Thursday 30 November 2023

தெய்வ தசகம் - 6, 7: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி

பாடல் - 6

நீயல்லோ மாயயும் மாயா
வியும் மாயாவிநோதனும்
நீயல்லோ மாயயெ நீக்கி
ஸ்ஸாயுஜ்யம் நல்குமார்யனும்

மாயையும் மாயாவியும்
மாயையில் திளைப்பவனும் நீயன்றோ
மாயையை விலக்கி வீடுபேறளிக்கும்
ஐயனும் நீயேயன்றோ

நீயல்லோ மாயயும் - யதார்த்தத்தில் இல்லாததும் அதே நேரத்தில் இருக்கின்ற ஒன்றாய் தோன்றுவதுமான மாயையும் தெய்வமே

மாயாவியும் - சித்திஜாலங்கள் எல்லாம் சித்தனாகிய யோகியையும், கனவுகளெல்லாம் கனவு காண்பவனையும் சார்ந்தவை. அதுபோலவே, கானல்நீர் போன்ற இந்த உலகமெனும் மாயையும் கற்பனையாய் அதை உருவாக்கிய தெய்வத்திலேயே அடங்கியிருப்பது.

மாயாவிநோதனும் - கனவில் தோன்றும் உலகம் மனதின் கற்பனை மட்டுமே; அந்தக் கனவை உணர்வது அந்த மனதல்லாமல் மற்றொன்றில்லை. அதேபோல், தெய்வத்தின் கருத்தால் உண்டாகியிருக்கின்ற மாயாஜாலங்களைக் கொண்டு நடக்கும் ஆடலில் திளைப்பதும் தெய்வம் மட்டுமே.

நீயல்லோ மாயயெ நீக்கி ஸாயுஜ்யம் நல்குமார்யனும் - தெய்வத்தின் கருதுதலால்தான், சைதன்யம் என்பது ’நான்’ ‘நான்’ என துண்டுபட்டு எண்ணற்ற ஜீவன்களாக பல்கிப் பெருகியுள்ளது. இந்தப் பன்முக உணர்விலிருந்தும், சம்சாரமெனும் தளையிலிருந்தும் விடுபடவும், தெய்வமல்லாது மற்றொரு மெய்யில்லை என்ற உணர்வைப் பெறுவதற்கும் தெய்வத்தின் அருளே தேவைப்படுகிறது. 

(தெய்வமே, நீயே மாயை. இந்த மாயையை உருவாக்கும் மாயாவியும் நீ. இந்த மாயையில் திளைப்பவனும் நீ. இந்த மாயையால் உண்டான சம்சாரத்தில் சிக்கித் தவிக்கும் எங்களை விடுவித்து வீடுபேறு அளிப்பதும் நீயே.)

எது இல்லாத ஒன்றோ அதுவே மாயை எனப்படுவது. மாயை பற்றிய குறிப்பு ரிக்வேதத்திலேயே (6-47-18) இடம்பெற்றுள்ளதென்றாலும் ஒரு வேதாந்தக் கருத்தாக அது முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது ப்ருஹதாரண்யக உபநிடதத்தில்தான் (2-5-19). எந்த அறியாமையால் ப்ரம்மத்தை அதன் முழுமை வடிவில் அறிய முடியாதோ, அதுவே மாயை என்கிறது ப்ரஹ்ம சூத்ரம் (3-2-3). விவேக சூடாமணியில் சங்கார் மாயைக்கு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்:

அவ்யக்தனாம்னி பரமேஶஶக்தி
ரநாத்யவித்யா த்ரிகுணாத்மிகா பரா
கார்யானுமேயா ஸுதியைவ மாயா
யயா ஜகத் ஸர்வமிதம் ப்ரஸூயதே

(பிரித்தறிய முடியாதவள், இறைவனின் ஆற்றல், தொடக்கம் இல்லாதவள், முக்குணங்களால் ஆனவள், (அவற்றின் காரணமாக இருப்பதால்) விளைவுகளினும் மேலானவள், தெளிந்த புத்தி கொண்டவர்களால் அவள் தோற்றுவிக்கும் விளைவுகளின் வழியே அறியத்தக்கவள், அண்டங்களனைத்தையும் தோற்றுவிப்பவள்)

ஸன்னாப்யஸன்னாப்ய பயாத்மிகா னோ
பின்னாப்யபின்னாப்யூபயாத்மிகா னோ
ஸாங்காப்யனங்காப்யூபயாத்மிகா னோ
மஹாத்புதாநிர்வசனீயரூபா

(உள்ளதும் அல்லதும் அல்ல அவள்; இரண்டிலும் இருப்பவள் அல்லள்;
ஒன்றோ வேறோ அல்லள்; இரண்டும் அல்லள்;
கூறுகளால் ஆனவள் அல்லள்; பகுத்தறியமுடியா முழுமை அல்லள்; இரண்டும் அல்லள்;
பெருவியப்பு அவள்; சொற்களால் விளக்க முடியாதவள்)

மாயை என்பது முற்றிலும் இல்லாத ஒன்றா என்றால், அப்படி இல்லை. அது மீபொருண்மை இல்லாதது; ஆனால் பொருண்மை கொண்டது. வடிவ வேறுபாடு கொண்ட மண்ணை குடமென்று சொல்லும்போது மண்ணல்லாது புதியதாக எதுவும் உண்டாவதில்லை. என்றபோதும், வடிவம் காரணமாக அதன் மண்தன்மை மறைந்து குடத்தன்மை முதன்மை பெறுகிறது. அதுபோல, ப்ரம்மம் மட்டுமே மெய்யாக இருந்தாலும் அதில் வடிவமும் பெயரும் ஏறும்போது பெயரும் வடிவமும் கொண்ட மாய உலகமே நம் முன் நிற்கிறது. அதன் பொருளும் ஒற்றைமெய்மையுமான ப்ரம்மம் மறக்கப்படுவது மாயையால் என்கிறார் குரு. 

மாயை என்று சொன்னதும், எப்போதும் இல்லாததை உண்டாக்கி உலகத்தை துன்பத்திலாழ்த்தும் ஒரு கொடுந்தெய்வத்தின் வடிவமே பலருக்கும் கண்முன் தோன்றும். மெய்யற்ற ஒன்றிலிருந்து மெய்யை பிரித்தறிந்து மெய்யல்லாததை மறுக்கக்கூடிய அறிவும் மாயையே. மெய்யையும் மெய்யல்லாததையும் பகுத்தறிவதற்கு உதவும் அறிவான மாயையின் முரணான அறியாமையும் மாயையில் அடங்கும். மாயையை அறிவாகக் கொள்ளும்போது நாம் ஆன்மாவை முதன்மையானதாகக் கருதுகிறோம்; அதையே அறியாமையாகக் கொள்ளும்போது புலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். எந்த மாயையால், நாம் ஞானேந்த்ரியங்கள், கர்மேந்த்ரியங்கள், மனம், புத்தி, ப்ஞ்சப்ராணன் ஆகியவற்றைக் கொண்டு உயிர் வாழ்கிறோமோ, அதனை குரு தனது ‘தர்சனமாலா’வில் ‘பரா’ என்றழைக்கிறார். இந்தப் பருவடிவ உலகை புலன்கள் வழியாக நாம் உணர உதவும் மாயையை ‘அபரா’ என்கிறார். முத்துச்சிப்பியை வெள்ளியென்று எண்ணும் அறியாமை எந்த இருளால் ஏற்படுகிறதோ, எது ஆன்மாவின் வடிவை உணரமுடியாமல் செய்கிறதோ அதனை தமஸ் என்கிறார். விதையில் இருக்கும் மரம் எவ்வாறு தன் முழுமையை மலர்த்திக் காட்டுகிறதோ அதுபோல நுட்பமான ஒன்று பருவடிவம் கொண்டு இந்த ப்ரபஞ்சமாக மாறுவது எந்த மாயையாலோ, அதனை ‘ப்ரதானம்’ என்றழைக்கிறார் குரு. சத்வ, ரஜோ, தமோ குணங்களுக்கு நிகரான நிலையிலுள்ள மாயை அவற்றை நிறைவடையச் செய்து பலவிதமான படைப்புகளைச் செய்யும்போது அதனை ‘ப்ரக்ருதி’ என்கிறார்.

இவ்வாறாக, பலவிதப் பண்புகளோடும் கூடிய மாயை எந்த தெய்வத்தின் இயல்பாக இருக்கிறதோ அந்த தெய்வமே மாயையை நீக்கி வீடுபேறளிக்கும் வல்லமைகொண்டிருக்கக் கூடும். விஶிஷ்டாத்வைதிகள் இறைவனின் கல்யாணகுணங்களாகக் கருதுவது மாயையையே என்பதால் மாயையை இறைவனாகவே கருதுவதில் முரண் எதுவுமில்லை. இறைவன் பண்புகள் கொண்டவனாக இருக்கும்போது அவனது மாயை இந்த ப்ரபஞ்சத்தை தனது ஆடலாக ஒளிரச் செய்கிறது. இறைவனை குணங்கள் அற்றவனாக அறிகையில் அங்கே செயல்களும் ஒடுங்கிப் போகின்றன. அதனால்தான் மாயையை உண்டாக்கும் இறைவனே மாயையை ஒழித்து வீடுபேறு அளிக்கும் அருளாளனாக கருதப்படுகிறான்.

--------------------------

பாடல் - 7

நீ ஸத்யம் ஞானமானந்தம்
நீ தன்னெ வர்த்தமானவும்
பூதவும் பாவியும் வேற
ல்லோதும் மொழியுமோர்க்கில் நீ

மெய்மை நீ ஞானம் நீ
மகிழ்வும் நீயே நிகழ்
கழிவெதிர்வும் நீயே - அன்றி
எண்ணுகையில் ஓதும் மொழியும் நீ

நீ ஸத்யம் - ஐம்புலன்களாலும் மனதாலும் எவற்றையெல்லாம் அறியமுடியுமோ அவையெல்லாம் மெய் என்ற முடிவுக்கு வருவோமென்றால் அவற்றிற்கு மெய்மை அளிப்பது தெய்வமாக மட்டுமே இருக்க முடியும். நாம் காண்பதெல்லாம் நமது நனவின் மேற்சுமத்தீடுகள் (superimpositions on consciousness) என்றால் அந்த இயல்கையின் அடிப்படை தானாகத் தோன்றியதாகவே இருக்கமுடியும். அதுவும் தெய்வமேதான்.

ஞானம் - எந்த ஒரு பொருளையும் அதன் மெய்யான வடிவில் நாம் அறிவதில்லை. ‘இருக்கிறது’, ‘மெய்யாக உள்ளது’ என்றெல்லாம் நாம் கூறுகையில், அப்படி ஒரு முடிவுக்கு நாம் வருவதற்கு சான்றாக இருப்பது பொருள்கள் பற்றிய நமது அறிதல் மட்டுமே. புலன்கள் வழியே மெய்மையை தேடுகையில் அதனை ஒலி, தொடுகை, வடிவம், சுவை, மணம் என்பனவாக அறிகிறோம். மனம் வழியே அணுகுகையில் பொருட்களின் பண்பு, உறவு, இணைவு, பொதுமை, சிறப்பு, இன்மை என்பனவாக அறிகிறோம். ஆழுறக்கத்தில் என்றால் அது இனியநினைவாக எஞ்சுகிறது. சமாதி நிலையில் அறிபவர்-அறியப்படுவது என்ற வேற்றுமை மறைந்து தூய ஞானமாகிறது. இவை எல்லாவற்றிலும் அறிபவரையும் அறியப்படுவதையும் எது ஒளிரச் செய்கிறதோ அந்த ஒளியே தெய்வம். 

ஆனந்தம் - மெய்மையும், ஞானமும் எப்போதெல்லாம் இணையுமோ அப்போதெல்லாம் ஆனந்தம் ஏற்படுகிறது. அறியாமை காரணமாக ஒரு பொருளில் இல்லாத பண்பை இருப்பதாகக் கருதுகையில் ஞானம் மட்டுமல்ல, மெய்மையும் இல்லாமலாகிறது. மெய்மையும், ஞானமும் இல்லாத இடத்தில் ஆனந்தம் இருப்பதில்லை. நிகழ்மெய்மை அற்ற (அ-யதார்த்த) ஞானத்தால் மெய்யல்லாத, ஆன்மாவற்ற பொருளோடு தொடர்புறுதலும், அறியாமை வடிவான இருளால் மெய்ப்பொருளான ஆன்மாவிலிருந்து அறிவு விலகிப்போதலுமே துன்பத்தை விளைவிக்கின்றன. புலன்கள், புலனறிதல்கள், இலக்குகளின் இயல்பு (பதார்த்தங்கள்), ஏழு வகையான அனுபவங்கள் (ஸப்தபதார்த்தங்கள்), மனம், மனதின் கற்பனைத்திறன், அக இயங்கியல் (அந்தகரணங்கள், அந்தகரண விருத்திகள்), முக்குண இயல்பு, ஆறு மாற்றங்கள் (விகாரங்கள் - இருப்பு, பிறப்பு, வளர்ச்சி, பரிணாமம், நலிதல், இறப்பு), பொருள்களுக்கிடையேயான தொடர்புகள் என அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பது யாரோ அவரே எப்போதும் மெய்மையாகவும் ஞானமாகவும் ஆனந்தமாகவும் எங்கும் எவரிலும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் தெய்வத்தை கண்டுகொண்டிருக்கிறார்.

மாயை வரையறுக்கப்பட இயலாததென்றாலும் தெய்வம் அவ்வாறல்ல. தெய்வம் உண்டா இல்லையா என்பதை தெய்வத்திற்கான வரையறையிலிருந்துதான் நாம் அறியமுடியும். இங்கு தெய்வத்தை ‘ஸத்யம் ஞானம், ஆனந்தம்’ என்று வரையறுக்கிறார் குரு.

நீ தன்னெ வர்த்தமானவும் பூதவும் பாவியும் வேறல்ல - கட்புலனாகும் ப்ரபஞ்சம் பெருவெளியில் சிதறிக்கிடக்கிறது. பருவெளியோடு தொடர்புடைய பொருட்களாக அறியப்படுபவை மெய்மையின், அறிவின் ஒரு அம்சம் மட்டுமே. ஸத்யம் இயக்க மெய்மை கொண்டது. ஞானம் ஒழுகிச்செல்லும் பண்புடையது. ஸத்யமும், ஞானமும் பிளவுபடாதவை, முதலுமுடிவுமற்றவை என்பதால் நிகழ்காலத்தின் தடைபடா ஒழுக்கில் ஸத்யத்தையும் ஞானத்தையும் இணைத்து நாம் தெய்வத்தை அறிகிறோம். ஆகவே தெய்வத்தையே நிகழ்கழிவெதிர் எனும் முக்காலங்களாக உணர்கிறோம்.

ஓதும் மொழியுமோர்க்கில் நீ - எந்தச் சொல்லைக் கொண்டு இந்த வேண்டுதல் உரைக்கப்படுகிறதோ அதுவும் தெய்வமன்றி பிறிதல்ல. ‘ஓதும் மொழி’ என்பதற்கு ப்ரம்மத்தை விளக்கும் யோகசாஸ்திரம் என்றும் பொருள் கொள்ளலாம். ப்ரம்மசூத்திரத்தில் ‘ஜன்மாத்யஸ்ய யத:’ என்ற சூத்திரம் வழியே, பருவடிவ ப்ரபஞ்சத்தின் தோற்றத்தை விவரிக்கும் பாதராயணர், தொடர்ந்து “சாஸ்திரயோனித்வாத்’ என்ற சூத்திரம் கொண்டு அறிதலின் தோற்றத்திற்கான் காரணத்தையும் தெளிவாக்குகிறார். அதுபோலவே, ‘நீயல்லோ ஸ்ருஷ்டியும்’ என்ற பாடல் வழியே பருவடிவ ப்ரபஞ்சத்தின் தோற்றத்திற்கு காரணமாக தெய்வத்தை கூறிய குரு, இந்தப் பாடலில் மெய்மையை அறிய உதவும் சாத்திரத்தை, ‘ஓதும் மொழியுமோர்க்கில் நீ’ என்ற வாக்கியம் வழியாக, தெய்வத்தோடு இணைவைக்கிறார்.

(தெய்வமே, நீயன்றோ மெய்மையும், அறிதலும், மகிழ்வும். நீயே நிகழ்கழிவெதிரெனும் முக்காலங்களும். அது மட்டுமன்றி, எந்தச் சொல்லைக் கொண்டு உன்னை நாங்கள் வழுத்துகிறோமோ அந்தச் சொல்லும் நீயே.)

 

தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தெய்வ தசகம் : நாராயண குரு - தொடர்கள்


தெய்வ தஶகம்: தெய்வம் - இறை, தஶகம்- பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர்.


நாராயண குரு (1856-1928)


இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.


நித்ய சைதன்ய யதி (1923-1999)


நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.

ஆனந்த் ஶ்ரீநிவாசன்


தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.