Saturday 14 October 2023

தெய்வ தசகம் - 5: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி


பாடல்- 5

நீயல்லோ ஸ்ருஷ்டியும் ஸ்ரஷ்டா
வாயதும் ஸ்ருஷ்டிஜாலவும்
நீயல்லோ தெய்வமே ஸ்ருஷ்டி
க்குள்ள ஸாமக்ரியாயதும்

படைப்பும் படைப்பாளியும்
படைக்கப்பட்டவையும் நீயேயன்றோ
நீயன்றோ தெய்வமே, 
படைப்புக்கான மூலப்பொருளும்

நீயல்லோ ஸ்ருஷ்டியும் - இறந்தகாலத்தில் இல்லாமலிருந்தவையும், வெளிப்படாமலிருந்தவையுமான எண்ணற்ற படைப்புகள் நிகழ்காலத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அத்தகைய படைப்பு நீயே

ஸ்ரஷ்டாவாயதும் ஸ்ருஷ்டிஜாலவும் - படைப்பில் எத்தனையோ பன்முகத்தன்மை இருந்தாலும் அவற்றையெல்லாம் படைப்பது தெய்வமே. ஆனால், மண்பாண்டத்திலிருந்து அதை வனைந்த குயவனும், ஆடையிலிருந்து அதை நெய்த நெசவாளியும், ஓவியத்திலிருந்து அதை வரைந்த ஓவியனும் வேறாக உள்ளது போல படைப்பாளியான தெய்வம் படைக்கப்பட்டவற்றிலிருந்து சிறிதும் வேறாக இருப்பதில்லை. படைக்கப்பட்டவை எத்தனையோ அத்தனையிலும் உள்ளுறைவதும், அவற்றை கட்டுப்படுத்துவதும் தெய்வமே

நீயல்லோ தெய்வமே ஸ்ருஷ்டிக்குள்ள ஸாமக்ரியாயதும் - தெய்வம் தான் படைத்தவற்றிற்குக் காரணமென்ற நிலையில் அவற்றிலிருந்து வேறாக இல்லாமல் இருப்பது போலவே மூலப்பொருள் என்ற நிலையிலும் படைக்கப்பட்டவற்றிலிருந்து வேறாக இருப்பதில்லை. உடலும், உணர்வும், பெயருமற்ற தெய்வமே தனது மாயையால் பல்வகை உடல்களோடும் பலவித உணர்வுகளோடும் பல்வகைப் பெயர்களோடும் திகழ்கிறது. களிமண் எப்படி அதைக் கொண்டு உண்டாக்கிய கலத்திலிருந்து சிறிதும் வேறுபட்டதில்லையோ அதுபோலவே அனைத்துப் படைப்புகளுக்கும் மூலப்பொருளாக இருக்கும் தெய்வமும் அவற்றிலெல்லாம் சத்-சித்-ஆனந்த வடிவமாக ஒளிர்கிறது.

(தெய்வம் அனைத்தையும் படைப்பதாக இருப்பதால்தான் எல்லாவற்றையும் எப்போதும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் படைப்புச் செயலாகவும், படைக்கப்பட்ட அனைத்துமாகவும், அவை எல்லாவற்றிலும் உள்ள சாரமான மூலப்பொருளாகவும் உள்ளது)

மேலை, கீழை மதங்களிலெல்லாம் தெய்வத்தின் இருப்பை நிறுவுவதற்கு பல வாதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று காரிய-காரண வாதம் (causal argument). எந்த ஒரு விளைவுக்கும் ஒரு காரணம் தேவை. ஒரு குயவன் வனையாமல் ஒரு குடம் உருவாவதில்லை. அதேபோல் இந்த உலகம் ஒரு விளைவென்றால் அதற்குக் காரணமாக ஒரு தெய்வம் தோன்றியிருக்க வேண்டும். இந்த வாதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஒன்றன் காரணம் வேறொன்றிலிருந்து உண்டான விளைவாகத் தோன்றும். காரிய-காரணங்களின் சங்கிலியில் கண்ணிகளை (தலைகீழாகத்) தொடர்ந்து சென்றால் அதில் முதல் கண்ணி தெய்வமாக இருக்கும் என்று சொல்லும்போது காரிய-காரண வாதம் நிலையற்ற ஒன்றாகவோ அசாத்தியமான ஒன்றாகவோ ஆகிவிடுகிறது. தெய்வம் ஒரு காரணம் என்றால் தெய்வம் எங்ஙனம் உண்டானது என்று ஒரு குழந்தை கூட கேட்டுவிடும். தெய்வம் தானாக உண்டானது என்றால், உலகமும் ஏன் தானாக உண்டாகியிருக்கக் கூடாது என்ற கேள்வி இயல்பாக எழும். எனவே, மூலகாரணம் என்ற கருத்துரு ஒன்றை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தெய்வத்தை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகிவிடுகிறது. இதனால் இந்த வாதம் எடுபடுவதில்லை.

தெய்வம் உண்டென்று நிரூபிக்க சிலர் முன்வைக்கும் இன்னொரு வாதம் உண்டு - எல்லா அறிவும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதென்றும், அதனால் அறியப்படுபவை எல்லாம் படைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறும் மெய்ப்பொருள் வாதம் (ontological argument). இந்த வாதத்தின் குறைபாட்டை சுட்டிக்காட்ட, இம்மானுவல் கான்ட் ஒரு உவமையை முன்வைப்பார்: ஒருவர் தன் சட்டைப்பையில் ‘பத்து மார்க்’ (நாணயம்) இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும்போது அவரது மனதில் மார்க் குறித்த எண்ணம் தெளிவாக இருக்கிறது. ‘நான் பத்து மார்க்கைப் பற்றி சிந்திக்கிறேன், எனவே பத்து மார்க் உள்ளது. அதை ஏற்றுக்கொண்டு நீங்கள் எனக்கு பத்து ரொட்டி தரவேண்டும்’ என்று அவர் கேட்பாரென்றால் எந்த வியாபாரியும் அதுகேட்டு மயங்கப்போவதில்லை. கையிலெடுத்துக் கொடுக்கும் பத்து மார்க் வேறு, எண்ணத்தில் மட்டும் இருக்கும் பத்து மார்க் வேறு. எனவே, எண்ணத்தில் உள்ள தெய்வமும் கற்பனையான மார்க் போலவே நடைமுறை மெய்மை இல்லாதது. ஆக, இந்த வாதத்தாலும் தெய்வத்தை நிறுவ இயலுவதில்லை.

அடுத்ததாக, அண்டவியல் வாதம் (cosmological argument) - ப்ரபஞ்சத்தை அடுக்குமுறை கொண்ட ஒரு முழுமையாக நிலைநிறுத்துவது. உலகை ஆள்வது தற்செயல்தான் என்றால் பறவையின் முட்டையில் இருந்து பாம்பும், மானுடப் பெண்ணிலிருந்து பூசணிக்காயும், எறும்பிலிருந்து ஆட்டுக்குட்டியும் உண்டாகக் கூடும். அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாத வண்ணம் உலகம் முழுவதும் ஒரு அறுதிப்பாட்டுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து பூமிக்குள்ள தொலைவு சற்றே கூடியோ குறைந்தோ இருந்தால் இங்கு மானுட வாழ்வுக்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும். பசித்தது என்பதற்காக மட்டுமே ஊனுண்ணியான ஒரு பெண்சிங்கமோ பெண்புலியோ தன் குட்டிகளைத் தின்று பசியாறுவதில்லை. இப்படி உயிருள்ளவை-உயிரற்றவை என அனைத்து அசையும்-அசையாப் பொருள்களில் எல்லாம் அறியப்படாத ஒரு கட்டுப்பாட்டின் ஆளும் சக்தியும் உலகியற்றும் திறனும் அடங்கியிருப்பதால் உலகியற்றும் தெய்வம் ஒன்று உண்டென்று ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்த வாதமும் ஏற்கத் தக்கதல்ல. ஏனைனில், நாம் எண்ணுவதுபோல் அத்துணை அறுதிப்பாடு இந்த அண்டத்தில் இல்லை. பூவுலகு தோன்றிய காரணம் ஒரு விண்மீனின் தற்செயலான பாதைவிலகல்தான். பசு தனது கன்றினை தானே உண்பதில்லை என்றாலும் பல பெண்பூனைகள் தன் குட்டியை தின்றுவிடுவதுண்டு. முற்றும் முழுமையான ஒரு நிலை என்பது உலகில் இல்லை. முழுமையற்ற நிலையை காக்கின்ற, வலிமையற்ற எளிய படைப்பாளியான ஒரு தெய்வத்தை நிலைநிறுத்துவதில் எந்தப் பயனும் இல்லையல்லவா?

இன்னொன்று தொலைநோக்கு வாதம் (teleological argument) - ‘உலகில் காணப்படுவதில் எல்லாம் ஏதோ ஒரு நோக்கம் உண்டு. பசுவிற்கு வாலுள்ளதால் அதனால் ஈயை விரட்ட முடியும். கண்ணின் அமைப்பு புறத்தே உள்ளதை காண்பதற்கு உதவுவது. இப்படி எல்லாவற்றையும் ஒரு நோக்கத்தோடு படைத்திருப்பதால் ப்ரபஞ்சத்திற்குப் பின்னால் நிகழ்காலத்தை அறிவதும் எதிர்காலத்தை காணக்கூடியதுமான ஒரு மனம் இருக்க வேண்டும்’ என்று வாதிடுவது. இதுவும் பெரிதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதம் அல்ல. எத்தனையோ குழந்தைகள் பிறக்கும்போதே இறக்கின்றன. நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். நோய்கள் பரவுகின்றன. இப்படியான துன்பங்கள் நிறைந்த எதிர்காலத்தை திட்டமிடும் மனம் ஒன்றிருக்குமென்றால் அதனோடு கருணையும் வலிமையும் கொண்ட ஒரு தெய்வத்தை எங்ஙனம் தொடர்புறுத்துவது? தெய்வம் துன்பத்தை மனமொப்பி உண்டாக்குமென்றால் அது கருணையற்றதாகவே கருதப்படும். தெய்வம் அறியாமல்தான் உலகில் துன்பங்கள் ஏற்படுகின்றன என்றால், எல்லாமறிந்ததாக அந்த தெய்வத்தை கருத முடியாது. தெய்வம் அறியுமென்றாலும் இவற்றையெல்லாம் அது மனமொப்பி செய்வதில்லை என்றால் துன்பத்தை அகற்ற முடியாத தெய்வம் அனைத்து வல்லமையும் கொண்டதல்ல என்று ஆகும்.

குரு நித்யா

மேலே சொன்ன குறைகள் எதுவுமில்லாமல் படைப்பையும் படைப்பாளியையும் முன்வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. இருமையற்ற ஒற்றை மெய்மை ஒன்று தானே பெருகி பல வடிவங்கள் கொண்டு, நிலைபெற்று, அழிந்துபோகும் என்றும், அதிலிருந்து வேறான ஒரு படைப்பாளியோ, படைப்புத்தொழிலோ, படைப்போ, படைப்புக்கான மூலப்பொருளோ இல்லை என்றும் அறுதியிட்டுக் கூறவேண்டும். இந்தப் பாடலை வைத்துப் பார்த்தால், அத்தகைய புறத்தோற்றம்சார் படைப்புவாதம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகத் தோன்றும். ஆனால் அடுத்த பாடலில், படைப்புக்குக் காரணமான அறிவாகவும் பொருளாகவும் சுட்டப்பட்ட (அபின்ன நிமித்தோபாதான காரணமான) படைப்பாளியையே, மாயத் தோற்றம் கொண்ட மாயாவியாக சித்தரிக்கையில், பொய்த்தோற்ற வாதத்திற்கு (விவர்த்தவாதம்) ஏற்புடைய மாயாவாதம் ஏற்றுக்கொள்ளப்படுவதை காணலாம். 

தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தெய்வ தசகம் : நாராயண குரு - தொடர்கள்


தெய்வ தஶகம்: தெய்வம் - இறை, தஶகம்- பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர்.


நாராயண குரு (1856-1928)


இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.


நித்ய சைதன்ய யதி (1923-1999)


நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.



 

ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.