November 06, 2026

பரணேற்று- சஜு

Text:


சிறு வயதிலிருந்தே ‘களம் காவலிற்கு’ செண்டை மேளம் அடிப்பது எங்களுக்கு அலாதியான இன்பம். ஏனென்று தெரியாத ஓர் ஈர்ப்பும், உணர்ச்சிகரமான உத்வேகமும், பூர்வீக ஆசாரமும் ஒருங்கமைந்த நிகழ்வானதால் என்னவோ ஒவ்வொரு களம்காவலும் எங்களுக்கு அத்தனை முக்கியத்துவமாக அமையும். பொழியும் பூமழைக்குள் ஆனந்தமாகவும், ஆங்காரமாகவும் ஆடி வரும் மூதன்னையைக் காணக் களத்திற்கு வெளியே நிற்கும் காணிகள் ஏராளம். களம் முழுவதும் மூதன்னையே நிறைந்தொழுகுவாள். களத்தின் பாதை அவளிற்காகவே பூக்கள் நிறைத்துக் காத்திருக்கும். களம் முற்காலத்தில் கைவிடப்பட்ட நிலமாகவும் தற்காலத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட வெற்று நிலமாகவும் இருக்கும். அந்நிலத்தில் எழுந்தருளும் மூதன்னை கொற்றவையாகவே கருதப்படுவாள். தன்னை பயபக்தியோடு நோக்கும் மக்களைக் கண்டு அவள் ஆனந்தத்தில் மெய்மறப்பாள். தங்களை ஆனந்தக் கண்களோடு நோக்கும் அன்னையைக் கண்டு மக்களும் இன்புறுவர். களம் பரிபூரணமாக தன் காவலுக்குள் ஆட்கொண்டதை உணர்ந்ததும் மூதன்னை தாருகனை வதைக்கும் தருணம் எதிர்ப்பார்த்து களத்திற்குள் அமைந்துள்ள குடிலுக்குள் சென்று காத்திருப்பாள். அடுத்த களம்காவல் நிகழ்ச்சியை எதிர்நோக்கி நாங்களும், மக்களும் நாட்களை எண்ணி அன்னையின் முகம் பார்த்துக் காத்திருப்போம்.

 

கண்ணகி மதுரையை எரித்த மீனபரணி நாளில் குமரி மாவட்ட எல்லையோடும், திருவனந்தபுரத்திலும் அமைந்துள்ள அநேகக் கோவில்களில் தாருகவதத்தோடு அமைந்த காளியூட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். சங்க காலம் முதலே கொற்றவைக்கு காளியூட்டு திருவிழா நடைபெற்று வருவதைச் சங்க பாடல்கள் கூறுகின்றன.

 

“களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமற் கைதுடுப்பா

அளப்பரிய குளப்புக்கா லகப்பைகளாக் கொள்ளீரே”

 

என்ற கலிங்கத்துப்பரணியின் களம் பாடிய பகுதியில் உள்ள பாடல் பரணி நாளில் கொற்றவைக்கு கூழ் சமைத்துப் படைத்து உண்டு மகிழ்ந்ததைப் பற்றி கூறுகிறது.

 

இக்காளியூட்டு தென் மாவட்டங்களில் தொன்மையானப் பல காளி கோவில்களில் இன்றளவும் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இக்காளியூட்டு ஒடுக்குப்பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது. இதைபோல் குமரி மாவட்டத்தின் அழகியபாண்டியபுரத்தில் உள்ள வீரவநங்கை அம்மன் கோவிலில் நடைபெறும் காளியூட்டு தொன்று தொட்டே நடைபெறும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

இக்காளியூட்டோடு அமைந்த “தாருகவதம்” ஓராண்டு முதல் பன்னிரெண்டு ஆண்டு இடைவெளியில் குமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள “முடிப்புரை” கோவில்களில் நடைபெறுகிறது. சிலைகளற்ற வழிபாடு கொண்ட இக்கோவில்களைப் பொதுவாக முடிப்புரைகள் என்று அழைக்கின்றனர். புரை என்பது குடிலைக் குறிக்கும். முடி என்பது கூந்தலாகும். அதாவது முடி இருக்கும் குடிலே முடிப்புரை. அன்னையின் கூந்தலையே இங்கு சிலையாக வழிபடுகின்றனர். குமரி மாவட்டத்தில் திருவட்டாருக்கு அருகில் உள்ள இட்டகவேலி முடிப்புரை, கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கொல்லங்கோடு முடிப்புரை, முதலான முடிப்புரைகள் மிகவும் பிரசித்திப் பெற்றது. அதுபோல திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள வெள்ளையாணி முடிப்புரை, பாச்சல்லூர் முடிப்புரை ஆகியனவும் பிரசித்திப் பெற்ற முடிப்புரைகளாகும்.

 

திருமுடி மரத்தால் செய்யப்பட்டதானதால் அச்சிலைக்கு திருமஞ்சனம் நடைபெறுவதில்லை. மாறாக திருமஞ்சனத்திற்காகப் பிரத்யேக சிலை ஒவ்வொரு முடிப்புரையிலும் இருக்கும். சில கோவில்களில் கலைமான் கொம்பை திருமஞ்சனச் சிலையாக வழிபடுகின்றனர். சில கோவில்களில் கண்ணாடி பிம்பத்தை பறைசாற்றும் விதமாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலையை வழிபடுகின்றனர். ஆனால் அனைத்து முடிப்புரையிலும் திருமுடியே மூலச்சிலையாகும்.

 

பலா மரத்தில் செதுக்கப்பட்ட அரைவட்ட வடிவ மரச்சிற்பமே திருமுடி. இத்திருமுடி அன்னையின் விரிசடையை உருவகமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஓர் புடைப்புச் சிற்பமாகும். இது “சர்ப்பக்கட்டு” என்ற சிற்பச் சாஸ்திர முறைக்குட்பட்டது. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இரு நாகங்களையே இங்கு விரிசடையாகச் செதுக்கி வைத்திருப்பர். இதில் அநேகம் சிற்பங்கள் முக அமைப்போடும், பெரும்பாலான சிற்பங்கள் முக அமைப்பில்லாமலும் அமைந்திருக்கும். விரிசடையோடு பெரிய இரு காதணிகளும் திருமுடியில் இணைந்திருக்கும். இக்காதணியில் பிளிறும் யானைகளின் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கொல்லங்கோடு, பாச்சல்லூர் போன்ற பழைமை வாய்ந்த பல முடிப்புரைகளின் திருமுடிகள் ஐம்பொன்னால் வேயப்பட்டது. திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள வெள்ளையாணி முடிப்புரையின் திருமுடி மட்டும் பொன்னால் வேயப்பட்டது. நான்கரை அடி உயரமும், அகலமும் உள்ள இத்திருமுடி திருவிதாங்கூரின் ராணியாக இருந்த ஆயில்யம் திருநாள் கௌரி லட்சுமிபாயால் வழங்கப்பட்டதாகும். அனைத்து திருமுடியும் தலையில் வைத்து ஆடும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். இம்முடியை தலையில் ஏந்தும் நபரை "வாத்தி" என்று அழைப்பர். வாழ்த்தி என்ற சொல்லே வட்டார வழக்கில் மருவி வாத்தி என்றானது. இவரே அன்னைக்கு பிரதான பூசகரராகவும் இருப்பர். இவ்வாத்தி அநேகம் முடிப்புரைகளில் கொல்லர் சமுகத்தினராகவும், அநேகம் முடிப்புரைகளில் கணியர், தண்டான் போன்ற ஒடுக்கப்பட்ட சமுகத்தினராகவும் உள்ளனர்.

 

வெள்ளையாணி முடிப்புரையில் நடைபெறும் காளியூட்டு திருவிழா தான் இந்தியாவிலே அதிக நாட்கள் நடைபெறும் திருவிழாவாகக் கருதப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் காளியூட்டோடு அமைந்த பரண்யேற்று நிகழ்வும் நடைபெறுவதால் இது கிட்டத்தட்ட 65 நாட்கள் வரை நீளும் பெரும் திருவிழாவாக காணப்படுகிறது. தாருகனோடு நடைபெறும் போரே பரண்யேற்று எனும் உற்சவ வடிவில் இங்கு நிகழ்த்தப்படுகிறது. “பரண்யேற்று” எனும் புராதான நிகழ்வு போர் தெய்வமானக் கொற்றவையோடு தொடர்புடைய ஒன்றாக பிரதிபலிக்கிறது. போர் தெய்வமான கொற்றவைக்கு வெற்றி கொண்ட நாட்டின் வீரர்களின் தலைகளை வெட்டி பலியிடும் வழக்கத்தைப் பற்றி சங்க பாடல்கள் கூறுகின்றன. போரில் வெற்றிக் கொள்வதற்காக அரிகண்டம், நவகண்டம் முதலான பலிகள் நடைப்பெற்றன பற்றியும் சங்க பாடல்கள் கூறுகின்றன. அம்மரபின் பரிணாமச் தொடர்ச்சியாக தாருகவதம் என்ற போர் நடத்தப்பட்டு அதில் தாருகனின் தலையை கொய்து அவன் குருதியை அன்னைக்கு படைக்கும் சடங்கே பரண்யேற்று எனும் நிகழ்வாக நடத்தப்படுகிறது.

திருமுடியை தலையில் ஏந்திய வாழ்த்தி
களம்

நாட்டார் தெய்வங்கள் பெருநெறி தெய்வத்திற்குண்டான ஆகமங்களுக்குள் பரிணாமம் கொண்டதும் புராணமயமாக்கல் தாருகனை பொதுவாக முன்னிருத்திக் கொண்டது. எதிரிகள் அனைவரும் இங்கு தாருகனாக மாற்றப்பட்டதும். அணங்குகள் பலதும் காளியாகவும் நிறுவப்பட்டது. இதற்கு தாந்திரீகம் தகவமைத்துக் கொண்டதும் காரணமானது. தாருகனை வதம் செய்வதற்காக தன்னுடைய கர்ப்பக் கிரகத்தை விட்டு வெளியிறங்கும் அன்னை 65 நாட்கள் தென்னோலையால் வேயப்பட்ட கூரைக்குள் களம் அமைத்துக் காத்திருப்பாள். தன்னுடைய களத்திற்குள் தாருகன் வந்து விட்டான என்று பார்ப்பதற்கு நடத்தப்படும் சடங்கே இங்கு களம்காவலாக நிகழ்த்தப்படுகிறது.

 

வாவிக்கு காவல் காக்கும் நலமருள் நங்கை எனும் அணங்கை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய கொற்றவை நாவலில் எழுதியிருப்பார். காவல் நின்ற அணங்கு தான் கொண்ட களத்தில் தெய்வமாக்கப்படும் போது சடங்கெனும் வடிவில் அவள் களமெழும் நிகழ்வே களம் காவல் வடிவில் இப்போதும் நிகழ்த்தப்படுகிறது. அன்னையின் திருமுடியை தன் தலையில் ஏந்தும் வாத்தி சன்னதம் பூண்ட அணங்காக அத்தருணத்தில் உருமாறிக் கொள்கிறார். களத்தின் அத்தனைத் திக்குகளுக்கும் ஓடிச்சென்று பரவசம் கொள்கிறார். 

 

ஓர் காளியூட்டு திருவிழாவிற்கு கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட களம்காவல்கள் நடத்தப்படுகிறது. அதனோடு மூதன்னை தாருகனைத் தேடி நான்கு திசைகளுக்கும் செல்லும் “திக்குபலி” நிகழ்வும் நடைபெறுகிறது. திசை என்பதே இங்கு திக்காகப் பொருள் கொள்ளும். நான்கு திசையிலும் தாருகனை அன்னை தேடிச் செல்வதும் அங்கு தாருகனைக் காணாமல் போகையில் பிற அணங்கினங்களுக்கு பலியூட்டுவதும் என இந்நிகழ்வு நீண்ட சடங்கிற்கு உட்பட்டதாக இருக்கும். கோவிலைச் சுற்றிய நான்கு எல்லைகளிலும் நடைபெறும் இச்சடங்கு பெரும் களம்காவல் நிகழ்வாக நடத்தப்படுவதுடன் அவ்வெல்லையின் காவல் அணங்குகளை திருப்திப்படுத்தும் பலிச் சடங்காகவும் உருவம் கொள்ளும். இச்சடங்கனைத்தும் பிரதான வாத்தியாலே செய்யப்படும். பூக்களால் நிறைக்கப்பட்ட களம்காவல் பாதை மேல் அன்னை வந்து அமர்ந்ததும் திக்குபலி சடங்கினை வாத்தி மேற்கொள்வார். அதனோடு களம்காவலிற்கான நேரம் வாய்த்ததும் கரளிக் கொட்டு என்ற வாத்திய தாளம் முதலில் முழங்க அன்னையின் திருமுடியை மூத்த வாத்தி தன் தலையில் ஏந்துவார். வெள்ளையாணி முடிப்புரையில் வாத்தி அன்னையின் திருமுடியைத் தன் தலையில் ஏந்தியதும் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள காவல் துறையினர் சல்யூட் அடிப்பார்கள். 

 

கிட்டத்தட்ட அறுபது நாட்கள் நான்கு திசைகளிலும் நடைபெறும் திக்குபலிச் சடங்கு முடிவடைந்ததும் தாருகவதத்திற்காக பத்து நாட்கள் அன்னை தன் குடிலிற்குள் நல்லிருப்பிற்கு செல்வாள். இது போருக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒருவித தவநிலையாகும்.

 

திக்குபலிகள் ஓர் முடிப்புரை அமைந்துள்ள நான்கு எல்லைகளிலும் நடைபெறுவதால் அத்தொலைவுகளில் அமைந்துள்ள வீடுகளில் நிறை நாழி என்று அழைக்கப்படும் நேர்ச்சை மிகவும் பிரசித்திப் பெற்றது. ஓர் பெரிய நாழி முழுவதும் நெல்லை அளித்து நடைபெறும் இந்நேர்ச்சை ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் வந்தமரும் அன்னைக்கு அர்பணிக்கப்படுவதாகும். பண்டைய காலத்தில் வேளாண் அபிவிருத்திக்கு வேண்டி ஆரம்பமான இச்சடங்கு இன்று பரிணாமம் அடைந்து வீடுகளில் நடைபெறும் ஒன்றாக உருமாறி கொண்டது. இச்சடங்கினை மலையாளத்தில் “நிறபற” என்று அழைப்பர்.

 

தவநிலை முடிவடையும் பத்தாம் நாள் இரவு அன்னை போருக்கு ஆயத்தமாவாள். இதற்காக இளைய வாத்தியில் ஒருவர் தாருக வேடம் பூண்டுக் கொள்வர். மூத்த வாத்திக்கு பிறகு அவ்விடத்திற்கு வரும் இளைய வாத்தியின் மனதில் இருக்கும் குரோதம், காமம், லோபம் முதலான அறுகுணங்களை அழிப்பதற்காகவே அவரை தாருக வேடமணிய செய்கின்றனர். கீரிடம், நீண்ட முடி, முறுக்கு மீசை, பளபளக்கும் வாள், ராஜ வேடமென அலங்கரித்து வரும் இளைய வாத்தி அத்தருணம் தாருகனாகவே மாறிபோவார்.

 

விண்ணில் போர், நிலத்தில் போர் என்று இரு வடிவில் போர் நிகழ்த்தப்படும். தாருகனைத் தேடிக் கண்டறிய முடியாத அன்னை அவனைக் கண்டறிய வேண்டி தவநிலைக்குச் செல்வாள். அத்தவ வலிமையில் தாருகன் விண்ணில் இருப்பதாக அறிந்ததும் அவனைத் தேடி வானில் செல்வதும் அங்கு வைத்து முதல் போர் நடைபெறுவதுமானப் புராணக்கதைக்கு ஏற்றவாறு திருவிழாவின் போர்களமும் மாற்றப்படும். இங்கு விண்ணாகத் தென்னை மரங்கள் கொண்டு செய்யப்பட்ட பரண் உருவகம் கொள்ளும். இப்பரண் மேல் நிகழும் முதல் போர் விண்ணில் போர் என்று அழைக்கப்படும்.

 

இப்பரண் முற்றிலும் பாரம்பரிய முறைப்படியே கட்டப்படும். இதற்காக நெடு நீண்ட நான்கு தென்னை மரங்களை கம்பீர தந்தமுடைய யானையை வைத்து களத்திற்கு அருகே மண்ணிற்குள் இறுக ஊன்றிக் கொள்வர். சதுர வடிவில் ஊன்றப்பட்ட அம்மரங்களை ஒன்றோடொன்று இணைத்து அதன் மேல் மரப்பலகைகளால் பரண் அமைக்கப்படும். இப்பரண் மேல் ஏறுவதற்காக நீண்ட மரப்படிகளும் தனியாக கட்டப்படும். இந்நீண்ட பரணிற்கு எதிர்புறம் சிறிய வடிவிலான மற்றுமொரு பரணும் அமைக்கப்படும். இப்பரண் தாருகனிற்காக அமைக்கப்படுவதாகும்.


பரண்

போர் துவங்கும் நள்ளிரவில் பரணிற்கு கீழ் அமைத்த பச்சை ஓலை பந்தலுக்குள் வீற்றிருக்கும் அன்னையை சடங்கு சம்பிரதாயங்களுக்கு பிறகு நான்கு வாத்திகள் சூழ பரண் மேலே ஏற்றுவர். ஒவ்வொரு படியாக மேல் ஏறி பரணை அடையும் போது அன்னை தன் தவநிலையைக் கலைத்து முற்றிலும் போருக்குத் தயாராகிடுவாள். மறுபுறம் அன்னையைத் தேடிக் களத்திற்கு வரும் தாருகன் அங்கு அன்னை இல்லையென்று அறிந்ததும் களத்தின் ஓலைக் கீற்றுகளை தன் வாளினால் வெட்டி எறிவான். அக்கணம் பரண் மேல் நிற்கும் அன்னையைக் கண்டதும் ஆவேசம் கொண்டு வேகமாக தன்னுடைய பரணிற்கு மேல் ஏறிக் கொள்வான். அடுத்த நிமிடம் சங்கொலி முழங்க அங்கு போர் துவங்கும். 


தாருகன்

ஏழு கட்டங்களாக இப்போர் நிகழும். இது வாள் போராக அன்றி வார்த்தை போராகவே இருக்கும். தாருகனைக் கொண்டு கோபம் கொள்ளும் அன்னை அக்கோபத்தை வார்த்தைகளால் பொழிவதும் பதிலிற்கு தாருகனும் வசைச் சொற்களை பொழிவதுமென போர் முழுக்க முழுக்க வார்த்தை யுத்தம் கொண்டே நிகழும். ஒவ்வொரு முறையும் போர் தொடங்கும் முன் பழம்பாடல் ஒன்று பாடப்படும். அப்பாடல் முடியும் தருவாயில் சங்கொலி முழங்க போர் தொடங்கும். அவ்வாறு ஏழு கட்டங்களாக நடைபெறும் இப்போர் போர் நள்ளிரவைத் தாண்டி புலர்காலையில் நிறைவுறும். ஆரம்பக் கட்டத்தில் வார்த்தைப் போரில் ஆதிக்கம் செலுத்தும் தாருகன் இறுதி கட்டங்களில் பலவீனமடைவான். தோல்வி அடையும் தருவாயில் பரணிலிருந்து கீழிறங்கி ஓடி தன்னுடைய கொட்டகைக்குள் ஒளிந்து கொள்வான். மீண்டும் மறுநாள் காலையில் பெரும் வீரத்துடன் அன்னையை எதிர்த்து போரிட ஆயத்தமாவான். இம்முறை போர் நிலத்தில் நடைபெறும்.

 

விண்ணில் போரைப் போலவே நிலத்தில் போரும் ஏழு கட்டங்களாக நடைபெறும். இது பெரும் ஆரவாரத்துடனும், ஆதாளிப்புடனும் நடைபெறும். இப்போர் முழுக்க அன்னை ஆவேசம் கொண்டவளாகவே காணப்படுவாள். சங்கொலியுடன் தொடங்கும் முதல் கட்டத்திலிருந்தே தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்குவாள். அடுத்தடுத்தக் கட்டங்களின் அன்னையின் வெற்றி எளிதாகமல் போனாலும் இறுதிக்கட்ட போரில் கடும் ஆதிக்கத்தை நிலைநாட்டுவாள். இச்சமயம் தன்னை அன்னை எப்படியும் கொன்று தன் இரத்தத்தைக் குடிப்பாள் என்று உணரும் தாருகன் பயம் கொண்டு களம் முழுக்க ஓடி ஒளிவான். தன் செருக்கால் தன் உயிர் நின்று விட போகிறதென்ற உண்மை நிலையை அவன் உணர்ந்ததும் அன்னையின் குடில் முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கோரி அழத்தொடங்குவான். கோபக்கனல் கண் முன்னே எரிய உக்கிர பாவத்தில் தன் நிலை இழந்த அன்னை தன் முன் மண்டியிடும் தாருகனிற்கு எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டாமல் அவனை அழித்து தன் சபதத்தை நிறைவு செய்வாள். தாருகனை வெற்றிக் கொண்டதன் அடையாளமாக அவனின் கீரிடத்தை தன் வாளால் தட்டித் தூக்குவாள். வெற்றி மகிழ்ச்சியில் களத்திற்குள் அங்குமிங்கும் ஓடி தன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டே குடில் புகுந்து ஆவேசம் தணிவாள். அத்துடன் பெரும் சங்கொலியோடு போரும் நிறைவுக் கொள்ளும். அத்துடன் நடைபெறும் ஆறாட்டுடன் (அன்னைக்கான நீராட்டு) அன்னை தன் கருவறைக்குள் உட்புகுவதோடு அன்றைய வருடத்திற்கான காளியூட்டு திருவிழாவும் நிறைவுக் கொள்ளும்.

 

போர் தெய்வமானக் கொற்றவையின் நாட்டார் வடிவிலான இத்தகைய மூதன்னைக்கு இன்றளவும் நிகழும் இப்போர் திருவிழா ஆதிக்காலப் போர் பலியீடுகளின் எச்சங்களாகவே அடையாளப்படுகின்றன. இப்பிரதிபலிப்பு நாட்டார் பண்பாடுகளோடு கலப்பினம் கொண்டும் தாந்திரீக மாற்றங்களோடு உட்கொண்டும் புராணக் கதைகளின் கட்டமைப்பில் தாருகவதமாக நிகழ்த்தப்படுவது காலம் கொண்டு சேர்த்த பரிணாமத் திரிபானாலும் அதன் தொல் தொடர்பு ஆதி அன்னையாகிய நம் கொற்றவையே சாரும் என்பதில் மிகையில்லை.


சஜு

சஜு
சஜூ குமரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர், ஆய்வாளர். இரு கவிதை தொகுப்புகள், கொட்டடிக்காரன் என்ற வாழ்வியல் அனுபவ நூல் இவற்றோடு ஆற்றுமாடன் தம்பிரான், தெய்யத்தின் முகங்கள் என்ற இரு நூல்கள் ஆய்வு நோக்கில் வெளிவந்துள்ளன. பொறியாளரும் செண்டைமேளக்கலைஞருமான சஜூ குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் வசிக்கிறார். 

சஜு - Tamil Wiki

சஜூவின் நூலினைப் பெற: முத்ரா பதிப்பகம், கன்னியாகுமரி மாவட்டம்.
பேச: 6379082628