தொன்மங்களின் ஆற்றல் - 7: ஜோசப் கேம்ப்பெல்
![]() |
| Jacob’s Ladder, William Blake (1757-1827) |
பகுதி 4 - தியாகமும் பேரானந்தமும்
“நீங்கள் உங்களுக்கான பேரானந்தத்தை பின்தொடர்வீர்களானால், எப்போதும் இருந்துகொண்டிருக்கும், உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஒரு பாதையில் உங்களை இருத்திக்கொள்கிறீர்கள். மேலும் நீங்கள் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே நீங்கள் வாழவேண்டிய வாழ்க்கையாகிறது. நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களுக்கான பேரானந்தத்தை நீங்கள் பின்தொடர்வீர்களானால் உங்களுக்குள் இருக்கும் அந்த புத்துணர்வை, அந்த வாழ்வை எப்போதும் நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
மோயர்ஸ்: கதையாடல் மீது சூழல் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நீங்கள் எழுதியதை வாசிக்கையில் என்னை ஈர்த்தது என்னவென்றால் சமவெளிவாசிகள், வேடர்கள், கானக மக்கள், வேளாண்குடிகள் என அனைவருமே தமது வாழ்நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிக்கிறார்கள் என்பதுதான். தமது நிலத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள், அவ்வுலகின் ஒவ்வொரு அம்சமும் அவர்களுக்கு புனிதமானதாக உள்ளது.
கேம்ப்பெல்: வாழ்நிலத்தை புனிதமாக்குவது என்பது தொன்மங்களின் ஒரு அடிப்படை செயல்பாடு. இதை நீங்கள் நவஹோ (Navaho) இன மக்களிடம் தெளிவாகக் காணமுடியும். நவஹோ மக்கள் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு மலையை அடையாளமிட்டு மத்தியிலும் ஒரு மலையை குறித்துக்கொள்வார்கள். அங்கு கட்டப்படும் நவஹோ குடிலின் (Hogan) வாசலானது எப்போதும் கிழக்கு நோக்கியிருக்கும். குடிலின் மையத்தில் வெப்பமூட்டும் கணப்பு அமைக்கப்பட்டு அது பிரபஞ்சமையமாக கருதப்படும். மேற்கூரையில் உள்ள துளை வழியாக வெளியேறும் கணப்பின் புகை ஊதுவர்த்தியின் நறுமணப்புகை கடவுள்களின் நாசிக்குச் செல்வதுபோலத் தோன்றும். அந்நிலமும், அக்குடியிருப்பும் ஒரு குறியீடாக, ஒரு புனிதச்சித்திரமாக மாறுகிறது. ஆகையால் நீங்கள் எங்கிருந்தாலும் பிரபஞ்சஒழுங்குடன் இணைக்கப்படுவீர்கள்.
மேலும் நீங்கள் நவஹோவின் மணல்ஓவியத்தை கவனித்தால் அதைச் சுற்றி ஒரு படம் இருப்பதைக் காணலாம். அது கானல்நீராகவோ அல்லது வானவில்லாகவோ அல்லது வேறெதாவதாகவோ இருக்கலாம். ஆனால் அந்த மணல்ஓவியத்தைச் சுற்றி எப்போதும் ஒரு வடிவம் புதிய ஆன்மாவை தன்னுள் ஊற்றிக்கொள்ளும்பொருட்டு கிழக்கு நோக்கிய திறப்புடன் இருக்கும். புத்தர் போதிமரத்தடியில் அமர்ந்திருக்கையில் அவர் கிழக்கைத்தான் நோக்கியிருந்தார். சூரியன் எழும் திசை அது.
| The Pool - Apache, Edward S. Curtis (1868-1952) |
மோயர்ஸ்: என்னுடைய முதல் கென்யா நாட்டுப் பயணத்தின் போது, ஆதிகால மனிதர்களின் குடியிருப்பு அமைந்திருந்த ஒரு பழமையான இடத்திற்கு நான் தனியாகச் சென்றேன். முன்பு அது ஏரிக்கரையாக இருந்தது. இருள் கவிழும் வரை நான் அங்கு தங்கினேன். அப்போது அனைத்து உயிர்களின் இருப்பையும் நான் உணர்ந்தேன். அந்த பரந்த நிலப்பரப்பில் இருண்ட வானின் கீழ் நான் பழமையான ஏதோ ஒன்றிற்கு, இன்னமும் உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கும் ஏதோ ஒன்றிற்கு உடமையானவன் போல உணர்ந்தேன்.
கேம்ப்பெல்: உயர்ந்த மரங்கள் உள்ள ஒரு சோலைக்குள் நீங்கள் சென்றால் தெய்வங்களின் இருப்பை அங்கு நீங்கள் அறியக்கூடும். இதைச் சொன்னவர் சிசரோ (Cicero) என நினைக்கிறேன். அப்படிப்பட்ட தெய்வீகசோலைகள் இங்கு ஏராளமாக உள்ளன. என் இளவயதில் நான் காட்டுக்குள் நுழைந்தபோது மாபெரும் முதிர்ந்த மரம் ஒன்றை வழிபட்டதை என்னால் நினைவுகூற முடிகிறது. அதன் முன் நின்று “தெய்வமே, உன் வாழ்வில் நீ எத்தனை கண்டிருப்பாய்” என்று நான் விம்மினேன். படைப்பின் இருத்தல் குறித்த இவ்வுணர்வு மனிதனின் அடிப்படை மனநிலை என நான் கருதுகிறேன். ஆனால் நாம் இப்போது நகரத்தில் வசிக்கிறோம். இங்குள்ள அனைத்தும் கற்களும் பாறைகளும் கொண்டு மனிதக்கரங்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. அணில்களும் ஆந்தைகளும் உலவும் காட்டுக்குள் நீங்கள் வாழ்ந்தால் அது வேறொரு வகையான உலகம். வாழ்க்கையின் விசைகளையும், வல்லமைகளையும், மாயச்சாத்தியங்களையும் முன்னிறுத்திக்கொண்டு இருப்புகளாக இவையனைத்தும் உங்களைச் சூழ்ந்துள்ளது. உங்களுடையதல்லாத ஆனால் வாழ்க்கையின் பகுதிகளாக இவையனைத்தும் இருக்கும். மேலும் அவை உங்களை நோக்கி திறந்திருக்கும். அதன்பிறகு நீங்கள் அது உங்களுக்குள் எதிரொலிப்பதை கண்டுகொள்வீர்கள். ஏனெனில் இயற்கை என்பது நீங்கள்தான். ஒரு சியோக்ஸ் (Sioux) பூர்வகுடி தனது புல்லாங்குழலை இசைக்கையில் அதை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்திருப்பார். அக்கருவி எழுப்பும் முதலிசை கதிரவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அதற்கு பொருள். பிறகு அவர் நான்கு திசைகளையும் கருத்தில் கொள்வார். இதைப் பார்க்கையில், நீங்கள் உங்கள் எல்லைகளுக்காகவும் நீங்கள் வசிக்கும் உலகத்திற்காகவும் உங்களை அணுகுகையில் நீங்கள் இவ்வுலகில் உங்களுடைய இடத்தில் இருக்கிறீர்கள். வாழ்வதற்கான ஒரு மாறுபட்ட வழி இது.
மோயர்ஸ்: ஒரு புனிதஇடம் என்பது காலத்தின் திரைகள் கரைந்தழிந்து ஒரு அதிசயத்தை வெளிக்கொணரும் இடமாக இருக்கும். இது நீங்கள் ‘The Mythic Image’ என்ற உங்களுடைய நூலில் மாற்றத்தின் மையம் குறித்து எழுதியது. இதில் புனிதஇடம் என்பது எதைக் குறிக்கின்றது ?
கேம்ப்பெல்: இதுதான் இன்று எவருக்குமான மெய்யான தேவை. உங்களுக்கென்று ஒரு தனி அறையோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரமோ அல்லது ஒரு நாளோ இருக்கவேண்டும். அங்கே அன்று காலை செய்தித்தாளில் வெளியான செய்தி என்னவென்று உங்களுக்கு தெரியாது. உங்கள் நண்பர்கள் யாரென்றும், நீங்கள் யாருக்கு கடன் கொடுத்திருக்கீர்கள் என்றும் உங்களுக்கு யார் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றும் உங்களுக்கு தெரியாது. அங்குதான் நீங்கள் யாரென்பதையும் யாராக இருக்கக்கூடும் என்பதையும் நீங்கள் எளிதாக உணரவும் முன்னெடுக்கப்படவும் இயலும். இதுதான் படைப்பாற்றல் உள்ளுறையும் இடம். ஆரம்பத்தில் அங்கு எதுவுமே நிகழாமல் போகலாம். ஆனால் இப்படி ஒரு புனிதமான இடம் இருந்து அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்றால் இறுதியில் ஏதோ ஒன்று நிகழும்.
மோயர்ஸ்: ஒரு வேடனுக்கு சமவெளி என்ன அளித்ததோ அதை நமக்கு இத்தகைய புனிதஇடம் அளிக்கின்றது.
கேம்ப்பெல்: ஆம். அவர்களுக்கு இந்த முழு உலகமே ஒரு புனிதஇடம்தான். ஆனால் நமது வாழ்வு தன்னியல்பாகவே பொருளாதார நோக்கும் நடைமுறை சார்பும் கொண்டதாக மாறியுள்ளது. நீங்கள் வளர்ந்து முதிர்கையில் சுமக்கவிருக்கும் வாழ்க்கைத்தேவைகள் மிகப்பெரியது. ஆகவே நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதும் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள் என்பதும் மிக அரிதாகவே உங்களுக்கு அறியவரும். நீங்கள் எப்போதும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஏதோ ஒன்றையே செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்நிலையில் உங்கள் ஆனந்தத்திற்கான இடம் எங்குள்ளது? அதைக்கண்டறிய நீங்கள் முயலவேண்டும். ஒரு இசைப்பெட்டியை இயக்கி அதில் உங்களுக்கு பிடித்தமான இசையை கேளுங்கள். ஒருவேளை அது பிற எவரும் விரும்பாத இசையாகக்கூட இருக்கலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான புத்தகம் ஒன்றை வாங்கிப் படியுங்கள். புனிதஇடத்தில் நீங்கள் இதைச் செய்கையில் ஒரு இதமான உணர்வைப்பெறுவீர்கள். அதைத்தான் சென்றகால மக்கள் தாங்கள் வாழ்ந்த உலகம் முழுவதையும் அதற்குரிய இடமாக மாற்றி பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
மோயர்ஸ்: நிலம் மனிதர்களின் மீது செலுத்திய பாதிப்பைப் பற்றி நாம் பேசிவிட்டோம். ஆனால் மனிதர்கள் நிலத்தின் மீது செலுத்திய பாதிப்பைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
கேம்ப்பெல்: மனிதர்கள் தங்கள் வாழ்நிலத்தின் மீது உரிமைகொள்ள புனிதஇடங்களை உருவாக்குகிறார்கள். விலங்குகளையும் தாவரங்களையும் தொன்மமாக்குகிறார்கள். அதன்மூலம் நிலத்திற்கு ஆன்மீகவலு சேர்க்கிறார்கள். பிறகு அது கோவிலைப் போன்றோ அல்லது தியானத்திற்குரிய இடமாகவோ ஆகிறது. உதாரணமாக நவஹோ மக்கள் விலங்குகளை தொன்மமாக்குவதற்கு ஒரு அற்புதமான வேலையைச் செய்தார்கள். நவஹோக்களால் உருவாக்கப்பட்ட மணல்சிற்பங்களில் சிறுவிலங்குகள் இடம்பெற்றிருக்கும். அவை ஒவ்வொன்றிற்கும் தனிமதிப்பு உண்டு. அதில் உள்ள விலங்குகள் அவற்றின் இயல்பான தோற்றத்துடன் வரையப்பட்டிருக்காது. மாறாக அதிலொரு புதிய பாணி கடைபிடிக்கப்பட்டிருக்கும். அதன்படி விலங்குகள் தங்களின் உண்மையான பருவடிவத்தையோ குணங்களையோ கொண்டிராமல் ஆன்மிகஉருவத்தைக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் பாலைவனத்தில் நடந்து செல்கையில் சில சமயங்களில் ஒரு பெரிய ஈ தாழ்வாகப் பறந்து உங்கள் தோள்மீது வந்து அமரும். நவஹோவின் தொன்மப்படி அந்த பெரிய ஈ, சிறுகாற்று என உருவகிக்கப்படுகிறது. அது இளைஞர்களின் செவியருகே சென்று அவர்களின் தந்தையர் அவர்களை சோதிக்கும் பொருட்டு கேட்ட வினாக்கள் அனைத்திற்கும் விடைகளை முணுமுணுத்துவிட்டு போகிறது. இப்போது இந்த பெரிய ஈ என்பது மறைந்திருக்கும் ஞானத்தை வெளிக்கொணரும் புனித ஆத்மாவின் குரலாக கருதப்படுகிறது.
மோயர்ஸ்: இவையனைத்தின் நோக்கம்?
கேம்ப்பெல்: நிலத்தை தனதாக்கிக்கொள்ள. மேலும் தாங்கள் வாழும் நிலத்தை ஆன்மிகத்தொடர்பு கொண்டதாக மாற்றவும் இப்படிச் செய்தார்கள்.
மோயர்ஸ்: ஆகவே வாக்களிக்கப்பட்ட பூமியை மோசஸ் (Moses) கண்டடைந்தபோது பிற ஆன்மிகத்தலைவர்கள் தங்கள் மக்களுக்கு என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதையேதான் அவரும் செய்தார். அவர் அந்நிலத்தின் மீது உரிமைகொண்டாடினார்.
கேம்ப்பெல்: ஆம். உங்களுக்கு யாக்கோபுவின் கனவு கதை (Jacob’s dream) நினைவிருக்கலாம். உறக்கத்திலிருந்து யாக்கோபு எழுந்தவுடன் அவர் இருந்த இடம் பெத்தேலாக (Bethel) மாறியிருப்பதை கண்டார். பெத்தேல் - கடவுளின் இடம். அந்த இடம் ஒரு குறிப்பிட்ட ஆன்மிக முக்கியத்துவம் உடையது என்று யாக்கோபு கோரினார். அந்த இடத்தில்தான் கடவுள் தனது ஆற்றல்களை விதைத்திருந்தார்.
மோயர்ஸ்: இன்றும் இந்நாட்டில் புனிதஇடங்கள் இருக்கின்றனவா?
கேம்ப்பெல்: மெக்ஸிகோ நகரம் ஒரு புனிதநகரமாக இருந்தது. ஸ்பானியர்கள் அதைச் சிதைப்பதற்கு முன்னர் அது உலகின் தலை சிறந்த நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஸ்பானியர்கள் முதன்முதலில் மெக்ஸிகோவை காண்கையில் அது எந்தவொரு ஐரோப்பிய நகரத்தைவிடவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. பெரும் கோயில்களுடன் ஒரு புனிதநகரமாக அது காட்சியளித்தது. அங்கே சூரியனுக்கான கோயில் இருந்த இடத்தில்தான் இப்போது கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இது கிறித்தவர்கள் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டதற்கான ஒரு உதாரணம். வேறொரு ஆலயம் இருந்த இடத்தில் தங்கள் ஆலயத்தை நிறுவி அவர்கள் அந்நிலத்தை தங்கள் நிலமாக மாற்றிக்கொண்டார்கள்.
நமது மதபோதகர்கள் இவ்விடங்களுக்கு விவிலியத்தை மையப்படுத்தி பெயரிடுகிறார்கள். நியூயார்க் மாகாணத்தில் வாழும் ஒருவர் அவர் மனதில் இருக்கும் ஒடிசி (Odyssey), இலியட் (Iliad) போன்ற காவியங்களிலிருந்து இதக்கா (Ithaca), உட்டிக்கா (Utica) போன்ற செவ்வியல் பெயர்களைச் சூட்டிவிடுகிறார்.
மோயர்ஸ்: ஒரு விதத்தில் மக்கள் தங்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடிய சக்தி அந்நிலத்திற்கு இருப்பதாக நம்பி அதை புனிதமாக்குகிறார்கள். நிலத்திற்கும் அங்கு மனிதர்கள் உருவாக்குபவைகளுக்கும் இடையே ஒரு உயிரோட்டமான உறவு உள்ளது.
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது நகரமயமாக்கலால் முடிவுற்றது.
மோயர்ஸ்: நியூயார்க்கில் இன்று உயரமான கட்டடத்தை யார் கட்டுவார்கள் என்பதில்தான் போட்டியே உள்ளது.
கேம்ப்பெல்: இது ஒரு வகையில் கட்டடக்கலையின் பெரும் சாதனை. நாங்கள் ஒரு பொருளாதார அதிகார மையம் என்றும், நாங்கள் எய்தியிருப்பதைப் பாருங்கள் என்றும் ஒரு நகரம் அறிவிப்பதைப் போன்றது இது. மேலும் இதுவொரு வகையான திறன்மிக்க சாகசம் எனலாம்.
மோயர்ஸ்: புனிதநிலங்கள் இன்று எங்குள்ளன?
கேம்ப்பெல்: அவை இன்று இல்லை. ஒரு சில வரலாற்று ஸ்தலங்கள் உள்ளன. அங்கு நிகழ்ந்த ஏதோ முக்கிய சம்பவங்கள் குறித்து நினைவுகூறுவதற்காக மக்கள் அங்கு செல்வதுண்டு. உதாரணமாக நாம் Holy Land செல்வதை சொல்லலாம். ஏனெனில் அந்நிலம் நமது மதத்தின் தோற்றுவாய். ஆனால் எல்லா நிலங்களும் Holy Land ஆக மாற வேண்டும். ஒருவன் தன் வாழ்க்கையின் ஆற்றலுக்கான குறியீட்டை அந்நிலத்திலேயே கண்டடையவேண்டும்.
அதைத்தான் முன்பிருந்த அனைத்து தலைமுறையினரும் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த பூமியையே புனிதமாக்கினர். உதாரணமாக 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டுகளில் ஐஸ்லாந்து (Iceland) பூர்வகுடிகள் அதை செய்தார்கள். அவர்கள் தங்களுடைய குடியிருப்புகள் ஒவ்வொன்றிற்கும் இடையே 432000 ரோமானிய அடி தொலைவு இருக்குமாறு நிறுவினார்கள் (432000 என்பது ஒரு முக்கியமான தொன்ம எண்ணாக பல மரபுகளில் அறியப்படுகிறது). ஐஸ்லாந்து நிலப்பரப்பின் எல்லா அமைப்புகளுமே பிரபஞ்சத்துடன் உறவுகொண்டுள்ளது. ஆகவே நீங்கள் ஐஸ்லாந்தில் எங்கு சென்றாலும் பிரபஞ்சத்துடன் ஒத்திசைவில் இருப்பீர்கள் (உங்கள் தொன்மத்தை நீங்கள் அறியும் பட்சத்தில்). இதே போன்ற தொன்மம் எகிப்திலும் காணப்படுகிறது. ஆனால் எகிப்தில் அதன் குறியீட்டு வடிவம் மாறுபடுகிறது. ஏனெனில் எகிப்திய நிலப்பரப்பு வட்டமாக இல்லாமல் நீளமாக உள்ளது. ஆகவே அங்கு விண்ணின் பெண்தெய்வம் ஒரு புனிதப்பசு வடிவில் உள்ளது. அதன் இரண்டு கால்கள் தெற்கிலும், மற்ற இரண்டு கால்கள் வடக்கிலும் உள்ளது. சொல்லப்போனால் அது ஒரு செவ்வக வடிவிலான கருத்தாக உள்ளது. ஆனால் நமது சொந்த பண்பாட்டின் ஆன்மிக குறியீட்டாக்கம் நம்மில் இருந்து தொலைந்துவிட்டிருக்கிறது. ஆகவேதான் இனிய பிரஞ்சு சிறுநகரமான சார்ட்ரஸ் (Chartres) செல்வது எனக்கு மிக விருப்பமாக உள்ளது. அங்கே தேவாலயம்தான் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் அங்கு இரவு விடியலாக மாறுகையிலும், காலை மதியமாகுகையிலும், பகல் இரவாகுகையிலும் நீங்கள் மணியோசையை கேட்கலாம்.
நான் சார்ட்ரஸ் தேவாலயத்தை எனக்கு அணுக்கமானதாக கருதுகிறேன். பலமுறை அங்கு சென்றுள்ளேன். மாணவனாக நான் பாரிஸில் வசித்தபோது ஒரு முழு வாரத்தை அங்கு செலவிட்டிருக்கிறேன். அங்குள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் ஆழ்ந்து கவனித்திருக்கிறேன். அங்கு நான் வசித்த நாட்களில் மதியவேளை ஒன்றில் அதன் பராமரிப்பாளர் என்னிடம் வந்து “நீ ஆலயமணியை இயக்குவதற்காக என்னுடன் வர விரும்புகிறாயா” என்று கேட்டார். “நிச்சயமாக வருகிறேன்” என்று நான் கூறினேன். உடனே நாங்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்த மிகப்பெரிய பித்தளை மணியை அடைந்தோம். சீசா பலகையைப் போல அங்கொரு சிறிய மேடை இருந்தது. அந்த பலகையின் ஒரு முனையில் அவரும் மறுமுனையில் நானும் நின்றோம். பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறிய கம்பி இருந்தது. அவர் நின்றிருந்த இடத்திலேயே கால்களால் ஒரு சிறிய அழுத்தத்தை அளித்தார். பலகையின் எனது பக்கம் மேலெழுந்தது. அப்பலகையின் இருபக்கமும் நின்றவாறு நாங்கள் இருவரும் மேலும் கீழும் சென்றோம். காற்று எங்கள் தலைமுடியை கோதிவிட்டு சென்றது. அப்போது அந்த ஆலயமணி எங்களுக்கு கீழிருந்து “பாங்” “பாங்” என்று ஓசையெழுப்பத் தொடங்கியது. என் வாழ்வின் மிகச்சிறந்த சிலிர்ப்பூட்டும் சாகசங்களில் ஒன்றாக அது அமைந்தது.
இவையனைத்தும் முடிந்தபிறகு அவர் என்னை கீழிறங்கச் செய்துவிட்டு, “நான் உனக்கு எனது அறையை காண்பிக்க விரும்புகிறேன்” என்றார். ஒரு தேவாலயத்தில் முதலில் வருவது பெருங்கூடம். அதைக்கடந்தால் இடைநாழி. பின் ஒரு சிறுமேடை. அதற்கப்பால் பாடகர்களின் திரை. திரை நடுவே ஒரு சிறிய கதவைத் திறந்து அவர் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே ஒரு சிறிய கட்டில் போடப்பட்டு அதனருகே ஒரு சிறிய மேசை இருந்தது. மேசை மேல் ஒரு விளக்கு. நான் அந்த திரையினூடாக பார்த்தபோது கறுப்பு மடோனாவின் (Black Madonna) சாளரம் தெரிந்தது. அச்சிறு அறையில்தான் அவர் வசித்து வந்தார். அந்த மனிதர் நீடித்த தியானத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார். அது ஒரு பரவசமூட்டும் அழகிய விஷயமாக இருந்தது. அதிலிருந்து நான் சார்ட்ரஸ்-க்கு அவ்வப்போது சென்றுவந்தேன்.
![]() |
| March on Tenochtitlan, Diego Rivera, 1929-44 |
மோயர்ஸ்: நீங்கள் அங்கே என்ன கண்டடைகிறீர்கள்?
கேம்ப்பெல்: அது ஆன்மிகக் கோட்பாடுகள் சமூகத்தை வழிநடத்திய ஒரு காலத்திற்கு என்னை மீண்டும் அழைத்துச் செல்கிறது. ஒரு சமூகத்தின் உயரமான கட்டடம் எது என்பதைக் கொண்டு அச்சமூகத்தை வழிநடத்துவது எது என்பதை நீங்கள் அறியலாம். ஒரு மத்திமகாலத்தைச் சேர்ந்த நகரத்தை பார்த்தால் தேவாலயம்தான் அங்கிருப்பவற்றிலேயே உயரமானதாக இருக்கும். அதேசமயம் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நகரத்தை பார்த்தால் அரசு மாளிகைதான் உயரமானதாக இருக்கும். ஒரு நவீன நகரத்தை நீங்கள் பார்வையிட்டால் பொருளியல் வாழ்க்கையின் மையமாக இருக்கும் அலுவலகக் கட்டடங்கள்தான் உயரமானவை.
![]() |
| Chartres Cathedral |
நீங்கள் சால்ட் லேக் (Salt Lake) நகரத்திற்கு சென்றால் இவையனைத்தும் உங்கள் முகத்திற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நகரத்தின் மையத்தில் தேவாலயம் முதலாவதாக எழுப்பப்பட்டிருக்கும். ஏனெனில் ஆலயம் ஆன்மிகத்தின் மையம், அதிலிருந்துதான் அனைத்தும் அனைத்து திசைகளில் பரவுகின்றன. அடுத்தாக அதைவிட உயரமாக அதற்கு பின்புறமாக கட்டப்பட்ட அரசாங்க மாளிகைகள். இவையனைத்தையும் விட உயரமாக இருப்பது அலுவலகக் கட்டடம். அதுதான் கோயில் மற்றும் அரசுக் கட்டடங்களின் அலுவலை கவனித்துக்கொள்கிறது. இதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தின் வரலாறு. கோதிக் காலகட்டத்திலிருந்து பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு வழியாக இன்று நாம் இருக்கும் பொருளாதார உலகம் வரை வந்த வரலாறு.
மோயர்ஸ்: அப்படியானால் சார்ட்ரஸ் நகரத்தினுள் நீங்கள் நுழைகையில்…
கேம்ப்பெல்: நான் மத்திம காலகட்டத்திற்கு மீள்கிறேன். ஒரு குழந்தையாக நான் வளர்க்கப்பட்ட, ரோமன் கத்தோலிக்க ஆன்மிகப்படிமம் நிறைந்த உலகிற்கு திரும்பச் செல்கிறேன். அது அற்புதமானது.
மோயர்ஸ்: சென்றகால நினைவுகளில் வெகுநேரம் நீந்தக்கூடிய மனிதரல்லவே நீங்கள். அங்கிருக்கையில் உங்களை அசைத்தது வெறும் கடந்தகாலம் மட்டுமல்ல இல்லையா?
கேம்ப்பெல்: இல்லை. அதுதான் நிகழ்காலம். உலகின் ஆன்மிகஞானம் பற்றி அந்த தேவாலயம் என்னுடன் உரையாடுகிறது. அது தியானத்திற்குரிய ஒரு இடம். வெறுமனே நடந்தும், அமர்ந்தும், அங்கிருக்கும் அழகிய பொருட்களை பார்த்துக்கொண்டும் தியானிக்கலாம்.
மோயர்ஸ்: நீங்கள் பெருமளவில் விரும்பும் அந்த சார்ட்ரஸ் தேவாலயம் மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவையும் வெளிப்படுத்துகிறது இல்லையா?
கேம்ப்பெல்: ஆம். அந்த தேவாலயம் சிலுவையின் வடிவில் அமைந்துள்ளது. அதன் மத்தியில் பிரார்த்தனை மேடை உள்ளது. அதுவொரு குறியீட்டுரீதியான கட்டமைப்பு. இப்போது ஏராளமான தேவாலயங்கள் நாடக அரங்குகள் போல கட்டப்படுகின்றன. நாடக அரங்குகளில் பார்வை மிக முக்கியமானது. ஆனால் தேவாலயங்களில் பார்வைக்கு எந்த தேவையும் கிடையாது. அங்கே நிகழ்பவைகளில் பெரும்பாலானவை உங்கள் பார்வைக்கு அப்பாற்பட்டவை. அங்கே முக்கியமாக இருப்பது குறியீடுதான். வெறுமனே கண்டுகளிப்பதல்ல. மேலும் அங்கே நடந்துகொண்டிருப்பது அனைவருக்குமே மனப்பாடமாக தெரியும். நீங்கள் ஆறு வயதுக் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே அவற்றைப் பார்த்து வந்திருக்கிறீர்கள்.
மோயர்ஸ்: பின் எதற்காக நாம் தேவாலயங்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறோம்?
கேம்ப்பெல்: அதுதான் தொன்மத்தின் ஒட்டுமொத்த பணி. நாம் ஏன் இந்த விஷயங்களைப் பற்றி மீண்டும் பேச விரும்புகிறோம்? ஏனெனில் இது நமது ஆன்மிக வாழ்க்கையின் முக்கிய படிமங்களுடன் நம்மை மீண்டும் தொடர்புறச் செய்கிறது. தினந்தோறும் சடங்குகள் செய்வது என்பது நம்மை அதனுடன் ஒருமுகப்படுத்துகிறது.
மோயர்ஸ்: ஆனால் நமக்கு அது இப்போது தெரியாது.
கேம்ப்பெல்: நாம் அந்த வகையான அக்கறையை இழந்துவிட்டோம். ஆன்மிகக்கோட்பாடு கொண்ட பிரக்ஞையில் நிலைத்து வாழ்வது முந்தைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அசிரியன் (Assyrian) மாளிகைகளில் ஒரு கலவையான மிருகத்தை நீங்கள் காணலாம். மனிதத்தலையும் சிம்மத்தின் உடலும் கழுகின் சிறகுகளும் எருதின் கால்களும் கொண்ட ஒரு மிருகம் அது. நான்கு இராசிகளை ஒன்றாகக் கலந்து உருவாக்கப்பட்ட அந்த மிருகம் அங்கு வாயில் காப்போனாக நின்றிருக்கிறது.
அதே நான்கு மிருகங்கள் ‘கடவுளின் வலிமை’ (Ezekiel) என்ற தரிசனத்துடன் ஒன்றிணைந்து நான்கு நற்செய்தியாளர்களாக (Evangelists) கிறித்துவ மரபில் உருவானது. “மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் நான் உறங்கும் படுக்கையை ஆசீர்வதியுங்கள்” என்ற பிரார்த்தனை உங்களுக்கு நினைவிருக்கும். இந்த பிரார்த்தனையில் நீங்கள் மத்தியில் இருப்பீர்கள், அது கிறிஸ்து இருக்குமிடம். உங்களைச் சுற்றியுள்ள நான்கு திசைகளும் உங்கள் படுக்கையின் நான்கு கால்கள்.
![]() |
| Assyrian Winged Bull |
இப்போது இந்த மண்டலம் காலவெளிக்கு அப்பால் இருந்து கிறிஸ்து தோன்றுவதை குறிக்கிறது. அந்த நான்கு மிருகங்களும் காலவெளி என்ற திரையைக் குறிக்கிறது. அவை நித்தியத்தை மறைத்திருக்கின்றன. மத்தியில் இருக்கும் கிறிஸ்து காலவெளி எனும் பிரபஞ்ச பெண்தெய்வத்தின் கருப்பையிலிருந்து உலகின் கடவுளாக, இரண்டாவது பிறப்பாக வருகிறார்.
மோயர்ஸ்: சார்ட்ரஸ் போன்ற ஒரு தேவாலயம் விதிகளுக்கு அப்பாலுள்ள அர்த்தத்தின் ஆதாரதளம் பற்றிய அறிவை குறியீடாக்குகிறது. மேலும் அந்த அர்த்தம் கம்பீரமான கல்வடிவமாக மட்டுமல்லாமல் அந்த வடிவத்தை சுற்றியிருக்கும் மற்றும் அந்த வடிவத்தில் நிறைந்திருக்கும் பெருமௌனத்திலும் வசிக்கிறது என்று கூறுகிறீர்கள்.
கேம்ப்பெல்: ஆன்மிகம் சார்ந்த அனைத்து அறுதிக்குறிப்புகளும் ஒலிக்கு அப்பாற்பட்ட மௌனத்தையே நோக்கியுள்ளது. உடலைக் குறிக்கும் சொல்தான் முதல் ஒலி. அவ்வொலியைக் கடந்து இருப்பது அறிந்திராத அறியமுடியாத ஆழ்நிலை. அதை பெருமௌனம் அல்லது வெற்றிடம் அல்லது அனைத்தையும் கடந்த மூலம் எனலாம்.
மோயர்ஸ்: எவ்வாறு தொன்மம் நம்மை நமது புனிதபூமியுடன் இணைக்கிறது என்றும், எவ்வாறு நிலங்கள் ஆதி மானுட இருப்பை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது என்றும் நீங்கள் சொல்வதை கேட்கையில், அந்த தெய்வீகசக்தி என்பது உண்மையில் இயற்கை மட்டும்தான் என எண்ணத் தொடங்குகிறேன். குறைந்தபட்சம் நீங்கள் அதை புரிந்துகொண்டுள்ளதைப்போல.
கேம்ப்பெல்: தெய்வீகசக்தி என்பது இயற்கைக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்று எனும் கருத்து அழிவை உள்ளடக்கியது. மத்திய காலகட்டத்தில் இருந்த இந்த கருத்து உலகையே ஒரு வீண்நிலமாக மாற்றியது. அங்கு வசிக்கும் மக்கள் உண்மைக்கு புறம்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். உண்மையாகவே தாங்கள் செய்ய விரும்பியவற்றை ஒருபோதும் செய்திராதவர்களாக வாழ்ந்தார்கள். ஏனெனில் அந்த தெய்வீகசக்தியின் விதிகள் அவர்களை தங்களது மதகுருக்கள் வழிகாட்டியபடி வாழ வலியுறுத்தியது. ஒரு வீண்நிலத்தில் மக்கள் தங்களுடையதல்லாத ஆனால் தவிர்க்க இயலாத சட்டங்களாக தங்கள் மேல் போடப்பட்ட நோக்கங்களை பூர்த்தி செய்வார்கள். இது ஒரு அழிவுச் செயல். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட “Courtly Love” எனப்படும் Troubadour கவிதை வாழ்க்கையின் மெய்யான மகிழ்ச்சி மீறப்படுவதை தெய்வீகசக்தியால் நியாயப்படுத்துவதற்கு ஒரு எதிர்ப்பாக இருந்தது. Tristian வரலாறும் Grail வரலாற்றின் குறைந்தபட்சமாக ஒரு பதிப்பும் அதையே செய்தது. ஆன்மா என்பது வாழ்வின் பூங்கொத்து. அது வாழ்க்கையினால் உள்ளிழுக்கப்படும் ஒன்றல்ல, வாழ்க்கையிலிருந்து வெளிவரும் ஒன்று. இது அன்னைதெய்வம் கொண்ட மதத்தின் புனிதமான விஷயங்களில் ஒன்று. அதன்படி உலகம் அன்னையின் உடல், தெய்வீகம் இவ்வுலகத்திலேயே உள்ளது. இயற்கைக்கு மேலாக இருக்கும் ஏதோ ஒன்றல்ல அது. இதைப்போன்ற ஏதோ ஒரு புனிதம் மத்திய காலத்து கன்னிமாதா வழிபாட்டில் இருந்தது. அதிலிருந்துதான் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அனைத்து அழகிய பிரஞ்சு தேவாலயங்களும் உதயமாயின.
இருப்பினும் ’தோட்டத்தில் வீழ்ச்சி’ (Fall in the Garden) எனும் நமது கதை இயற்கையை களங்கமுள்ளதாக காண்கிறது. அந்த தொன்மம் நமது ஒட்டுமொத்த உலகத்தையும் களங்கப்படுத்தியது. எப்படியெனில், இயற்கை களங்கமுடையதாக எண்ணப்பட்டது, ஆகவே அதன் ஒவ்வொரு உடனடி செயல்பாடும் பாவக்கறை உடையது. ஆகவே நாம் அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கக்கூடாது. இயற்கை குறித்த உங்கள் தொன்மத்தை பொருத்து உங்கள் நாகரீகமும் வாழ்க்கைமுறையும் முழுமையாகவே மாறுபட்டதாக இருக்கும். இயற்கை களங்கமுள்ளது என்றால் அது ஒருவிதமாகவும், இயற்கை தன்னளவிலேயே தெய்வீகத்தின் ஒரு வெளிப்பாடு, இயற்கையின் உள்ளடக்கமான அதன் ஆன்மா தெய்வீகத்தின் வெளிப்பாடு என்று இருந்தால் வேறுவிதமாகவும் இருக்கும்.
மோயர்ஸ்: இயற்கையில் உள்ளடக்கமாக உள்ள தெய்வீகத்தை யார் இன்று நமக்காக விளக்குகிறார்கள்? நமது பூசகர்கள் யார்? காணமுடியாதவற்றை நமக்கு விளக்குபவர் யார்?
கேம்ப்பெல்: இது கலைஞர்களின் பணி. கலைஞன்தான் தொன்மங்களை சமூகத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பவன். ஆனால் அவன் மானுடத்தையும் தொன்மத்தையும் புரிந்துகொண்ட கலைஞனாக இருக்கவேண்டும். மாறாக உங்களுக்கென்று தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை கையில் வைத்திருக்கும் ஒரு எளிய சமூகவியலாளனாக இருத்தலாகாது.
மோயர்ஸ்: அப்படியானால் சாதாரணமானவர்கள், கவிஞனோ கலைஞனோ அல்லாதவர்கள், ஆழ்நிலை உச்சத்தை பெற்றிராதவர்கள் ஆகியோரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? எப்படி அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வது?
கேம்ப்பெல்: அதற்கு நான் ஒரு வழியைச் சொல்கிறேன். மிகச்சிறப்பான வழி. ஒரு அறைக்குள் அமர்ந்து ஒரு நூலை வாசிக்கத் துவங்குங்கள். தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருங்கள். சரியான ஆசிரியர்கள் எழுதிய சரியான நூல்களை படியுங்கள். உங்கள் மனம் அந்த நூலின் தளத்திற்கு உயர்த்தப்படும். மேலும் நீங்கள் எப்போதும் ஒரு இனிய மெல்லிய பேரானந்தத்துடன் இருப்பீர்கள். வாழ்க்கையின் இந்த உணர்தல் ஒரு நிலையான உணர்தலாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும். உங்களை முற்றிலுமாக ஆட்கொள்ளக்கூடிய ஒரு எழுத்தாளரை நீங்கள் கண்டடைகையில் அவருடைய படைப்புகள் அனைத்தையும் வாசியுங்கள். “யார் என்ன செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளவிரும்புகிறேன்” என்று கூறாமல் எந்த நூல் விற்பனையில் அதிகம் என்று பாராமல் வாசியுங்கள். எளிமையாக சொல்லப்போனால் இந்த ஒரு எழுத்தாளர் உங்களுக்கு என்ன அளிக்கவேண்டுமோ அவற்றை வாசியுங்கள். அதன் பிறகு நீங்கள் அவர் வாசித்த நூல்களையும் வாசியுங்கள். அதன் பிறகு உலகம் ஒரு குறிப்பிட்ட பார்வையில் நிலையாக உங்களுக்காக திறந்திருக்கும். ஆனால் ஒரு எழுத்தாளரிடமிருந்து இன்னொரு எழுத்தாளரிடம் நீங்கள் செல்கையில் ஒவ்வொருவரும் எப்போது எதை எழுதினார்கள் என்பதை நீங்கள் எங்களுக்கு சொல்லக்கூடும். ஆனால் அவர் உங்களுக்கு அதைப்பற்றி எதையும் சொல்லியிருக்கமாட்டார்.
மோயர்ஸ்: ஆகவே கலைஞர்கள் இன்றைக்கு செய்வதை பூசகர்கள் முந்தைய சமூகத்தில் செய்தார்கள். அவர்கள் வெறுமனே இருப்பதற்கு பதில் மிக முக்கியமான பங்கை வகித்தார்கள்.
கேம்ப்பெல்: மதகுருக்கள் நமது சமூகத்தில் வழிவழியாக செய்வதை அவர்கள் செய்தார்கள்.
மோயர்ஸ்: அப்படியென்றால் பூசகர்கள்தான் மதகுருக்களா?
கேம்ப்பெல்: எனது பார்வையில் ஒரு பூசகனுக்கும் ஒரு மதகுருவிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மதகுரு என்பவர் ஒரு சமூகம் சார்ந்த ஒரு செயல்பாட்டாளர். சமூகம் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் வழிபடுகிறது. அதற்கான சடங்குகளை முன்னெடுக்க ஒரு செயல்பாட்டாளாராக மதகுரு நியமிக்கப்படுகிறார். எந்த தெய்வத்திற்கு இவர் வழிபாடு நடத்துகிறாரோ அந்த தெய்வம் இவர் வருவதற்கு முன்னரே இருந்தது. ஆனால் பூசகனின் சக்தி என்பது அவனுடைய சொந்த அனுபவத்தின் பரிச்சயமான தெய்வங்களில் குறியீடாக்கப்பட்டது. அவனுடைய அதிகாரம் எந்த ஒரு சமூக நியமனத்திலிருந்தும் வருவதில்லை, மாறாக உளவியல் அனுபவத்திலிருந்து தோன்றுகிறது.
மோயர்ஸ்: பூசகர் நான் சென்றிராத ஓரிடத்திற்கு சென்றிருக்கிறார், அதை எனக்கு விளக்குகிறார்.
கேம்ப்பெல்: ஆம். பிளாக் எல்க்கின் (Black Elk) கதை போல, பூசகன் அவனுடைய தரிசனங்களில் சிலவற்றை தனது மக்களுக்காக சடங்குச்செயல்பாடுகளாக மாற்றுகிறான். அது அவனுடைய அகஅனுபவத்தை மக்களின் புறவாழ்க்கைக்குள் கொண்டுவருகிறது.
மோயர்ஸ்: இதுதான் ஒரு மதத்தின் தொடக்கமா?
கேம்ப்பெல்: இவ்வாறுதான் மதங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். ஆனால் அது ஒரு ஊகமே. உண்மை நமக்கு தெரியாது.
மோயர்ஸ்: கிறிஸ்து காட்டுக்குள் சென்று, ஒரு உளவியல் மாற்றத்திற்கு உள்ளாகி, திரும்பி வந்து மக்களை நோக்கி “என்னைப் பின்தொடருங்கள்” என்கிறார். இது போன்ற நிகழ்வு ஆதிகால நாகரிகங்களிலும் நிகழ்கிறதா?
கேம்ப்பெல்: அதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. அனைத்து வேட்டைச்சமூகங்களிலும் நாம் ஒரு பூசக அம்சத்தை நடைமுறையில் காண்கிறோம்.
மோயர்ஸ்: ஏன் குறிப்பாக வேட்டை நாகரிகங்களில் மட்டும்?
கேம்ப்பெல்: ஏனென்றால் அவர்கள் தனியர்கள். ஒரு வேளாண்மனிதன் ஒருபோதும் இருக்கமுடியாத வண்ணம் தனித்திருப்பவன்தான் வேட்டையாளன். வயல்களில் கடுமையாக உழைத்துக்கொண்டு நீங்கள் செய்ய வேண்டியதை இயற்கை சொல்வதற்காக காத்துக்கொண்டிருப்பது ஒருவகை. ஆனால் முந்தைய வேட்டையைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் ஒவ்வொரு வேட்டையையும் எதிர்கொள்வதென்பது வேறுவகை. மேலும் வேட்டையாளர்கள் பிரத்யேகமான சாமர்த்தியங்களும் திறமைகளும் கொண்ட தனிப்பட்ட திறன்களில் பயிற்சி பெற்றவர்கள்.
மோயர்ஸ்: ஆகவே மானுடவளர்ச்சியில் பூசகனுக்கு என்ன நேர்ந்தது ?
கேம்ப்பெல்: நிலையான கிராமவாழ்க்கை அதிக முக்கியத்துவத்தை அடைந்தபோது பூசகர்கள் அதிகாரமிழந்தனர். இதை விளக்கக்கூடிய அற்புதமான கதைகளும் தொன்மங்களும் தென்னமெரிக்க பூர்வகுடிகளான நவஹோ மற்றும் அப்பாச்சிகளிடையே (Apache) உள்ளது. அவர்கள் ஆதியில் வேட்டையினத்தவராக இருந்து வேளாண்மை செழித்த நிலப்பகுதிக்கு குடியேறி வேளாண்மையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களின் ஆரம்பகால கதைகளில் ஒரு வேடிக்கையான அத்தியாயம் உண்டு. அதில் பூசகர்கள் கீழிறக்கப்பட்டு மதகுருமார்கள் அவ்விடத்தை நிரப்புவது பற்றி கூறப்பட்டிருக்கும். அக்கதை ஒன்றில் பூசகர்கள் சூரியனை அவமதிக்கும் விதமாக ஏதோ சொல்கிறார்கள், உடனே சூரியன் மறைந்துபோகிறது. அப்போது அவர்கள், “சூரியனை நான் மீட்டு வருகிறேன்” என்கிறார்கள். அதற்காக அவர்கள் அனைத்து தந்திரங்களையும் செய்கிறார்கள். இவை நம்பிக்கையற்றவிதமாக கோமாளித்தனமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் தந்திரம் சூரியனை மீட்டு வரவில்லை. இதனால் பூசகர்களின் எண்ணிக்கை குறைந்துபோய் ஒரு விதமான கோமாளிகளாலான சமூகமாக ஆகிறது. அவர்கள் ஒரு தனித்துவமான சக்தி கொண்ட மந்திரவாதிகள். ஆனால் இன்று அவர்களின் சக்தி ஒரு பெரும் சமூகத்திற்கு கீழ்படிந்துவிட்டது.
மோயர்ஸ்: சமவெளியில் நிகழ்ந்த வேட்டை தொன்மத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி நாம் பேசினோம். சமவெளி என்பது தலைக்கு மேல் பெரும் கூடாரம் போல் கவிழ்ந்த வானத்துடன் ஒரு வட்டமான தொடுவானத்தால் தெளிவாக சூழப்பட்டது. ஆனால் அடர்ந்த காட்டுக்குள் வசித்த வேட்டை மக்களைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அங்கே வானத்தின் கூடாரம் இல்லை. எல்லைகள் இல்லை. பரந்த பார்வையுணர்வே கிடையாது. எங்கு பார்த்தாலும் வெறும் மரங்கள் மரங்கள் மரங்கள் மட்டுமே.
கேம்ப்பெல்: காட்டை விட்டு வெளியேறியிராத குள்ளமனிதன் ஒருவன் ஒரு மலைக்கு வந்த ஒரு ஆர்வமூட்டும் கதையை காலின் டர்ன்புல் (Colin Turnbull) சொல்கிறார். ஒரு குள்ளமனிதன் திடீரென வனத்திலிருந்து மலைப்பகுதிக்கு வருகிறான். அங்கே அவன் முன்னால் ஒரு மாபெரும் சமவெளி விரிந்து கிடக்கிறது. இந்த பரிதாபத்திற்குரிய சிறுமனிதன் அதைக்கண்டு அஞ்சிவிட்டான். தொலைவையோ அல்லது பார்வையையோ கணக்கிட அவனுக்கு எந்த வழியுமில்லை. சமவெளியில் தொலைவில் மேய்ந்து கொண்டிருக்கும் விலங்குகள் அவனது வழியில் இருப்பதாகவும் அவை மிகச் சிறியதாக தெரிந்ததால் அவற்றை எறும்புகள் எனவும் அவன் எண்ணினான். முற்றிலும் குழம்பிப்போய் அவன் மீண்டும் காட்டுக்குள்ளேயே ஓடிப்போகிறான்.
மோயர்ஸ்: மதம் பற்றிய நமது கருத்துக்களையும் நமது பண்பாட்டையும் வடிவமைப்பதில் நிலவியல் பெரும்பங்காற்றியிருக்கிறது. பாலைநிலத்தின் கடவுள் சமவெளி நிலத்தின் கடவுளல்ல.
கேம்ப்பெல்: அல்லது மழைக்காட்டின் கடவுளல்ல. கடவுள்கள் அல்ல என்று பன்மையில் சொல்லலாம். பாலைநிலத்தில் நீங்கள் இருக்கையில் அங்கு உங்களுக்கு ஒரே வானம் ஒரே உலகம். ஆகவே உங்களுக்கு தெய்வமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒரு காட்டிற்குள், எல்லைகள் என எதுமில்லாமல் பத்து, பன்னிரண்டு அடிகள் தொலைவிற்கப்பால் எதையும் காணமுடியாத நிலையில் இதுபோல எந்த கருத்தும் இருக்கமுடியாது.
மோயர்ஸ்: ஆகவே அவர்கள் கடவுளைப் பற்றிய தங்களுடைய கருத்தை உலகின் மீது செலுத்துகிறார்களா?
கேம்ப்பெல்: ஆமாம். நிச்சயமாக.
மோயர்ஸ்: அவர்களுடைய நில அமைப்பு அவர்களின் புனிதத்தின் படிமத்தை வடிக்கிறது, பிறகு அதை அவர்கள் வெளியே செலுத்தி கடவுள் என்றழைக்கிறார்கள்.
கேம்ப்பெல்: ஆம். கடவுள் எனும் கருத்து எப்போதுமே நாகரிகத்துடன் பிணைக்கப்பட்டது. மேலும் ஒரு மதப்பிரச்சாரகர் (Missionary) தான் கடவுள் என்று எண்ணுவதை அல்லது தன்னுடைய கடவுளையே கொண்டுவந்தாலும் தெய்வீகம் என்று எதை மக்கள் எண்ணுகிறார்களோ அதாகத்தான் அந்த கடவுள் மாற்றப்படுகிறார்.
ஹவாயில் வசிக்கும் பிரிட்டிஷ் மதப்பிராச்சாரகரை பீலே (Pele) எனும் பெண்தெய்வத்தின் பூசகர் வந்து சந்தித்தைப்பற்றி ஒரு வேடிக்கையான கதை உண்டு. பீலேயின் பூசகர் ஒரு வகையில் பீலேயின் சிறு அவதராமாகவே இருப்பவர். ஆகவே அந்த மதப்பிரச்சாரகர் உண்மையில் ஒரு பெண்தெய்வத்திடம் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் மதப்பிரச்சாரகர் சொன்னார் “நான் கடவுளின் செய்தியை உங்களுக்காக கொண்டுவந்திருக்கிறேன்”. உடனே பூசகர் “ஓ, அது உங்களது கடவுள். என்னுடைய கடவுள் பீலே என்றார்”.
மோயர்ஸ்: “எனக்கு முன்பாக அங்கே எந்த கடவுளும் இல்லை” என்னும் கருத்து முழுவதுமாக ஒரு ஹீப்ரு கருத்தா?
கேம்ப்பெல்: அதை நான் வேறெங்கும் கண்டதில்லை.
மோயர்ஸ்: ஏன் ஒரே ஒரு கடவுள்?
கேம்ப்பெல்: இதைத்தான் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. பாலைவனத்தில் வசிக்கும் மக்களின் உள்ளூர் சமூகத்தெய்வத்தின் முறைமையை நான் புரிந்துகொள்கிறேன். உங்களைப் பாதுகாக்கும் சமூகத்திற்கு நீங்கள் முழு அர்ப்பணிப்பையும் தருகிறீர்கள். சமூகம் எப்போதுமே தந்தைவழி சார்ந்தது. ஆனால் இயற்கை எப்போதுமே அன்னைவழி செல்வது.
மோயர்ஸ்: வீட்டுவாழ்க்கைக்கு மாறிய மனிதஇனத்தின் ஆதிகால சமூகங்களில் பெண்கள் விதைப்பதிலும் அறுவடை செய்வதிலும் ஒரு பிரதான பங்கை வகித்ததால்தான் அன்னையை தெய்வமாகக் கொண்ட மதங்கள் உருவாகின என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
கேம்ப்பெல்: அதில் எந்த ஐயமும் இல்லை. அப்போதுதான் பெண்கள் தங்களுடைய அசாத்தியமான ஆற்றலால் சமூகத்தின் அதிமுக்கிய உறுப்பினர்களாக ஆகிறார்கள்.
மோயர்ஸ்: ஆண்தான் வேட்டையாடுபவனாக இருந்தான்…
கேம்ப்பெல்: ஆம். இப்போது அது பெண்ணிடம் வந்து சேர்கிறது. பிறப்பளிப்பதும் உணவூட்டி வளர்ப்பதுமான அவளின் மாயசக்தி பூமியின் சக்திக்கு ஒப்பானதாக இருப்பதால் அவளுடைய சக்தி பூமியின் சக்தியை ஆதரிக்கிறது. ஆரம்பகால தலைமுறைகளில் பெண்தான் முதன் முதலில் நடவு செய்தவள். பிறகுதான், உயர்சமூகங்களில் கலப்பை கண்டுபிடிக்கப்பட்டு ஆண் வேளாண்மையை மீண்டும் முன்னெடுத்துச் செல்கிறான். அதன்பிறகு கலப்பையால் நிலத்தை உழுவது என்பது புணர்தலின் உருவகமாகி ஒரு பிரதான தொன்மக்குறியீடாக ஆனது.
மோயர்ஸ்: ஆகவே தொன்மத்தை நோக்கிய இந்த வேறுபடும் அணுகுமுறைகளைத்தான் நீங்கள் “விலங்காற்றலின் வழியில்” (way of the animal powers), “விதைக்கப்பட்ட பூமியின் வழியில்” (way of the seeded earth), “விண்ணுலக ஒளியின் வழியில்” (way of the celestial lights) மற்றும் “மனிதனின் வழியில்” (way of man) என்று குறிப்பிடுகிறீர்கள்.
கேம்ப்பெல்: இவை குறியீட்டு அமைப்புடன் உறவாட வேண்டும். அதன் வழியாக காலத்தின் சாதாரண மானுட நிலை குறியீடாக்கப்படுகிறது, ஒழுங்குபடுத்தப்படுகிறது, மேலும் தன்னைப்பற்றி அறிவு வழங்கவும்படுகிறது.
மோயர்ஸ்: அப்படியானால் அதன் மதிப்பீடுகள் என்ன ?
கேம்ப்பெல்: வாழ்க்கையை கட்டுப்படுத்தும் சூழலிலிருந்து விளைவதே மதிப்பீடுகள். உதாரணமாக ஒரு வேட்டையாளன் எப்போதுமே விலங்குகளை நோக்கி புறவயமாக வழிநடத்தப்பட்டவனாக இருப்பான். அவனது வாழ்வு விலங்குகளுடனான உறவைப் பொறுத்து அமைகிறது. ஆகவே அவனுடைய தொன்மம் புறவயமானவை. ஆனால் வேளாண்மை சார்ந்த தொன்மங்கள் பயிர் வளர்த்தல், விதைகள் நடவு, விதையின் மரணம் மற்றும் புதுப்பயிர் முளைத்தல் என்று பெரிதும் உள்முகமாகத் திரும்பியுள்ளது. வேட்டையாளர்களுக்கு விலங்குகள் தொன்மத்திற்கான ஊக்கத்தை அளித்தன. அங்கு ஒரு மனிதன் ஆற்றலையும் அறிவையும் வேண்டினால் அவன் காட்டுக்குள் சென்று உண்ணாநோன்பிருந்து பிரார்த்தனை செய்வான். அப்போது ஒரு விலங்கு அவன் முன் தோன்றி வேண்டியதை கற்றுக்கொடுக்கும்.
ஆனால் வேளாண்மைக்காரர்களுக்கு தாவரஉலகம்தான் ஆசிரியர். தாவரங்களின் வாழ்க்கைநிகழ்வுகளும் மனிதனின் வாழ்க்கைநிகழ்வுகளும் ஒரே மாதிரியானது. ஆகவே அங்கொரு உள்முகமான உறவிருப்பதை நீங்கள் காணலாம்.
மோயர்ஸ்: மனிதஇனம் விலங்கு வேட்டையிலிருந்து வேளாண்மைக்கு மாறியபோது தொன்மத்திற்கு என்ன நிகழ்ந்தது?
கேம்ப்பெல்: அங்கொரு உணர்ச்சிகரமான மற்றும் முழுமையான மாற்றம் தொன்மங்களிலிலும் உளவியலிலும் நிகழ்ந்தது என நான் நினைக்கிறேன். ஒரு விலங்கு என்பது முழுமையான வடிவம். தோலால் மூடப்பட்டிருக்கின்றது. நீங்கள் அந்த விலங்கை கொல்கையில் அது இறக்கிறது. அது அவ்விலங்கின் முடிவு. தாவர உலகில் இதைப்போல சுயம் மட்டுமேயான தனியாளுமை என்று எதுவுமில்லை. நீங்கள் ஒரு தாவரத்தை வெட்டினால் அதிலிருந்து இன்னொன்று முளைவிடும். சொல்லப்போனால் கிளைகளை கத்தரித்து விடுவதென்பது தாவரங்களுக்கு உதவிகரமானதும்கூட. இவையனைத்தும் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் ஒரு எளிய தன்னிருப்பு மட்டுமே.
வெப்பமண்டலக் காடுகளுடன் தொடர்புடைய இன்னொரு கருத்து, வாழ்க்கை அழுகலிலிருந்து வருகிறது என்பது. நான் வெகு அருமையான செம்மரக்காடுகளை பார்த்திருக்கிறேன். பல்லாண்டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட ஏராளமான மரங்கள் மிகப்பெரிய அடிமரங்களாக அங்கிருக்கும். அம்மரங்களிலிருந்து சிறுபிள்ளைகள் போல புதிய ஒளியுடன் செடிகள் கிளைத்துக்கொண்டிருக்கும். ஒரு செடியின் ஒரு உறுப்பை நீங்கள் வெட்டினால் அதிலிருந்து இன்னொன்று முளைக்கும். ஒரு விலங்கின் உறுப்பை வெட்டினால் அவ்விலங்கு ஒரு குறிப்பிட்ட வகை பல்லியாக இல்லாத பட்சத்தில் அந்த உறுப்பு மீண்டும் வளராது.
ஆகவே காடு மற்றும் தாவரங்கள் சார்ந்த சமூகத்தில் மரணத்தின் பொருள் எவ்வண்ணமோ மரணமாக பொருள்படுவதில்லை. அந்த மரணம் ஒரு புது வாழ்க்கைக்கு தேவையானதாகிறது. மேலும் ஒரு தனிமனிதன் தனியானவனில்லை. அவன் ஒரு தாவரத்தின் கிளை. இப்படிமத்தைத்தான் இயேசு தனது போதனைகளில் “நான் திராட்சைக் கொடி. நீங்கள் அதன் கிளைகள்” என்று கூறுகிறார். இந்த திராட்சைக்கொடி படிமம் தனியாக இருக்கும் விலங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று. ஒரு வேளாண்மை சமூகத்தில் உணவாகப்போகும் தாவரத்தை போற்றி வளர்க்கும் மனப்பான்மை உண்டு.
மோயர்ஸ்: விவசாயிகளின் அனுபவங்களால் என்ன வகையான கதைகள் உருவாக்கப்பட்டன?
கேம்ப்பெல்: நீங்கள் உண்ணும் உணவு துண்டாக்கப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பலித்தெய்வத்தின் அல்லது ஒரு மூதாதையின் உடல் என்னும் தாவர வாழ்க்கையின் கருத்துரு எல்லா இடங்களிலும் இருந்தாலும் அது பசிபிக் நாகரிகத்தில் குறிப்பிடப்படும்படி உள்ளது.
இந்த தாவர கதைகள் உண்மையில் ஒரு வேட்டை நிலம் என்று நாம் பொதுவாக எண்ணும் அமெரிக்காவினுள்கூட நுழைகின்றன. வேட்டை நாகரிகத்திற்கும் வேளாண்மை நாகரிகத்திற்கும் இடையே நடந்த உரையாடலுக்கு ஒரு வலுவான உதாரணம் வட அமெரிக்க நாகரிகம். அதன் பூர்வகுடிகள் முதன்மையாக வேட்டையாளர்கள், ஆனால் சோளக்கதிர்களையும் வளர்த்துக்கொண்டிருந்தார்கள். சோளத்தின் தோற்றம் பற்றிய வட அமெரிக்க பூர்வகுடிகளின் கதையில் தரிசனம் ஒன்றை அடைந்த ஒரு சிறுவனைப் பற்றி வருகிறது. அவனுடைய தரிசனத்தின்படி தலையில் பச்சை நிற இறகுகள் சூடிய ஒரு இளைஞன் இவனை மற்போருக்கு அழைக்கிறான். மற்போரில் சிறுவன் இளைஞனை வெல்கிறான். இளைஞன் மீண்டும் வந்து போரிடுகிறான். சிறுவன் மீண்டும் வெல்கிறான். இது இப்படியே தொடர்கிறது. ஒரு நாள் இளைஞன் சிறுவனிடம் அடுத்தமுறை நிகழவிருக்கும் போரில் நீ என்னை கொன்றுவிடவேண்டுமென்று கூறுகிறான். மேலும் நான் புதைக்கப்பட்ட இடத்தை நீ பராமரித்து வரவேண்டும் எனவும் கூறுகிறான். சிறுவன் அவனுக்கு சொல்லப்பட்டதைப்போல அந்த அழகிய இளைஞனை கொன்று மண்ணில் புதைக்கிறான். சிறிது காலத்திற்கு பிறகு சிறுவன் திரும்பிவருகையில் இளைஞனின் புதைவிடத்தில் மக்காச்சோளம் முளைத்திருப்பதை காண்கிறான்.
அப்போது சிறுவனுக்கு வேட்டைக்காரனாக இருந்த அவனது வயது முதிர்ந்த தந்தையைக் குறித்து எண்ணமெழுகிறது. வேட்டையைத் தவிர்த்து உணவீட்ட வேறு ஏதாவது வழி இருக்கலாமோ என்று சிறுவன் சிந்திக்கலானான். அவனுடைய அந்த யோசனையிலிருந்து ஒரு தரிசனம் அவனை வந்தடைகிறது. இக்கதையின் இறுதியில் சிறுவன் தன் தந்தையைப் பார்த்து, “நாம் இனிமேல் வேட்டைக்கு செல்லவேண்டியதில்லை” என்கிறான். அது ஒரு மகத்தான விழிப்புணர்வுத் தருணமாக அந்த மக்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
![]() |
| Tree of Jessye, Genealogy of Christ, Chartres Cathedral, thirteenth century. |
மோயர்ஸ்: ஆனால் இத்தரிசனத்தில் வரும் இறகு சூடிய இளைஞன் தன் உடலிலிருந்து செடிகள் வளர்வதற்கு மரணித்து மண்ணுக்குள் புதைபடவேண்டியிருந்தது. அப்படியானால் இக்கதை தாவரநாகரிகத்தில் ஒரு தொன்மத்திலிருந்து இன்னொரு தொன்மத்திற்கு தொடர்கிறதா ?
கேம்ப்பெல்: ஆம். அப்படித்தான். உதாரணமாக இக்கதையின் இன்னொரு வடிவம் பாலினேசியன் நாடுகளில் வலம்வருகிறது. ஒரு இளம்பெண் ஒரு குறிப்பிட்ட குளத்தில் குளிக்க விரும்புபவளாக இருக்கிறாள். ஒரு பெரிய விலாங்கு மீன் அக்குளத்தில் வசித்து வந்தது. ஒவ்வொரு நாளும் இளம்பெண் குளிக்கையில் அவள் தொடைகளை உரசிக்கொண்டு விலாங்கு மீன் நீந்தும். ஒரு நாள் அந்த விலாங்கு மீன் ஒரு இளைஞனாக உருவெடுத்து அவள் காதலனாக மாறியது. அதன் பின் ஒவ்வொருமுறையும் அந்த இளைஞன் அவளை நெருங்கி பின் அகன்று செல்வான். இப்படியே இது தொடர்ந்தது. ஒருநாள் அந்த இறகு சூடிய இளைஞன் சொன்னதைப்போல இவனும் இளம்பெண்ணிடம் “நான் மறுமுறை உன்னை சந்திக்கையில் நீ என்னை கொல்ல வேண்டும். என் தலையை வெட்டி எடுத்து அதை புதைத்துவிட வேண்டும்” என்று கூறினான். அவள் அவன் கூறியதைப்போலவே செய்கிறாள். பின் தலை புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு தென்னைமரம் முளைக்கிறது. அதிலொரு தேங்காயை பறித்துப்பார்த்தால் அது ஒரு தலையின் அளவிற்கு பெரிதாக இருந்தது. மேலும் அதில் தலையில் இருப்பதைப்போலவே கண்களையும் சிறிய சுழிகளையும் காண முடிந்தது. பெரும்பாலான அமெரிக்க மானுடவியல் ஆய்வாளர்கள் சொல்வதை நாம் நம்புகிறோமென்றால், பசிபிக் நாகரிகத்திற்கும் தாவரத்தொன்மம் தோன்றிய மத்திய அமெரிக்க நாகரிகத்திற்கும் எவ்வித இணைப்புமில்லை என்றே சொல்லவேண்டும்.
மோயர்ஸ்: அப்படியானால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நாகரிகங்களிலும் கூட ஒரே கதை துளிர்த்துக்கொண்டிருக்கிறது. இது எதைக் குறிக்கிறது?
கேம்ப்பெல்: இந்த தொன்மங்களை பற்றிய அட்டகாசமான விஷயங்களில் ஒன்று இது. நான் இந்த உள்ளடக்கங்களை பற்றி என் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் இந்த கதைகளில் இருக்கும் ஒற்றுமையின் துல்லியத்தன்மை கண்டு நான் உறைந்துபோகிறேன். ஏறத்தாழ இது ஒரே விஷயம், ஒரே கதை வேறோர் ஊடகத்தில் பிரதிபலிப்பது போல இருக்கிறது. மக்காச்சோளத்திற்கு பதிலாக தேங்காய் அவ்வளவுதான்.
மோயர்ஸ்: தாவர தொன்மங்களிலிருந்து வந்த இக்கதைகளில் என்னை உறையவைத்த விஷயம் என்னவென்றால் பூமியின் கருவிலிருந்துதான் மக்கள் முதன் முறையாக உதிக்கிறார்கள் என்று குறிப்பிடப்படுவது. இதை கவனிக்கையில் கருப்பை பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
கேம்ப்பெல்: இது குறிப்பாக அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளின் கதைகளில் தெளிவாக இடம்பெறுகிறது. அதன்படி ஆதிமனிதர்கள் பூமியின் உள்ளிருந்து வெளிவந்தார்கள். அதாவது அவர்கள் ‘தோற்றத்தின் துளை’ யிலிருந்து வெளிவந்தார்கள். பின்னர் அது புனித இடமாகி, உலகின் அச்சு மையமானது. அது ஒரு குறிப்பிட்ட மலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
கதை என்னவென்றால் பூமியின் ஆழத்தினுள் மனிதர்கள் இருந்தார்கள். இன்னமும் மனிதர்களாகாத மனிதர்கள். மனிதர்கள் என்றே தங்களை அறிந்திராத மனிதர்கள். அவர்களில் ஒருவர் ஒரு தடையை மீறுகிறார். அது தடை என்று எவரும் அறிந்திருக்கவில்லை. அதனால் பெரும் வெள்ளம் உள்ளே வரத்துவங்குகிறது. அதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு அவர்கள் ஒரு கயிற்றின் உதவியுடன் பூமியின் மேற்பரப்பில் உள்ள துளை வழியாக வெளியே வருகிறார்கள். இப்போது அவர்கள் வேறோர் உலகிற்கு வந்துவிட்டார்கள். இன்னொரு கதையில், பூசகர்கள் தங்களுடைய சிந்தனையின் மீது வெறிகொண்டவர்களாக மாறி சூரியனையும் சந்திரனையும் அவமதிக்கின்றனர். அதனால் சூரியனும் சந்திரனும் மறைந்து போகிறது. அனைவரும் இருளில் மூழ்குகிறார்கள்.
சூரியனை திரும்ப கொண்டுவர தங்களால் முடியும் என்று பூசகர்கள் அறிவிக்கின்றனர். அதற்காக அவர்கள் பல மந்திர தந்திரங்களை செய்கிறார்கள். மரங்களை விழுங்கி தங்கள் வயிற்றிலிருந்து அவற்றை வெளியே எடுகிறார்கள். விழிகள் மட்டும் வெளியே இருக்குமாறு தங்களை தாங்களே புதைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த வித்தைகள் எதுவும் பலிக்கவில்லை. சூரியன் திரும்பவேயில்லை.
பிறகு அங்கிருந்த மதகுருக்கள் சொன்னார்கள், “நன்று. இனி மக்கள் முயற்சிக்கலாம்” என்று. இங்கே மக்கள் என்பது அனைத்து வகையான விலங்குகளாலான ஒரு கூட்டம். இந்த விலங்குமக்கள் ஒரு வட்டமாக நின்று நடனமாடுகிறார்கள். தொடர்ந்து அவர்கள் நடனமாடிக்கொண்டே இருக்கையில் அவர்களின் முன்னால் ஒரு குன்று உருவானது. பின் அந்த குன்று மலையாக வளர்ந்து உலகின் மையமாக ஆனது. அதிலிருந்து அனைத்து மனிதர்களும் வெளிவந்தனர்.
இக்கதையில் இதன் பிறகு வருவதுதான் ஆர்வமூட்டுவது. அது பழைய ஏற்பாட்டில் இருப்பதை ஒத்தது. இதுவரை நாம் கேட்டது ஒரு குறிப்பிட்ட குழுவின் கதை. அதை நவஹோ என்போம். நவஹோக்கள் மலையிலிருந்து வெளிவந்தபோது அங்கு ஏற்கனவே இருந்தவர்கள் பியூப்லோ மக்கள் எனப்பட்டனர். ஆதாமின் மைந்தர்கள் தங்கள் மனைவிகளை எங்கிருந்து பெறுவார்கள் என்ற சிக்கலைப் போன்றது இது. இங்கே இந்த மக்கள் இப்படி உருவானார்கள். உலகின் பிறபகுதிகளின் மக்கள் இன்னொரு விபத்தினால் எப்படியோ தோன்றியிருந்தார்கள்.
மோயர்ஸ்: இதுதான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனும் கருதுகோள்.
கேம்ப்பெல்: நிச்சயமாக அதேதான். ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்குள் தன்னை தேர்ந்தெடுக்கப்பட்டவனாக கருதுகிறான். ஆனால் மனிதகுலம் என்ற பெயரால்தான் அவர்கள் பொதுவாக குறிப்பிடுகிறார்கள் என்பதுதான் வேடிக்கையானது. அதேசமயம் பிற மக்களுக்கு அவர்கள் விசித்திரமாக பெயரிட்டார்கள் - கோமாளி முகத்தவர்கள், கோணல் மூக்குகாரர்கள் என்பது போல.
மோயர்ஸ்: விண்ணில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தாள் என்று அமெரிக்காவின் வடகிழக்கு கானக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் தென்மேற்கு மக்களோ ஒரு கன்னித்தாய் இரட்டைக் குழந்தைகளை பெற்றாள் என்றொரு கதை சொல்கிறார்கள்.
கேம்ப்பெல்: ஆம். வானிலிருந்து பெண் வந்த கதை வேட்டை கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. பூமியிலிருந்து பெண் வந்த கதை விவசாயக் கலாச்சாரத்தை முன்வைத்தது. இந்த இரண்டும் இரண்டு முரண்பாடான கோட்பாடுகளை குறிப்பிடுகிறது. ஆனால் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காயீன் (Cain) மற்றும் ஆபெல் (Abel) இருவரின் கோட்பாடுகள் இதைவிட பெருமளவில் முரண்பட்டது. இரோக்குயிஸ் (Iroquois) கதையில் இரட்டையர்களைப் பற்றி வருகிறது. ஒருவன் ஸ்ப்ரவுட் (Sprout) அல்லது தாவரசிறுவன் என்றழைப்படுகிறான். இன்னொருவன் ஃப்ளிண்ட் (Flint) எனப் பெயர் கொண்டிருக்கிறான். ஃப்ளிண்ட்டின் பிரசவத்தின்போது இவர்களின் அன்னை உடல் சிதைவடைந்து இறந்துபோகிறாள். இக்கதையில் ஃப்ளிண்ட் மற்றும் ஸ்ப்ரவுட் இருவரும் இரண்டு மரபுகளை குறிக்கிறார்கள். ஃப்ளிண்ட் என்பது விலங்குகளைக் கொல்லப்பயன்படுத்தும் கூரான கத்தி என்று பொருள்படுவதால் ஃப்ளிண்ட் வேட்டை கலாச்சாரத்தையும், தாவரப்பையன் வேளாண்மை கோட்பாட்டினையும் குறிக்கிறார்கள்.
விவிலிய மரபில் தாவரச்சிறுவனாக இருப்பவன் காயீன், ஃப்ளிண்ட் ஆக இருப்பவன் ஆபேல். ஆனால் ஆபேல் இங்கு வேட்டையாளன் அல்லாமல் மந்தைகளை மேய்ப்பவனாக உள்ளான். ஆகவே விவிலியத்தில் மேய்ப்பன்தான் வேளாண்மைக்காரனுக்கு எதிரானவன், மேலும் அதில் வேளாண்மைக்காரன்தான் வெறுக்கப்படுபவன். இது வேட்டை அல்லது மேய்ச்சல் நில மக்களின் தொன்மம். அவர்கள்தான் வேளாண் கலாச்சார உலகிற்குள் நுழைந்து அவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட மக்களை சிறுமைப்படுத்துகிறார்கள்.
மோயர்ஸ்: இது சென்றகால அமெரிக்காவின் மேற்கு பகுதியில் நடந்த பெரும்போரைப் போல் உள்ளது.
கேம்ப்பெல்: ஆம். விவிலிய மரபைப் பொறுத்தவரையில் இரண்டாவது மைந்தன்தான் எப்போதுமே வெற்றியாளன், நற்குணம் உடையவன். மேலும் இரண்டாவது மைந்தன் புதிதாக வந்தவன் - ஹீப்ரு எனப்படுபவன். மூத்தமைந்தன் அல்லது கெனானைட்டீஸ் (Canaanites) முன்பு அங்கு வாழ்ந்துகொண்டிருந்தான். காயீன்தான் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நகரத்தை முன்னிறுத்துகிறான்.
-தொடரும்
மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி
--------------------------------------------------------------
![]() |
| மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல் |
![]() |
| பூபதி துரைசாமி |
பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.






