமது உலோக வார்ப்பு வரலாறு துவங்குகிறது. பல்லவர் காலத்தின் கடைசிக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கடவுளர்களின் உலோகச்சிலைகளை காணமுடிந்தாலும், சோழர் காலமே உலோகச்சிலைகளின் பொற்காலம் என்கிறோம். 

பல்லவர் காலத்தில் சோமாஸ்கந்த வடிவத்தில் அமர்ந்தேயிருந்த குழந்தை முருகன், சோழர் கால உலோக வார்ப்புச்சிலைகளில் அமர்ந்த கோலத்திலும், நின்ற கோலத்திலும், கூத்தாடும் கோலத்திலுமாக வடிக்கப்பட்டார். காஸ்யப சில்ப சாஸ்திரம் மாகேஸ்வர மூர்த்தங்களில் ஒன்றாகிய சோமாஸ்கந்த வடிவத்தை கூறுகையில் இளமுருகனை இவ்வாறு மூன்று வகையிலும் வடிக்கலாம் என்கிறது.

படம் 26 - திருமுல்லை வாயில் 

உலோகச்சிலைகள் காலத்தில் முருகன் எழுந்து நிற்கத் துவங்கிய பிறகு, செதுக்கப்பட்ட கற்சிலைகளிலும் அவன் அன்னை மடியில் அமர்ந்திருக்கவில்லை. சிதம்பரம் கோபுரத்திலுள்ள கல் சிற்பங்களில் உலோகச்சிற்பங்களைப் போலவே கந்தன் நின்றாடிய நிலையில் இருக்கிறான். சிவாலயங்களில் உள்ள சூரிய சந்திர வடிவங்களைப்போல சம நிலையில் கால்களை ஊன்றி நிற்காது, இரு கால்களையும் சற்று வளைத்து குழந்தை துள்ளிக்குதிக்கும் பாவனையில் இருக்கிறான். பிற்காலத்தில் செய்யப்பட்ட மதுரை, திருவானைக்கா கோவில் மண்டபங்களில் உள்ள கற்சிற்ப வடிவிலும் இதுவே தொடர்கிறது. அக்காலத்தின் சிற்பிகள் பல்லவ பாணியை விடுத்து, பின்னர் எழுந்த வார்ப்புச்சிலை வடிவத்தையே முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்கள். 

படம் 27 -  சிதம்பரம் கோபுரத்திலுள்ள சோமாஸ்கந்தர் சிலை

கந்தபுராணத்தில் துறுதுறுப்பான குழந்தை முருகனின் விளையாடல்களை, திருவிளையாட்டுப்படலம் என்ற படலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் பாடுகிறார். 

சிறுகுழந்தையாக அரை ஞாண் மணிகள் குலுங்க சதங்கை ஒலியெழுப்ப கந்தன் ஆடுகிறான்.

"தட்டை ஞெகிழ அம் கழல் சதங்கைகள் சிலம்பக்
கட்டழகு மேய அரை ஞாண் மணி கறங்க
வட்ட மணி குண்டல மதாணி நுதல் வீர
பட்டிகைமி னக் குமரன் ஆடல் பயில் கின்றான்."

(முருகன் மலைகளை அமிழ்த்தி நதிகளை மறிக்கிறான், அண்டங்களை எல்லாம் விளையாட்டுப் பொருளாக்குகிறான். எங்கும் உலாவுகிறான் சுனைகளில், சோலைகளில், மலைகளில், ஆறு கடல்களில், அதுபோல தேரும் பரியும் கரியும் ஊர்கிறான், பாடுகிறான், இசைக்கருவிகள் முழக்குகிறான், களிநடனம் புரிகிறான்.) 

"பாடின் படு மணி ஆர்த்திடும் பணை மென் குழல் இசைக்கும்
கோடு அங்கு ஒலி புரிவித்திடும் குரல் வீணைகள் பயிலும்
ஈடு ஒன்றிய சிறு பல்லியம் எறியும் எவர் எவரும்
நாடும் படி பாடும் களி நடனம் செயும் முருகன்"‘குழந்தையின் நடனம்’ - இதை எவ்வாறு நாம் புரிந்துகொள்வது. முறையாக நடன அசைவுகளை கற்றுக்கொண்டு ஆட ஐந்து வயதாவது ஆகவேண்டும். ஆனால் பிறந்த குழந்தை கைகால்களை அசைத்து ஆடுகிறது, பின் குப்புற விழமுயற்சிக்கும்போது வேறுபட்ட ஆடல், வேகவேகமாக தவழ்ந்து வருகையில் ஒரு நடனம், கால்பரப்பி உட்கார்ந்து கைகளை கொட்டி ஆடும் துள்ளல், கால்பயிலாத தளர்நடையிடும் பருவத்தின் ஆடல், தன்னை தூக்கச்சொல்லி கைகளை உயர்த்தியும், ஏதேனும் வேண்டுமென்றால் கால்களை நிலத்தில் உதைத்தும் என குழந்தையின் இயல்பான அசைவுகள் எல்லாம் புதிய ஒன்றை கண்டுகொள்ளும் மகிழ்ச்சியால், தனது ஆற்றலை வெளிப்படுத்தும் ஆவலால் நடனமாகிறது, உயிரினங்கள் யாவிலும் குழந்தைப் பருவத்தின் உற்சாகமான அசைவுகள் நடனமாகத்தான் வெளிப்படுகிறது.

 
படம் 28

தமிழின் 96 சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ் முதன்மையானது. திவ்வியப்பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடித்துவங்கிய பிள்ளைத்தமிழ் மரபு பின்னாளில் சிற்றிலக்கிய வடிவில் மேலும் மலர்ந்தது. பிள்ளைத்தமிழ் குழந்தைகளின் வளர்ச்சியை பாடுவது. காப்புப்பருவம் துவங்கி குழந்தை அசைந்தாடுவது, கை தட்டுவது, அம்மைக்கு முத்தம் தருவது, தவழ்ந்து வருவது என படிப்படியாக குழந்தையின் வளர்ச்சியை பாடும் முறை. பிள்ளைத்தமிழ் இலக்கணப்படி ஆண்பால், பெண்பால் குழந்தைகளுக்கான பத்துப்பருவங்களில் இறுதி மூன்றும் பால்வேற்றுமையை சுட்டிம்படி மாறி வரும். 

ஆண்பால் கடவுளர்களில் முருகனின் பேரில் தான் புலவர்கள் அதிகம் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறார்கள், அவன்தானே என்றும் இளையவன், சேயோன். சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனப்பல பிள்ளைத்தமிழ்கள் குமரனுக்கு. வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலத்தின் முருகன் மீது குமரகுருபரர் பாடிய முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டை இங்கே பார்க்கலாம்.

படம் 29

தவழத்துவங்காத குழந்தை இருந்த இடத்திலேயே கால் கட்டை விரலை பற்ற முயற்சிக்கும், வாயிலிட்டு சுவைக்கும். அதற்காக காலை உயர்த்தவும் தலையை தூக்கவும் செய்யும், கீரைக்கன்று காற்றில் ஆடுவதுபோல கை கால்களை உயர்த்தி ஆடும் இந்நிலையை செங்கீரை என்பார்கள். செங்கீரைப்பருவம், பிள்ளைத்தமிழில் காப்புப்பருவம் கடந்து வரும் இரண்டாவது பருவம். குழந்தை முருகன் செங்கீரைப்பருவத்தில் கைகால்களை அசைத்து ஆடுகிறான். 

செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
பைம்பொ னநசும்பிய தொந்தியொ டுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
அம்பவ ழத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை

திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்
செங்கண்வி டைக்கொடி யோனருள் கன்றே யொன்றேயாய்
எங்களு ளத்தமு தூறுக ரும்பே யன்பாளர்க்
கின்பம ளிக்குமெய்ஞ் ஞானம ருந்தே யெந்தாயின்
கொங்கலர் மைக்குழல் வாழ்பொறி வண்டே வண்டூதும்
கொந்தள கக்குற மான்வளர் குன்றே யென்றோதும்
கங்கைம கட்கொரு கான்முளை செங்கோ செங்கீரை
கந்தபு ரிக்கரு ணாநிதி செங்கோ செங்கீரை

படம் 30 - அமர்ந்தாடும் சோமாஸ்கந்த முருகன்

இந்தக்குழந்தை நடனங்களை ஒட்டி சோமாஸ்கந்த மூர்த்தத்தில் அமர்ந்திருக்கும் முருகனும் கூத்தாடுபவனே என்று கூறப்படுகிறது. இதனால் பின்னர் நேரடியாக நடனம் ஆடுபவனாக சோமாஸ்கந்த உலோகச்சிலைகளில் முருகன் வடிக்கப்படுகிறான். ஆகமங்கள் அதையே இலக்கியத்திற்குப் பிறகு இலக்கணமாக வகுத்துரைக்கின்றன.

படம் 31 - வலக்கையில் சூசி முத்திரையுடன் இடக்கையில் பழம் கொண்டு ஆடும் இளமுருகன்

ரௌரவ ஆகமம், காரணாகமம், காமிகாகமம், காஸ்யப சில்ப சாஸ்திரம் இவை யாவும் சோமாஸ்கந்த சிலை வடிவின் மதலைக் குமரனின் அணிகள், கை முத்திரைகள், சிலையின் அளவு முதலியவற்றை சொல்கின்றன. தலையணி கரண்ட மகுடம், வீரச்சங்கிலியான சன்னவீரம் ஆகிய அணிகளோடு குழந்தைக்கான இடையணி சதங்கை உள்ளிட்ட அணிகள் பூண்டிருப்பார். தலையில் மாலை சூடியிருப்பார், ஆடைகள் இருக்காது. குழந்தை முருகனுக்கு இரு கரங்கள் மட்டுமே காட்டப்படும். இரு கைகளில் மலர் வைத்திருப்பார், சமயங்களில் ஒரு கையில் மட்டும் மலர் இருக்கையில் மறுகரம் புத்தகமோ, பழமோ கொண்டிருக்கும், அருள்வழங்கும் வரத முத்திரையோடும், ஒரு விரல் கொண்டு சுட்டிக்காட்டும் சூசி முத்திரையோடும் இருக்கும். சில சமயம் ஒரு கை தொங்கும் கையாக (தோள ஹஸ்தமாக) இருக்கும். பார்வதியின் வடிவில் எட்டில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒருபங்கு கந்தன் அமைக்கப்படவேண்டும் என்பது அளவை விதி. 

படம் 32 - எழிலார்ந்த சிவபுரம் சோமாஸ்கந்தர்

பல்லவர்களிலிருந்து சோழர்களுக்கு மாறும் காலமாக பூம்புகார் அருகேயுள்ள பல்லவனீஸ்வரம் கோவிலில் சோமாஸ்கந்த உலோகச் சிலைகளை பார்க்கிறோம். இதில் முருகன் பல்லவர் சிற்பங்களை பெரிதும் ஒத்திருக்கிறான், குழந்தையாக தலையை உயர்த்தியபடி அன்னையோடு ஒரே பீடத்தில் இயல்பாக அமர்ந்திருக்கிறான். காலம் அறியக்கூடிய சோமாஸ்கந்த உலோகச் சிலைகளில் திருத்துறைப்பூண்டி சோமாஸ்கந்த மூர்த்தம் முற்பட்டதாக விளங்குகிறது, காலம் கிபி 950. இதில் குமரன் இருகால்களையும் மடித்து  அமர்ந்திருக்கிறான். இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது, பின்னதில் கலை ஒழுங்கு முதலிடத்தில் நிற்கிறது, இயல்பான குழந்தை அசைவுகளை காண முடிவதில்லை. துவக்ககால உலோகச்சிலைகளில் முன்பிருந்த கற்சிலை மரபின் தொடர்ச்சியாகவும் முருகன் அமர்ந்திருந்தபடி வார்க்கப்பட்டதை, உலோக சிற்ப மரபின் விதிகளுக்கு உட்பட்டு முருகனின் வடிவம் செம்மையாக்கம் பெற்றதை இவற்றின் மூலம் உறுதி செய்துகொள்ளலாம். குமரன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த வடிவ வரிசையில் குற்றாலம் குறும்பலாநாதர் சோமாஸ்கந்த வடிவம் தனித்த அழகுடையது. அதில் குமரன் மஹாராஜ லீலாசனம் போன்று அமர்ந்திருக்கிறார், தென்பாண்டி நாட்டு சாஸ்தாக்களின் பாதிப்பு குமரனின் வடிவத்தில் தெரிகிறது.

கவனிக்கவேண்டிய ஒன்று, சோமாஸ்கந்த மூர்த்தங்கள் தனித்தனியே வார்க்கப்பட்ட ஒரு பீடத்தில் இணைக்கப்படும்போது, பொதுவான பீடமாக இருக்கையில் மூவரும் தனித்தனியே வார்க்கப்பட்டு பீடத்தில் இருத்தப்படுகின்றனர், சில சிலைகளில் இரு பீடங்கள் மட்டுமே தரப்படுகையில் கந்தன் அன்னையின் பீடத்தில்தான் பொருத்தப்படுகிறான்.  

படம் 33 - உமையுடன் கந்தன், பல்லவனேஸ்வரம்

படம் 34 - இளமுருகு உடன் அம்மையப்பன், திருக்குற்றாலம்

ஆடும் கந்தனின் வடிவங்கள் சிறு சிறு வேறுபாடுள்ளவை. பெரும்பாலான சிலைகளில் இரு கரங்களிலும் மலர் கொண்டுள்ள முருகன் குதித்தெழும் பாவனையில் இருக்கிறார். சிவபுரம் கந்தனின் கோலம் மிக ஒயிலானது. ஒரு சில இடங்களில் காணப்படும் நின்ற கோல முருகனும் ஒரு பாதத்தை மட்டும் சற்று பிறழ்த்தி சதுர தாண்டவம் காட்டுகிறார் எனக்கொள்கிறார்கள். வைத்தீஸ்வரன் கோவில், தில்லையாடி முதலிய தலங்களில் இந்த வடிவை காணலாம். சோழர் காலத்திற்குப்பிறகு விஜயநகர காலத்திலும் சோமாஸ்கந்த வார்ப்புச்சிலைகள் தோன்றின, நெல்லூரில் ஒன்று உள்ளது. ஓசூரில் நடனமாடும் கந்தனுடனான சோமாஸ்கந்த மூர்த்தமும் விஜயநகர காலத்ததாக கருதப்படுகிறது. 

படம் 35 - சோமாஸ்கந்த வார்ப்புரு

அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கவனத்தை திருப்ப குழந்தை அவர்கள் நடுவே வந்து அமர்ந்து கொள்கிறான்,  அம்மை அவனது குறும்பு பொறுக்காமல் அள்ளி மடியில் வைத்துக்கொள்கிறாள், அங்கிருந்தபடியே தந்தை தோளுக்கு தாவப்பார்க்கிறான் குழந்தை, அவர்கள் தொடர்ந்து பேசுகையில் நடுவே நின்று குதித்தாடுகிறான். சோமாஸ்கந்த உருவம் தோன்றியதும் வளர்ந்ததுமான கதை நமக்கு இப்படியான சித்திரத்தைத்தான் அளிக்கின்றது. அருணகிரியார் கதையில் வருவதுபோலத்தான் பல்லவர் காலத்தில் அன்னை மடியில் அமர்ந்திருந்த குழந்தை, உலோகச்சிலைகளில் கீழேயிறங்கி குதித்தாடிக் கொண்டிருக்கிறது. 

செய்ய மேனிக் கருங்கஞ்சிச் செழுங்கஞ்
சுகத்து பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளிந்த
தெங்கே ? எனத்தேட
மையல்கொண்டு புறத்தனைய மறைந்த
அவர்தாம் மலைபயந்த
தையலோடும் சரவணத்துத் தனய
ரோடுஞ் தாம் அணைவார்

                               -  பெரியபுராணம்

படம் 36 - பல்லவனேஸ்வரம் முருகனும் அன்னையும் - ஓவியம் விஷ்ணு ராம்

- மேலும்
 
முந்தைய பகுதி - ஆடல் 1

தாமரைக்கண்ணன், புதுச்சேரி

உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் 

 • Pallava Art - Michael Lockwood
 • The Iconography of Somāskanda Mūrti - A. Vēlusamy Suthanthiran
 • Somaskanda Iconography - KP Ravichandran 
 • சிவ வடிவங்கள் - மா சிவகுருநாதப்பிள்ளை
 • சிவனருட்கோலங்கள் - புலவர் அர ஆத்திஅடியான்

 புகைப்படம் / ஓவியம்

 1. சோழர் கால சோமாஸ்கந்த வார்ப்புரு, The metropolitan museum of art, New york - www.metmuseum.org/art/collection/search/39327  
 2. திருவண்ணாமலை பஞ்சமூர்த்தி புறப்பாடு - தினத்தந்தி
 3. தர்மராஜா ரதம், மஹாபலிபுரம் - wikipedia 
 4. தர்மராஜா ரத சோமாஸ்கந்தர் - Pallava Art, Michael Lockwood 
 5. சோமாஸ்கந்தர், மாமல்லை கடற்கரைக்கோவில் - wikipedia 
 6. சோமாஸ்கந்தர், கைலாசநாதர் ஆலயம் - இணையம் 
 7. சோமாஸ்கந்தர், தச்சூர் - இணையம் 
 8. உமா மகேஸ்வரர், சென்னை அருங்காட்சியகம் - இணையம் 
 9. உமா மகேஸ்வரர், கழுகுமலை - இணையம் 
 10. சோமாஸ்கந்தர் ஓவியங்கள், கைலாசநாதர் ஆலயம் - அனங்கன்
 11. சோமாஸ்கந்தர், டெல்லி அருங்காட்சியகம் - indianculture.gov.in/artefacts-museums/somaskanda
 12. ஸ்கந்தமாதா துர்கா - etsy.com/in-en/listing/1105609580
 13. பலகைக்கல் சோமாஸ்கந்தர் சிற்பம் - இணையம்
 14. காஞ்சிபுரத்தில் வழிபாட்டில் உள்ள சோமாஸ்கந்த மூலவர் - இணையம்
 15. காளஹஸ்தி சோமாஸ்கந்தரில் உள்ள முருகன் - இணையம்
 16. சோமாஸ்கந்தர், திருமழபாடி - மருத்துவர். பொன்னம்பலம் சிதம்பரம்
 17. நுளம்பர் தூண் சோமாஸ்கந்தர் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி
 18. திருப்பைஞ்ஞீலி சோமாஸ்கந்தர் ஓவியம் & புகைப்படம் - இணையம் 
 19. அருணகிரிநாதர் ஓவியம் - இணையம் 
 20. சோமாஸ்கந்தர், திருவீழிமிழலை - ஆய்வாளர் ஸ்ரீதர், அருப்புக்கோட்டை 
 21. அருணகிரிநாதர் படக்கதை - இணையம் 
 22. ஸ்கந்தமாதாவிலிருந்து சோமாஸ்கந்தர் - இணையம் 
 23. இறவாஸ்தானம் கஜசம்காரர் - இணையம் 
 24. தாராசுரம் கஜசம்காரர் - இணையம் 
 25. புள்ளமங்கை கஜசம்காரர் - ஆய்வாளர் RK லட்சுமி 
 26. சோழர் கால சோமாஸ்கந்த வார்ப்புரு, திருமுல்லை வாசல், நாகை மாவட்டம் - தஞ்சை அருங்காட்சியகம் - இணையம் 
 27. சிதம்பரம் கோபுர சோமாஸ்கந்தர் - இணையம் 
 28. சோமாஸ்கந்தர், சிங்கப்பூர் அருங்காட்சியகம்
 29. சோமாஸ்கந்த வார்ப்புரு, அருங்காட்சியகம் - இணையம் 
 30. சோமாஸ்கந்த தொகுதியில் அமர்ந்துள்ள முருகன், தரங்கம்பாடி, சென்னை அருங்காட்சியகம்  - இணையம் 
 31. வலக்கையில் சூசி முத்திரையுடன் இடக்கையில் பழம் கொண்டு ஆடும் இளமுருகன், தஞ்சாவூர் அருங்காட்சியம்
 32. சிவபுரம் சோமாஸ்கந்த வார்ப்புரு - இணையம் 
 33. பல்லவனேஸ்வரம் உமை முருகனுடன் - இணையம் 
 34. திருக்குற்றாலம் சோமாஸ்கந்த வார்ப்புரு - அகில் 
 35. விஜயநகர சோமாஸ்கந்த வார்ப்புரு - இணையம் 
 36. பல்லவனேஸ்வரம் ஓவியம் - ஓவியர் விஷ்ணு ராம்
அதிகமும் புகைப்படங்கள், வடிவியல் ஆய்வாளர் மருத்துவர் திரு ரவிச்சந்திரன் மற்றும் வீரமணி அய்யா அவர்களின் மூலம் கிடைத்தவை. இவர்களுடன் நண்பர் ஓவியர் விஷ்ணுராம் தன்னுடைய ஓவியத்தை பயன்படுத்த அனுமதியளித்தார், மூவருக்கும் எனது நன்றிகள் .