Thursday 30 November 2023

புதிரும் தீர்வும் - ஸ்ரீ அரவிந்தர்


எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதா? அல்லது இன்றும் வேத இரகசியம் என எதாவது இருக்கிறதா? 

தற்கால கருத்துக்களின்படி, பழங்கால புதிரொன்று தீர்க்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது, அல்லது என்றுமே அப்படி புதிரென ஒன்று இருந்ததில்லை. நவீனகால கருத்துக்களின் படி, ’வேதம் என்பது நாகரிகமடையாத பழங்குடிகளால் ஆளுமையாக உருவகிக்கப்பட்ட இயற்கை சக்திகளை நோக்கி எழுதப்பட்ட வேண்டுதல் மற்றும் சடங்கு சார்ந்த பாடல்களின் தொகை. தொடக்க நிலை வான்வெளி உருவங்களாலும், முழுதும் உருப்பெறாத தொன்மங்களாலும் நிறைந்தவை. பின்னர்வரும் பாடல்களிலேயே ஆழ்ந்த உளவியல்ரீதியான அம்சங்களும் உயர் கருத்துக்களும் காணப்படுகின்றன. அவை ‘கள்வர்’ என்றும் ‘வேத மறுப்பாளர்’ என்றும் வேதப்பாடல்களில் குறிப்பிடப்படும் திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டவை என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். எனினும் அப்பாடல்களே பிற்காலத்தில் தோன்றிய வேதாந்த பார்வையின் முதல் விதை.’ இந்த நவீன கோட்பாடு பெரிய அளவில் நிகழ்ந்த சமுகவியல் திறனாய்வுகளின் (critical research) துணைகொண்டுள்ளது. இன்னும் முதிர்ச்சியடையாத ஒப்பீட்டு-சொல்லாய்வியல், ஒப்பீட்டு-தொன்மவியல், ஒப்பீட்டு-மதவியல் போன்று ஊகம்சார் முறைமைகளைக் கொண்டு முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கும் அறிவியல் துறைகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

இக்கட்டுரையில் எனது நோக்கம் இந்த பழங்கால புதிரின் மேல் ஒரு புதிய பார்வையை முன்வைப்பதுதான். இந்த புதிருக்கு ஏற்கனவே கண்டடைந்த தீர்வுகளுக்கு எதிர்மறையாக கட்டுடைப்பாக எனது பார்வையை முன்வைக்கவில்லை. மாறாக, விரிவான அடித்தளத்திலிருந்து எழுப்பப்பட்ட, நேர்மறையான ஆக்கபூர்வமான ஒரு உப கருதுகோளாகவே முன்வைக்கிறேன். வழக்கமான கோட்பாடுகளால் சரியாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட தொல்சிந்தனை மற்றும் தொல்மதத்தின் வரலாற்றில் உள்ள ஓரிரு முக்கியமான புதிர்கள் மீது இது வெளிச்சத்தைப் பாய்ச்சலாம்.

மிகத் தொன்மையான மொழியில் வெளிப்படுத்தப்பட்ட வேள்வி சார்ந்த பாடல்களைக் கொண்ட ரிக் வேதம், ஐரோப்பிய அறிஞர்களால் உண்மையான மற்றும் ஒரே வேதம் என்று மதிப்பிடப்பட்ட இது, தீர்க்கமுடியாத பல புதிர்களைக் கொண்டுள்ளது. பிற்கால வழக்கில் காண முடியாத பழஞ்சொற்களும் வடிவங்களும் நிறைந்தது. அவற்றின் அர்த்தங்களை அறிவுசார் ஊகங்களைக் கொண்டு சற்று ஐயத்துடனேயே பொருத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இதிலுள்ள எண்ணற்ற சொற்கள் செவ்வியல் சமஸ்கிருத சொற்களுடன் ஒத்திருந்தாலும் அவை பிற்கால சொற்களைக் காட்டிலும் வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன அல்லது அவ்வாறு எண்ணுவதற்காவது இடமளிக்கின்றன. ரிக் வேதத்திலுள்ள எண்ணற்ற கிளவிகள் (vocables), குறிப்பாக அதிகம் வருபவையும் நன்கு அர்த்தப்படக்கூடியவையுமான கிளவிகளும் ஆச்சரியமளிக்கக்கூடிய அளவில் ஒன்றுடன் ஒன்று இணையாத அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஆகவே நாம் தெரிவு செய்யும் அர்த்தங்களைப் பொருத்து ஒரு சொற்றொடரோ ஒரு பாடலோ சற்று வேறுபட்ட தோற்றத்தை நமக்குக் காட்டலாம், அல்லது வேதத்தின் முழு சிந்தனையுமே கூட மாறுபடலாம். பல்லாயிர வருட கால ஓட்டத்தில் இந்தப் பழங்கால உச்சாடனங்களின் (litanies) அர்த்தங்களை உணர்ந்துகொள்வதற்கு பொருட்படுத்தத்தக்க மூன்று முயற்சிகள் நடந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கே உரிய முறைமைகளும் முடிவுகளும் கொண்டவை. அவற்றில் முதலாவது வரலாற்றுக் காலத்துக்கு முந்தையது, பிராமணங்களிலும் உபநிடதங்களிலும் அதன் சுவடுகள் உள்ளன. இரண்டாவது, முழுமையாக கிடைக்கும் இந்திய அறிஞரான சாயனரின் மரபார்ந்த விளக்கம். மூன்றாவது, நவீன ஐரோப்பிய அறிஞர்களால் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஒப்பீட்டாய்வு மற்றும் ஊகத்திற்குப் (conjecture) பின் கட்டுவிக்கப்பட்ட தற்காலத்திய விளக்கம். கடைசி இரண்டு முயற்சிகளும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போகின்றன - ஒத்திசைவின்மையும் அர்த்தம்கொள்ள முடியாமையும் தொல் வேதப்பாடல்களில் அசாதாரணமாக உள்ளன என முத்திரை குத்துகின்றன. ’தனித்தனி வரிகளை வாசிக்கும்போது, இயல்பாகவோ அல்லது ஊகிப்பதன் வழியாகவோ அவை ஒரு நல்ல அர்த்தத்தை கொடுக்கலாம். அதன் நடை அழகிய பாணியில் இருந்தால், அலங்கார அடைமொழியுடன் இருந்தால், அந்த சொற்குவியலில் இருந்து சிறிய அளவிலாவது பொருள்கொள்ள முடிந்தால், அது அறிவுரீதியான சொற்றொடராக உள்ளதென தோன்றலாம். ஆனால் வேத பாடல்களை மொத்தமாக வாசிக்கும் பொழுது அவை ஒத்திசைந்த வெளிப்பாட்டுணர்வு அல்லது தொடர்ச்சியான சிந்தனை முறைக்கு பழக்கப்படாதவர்கள் இயற்றியவை என்றே தோன்றும். எளிய மற்றும் சிறிய பாடல்களை தவிர்த்து பிற பாடல்களின் மொழி தெளிவற்றதாகவே தெரிகிறது. அவற்றின் சிந்தனைகள் தொடர்பற்றவையாகவும், விளக்கம் கொடுப்பவர் வலிந்து ஒரு முழுமைத்தன்மையை புகுத்துவதாகவுமே உள்ளது’ என்கின்றன. இரண்டிலுமே அறிஞர்கள் வேத பாடல்களை விளக்கம் அளிக்கப்பட்டாக வேண்டிய ஒன்றாக கையாள்கின்றனர், கிட்டத்தட்ட இயந்திரத்தனமாக அதை செய்கின்றனர். ஆனால் அவர்கள் வேதத்தை மடக்கி ஒடித்து உருக்கி ஒருவகையான வடிவத்திற்கு கொண்டுவருவதும் சீராக்குவதும் அதன் அர்த்தத்தை அவ்வளவாக வெளிப்படுத்தவில்லை என்பதை நாம் உணர்கிறோம்.

இருப்பினும் இந்த தெளிவற்ற பண்படாத பாடல்கள் மனிதகுல அறிதலின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உலகின் முக்கியமான பெருமதங்களின் தோற்றுவாயாக மட்டுமல்லாமல் அவற்றின் நுண்மையான மீபொருண்மை தத்துவங்களின் தோற்றுவாயாகவும் உள்ளன. பல்லாயிர வருட மரபில் இவை பிராமணங்கள், உபநிடதங்கள், புராணங்கள், தந்திரங்கள், வெவ்வேறு தத்துவபள்ளிகளுடைய கொள்கைகள், மெய்ஞானிகளுடைய அறிதல்கள் ஆகியவற்றின் தோற்றுவாய் ஆகவும் மதிப்பிடப்படுகின்றன. இதற்கு அவைகள் வைத்த பெயர் வேதம், அறிவு - மனித மனதால் எட்டமுடிந்த உச்சபட்ச ஆன்மீக உண்மைக்கான பெயர். ஆனால் சாயனர் மற்றும் தற்கால நவீன அறிதல்படி இந்த உன்னதமான, புனித, உயர் உண்மை என்பது ஒரு பெரும் புனைவு - ’வேதப்பாடல்கள் புற ஆதாயங்களையும் இன்பங்களையும் விழைந்த கல்வியற்ற பொருள்வய நோக்குள்ள நாகரீகமடையாத மக்களின் குழந்தைத்தனமான கற்பனைகள் தவிர வேறல்ல. எளிய அறக்கருத்துக்களையும் துவக்ககால மத நம்பிக்கைகளையும் மட்டுமே கொண்டவை. அவ்வப்போது இதை மீறி எழும் சில பாடல்களால் கூட இப்பார்வையை மாற்ற முடியாது. பிற்காலத்தைய மதங்களின், தத்துவ சிந்தனைகளின் முதல் மற்றும் உண்மையான மூலமாக கருதப்படுவது உபநிடதங்களே. அவை வேதத்தின் உலகியல் சடங்குத் தன்மையை எதிர்த்து தத்துவ நோக்கு கொண்டவர்கள் செய்த கிளர்ச்சி’.

ஆனால் இந்தப் பார்வையும் இதை ஆதரிக்கும் தவறான ஐரோப்பிய சிந்தனைகளும் உண்மையில் எதையும் விளக்குவதில்லை. உபநிடதங்களில் பொதிந்திருக்கும் ஆழமான முழுமையான சிந்தனைகளும், மிகநுண்மையான விரிவான உளவியல் அம்சங்களும் வெறுமையிலிருந்து முளைத்துவரவில்லை. மனித மனம் அதன் தேடலில் ஒரு அறிவிலிருந்து மற்றொன்றுக்கு செல்கிறது. அல்லது தெளிவற்ற முந்தைய அறிவை புதுப்பித்து விரிவாக்கிக்கொள்கிறது. அல்லது பழைய குறையுடைய இடங்களை கண்டடைந்து நீக்கி, அவ்விடங்களை புதியவற்றால் நிரப்பிக்கொள்கிறது. உபநிடத சிந்தனைகள் அதற்கு முந்தைய சிந்தனையை தோற்றுவாயாக கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் வழக்கமான கோட்பாடுகள் தோற்கின்றன. இதை சரிசெய்யவே உபநிடத கருத்துக்கள் நாகரீகமான திராவிடர்களிடமிருந்து பழங்குடி ஆரியர்களால் கடன்வாங்கப்பட்டது என்ற கருத்து உருவாக்கப்பட்டது. இது பிற ஊகங்களின் துணைகொண்டு நிற்கும் மற்றொரு ஊகம் மட்டுமே. பஞ்சாப் வழியாக ஆரியர்கள் ஊடுருவியது சொல்லாய்வாளர்களின் கட்டுக்கதையோ என தற்போது சந்தேகிக்க வேண்டியுள்ளது.

பண்டைய ஐரோப்பாவில் மறைஞானிகளின் கொள்கைகளை அடுத்தே அறிவுசார் தத்துவப்பள்ளிகள் வந்தன. ஆர்பிஸம் (orphism) மற்றும் எல்யூசினிய (Eleusinian) மறைஞானங்களே பிளேடோ மற்றும் பித்தகாரஸ் முளைப்பதற்கான விளைநிலத்தைப் பண்படுத்தின. இதே போன்றதொரு துவக்கப்புள்ளி இந்திய சிந்தனையின் பிற்காலத்தைய வளர்ச்சிக்கும் இருந்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் அதற்கான சாத்தியமாவது இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் உபநிடத சிந்தனைகளின் வடிவங்களையும் குறியீடுகளையும் மற்றும் பிராமணங்களின் உள்ளடக்கங்களையும் காண்கையில் இந்தியாவிலும் ஒருகாலத்தில் கிரேக்க மறைஞானத்தைப் போன்ற முறைமை அல்லது மறைவான கற்பித்தல் அம்சம் இருந்திருக்க வேண்டும் என நிச்சயம் ஊகிக்கலாம்.

தற்கால கோட்பாடுகளில் உள்ள மற்றோரு சிக்கல் என்னவென்றால் அது வேதத்திலுள்ள புறஇயற்கை சக்திகளின் வழிபாட்டையும், வளர்ச்சியடைந்த கிரேக்க மதங்களையும் பிரிக்கும் அகழி. மேலும் புறஇயற்கை வழிபாட்டையும், உபநிடதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் கடவுள்களின் செயல்பாடுகளுடன் இணைந்த உளவியல் மற்றும் ஆன்மீக கருத்துக்களையும் பிரிக்கும் அகழி. தற்கால கோட்பாடுகள் ’மனிதர்களுடைய மதத்தின் துவக்ககால முழு வடிவம் என்பது தன்னில் அவன் கண்டடைந்த ஆளுமையையும் பிரக்ஞையையும் புறஇயற்கை சக்திகளுக்கு கொடுத்து அவற்றை வழிபாடு செய்ததுதான். ஏனெனில் புவியில் மனிதர்கள் புறவயமாக தொடங்கி அகவயமாக செல்பவர்கள்’ என்ற கருத்தை முன்வைக்கின்றன. இந்த அளவிற்கு அக்கோட்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

வேதத்தில் அக்னி என்பவன் தீ, பர்ஜன்யா என்பவன் மழைமேகம், உஷை என்பவள் விடியல், மற்றும் சூரியன் போல மற்ற கடவுளர்களின் புறவய தோற்றுவாய் அல்லது செயல்பாடுகள் சற்று தெளிவாக தெரிந்தால் சொல்லாய்வியல் அனுமானம் மூலமாகவோ மிகப்பொருத்தமான ஊகம் மூலமாகவோ வேதப்பாடல்களில் தெளிவில்லாத பகுதிகளுக்கு விளக்கமளிப்பது எளிதாக இருக்கும். வேத காலத்திற்கு மிகவும் பிந்தையது என சொல்லமுடியாத கிரேக்க வழிபாட்டை (நவீன காலவரிசை முறைப்படி) பார்த்தால் அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கடவுள்களின் புறவய பண்புகள் கைவிடப்பட்டு, அவை உளவியல்சார் கருத்துருவங்களுக்கு கீழ்நிலையில் இருப்பதாக மாற்றப்பட்டுள்ளன. கட்டுக்கடங்காத ஆற்றல்மிக்க தீயின் கடவுள் நொண்டியாக உழைப்பின் கடவுளாக மாற்றப்பட்டுள்ளார். சூரிய கடவுளான அப்போலோ கவித்துவம் மற்றும் தீர்க்கதரிசனத்தை தூண்டும் கடவுளாக மாற்றப்பட்டுள்ளார். ஆதியில் விடியலின் தெய்வமாக இருக்கலாம் என அடையாளப்படுத்தப்படும் ஏதேன் தனது புற அடையாளங்கள் அனைத்தும் மறக்கப்பட்டு விவேகத்தின், அறிவின் கடவுளாக மாறியுள்ளாள். இதுபோல் போரின், காதலின், அழகின் கடவுள்களுடைய புறச்செயல்பாடுகள் அவைகள் இருந்தனவோ என்று எண்ணும் அளவிற்கு மறக்கப்பட்டுவிட்டன. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் இது தவிர்க்கமுடியாத மாற்றம் என்று சொல்வது மட்டும் போதாது, இம்மாற்றத்தை குறித்த விரிவான ஆய்வும் தெளிவும் தேவை. இதே மாற்றத்தை நாம் புராணங்களில் காணலாம். ஒரு தெய்வத்திற்கு வேறு தெய்வகளின் பெயர்களையும் வடிவங்களையும் பொருத்தியதன் வழியாகவும், மேற்சொன்ன கிரேக்க தொன்மங்களின் பரிணாம வளர்ச்சியில் நாம் பார்த்தது போலவும் அம்மாற்றம் இங்கு நிகழ்ந்துள்ளது. சரஸ்வதி நதி கல்வி மற்றும் படைப்பூக்கத்தின் கடவுளாக மாற்றமடைந்துள்ளாள். வேதத்தின் விஷ்ணுவும் ருத்ரனும் இன்று பெருந்தெய்வங்கள், மும்மூர்த்திகளுள் இருவர், காத்தல் அழித்தல் ஆகிய தனித்தனி பிரபஞ்ச செயல்பாட்டை கொண்டவர்கள். ஈஷா உபநிடதம் சூரியனை அறிவை வெளிப்படுத்தும் கடவுளாக பார்க்கிறது. அவரின் செயல்பாடுகள் மூலமே நாம் உயர் மெய்மையை அடையமுடியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பிராமணர்கள் தினமும் தியானிக்கும் காயத்ரி மந்திரத்திலும் சூரியனின் செயல்பாடு இதுவே. அது விஸ்வாமித்ரர் இயற்றிய ரிக்வேத பாடல் ஒன்றின் வரிகள் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஈஷா உபநிடத்தில் அக்னி முழுக்கமுழுக்க அறச் செயலுக்கான கடவுளாக சொல்லப்படுகிறார். தீவினைகளை தீர்ப்பவராக, ஆன்மாவை நல்வழிப்படுத்தி நித்ய ஆனந்தத்தை அடையச் செய்யும் ஆன்ம தலைவனாக, மனித செயல்களுக்கு பொறுப்பாளராக உள்ளார். மனித இச்சையின் ஆற்றலுடனும் தொடர்புபடுத்தப்படுகிறார். ஏனைய உபநிடதங்களில் கடவுள்கள் மனித உணர்வுச் செயற்பாடுகளின் (sense-functions) குறியீடுகளாக உள்ளனர். சோமன், வேத யாகத்திற்கு ஆகுதியாகும் சோமத்தை வழங்கும் சோம தாவரம், நிலவின் கடவுளாக மட்டும் ஆகவில்லை, மனிதர்களிடத்தில் அவர்களின் மனமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். இந்த பரிணாம மாற்றங்கள் உலகியல்சார்ந்த வழிபாடு நிகழ்ந்த துவக்ககாலத்திற்கு (அனைத்திலும் இறையை உருவகித்து, பல இறை உருவங்கள் உருவகிக்கப்பட்டு வேதத்தில் இடம்பெற்ற காலம், Pantheistic Animism) பின்பான, கடவுள்கள் ஆழமான உளவியல் செயல்பாடுகளுடன் தொடர்புறுத்தப்பட்ட புராணங்கள் வளர்ந்த காலகட்டத்திற்கு முன்பான, ஒரு புதிரான காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது இங்கு ஒரு அகழி விடப்பட்டுள்ளது, அல்லது வேதரிஷிகளின் மதத்தில் புறஇயற்கை சார்ந்த அம்சங்களையே பெரிதும் கருத்தில் எடுத்துக்கொண்ட நம்மால் அது உருவாக்கப்பட்டுள்ளது. 

அந்த அகழி நம்மால் உருவாக்கப்பட்டது என்றே நான் சொல்வேன். பழங்கால ஆக்கங்களில் அது இல்லை. நான் முன்வைக்கும் கருதுகோள் என்னவெனில், ரிக் வேதம் தன்னளவில் மனித சிந்தனையின் துவக்க காலத்தில் இருந்து எஞ்சி இன்று நமக்குக் கிடைக்கும் ஒரு ஆவணம். இதன் எச்சங்களை வரலாற்றுரீதியான ஆர்பிஸம் (orphism) மற்றும் எல்யூசினிய (Eleusinian) மறைஞானங்களில் காணலாம். அந்த துவக்க காலத்தில் ஆன்மீக மற்றும் ஆழ்மன அறிதல்களை ஆன்மீக சார்பற்றவர்களிடமிருந்து (profane) மறைக்க புறவய வடிவங்கள் கொண்டும் குறியீடுகள் கொண்டும் அவை மூடப்பட்டன. அதன் காரணத்தை இன்று கண்டறிவது கடினம். தகுதிபெற்றவர்களுக்கு மட்டுமே அது திறக்கப்பட்டது. மறைவாதத்தின் முக்கியக் கொள்கையே தன்னறிவு மற்றும் கடவுள்கள் குறித்த உண்மையான அறிவின் புனிதத்துவமும் மந்தணமும் தான். இந்த ஞானம் சாதாரண மனித மனத்திற்கு தேவையற்றது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்றே அவர்கள் கருதினர். இழிவானவர்களுக்கும் புனிதமற்றவர்களும் இது வெளிப்படுத்தப்பட்டால் இந்த ஞானத்தை தவறாக பயன்படுத்தி அதை கலக்கமடையச் செய்யவும் கூடும். ஆதலால் அவர்கள் வெளிப்புறத்தில் புறவயமான வழிபாடு இருப்பதை ஆதரித்தனர். இது பயனுள்ளது ஆனால் முழுமையற்றது, தகுதியற்றவர்களுக்கானது. அவற்றின் உள்ளுறை பொருள் தகுதிபெற்றவர்களுக்கானது. மிகச்சிலருக்கு மட்டுமே உரிய ஆன்மீக அம்சத்தையும், பெருவாரியான மக்களுக்கு உரிய வழிபாட்டு அம்சத்தையும் சமமாக கொண்ட படிமங்களாலும் வார்த்தைகளாலும் தங்களின் மொழியை திரையிட்டு மூடியுள்ளனர். இந்த கொள்கையின் படியே வேதப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில், வேதப்பாடல்கள் மீதுள்ள விதிகளும் முறைமைகளும் பலதெய்வ-இயற்கை வழிபாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட புறவய சடங்கை விவரிக்கின்றன. உள்ளார்ந்து, வேதப்பாடல்களில் உள்ள புனித சொற்கள் மறைமுகமாக ஆன்மீக அனுபவம், ஞானம், அக-அறிதல் ஆகியவற்றின் சிறந்த குறியீடுகளாக மனித இனத்தின் அதி உச்ச சாதனையாக உள்ளன. அவற்றில் சாயனர் கண்டடைந்த சடங்கு முறை வெளிப்புறமாக இன்றும் நிலவிவருகிறது. ஐரோப்பிய அறிஞர்கள் கண்டடைந்த புற இயற்கை அம்சமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் இவற்றை கடந்தே உண்மையான மற்றும் இன்றும் மறைந்திருக்கும் வேதத்தின் மறைபொருள் (ரகசியம்) உள்ளது. ‘நின்யா வசாம் ஸி’ என்ற மறை வார்த்தை ஆத்ம புனிதமும் அறிவுவிழிப்பும் கொண்டவர்களுக்கே சொல்லப்பட்டுள்ளது. அதிகம் வெளிப்படாத ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அம்சத்தை கட்டவிழ்க்க வேத சொற்கள், வேத குறியீடுகள், கடவுள்களின் ஆழ்மன உளவியல் செயல்பாடுகள் ஆகியவற்றின் மறை பொருளை அறிய வேண்டும். இது கடினமான ஆனால் இன்றியமையாத பணி. இந்த நூலிலுள்ள அத்யாயங்களும் மொழிபெயர்ப்புகளும் இதற்கான முன் தயாரிப்பு மட்டுமே.


இந்த கருதுகோள் சரியென நிரூபிக்கப்பட்டால் இதன் விளைவாக மூன்று பலன்கள் உண்டு. ஒன்று, முழுமையாக புரிந்துகொள்ளப்படாத அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட உபநிடதங்களின் பகுதிகள் விளக்கப்படும். அவற்றுடன் புராணங்களின் தோற்றுவாய்களும் விளக்கப்படும். இரண்டாவது, இந்தியாவின் முழு பழங்கால மரபும் தர்க்கரீதியாக விளக்கப்படும். மூன்றாவது, இதன் விளைவாக வேதாந்தம், புராணம், தந்திரம், பல்வேறு தத்துவப்பள்ளிகள், இந்தியாவின் மதத்தான மதங்கள் ஆகியவற்றின் தோற்றுவாய் வேதத்தில் இருப்பது அறியப்படும். அங்கு அவற்றின் விதைகள், பிற்கால இந்திய சிந்தனைகளின் துவக்க வடிவங்கள் அல்லது முதிர்ச்சியற்ற வடிவங்களாக இருப்பதை காணலாம். இது இந்தியக்களத்தில் மத-ஒப்பாய்வு நிகழ்துவதற்கான நல்ல துவக்கப்புள்ளியை கொடுக்கும். இதன்மூலம் உறுதியற்ற ஊகங்களுக்கு இடையில் தேடி அலைவதற்கு மாறாக, சாத்தியமற்ற அல்லது விளக்கமுடியாத மாற்றங்களை விளக்க முற்படுவதற்கு மாறாக, நாம் தர்க்கத்திற்கு ஏற்றவாறு இயல்பாக முன்னகரும் ஒரு வளர்ச்சிப்போக்குக்கான தடங்களைக் கண்டறியலாம். மேலும் பிற தொல்நாடுகளில் இருந்த, இன்னும் தெளிவுபடுத்தப்படாத தொல் வழிபாடுகள் மற்றும் தொன்மங்கள் மீதும் சற்று வெளிச்சம் பாய்ச்சப்படலாம். இறுதியாக, வேத நூலிலுள்ள தொடர்பின்மையும் ஒத்திசைவின்மையும் விளக்கப்பட்டு மறையும். அது வெளிப்புறத்தில் மட்டுமே உள்ளது, ஏனெனில் வேதம் உணர்த்தும் ஞானச் சரடு அதன் உள்ளுறைபொருளில் உள்ளது. இந்த சரடை கண்டடைவதன் வழியாக வேதப்பாடல்கள் தர்க்கரீதியாக, இயல்பான முழுமையுடன் வெளிப்பட்டவை என்பதைக் காணலாம். அதன் வெளிபாட்டுமுறை இன்றைய நவீன சிந்தனை மற்றும் பேச்சு முறைக்கு அந்நியமானதாக தெரிந்தாலும் அது வேதத்திற்கே உரிய பாணி; அழகும் துல்லியமும் ஒருங்கே வெளிப்பட்டைவை. மிகையான சொற்களைக் கொண்டல்லாமல் குறைவான சொற்கள் வழியாக அதீத அர்த்தத்தை வெளிப்படுத்துபவை. வேதம் நாகரீகமற்ற மனிதர்களின் எச்சமாக பார்க்கப்படுவதை தகர்த்தெரிந்துவிட்டு உலகின் தொடக்ககால ஆக்கங்களுள் மிக முக்கியமான ஒன்றாக இடம்பெறும். 

=================

மூலம்: ஸ்ரீ அரவிந்தர் எழுதிய 'The secret of Veda' நூலின் முதல் அத்யாயம் - The problem and its solution.

மொழிபெயர்ப்பு - சியாம், தாமரைக்கண்ணன் அவினாசி


ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) யோகி, தத்துவஞானி, கவிஞர் மற்றும் இந்திய தேசியவாதி. இந்திய தேசிய விடுதலையில் இந்திய தத்துவ சிந்தனையை முன்வைத்து பேசிய ஆன்மீக சிந்தனையாளர்களில் ஒருவர்.



சியாம், மொழிபெயர்ப்பாளர். தஞ்சாவூரைச் சேர்ந்தவர், தற்போது சென்னையில் பணிபுரிகிறார். இலக்கிய வாசகர்.