November 06, 2026

வேதம் : காப்பாளன் - அனங்கன்

Text:

 


அம்மாவின் மடியில் புடவைக்குள் ஒளிந்துகொண்டிருந்தேன். இரவு நேரம். ஐப்பசி மாத மழை வானைக்கிழித்துக்கொண்டு நேரே பூமியில் கொட்டிக்கொண்டிருந்தது. தொலைவிருந்து ஆரம்பித்த பேரோசை எங்கள் வீட்டை கடந்து சென்று எங்கோ பேரொலியுடன் மோதியது. நான் மேலும் அம்மாவில் புதைந்துகொண்டேன்.

 

அப்பா ‘அர்ஜுனான்னு சொல்லு’ என்றார்.

 

 ‘சொன்னா என்னாகும்’ என்றேன்.

 

அப்பா ‘உன்னுடைய பயமெல்லாம் பறந்து போய்டும், ஏன்னா அர்ஜுனன் மாவீரன், இந்திரனுடைய பிள்ளை இல்லையா, இந்திரன் தான் இடி மின்னல் மழைக்கு அரசன், அதனால நம்மள ஒன்னும் பண்ண மாட்டான்’ என்று இந்திரன் விருத்தாசுரனை வதம் செய்த கதையை சொல்ல ஆரம்பித்தார். இந்திரன் விருத்தனை கொல்வதற்கு முன் நினைவிழந்து தூங்கி விட்டேன். தேவர்களுக்கு அதிபதியும் பல புராணக்கதைகளில் தோன்றும் இந்திரன் அன்று என் கனவில் தன் வாகனமான ஐராவத்தின் மேல் பேரொளியுடன் தோன்றினான்.

 

இந்திரனை ரிக் வேத கால ரிஷிகள் ஒவ்வொரு முறையும் துதித்து அழைக்கும் போது தங்களுக்கு பாதுகாப்பளித்து காத்தருள வர வேண்டும் என்று அழைப்பதை பார்க்க முடிகிறது.

 

ரிக் வேதத்தில் இந்திரன் பற்றி பாடப்படும் முதல் வரியிலேயே தங்களை காக்க இந்திரனை அழைக்கிறார் மதுச்சந்தச வைஷ்வாமித்திரன்.

 

நற்செயல்களை
வழி நடத்தும்
இந்திரனை!

 

கறப்பதற்கு
பசுவை
அழைப்பது போல்
எங்களின்
பாதுகாப்பிற்காக
அழைக்கிறோம்.

 

ஸோமத்தை பருகுவனே!
எங்கள் வேள்வியில்
எழுந்தருளி
ஸோமத்தை
பருகுவாயாக

 

உன்னுடைய
நிறைவு
எங்களுக்கு
செல்வங்களையும்
ஆநிரைகளையும்
அளிக்கவல்லது.

 

உன் அருகில்
எப்போதும்
நல் அறிஞர்கள்
இருப்பர்
உன்னை
அவர்களின்
நடுவே
உணர்கிறோம்

 

மேலும்
அறிஞர்களுக்கு
உன்னை
புலப்படுத்த விரும்புகிறோம்
இங்கு
எழுந்தருளுவாயாக
எங்களை
புறக்கணித்து விடாதே.

 

வேத கால கடவுள்களில் இந்திரனே தலைவன். பகைவர்களை அழித்து செல்வங்களை வழங்கி தன் கொடைக்கீழ் நல்வாழ்வு அளிப்பவனை அவ்வாறு தானே சொல்ல முடியும்.

 

பகை அழிப்பவனே!
எங்களுடைய
பகைவர்கள்
வளமுடையவர்கள் என்று
எங்களை
நினைப்பார்களாக

 

நண்பர்கள்
வாழ்த்துவார்களாக

 

நாங்கள்
உன்னுடைய
ஆதரவால் பெற்ற
நலத்தில்
எப்பொழுதும்
இருப்போமாக.

 

இந்த வேத மந்திரங்கள் ரிக் வேதம் முதல் மண்டலத்தில் நான்காவது அனுவாகத்திலிருந்து பதினொன்றாம் அனுவாகத்தில் வருகிறது. இவை இந்திரனுக்கான பாடல்கள். ரிக் வேதத்தில் முதன் முதலில் இந்திரன் பற்றி கூறப்படும் இந்த வரிகளிலேயே ஆநிரைகளை அளிப்பவன், சோமத்தை பருகுபவன், பகைவர்களிடமிருந்து காப்பவன், வஜ்ராயுதம் ஏந்தியன், விருத்திரனை வென்றவன், மழையை பொழிபவன், போரில் வீரர்களை காப்பவன் என இந்திரனின் அனைத்து பண்புகளையும் மனுசந்தஸ் விவரிக்கிறார்.

 




இந்த ரிக் வேத பகுதியில் வரும் இந்திரனுக்கும் பிற்பாடு புராணங்களின் வரும் இந்திரனுக்கும் நுண்மையான வேறுபாடு இருக்கிறது. இந்த 'வேத இந்திரனே' உலங்களை காக்கவும் வளங்களை அளிப்பவனாக இருக்கிறான். பிற்காலத்தில் புராணங்களில் தேவர்களுக்கும், மானிடர்களுக்கும் ஏற்படும் இடர்களை அகற்றி காப்பதற்கு விஷ்ணு அவதரிப்பார். அதற்கு முன் மானிடர்களை காக்கும் தொழிலை இந்திரன் செய்து வந்துள்ளார்.

 

வேள்விகளில்
அனைத்திலும்
நிறைந்திருப்பவனான
இந்திரனுக்கு

 

மூன்று வேள்விகளில்
பிழியப்படுவதும்
வேள்வியின் செல்வமும்
மானிடத்தை
மகிழ்விப்பதும்
வேள்வியை
நிறைவுக்கு
இட்டு செல்வதும்
இன்பங்களை
தர வல்லதால்
விருப்பத்திற்குரியதுமான
சோமத்தை
அளிக்கிறோம்.

 

வேள்விகளில் அளிக்கப்படும் அவிஸ் முதன்மையாக இந்திரனுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. வேள்வியின் தலைவனாக இந்திரன் இருந்துள்ளான்.

 

நண்பர்களே!
அருகில் வாருங்கள்

 

துதி பாடுபவர்களே!
இங்கு அமர்க
இந்திரனின் புகழ்
பாடுவோம்

 

பல செல்வங்களை
வழங்குபவனும்
பகைவர்களை
அழிப்பவனுமான
இந்திரனை
சோமத்தை
பிழியும் பொழுதில்
போற்றுங்கள்.

 

இந்திரன்
எங்களுடைய
செயல்களை
செல்வங்களை
அறிவை
அடைவதற்கு
துணைபுரியட்டும்

 

அவன்
இங்கு
உணவுடன்
எழுந்தருளுக.

 

இந்திரன் தன் தேரில்
குதிரைகளை பூட்டுவதற்குள்
பகைவர்கள் புறம் காட்டி
ஓடிவிடுவர்.

 

தூய்மையான ஸோமத்தை
பருகும் இந்திரனை
மகிழ்விக்க
எரியில் மேலும்
ஸோமத்தை பிழிவோம்.

 

ஸோமம் இந்திரனை
வலிமையாக்கட்டும்.
அவனை ஸாம கானத்தால்
பாடுவோம்.
ரிக் வேதத்தால் பாடுவோம்.
எங்கள் பாடல்
அவனை வலிமையாக்கட்டும்.
குன்றா வலிமையுடைய இந்திரன்
எங்களுக்கு காப்பாகுக.

 

இந்திரனின் தோற்றுவாய் பற்றி ரிக் வேதத்தில் இருப்பது போல் தெரியவில்லை. வீடில்லா விரிந்த நிலத்தில் வாழ்ந்து குகைக்குள் தஞ்சம் புகுந்து இடி மின்னலுடன் கூடிய குன்றா பெருமழையின் தூய ஆற்றலை பீதியுடன் நோக்கிய ரிஷிகள் இந்திரனை என்றும் உள்ள ஒரு பெரும் ஆற்றலாக உணர்ந்திருக்க வேண்டும்.

 

நூறு செயல்களை புரிபவன்
நீ
ஶதக்ரது!

 

உன்னை
ஸாம கானமும்
ரிக் வேத கோஷமும்
எங்கள் துதிகளும்
இணைந்து
மேம்படுத்தின.

 

இந்திரனே!
துதிகள்
உனக்குரியவை

 

பிறர்
எங்களை
துன்புறுத்தாமல்
இருக்கட்டும்

 

ஆட்சி செலுத்துபவனான நீ
ஈஶானன்!
எங்கள் துன்பங்களை
விலக்க செய்வாயாக.

 

கானம் செய்பவர்கள்
ஸாம கானத்தாலும்

 

ரிக் வேதிகள்
ரிக் வேத பாடல்களாலும்

 

யஜுர் வேதிகள்
யஜுர் மந்திரத்தாலும்

 

உன்னையே
போற்றுகின்றனர்.

 

பிறருக்கு
கூறப்படும்
துதிகளும்
உனக்கே உரியவை

 

அதனால்
உனக்கேற்ற
துதிகளை
நாங்களை
அறியவில்லை.

 

தனித்து ஆட்சிசெலுத்துபவன்
நீ
ஏகன்!

 

புவியில் உள்ள
மனிதர்களையும்
செல்வங்களையும்
ஐந்து
நிலங்களையும்
நீயே
ஆட்சி செய்கிறாய்.
மழையை
பொழிபவனும்
வீரத்தால்
தலைவனும்
மறுத்துரைக்க
இயலாதவனான
இந்திரன்!

 

ஆநிரைகளை காக்கும்
காளையை போன்று
மானிடர்களை
காக்கிறான்.

 

மனிதர்கள் மனிதர்களான பின் புராணங்களை சமைக்கும் போது இந்திரனின் கொடி வழி விஷ்ணு பிரம்மா மரீசி கஷ்யபர் என்று வருகிறது. இந்தியாவின் தொன்மங்களையும் கதைகளையும் முழுவதுமாக தொகுக்க முற்பட்ட மஹாபாரதத்தில் உயிர் குலங்களின் தோற்றுவாய் பற்றி விவரங்கள் நமக்கு கிடைக்கிறது. அதில் இந்திரனின் பிறப்பும் கூறப்படுகிறது.

 

பிரம்மாவிடமிருந்து மரீசி அத்ரி அங்கிரஸ் புலஸ்தியர் புலஹர் தோன்றினர். மரீசியின் மகன் கஷ்யபர். கஷ்யபரிடமிருந்தே உயிர் குலங்கள் எழுந்தன. பிராஜாபதிகளில் ஒருவரான தக்ஷனிடமிருந்து பதிமூன்று மகள்கள் பிறந்திருந்தனர். அதிதி, திதி, தனு, காலை, தனாயு, சிம்ஹிகை, குரோதை, பிராதை, விஸ்வை, வினதை, கபிலை, முனி, கத்ரு ஆகியோர் தோன்றினர். தக்ஷனின் முதல் மகளான அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான பனிரெண்டு ஆதித்யர்கள் தோன்றினர். தாதா, மித்ரன், அர்யமா, ருத்ரன், இந்திரன், வருணன், பகன், விவஸ்வான், பூஷா, சவிதா, த்வஷ்டா, விஷ்ணு ஆகியோர் தோன்றினர். மேலும் அதிதி இருபத்தி ஒன்று புதல்வர்களை பெற்றாள். அவர்களுள் மூத்தவனாக இந்திரன் கருதப்படுகிறான்.

 


ரிக் வேத கால இந்திரன் தூய ஆற்றலின் வடிவமாக இருக்கிறான். அவனுடைய முக்கிய குணங்களாக இருப்பது மழையைப் பொழிபவன். ஆநிரைகளை வழங்குபவன். பகைவர்களிடமிருந்து காப்பவன். பாதுகாப்பு அளிப்பவன். விருத்தாசுரனைக் வதம் செய்து மழையை விடுவித்தவன். இந்திரனுடன் இணைந்தே விருத்தாசுரனும் ரிக் வேத வரிகளில் தோன்றினாலும் அவர்களுடைய யுத்த கதை வேத வரிகளில் வருணிக்கப்பட்டாலும் முழுவதுமாக பிற்காலத்தில் புராணங்களில் தான் கிடைக்கிறது. ரிஷி ஹிரண்யஸ்தூபன் ரிக் வேதம் முப்பத்திரண்டாம் அனுவாகத்தில் இந்திரன் விருத்தாசுரனை வதம் செய்ததை பாடுகிறார்.

 

நான்
வஜ்ராயுதம் ஏந்திய
இந்திரன்
இயற்றிய
முதன்மை வீர
செயல்களை
பாடுகிறேன்

 

அவன்
மேகத்தை பிளந்து
மழையை
விடுதலை செய்தான்

 

அவன்
மலைகளின்
பாதையை
வழிவகுத்தளித்தான்.

 

மலைகளுக்குள்
ஒளிந்திருந்த
விருத்தனை
இந்திரன் கொன்றான்
அவனுடைய வஜ்ராயுதத்தை
த்வஷ்டா
கூர்மைப்படுத்தினான்

 

கன்றுகளை
தேடி கண்டடைந்த
ஆநிரை போல்
நீர்
கடலை
அடைந்தன.

 

வேகமான
காளையை போன்ற
இந்திரன்
சோமத்தை
பருகினான்

 

அவன்
முவ்வேள்வியில்
சொரியப்பட்ட
சோமத்தை
பருகினான்

 

செல்வ செழிப்பானவனான
மகவான்!
தன் வஜ்ராயுதத்தை
எடுத்து
மேகங்களின்
நடுவில் தோன்றிய
அஹியான
விருத்தனை
கொன்றான்.

 

இவ்வாறு இந்த இரண்டு அனுவாகம் முழுவதும் இந்திரன் விருத்தனை கொன்றதை பாடுகிறது. ஆனால் கதையாக அவை வேதத்தில் இடம் பெறவில்லை. கதைகளை பாடும் காலத்திற்கு முன்னே கூட இவை பாடப்பட்டிருக்கலாம். தொல் பிரதியான(primitive text) ரிக் வேதத்தில் 'கதைகள்' 'தெய்வங்கள்' விதைகளாகவே இருக்கின்றன. பிற்காலத்தில் அவை முளை விட்டு வளர்ந்ததே புராண காலகட்டமாக இருக்க முடியும். இந்திரன் மட்டும் அல்ல விஷ்ணுவை பற்றிய பாடல்களுமே இவ்வாறு அமைந்தவை தான். மூவுலகை அளந்தவன் என்று கூறும் வேதம் எப்போது எதனால் என்று கூறுவதில்லை. அவை பிற்காலத்தில் விரிவாக்கப்பட்டு புராணமாக ஆக்கப்படுகிறது.

 

விருத்திராசுரனுடைய கதையும் மஹாபாரதத்தில் வருகிறது. விருத்தாசுரன் காலகேயர்களுடன் தேவர்களை தாக்கினர். விருத்திராசுரனின் அம்பு மழையால் தாக்கப்பட்ட இந்திரன் மயக்கமடைந்தான். அவனை மயக்கம் தெளிவித்தார் வசிஷ்டர். தேவர்கள் விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். விஷ்ணு ததீசி முனிவரின் முதுகு எலும்பைக் கொண்டு ஒரு ஆயுதம் தயாரித்தால் விருத்திராசுரனை கொல்ல முடியும் என்று ஆலோசனை வழங்கினார். தேவர்கள் முனிவரை வணங்கி உதவி நாடினர். முனிவரும் தன் எலும்பை வழங்க முன் வந்தார். அதை வஜ்ராயுதமாக ஆக்கி இந்திரன் விருத்தனை கொன்றான்.

 

இந்திரன் முதன்மையாக மழையை பொழிபன் என்று ரிக் வேதம் போற்றுகிறது. வானிலிருந்து நிலம் நோக்கி வரும் மழையை மொழி முழுமையாக திரளாத மனம் கொண்ட ரிஷிகள் வானிலிருந்து தங்களுக்கு தெய்வம் அளிக்கும் வரமாகவே நினைத்தனர். அந்த இறை நினைத்தால் நிலம் இரண்டாக பிளக்கும். நிலத்தை புரட்டிப்போட முடியும். அவர்கள் வாழ்வு வானிலிருந்து அருளாகவும், கோபமாகவும் இறங்கி வரும் பேராற்றல். அதை ஆள்பவன் இந்திரன்.

 

நாங்கள் வாத்தியாரை சுற்றி இரு அரை வட்டங்களாக அமர்ந்திருந்தோம். அன்று எங்கள் பாடசாலைக்கு தீக்ஷிதர் ஒருவர் வந்திருந்தார். யஜுர் வேத கனபாடி. தன்னுடைய சுய பிரிவு வேத பாகத்தை முடித்து ரிக் வேதமும் முழுமையாக கற்றிருந்தார். சாமத்திலும் முக்கால் பகுதியை முடித்திருந்தார் தீக்ஷிதர். அவர் வழியில் வந்த மாணவர்கள் விலகி ஒதுங்கி பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவருக்கு பின் அவருடைய மகன் வேதம் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருப்பான். அவனும் ஸ்வசாக்கையை பயின்று முடித்து இரண்டாவது வேதத்தை கற்றுக்கொண்டிருந்தான்.

 

நாங்களை தீக்ஷிதர் பற்றி முனுமுனுப்பதை எங்கள் வாத்தியார் கேட்டிருந்தார். அப்போது எங்களுக்கு பாடம் சொல்ல வேண்டிய பகுதி காடகம். கடோபனிஷத்தின் வேத பாகம். வாத்தியர் ‘இந்த தீக்ஷிதருக்கு முன்னே ரொம்ப காலத்திற்கு முன்னாடி ஒருவர் இருந்தார். வேதத்தை முழுவதுமாக ஓதி முடிக்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் தன் வாழ்வு முழுக்கவும் வேதத்தை கற்று ஓதியபடியே இருந்தார். அவர் முன் இந்திரன் தோன்றினார்’.

 

பரத்வாஜர்!
மூன்று முழு
ஆயுட் காலம்
பிரம்மசாரியாக இருந்து
வேதம்
ஓதினார்.

 

இந்திரன்
பரத்வாஜர் முன்
தோன்றினான்.

 

பரத்வாஜரே!
நான்
உமக்கு
நான்காவது முழு பிறவி
ஆயுளையும்
அளிக்கிறேன்.

 

அவ்வாயுளில்
என்ன செய்வீர்கள்?

 

பரத்வாஜர்!
பிரம்மசாரியாக இருந்து
வேதம்
ஓதுவேன் என்றார்.

 

இந்திரன்!
அங்கே தெரியும்
மூன்று
பெரு மலைகளை
காணுங்கள்.

 

அவை
நீங்கள்
கற்க வேண்டியவை.

 

இங்கே
மூன்று கை பிடி
அளவு
மண் உள்ளது.

 

இவை
நீங்கள்
கற்றவை.

 

பரத்வாஜரே!.
வேதம்
என்றால் என்ன?
அது
எல்லையற்றது.

 

இந்த கதையையும் வேதத்தையைம் எனக்கு சொல்லி கொடுத்த என் வாத்தியார் இன்று இல்லை. மூன்று ஆயுட்காலம் வேதம் ஓதிய ரிஷி பரத்வாஜர் இல்லை. ஆனால் அவர்கள் ஓதிய வேதம் இருக்கிறது. அதில் உறைந்துள்ள தெய்வங்கள் அப்படியே இன்றும் இருக்கின்றன. அவர்களுக்கு தலைவனாக இந்திரன் என்றும் இருப்பான்.

அனங்கன்

வேதம்: முதல்வினா