November 06, 2026

டுடன்காமுன் கல்லறை 8: டுடன்காமுன் கல்லறைக் கருவூல அறை - பொன். மகாலிங்கம்

Text:

 

கருவூல அறையின் ஒரு தோற்றம். படம் நன்றி - rarehistoricalphotos.com

டுட் கல்லறையில் இன்னும் இரண்டு அறைகள் சோதிக்கப்படாமல் எஞ்சியுள்ளன. மம்மி அறைக்குக் கிழக்கே தடுப்புச் சுவர் ஏதுமின்றித் திறந்தவாறு கிடந்த அறையைக் கருவூல அறை (Treasury) என்று குறிப்பிடுகிறார் கார்ட்டர். அதுதவிர, முன்னறைக்கு இணையாக அமைந்த துணை அறையும் (Annex) இன்னும் சோதிக்கப்படவில்லை. அந்த இரண்டு அறைகளிலும் என்னென்ன உள்ளன என்பதைத் தொடக்கத்திலேயே ஓரளவு பார்த்து வைத்திருந்தார் கார்ட்டர். 

முதலில் முன்னறையையும் மம்மி அறையையும் காலி செய்துவிட்டு மற்ற இரண்டு அறைகளுக்கு வருவோம் என அவர் முடிவெடுத்திருந்தார். கார்ட்டரின் ஊழியர்கள் கருவூல அறையை மரத் தடுப்புகளால் தற்காலிகமாக மறைத்து வைத்திருந்தனர். அடுத்த அகழ்வுப் பருவமான 1926 அக்டோபரில் கார்ட்டரின் குழு கருவூல அறையை முழுமையாகச் சோதித்துக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியது. கருவூல அறை 4.77 மீட்டர் நீளமும் 3.8 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. அதன் உயரம் 2.3 மீட்டர். அலங்காரங்கள் ஏதுமற்ற, சிறிய, எளிமையான அறைதான். பக்கச் சுவர்களோ கூரையோ தேய்த்து வழவழப்பாக்கப்படாமல் சொரசொரவென்றுதான் விடப்பட்டிருந்தன. 

1923ஆம் ஆண்டில் அந்த அறையைச் சோதித்தபோது அங்குள்ள சில பெட்டிகளைக் கல்லறைக் கள்வர்கள் சீர்குலைத்திருப்பதை கவனித்திருந்தார் கார்ட்டர். இருப்பினும் பெரும்பாலான பெட்டிகளின் முத்திரைகள் அப்படியே இருந்தன. கண்டிப்பாக இதற்குள் கள்வர்கள் புகுந்தது உறுதி. ஆனால் விலைமதிப்புள்ள பொருள்களின் தேடலில் அதிகச் சேதம் ஏற்படவில்லை இந்த அறைக்கு. இந்த அறையில் வழக்கமாக என்னென்ன வைக்கப்படும் என்பது கள்வர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் எங்கெங்கு மதிப்புள்ள பொருள்கள் இருந்தனவோ அவற்றை மட்டும் இலக்கு வைத்துத் தேடி எடுத்துச் சென்றிருந்தனர். 

கருவூல அறையில் மட்டும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அரும்பொருள்கள் இருந்தன. அங்கிருந்தனவற்றுள் உடனடியாக நம்மால் அடையாளம் காணத்தக்கவை இரண்டு பொருள்கள். ஒன்று லினன் துணியால் சால்வை போல் போர்த்தப்பட்டிருந்த அனுபிஸ் நரியின் அமர்ந்த வடிவச் சிலை. இரண்டாவது அனுபிஸ் சிலைக்குப் பின்னால் டுடன்காமுனின் உடல்பாகங்கள் வைக்கப்பட்ட நான்கு பளிங்குக் குடுவைகளை உள்ளடக்கிய பெரிய பெட்டி. அனுபிஸ் மம்மியாக்கச் சடங்குகளுக்கான தெய்வம். கல்லறைக் காவலனும் இந்த அனுபிஸ் தெய்வம்தான். எகிப்தின் கல்லறை ஓவியங்கள் பலவற்றில் உடலைப் பதப்படுத்தி மம்மியாக்கம் செய்யும் காட்சியில் அதைச் செய்யும் நிபுணர் அனுபிஸ் நரியின் முகமூடியை அணிந்திருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கும். 

4 பளிங்குக் குடுவைகளும் அடங்கிய பளிங்குப் பெட்டி. படம் நன்றி - கைரோ அரும்பொருளகம்
ஸிபிங்ஸைப் போலவே முன்னங்கால்களை நீட்டி அமர்ந்தநிலையில் விடைத்த காதுகளோடு காணப்பட்ட கறுப்பு அனுபிஸ் உருவச் சிலை மம்மி அறையை நோக்கியவாறு வைக்கப்பட்டிருந்தது. மம்மி அறையிலுள்ள மன்னரையும் அதிலுள்ள பொருள்களையும் பாதுகாக்கும் நோக்கில் அதன் பார்வை அங்கிருந்தது. கருவூல அறையின் வாசலைத் தாண்டியதுமே அதுதான் முதலில் இருந்தது. 

மரத்தால் செய்யப்பட்டுக் கறுப்புப் பிசின் தடவப்பட்டுக் கழுத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு நாடாவைத் தொண்டையில் முடிச்சிட்டுக் கட்டியவாறு அனுபிஸ் அமர்ந்திருந்தது. அது ஆணா பெண்ணா என்பதை இனங்காண முடியவில்லை. சறுக்கு வண்டிக்கு மேல் அமைந்த ஒரு பொன்னிறச் சிற்றாலயத்தின் மேல், 3-அடி நீளத்தில் ஓர் உண்மையான நரியின் அளவிலேயே இருந்தது அனுபிஸின் உருவச் சிலை. இந்தச் சிற்றாலயம் எகிப்திய ஆலயங்களின் நுழைவாயிலில் உள்ள மாபெரும் மதில் சுவர்களைப் போல் இருந்தது. 

அனுபிஸ் அமர்ந்திருக்கும் சிற்றாலயம்.

எகிப்தியர்கள் இந்த மதில் சுவரை Pylon என்று அழைக்கின்றனர். கார்ட்டரும் இதைப் பைலோன் வடிவச் சிற்றாலயம் என்றே குறிப்பிடுகிறார். பைலோன் என்பது மாபெரும் சரிவக (Trapezoidal) வடிவம். அடித்தளம் நீளமாக இருக்கும். மேலே செல்லச் செல்லக் குறுகிவிடும். நமது ஆலயங்களின் முன்னால் ராயகோபுரம் (தமிழகத்திலுள்ள பெரும்பாலான இந்து ஆலயக் கோபுரங்களை விஜயநகரப் பேரரசு காலத்தில் கிருஷ்ண தேவராயர் கட்டி எழுப்பினார் என்பதால் ராயர் கோபுரம். அது மருவி ராயகோபுரம் என்றானது. பொது வழக்கில் ராஜகோபுரம் என்றானது) என அழைக்கப்படும் மஹாகோபுரத்தில் நுழைவாயிலுக்கு மேல், முதல் நிலையிலிருந்து கீழிருந்து பாதியாக அறுத்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் இந்த மாபெரும் பைலோன்கள். அனுபிஸைத் தாங்கிய இந்த பைலோன் சிற்றாலயம் அமர்ந்திருந்த சறுக்கு வண்டியின் முன்புறக் கைப்பிடிகள் இரண்டும், கருவூல அறையின் வாயிலையும் தாண்டி மம்மி அறை வரை சற்றே நீண்டிருந்தன. 

அமர்ந்த வடிவிலான இந்த அனுபிஸ் சிலை டுடன்காமுனின் இறுதி ஊர்வலத்தின்போது நான்கு பேரால் தோளில் தூக்கிவரப்பட்டிருக்கும். அதற்காகத்தான் முன்னும் பின்னும் நான்கு அல்லது ஐந்து அடி நீளமுள்ள இரண்டு கம்புகள். எகிப்தின் கல்லறை ஓவியங்கள் பலவற்றில் இவ்வாறு அனுபிஸ் ஊர்வலமாகத் தூக்கிவரப்படுவது வரையப்பட்டிருப்பதைக் காணலாம். அனுபிஸ் சிலையை மட்டும் அது அமர்ந்திருக்கும் பீடத்திலிருந்து பின்பக்கமாக உருவி எடுத்துவிடலாம். அதற்குத் தோதாக அது தனியே செய்யப்பட்டு உள்ளே செருகப்பட்டிருந்தது. சிலையின் தளத்துக்கும் பீடத்துக்கும் இடையே இடைவெளி இருப்பதைக் காணலாம். 

அனுபிஸின் விடைத்த காதுகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. முன்னங்கால் விரல் நகங்களில் வெள்ளிப்பூச்சு. கண் பகுதியின் உட்குழிவு வெள்ளை கால்சைட், எரிமலைக் கரும்பளிங்கு-ஆகியவற்றின் சாந்தால் நிரப்பப்பட்டிருந்தது. புருவங்களிலும் கண்களின் வெளிப்புறத்திலும் தங்கம் பதிக்கப்பட்டிருந்தது. அனுபிஸ் நரிக்குக் கீழுள்ள சிற்றாலயத்தின் முன்புறத்தில் டுடன்காட்டன், டுடன்காமுன் இரண்டு பெயர்களும் கார்ட்டூஷ்களில் பொறிக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் இரண்டு வரிகளாக டிஜெட் தூண்களும் உயிர் முடிச்சுகளும் மாறி மாறிப் பொறிக்கப்பட்டுள்ளன. 

மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட நரி இனமும் வேறு ஏதோ நாய் இனமும் கலக்கவிடப்பட்டு உருவான கலப்பினமாக அனுபிஸ் இருக்கலாம் என ஊகிக்கிறார் கார்ட்டர். நாயைப் போன்ற உடல் இருப்பினும் வால் மட்டும் ஓநாய், நரிகளைப் போல் அடர்த்தியான உரோமத்துடன் சுருளாத நீண்ட வாலாக இருப்பதை அவர் சுட்டுகிறார். அனுபிஸின் கழுத்தில் ஒரு சால்வை போல் கட்டப்பட்டிருக்கும் நாடா “அது மனிதக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட விசுவாசமிக்க பாதுகாவல் விலங்கு” என்பதைக் குறிக்கிறது. அனுபிஸ் போன்ற இரண்டு விலங்குகளை நைல் பள்ளத்தாக்கில் நேரில் பார்த்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். 

ஆனால் எல்லா இடங்களிலுமே அனுபிஸ் ஆணா பெண்ணா என்பதை ஊகிக்க முடியாத வகையிலேயே வரையவும் செதுக்கவும் பட்டிருப்பதால் அது ஒரு கற்பனை விலங்காக இருக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்றும் கார்ட்டர் கூறுகிறார். டுட்டின் கல்லறையில் முகமும் முன்னங்கால்களின் முன்பகுதியும் தவிர அனுபிஸ் ஒரு பெரிய லினன் துணியால் மூடப்பட்டிருந்தது. அந்தத் துணியில் டுட்டின் தந்தை அக்கினாட்டன் காலச் சின்னங்கள் சில பொறிக்கப்பட்டிருந்தன. 

அனுபிஸின் முன்னங்கால்களுக்கு இடையே தந்தத்தால் செய்யப்பட்ட விரல் தடிமன் அளவுள்ள ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஓவியர்கள் பயன்படுத்தும் வண்ணச் சாந்துப் பலகையைப் போல் இருந்த அதிலுள்ள 6 வட்ட வடிவப் பள்ளங்களில் வெள்ளை, கறுப்புடன், மஞ்சள், சிவப்பு, பச்சை, நீல வண்ணங்கள் பாதி அளவுக்கு இருந்தன. அதேபோன்ற ஐந்து பலகைகளுக்கு அருகே இந்தத் தந்தப் பலகையும் கைரோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏனைய பலகைகளில் இரண்டே இரண்டு வட்டப் பள்ளங்கள் மட்டும்தான் இருந்தன. அநேகமாக அவை அமைச்சர்கள் எழுதும்போது பயன்படுத்தும் மைப் பலகைகளாக இருக்கலாம். 

இடமிருந்து முதலில் இருப்பதுதான் அனுபிஸ் சிலையின் முன்னங்கால்களுக்கு நடுவே இருந்த தந்தப் பலகை.

அனுபிஸின் முன்னங்கால்களுக்கு இடையே இருந்த தந்தப் பலகையில் மாமன்னரின் மனைவி நெஃபர்டிட்டிக்குப் பிறந்த அன்பு மகள் மெரிட்டாட்டன் என்று எழுதப்பட்டிருந்தது. இவர் டுடன்காமுனின் சகோதரி. இவரது பெயர் ஏன் இங்கு வந்ததோ தெரியவில்லை. எகிப்தைப் பொறுத்தவரை மகாராணி என்ற சொல்லே பழங்காலத்தில் புழக்கத்தில் இல்லை. Royal Wife அதாவது மன்னரின் மனைவி என்றுதான் எல்லா இடங்களிலும் எழுதப்பட்டிருக்கும். மகாராணி என்னும் சொல்லை நமது வசதிக்காகவே பயன்படுத்திக்கொள்கிறோம். 

அனுபிஸுக்கு நேர் பின்னால் மேற்கு நோக்கி ஹாத்தோர் தெய்வத்தின் வடிவைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு பசுவின் தலை வைக்கப்பட்டிருந்தது. அது மேற்கில் அஸ்தமிக்கும் கதிரவனையும் மாண்டோரையும் ஏற்றுக்கொள்ளும் தெய்வம். மரத்தில் செதுக்கப்பட்ட பசுவின் கொம்புகள் செம்பால் செய்யப்பட்டிருந்தன. கண்கள் லாப்பிஸ் லாஸுலிச் சாந்தால் நிரப்பப்பட்டிருந்தன. தலை, காதுகள், தொண்டையின் ஒருபகுதி-ஆகியவற்றுக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. கொம்புகளுக்குப் பூசப்பட்ட கறுப்புப் பிசின் கொஞ்சம் வடிந்து இரண்டு காதுகள் மேலும் படிந்திருந்தது. நாங்கள் இந்தப் பசுத் தலையைப் பார்க்க முடியவில்லை. புதிய அரும்பொருளகத்துக்கு எடுத்துப் போய்விட்டார்கள். 

கருவூல அறையில் இருந்த பசுத்தலை. படம் நன்றி - GEM Cairo

பசுத் தலைக்குப் பின்னால் தங்கத் தகடு போர்த்தப்பட்ட பெட்டி இருந்தது. இதையும் சிற்றாலயம் (Shrine) என்றே எகிப்தியவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தப் பெட்டியின் நான்கு திசைகளிலும் நான்கு காவல் தேவதைகள் கைகளை விரித்தவாறு நின்றுகொண்டிருக்கும். அவற்றை நேரில் பார்க்கும்போது அந்த தேவதைகளின் முகபாவத்தை உற்று கவனியுங்கள். பரிவோடு பெட்டியைப் பாதுகாக்கும் பாவம் அதில் துல்லியமாக வெளிப்பட்டிருக்கும். Isis, Nephthys, Neith, Selkit-என்பன அந்த நான்கு தேவதைகளின் பெயர்கள். அவற்றில் ஒரு தேவதையின் தலையில் ஓங்கில் (Dolphin) போன்ற உருவம் உள்ளது. 

பளிங்குக் குடுவைகள் வைக்கப்பட்டிருந்த தங்கத் தகடு போர்த்தப்பட்ட சிற்றாலயம்

தங்க நிறப் பெட்டியில், இரண்டு வரிசைகளாகச் சிவப்பு, நீலம், அடர்நீல நிறச் சாந்துக் கலவை பதிக்கப்பட்ட படம் விரித்த நாகங்கள் இருக்கும். இரண்டு வரிசை நாகங்களுமே, தலையில் சூரியத் தகட்டைச் சூடியிருக்கும். கீழ் வரிசையில் 15 நாகங்களும், மேல் வரிசையின் இரண்டு பக்கங்களில் 14 நாகங்களும், இரண்டு பக்கங்களில் 13 நாகங்களும் காட்டப்பட்டுள்ளன. இந்த மரப் பெட்டிக்குள்தான், Canopic Jars எனப்படும் பளிங்கு ஜாடிகள் இருந்தன. 

பொன்னிறச் சறுக்கு வண்டிக்கு மேல், பெரிய சதுர வடிவிலான ஒற்றை அலபாஸ்டர் பளிங்குப் பெட்டிக்குள் அந்தப் பளிங்கு ஜாடிகள் உருளை வடிவில் குடையப்பட்டு நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தன. நான்கு பிரிவுகளுக்கும் தனியே எடுக்கக்கூடிய வகையில் தனித்தனியே நான்கு மூடிகள். அந்த நான்கு ஜாடிகளின் மூடியும் டுடன்காமுன் தலைப் பகுதிபோல் செதுக்கப்பட்டிருந்தன. மிக மிக அழகான ஜாடி மூடிகள் அவை. நானும் ராஜகோபாலும் வெகுநேரம் அந்த ஜாடிகளையே சுற்றிச் சுற்றி வந்தோம். டுடன்காமுனின் கரிய கண்களும் சிவந்த அதரங்களும் கூர்மையான நாசியும் எடுப்பாகச் செதுக்கப்பட்டிருந்தன. குட்டிப் பயல் அழகன்தான். இரண்டு கெனோப்பிக் ஜாடிகள் ஒன்றையொன்று நோக்கிக் கொள்வதுபோல் அவை வைக்கப்பட்டிருந்தன. 

4 வகையான மூடிகள் கொண்ட ஜாடிகள்

இந்தப் பளிங்கு ஜாடிகளுக்குள் சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்டுக் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடு மிக்க மிகச் சிறிய அளவிலான மம்மி வடிவப் பேழைகள் நான்கு இருந்தன. இறகு வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட அலங்காரம் கண்ணைப் பறித்தது. லினன் துணியால் சுற்றப்பட்டிருந்த மம்மி வடிவப் பேழைகள் 39 சென்டிமீட்டர் நீளமும் 12 சென்டிமீட்டர் உயரமும் கொண்டிருந்தன. இவற்றுக்குள்தான் டுடன்காமுனின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நான்கு உருளை வடிவக் குடுவைகளிலும் நான்கு சிறிய மம்மி வடிவப் பேழைகள் நின்ற நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவையும் நறுமணப் பிசின் காரணமாக அடிப்பகுதியில் ஒட்டி இறுகிப் போயிருந்தன. 

இவற்றின் அலங்காரக் கலைநயத்தை வருணிக்க வார்த்தைகளே இல்லை. தங்கப் பேழையின்மேல் வண்ணக் கண்ணாடி விழுதும் அருமணிகளும் பதிக்கப்பட்டுள்ளன. டுட்டின் மம்மி வைக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பெரிய மம்மி வடிவப் பெட்டிக்கு மேலே இருந்த வேலைப்பாடு மிக்க மம்மி வடிவ மரப் பெட்டியை அப்படியே நகலெடுத்ததுபோல் உள்ளன இந்தச் சிறிய பேழைகள். அதன் சிறிய மாதிரி வடிவங்கள் என்றே இவற்றைச் சொல்லலாம். முன்னும் பின்னும் பேரழகுமிக்க வேலைப்பாடு. பேழையின் உள்புறம் முழுக்க சித்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கில் மூன்று பேழைகள் கைரோவிலுள்ள பழைய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

எஞ்சிய மற்றொன்று நாங்கள் போயிருந்தபோது ஃபிரான்சில் நடைபெறும் டுட் கண்காட்சிக்காக பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. பேழை மூடியவாறு வைக்கப்பட்டிருந்ததால் எங்களால் உள்ளே பொறிக்கப்பட்டிருந்த சித்திர எழுத்துகளைப் பார்க்கமுடியவில்லை. வெளிநாடுகளில் இந்தப் பேழை காட்சிக்கு வைக்கப்படும்போது கீழ்ப்பகுதியும் மேல் மூடியும் சற்றுத் தள்ளித் தள்ளி வைக்கப்படுவதால் உள்புற எழுத்துகளை ஓரளவு பார்க்கமுடிகிறது படங்களில். 

இவ்வளவு கலைநயமிக்க விலைமதிப்புள்ள நான்கு சிறு பேழைகளும் தவறான வகையில் வைக்கப்பட்டிருந்தன என்கிறார் கார்ட்டர். எகிப்திய ஈமச் சடங்கு முறைப்படி உரிய திசையில் அவை வைக்கப்படவில்லையாம். இந்தச் சின்ன மம்மி வடிவப் பேழை டுடன்காமுனுக்காகத் தயாரிக்கப்பட்டது அல்ல என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேழைகளின் காலடியில் பொறிக்கப்பட்டுள்ள டுடன்காமுனின் பெயர் ஏற்கெனவே இருந்த வேறு ஒரு பெயரை அழித்து எழுதப்பட்டிருக்கிறது. அது டுடன்காமுனின் அண்ணன் ஸ்மென்க்கரே (Smenkhkare) என்று சில வல்லுநர்கள் நம்புகின்றனர். 

டுட்டுக்கு ஒரு அண்ணன் இருந்தாரா? என்று நீங்கள் கேட்கலாம். இருந்ததாகச் சில குறிப்புகள் உள்ளன. தந்தை அக்கினாட்டனோடு ஸ்மென்க்கரேயும் சேர்ந்துதான் நாட்டை ஆண்டதாகச் சில குறிப்புகள் உள்ளன. இந்த ஸ்மென்க்கரே-தான் டுட்டின் அக்கா மரிட்டாட்டனை மணந்தவர். இருபுறங்களிலும் இரண்டிரண்டு வெண்கலக் கைப்பிடிகளோடு கூடிய அலபாஸ்டர் பளிங்குப் பெட்டியிலும் டுட்டின் பெயர் புதிதாக அழித்துத்தான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நான்கு தங்கப் பேழைகளிலும் காணப்படும் முகம் டுட்டின் மற்ற முகங்களில் இருந்து வேறுபடுகிறது. சற்றுச் சதைப்பிடிப்புள்ள முகத்தைப் போல் உள்ளது இது. 

கருவூல அறையின் தென்புறத்தில் கறுப்புச் சிற்றாலயங்களும் பெட்டிகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலுமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடவுள் அல்லது மன்னரின் சிலைகள் இருந்தன. சறுக்கு வண்டிக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த 22 சிற்றாலயங்கள் ஒவ்வொன்றும் இரட்டைக் கதவுகளைக் கொண்டிருந்தன. அவை கவனமாக மூடி முத்திரையிடப்பட்டிருந்தன. உள்ளே இருந்த உருவச் சிலைகள் எல்லாமே லினன் துணியால் மூடப்பட்டிருந்தன. சில தெய்வ உருவங்களின் தலைமேல் உண்மையான மலர்கள் சூட்டப்பட்டிருந்தன. 

டுடன்காமுன் கல்லறையில் 27 தெய்வச் சிலைகளும் 7 மன்னர் சிலைகளும் என மொத்தம் 34 சிலைகள் கிடைத்தன. அவற்றுள் 32 கருவூல அறையில் இருந்தவை. அவை எல்லாமே கடினமான மரத்தில் செதுக்கப்பட்டவை. பெரும்பாலான சிலைகள் தங்கச் சருகுத் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்தன. இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் அழகே உருவானவை. சிலவற்றின் முகத்தில் சாயம் பூசப்பட்டிருந்தது. பெரும்பாலான சிலைகளின் உடலில் சித்திர எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. கைரோ பழைய அரும்பொருளகத்தில் ஒரு பெரிய கண்ணாடி அலமாரிக்குள் பல அடுக்குகளாக இந்தச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சில சிலைகள் தலையில் பொய்முடியோடு காட்டப்பட்டுள்ளன. 

இந்தச் சிலைகளில் மிகப் பிரபலமானது பப்பைரஸ் தண்டுகளால் கட்டப்பட்ட ஒரு படகின் (தெப்பம்?) மேல் ஏறி நின்றவாறு டுட் வேட்டையாடும் காட்சியைச் சித்திரிக்கும் சிலை. வலக்கையில் எறிவதுபோன்ற தோரணையில் ஓர் ஈட்டியைப் பிடித்திருக்கும் டுட் கீழ்-எகிப்துக்குரிய சிவப்பு மகுடத்தை அணிந்துள்ளார். வேட்டையாடும் விலங்கைக் கட்டத் தேவையான முறுக்கப்பட்ட வெண்கலக் கம்பிச் சுருளை இடக் கையில் வைத்திருக்கிறார். உடல் முழுவதும் தங்கச் சருகால் மூடப்பட்டுப் பொன்மயமாக உள்ளது. தீமையின் வடிவமான சேத் கடவுளைக் குறிக்கும் நீர் யானையை டுட் வேட்டையாடும் காட்சி இது என்று ஊகிக்கப்படுகிறது.

பப்பைரஸ் தண்டுகளால் கட்டப்பட்ட தெப்பத்தில் ஏறி நின்று வேட்டையாடும் டுடன்காமுன்

கைரோ அரும்பொருளகத்துக்கு நாங்கள் முதல்முறை போகும்போது இந்த முக்கியமான சிலை அங்கே இல்லை. ஆனால் அலெக்ஸாண்டிரியா நகருக்குப் போய்விட்டு மீண்டும் ஒருமுறை அரும்பொருளகம் போனபோது இந்த அழகிய சிலை அங்கே இருந்தது. நல்ல வேளை. இதைப் பார்க்காமல் விட்டிருந்தால் அதிகம் வருந்தியிருப்பேன். இத்தகைய சிலைகளில் பெரும்பாலானவை டுட்டின் சகோதரிக்கு உரியவை என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மார்புப் பகுதி இளஞ் சிறுமிகளைப் போல் லேசாக மேடிட்டிருப்பதை அதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்கள் அவர்கள். 

மேடிட்ட மார்புகளைக் கொண்ட சிலை டுட்டின் சகோதரியாக இருக்கலாம்

மேல் எகிப்தை ஆளும் மன்னர் என்பதை எடுத்துக்காட்டும் வெள்ளை மகுடத்தோடு கருஞ்சிறுத்தை மீது டுடன்காமுன் நிற்கும் இரண்டு சிலைகளும் முக்கியமானவை. அவற்றில் ஒன்றைமட்டும்தான் நாங்கள் பார்க்கமுடிந்தது. சிறுத்தையின் காது, மூக்கு, வாயோரம், புருவங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மன்னரின் உடல் முழுவதும் தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. இத்தகைய சிலைகள் எகிப்தியக் கல்லறைகளில் தென்படுவது அரிதல்ல என்றபோதும் இதன் உண்மையான குறியீடு புரியவில்லை என்கிறார் கார்ட்டர். 

கருஞ்சிறுத்தை மீது நிற்கும் டுடன்காமுன்

சிறுத்தையும் மன்னரும் இடப்புற முன்னங்காலை முன்னே வைத்து நடந்துசெல்லும் தோற்றத்தில் காட்டப்பட்டுள்ளதால் டுடன்காமுன் எங்கோ செல்வதை அல்லது பாதாள உலகிலிருந்து வெளியேறுவதைக் குறிப்பதாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் கார்ட்டர். இந்தச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள குறிப்பு 2011 ஜனவரி 28-ஆம் தேதி கைரோ அரும்பொருளகம் சூறையாடப்பட்டபோது சிலை உடைந்து கிடக்கக் காணப்பட்டதாகத் தெரிவிக்கிறது. மன்னர் மட்டும் பீடத்தின்மீது நிற்க, சிறுத்தையின் உருவம் வேறோர் அறையில் கிடந்ததாம். மன்னரின் சிலையும் சிறுத்தையும் கிட்டத்தட்ட உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. இரண்டையும் மறுஉருவாக்கம் செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதம் பிடித்ததாம். நெருங்கிப் பார்த்தாலொழிய அது சீரமைக்கப்பட்ட சுவடே தெரியாது. 

உடைத்து நொறுக்கப்பட்ட பின் ஒட்ட வைக்கப்பட்ட கால் பகுதிகள்

பொதுவாக நான் அரும்பொருளகம் செல்லும்போது அரும்பொருள்களுக்கு அருகே வைக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் எல்லாவற்றையுமே படிக்க நேரமிருக்காது. ஆனால் பெரும்பாலும் அவற்றைப் படம் பிடித்து வைத்துக்கொள்வேன். வீட்டிற்கு வந்து பொறுமையாக அந்த அரும்பொருள்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்து ரசிக்கும்போதுதான் அவற்றைப் பற்றிய குறிப்புகளைப் படிப்பேன். இன்று இந்த அத்தியாயத்தை எழுதும்போதுதான் இந்தச் சிறுத்தைச் சிலை நொறுக்கப்பட்ட விவரத்தையே படிக்கிறேன். கணினியில் அந்தச் சிலையின் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்கும்போதுதான் அது சீரமைக்கப்பட்ட தடயம் தெரிகிறது. குறிப்பாக டுட்டின் கால்கள் இரண்டும் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டு ஒட்ட வைக்கப்பட்டுள்ளன. டுட்டின் வலக்கை முற்றாகத் தோளில் இருந்து துண்டிக்கப்பட்டு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. நேரில் பார்த்தபோது இவை எங்கள் கவனத்துக்கே வரவில்லை. அவ்வளவு திருத்தமாகச் சீரமைத்திருக்கிறார்கள். 

கருவூல அறையின் தென்புறத்தில் இத்தகைய சிலைகள் வைக்கப்பட்டிருந்த 22 கறுப்புச் சிற்றாலயங்களுக்கு மேல் 14 படகுகள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாப் படகுகளின் முன்பகுதியும் மேற்குநோக்கியவாறு வைக்கப்பட்டிருந்தன. இங்கு கிடைத்த படகுகள் தவிர மேலும் சில படகுகள் துணை அறையில் கிடந்தன. ஆனால் அவை மீட்கமுடியாத அளவுக்குக் கள்வர்களால் சிதைக்கப்பட்டுவிட்டிருந்தன. கருவூல அறைப் படகுகள் மன்னரின் இரவு நேர இறுதிப் பயணம், நீர்யானை வேட்டை, அபிடோஸ் நகருக்கான புனிதப் பயணம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான மாதிரிப் படகுகள். 

மன்னருக்கான மாதிரிப் படகுகள்

தொலைதூரப் பயணத்துக்குத் தேவையான மாதிரிப் படகுகள் எல்லாவற்றிலுமே பாய்மரமும் அதை இழுத்துக்கேட்டத் தேவையான கயிறுகளும் துடுப்புகளும் உள்ளன. வண்ணம் தீட்டப்பட்ட படகின் முன்புறத்தில் அதை வழிநடத்திச் செல்லும் நபருக்கான சிறிய மண்டபமும் இருக்கிறது. வேட்டைக்கான படகுகளில் பின்பிறத்தில் இரண்டே இரண்டு துடுப்புகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. சில அலங்காரத் துடுப்புகளின் மேல்முனையில் ஒற்றை மகுடம் அணிந்த மன்னரின் தலைப் பகுதி தாடியோடு பொருத்தப்பட்டுள்ளது. 

சொர்க்கத்துக்குப் போகத் தேவையான இரண்டு படகுகளில் மட்டும் பாய்மரமோ துடுப்புகளோ வைக்கப்படவில்லை. அந்தப் படகை தேவதைகள் இழுத்துச் செல்லும் என்பதால் அவற்றுக்குத் துடுப்போ பாய்மரமோ தேவையில்லையாம்! அப்படிப்பட்ட படகுகளை நாங்கள் காணவில்லை. துடுப்பும் பாய்மரமும் இல்லாமல் காணப்பட்ட ஒரே ஒரு படகும்கூட வேட்டைப் படகைப்போலத்தான் தென்பட்டது. 

கருவூல அறையின் வடபகுதியில் அலங்கார வேலைப்பாடு அதிகமற்ற சில வெள்ளைப் பெட்டிகளும் பொக்கிஷப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த மதிப்புமிக்க பொருள்கள் பெரும்பாலானவற்றைக் கள்வர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். பெட்டிகளின் முத்திரை உடைக்கப்பட்டு உள்ளே இருந்து திருடிய பொருள்கள்போக எஞ்சியவை சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் என்னென்ன நகைகள் வைக்கப்பட்டிருந்தன என்பதைக் காட்டும் பட்டியல் பெட்டிக்குமேல் வைக்கப்பட்டிருந்தது. 

இங்குள்ள ஒரு பெட்டியில் தந்தத்தால் செய்யப்பட்ட அழகான விசிறி கிடைத்தது. டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்ட ‘ட’ வடிவிலான தந்தப் பிடியில் தீக்கோழி இறகுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதைப் பார்த்ததும் எனக்குத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பயன்படுத்தும் பனையோலை விசிறி நினைவுக்கு வந்தது. பெட்டியில் எஞ்சியிருந்த பொருள்களைப் பெட்டியின் மேலிருந்த பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது குறைந்தது 60 விழுக்காட்டுப் பொருள்களைக் கள்வர்கள் எடுத்துச் சென்றதாக மதிப்பிடுகிறார் கார்ட்டர். சில காதணிகள், கழுத்து ஆரம், காப்புகள், மோதிரங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. 

கொள்ளையில் பறிகொடுத்ததுபோகக் கிடைத்த நகைகளே அக்கால எகிப்தியப் பொற்கொல்லர்களின் திறமையை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தன. காதணிகளில் சிலவற்றை நாங்கள் கைரோ அரும்பொருளகத்தில் பார்த்தோம். வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட அற்புதமான வேலைப்பாடுமிக்க காதணிகள் அவை. கருவூலத்தில் கிடைத்த நகைகளில் பெரும்பாலானவை டுடன்காமுன் தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தியவை என்றே ஊகிக்கப்படுகிறது. இந்த அறையைப் பொறுத்தவரை சடங்குபூர்வ நகைகள் அதிகமில்லை. டுட் சிறுவயதாக இருந்தபோது காதணிகளைப் பயன்படுத்தி இருக்கலாம். டுடன்காமுனின் மம்மியில் காது மடலில் ஓட்டை இருந்தபோதும் மம்மியின் உடலில் எங்குமே காதணிகள் கண்டெடுக்கப்படவில்லை. எகிப்திய மாமன்னர்கள் பெரும்பாலானவர்களின் காது மடலில் துளைகள் இருப்பதைப் படங்கள் காட்டியபோதும் யாரும் காதணி அணிந்திருப்பதைத் தாம் பார்க்கவில்லை என்கிறார் கார்ட்டர். ஒசைரிஸ் கடவுளைப் பொறுத்தவரை அது காப்புகளும் ஆரங்களும் அணிந்திருக்குமே தவிர ஒருபோதும் காதணி அணிந்து தென்பட்டதில்லை. 

அரபு உலகைப் பொறுத்தவரை பிள்ளைகளுக்கு ஆறு, ஏழு வயதுவரை மட்டுமே காதணி அணிவிக்கும் பழக்கம் உண்டு. அரிதாக 12 வயதுவரை கூடக் காதணிகள் அணிவிக்கப்படுவதுண்டு. சிறுவர்கள் பருவ வயதை எட்டியபின் காதணி அணியும் பழக்கம் அன்றும் இல்லை இன்றும் இல்லை. பண்டைக்கால எகிப்தில் காதணி அணியும் பழக்கமே இருந்ததில்லையாம். அநேகமாக அந்தப் பழக்கம் ஆசியாவிலிருந்து சென்றிருக்க வேண்டும் என்கிறார் கார்ட்டர். டுட் காலத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன் காதணிகள் அறிமுகமாகி இருக்கலாம். 

கருவூல அறையில் கிடைத்த பொருள்களில் முக்கியமானவை மாமன்னர்களும் ஒசைரிஸ் தெய்வமும் கைகளில் வைத்திருக்கக் காணப்படும் வளைகோலும், தானிய சூட்டடிப்புக் கோலும். அவை இரண்டு ஜோடிகள் கிடைத்தன இங்கே. வளைகோலை மன்னர்களும் ஒசைரிஸும் எப்போதும் இடக் கையில் பிடித்திருப்பர். சூட்டடிப்புக் கோல் வலக்கையில் இருக்கும். கைரோ அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய உருவச் சிலைகள் சிலவற்றில் இந்த வளைகோல் இடம் மாறியிருக்கக் கண்டோம். தமிழ் மரபில் நாம் செங்கோல் என்று சொல்வோம் அல்லவா? அதற்கு இணை இந்த வளைகோல். 

உருவச் சிலைகள்

அரசரின் அதிகாரத்தைக் காட்டும் கோல் இது. வெண்கலத்தில் செய்யப்பட்ட இந்தக் கோல் தங்கத்தாலும் அடர்நீலக் கண்ணாடிச் சாந்தாலும் மெருகூட்டப்பட்ட வளையங்களால் மாறிமாறி அலங்கரிக்கப்பட்டிருக்கும். கருவூல அறையில் கிடைத்த இரண்டு வளைகோல்களையும் ஒரு சூட்டடிப்புக் கோலையும் டுட்டின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த மம்மி வடிவத்திலான சின்னத் தங்கப் பேழைகளுக்கு அருகே காட்சிக்கு வைத்திருந்தனர். 

மம்மி வடிவப் பேழைக்கு மேலே இருப்பது சூட்டடிப்புக் கோல், வலப்பக்கம் இருப்பது வளைகோல்

வளைகோலின் வட்டமான அடிப்பகுதியில் டுடன்காமுனின் பெயர் கார்ட்டூஷ் வடிவத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்கள் இதை ஹெகட் (Hekat) என்று அழைத்தனர். கிறிஸ்தவ சமயப் பேராயர்களும் கர்தினால்களும் இப்போது கையில் வைத்திருக்கும் Pastoral Staff எனப்படும் வளைகோல்களின் ஆதிமூலம் எகிப்திய வளைகோல்தான் என்று நம்பப்படுகிறது. இது தவிர முழுக்கத் தங்கத்தால் மூடப்பட்ட செங்கோல் ஒன்றும் கருவூல அறையில் கிடைத்தது. ஆங்கிலத்தில் Sekhem scepter என்றழைக்கப்படும் அது, அந்தக் கோலைக் குறிக்கப் பயன்படும் சித்திர எழுத்தின் வடிவிலேயே இருக்கும். இதுவும் அதிகாரத்தின் அடையாளம்தான். 

ஷப்தி பொம்மைகள்

கருவூல அறையிலும் துணை அறையிலும் ஏராளமான ஷப்தி பொம்மைகள் கிடைத்தன. அவை மன்னரின் மம்மி வடிவத்திலான பொம்மைகள். ஷப்தி எனும் ஒருவகை மரத்தால் செய்யப்பட்டதால் அவற்றுக்கு அந்தப் பெயர் வந்தது. ஷப்தி மரம் அல்லாத வேறு பொருள்களாலும் ஷப்தி பொம்மைகள் செய்யப்படுவதுண்டு. களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள்கூட லட்சக்கணக்கில் கிடைத்துள்ளன. மறுமை உலகுக்குச் செல்லும் மன்னர் கடுமையான உடலுழைப்பில் ஈடுபடவேண்டியிருந்தால் அவருக்காக இந்த பொம்மைகள் அந்த வேலையைச் செய்துகொடுக்குமாம். நந்தனாருக்குக் கிடைத்த திருப்புன்கூர் குளத்துப் பிள்ளையார்போல... மம்மி வடிவில் இல்லாத வேறு வகை பொம்மைகள்மீது மண்வெட்டி, கூடை போன்ற பொருள்களும் வைக்கப்பட்டிருக்கும். டுட் கல்லறையில் அப்படிப்பட்ட பொம்மைகள் இருந்ததாகத் தெரியவில்லை. கைரோ அரும்பொருளகத்தில் அப்படிப்பட்ட ஷப்தி பொம்மைகள் ஏராளம் உள்ளன. 

கார்ட்டர் முதலில் பார்த்த கருவூலக் காட்சி இதுதான். படம் நன்றி - ancientegypt-Reddit

கருவூல அறையில் நேர்த்தியாக வடிக்கப்பட்ட ஆறு ஷப்தி பொம்மைகளின் பாதத்தில் டுட்டின் இறுதிச் சடங்குக்காகவே அவை அர்ப்பணிக்கப்படுவதாக எழுதப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளோ மன்னரின் நெருக்கமான நண்பர்களோ அவற்றைச் செய்து கொடுத்திருக்கவேண்டும். மன்னரின் விசுவாசமான ஊழியர்கள்கூட இவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் மன்னருக்காகப் பணி செய்துகிடக்க இப்படிப்பட்ட ஷப்தி பொம்மைகளை அர்ப்பணிப்பதுண்டு. ஆண்களோடு பெண் ஷப்தி பொம்மைகளும் மன்னர்களில் கல்லறைகளில் வைக்கப்படுவதுண்டு. 

கருவூல அறையின் வட-மேற்கு மூலையில் டுடன்காமுனின் வித்தியாசமான அம்பறாத்தூணி சுவர் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாவது அரசகுலத்துக்கே உரிய கலைநயத்தோடு இந்தப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கவிழ்த்துப் போட்ட முக்கோண வடிவில் அமைந்த அம்பறாத்தூணியின் இரண்டு பக்கவாட்டு முனைகளும் ஊதா நிறச் சிறுத்தை முகத்தோடு முடிகின்றன. இதுவும் தங்கச் சருகுத் தாளால் மூடப்பட்டுள்ளது. டுடன்காமுன் வேட்டையாடும் காட்சி இந்தப் பெட்டிமீது சித்திரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் போனபோது இந்த அம்பறாத்தூணி கைரோ அரும்பொருளகத்தில் இல்லை. லக்ஸோர் அரும்பொருளகத்தில் டுடன்காமுனின் வில்லும் அம்புகளும் மட்டும் வைக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன்.

டுடன்காமுனின் அம்பறாத்தூணி. படம் நன்றி  blackgate.com

இதே கருவூல அறையில், இரண்டு வேட்டை ரதங்கள் பிரித்துப் போடப்பட்டிருந்தன. முன்னறையில் கிடைத்த 4 ரதங்களையும் சேர்த்தால் மொத்தம் ஆறு ரதங்கள் டுட் கல்லறையில் கிடைத்தன. கருவூல அறையில் இருந்த பொருள்களில் எங்கள் இருவரையும் மிகவும் கவர்ந்தவை, அலபாஸ்டர் பளிங்கில் செய்யப்பட்ட கெனோப்பிக் ஜாடிகள்தாம். அவற்றின் மூடியிலுள்ள முகத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நான்கு மூடிகளில் மூன்றுதான் கைரோவில் இருந்தன. இன்னும் ஒன்று எங்கோ சுற்றுலா போயிருக்கவேண்டும். 

எகிப்து தொடர்பான எந்தவொரு கண்காட்சி உலகில் நடைபெற்றாலும் பெரும்பாலும் நீங்கள் உடல் பாகங்கள் வைக்கப்படும் கெனோப்பிக் ஜாடிகளை ஏதேனும் ஒரு வடிவில் காணலாம். பிரிட்டிஷ் அரும்பொருளகம் நடத்திவரும் “உலகப் பொக்கிஷங்கள்” (World Treasures) என்னும் கண்காட்சி சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்துக்கு 2016இல் வந்தபோது நான் இத்தகைய பளிங்கு ஜாடிகளைப் பார்த்தேன். மொழு மொழுவென்று அவ்வளவு நேர்த்தியாகப் பளிங்கில் கடைந்து உருவாக்கப்பட்டிருந்தன அந்த ஜாடிகள். 

டுடன்காமுனின் முன்னோர் கல்லறையில் இருந்த கெனோப்பிக் பளிங்கு ஜாடிகள்

ஒருவரின் உடலை மம்மியாக்கம் செய்து பதப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் உடலின் இடப்பக்கத்தில் ஒரு துளையிட்டு உள்ளுறுப்புகளை வெளியே எடுத்துவிடுவர். ஈரல், வயிற்று பாகங்கள், குடல், நுரையீரல்-ஆகிய நான்கும் பாடம் செய்யப்பட்டு இந்த நான்கு ஜாடிகளுக்குள்தான் வைக்கப்படும். இதயம் மட்டும் உடலில் விட்டுவைக்கப்படும். மனித மனம் என்பது இதயத்தில் இருந்து செயல்படுவதாக நம்பினார்கள் எகிப்தியர்கள். ஒருவரின் ஞானம், நினைவு எல்லாமே இதயத்தில்தான் உள்ளன என்று அவர்கள் நம்பினர். ஒருவரின் புத்திக்கூர்மை, நடத்தை, ஆளுமை எல்லாமே இதயத்தில்தான் உள்ளன என்ற நம்பிக்கையால் உடலில் இருந்து அதை எடுக்கவில்லை. சுவனத்தை நோக்கிய பயணத்தில் சிந்திக்க மாமன்னருக்கு இதயம் வேண்டியிருக்கும் என்று நம்பினர் எகிப்தியர்கள். 

இறந்த பின்னரும் கூட ஒருவரின் உண்மையான நடத்தையை இந்த இதயம் பிரதிபலிக்கும் என்று நம்பினர் எகிப்தியர்கள். மேலும், இதயத்தை எடைபோடும் சடங்கிற்காக இதயம் தேவைப்படும். ஓர் ஆன்மா சொர்க்கத்துக்குப் போகத் தகுதி படைத்ததா இல்லையா என்பதைச் சோதிக்கும் சடங்கு அது. இந்தச் சடங்குக் காட்சி எகிப்தில் பல இடங்களில் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும், சுவரோவியமாக வரையப்பட்டிருக்கும். Book of the Dead அதாவது மாண்டோரின் புத்தகம் என்பது எகிப்தியவியலில் முக்கியமான ஒரு புத்தகம். மாண்டவர்களின் மறுமை வாழ்வுக்கு வழிகாட்டும் அந்தப் புத்தகத்தில் பல்வேறு காட்சிகளும் சித்திர எழுத்துகளும் வரையப்பட்டிருக்கும். 

மாண்டோரின் புத்தகத்தில் காட்டப்படும் இதயத்தை எடைபோடும் சடங்குக் காட்சி

சமயப் புனித நூல்களைப்போல் அதில் நீதியுரை இடம்பெற்றிருக்காது. பப்பைரஸ் தாளில் அந்தப் புத்தகம் எழுதப்பட்டு மன்னர்களில் கல்லறைகளில் வைக்கப்படும் வழக்கம் உண்டு. டுடன்காமுனின் எள்ளுத்தாத்தா யுயாவின் (Yuya) கல்லறையில் பப்பைரஸ் தாளில் வரையப்பட்ட மிக நீளமான மாண்டோரின் புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. கைரோ அரும்பொருளகத்தில் கண்ணாடிச் சட்டமிடப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அதன் நீளம் 19.37 மீட்டர்! 

அத்தகைய மாண்டோரின் புத்தகத்தில் இதயத்தை எடைபோடும் சடங்கு வரையப்பட்டிருப்பதைக் காணலாம். மாண்டவர்களின் ஆன்மா பல தடைகளைக் கடந்து மறுமை உலகிற்குள் நுழைந்து தீர்ப்பு மண்டபத்துக்குச் சென்று சேரும். அங்குதான் அந்த ஆன்மாவின் விதி தீர்மானிக்கப்படும். ஒசைரிஸ் கடவுளின் முன்னிலையில் இந்தச் சடங்கு நடைபெறும். 

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கைபற்றிக் கேள்வி கேட்க 42 நடுவர்கள் அமர்ந்திருப்பர். அவர்கள், நீ கொலை செய்தாயா? கொள்ளையடித்தாயா? வழிப்பறி செய்தாயா? ஏமாற்றினாயா? மற்றவர்களைத் துன்புறுத்தினாயா? நம்பியவருக்கு துரோகம் இழைத்தாயா? கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றாயா? அரசாங்கம் ஆயிரம்முறை சொல்லியும் தடுப்பூசி போடாமல் டபாய்த்து ஆசுபத்திரி ஆயாக்களைப் படாதபாடு படுத்தினாயா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். உள்ளதை உள்ளபடி சொன்னவுடன் அனுபிஸ் தெய்வம் ஒரு பெரிய தராசுத் தட்டில் மாண்டவரின் இதயத்தை வைக்கும். துலாக்கோலின் மற்றொரு தட்டில் மாட் எனப்படும் நீதி நேர்மைமிகு நடத்தைக்குரிய பெண் தெய்வத்தின் அடையாளமாக மெல்லிய இறகு ஒன்றை அனுபிஸ் வைக்கும். சில படங்களில் அந்த இறகு மட்டும் காட்டப்பட்டுள்ளது. சில படங்களில் இறகு சூடிய மாட் தெய்வமே குத்தவைத்து அமர்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. 

ஆஸ்ட்ரிச் என்னும் தீக்கோழியின் இறகு அது. தீக்கோழி மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் இனம். அதன் முக்கிய இறகு உதிர்ந்தால் உயிரை விட்டுவிடுமாம். அவ்வளவு தன்மானமுள்ள தீக்கோழியின் இறகுக்கு எகிப்தில் ஏக மரியாதை. இந்த இதயத்தை எடைபோடும் சடங்கை நமது சித்திரகுப்தர் மாதிரி Thoth என்னும் ஒரு கடவுள் கண்காணித்துக் குறிப்பெடுக்கும். Ibis என்னும் நாரையின் தலை கொண்டது இந்த தோத் தெய்வம். இதற்கு அருகிலேயே கர்ண கொடூரமான Ammit என்னும் உயிரினம் காத்திருக்கும். முதலையின் தலையும், சிங்கத்தைப் போன்ற முன்னங்கால்களையும், நீர்யானை போன்ற உடல்பகுதியையும் கொண்டது அந்த ஆன்மா-தின்னி உயிரினம். தராசுத் தட்டில் இதயமும் இறகும் சமமாக இருக்கவேண்டும். இறகைக் காட்டிலும் இதயம் கனமாக இருந்து அது வைக்கப்பட்ட தராசுத் தட்டு கீழிறங்கிவிட்டால் அவ்வளவுதான்... சோலி முடிந்தது. 

ஆவலோடு காத்திருக்கும் முதலைத் தலை ஓடிவந்து இதயத்தைக் கவ்வி விழுங்கிவிடும். அதன்பிறகு சொர்க்க வாழ்வு கிடைக்காது. அந்த ஆன்மா அமைதியின்றிக் காலாகாலத்துக்கும் பேரீச்சை மரங்களில் குடியேறிப் பேயாய் அலைய வேண்டியதுதான். சில நேரங்களில் அம்மிட் மாசுபட்ட இதயத்தை நெருப்பு ஏரியில் தூக்கி எறிந்துவிடுமாம். மாறாக, இதயமும் இறகைப்போல் எடையற்று இருந்தால் உடனடியாக அந்த ஆன்மாவின் தூய்மை அங்கீகரிக்கப்படும். அது நல்ல ஆன்மாவாக வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். 

இந்த இடத்தில் மம்மியாக்கம் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். உடலை விட்டு உயிர் நீங்கினாலும் அதன் ஆன்மிக அங்கங்களான Ka, Ba இரண்டும் நீடிக்க அந்த உடலைப் பாதுகாக்க வேண்டும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. பா என்பது உடலை விட்டு நீங்கிப் பல இடங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவிடும். ஆனால் கா என்பது கல்லறையை விட்டுப் பெரும்பாலும் நீங்குவதில்லை. சரி, இந்த மம்மியாக்கம் என்ற நடைமுறை எப்படி எகிப்தியர்களின் மனத்தில் தோன்றியிருக்கும்? உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை. 

ஈரப்பதமில்லாத வறண்ட பாலைவனத்தில் புதைக்கப்படும் சடலங்கள் இயல்பாகவே நீர் வற்றி உலர்ந்து கெட்டுப்போவதில்லை என்பதை எகிப்தியர்கள் கவனித்திருந்தனர். எனவே உடலைத் துணியில் சுற்றி ஒரு பெட்டியில் வைத்துப் புதைக்கும் எளிமையான அடக்கமுறை பேரரசுகள் உருவாகும் காலத்துக்கு முன்பிருந்தே நடப்பில் இருந்தது. உடலை விட்டு நீங்கிய ஆன்மா என்றாவது ஒருநாள் தன்னுடைய உடலைத் தேடிவரும் என்பதால் அதைப் பாதுகாத்து வைக்கவேண்டும் என்ற நம்பிக்கை பின்னர் வந்தது. அதன் ஒரு பகுதிதான் மாண்டவரின் முகத்தைச் சவப் பெட்டி மீது வரைவதும் மம்மிக்கு முகமூடி மாட்டுவதும்... ஆன்மாவுக்குத் தன்னுடைய உடலை அடையாளம் காண்பதில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடு. முகமூடி தங்கமா, மரமா என்பது அவரவர் சமூகப் படிநிலை, பொருளியல் வசதியைப் பொறுத்தது. 

மம்மி என்னும் வார்த்தை மம்மியா என்னும் பெர்ஷிய வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அதற்குத் தார் என்று பொருள். பண்டைக் காலத்தில் மம்மியாக்கம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பிசின் தார் போலக் கறுப்பாகத் தோற்றமளித்ததால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். மம்மிகளை உருவாக்கிய எகிப்தியர்கள் அதற்கு மம்மி என்று பெயரிடவில்லை. அது நாம் இட்ட நவீனப் பெயர். 

மம்மியாக்கத்துக்குச் சராசரியாக 70 நாள்கள் பிடிக்கும் என்று கிரேக்க வரலாற்றாய்வாளர் ஹெரோடோட்டஸ் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் தொல்காப்பியமும் திருக்குறளும் எழுதப்படும் முன்னரே உலகப் பயணிகளை ஈர்த்த நாடு எகிப்து. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின்பால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்றிப் பார்க்கப் போனவர்தான் ஹெரோடோட்டஸ். உலகின் முதலாவது வரலாற்றுத் தந்தை என்ற பெருமைக்குரியவர் அவர். 

மம்மியாக்கம்பற்றி அவர் தெளிவாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். மம்மியாக்கத்துக்கெனத் தனிப்பட்ட நிபுணர் குழு இருந்திருக்கிறது. அவர்கள்தான் அதில் ஈடுபடுவர். முதலில் மூக்கு வழியாக ஒரு கூர்மையான கம்பியை நுழைத்து, மூளையைக் குத்திக் குத்திச் சிதைத்துக் கூழாக்கி, அதைச் சுரண்டிச் சுரண்டி வழித்து வெளியே வடித்து எடுத்துவிடுவர். பண்டைக்கால எகிப்தியர்களைப் பொறுத்தவரை மூளை என்பது உடலில் இருக்கும் அநாவசியமான அங்கம் (எகிப்தியர்களின் சாதனைக்கு இந்த நம்பிக்கை பொருந்தவில்லைதானே?). சிற்றுளியால் மூக்கின் மேல்புறத்திலுள்ள சிறிய எலும்புகள் உடைக்கப்பட்டு அதன் வழியாகத்தான் கம்பி நுழைக்கப்படும். ஹெரோடோட்டஸ் எழுதி வைத்தது சரிதான் என்பது நவீன ஊடுகதிர்ச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பார்த்தால் மூக்கை உடைத்ததே தெரியாமல் மிகவும் நறுவிசாகச் செய்யப்படும் நிபுணத்துவப் பணி இது. 

இப்படி மாமன்னர்களின் மூளையைச் சுரண்டி எடுக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 140 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டெடுக்கப்பட்ட முதலாம் அமன்ஹோட்டெப்பின் மம்மி 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதப் பிற்பாதியில் கணினி வருடலுக்கு (CT Scan) உட்படுத்தப்பட்டபோது, அதில் மூளை முழுதாக இருந்தது தெரியவந்தது. சுமார் 35 வயதில் மாண்டு போயிருக்கக்கூடிய மன்னரின் உடலில் பெரிய காயங்கள் ஏதும் இல்லாததால் இவர் ஏதோ கடுமையான தொற்று அல்லது கிருமித்தாக்குதலில் மாண்டு போயிருக்கவேண்டுமென ஊகிக்கப்படுகிறது. 

மாமன்னரது மம்மியின் கைகள் நெஞ்சில் குறுக்காக வைத்துப் பாடம் செய்யப்படுவது இவரது காலத்தில் இருந்தே தொடங்கியதாகச் சிலர் நம்புகின்றனர். பதினெட்டாவது அரசகுலத்தைச் சேர்ந்த இவரது ஆட்சிக் காலம் கி.மு 1525-1504. டுடன்காமுன் இவருக்கு ஏழெட்டுத் தலைமுறை பின்னால் வருகிறார். இடைப்பட்ட காலத்தில் மூளையைச் சுரண்டி எடுக்கும் பழக்கம் தொடங்கியிருக்கலாம். 

மாமன்னரின் பிரேதத்திலுள்ள மூளையைச் சுரண்டி எடுத்த பிறகு, சடலத்தின் வயிற்றுப் பகுதியில் இடப் பக்கம் ஒரு கீறல் போடப்பட்டு, அதன் வழியாக உள்ளுறுப்புகள் எல்லாமே அகற்றப்படும். அவை தனித்தனியாகப் பதப்படுத்தப்பட்டு ஜாடிகளுக்குள் பாதுகாக்கப்படும். கீறல் போடப்பட்ட இடத்தில் வெட்ஜெட் அதாவது ஹோரஸ் கண் எனப்படும் புனித மந்திரத் தாயத்து வைக்கப்படும். கீறல் போடப்பட்ட இடத்தை அது குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. பின்னர் இயற்கையாக ஏரிகளில் படியும் நேட்ரான் என்னும் ஒருவகை உப்பு கட்டப்பட்ட சிறு சிறு பொதிகள் உடலுக்குள் திணிக்கப்படும். கிருமிநீக்கத் தன்மையும் உலர்த்தும் தன்மையும் கொண்ட நேட்ரான் உப்புக்குள் உடல் பொதிந்து மூடிவைக்கப்படும். சுமார் 40 நாள்கள் உப்புக்குள் வைக்கப்படும் உடலில் ஈரப்பதம் முற்றாக உறிஞ்சப்பட்டுவிடும். இதனால் உடலைச் சிதைத்து அழுகச் செய்யும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் உருவாகவோ உயிர்வாழவோ வழியே இல்லாமற்போகிறது. 

ஈரல், நுரையீரல், வயிற்று பாகங்கள், குடல் ஆகிய உள்ளுறுப்புகளைத் தனித் தனியே நான்கு ஜாடிகளில் பதப்படுத்தும் பழக்கம் கிட்டத்தட்ட கி.மு 1100ஆம் ஆண்டு வரை இருந்ததாக நம்பப்படுகிறது. அதன்பிறகு அந்த ஜாடிகளைப் பிரதிபலிக்கும் வகையில் நான்கு பிரதிமைகள் மட்டும் செய்து வைக்கப்பட்டன. நான்கு ஜாடிகளுக்கும் டுடன்காமுனைப் பொறுத்தவரை அவரது தலைப் பகுதியைப் போன்றே வடிக்கப்பட்ட மூடிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் மற்ற பலருக்கும் ஹோரஸ் கடவுளின் மகன்கள் (Sons of Horus) என்று அழைக்கப்படும் நான்கு விதமான உருவங்களின் தலைப்பகுதிகள் மூடியாகப் பொருத்தப்பட்டன. 

Falcon எனப்படும் இராஜாளிப் பறவை அல்லது வல்லூறு, சிங்கம்போல் அடர்த்தியான பிடரியுள்ள பபூன் வகைக் குரங்கு, அனுபிஸ் நரி, மனிதத் தலை ஆகியவை அந்த நான்கு வகையான உருவங்கள். இவற்றுள் வல்லூறுத் தலையுள்ள ஜாடியில் குடல் பாதுகாத்து வைக்கப்படும். பபூன் வகைக் குரங்கின் தலையுள்ள ஜாடியில் நுரையீரலும், நரித் தலை ஜாடிக்குள் வயிற்றுப் பகுதிகளும், மனிதத் தலை மூடி வைத்த ஜாடிக்குள் ஈரலும் வைக்கப்படும். இதற்கிடையே சுக்காக வற்றி உலர்ந்த உடல் பனை மதுச்சாரத்தால் கழுவப்படும். எகிப்தில் ஈச்சை மரங்களையே பனை மரம் என்றும் கூறுகிறார்கள். பனங்காய்கள் காய்க்கும் தமிழ்நாட்டின் மாநில மரமான கறுத்த பனை மரங்களை நாங்கள் எகிப்தில் எங்கும் காணவில்லை. ஆனால் சில ஆலயங்களுக்கு அருகே நமது பனை மட்டைகளை ஒத்த மட்டைகளைக் கொண்ட குட்டையான பனை மரங்களைப் பார்த்தோம். ஈச்சை மரங்கள்கூட உயரமாக வளர்ந்ததும் விசிறி-வாழை போல் தோற்றமளிக்கின்றன. 

ஆக, அங்குள்ள பனங்கள்ளால் மம்மிகள் குளிப்பாட்டப்பட்டிருக்கும் என்று ஊகிக்கலாம். பின்னர் நறுமணப் பொருள்கள், பதப்படுத்தும் எண்ணெய், பிசின் போன்றவை, மம்மி மீது தடவப்படும். வயிற்றிலிருந்து உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டதால் உருவான உட்குழிவை நிரப்ப, சில விதமான பொருள்கள் பயன்படுத்தப்படும். வைக்கோல், மரத்தூள், லினன் துணிச் சுருள்-போன்றவை அவை. இது கண்கள், மூக்குத் துவாரங்கள், கன்னம், வாய் ஆகியவற்றுக்கும் பொருந்தும். 

பின்னர் எலும்பு முறிவுக்குப் போடப்படும் மாவுக் கட்டுபோல மம்மி ஒன்றுக்கு மேல் ஒன்று எனத் துணி நாடாக்களால் சுற்றிச் சுற்றிக் கட்டப்படும். ஆங்காங்கே அமுலெட்டுகள் எனப்படும் மந்திரத் தாயத்துகளும் நகைகளும் வைக்கப்படும். இதயம் மட்டும் விட்டுவைக்கப்படும் என்று பார்த்தோம் அல்லவா? ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால் இதயம் பழுதுபட்டிருந்தால் அதன் இடத்தில் புனித வண்டின் சிறு உருவச் சிலை வைக்கப்படும். மம்மியாக்கம் செய்யப்படும் நபரின் பொருளியல் நிலையைப் பொறுத்து துணிப் பட்டைகளுக்கு இடையே ஆபரணங்கள் பொதிந்து வைக்கப்படும். 

முகமோ தலை முழுவதுமோ மூடிபோட்டு மூடப்படும். மாண்டவரின் முகம் தனது பழைய பொலிவை இழந்துவிட்டபடியால் அதற்கு அழகூட்டுவதற்காகவும் இந்த முகமூடி பொருத்தப்படுகிறது. மம்மியாக்கம் குறித்து விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோர் எகிப்து செல்லும்போது லக்ஸோர் நகரிலுள்ள மம்மியாக்க அரும்பொருளகம் (Mummification Museum) செல்லலாம். உண்மையான மனித மம்மிகள், முதலை, மீன், பூனை, ஆடு, வாத்து, ஐபிஸ் பறவை, பபூன் வகைக் குரங்கு போன்றவற்றின் மம்மிகளோடு, மம்மியாக்க நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிசினும் லினன் துணியும் அடைக்கப்பட்ட மனிதக் கபாலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் இங்கே நேரில் காணலாம். கேட்டலின் படித்தலின் பார்த்தலே நன்று அல்லவா? 

பிசினும் லினன் துணியும் அடைக்கப்பட்ட கபாலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

மம்மியாக்கம் செய்யப்பட்ட முதலை

மம்மியாக்க முறை காலந்தோறும் மாறுபட்டு வந்துள்ளது. பதப்படுத்தும் பணியில் ஈடுபடுவோரின் நிபுணத்துவத்தைப் பொறுத்து அது வேறுபடும். மம்மி வைக்கப்படும் சவப் பெட்டிகளும் அப்படியே. சாதாரணமான பெட்டிகளும் உண்டு. டுடன்காமுனுக்கு வைக்கப்பட்டதுபோன்ற தங்கப் பெட்டியும் உண்டு. மரத்திலேயே அற்புதமான வேலைப்பாடமைந்த பெட்டிகளும் உண்டு. அன்றும் இன்றும் பாலைவன தேசமான எகிப்தில் தேக்கு, கருங்காலி போன்ற வைரம் பாய்ந்த உறுதியான மர வகைகள் சற்று அபூர்வம் என்பதை மறக்கவேண்டாம். இப்போதும் ஈச்சை மரங்களே எகிப்தில் அதிகம். 

சமூக மதிப்பில் உயர்நிலையில் உள்ள சிலருக்கு டுடன்காமுனைப் போல் ஒன்றுக்கு மேற்பட்ட சவப் பெட்டிகள் இருப்பதுண்டு. இந்தச் சவப் பெட்டிகள் பெரிய கல்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு கனமான கல்மூடியால் மூடப்படும். மாமன்னர்களுக்கும் மந்திரிப் பிரதானிகளுக்கும் இப்படியான இறுதிச் சடங்கு நடக்க, பரம தரித்திரனின் நல்லுடல் அவன் பயன்படுத்திய சட்டி, பானை, கத்தி கபடாக்களோடு ஒரு பொந்தில் வைக்கப்படும். கூஃபு, ஜோசர் போன்ற பண்டைக்கால மாமன்னர்களுக்குக் கட்டப்பட்ட மாபெரும் பிரமிடுகள் வேறுவகை. அவை மறு துருவம். இரண்டுக்கும் நடுவே எளிமையான ஒற்றை அறைக் கல்லறைகள் பாறைகளில் குடையப்பட்டு, அங்கேயும் சவப் பெட்டிகள் வைக்கப்படுவதுண்டு. 

டுடன்காமுனின் கல்லறை அவரது அந்தஸ்துக்கு ஏற்ற கல்லறை அல்ல. மிக இளம் வயதில் மாண்டுபோனதால் அதிகாரத்துவக் கல்லறையில் அவரை அடக்கம் செய்ய முடியாமற்போனது. அந்தப் பெரிய கல்லறைக்கான பணி எங்கோ தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருந்திருக்கும். இது அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவருக்காகவோ உருவாக்கப்பட்ட சிறிய கல்லறை. வேறு வழியில்லாமல் சுமார் 1,200 சதுர அடி (அரை கிரவுண்ட்) பரப்பளவுமட்டுமே கொண்ட இந்தக் கல்லறையில் அவரை அடக்கம் செய்ய நேர்ந்தது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இடையே சர்ச்சையில்லை. ஒப்புநோக்க அருகிலுள்ள மற்ற எல்லா மாமன்னர்களின் கல்லறையும் மிகப் பெரியவை. மிக விரிவான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன அங்கெல்லாம். 

குறிப்பாக, முதலாம் செட்டியின் கல்லறை மிகப் பெரியது. இரண்டாம் ராம்சிஸின் தந்தையான அவருடைய கல்லறையில் அபாரமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் டுடன்காமுனின் கல்லறை அப்படியில்லை. மம்மி அறையில் மட்டும்தான் ஓவியம் வரையப்பட்டுள்ளது. டுட்டின் காலத்தில் இவ்வளவு விஸ்தாரமாக ஓவியம் வரையும் பழக்கம் நடைமுறைக்கு வரவில்லை என்கிறார் கார்ட்டர். மம்மி அறையில் மட்டும் ஓவியம் வரையும் பழக்கமே அப்போது இருந்தது. அதனால்தான் டுட் கல்லறையில் வேறெங்கும் ஓவியங்கள் இல்லை என்கிறார் அவர். பின்னர் 19, 20-ஆவது அரசகுலங்களின் காலத்தில் கல்லறையின் நுழைவாயிலில் தொடங்கிக் கடைசிக் கல்பெட்டி அறைவரை ஓவியம் வரையும் பழக்கம் தொடங்கியதாம். 

இரண்டாம் ராம்சிஸின் தந்தை முதலாம் செட்டியின் பிரமாண்டமான கல்லறை. ஓவியம் இல்லாத இடமே இங்கே இல்லை.

மேலும் டுட்டின் கல்லறை ஒரு பெண்ணுக்காக உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. பொதுவாக மன்னர்களின் கல்லறையில் நிலத்திலிருந்து இறங்கிச் செல்லும் படிக்கட்டு நேரே சென்று முட்டிக்கொள்ளும் இடத்தில்தான் அவர்களது மம்மியை உள்ளடக்கிய கல்பெட்டி வைக்கப்படும். அல்லது இறங்கிச் செல்லும் நீண்ட படிக்கட்டின் இடப் பக்கமாக ஓர் அறை குடையப்பட்டு அதனுள் கல்பெட்டி வைக்கப்படும். ஆனால் டுடன்காமுனைப் பொறுத்தவரை அவரது மம்மியைத் தாங்கிய கல்பெட்டி மகாராணிகளின் கல்லறையைப் போல் படிக்கட்டு இட்டுச் செல்லும் முன்னறைக்கு வலப் பக்கமாக வைக்கப்பட்டிருப்பதைச் சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். 

இந்த ஊகத்துக்கு வலு சேர்க்கிறது 2020இல் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை. அமர்னா அரச கல்லறைகள் (Amarna Royal Tombs) குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக, எகிப்தியவியலாளர்கள் நிக்கொலஸ் ரீவ்ஸ், பீட்டர் கிரெம்ஸ (Nicholas Reeves & Peter Gremse) ஆகிய இருவரும் வெளியிட்ட கட்டுரை அது. டுடன்காமுன் கல்லறை என்பது அவரது தந்தை அக்கினாட்டனின் மனைவியான மகாராணி நெஃபர்டிட்டி (அதாகப்பட்டது சித்தி) அடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கல்லறையின் முகப்புத் தாழ்வாரம் மட்டுமே என்கின்றனர் இருவரும். அதற்கு ஆதாரமாகச் சிலவற்றைச் சுட்டுகின்றனர் அவர்கள். 

மம்மி அறையின் வடபுறச் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் வலமிருந்து இடமாக மொத்தம் ஏழு பேரின் ஓவியங்கள் உள்ளன. அதில் சிறுத்தைத் தோல் போர்த்திய மகாமந்திரி ஆயியின் ஓவியம் முதலில் வரும். கருவூலச் சுவரோடு மடங்கிவரும் அந்த இயற்கையான பாறைச் சுவர்ப்பகுதி மூன்றாவதாகக் கம்போடு நிற்கும் டுட்டின் ஓவியம் வரை உடைக்கப்பட்டு, மீண்டும் பொய்ச் சுவர் கட்டி மூடப்பட்டது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 

ஆயியின் மகுடத்தின் மேல் ஒரு கிடைமட்டக் கோடு இழுத்து, ஒசைரிஸ் தெய்வத்தைக் கடந்து டுட்டின் தலையையும் தாண்டி கிட்டத்தட்ட அவர் ஊன்றியுள்ள கம்புக்குச் சற்று முன்னால்வரை அதை நீட்டினால் வரும் தொலைவுவரை பாறைச் சுவர் உடைக்கப்பட்டிருக்கவேண்டும். உண்மையான பாறைச் சுவரும், பின்னால் கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட பொய்த் தடுப்புச் சுவரும் சேரும் பகுதி, உற்றுப் பார்த்தால் கீழிருந்து ஒரு செங்குத்துக் கோடு போல் தெரிகிறது. கவிழ்த்துப் போடப்பட்ட ப வடிவிலான பெரிய வாசல் அது. அந்த வாசலுக்குப் பின்னால் நெஃபர்டிட்டியின் கல்லறை இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாம். அந்த வாசலைக் கடந்து மகாராணியின் மம்மி கிடத்தப்பட்டுள்ள மம்மி அறைக்கு, பெரிய கல்லறைக் கல்பெட்டியும் மற்ற மரப் பெட்டிச் சட்டங்களும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். 

அளவிற் பெரிய பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதும், பெரிய வாசலின் தரையைத் தவிர்த்த மற்ற மூன்று பக்கங்களையும் பொய்ச்சுவர் கொண்டு கட்டிச் சுருக்கி, நடுவில் ஒரு திட்டிவாசல் போன்ற பகுதியை விட்டுவைத்தனர். அதற்கு ஒரு மரக் கதவும் போட்டு வைத்தனர். அதன் வழியே கல்லறைக்குள் வைக்கவேண்டிய ஏனைய சடங்குப் பொருள்கள் அத்தனையையும் வைத்துவிட்டு, டுட் கல்லறைப் படிக்கட்டுகள் இருந்த தாழ்வாரத்தைக் கல்லும் மண்ணும் கொண்டு தரை முதல் கூரைவரை மூடியதைப்போல் மூடிவிட்டனர். பின்னர் மரக் கதவை அகற்றிவிட்டு, அங்கும் கற்களை அடுக்கி ஜிப்சம் கொண்டு பூசிவிட்டனர். உற்றுப்பார்த்தால் அந்தப் பகுதி மற்ற பகுதியைக் காட்டிலும் சொரசொரப்புத்தன்மை குறைந்து சற்றே மென்மையாகக் காணப்படுகிறது. 

டுட்டின் மம்மி அறை வடபுறச் சுவருக்குப் பின்னால் உள்ள பகுதி 2015இல் வெப்பச் சலனச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் பாறையின் அடர்த்தி அந்தப் பகுதியின் ஒரு பாதியில் மட்டும் வேறுபடுவது உறுதியானது. அங்கே பாறை குடையப்பட்டுக் கல்லும் மண்ணும் கொட்டப்பட்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதே ஆண்டில் ஜப்பானிய ரேடார் கருவியைக் கொண்டு நடத்திய சோதனையிலும் வடபுறச் சுவருக்குப் பின்னாலுள்ள பகுதியின் இடப்பக்கமும் வலப்பக்கமும் வெவ்வேறு அடர்த்தியைக் காட்டின. 

இடப்பக்கம் உள்ள உண்மையான பாறையின் அடர்த்தி ஒரே சீராக இருக்க, வலப்பக்கமுள்ள பொய்ச் சுவருக்குப் பின்னால் உள்ள கல்குப்பை காரணமாக, அடர்த்தி கூடியும் குறைந்தும் சமமற்று இருந்தது. நெஃபர்டிட்டி கல்லறையாக இருந்தவரை டுட்டின் மம்மி அறையில் உள்ள ஓவியங்களில் நெஃபர்டிட்டியின் ஓவியங்களே இருந்திருக்கின்றன. பின்னாளில் டுட் திடீரென மாண்டதும் டுட் மம்மி அறைப் பகுதி இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தப்பட்டது. அல்லது முதலில் இருந்தே கூட அதே அளவில் இருந்திருக்கலாம். 

சுண்ணாம்புக் கல்லில் வடிக்கப்பட்ட நெஃபர்டிட்டியின் சிற்பம். ஜெர்மானியத் தலைநகர் பெர்லின் நகரிலுள்ள அரும்பொருளகத்தில் காட்சிக்கு உள்ள இந்தப் பேரழகுச் சிலையைத் திருப்பித் தருமாறு எகிப்து வற்புறுத்தி வருகிறது. படம் நன்றி Wikimedia Commons

இப்போது நெஃபர்டிட்டிக்காக வரையப்பட்ட ஓவியங்களில் திருத்தம் செய்யப்பட்டு அவை டுட்டாக உருமாற்றம் பெறுகின்றன. டுட்டின் முகவாய் உருண்டையாகக் கீழிறங்கும் வடிவில் அமைந்தது. ஆனால் நெஃபர்டிட்டியின் பக்கவாட்டு முகவாய்த் தோற்றம் ஒரு நவீன அன்னநடை அழகியைப்போல் திருத்தமாக ட போல் கீழிறங்கும் வடிவிலானது. மேலும் முதற்கட்ட ஓவியங்களின் மூக்கு, தோள்கள் எல்லாம் ஒரே மட்டத்தில் இருக்க, இரண்டாம் கட்ட ஓவியங்கள் வேறு மட்டத்தில் உள்ளன. முதற்கட்டத்தில் ஆறு ஓவியங்கள் மட்டுமே இருந்தனவாம். இரண்டாம் கட்டத்தில் ஆறாவதாக உள்ள டுடன்காமுன் ஓவியம் மட்டும் கூடுதலாக வரைந்து செருகப்பட்டது. 

வலமிருந்து இடமாக வருகையில் முதலில் உள்ள மந்திரி ஆயியின் ஒவியம் உண்மையில் டுடன்காமுனுடையதாம். நெஃபர்டிட்டி கல்லறை கட்டப்பட்ட காலத்தில் ஏன் அங்கு டுடன்காமுன் ஓவியம் வரையப்பட்டது என்பதை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. டுட் அடக்கம் செய்யப்படும்போது ஏன் அது மந்திரி ஆயி-ஆக மாற்றப்பட வேண்டும்? இதற்கும் பதில் இல்லை. அதற்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது ஓவியம் வெண்மகுடம் சூடிய டுடன்காமுன். ஆனால் அது திருத்தப்பட்ட நெஃபர்டிட்டியின் ஓவியம். வடிவான நாடி அதை உறுதி செய்கிறது. மூன்றாவது ஓவியமான கையில் கம்பைப் பிடித்தவாறு பொய்முடி சூடி நிற்கும் டுடன்காமுன் ஓவியம் உண்மையில் நெஃபர்டிட்டி ஓவியம். மூக்குப் பகுதி அதை உறுதி செய்கிறது. நெஃபர்டிட்டிக்குக் கூர்மையான நாசி. நெற்றியில் இருந்து அது நேராக இறங்கும். நடுவில் பள்ளம் ஏதும் இருக்காது. ஆனால் டுட்டுக்கு அப்படியல்ல. நெற்றியில் இருந்து மூக்கு இறங்கி லேசாக வளைந்து ஏறிப் பின் இறங்கும். அந்த வித்தியாசமும் இங்கே ஒத்துப்போகிறது. 

பொய்முடி சூடிய மன்னர்

மேலும், நெஃபர்டிட்டியின் உதட்டு ஓரங்களில் அழகாக ஒரு குழி விழுந்து கீழ்நோக்கி மடியும். அவரது மார்பளவுச் சிலையில் அது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும். அது அவர் எப்போதும் மெலிதாகப் புன்னகை செய்யும் தோற்றத்தை உருவாக்கும். டுட்டுக்கு அது இருக்காது. உதட்டோரத்தில் லேசான ஒரு சுருக்கம் இருக்கும் அவ்வளவுதான். நான்காவதாகக் கைகளில் நெளிகோடுகளோடு காட்டப்பட்டிருக்கும் நட் தெய்வம், நெஃபர்டிட்டியின் ஆறு மகள்களில் ஒருவரும், டுட்டின் ஒன்றுவிட்ட சகோதரியுமான மெரிடாட்டன் (Meritaten). 

ஐந்தாவது, டுட்டின் கா-வாகக் காட்டப்பட்டிருப்பது நெஃபர்டிட்டிதான். நவீன காலத்தில் இது கொஞ்சம் சீரமைக்கப்பட்டது. இடுப்பிலுள்ள அரையாடையின் திருத்தமான கோடுகளைப் பார்த்தால் அதைப் புரிந்துகொள்ளமுடியும். பெண்ணுருவத்தை ஆணாக மாற்றிக்காட்ட இதில் தோள்கள் உயர்த்தப்பட்டது உற்றுப்பார்த்தால் தெரியும். மார்பிலுள்ள வலப்பக்க ஆரமும் இடப்பக்க ஆரமும் பொருந்தவில்லை. ஆறாவதாகத் தலையில் நெமிஸுடன் காட்டப்பட்டிருப்பது இரண்டாம் கட்டத்தில் புதிதாகப் புகுத்தப்பட்ட டுடன்காமுன் ஓவியம். ஐந்து, ஏழாவது ஓவியங்களுக்கு இடையே செருகப்பட்ட புதிய ஓவியம் இது. தொடக்கத்திலிருந்தே இது டுடன்காமுனின் ஓவியம்தான். முன்னங்கால் நெருக்கியடித்து முன்னாலுள்ள உருவத்துக்குள் செருகி இருக்கும் இதில். இடப்பாற்றாக்குறையே காரணம் இதற்கு. 

ஏழாவதாக, ஒசைரிஸ் தெய்வத்தின் வடிவில் காட்டப்படும் மன்னரின் ஓவியம். இதற்கு அருகே டுடன்காமுன் என்று எழுதப்பட்டிருந்தாலும் உண்மையில் இதுவும் நெஃபர்டிட்டிதான். முகவெட்டு தெளிவாக அவரை அடையாளப்படுத்துகிறது. இந்த ஓவியத்தில் டுடன்காமுன் என்று கார்ட்டூஷில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் ஒன்று மட்டும்தான் உண்மையாகவே வரையப்பட்ட டுடன்காமுன். அது இரண்டாம் கட்டத்தில் திணிக்கப்பட்ட ஆறாவது ஓவியம். மற்றதெல்லாம் நெஃபர்டிட்டிதான். முதற்கட்டத்தில் இளவயது டுடன்காமுன் ஓவியம் வரையப்பட்டுப் பின்னர் இரண்டாம் கட்டத்தில் அது மந்திரி ஆயியாக மாற்றப்பட்டுள்ளது. அது தவிர, நட் தெய்வமாகக் காட்டப்பட்ட மெரிடாட்டன். 

இவையெல்லாம் டுடன்காமுன், நெஃபர்டிட்டி உருவச் சிலைகள், ஓவியங்களை வைத்து எகிப்தியவியலாளர்கள் நிக்கொலஸும் பீட்டரும் ஊகிக்கும் தகவல்கள். உண்மையாக இருக்கச் சாத்தியம் அதிகம். இருவரும் தங்களது ஆய்வு முடிவை எகிப்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்திருக்கிறார்களாம். அரசாங்கம் முன்வந்து அடுத்தகட்ட ஆய்வை முன்னெடுத்தால் வருங்காலத்தில் சில புதிர்கள் அவிழலாம். இன்றுவரை நெஃபர்டிட்டியின் மம்மியோ கல்லறையோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பது இந்த ஊகத்துக்கு வலுசேர்க்கும் முக்கிய அம்சம். அப்படி ஒருவேளை வருங்காலத்தில் நெஃபர்டிட்டியின் கல்லறை களவுபோகாமல் முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அது டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்பைப் பல விதங்களில் மிஞ்சிவிடும் என்கின்றனர் எகிப்தியவியலாளர்கள். டுட் கல்லறைக்கு உள்ளேயே அது இருக்கும்பட்சத்தில் அதில் கல்லறைத் திருடர்கள் புகுந்திருக்கும் சாத்தியம் மிக மிகக் குறைவு. ஆகவே அங்கு வைக்கப்பட்ட அரும்பொருள்கள் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்தவராக மதிப்பிடப்படுகிறார் நெஃபர்டிட்டி. அது அக்காலத்தில் ஓரளவுக்கு நீண்ட ஆயுள். மகாராணியான அவர் கல்லறையில் ஏராளமான செல்வம் குவிக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு மிகுதி. 9 ஆண்டுகளே ஆட்சிபுரிந்த டுட்டின் கல்லறைக்குள் இரண்டுமுறை திருடர்கள் புகுந்த பின்னரும் இவ்வளவு செல்வம் மிச்சமிருந்தது என்றால், நெஃபர்டிட்டியில் கல்லறைக்குள் எவ்வளவு இருக்கும் என்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்காது. 

அடுத்தபடியாக, டுட்டின் மம்மி அறையில் மேலும் இரண்டு ரகசிய அறைகள் இருந்ததற்கான தடயங்களையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். மம்மி அறையில் நான்கு மாடக் குழிகள் இருப்பதை முன்னரே பார்த்தோம். அவற்றுள் கிழக்கில், கருவூல அறை வாயிலுக்கு வலப்பக்கம் தொடங்கி வடதிசை வழியாக மேற்குப்புறம் வரும் சுவரில் உள்ள மாடக்குழிகள் மூன்றும் ஒரே மட்டத்தில் உள்ளன. ஆனால் தென்புற மாடக்குழி மட்டும் சில அங்குல உயரத்தில் இருக்கிறது. மேற்குச் சுவரும் தெற்குச் சுவரும் இணையும் இடத்தில், திட்டிவாசல் போல ஒரு வாயில் இருந்திருக்கவேண்டும் என்பதே இந்த உயர மாறுபாட்டுக்குக் காரணம். அது துணை அறையைப்போல் மற்றொரு பொருள் சேகரிப்பு அறையாகப் பயன்பட்டிருக்கலாம். அதற்குள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத டுட்டின் அரும்பொருள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது இருவரின் ஊகம். அங்கு ஒரு திறப்பு இருந்து அடைக்கப்பட்டதற்கான செங்குத்துக் கோடுகளும் கிடைமட்ட நிலைக்கோடும் தெரிகின்றன. 

அதேபோல் மேற்குப்புறச் சுவரில் வடக்கிலிருந்து வரும்போது காணப்படும் முதல் குரங்கின் மூக்கில் தொடங்கி இரண்டாவது குரங்கின் மூக்குவரை உள்ள பகுதியும் ஒரு நுழைவாயிலாக உடைக்கப்பட்ட பகுதியாம். இந்த நுழைவாயிலின் அளவு, துணை அறை நுழைவாயிலின் அளவோடு சரியாகப் பொருந்திப் போகிறது. இங்கிருந்த பாறை குடையப்பட்டுப் பின்னால் ஓர் அறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் நிக்கொலஸும் பீட்டரும். பின்னர் அந்த அறைவாயில் வழக்கம்போல் கல்லும் மண்ணும் கொண்டு மூடிப் பூசப்பட்டிருக்கலாம். கணினியில் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் நுழைவாயிலின் விளிம்புக் கோடுகள் தெரிகின்றன. நேரில் நாங்கள் சென்றபோது இந்தத் தகவல் தெரியாது என்பதால் இந்தக் கோணத்தில் ஓவியப் பகுதிகளைப் பார்க்கவில்லை. 

மூவாயிரத்து முந்நூறு ஆண்டுகள் கடந்தபின்னும் தனது கல்லறை மர்மங்களைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்குச் சவால் விடுத்துக் கல்லறைக்கு உள்ளேயே உறைந்து கிடக்கிறான் பதின்மவயது டுடன்காமுன்!

பொன். மகாலிங்கம். லக்ஸோர் நகரிலுள்ள மம்மியாக்க அரும்பொருளகம் முன்

பொன். மகாலிங்கம்

இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்.