Saturday 8 June 2024

சங்கத் தமிழில் கடவுளர் - மு. சண்முகம் பிள்ளை

இந்திரன்


இந்திரன் வானுலகத் தேவர்களின் அதிபதி. 'துறக்கத்து அமரர் செல்வன்' (பரி.5:69), ’அமரர் செல்வன்’ (பரி.5:51), ’வானத்து வளம்கெழு செல்வன்' (பரி.5:59), 'அருநிலை உயர் தெய்வத்து அணங்கு' (பரி.9:12), ’விண்ணோர் வேள்வி முதல்வன்’ (பரி.5:30), என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல் புரிபவன் (பரி.9:1-3). நூறு வேள்விகளைப் புரிந்தவன். அதனால் விளைந்த பகைவரை வென்று கொல்லும் வெற்றி படைத்தவன் (முருகு.155-156). ஆயிரம் கண்களை உடையவன் (முருகு155; கலி.105,15; பரி.9-9). பகைவர்களை வருத்தும் இயல்புடைய வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியவன் (புறம்.241:3, படி.18:30, கலி.105:15), நெடியோன் என்றும் இவன் குறிக்கப்படுகிறான் (புறம்.241:3). நான்கு கொம்புகள் படைத்த யானையின் பிடரியில் ஏறி நடத்துபவன்.

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து, நூறுபல்
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து,
ஈர்-இரண்டு ஏந்திய மருப்பின், எழில்நடை,
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்.
  - முருகு.155-59

இவன் சுவர்க்க லோகத்திற்கு அதிபதியாதலின் வீர சுவர்க்கம் புகும் வீரர்கள் இவனது வானுலகிற்கு வருவர். சுவர்க்க உலகிற்கு வருவாரை இந்திரன் பிற தேவர்களுடன் சென்று எதிர்கொள்வான் என்பது ஒரு நம்பிக்கை. ஆய்வள்ளல் இறந்தபோது, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய கையறுநிலைப் பாடலில் கற்பனையாக, இரவலரைப் புரந்த ஆயை எதிர்கொள்ள இந்திரன் கோயில் முரசம் வானத்தின்கண் ஒலிக்கின்றது என்று மொழிகின்றார் (புறம்.241:1-5).

இந்திரனும் பிற தேவர்களும் அமுதை உட்கொள்ளுபவர். ஆகவே அவர்கள் அருந்தும் அமுது, 'இந்திரர் அமிழ்தம்’ (புறம்.182:1-2) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவ மைந்தரும் மகளிரும் புடைசூழ ஆகாய கங்கையில் இவன் நீராடியவன். பாண்டிய மன்னன் கூடல்வாழ் மாந்தருடன் வையையில் நீராடிய காட்சியை இந்திரன் நிகழ்த்தும் நீராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார் ஒரு புலவர்:

வெருவரு கொல்யானை வீங்குதோள் மாறன்
உருகெழு கூடலவரோடு, வையை 
வருபுனல் ஆடிய தன்மை பொருவுங்கால்-
இருமுந்நீர் வையம் படித்து என்னை? யான் ஊர்க்கு
ஒருநிலையும் ஆற்ற இயையா!! அருமரபின்,
அந்தர வான் யாற்று, ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து. 
  - பரிபாடல் திரட்டு. 2:91-97


வானத்தின்௧கண் மழைக்காலத்தில் தோன்றும் பல வண்ணமுடைய வானவில்லை ’இந்திரவில்' என்பர். இது 'திருவில்' (புறம்.20:10, அகம்.84:1), ‘விசும்பின்வில்' (அகம்.192:3-4), 'வானவில்’ (பரி.18:39), ’குறைவில்’ (பெரும்பாண்.292) என்னும் பெயர்களால் சுட்டப்பட்டுள்ளன. கார் காலத்திலும் கூதிர் காலத்திலும் இவ்வில்லின் தோற்றம் நிகழ்தல் இயற்கை.

அச்சிரக்கால் ஆர்த்து - அணிமழை - கோலின்றே
வச்சிரத்தான் வான வில்லு. 
  - பரி.18:38-39

முருகன் அவதார சரிதத்தில் இந்திரன் தொடர்பும் உள்ளது. இறைவன் உமாதேவியாரோடு கூடியின்புற்றதினால் தோன்றிய கருவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் சிதைத்துவிடுகிறான். பின், அக்கருவை எழுமுனிவரும் பெற்று அக்கினியில் அவியோடு சொரிகின்றனர். அம் முனிபத்தினியருள் அருந்ததி ஒழிந்த ஏனைக் கார்த்திகை மாதர் அறுவரும் அங்கியில் பெய்ததனை அருந்திக் கருக்கொண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவிலே முருகனைக் கருவுயிர்த்தனர். முருகன் பிறந்த அன்றே இந்திரன் இகல் மிகுதியால் தன் வச்சிராயுதத்தினாலே எறிய; அக்குழந்தை ஆறு வேறு உருவாகிப் பின் ஓர் உருவாய் ஆறுமுகத்தோடு அமைகிறது. குழவிப்பருவத்தில் படைக்கலம் இன்றியே செய்த போருக்கு இந்திரன் தோற்றுவிடுகிறான். பேராற்றல் படைத்த இவனே தனது சேனைக்குத் தலைவனாதற்குரியன் என இந்திரன் கருதுகிறான். 

இந்திரன், அக்கினி, யமன் முதலிய தேவர்கள் முருகனுக்கு ஆயுதங்கள் அளிக்கின்றனர். பின், அவன் தேவர் சேனைக்கு அதிபதியாக விளங்குகிறான் (பரி.5:21-70). தேவர்க்காக அவுணர்களை அழித்து, இந்திரன் மகள் தேவயானையை முருகன் திருமணம் கெய்துகொள்கிறான் (பரி.9:9). தெய்வயானை, 'ஐஇருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள்’ (பரி.9:9), 'மறுஇல் கற்பின் வாணுதல் கணவன் (முருகு.6)' என்றும் போற்றப்படுகின்றாள்.

வள்ளுவப் பெருந்தகை ஐந்தவித்தான் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக ஐம்புலன்களுக்கு அடிமையாய், அகலிகையை விரும்பி சாபம் எய்தி நின்ற இந்திரனை எடுத்துக்காட்டி, ஐந்தவித்த முனிவரின் பெருமையைப் புலப்படுத்துகின்றார். இச்சரிதத்தையும் சங்கப்புலவர் ஒருவர் சுட்டியுள்ளார். இந்திரன், கவுதம முனிவரின் பத்தினி அகலிகையை விரும்பி அம்முனிவன் ஆசிரமத்தை விட்டு நீங்கிய சமயம் பார்த்துச் சென்று அவளைப் புணர்ந்ததும், பின் முனிவர் வருகையால் அஞ்சிய இந்திரன் பூனை வடிவில் மறைந்து வந்ததும், நிகழ்ந்தவை அறிந்து சினங்கொண்ட கவுதமன் சாபத்தால் அகலிகை கல்லுருவம் பெற்றதும் எங்கும் பரந்து பேசப்படும் ஒரு புராண வரலாறு. இவ்வரலாற்றை விளக்கும் ஓவியம் திருப்பரங்குன்றத்து எழுத்துநிலை மண்டபத்தில் (ஓவியக்கூடம்) தீட்டப்பட்டிருந்ததாம். அங்குள்ள சித்திரங்களைக் காண்பவர் இப்புராண நிகழ்ச்சிச் சித்திரத்தைச் சுட்டிக் காட்டித் தமக்குள் பேசிக்கொண்ட உரையாடலைப் பரிபாடலில் காணலாம்.

இந்திரன், பூசை: இவள் அகலிகை: இவன் 
சென்ற கவுதமன்: சினன் உறக் கல் உரு 
ஒன்றிய படி இது.என்று உரைசெய்வோரும்
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்.  
  - பரி.19:50-53

இஃது இந்திரனது பெருமைக்குச் சிறுமை தரும் கதை. 

அந்நாளில் பேரூர்களிலே இந்திரனுக்கு விழாக்கொண்டாடி வந்தனர். இது 'இந்திரவிழா' என வழங்கப்பட்டது. இவ்விழாவில் பூக்களை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர் என்பது,

இந்திர விழவிற் பூவின் அன்ன
புன்தலைப் பேடை வரிநிழல் அகவும். 
  - ஐங்.62:1-2

எனவரும் ஐங்குறு நூற்றுப் பாடற் பகுதியால் புலனாகும்.பதிற்றுப்பத்து இதனைப் 'பலபூவிழவு' (பதிற்.30:15) என்று சுட்டுகிறது. பழனம் சூழ்ந்த ஊர்களிலே நிகழும் இந்தப் பலபூ விழாவாகிய இந்திரவிழாவைக் கண்டு களிக்க, மக்கள் திரண்டு செல்வதையும் பதிற்றுப்பத்து சுட்டுகிறது (30:14-21). பதிற்றுப்பத்தும் ஜங்குறுநூற்றுப் பாடலும் மருதநிலத்தார் பேரூர்களிலே கொண்டாடிய விழாவாகவே இந்திர விழாவைச் சுட்டியுள்ளன. இது கொண்டு இந்திரன் மருதவைப்புக்கள் சூழ்ந்த நாட்டின் சிறப்புத் தெய்வம் என்பது பெறப்படும். சிலப்பதிகாரத்திலே, 'இந்திரவிழவூர் எடுத்த காதை'யில் புகார் நகரில் நடைபெற்ற இந்திரவிழா பற்றிய செய்திகளை விரிவாக இளங்கோவடிகள் பாடியுள்ளமையும் ஈண்டுக் கருதத்தக்கது.

தேவர்கள்

தேவர்கள் பிரமனிடத்திலிருந்து தோன்றியவர்கள் (பரி.8:3-7), வானுலூல் வாழ்பவர் ஆகவே இவர்கள் 'வானோர்' (புறம்.213:10), ’வானத்து நிலைபெறு கடவுள்' (பதிற்.21:15) என வழங்கப்படுகின்றனர். தவிரவும், அமரர் (புறம்.99:1), புத்தேள் (புறம்.22:35), ஐயர் (பதிற்.70:19), உயர்ந்தோர் (புறம்.174:20), மேலோர் (புறம்.229:29), அவி உணவினோர் (புறம்.377:5), 'நாற்ற உணவினோர்’, 'இந்திரர்' (புறம்.182:1) முதலிய பெயர்களும் உண்டு.

மேரு மலையில் தேவர்கள் உறைகின்றனர். இமையவர் உறையும் சிமையச் செவ்வரை (பெரும்பாண்.429) என்பதனால் இது புலப்படும். அன்றியும் தேவசாதியார்கள் இமயமலையைத் தமக்கு வாழ்விடமாக உடையர். இம்மலையின் உச்சியில்தான் தேவர்களின் வான் உலகம் உள்ளது (நற்.356:3-4) 'தெய்வங்களின் நிலையை உடையது இமயம்' எனப் பதிற்றுப்பத்துக் கூறும்.

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை 
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்  
  - பதிற்.143:6-8

இங்குத் தேவருடனே தேவமகளிரும் உடன்கூடி வாழ்ந்து வருதலை,
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும். 
  - நற்.356:3-4

என்னும் நற்றிணைப் பகுதியால் அறியலாம். இத்தேவர்களையும் இம்மலையையும் இந்திரன் காக்கின்றான். எனவே இம்மலை,

இருநிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி, 
அருநிலை உயர்தெய்வதது அணங்குசால் தலைகாக்கும் 
உருமுச் சூழ் சேண் சிமை 
  - பரி.9:1-3

என்று பாராட்டப்படுகிறது.

பூவுலகில் நல்வினை செய்வார் இவ் வான் உலகு பெறுவர். உலகில் பிறர்க்கு ஈந்து இசைபட வாழும் நல்லோர்க்கு அல்லாது பிறர்க்கு வானுலகம் கிட்டுதற்கு அரியதாம். இது அரிதின் முயன்று பெறத்தகுவது என்பது 'அரும்பெறல் உலகம்’ (அகம்.55:14; புறம்.213:10) என்பதனால் தெரியவரும். இவ்வுலகு இனிய வளம் பல நல்கும் பொலம் பூங்காவினை (கற்பகக்கா) உடையது: மிக்க எழில் வாய்ந்தது. பல்வகையாக வேறுபட்ட பன்னிற மலர்களைத் தாங்கிச் செல்லும் வையை யாற்றின் நீரில் தோன்றும் நிற ஒளியைத் துறக்கத்தின் எழிலுக்கு ஒப்பிடுகிறார் ஒரு புலவர் (பரி.12:77-84). இங்கே எல்லாரும் எவ்வகைக் குறைபாடும் இன்றி இன்பம் துய்த்து வாழ்வர். உடையோர் இல்லார்க்கு ஈதலும், இல்லோர் உடையோர்பால் இரத்தலும் இந்நாட்டில் இல்லை. இவ்வகையான இவ்வானுலகின் இயல்புகளை,

இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது 
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை 
விளங்கக் கேட்ட மாறுகொல் -
வளம்படு குருசில் நீ ஈங்கு இது செயலே? 
  - புறம்.50:14-17

ஈண்டுச் செய் நல்வினை ஆண்டுச் செனறு உணீஇயர் 
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் 
  - புறம்.174:19-20

…….. இன்நிலைப் 
பொலம்பூங் காவின் நல் நாட்டோரும் 
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, 
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து 
  - புறம்.38:11-15

எனவரும் புறப்பாட்டுப் பகுதிகளால் உணரலாகும். இவ் வானுலகைக் குறித்தும், அங்கு வாழும் வானோர்களைக் குறித்தும்புலவர்கள் பாடும் பாடல் தொடர்கள் இவர்களின் அருமை பெருமை களைப் புலப்படுத்துகின்றன. அவை வருமாறு:

பெரும் பெயர் உலகம் (குறுந்.83), உயர்நிலை உலகம் (குறுந்.361:2; ஐங்.442:3-4; புறம்.50:15, 249:11, 287:12; பதிற்.70:19, 89:11; மதுரைக்.147,471), அரும்பெறல் உலகம் (அகம்.55:14, 213:18; புறம்.213:10), அரிதுசெல் உலகம் (புறம்.214:8), தவல்இல் உலகம் (அக.178:16), தொய்யா உலகம் (புறம்.214:8), புத்தேள் உலகம் (புறம்.22:35), தேவர் உலகம் (புறம்.228:11), பொலம் பூங்காவின் நல் நாட்டோர் (புறம்.38:13), உயர்ந்த தேஎத்து விழுமி யோர் (மதுரைக்.200), உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் (பதிற்.89:11). உயர்ந்தோர் உலகம் (புறம்.174:20, 213:10), மேலோர் உலகம் (புறம்.229:22, 240:6), மாடோர் உறையும் உலகம் (பதிற்.70:23), அரும் பெறல் உலகத்து ஆன்றவர் (புறம்.213:23).

இவ்வானுலகில் வாழும் தேவர்களோ அழுக்கு நீங்கிய உடம்பினை உடையவர்; தெய்வத் தன்மையால் ஒளிபடைத்த வாடாத பூவை அணிந்தவர்; இதழ் குவியாத கண்களை உடையவர்; அவியாகிய நாற்ற உணவினை உண்பவர்கள் (புறம்.62:16-19; மதுரைக்.456-460). இத்தேவர்களின் மகளிர் வான் உறை மகளிர் (பதிற்.14:13), அந்தர மகளிர் (ஐங்.76:4), வானவ மகளிர் (மதுரைக்.582) எனப்படுவர். இவர்கள் அமுதம் உண்பவர்கள்; இவர் உண்ணும் அமிழ்தம், 'அரும்பெறல் அமிழ்தம்’ என அருமையாகப் போற்றப்படுவது (குறுந்.83:1-2) திருமாலினால் இவர்களுக்கு வழங்கப்பட்டதாகும். இந்த அமிர்து (பரி.3:33-34) கலை வளர் மதியம் நிறைமதிக்குப்பின் அமரர்க்கு உணவாகப் பயன்படுகின்றது.

ஆம்நாள் நிறைமதி அலர்தரு பக்கம் போல், 
நாளின், நாளின், நளிவரைச் சிலம்பு தொட்டு, 
நிலவுப் பரந்தாங்கு, நீர் நிலம் பரப்பி,
உலகு பயம் பகர: ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி 
  - பரி.11:31-35
 
மதிஉண் அரமகளென ஆம்பல் வாய் மடுப்ப' 
  - பரி.10:78

தேவர்கள் உண்ணும் அமிழ்தம் ஒருவர் பெறும் பொருள்களில் எல்லாம் மிகச் சிறந்த பொருளாகப் போற்றப்படுவது. நல்ல மகிழ்ச்சிக்குரிய நற் செய்தியைக் கேட்டபோது, 'இச்செய்தி சொன்னவர் தேவாமிர்தத்தை உணவாகப் பெறட்டும்' என்று உவந்து வாழ்த்தும் மரபு சங்கப்பாடல்களில் காண்கிறது.

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை! 
  - குறுந்.83:1-2

அமிழ்தம் உண்க - நம் அயல் - இலாட்டி!
  - குறுந்.201:1:நற்.65:1

உலகில் நன்றாற்றி வானுலகு புகுவாரை விண்ணுலக ஆன்றோர் விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக் கொள்வர் (புறம்.213:22-24) என்றும், போரில் வீரமரணம் எய்திய மறவர்கள் தேவர் உலக மகளிரை மணந்து சுவர்க்க இன்பம் அனுபவிப்பர் என்றும் மக்கள் கருதினராம் (புறம்.287:10-12).

தேவர் முப்பத்து மூவரும் பிறரும்

பஞ்ச பூதங்களும், நவகோள்களும், அசுரரும், நால்வேறு பகுதியுள் அமைந்த தேவர் முப்பத்து மூவரும், யமனும் அவனுடைய ஏவலனாகிய காலனும், மூவேழுலகமும், அவற்றில் உள்ள உயிர்ப்பன்மையும் ஆகிய எல்லாம் திருமாலிடத்தினின்று தோன்றியவை என்று வேதம் கூறும் (பரி.3:1-14). இவர்களுள் தேவர் முப்பத்து மூவர் ஆவர். துவாதச ஆதித்யரும், மருத்துவர் இருவரும், வசுக்கள் எண்மரும், ஏகாதச ருத்திரர்களும் ஆவர் (முருகு.167; பரி.3:6-8, 27-28, 8:4-7). இவர்களை, 'நால்வேறு இயற்கைப் பதினொரு மூவர்' என முருகாற்றுப்படை ஒரு தொகுதியாகக் குறிப்பிடுகிறது. இம்முப்பத்து மூவரின் வகையினை:

மலரிமிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி உலகுஇருள் அகற்றிய பதின்மரும் இருவரும்,

மருத்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், 
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் 
  - பரி.8:3-7

என்னும் பரிபாடலடிகளில் காணலாம்.

இத்தகையவர்களை உள்ளிட்டு அசுரர், கருடர், கந்தருவர், பூதர், பைசாசர், தாராகணம் முதலிய பதினெண்வகைப்பட்ட இவர்களை மேற்குறித்த முப்பத்துமூவருடன் ஒருபடித்தாக வைத்து,

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் 
  - முருகு.167-168

என முருகாற்றுப்படை போற்றுகிறது. இவர்கள் வடக்கேயுள்ள நிலமாகிய உத்தர குருவில் வாழ்பவராவர்; துன்பம் இடை விரவின இன்பமன்றி எந்நாளும் இடையறாது இன்பமாகவே செல்லும் வாழ்க்கையினை உடையவர் (பதிற்று.68:12-13). இவர்களுள் அசுரர், கந்தருவர் போன்ற ஒரு சில தேவசாதியாரைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் உள. கந்தருவரின் மென் மொழியும் யாழிசை இனிமையும், இசைபாடும் கந்தருவ மகளிருடைய இயல்பும் பற்றிய ஒரு குறிப்பு முருகாற்றுப்படையில் உள்ளது (முருகு.141-142).

உலகின் எட்டுத் திக்கினும் நின்று காவல் தொழில் புரியும் திக்குப் பாலர்களைப் பரிபாடலின் எட்டாம் பாட்டு, 'நன்திசை காப்போர்’ என்று (பரி.8:7) குறிப்பிடுகிறது. இவர்களாவார்: இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போராவர். இவர்களுள் இந்திரனைப் பற்றி விரிவாக முன்னர்ப் பார்த்தோம். மற்றும் அக்கினி, யமன், வாயு, குபேரன் முதலியோர்களைப் பற்றிய குறிப்புக்களும் காணக்கிடக்கின்றன. அக்கினியும் யமனும் கொடுமை மிக்க தேவதைகளாகவும், அழிவுத் தொழில் புரியும் கடவுளர்களாகவும் கூறப்பட்டுள்ளனர். வெம்மையும் கேடும் விளைபோராகவும் கொண்டு இவ்வகை நிகழ்ச்சிகளுக்கு உவமையாகவும் கூறப்படுகின்றனர். முருகப்பெருமானுக்கு அனலன் தன் மெய்யிற் பிரித்துக் கோழி கொடுத்தனன், யமன் அப்பெருமானுக்கு வெள்ளாட்டு மறியைக் கொடுக்கின்றான் (பரி.5:56-57) 

ஊழி முடிவில் உலகை அழிப்பதற்குத் தீயும் யமனும் சூரியனும் ஒன்று சேர்கின்றனவாம். இதனை,

தீசெங் கனலியும் கூற்றமும் ஞமனும் 
மாசுஇல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூம் 
ஊழி ஆழிக்கண் 
  - பரி.3:21-23

என்னும் பாடற்பகுதி உணர்த்தும். அக்கினியை அந்தணர் வழிபடுதலை இதற்கு முன்பு வேதவேள்வி பற்றிக் கூறிய பகுதியில் காணலாம்.

வன்மைக்கு நெருப்பையும், மென்மைக்கு நீரையும் ஒப்புக் கூறுகின்றனர் (குறு.95:4-5). காற்றோடு நெருப்பும் கலந்து அழிவு செய்தாற்போல அரசன் பகைநாட்டை அழிக்கின்றான் என்று கூறப்பட்டிருக்கிறது (புற.41:16-18). வளிதரும் செல்வன் (கலித்.16:16) விசும்பினும் ஞாலத்தகத்தும் வளியே எதிர்போம் (கலி.131:1-2) என்று காற்றுத்தேவன் கலித்தொகையில் சுட்டப்பட்டிருக்கின்றான். பெருங்கடல் தெய்வம் நீர்நோக்கித் தெளித்து (கலி.131:1-2), 'பிறங்கு இரு முந்நீர்’ (கலி.144:46) என வருவன கடல் தெய்வத்தைச் சுட்டியுரைப்பினும் இங்கே வருணனைக் குறித்ததாகக் கொள்ளத் தெளிவில்லை. மாநிதிக் கிழவனும் போன்ம் (அக.66:17) எனக் குபேரன் உவமையாகச் சுட்டப்பட்டிருக்கிறான். இவ்வுவமையால் அவன் நிதிக்கெல்லாம் உரிமையுடையான் என்பது பெறப்படும்.

யமன்


இந்திரனைவிடவும் சங்கப்பாடல்களில் யமன் அதிகமான அளவில் கூறப்பட்டிருக்கிறான். இவன் கூற்று (புறம்.4:12, 5:1, 226:6, 255:4; குறு.283:5; பதிற்.14-10), கூற்றம் (அக.61:1; பதிற்.26:13, 51:35, 84:7; புறம்.75:11, 98:17, 210:8, 221:8, 227:1, 230:1, 237:9, 361:1, 362:7), காலன் (புறம்.41:1, 240:5; கலி.105:19, 147:40, பதிற்.39:8), ஞமன் (புறம்.6:9; பரி.5:61), மடங்கல் (புறம்.363:9, 366:23; பரி.3:8), தருமன் (பரி.3:8), எருமை (கலி.101:25, 103:43) என்னும் பெயர்களால் சுட்டப்படுகிறான். மன்பதைகளின் உடலினின்றும் உயிரை மாய்க்கும் பண்புடைமையால் இவன் கூற்று, கூற்றம் எனப்பட்டான். 'உயிர் செகு மரபின் கூற்றம்’ (மலைபடு.209), 'உயிர் திறம் பெயர்ப்பான்’ (கலி.100:15) உயிர்களை உரிய காலம்பார்த்துக் கொண்டுசெல்லுதலினால் வந்த பெயர் ஆகும் 'காலன்' என்பது, 'காலனும் காலம் பார்க்கும்’ (புறம்.41:1), 'செயிரின் குறைநாளால் பின் சென்று சாடி, உயிர் உண்ணும் கூற்றம்’ (கலி.105:37-38) ஊழியில் யாவற்றையும் மறித்து அழித்தலினால் 'மடங்கல்’ எனப்பட்டான்.

’மடங்கல் உண்மை மாயமோ அன்றே’ (புறம்.363:9, 366:22). 'மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும், தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய’ (கலி.105:20-21). துலாக்கோல் போல நடுநிலை பிறழாது நீதி செய்வதனால் தருமன், ஞமன் என்று பாராட்டப்படுகின்றான். 'உறைவரை நிறுத்தகோல், உயிர்திறம் பெயர்ப்பான்போல், முறை செய்தி (கலி.100:13-16), 'திருந்துகோல் ஞமன்' (பரி.5:61),

உருவும் புகழும் ஆகி, விரிசீர்த் 
தெரிகோல் ஞமன்ன் போல, ஒருதிறம்
பற்றல் இலியரோ! நின்திறம் சிறக்க!
  - புறம்.6:8-10

மேலே சுட்டிய பெயர்களுள் காலன், மடங்கல் என்னும் இரண்டும் கூற்றுவனது ஏவலாளரைக் குறிப்பது என்றும் கொள்வர். ’கால முன்பின் பிறவும்' (கலி.105:19), 'காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை மாலையும் வந்தன்று’ (கலி.143:40-41) எனவரும் இடங்களில் நச்சினார்க்கினியார் இக் கருத்தே கொண்டுள்ளனர். 'ஏம கால தூதர்’ எனக் கூறுதல் இன்றும் வழக்கில் உண்டு. ’தருமனும் மடங்கலும்’ (படி.3:8) எனப் பரிபாடல் தருமனுடன் மடங்கலைச் சேர்த்து உரைக்கின்றது (தருமன் - யமன்: மடங்கல் - அவன் ஏவல் செய்யும் கூற்றம்). இவன் கணிச்சி என்னும் மழுப்படையை உடையவன் (புறம்.42:23, 195:14), 'கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்' (புறம்.195:14). இவன் எருமை ஏற்றினை ஊர்தியாகக் கொண்டவன். அதனால் இவனுக்கு 'எருமை' என்னும் பெயர் ஆகுபெயராய் அமைந்துவிடுகிறது (கலி.101:25, 103:43; பரி.8.88).

சீற்றத்திற்கும் வலிமைக்கும் கொலைத் தொழிலுக்கும் கூற்றுவன் பல இடங்களில் ஒப்புக்காட்டிப் பேசப்பட்டுள்ளான். ’கூற்று ஒத்தியே மாற்று அருஞ்சீற்றம்’ (புறம்.56:11), ‘காலன் அனைய கடுஞ்சின முன்ப’ (பதிற்.39:8), 'கூற்று வெகுண்டன்ன முன்பொடு' (புறம்.42:23), 'கூற்றத்து அன்ன மாற்றுஅரு முன்பின்' (புறம்.362.7), 'கூற்றத்து அன்ன மாற்றுஅரு மொய்ம்பு’ (முருகு.81), ’கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்’ (குறுந்.283:5). வருத்தத்தை விளைக்கும் செயலுக்கும் யமன் ஓப்பிடப் படுதல் உண்டு. ’யம வேதனை' என இன்றும் மக்கள் தமது பெரு வருத்தத்தைக் குறித்தல் காணலாம்.

ஒப்பற்ற பேரழகியான நங்கை ஒருத்தியை எதிர்ப்பட்ட ஓர் ஆடவன் அவளால் தனக்கு நேர்ந்த வருத்தம் காரணமாக அவளை யமனோ என்று ஐயுற்றுப் பேசுகிறான்.

வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்உறுப்பு எலாம் 
கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்
வேண்டுஉருவம் கொண்டதோர் கூற்றம் கொல்? 
  - கலி.56:7-9

என்பது அந்த ஆடவனின் ஐய வியப்புரை.

யமன் குறித்த காலத்தில் வந்து உயிர்களைக் கொண்டு செல்லுதலின் சிறிதும் தவறான். விலங்குகளை வேட்டையாடுவதற்கு வலை விரித்தல் போல, இவனும் உயிர்களைக் கவர்வதற்கு வலை விரித்துத் திரிகிறான்.

மாற்று அருஞ் சீற்றத்து மாஇருங் கூற்றம்
வலை விரித்தன்ன் நோக்கலை 
  - பதிற்.51:36-36

ஆகவே, இவன் உயிர்களைக் கொண்டு செல்லும் பொருட்டு எப்பொழுதும் சீற்றத்தோடு சுழன்று திரிந்துகொண்டிருக்கிறானாம்.

கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம் 
  - புறம்.361:42

இவன் இரக்கம் இன்றி உயிர்களைக் கொண்டு செல்லுதலினால் 'காலன் என்னும் கண்ணிலி’ (புறம்.240:5-6) என்று பழிக்கப் படுகிறான். இவனுக்கு உணவு மன்பதைகளின் ஆர் உயிர்தான். 'உயிர் உண்ணும் கூற்று’ (புறம்.4:12). எவ்வளவும் புண்ணியம் புரிந்தோர்களாயினும் இவன் விட்டுவைப்பதில்லை, எத்தகையோராயினும் இவன் அவர்தம் இன்உயிரைக் கொண்டு செல்லுதலில் தவறுதல் இல்லை'. 

பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;
…….
துகள்அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; 
அனையன் என்னாது அத் தக்கோனை
நினையாக் கூற்றம் இன்உயிர் உய்த்தன்று
  - புறம்.221:1-8

யமன் நியதிப்படியே தனது அழிவு வேலையைச் செய்து வருகிறான்; நீதிக்கே அவன் நிலையமாக விளங்குகிறான்; தருமன் என்றே போற்றப்படுகிறான். இந்த உண்மை தெரிந்திருப்பினும், அவன் செய்யும் அழிவினால் அல்லலுற நேர்ந்துவிட்ட உலகோர் அவனை வைதலும் சபித்தலும் செய்கின்றனர். அவனை அறம் இல்லாதவன் என்று பழிக்கின்றனர். 'அறன் இல் கூற்றம்’ (புறம். 210:8, 297:9: 255:4).

மகளைப் பிரிந்த வருத்தம் பொறுக்காத நிலையில் இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் நிலையில் என் உயிரைக் கொள்ளாது விட்டு வைத்திருக்கும் யமன் புதைக்கப்பட்டு ஒழியட்டும் எனச் சபிக்கிறாள் ஒர் அன்னை. இறந்தோரைப் பெரிய மண் தாழியில் இட்டுப் புதைப்பது முன்னை மரபு. அது போல இந்தக் கூற்றுவனும் பெரிய தாழியினால் கவிக்கப்பட்டுப் புதையுண்டு போகட்டும். என்கிறாள்.

மா இருந் தாழி கவிப்ப
தா இன்று கழிக, எற்கொள்ளாக் கூற்றே
  - நற். 271:11-12

இத்துணைப் பேராற்றல் படைத்த கூற்றுவனும் குழந்தை முருகனிடம் தோல்வியடைகிறான். யமனது ஆணையை இகழ்கிறான் முருகன். 'எருமை இருந்தோட்டி எள்ளீயும் காளை’ (பரி.9:86). தோற்ற யமன் முருகனுக்கு வெள்ளாட்டு மறி தந்தான். யமன் பால் சீற்றமுற்ற எரிதிகழ் கணிச்சியோனாகிய சிவன் அவனுடைய நெஞ்சத்தைப் பிளந்து, அவனது ஆயிருரை மாய்த்து கால காலனாய் விளங்குகிறான். (கலி.101:24-26, 103:43-45).

சூரிய சந்திரர்களும் தெய்வங்களாகவே போற்றப்பட்டிருக்கின்றனர். 'ஞாயிற்றுப் புத்தேள்' (கலி.108:13), 'திங்கட் புத்தேள்’ (புறம்.27:14) இவ்விருவரும் கோள்களில் முதன்மைக் கோள்களாக உள்ளனர். எனவே; இவர்களைக் குறித்து, 'கோளும் நாளும்' என்னும் பகுதியில் பார்ப்போம்.

------------------------------------------------------------



மு. சண்முகம் பிள்ளை

இக்கட்டுரை சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் (1996) நூலிலிருந்து மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

மு. சண்முகம் பிள்ளை, வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் இணைந்து சமாஜ பதிப்புகளைப் பதிப்பித்தவர். கவிமணியின் “மலரும் மாலையும்” நூலைத் தொகுத்தவர். திருக்குறளின் பாடவேறுபாடுகளை ஆராய்ந்துள்ளார். சிற்றிலக்கிய வகைகள் மற்றும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழாராய்ச்சியில் அவரது முதன்மைப் பங்களிப்பாக பல்வேறு நிகண்டுகளை ஆராய்ந்து பதிப்பித்தது குறிப்பிடப்படுகிறது. சென்னை, மதுரை, தஞ்சை பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறார். 

மு. சண்முகம் பிள்ளையின் சில நூல்கள்

  1. திருக்குறள் ஆராய்ச்சி- 1: யாப்பு அமைதியும் பாட வேறுபாடும் (1971)
  2. சிற்றிலக்கிய வகைகள் (1982)
  3. நிகண்டுச் சொற்பொருட் கோவை: தெய்வப்பெயர் (1982)
  4. சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும் (1996) உலக தமிழாராய்ச்சி நிறுவனம்.
  5. வேதகிரியார் சூடாமணி நிகண்டு (1997)