பதுமை சொன்னது - 1 பஞ்சவர் தூதன் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி
![]() |
“தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே“
தொல்காப்பியத்தில் செய்யுளியல் குறித்து விளக்கும் வரி இது, செய்யுளோடு வரும் உரை கதைகளைக்கொண்டிருக்கும் என்பது இதன் பொருள். இங்கு தொன்மை என்று சொல்லப்படுவது பழங்கதைகள், வாய்மொழி வழக்காறுகள், புராணங்கள் இவையே. கதைகள் எண்ணற்கரிய பழமை கொண்டவை என்பதாலேயே இங்கு தொன்மை என்று சுட்டப்படுகின்றன. தெளிவாக மொழி ஒன்று உருவாகி வரும் முன்னமே கதைகள் இங்கு தோன்றியிருக்கலாம், குகை ஓவியங்கள், பாறைச்செதுக்குகள் இவற்றில் காட்சிகளாக கதைகள் தென்படத்தான் செய்கின்றன. மனம் என்ற ஒன்று தோன்றியபோதே, அருவமாக கதைகள் உதித்திருக்கக்கூடும். நீண்ட காலமாக மொழி தோன்றுவதற்காக அவை காத்திருந்திருக்கின்றன.
சொல்லப்பட்டு சொல்லப்பட்டுதான் கதை வளர்கிறது, அதன் நுட்பங்கள் கூடிச்செல்கின்றன. செவ்வியலின் மறுக்கமுடியாத கூறு கூறியவற்றை மீண்டும் சொல்லுதல், அதன் அடுத்த பக்கம் அழகியலின் அடுத்த படிநிலைகளை அடைவதற்கான உத்தேசம். இராமன் கரியவன் என்பதை கம்பன் முதற்காண்டத்திலேயே சொல்லிவிடுவான், அடுத்தடுத்து அதே பொருளில் பாடல்களை கோர்த்துச்செல்வான், மையோ மறிகடலோ என்று அழகின் உச்சமாக ஒரு பாடல் அங்கு வந்து விழும். இதுவே செவ்வியல் இயங்கும் விதம். இதை கூறியது கூறல் என்று ஒதுக்குபவர்களை சீதையின் அணிகலன்களை அணிந்து பார்த்த புறநானூற்று வானரங்களோடு ஒப்பிடலாம்.
பெருங்கதைகளான பாரதமும், இராமாயணமும் தமிழுக்கு வந்த காலம் நமக்கு துல்லியமில்லை. சங்க இலக்கியங்களில் முழுக்கதையாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் உவமைகளாக இராமாயணமும், பாரதமும் எடுத்தாளப்படுகின்றன. மேலேசொன்ன புறநானூற்று உவமை போன்ற ஓரிரு சங்கப்பாடல்களில் மட்டும் தோன்றும் இராமாயணத்தை விட்டு விட்டு, தமிழ் இலக்கியத்தில் பக்திக்காலம் வரை பெருகி வந்த துவக்க கால பாரத, பாகவத குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
ஒரு கதாபாத்திரம் மொழிக்கு அறிமுகமாகையில் முதல் அடையாளமாக வருவது பாத்திரத்தின் செயலும், அதன் வாயிலாக வெளிப்படும் குணமும். அடுத்தது பாத்திரத்தின் தோற்றம் குறித்த வர்ணனைகள். இவை இரண்டும் பிணைந்து மனங்களில் தோன்றும் உருவம் காலப்போக்கில் ஆழப்பதிந்து மொழியிலும் கனவிலும் வளர்ந்துகொண்டே போகிறது.
நீராடும் பெண்கள் உடைகளை திருடி, பின் அவர்கள் உடைகளை மீண்டும் பெற குருந்த மரத்தின் கிளைகளை கண்ணன் தன் கால்களால் தாழ்த்திய கணம் ஒரு அகநானூற்றுப் பாடலில் வருகிறது. தமிழில் கண்ணனை அவனது குறும்புக் குணங்களோடு சொல்லும் பழம்பாடல் இது. கண்ணன் என்ற பெயரின்றி மால் என்றும் மாயோன் என்றும்தான் சங்கப்பாடல்களில் அவன் சுட்டப்படுகிறான். போலவே கருநதியான யமுனையும் தொழுநை என்னும் பெயரோடு இங்கு இடம்பெறுகிறது.
வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல
ஒரு கதைத்தருணம் மனங்களில் செலுத்தும் செல்வாக்கை அக்காட்சி, மீண்டும் வேறொரு இலக்கியத்திலும் இடம்பெறுவதை வைத்தும் எடைபோட்டுக்கொள்ளலாம். கீழ்க்கணக்கு நூல் வரிசையில் வரும் திரிகடுகத்தின் கடவுள் வாழ்த்திலும் குருந்தமரம் சாய்கிறது.
கண் அகல் ஞாலம் அளந்த தூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்த தூஉம் - இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி
***
ஒரு கதையாக மகாபாரதத்தின் மையம் அதன் போர்க்களம் தான். பதினெட்டு நாட்கள் நடந்த பெரும்போர். வாய்மொழிக்கதைகளாக இந்தப்போர் நீண்ட தூரம் பயணித்து தமிழ் இலக்கியத்திற்கும் வந்திருக்கிறது. கௌரவர், பாண்டவர் என்னும் பெயர்களும் இன்றி நூற்றுவர் (ஈரைம்பதின்மர்), ஐவர் என்னும் பெயர்களிலேயே இருபிரிவினரும் குறிப்பிடப்படுகின்றனர்.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய - புறநானூறு
ஆராச் செருவின் ஐவர் போல - பெரும்பாணாற்றுப்படை
பாண்டவர் ஐவரில் அர்ச்சுனனும் பீமனும் கதைகளில் பெருகுபவர்கள். காண்டவ வனம் எரித்த அர்ஜுனனின் முன்னவன் பீமன், காற்றின் மகன் என்றெல்லாம் பீமன் சங்கப்பாடல்களில் சொல்லப்படுகிறான். மேற்சொன்ன அடையாளங்களைவிட வீரகதைப்பாடல்களின் காலத்தில், அவன் தான் உரைத்த வஞ்சினத்தை நிறைவேற்றியவன் என்பதுதான் பீமன் குறித்து மனதில் ஆழப்பதியும் முதல்குறிப்பு, நூற்றுவரைக்கொன்ற தோள்கள் என்று சொல்கையில் அவை கற்பனையில் மலையளவு வளர்ந்து செல்கின்றன. துரியோதன் துச்சாதனன் இருவரையும் கொன்று பீமன் தனது வஞ்சம் தீர்த்ததை கலித்தொகைப்பாடல்கள் உவமைகளாக சொல்கின்றன.
மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறுங்கறுத் திடுவான்போல் - கலித்தொகை (குறிஞ்சி) 52
அஞ்சீ ரசையியல் கூந்தற்கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண்தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் - கலித்தொகை (முல்லை) 101
கிட்டத்தட்ட ஆறு பாடல்களில் வெவ்வேறு பாரதச்செய்திகளை தரும் கலித்தொகையின் காலத்தில் இங்கு பாரதம் முழுதும் வந்துவிட்டது எனலாம்.
காலத்தில் முந்தையது பாரதம், பாகவதம் பின்னர் எழுதப்பட்டது என்பது ஆய்வாளர்கள் கருத்து. குழந்தை கண்ணனின் கதைகள் அனைத்தும் பாகவதத்தில் இடம்பெறுபவை. பாரதத்தில் இடம்பெறும் கண்ணன் துவாரகை அரசன், பாரதப்போரை பாண்டவர்களுக்கு வென்று அளித்தவன், போரில் அர்ச்சுனனின் தேரை செலுத்தியவன். கடவுளாக தனது பேருருவத்தை தருணங்களில் வெளிப்படுத்தியவன்.
பாகவதம் காட்டும் கண்ணனின் மறச்செயல்களான மல்லரை மாய்த்ததும், குதிரை அரக்கனை வாய்பகுத்துக் கொன்றதும் கலித்தொகையிலேயே இடம்பெறுகின்றன. ஆனால் பாரதம் காட்டும் கண்ணனைக் காண சங்ககாலத்தை விட்டு இன்னும் கொஞ்ச தூரம் நடந்து காப்பியக்காலத்திற்கு அதாவது சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் வரை போகவேண்டியுள்ளது.
***
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை பகுதியில் பெண்கள் வியந்து பாடும் (மருட்கை) மூன்று பாடல்கள் உள்ளன. இவ்வளவு அரும் செயல்களை செய்த பெரியவனான திருமால் நீயா கண்ணனாக இருந்து இவ்வளவு எளிய செயல்களை செய்கிறாய் என்ற வியப்பு இந்தப்பாடல்களில் வெளிப்படும். பாடல் ஈரடி ஈரடியாக இரு தரப்பு பாடும்படி அமைந்துள்ளது, பிற்கால அம்மானைப்பாடல்கள் போல. சுவைக்காக மூன்று மருட்கை பாடல்களையும் இங்கு பார்க்கலாம்.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
மேருமலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை கயிறாக்கி அன்று கடல் கடைந்தவன் நீ, இன்று யசோதை கைகளால் உரலில் கட்டிக்கிடக்கிறாய் இது என்ன மாயமோ
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
தான் பசிக்காது உலகுக்காக உண்டவன், இன்று உறி வெண்ணையுண்ட வாயோடு பிடிபட்டு நிற்கிறாய் என்ன மாயமிது
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
தன் இரண்டு கால்களால் மூன்று உலகையும் வாமன அவதாரத்தில் அளந்த திருமால் இன்று பாண்டவர்களுக்காக தூது செல்ல நடந்து செல்வதென்ன மாயமோ.
இந்த மூன்றாவது பாடலில் தான் பாரதம் தொடர்பான ஒரு செய்தி நமக்கு கிடைக்கிறது, கண்ணன் பாண்டவர்களுக்காக தூது சென்றான் என்பதே அது. பாண்டவர்களுக்காக தூது நடந்த பாரதத்தின் கண்ணன் இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் பாடப்படுகிறான். ஆய்ச்சியர் குரவையிலேயே கண்ணன் தூது சென்ற செய்தி மீண்டும் ஒரு பாடலில் வருகிறது.
கடந்தானை ‘நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை’ ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே
வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடிந்து பாண்டவர்கள் தங்கள் அரசுரிமை மீட்டுக்கொள்ள கண்ணன் அஸ்தினாபுரத்திற்கு தூது செல்கிறான். துரியோதனன் அவைக்கு அரசனான கண்ணன் ஒரு தூதனாக செல்கிறான். அவையில் மண்ணாசை பீடித்த துரியோதனன் பாண்டவர்களுக்கு நாட்டை திருப்பி அளிக்க முன்வரவில்லை. போர் தவிர்க்க ஐந்து ஊர்களை அல்லது ஐந்து வீடுகளையாது கொடு என்று துரியோதனனிடம் பணிந்து கேட்கிறான் கண்ணன். அதை கேட்பவன் அரசனல்ல, போரை தவிர்க்க நினைக்கும் பெருமானிடன் தூதன் வடிவில் அதை கேட்கத்துணிகிறான்.
சிலம்பில் கூறப்பட்ட இந்த தூது, திவ்யபிரபந்தத்திலும் பல இடங்களில் பேசப்படுகிறது. ஆழ்வார்களில் முதல்வாராகிய நம்மாழ்வார் 'நாடுடை மன்னர்க்கு தூது செல் நம்பி' என கண்ணனை திருவாய்மொழி பாசுரமொன்றில் குறிப்பிடுகிறார்.
- பாண்டவர்க்காக தூதனாக சென்று பின் பாரதப்போரையும் அவனே முடித்தான் என்று இரண்டையும் ஒருங்கே சேர்த்துக்கூறும் வழக்கு பிரபந்தங்களில் உண்டு.
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து - பெரியாழ்வார் திருமொழி
பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை - பெரிய திருமொழி, திருமங்கையாழ்வார்
அரசனைத் திருமால் என்றே பாவிக்கும் மரபு நம்மிடையே உண்டு. அதன் அடிப்படையில் பாண்டிய மன்னர்களில் ஒருவனான வீரபாண்டியனின் (சடைய வர்மன்) மெய்க்கீர்த்தியில் அரசனது சிறப்புகளாகவே "மாபா ரதம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று" என்ற வரி வருகிறது.
ஆழ்வார்களில் கடைசியானவராக கருதப்படும் திருமங்கை மன்னன் கண்ணன் தூது சென்றதை பலவகைகளில் தனது பாசுரங்களில் காட்சிப்படுத்துகிறார்.
- பாண்டவர்களுக்கு அவனே பெருந்துணையாக இருந்து தூது சென்றான்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை -
- திரு எவ்வுளூர் (திருவள்ளூர்) பாசுரங்களில் ராமனாக பிறந்து திருமால் செய்த அருஞ்செயல்களையும் கண்ணனாகி செய்த செயல்களையும் ஒப்பிட்டும் கலியன், முன்பு அனுமனை தூதனாக ராவணனிடத்தில் அனுப்பி பின் அவனூரை அழித்த இவனே பின்னால் பாண்டவர்களுக்காக ஓர் அரசவையில் நின்று தன்னை ஓர் தூதனாக அறிவித்துக்கொண்டான் என்று சொல்லும் பாடல் இது.
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து ‘அவனே
பின்னோர் தூதாகி மன்னர்காகி பெரு நிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான்’ எவ்வுள் கிடந்தானே
- தன்னை துரியோதனன் தன் அவையினர் இகழ்ந்து பேசுவதை பொருட்படுத்தாமல் அச்சபைக்கு தூதனாக கண்ணன் சென்றான்
தன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும் - பெரிய திருமடல்
இந்த பிரபந்த பாசுரங்களில் எல்லாம் கண்ணன் தனது நண்பர்களுக்காக தனது பெருமைகளை எல்லாம் விட்டு விட்டு, சிறுமையை பொருட்படுத்தாது தானே தூது சென்றான், தன்னை நம்பியவனுக்காக தன்னை ஓர் பணியாளனாக மாற்றிக்கொண்டான் என்னும் கருத்து வெளிப்படுகிறது. பின்னாளில் பாரதி கண்ணன் என் சேவகன் என்று பாடலாக எழுதினார். ஆழ்வார்கள் சொல்லவந்ததை பாரதியின் வரிகள் இன்னும் எளிதாக நமக்கு கடத்தி விடுகின்றன
'பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்'
***
“என்றோ நடந்திருந்தாலும் கற்பனையில் வெளிப்பட்டிருந்தாலும் கதைகள் கனவின் துளி தான். கனவில் அனைத்துக்கலைகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. கதைகள் அங்கு இசையுடனும், வண்ணங்களுடனும், சலங்கைகளுடனும் விளையாடுகின்றன. பின் ஏதோ ஓரிடத்தில் கதை சென்று கல்லில் முட்டிக்கொண்டது. பிறையணிந்த பெம்மான் கங்கை முடியணிந்ததுபோல கற்களை ஆரத்தழுவிக்கொண்டது கதை. மொழிக்கு மட்டும் தன்னை முழுவதும் கொடுத்து விடாமல் சிற்பங்களாகவும் மாறத்துவங்கியது.”
வைணவர்கள் போற்றும் நூற்றி எட்டு திருப்பதிகளில் திருமால் பல்வேறு கோலங்களில் தோன்றி அருள்கிறார். நின்ற, இருந்த, கிடந்த கோலம் இவற்றோடு விண்ணளந்த திரிவிக்ரம கோலமும் இக்கோயில்களில் உண்டு. ஒப்பிட நீர்மலை, சீர்காழி இக்கோவில்களை விட ஊரகம், திருக்கோவிலூர் ஆகிய தலங்களில் உள்ள திரிவிக்கிரம மூர்த்திகள் அளவிலும் பேருருவம் கொண்டவர்கள். கிடந்த நிலையில் திருவட்டாறு, திரு அனந்தபுரம், திருமெய்யம், திருவெஃகா முறையே அளவில் பெரிய சிற்பங்கள். அமர்ந்த கோல இறைவனாக திருப்பாடகம் என்ற தலத்தின் திருமால் ஒருவரே பேருருவம் கொண்டவனாக உள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள 18 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று திருப்பாடகம். இங்கு இறைவனின் பெயர் பாண்டவதூத பெருமாள். இத்தலத்தில் கருவறையில் மூலமூர்த்தியாக அவர் மட்டுமே இருக்கிறார், துணைவியரில்லை.
இன்னும் சொல்லப்போனால் திருமாலின் நின்ற இருந்த கிடந்த கோலங்களை ஆழ்வார்கள் சுட்டிக்காட்டும் போது, அமர்ந்த நிலை பெருமாளுக்கு பாடகத்தையே உதாரணமாக சிறப்பித்துச்சொல்லும் பாங்கு பிரபந்தத்தில் உண்டு.
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன், - பற்றிப்-
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு - 2275 பூதத்தாழ்வார்
நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த
அம்மான் - 1541 திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே - 815 திருச்சந்தவிருத்தம், திருமழிசையாழ்வார்
இறுதிப்பாடலில் திருமழிசையாழ்வார் ஊரகம், பாடகம், வெஃகா என்ற மூன்று தலங்களின் தொன்மையையும் புலப்படுத்துகிறார். இவை மூன்றும் இன்று காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் என்ற தனது நூலில், எஸ்.ஏ.வி.இளஞ்செழியன் பாடகம் மற்றும் ஊரகம் இரு இடங்களிலும் பல்லவர் கால மூலத்திருமேனி மற்றும் கருவறையை சோழர்கள் எடுத்து பிரம்மாண்டமாக கட்டியதாக தனது நூலில் குறிப்பிடுகிறார். அதன்படி பல்லவர்கால திருப்பாடகக் கோவிலை சோழர்கள் பெரிதாக்கி திருப்பணி செய்தனர் என்று கொள்ளவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் இன்று நாம் காணும் இறைவனின் பிரம்மாண்டம் நம்மை சில கணங்கள் சிலையாக்கி விடுகிறது. பாடகத்தில் உள்ள பாண்டவதூதர் இருபத்தி ஐந்து அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலை பெருமாள்.
![]() |
| பாண்டவ தூதர்- காஞ்சிபுரம் |
தமிழகத்தில் உள்ள பிற திவ்ய தேசங்களில் திருமாலை ராமன் எனவும், கண்ணன் எனவும் குறிப்பிடும் தலங்கள் உண்டு. ஆனால் அக்கோவில்களின் மூலவர் சிலைகள் சிற்பவியல் ரீதியில் அவ்வாறாக அமைந்தவை அல்ல, நான்கு கரம் கொண்டு நிற்கும் திருமாலையும் பள்ளிகொண்ட அழகரையுமே அவ்வாறாக குறிப்பிடும் மரபு உள்ளது. ஆனால் திருவல்லிக்கேணி, பாடகம் இரு திவ்யதேசங்களில் மட்டும் சிற்பவியல் ரீதியாகவும் கண்ணன் என்றே சொல்லும்படி மூலவர் திருமேனி அமைந்துள்ளது. பாடகத்தில் இரு கரம் மட்டுமே கொண்டு தூதன் என இறைவன் அமர்ந்திருக்கிறான்.
விஷ்ணு இந்த உலகம் முழுவதும் வியாபித்துள்ளார் என்பதை கிடந்தகோல பேருருவம் காட்டுகிறது. குறள்வடிவில் சென்று மாபலியிடம் தானம் பெற்று பின் திரிவிக்கிரமனாக வளர்ந்து இரண்டு அடிகளில் எல்லா உலகங்களையும் அளந்தவன் என்ற காரணத்தால் அந்த மூர்த்திக்கும் பேருருவம் சரியாகிவிடுகிறது. ஆனால் தூது சென்று அஸ்தினபுரியின் அவையில் எளியவனாகி அமர்ந்த கண்ணன் ஏன் பாடகத்தில் பேருருவம் கொண்டு அமர்ந்திருக்கிறான் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.
இதற்கு வியாச பாரதம் பதிலளிக்கிறது. அதாவது பிரபந்தத்தில் பதிவாகாத கதை அது, ஆனால் வியாச பாரதத்தின் உத்யோக பருவத்தில் வருகிறது. கண்ணன் தூதனாக அஸ்தினபுரிக்கு வருகிறான். பீஷ்மரிடம் துரியோதன், தூது வந்திருக்கும் கண்ணனை தான் சிறைபிடிக்கப்போவதாக சொல்கிறான். அதன்மூலம் பாண்டவர்களுக்கு இருக்கும் துணை தன்வசமாகும், பாண்டவர்களும் பிற அரசர்களும் தன்னை அடிபணிவார்கள் என்று கூறுகிறான். பீஷ்மரும், விதுரரும், திருதராஷ்டிரரும் அறிவுரை கூறுகினறனர், துரியன் கேட்கவில்லை. தூது வரும் கண்ணன் பலவகைகளில் உதாரணங்களை கூறி போரைத்தவிர்க்க சொல்கிறான். அவற்றால் சமாதானமடையாத மூர்க்கனான சுயோதனன் கண்ணனை சிறைபிடிக்க முயல்கிறான். அப்போது கண்ணன் அவனிடம் மாயையால் நான் தனியன் என்று நீ கருதுகிறாய், அதனால்தான் என்னைச் சிறைபிடிக்க நீ முயல்கிறாய் என்று கூறி தனது விஸ்வரூபத்தை காட்டுகிறான்.
அவன் உடலில் இருந்து பிரமன் ருத்திரன் உட்பட ஒளிப்பிழம்பாக எண்ணற்ற தேவர்கள் வெளிப்பட்டனர். பல்வேறு ஆயுதங்கள் அவனது கைகளில் பிரகாசத்துடனும், தாக்கும்படி உயர்த்திப் பிடித்த நிலையிலும் இருந்தன. அவனது கண்கள், மூக்கு, காதுகள் மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தீப்பொறிகள் வெளிப்பட்டன. உயர்ந்த குணமுடைய விதுரன், பீஷ்மர் முதலானோர் தவிர்த்து பிற அனைவரும் அவ்வடிவை காணமுடியாமல் அஞ்சி நடுங்கினர். பின் தனது வடிவை முன்பு போல் ஆக்கிய கண்ணன் சாத்யகி மற்றும் கிருதவர்மனுடன் அவை நீங்கினான்.
இவ்வாறாக கண்ணன் அஸ்தினபுரியில் காட்டிய விஸ்வரூப கோலமே திருப்பாடகம் கோவிலில் மூலவர் வடிவாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாரதம் சொன்னபடி எண்ணற்ற வடிவங்களை வெளிப்படுத்திக்கொண்டு, ஆயுதங்களை ஏந்தியபடி அல்லாமல் மானிடனின் பேருருவம் என்றே அது அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பாடகத்தின் மூலமூர்த்தியின் பெயரும் பாண்டவதூதன் என்றே வழங்கப்படுகிறது. வைசம்பாயனர் கூறிய பாரத கதையை கேட்ட ஜனமேஜயன் இத்தலத்திற்கு வந்து இறைவனை தூது வந்த போது கண்ணன் காட்டிய விஸ்வரூப கோலத்தை இங்கு காட்டுமாறு வேண்டி அவ்வாறே தரிசித்ததாக கோவிலின் தலபுராணம் கூறுகிறது.
***
மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது செவ்வியலின் கூறு என்று முன்பு சொன்னோம். இலக்கியத்தை ஒட்டி சிற்பவியலிலும் இது நிகழ்கிறது. ஒரு கடவுளை, ஒரு தருணத்தை மீண்டும் மீண்டும் வடித்துச்செல்லும் சிற்பியும் நுட்பங்களை மேம்படுத்திச்செல்கிறான். பாண்டவர்க்கு தூது நடந்த பெருமானின் பேருருவை நாம் வேறு கோவில்களின் மூலவராக காணமுடியாது. உண்மையில் இதுபோல சிற்பங்களை கண்டுகொள்வது பெரிய சவால். அதற்கு இலக்கியம், தொல்லியல் இன்னும் பலகருவிகளும் தேவைப்படுகிறது.
ஒரு கோவிலில் நுழைகையில் அங்கு சிற்பங்கள் எங்கெல்லாம் இருக்கின்றது என்று பாருங்கள், கோவில் ராஜ கோபுரத்தில் எவ்வளவு சுதைச்சிற்பங்கள் உள்ளன. வளாகத்தில் கல்யாண மண்டபமோ ஊஞ்சல் மண்டபமோ இருந்தால் தூண் சிற்பங்கள் இருக்கும், அங்கும் மையப் பீடத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கும். பரிவார தெய்வங்களின் சிற்றாலயங்களில், கருடத்தம்பத்தில், பலிபீடத்தில், நந்தி மண்டபத்தில், மையக்கருவறையை எதிர்த்திருக்கும் மாளிகைத்திருச்சுற்றில், கருவறையின் கோட்டங்களில், கருவறையின் அதிட்டானத்தில், மகர தோரணத்தில், யாளி, பூத, அன்ன வரிகளில், முகப்பின் விதானத்தில், தூண்களில், விளக்குகளில், விமானத்தில் சிற்பங்களை பார்க்கிறோம். மேலும் நகர்ந்து செல்லும் கோவில் வாகனங்களில், தேரில், பாவை விளக்குகளில் எவ்வளவு சிற்பங்கள். ஒரு காட்டில் எத்தனை தாவரங்கள் இருக்குமோ அதுபோல கோவில்களில் சிற்பங்கள் இருக்கின்றன. ஆம் நீங்கள் நினைப்பது ஒரு பூங்காவை, நான் சொல்வது அது காட்டின் வடிவம் என்று.
அந்த சிற்பங்களை காணும் முன்னர் பக்தி இலக்கியத்தில் இருந்து கண்ணன் தூது சென்ற கதை எவ்வாறு வளர்ந்து சென்றது என்று பார்க்கலாம். ஊசலாட்டம் என்று இதை நினைக்க வேண்டாம், யானையால் யானையாத் தற்று என்ற குறள்போல நாம் இலக்கியத்தால் சிற்பத்தையும், சிற்பத்தால் இலக்கியத்தையும் இன்னும் கொஞ்சம் புரிந்துகொள்ள முயல்கிறோம் அவ்வளவுதான்.
பாண்டியர்களோ செப்பேட்டில் தாங்கள் செய்த அருஞ்செயல்களை குறிப்பிடுகையில் தாங்கள் மாபாரதம் தமிழ்ப்படுத்தியதாக குறிப்பிடுகின்றனர். ஆயினும் நமக்கு பாண்டியர் செய்தளித்த பாரதப்பிரதிகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் தமிழில் எழுதப்பட்ட பாரத வெண்பா முதலிய பாரத நூல்கள் எதுவும் நமக்கு முழுதும் கிடைக்கவில்லை. நமக்கு கிடைப்பது திருமுனைப்பாடி நாட்டு வில்லிபுத்தூரார் என்ற புலவர் இயற்றிய வில்லி பாரதம் என்ற நூல்தான். வில்லிபுத்தூரார் காலம் 16ம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
வில்லி பாரதம் வியாசரின் கிருஷ்ணன் தூதை தனி சருக்கமாக வழங்குகிறது. கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 261 பாடல்கள் கிருட்டிணன் தூது சருக்கத்தில் உள்ளன.
தருமன் கிருஷ்ணனை தூது செல்லப்பணிக்கிறான். போர் மனநிலையில் இருக்கும் பீமன், அர்ச்சுனன் முதலியோரை தருமனும் கண்ணனும் சமாதானம் செய்கின்றனர். இறுதியில் பாஞ்சாலி கண்ணனிடம் வந்து இது முறையோ என்று கேட்கிறாள். அவளது கூந்தலை தான் முடிப்பேன் என்று சொல்லி கண்ணன் தூது செல்கிறார்.
அத்தினபுரியின் தென்புற சோலையில் இருக்கும் கண்ணனை எதிர் கொண்டழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது, துரியோதனனை செல்லவிடாமல் சகுனி தடுக்கிறார். பீஷ்மர் எதிர்கொண்டழைக்க கண்ணன் நகர் நுழைந்து விதுரன் இல்லத்தில் தங்குகிறார். மறுநாள் அரசவையில் பாண்டவர்களுக்காக நாட்டை கேட்கிறார், துரியோதனன் அது மறுக்க ஐந்து ஊர்களையாவது கொடு என்கிறார், துரியன் ஈ இருக்கும் இடமும் கொடேன் என்கிறான். இது தான் முடிவென்றால் போர் புரிய ஒப்புக்கொள் என்று கண்ணன் சொல்கிறார். அதைக்கேட்டு சினந்து கண்ணனை இகழ்கிறான் துரியன். கண்ணன் அவை நீங்குகிறார்.
கண்ணன் விதுரன் மனைக்கு சென்று, பின்னர் குந்தியையும் சென்று அவளிடத்தில் பார்க்கிறார். கர்ணன் குறித்து அவளிடம் பேசுகிறார். இரவில் துரியோதனன் கண்ணனை வெல்ல சூழ்ச்சி செய்கிறான். அதில் பங்கேற்கும் திருதிராஷ்டிரன் கண்ணனை கொல்ல வேண்டும் என்று சொல்கிறான். விகர்ணன் தூதரை கொல்வது முறையா என்று நியாயம் கேட்க, குழப்பம் விளைகிறது. கர்ணனும் துச்சாதனனும் போரையே விரும்புகிறார்கள். அவர்களை அமைதியாக்கி சகுனி சதித்திட்டம் ஒன்றை சொல்கிறார்.
சகுனியின் திட்டப்படி கண்ணனை சூழ்ச்சியால் சிறைப்படுத்த எண்ணி கண்ணன் அமர ஒரு பொய் இருக்கை தயார் செய்கிறார்கள். கண்ணன் அமரும் ஆசனத்தின் கீழே ஒரு நிலவறை அமைத்து அதில் மல்லர்களையும், ஆயுதம் ஏந்திய வீரர்களையும், அரக்கர்களையும் நிரப்பி வைக்கின்றனர். கண்ணன் ஆசனத்தில் அமர்கையில் மூங்கில் தட்டிகளால் ஆன தரை பிளந்து இருக்கை ஆழத்தில் விழும், அங்கு கண்ணன் சிறைப்படுவான் என்பது அவர்கள் திட்டம். தூதுவனை கொல்லக்கூடாது ஆனால் சிறைப்படுத்தலாம் ஆகவே துரியோதனனுக்கு பழி சேராது என்பதற்காக இத்திட்டத்தை சகுனி வகுக்கிறார். பின்வருபவை வில்லிபாரதப்பாடல்கள்.
மல்லரை இருத்தி, மேல் ஓர் ஆசனம் வகுத்து, நாளை
எல்லிடை அழைத்து, வீழ்த்தி, இகலுடன் விலங்கு பூட்டி,
சொல்ல அருஞ் சிறையில் வைத்தல் தூதருக்கு
உரிமை' என்றான்
அரும் பெறல் மணிகளால் ஓர் ஆசனம் அதன்மேல் ஆக்கி,
சுரும்பு இமிர் மாலை தூக்கி, தொழிலுடை விதானம் ஏற்றி,
வரம்பு இலா வென்றி வேலான் மாறு இலா வண்ணம் செய்தான்
மறுநாள் கண்ணன் அவைக்கு வருகிறார், காவலரின்றி அவரை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறு துரியோதனன் சொல்கிறான். அதன்படி வந்த கண்ணனை துரியோதனன் பொய் ஆசனத்தில் அமருமாறு வேண்டுகிறான். நிலவறையில் ஆசனம் விழ அங்கு பேருருவம் எடுக்கும் கண்ணன் அங்குள்ள மல்லரை அழிக்கிறார். அவரது சினம் பொறுக்க அவையோர் வேண்ட மானுடவடிவம் மீள்கிறார்.
வியாச பாரதத்தில் இல்லாத இந்த பொய் இருக்கை கதை, வில்லி பாரதத்தில் சேர்ந்துள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பல நூறு ஆண்டுகளில் இந்தக்கதை வாய்மொழியாக வளர்ந்து, கூத்துக்களில் பெருகி மீண்டும் இலக்கியத்திற்குள் வருகையில் இப்படியாக விளைச்சல் கண்டிருக்கிறது.
***
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே
சம்பந்தர் பாடிய புள்ளமங்கை திருஆலந்துறை என்னும் தலம் தஞ்சை - கும்பகோணம் வழித்தடத்தில் உள்ளது, பசுபதி கோவில் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இக்கோவில் முற்கால சோழர் கட்டிடக்கலைக்கு சான்றாக கூறப்படும் கோவில். பராந்தகன் பாணி என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோட்டத்திலும் விமானத்திலும் உள்ள சிற்பங்கள் பலவும் ஒப்பிடமுடியாத பேரழகுடையவை.
முற்கால சோழர் கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்று அவர்கள் கோவிலின் வெளிச்சுற்றில் செதுக்கிய குறுஞ்சிற்பங்கள். பெரும்பாலான சிற்பங்கள் அரையடிக்கும் குறைவான நீள அகலத்தில் அமைந்தவை. கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதி அதிஷ்டானம் எனப்படும். அதில் பீடம், உபபீடம் துவங்கி பல உறுப்புகள் உண்டு. அவற்றில் கண்ட பாதம் மற்றும் வேதி பாதம் என்னும் பகுதிகளில் இந்த குறுஞ்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இந்தக்குறுஞ்சிற்பங்கள் அளவில் சிறியவையாக இருந்தாலும் அவற்றில் நுட்பமும் சிற்ப இலக்கணம் மீறாத தன்மையும் இருக்கும். புள்ளமங்கை, குடந்தை நாகேஸ்வரன் கோவில், புஞ்சை ஆகிய கோவில்கள் இவற்றிற்கான மிகச்சிறந்த உதாரணங்கள். இந்த சிற்ப வரிசைகளில் இராமாயணம் முக்கிய இடம் பெறுகிறது. முற்றிலும் இராம காதையை வடிக்கவில்லை என்றாலும். இராமன் பிறப்பு, சீதை மணம், கான் வாழ்க்கை, சீதை சிறையெடுப்பு வரை சிற்பங்களின் தொடர்ச்சியை பார்க்க முடிகிறது. முற்சோழர் காலத்துக்கு பிறகும் உத்தம சோழன், ராஜ ராஜன் காலத்திலும் குலோத்ததுங்கன் பாணி கோவில்கள் சிலவற்றிலும் இக்கதை சிற்பங்களை காணமுடிகிறது. எனில் இந்த சிற்பங்கள் பெரும்பாலும் கம்பராமாயண காலத்திற்கு முந்தியவை. கம்பனுக்கு முன்னரே சிற்பிகள் இந்த கதையை வடித்து வைத்துள்ளனர்.
அதிஷ்டான சிற்பங்களில் இராமாயண காட்சிகள் மட்டும் இல்லாமல், பாகவத காட்சிகளும் இடம்பெற்றுள்ளன என்றாலும் இராமாயணம் போன்ற கதைத்தொடர்ச்சி இங்கு இல்லை. ஆகவே அவை அதிக கவனம் பெறவில்லை. இங்கு முன்னர் இலக்கியத்தில் கேட்ட அதே கேள்வியையே மீண்டும் எழுப்பிக்கொள்கிறேன். பாகவத கண்ணனது லீலைகள், அரக்கர்களை கொன்றழித்ததது அல்லாமல் பாரதத்தின் கண்ணன் இடம்பெறும் இடம் ஒன்றாவது இந்த சிற்ப வரிசையில் உண்டா என்ற கேள்விதான் அது.
இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் பாடப்பட்ட தூது சென்ற கண்ணனின் சிற்பம் ஒன்று புள்ளமங்கை அதிஷ்டான பகுதியில் இருக்கிறது. அது எவ்விதம் கண்ணனின் சிற்பமாகும் என்று விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். அதற்கு மீண்டும் வில்லிபாரதத்தையே துணை கொள்ள வேண்டியுள்ளது.
![]() |
| விஸ்வரூபர் சிற்பம் : புள்ளமங்கை |
இந்த சிற்பத்தை பார்த்தவுடன் ஓர் அரசவை காட்சி இது என்று நமக்கு விளங்கும். சிற்பத்தை எதிர் நின்று காண்கையில் நமக்கு இடப்புறம் பேருருவம் கொள்ளும் திருமால் இருக்கிறார். வலப்புறம் அரசன் ஒருவன் அமர்ந்து அவன் பேருருவை வியக்கிறான். அவனது பின்னால் உள்ள அரசவையினரும் அவ்வாறே விஸ்மயம் என்னும் வியப்பு முத்திரையை காட்டி நிற்கின்றனர்.
முதலாவது நாம் பார்ப்பது கதைத்தொடர்பை. சிற்பத்தில் இரண்டு ஆசனங்கள் உள்ளன. வலப்பக்கம் உள்ள அரசனுடைய இருக்கை நேராக, இயல்பாக உள்ளது, கண்ணனின் இருக்கை சாய்ந்துள்ளது. இது பொய் ஆசனமிட்டு கண்ணனை நிலவறையில் வீழ்த்த முற்பட்டதை காட்டுகிறது. ஆசனம் சரிந்து நிலவறையில் விழுவதை சாய்ந்திருக்கும் இருக்கை சுட்டிக் காட்டுகிறது.
இறைவன் எழில் கதிர் மணிகள் அழுத்திய தவிசின் இருத்தலுமே,
நெறுநெறெனக் கொடு நிலவறையில் புக, நெடியவன் அப்பொழுதே,
மறலி எனத் தகு நிருபன் இயற்றிய விரகை மனத்து உணரா,
முறுகு சினத்துடன், அடி அதலத்து உற, முடி ககனத்து உறவே
இந்த வில்லிபாரதப் பாடலில் முதல் இரு அடிகள் தவிசு நிலவறையில் விழுந்ததை சொல்கின்றன. அடுத்த அடிகளிள் நெடியோனாகிய திருமால் சினந்து பேருருவம் எடுத்ததை விளக்கும். அவனது கால்கள் பாதாளத்தில் இருக்க, அவனது முடி வானில் இருந்ததாம்.
கொஞ்சம் இந்த சிற்பத்தை மீண்டும் பார்க்கலாம். கண்ணனின் வலக்கால் இருக்கை மீது ஊன்றியிருக்கிறது. இடது கால் நிலவறையில் அழுந்தி நிற்கிறது. சிற்பத்தின் இறுதிக்கோட்டில் அவன் காலடி மட்டும் இருப்பதை கவனிக்கலாம். அவனது கிரீடம் - நீள்முடி, சிற்பத்தின் துவக்கப்புள்ளியைத் தொடுவதை அடுத்து பார்க்கிறோம். இந்த சிற்பத்தில் உள்ள பிற ஏழு உருவங்களை விட இவன் அளவில் மிகப்பெரியவன். ஆயினும் சிற்பி அதைக்காட்ட முழுவதும் கண்ணனை நிற்கச்செய்யவில்லை, இறைவன் அமர்ந்த வண்ணம்தான் இருக்கிறான். அவன் உடல் போருக்கு எழும் வண்ணம் சாய்ந்து நிற்கிறது. உலகினர் அஞ்சும் அவன் பேருருவை பாடும் இன்னுமோர் பாடலை வாசிக்கலாம்.
அண்டர் பணிந்திடவும்,
'துஞ்சினம், இன்று!' என வன் பணியின் கிளை
துன்பம் உழந்திடவும்,
'வஞ்ச மனம் கொடு வஞ்சகன் இன்று இடு வஞ்சனை
நன்று இது!' எனா,
நெஞ்சில் வெகுண்டு, உலகு ஒன்றுபடும்படி
நின்று, நிமிர்ந்தனனே
இந்த சிற்பத்தில் திருமால், கோபத்தை முகத்தில் காட்டவில்லை. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் சிறிய புன்னகைதான் தென்படுகிறது, இதுவென்ன இடம் பொருள் தெரியாமல் கண்ணன் சிரிக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இலக்கியம் காட்டும் நுட்பங்களில் ஒன்று வெறிநகை. கோபத்தின் மிகுதியில் சிரிப்பது. திரிபுரத்தை ஈசன் எரித்தது இந்த சினச் சிரிப்பால்தான். அது ஒரு வீர அடையாளம், வீரட்டஹாஸம் என்றும் குறிப்பர், அதையே வெறிநகை எனலாம் தமிழில். வில்லிபுத்தூரார் அவனது சிரிப்பை இவ்வாறு பாடுகிறார். இடியொலி போல, பூமியை கடல் கொள்ள எழும் புயலின் ஒலி போல, கண்களில் நெருப்பு சீற அண்டம் அதிர திருமால் சிரித்தான்.
கொண்டல் முழக்கு என, அம் புவியைக் கடல்
கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என, வன் பவனக் கிளை தந்த
முழக்கு எனவே,
வண்டுஇனம் மொய்த்து எழு வண் துளபத் தொடை
வண் துவரைத் திருமால்
அண்ட முகட்டுற நின்று, சிரித்தனன், அம் கண்
நெருப்பு எழவே
திருப்பாடகத்தின் இறைவனின் உருவோ பெரிது, இரு கைகள் கொண்ட மானுடக்கோலம். புள்ள மங்கையிலோ அளவில் சிற்பம் ஆகச்சிறிது ஆனால் எட்டு கைகள் படைக்கலங்களை ஏந்தி போருக்கு எழும்படி செதுக்கப்பட்டுள்ள வடிவம். வில்லிபுத்தூரார் பல்வேறு கைகள் படைக்கலங்களை ஏந்தி நிற்பதை ஆவேசம் குறையாது பாடுகிறார்.
குலத் தருவும்
சென்று முறிப்பன, எண் திசையில் குல சிந்துரம்
எற்றுவ, எண்
குன்றம் உடைப்பன, பைம் பொன் உரக் கிரி
கொண்டு திரிப்பனவால்-
அன்று தனித்தனி நின்று, மலைத்தருள், அம்
கைகள் பற்பலவே
புள்ளமங்கை சிற்பத்தில் இடப்புறம் ஒருகை அம்புக்கூட்டிலிருந்து அம்பெடுக்கிறது. ஒரு கரமோ சக்கரத்தை எறிய உயர்ந்திருக்கிறது. ஒருகை வாளேந்தி நிற்கிறது. உடலருகே உள்ள ஒரு கை அம்பெனவோ, வச்சிரமெனவோ சொல்லத்தக்க ஆயுதத்தை ஏந்தியுள்ளது. வலப்புறத்தில் விஸ்மய முத்திரை என்று நாம் எண்ணும் கரம் அதன் நுனியில் சங்கை ஏந்தியுள்ளது, ஒரு கரம் வில்லை இறுகப்பற்றியுள்ளது, ஒரு கரம் கேடயத்தை பிடித்திருக்க இன்னோர் கை ஒரு விரலை நீட்டி அரசனை எச்சரிக்கிறது. சிற்பத்தில் எழிலை இந்த தொழிற்கைகள் பன்மடங்கு கூட்டி விடுகின்றன. இந்த அழகியலை முழுவதும் ரசிக்க நாம் வில்லியையே சரண்புக வேண்டியிருக்கிறது. வில்லிபாரதத்தின் பாடல்களுக்கு சிற்பியை போல இட வரையறை எல்லாம் இல்லை. பலநூறு கரங்களின் ஆயுதங்களை பாடிப்பாடி வியக்கின்றன.
தொடர் சில கைத்தலமே;
அகிலம் வெருக்கொள, அரி மழு எற்றின,
அடு சில கைத்தலமே;
புகலும் வடிக் கணை உதணம் எடுத்தன, பொரு
சில கைத்தலமே;
திகழ் விசயத்தொடு சிலைகள் குனித்தன, சில
சில கைத்தலமே
வெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்
உலக்கைகள், போர்
பொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன்
கழுவர்க்கம், அயில்,
எங்கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள்,
தண்டம், இவற்றினொடும்
தங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே
பல்லாயிரம் கரங்கள் எழுகின்றன. அவற்றில் சில மிக இயல்பாக போர் ஆவேசத்தால் குலையும் திருமாலின் அணிகளை திருத்துகின்றன. அவற்றில் ஒருகை எதிரிகளை விரல் நீட்டி சுட்டி அச்சுறுத்துகிறது.
சில சில கைத்தலம் அடு கழலில் பல செறி
கழல் கட்டினவே;
சில சில கைத்தலம் இறுகு புயத்திடை செறி
தொடை இட்டனவே;
சில சில கைத்தலம் அணிகொள் உரத்திடை
பணிகள் திருத்தினவே;
சில சில கைத்தலம் விரல்கொடு சுட்டின, செறுநர்
திகைத்திடவே
தோளழகை பார்த்தபின், அதன் வீரியத்தையும் பார்க்க வேண்டுமே. நிலவறையில் இருந்த மல்லர்களை, ஆயுதம் ஏந்திய வீரர்களை திருமால் அழிக்கிறார் என்று வில்லிபாரதத்தில் வருகிறது. இதைக்காட்டும்படி சிலையின் இடப்புறம் காலடியில் இரு மல்லர்கள் இருக்கின்றனர். திருமாலின் வலக்கால் இருக்கையின் மீது ஊன்றியிருக்கிறது, முதல் மல்லன் அந்த இருக்கையின் கணம் தாங்காமல் நசுங்கிக்கொண்டிருக்கிறான், அடுத்த மல்லன் முகம் நிலம்பட தலை குப்புற விழுந்துகொண்டிருக்கிறான். கவனிக்கவும் இது ஒரு அசைவியக்க படம்போல ! அவன் இன்னும் விழுந்து முடிக்கவில்லை, கால்கள் இன்னும் நிலம்பட வில்லை இடைவரை ஒரு பகுதி உடல் வீழ்ந்துள்ளது.
மலர்க் கழலால்,
ஒப்பு அற மட்குழி உற்றவரைப் பட, ஒத்தி மிதித்தலுமே
கொள் பல் விரலால்
நெட்டுடல் பல் வகிர்பட்டு, அதனுள் விழ, நித்தர்
செய் கொல் வினையால்,
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி, மைக்
கடல் எல்லையிலே,
இட்டன கல் வரை ஒத்தனர்-வெல் கழல் எக்
குல மல்லருமே
புள்ளமங்கையின் உள்ள இந்த சிற்பம், மேலும் சில கோவில்களிலும் வடிக்கப்பட்டுள்ளது. பேருருவ தூதனின் மூலச்சிற்பம் என்று கருதத்தக்க ஆளுயர சிற்ப வரிசை ஒன்று காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலின் மேற்தளத்தில் உள்ளது. அங்கு எண்கரம் கொண்ட கண்ணன் ஒருபுறமும் மறுபுறம் அரசவையினரும் வடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மணற்கல்லாலான அச்சிற்பம் காலமாற்றத்தால் சிதைந்தும் திருப்பணியில் போது மேலே சாந்து பூசப்பட்டும் அதன் உண்மைத்தன்மையை இழந்துவிட்டது. ஆகவே அதை இங்கு நேரடியாக ஒப்பிடவில்லை. புள்ளமங்கை போலவே அதிட்டான சிற்பமாக லால்குடி என்னும் திருத்தவத்துறையிலும், புஞ்சை என்னும் திருநனிபள்ளியிலும் இதே சிற்பம் காணப்படுகின்றது. சிற்பம் ஒன்றேயாயினும் வேறுபாடுகள் தெளிவாக தெரியக்கூடிய லால்குடி சிற்பம் குறித்து மேலும் பார்க்கலாம்.
![]() |
| விஸ்வரூபர் சிற்பம் : லால்குடி |
திருத்தவத்துறை அதிட்டான சிற்பத்தில், கண்ணனின் இருக்கை சரிந்திருப்பது இன்னுமே தெளிவாக தெரிகிறது. அவனது முகத்தில் கோபம் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கிறது, இங்கு வெறிநகை இல்லை. லால்குடியில் வலப்பக்கம் அமர்ந்துள்ள அரசனின் உருவத்தில், சில வேறுபாடுகள் தோன்றுகின்றன. இங்கு அரசன் தனது வலது காலை தொங்கவிட்டு இடக்கால் மடித்து கணுக்கால் மீது தனது கையை வைத்தபடி அமர்ந்திருக்கிறான். புள்ளமங்கை அரசன் வலக்காலை குத்திட்டு, இடக்காலை தொங்க விட்டபடி அமர்ந்திருக்கிறான், அவனது வலக்கை தொடையின் மீது அமைந்துள்ளது. புள்ளமங்கை அரசன் முகம் நேராக அமைந்திருக்க, லால்குடியிலோ அது இறைவனை நோக்கி சற்று திரும்பியுள்ளது.
இதைப்பேசுகையில் அந்த அரசன் யார் என்ற கேள்வி எழுகிறது. விடை சொல்வதானால் இரண்டு வாய்ப்புகளே உள்ளன. முதலாவது சாத்தியம் துரியோதனன், கதைப்படி அவனே கண்ணனை அழைத்து பீடத்தில் அமர்த்துகிறான், அருகாமையில் இருக்கிறான். அதே சமயம் அது திருதிராட்டிரனாகவும் இருக்கலாம். மூத்த அரசன் ஆதலால் அங்கு இருக்கையில் காட்டப்பட்டிருக்கலாம். இரண்டு சாத்தியங்களும் உள்ளன என்றுதான் கொள்ள வேண்டும். இரண்டு இடங்களிலும் உள்ள அரச உருவங்களை பார்த்தால், சற்று கம்பீரமாக இருக்கும் புள்ளமங்கை உருவம் துரியோதனன் என்றும் உடலில் வியப்பையே முற்றிலும் காட்டும் லால்குடி சிற்பம் திருதிராஷ்டிரன் என்றும் எண்ணத்தோன்றுகிறது.
கதைகள் வளர்வது போலவே வியாச பாரதத்திற்கும் வில்லி பாரதத்திற்கும் இடையே பாத்திரத்தின் குணத்திலும் வேறுபாடுகள் உள்ளன. வியாச பாரதத்தில் விழியிழந்த குருடனான திருதிராஷ்டிரன் தூதுவரும் கிருஷ்ணனின் பேருருவத்தை காண ஞான திருஷ்டி பெறுகிறான், இறைவனது வடிவத்தை பார்த்தபின்னர் வேறு எதுவும் காண வேண்டாம் என்று மீண்டும் விழியின்மையை வேண்டிப்பெறுகிறான். பிற்கால இடைச்செருகல் என்று ஆய்வாளர்கள் கருதும் ஒருதருணம் இது. வில்லி பாரதத்தில் கண்ணனின் பேருருவை காணும் விழிகளை வீட்டுமன், விதுரன் முதலிய ஞானியரே பெறுகிறார்கள், திருதிராஷ்டிரன் அந்த வரிசையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் கண்ணன் தூது வருகையில் அவனை கொன்று விடலாம் என்னும் ஆலோசனையை வில்லிபாரதத்தில் சொல்பவன் திருதிராஷ்டிரன். ஆகவே அவன் கீழ்மை குணமுள்ளவனாகவே வில்லிபாரதத்தில் வெளிப்படுகிறான்.
தன்னை சிறையெடுக்க வந்த மல்லரை எல்லாம் வீழ்த்தி, பேருருவோடு ஆயுதங்களை ஏந்திய கண்ணன், பீஷ்மன் முதலியோர் வேண்டுதலுக்கிணங்க மீண்டும் தன்னுரு அடைகிறான். அப்போது துரியோதனனை எச்சரிக்கிறான், இப்போதே உன்னை அழிக்க முடியும் என்றாலும் போரில் ஆயுதம் எந்தமாட்டேன் என்று சொன்ன எனது வாக்கிற்காகவும், உன்னை போரில் கொல்ல பாண்டவர் செய்த சூளுரையும் பொய்க்கலாகாது என்பதால் நான் உன்னை தண்டிக்காது நீங்குகிறேன் என்று கண்ணன் சொல்வதோடு இக்காட்சி முடிகிறது.
வெஞ்சுட ராயுதமொன்று மெடுக்கில மென்று விளம்பியதும்
எஞ்சமலைந் தெதிர்வந்து யிர்கொள்ளுது மென்றுதனித்தனியே
பஞ்சவர்கூறிய வஞ்சின வாசகமும் பழுதா மெனவே
இவ்வாறாக பாரதத்தில் பாண்டவர்களுக்காக தூது சென்ற கண்ணனின் கதை இலக்கியத்தில் மட்டுமல்லாது கோவில்களிலும் சிற்பமாக பதிவானதை பார்த்தோம். இக்குறுஞ்சிற்பங்களை நாம் வியக்க இன்னுமோர் காரணம் உள்ளது, வில்லிபுத்தூரார் பாரதம் பாடுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டு விட்டன. பாடகம் ஆலயம் பல்லவர் காலத்தையது என்றும் புள்ளமங்கை ஆலயம் முற்கால சோழர் காலத்தையது என்றும் நாம் அறிகிறோம். இந்த காட்சிகள் மூல பாரதத்திலிருந்து வளர்ந்து வந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் வில்லிபாரதத்தில் பாடப்படும் முன்பே கண்ணனை பொய் ஆசனமிட்டு சிறைகொள்ள முற்பட்டதும், கண்ணன் அவையில் தனது பேருருவை காட்டி மல்லரை வீழ்த்தியதும் இங்கு கதையாக நிலைபெற்றுவிட்டதையே அதிஷ்டானத்து குறுஞ்சிற்பங்கள் நமக்கு காட்டுகின்றன.
***
வில்லி பாரதத்தின் கிருட்டிணன் தூது சருக்கத்திலேயே இன்னுமொரு சுவையான தருணம் உண்டு, கட்டாயம் இது வாய்மொழி கதைகளின் பாதிப்பில் இடம்பெற்ற பாடல் என்று சொல்லலாம். கண்ணன் தூது செல்லும் முன்னர், இந்தப்போரை தவிர்க்க வேறு வழியுண்டா என்று கேட்கிறான், அதற்கு சகாதேவன் ஒரு பதில் கொடுக்கிறான்.
பாராளக் கன்னனிகற்பார்த்தனைமுன் கொன்றணங்கின்
காரார் குழல்களைந்துகாலிற் றளைபூட்டி
நேராகக் கைப்பிடித்துநின்னையும்யான் கட்டுவனேல்
வாராமற் காக்கலா மாபாரதமென்றான்.
பாரதப்போரை நிறுத்த வேண்டுமானால் ஒரு வழி உள்ளது. கர்ணனை அரசாளச்செய்ய வேண்டும், அர்ச்சுனனை கொல்ல வேண்டும், பாஞ்சாலியின் முடியை களைந்து விட்டு கால்களில் தளையிட வேண்டும், இதையெல்லாம் செய்த பின்னர் உன்னையும் பிடித்து கட்டிவிட்டால் போரை தவிர்க்கலாம் என்கிறான். இதில் ஒன்று பிழைத்தாலும் போரை தவிர்க்க முடியாது என்பது அவனது எண்ணம். பார்த்தனின் வில்லும், பாஞ்சாலியின் விரிகுழலும் போரையே விரும்பும். கர்ணன் துரியோதனனுக்கு துணை செய்யும் வரையிலும், கண்ணனே விரும்பாத வரையிலும் போரை தவிர்க்க முடியாது என்பதால் சகாதேவன் இவ்வாறு கூறுகிறான்.
சிரித்தபடியே இதை கேட்டுக்கொள்ளும் கண்ணன், இவை அனைத்துமே நடந்துவிடக்கூடும் ஆனால் என்னை கட்டிப்போடுவது சாத்தியமா என்று அவனிடம் கேட்கிறான். சாத்தியம் என்னும் சகதேவனிடம், ‘சரி என்னைக்கட்டு’ என்று சொல்லிவிட்டு பலவேறு உருவங்களை எடுக்கிறான் மாயவன். தனது மனத்தால் கண்ணனது திருவடிகளை இறுகப்பிடித்துக்கொள்கிறான் சகாதேவன். கண்ணன் பதினாயிரம் வடிவங்கள் எடுத்தாலும் எல்லா வடிவங்களிலும் சகாதேவன் அவனது கால்களை பிடித்தபடியேதான் இருக்கிறான் அவனை விலக்க முடியவில்லை. கண்ணனே ‘எனது கால்களை விட்டுவிடு’ என்று சொல்கையில் பாண்டவர்களின் உயிரை அவன் காக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு தனது பிடியை விடுகிறான் சகாதேவன்.
மாயவனும் அன்பன் மனம் அறிவான், 'கட்டுக!' என்று,
ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;
தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்
அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;
என் பாதம்தன்னை இனி விடுக!' என்று உரைப்ப,
'வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,
நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே
இலக்கியமும் பக்தியும் கூட இங்கு வேறு உருக்கொள்கின்றன. கலையை இறுகப்பற்றும் யாருக்கும் இறைவன் வசமாகிறான். சகாதேவன் போலவே புள்ளமங்கை சிற்பியும் பதினாயிரம் வடிவம் கொண்ட இறைவனின் உருவத்தை தனது சிற்றுளியால் பிணைத்து வைத்திருக்கிறான். அண்டமெல்லாம் அஞ்சும் உருவை அரையடி சதுரக்கல்லில் வடித்து வைக்க அவனால் முடிந்திருக்கிறது. துணிந்து சொல்லப்போனால் இறைவன் கவிஞனுக்கும் ஓரடி முன்னால் செல்ல அவனை அனுமதித்திருக்கிறான்.
தாமரைக்கண்ணன், புதுச்சேரி





