November 06, 2026

கர்நாடகத்தில் காளாமுகம் - லால்குடி தினேஷ்

Text:

 

இந்திய கோவில்கள் குறித்து ஆரம்ப காலத்தில் மேற்கத்திய ஆய்வாளர்கள் அதிகம் எழுதியுள்ளனர். அவை பெரும்பாலும் கோவில்களின் புறவய கட்டுமான அம்சத்தை மட்டும் கணக்கில் கொண்டு அதை பிற கோவில்களுடன் ஒப்பிட்டு வகைப்படுத்தும்படி எழுதப்பட்டிருக்கும். துவக்க காலத்தில் அப்படி எழுதப்பட்டிருப்பது குறையுமல்ல. அப்படி கருதுவோமேயானால் இந்த குறைபாடு நீங்கியது இந்திய ஆய்வாளர்கள் முறையான ஆய்வுப் பின்புலத்துடன் இத்துறையில் ஈடுபடத் துவங்கிய பிறகுதான். ஆய்வாளரான வசுந்தரா பியோசெ இந்த வரிசையில் முக்கியமானவர். பியோசெவின் முக்கிய அம்சமாக விளங்குவது அவர் ஒரு கோவிலை அதன் கட்டிடக்கலையோடு சேர்ந்து அதற்கு ஆதாரமாக அமைந்த ஆகம வழிபாட்டு முறை, புராண மற்றும் இலக்கிய பின்னணி, அக்காலகட்டத்தின் சமூகம் மற்றும் அரசியல் சூழல் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆய்வை மேற்கொள்வதுதான். இதற்கு சிறந்த உதாரணம் அவர் எழுதி 2012-ல் ஆங்கிலத்தில் வெளிவந்த Kālāmukha Temples of Karnataka (Indira Gandhi National Centre for the Arts, Delhi) என்ற புத்தகம். 

வசுந்தரா கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள பேடிகே (Byadagi) என்ற கிராமத்தில் 1940-இல் பிறந்தார். அவரது தந்தை பண்டிட் கவாலி (Pandith Che.A Kavali) சமஸ்கிருத மற்றும் கன்னட மொழி பண்டிதர். வசுந்தரா மேல் படிப்பிற்காக பிரான்ஸ் சென்றிருந்த போது அங்கிருந்த இந்தியவியல் அறிஞரும் புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தின் நிறுவனருமான சோன் பியோசெவிடம் (Jean Filliozat) ஆய்வு மாணவியாக சேர்ந்தார். அப்பொழுது சோன் பியோசெவின் மகனான பியர் சில்வான் பியோசெவை (Pierre Sylvain Filliozat) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது கணவரும் இந்தியவியலாளர், சமஸ்கிருத அறிஞர், கலை வரலாற்று ஆய்வாளர் ஆவார்.

இப்புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது இதில் அவர் ஹவேரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளார். முதல் பகுதியில் கர்நாடகத்தில் காளாமுகம் மற்றும் பாசுபதம் எவ்வாறு பரவியது என்றும் அவை பின்னாளில் உருவான வீர சைவத்தில் செலுத்திய தாக்கம் குறித்தும் கூறுகிறார். நூலின் அடுத்த பகுதியில் இக்கோவில்களுக்கு அடிப்படையாக அமைந்த ஆகம தத்துவம் மற்றும் இக்கோவிலை கட்டிய கல்யாண சாளுக்கியரின் சிற்றரசர்களான கடம்பர் மற்றும் குட்டவோல் மன்னர்கள், அவர்களுக்கிடையே நிலவிய திருமண உறவுகள், இந்த இரண்டு சிற்றரசர்களுக்கும் குருவாக விளங்கிய பாசுபத குருபரம்பரை ஆகியவை விவரிக்கப்படுகின்றன. ஹரலஹள்ளியில் உள்ள சோமேஸ்வரா ஆலயம் (Someshwara Temple, Haralahalli, Haveri District) மற்றும் ரத்திஹள்ளியில் உள்ள கடம்பேஸ்வரா ஆலயம் (Kadambeshwar Temple, Rattihalli, Haveri District) ஆகியவற்றின் கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டுகள் குறித்து இந்நூலின் இரண்டாம் பகுதியில் விரிவாக கூறப்படுகிறது. 

கர்நாடக கோவில் கலையில் பதாமி சாளுக்கியர், கல்யாணி சாளுக்கியர், ஹொய்சாளர் மற்றும் விஜயநகரம் என நான்கு பெருமரபுகள் உள்ளன. இதில் கல்யாணி சாளுக்கியர் ஏறத்தாழ நமது சோழர்களின் காலகட்டத்தில் 9, 10 மற்றும் 11 நூற்றாண்டில் ஆட்சி செலுத்தியவர்கள். இவர்கள் ஒரே நேரத்தில் தெற்கில் சோழர்களுடனும் வடமேற்கில் கூர்ஜார மன்னர்களுடனும் போரில் ஈடுபட்டனர். இதனாலேயே அவர்களது கட்டிடக்கலை தென்னிந்திய முறையில் இருந்தாலும் வலுவான வட இந்திய தாக்கம் உடையதாக உள்ளது. இவர்கள் கர்நாடகத்தின் வட பகுதியில் ஏறத்தாழ 200 கோவில்கள் வரை கட்டியுள்ளனர் இதை ஜனகாசாரி கோவில்கள் என்றும் அழைப்பர். இந்த ஜனகாசாரி மரபு குறித்து பல வாய்மொழி கதைகள் உலவுகின்றன, அதில் உண்மையில்லை என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். மேலும் குஜராத்தில் தோன்றிய லகுலீசரால் கர்நாடகாவில் 8ம் நூற்றாண்டை ஒட்டி பாசுபதம் மற்றும் காளாமுகம் பரவியதாக கூறுகிறார். இந்த மரபில் தோன்றிய குரு பரம்பரைகள் சமஸ்கிருத பள்ளிகள் நடத்தியுள்ளனர். சிற்றரசர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர் அதோடு மட்டுமின்றி அவர்களிடையே திருமண உறவை ஏற்படுத்தி உள்நாட்டு போரை தவிர்த்துள்ளனர். இதனாலேயே பேரரசின் ஆதரவு இவர்களுக்கு இருந்ததாக கல்வெட்டு ஆதாரத்தை கொண்டு நிறுவுகிறார். இந்த இரண்டு கோவில்களை கட்ட உந்துதலாக இருந்து வழிகாட்டிய குரு பரம்பரையின் பெயர் கிட்டகாவி சந்ததி என்பதாகும். கிட்டகாவி சந்ததியின் குரு மரபு குறித்து கல்வெட்டுகளில் காணப்படுகிறது ஆனால் அவை தெளிவான தொடர்ச்சியை கொண்டிருக்கவில்லை. 

வசுந்தரா பியோசெ

கிட்டகாவி சந்ததியின் குருவாக முதலில் கல்யாணசக்தி என்னும் அறிஞர் இருந்ததாகவும், அவருக்கு பின் மூறுஜாவிதேவர் பதவிக்கு வந்ததும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களது வழிகாட்டல் வழியாகவே ஒரு கருவறை கொண்ட கோவில்கள் மூன்று கருவறை கொண்டதாக ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டது. இந்த குருமரபினர் லகுலீச மரபை சேர்ந்தவர்கள், இவர்கள் லகுலீச ஆகமத்தை பின்பற்றி இருந்தல் வேண்டும், ஆனால் அவை இப்போது கிடைக்கவில்லை. எனினும் அவை இன்றிருக்கும் வாதுளசுத்தாகமத்தில் கலந்திருக்கக்கூடும் என்பது ஆசிரியர் கூற்று. இந்த மரபினரே பின்னாளில் பசவர் தொடங்கிய வீர சைவ மரபினருக்கு அடித்தளம் என்று கூறுகிறார். இன்றும் கர்நாடகாவில் பெரும் எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்களை இந்த வீர சைவ மடங்களே நடத்துகின்றன. இவர்கள் ஆதரவு பெற்றவர்கள் தான் வட கர்நாடகாவில் அரசியலில் வெல்ல முடியும். எனவே இன்றும் ஆட்சியாளர்களின் ஆதரவு இவர்களுக்கு தொடர்கிறது. 

சைவ ஆகமம் காமிகம் தொடங்கி வாதுளம் வரை 28. இதில் கடைசி ஆகமமான வாதுளத்தின் துணை ஆகமம் வாதுளசுத்தாகமம் இதுவே இக்கோவில்களில் பின்பற்றப்பட்டது என்று கூறுகிறார். பின் அந்த ஆகமத்தை குறித்து விரிவான விளக்கங்கள் இந்நூலில் உள்ளது. இது இந்நூலின் மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் நூலாசிரியர் சதாசிவ வடிவம் மற்றும் நடராஜ வடிவம் குறித்து விரிவாக விளக்குகிறார். உபபுராணத்தில் ஒன்றான விஷ்ணுதர்மோத்ர புராணத்தில் (3.48) சதாசிவ வடிவத்தின் இலக்கணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஐந்து முகம் கொண்ட சதாசிவ வடிவமானது உருவம் மற்றும் அருவம் இரண்டையும் உள்ளடக்கியது. சதாசிவ மூர்த்தத்தின் முகங்கள் பின்வருமாறு விளக்கப்படுகின்றன.

  • தத்புருசம்- மகிமை மற்றும் அமைதியை குறிப்பது, பஞ்சபூதங்களில் காற்று

  • அகோரம்-உக்கிரமானது, அக்னி

  • சத்யோஜாதம்-மகிழ்வின், தியானத்தின் முகம். பூமி

  • வாமதேவம்-பெண்மையின் முகம்-நீர். இந்த முகத்தில் மட்டுமே இரண்டு கண்கள் மற்ற முகங்களுக்கு மூன்று கண்கள். 

  • ஈசானம் அல்லது சதாசிவம்- ஆத்ம சுத்தி மற்றும் விடுதலையின் முகம், ஆகாயம்

சதாசிவ வடிவத்தின் பத்து கரங்கள் பத்து திசையை குறிக்கும், கையில் அக்ஷ மாலை, கமண்டலம், பிங்கலம் எனும் வில் அம்பு, மாட்டுலுங்கா (matulunga-Citrous medica) ஆகியவை உண்டு. மாட்டுலுங்கா ஒருவகை நார்த்தங்காய் போன்ற பெரிய பழம், இமய மலையில் தோன்றியது. இது உலகின் அனைத்து விதைகள் மற்றும் அணுவை குறிக்கும் படிமமாக பைரவரின் ஒரு கையில் இருக்கும், அவர் மறுகையில் கபாலம் இருக்கும். இது பிறப்பு மற்றும் இறப்பை குறிப்பது.

பிற கரங்களில் உள்ள கண்ணாடி தூய அறிவை, தாமரை பற்றறுத்தலை குறிக்கின்றது, சிவனின் பிறை நிலா ஐஸ்வர்யத்தை, கழுத்தில் உள்ள நாகர் தலைவன் வாசுகி ஈசனின் கோபத்தை, திரிசூலத்தின் மூன்று முனைகள் முக்குணங்களை, புலித்தோல் வாழ்வின் மீதான வேட்கையை, ரிஷபத்தின் கால்கள் தர்மத்தை குறிக்கின்றன. பிராகிருதியின் நிறம் வெள்ளை எனவே மகேஸ்வரனின் நிறம் வெள்ளை. ஈசனின் உடலே இப்பிரபஞ்சம்.

பியர் சில்வான் பியோசெ, வசுந்தரா பியோசெ

அடுத்த அத்தியாயத்தில் நடராஜரின் நடன நிலைக்கு சரியான பெயரை கண்டுபிடிக்க நூல் ஆசிரியர் பல ஆகம நூல்களையும், நாட்டிய சாஸ்திரத்தையும் ஆராய்கிறார். அதில் “புஜங்கத்-ரசித்தா காரி” என்பது கர்நாடகாவிலும், “புஜங்கத்-ரசித்தா கரணம்” தமிழகத்திலும் உள்ள நடராஜர் சிற்பங்களுக்கு பொருந்தும் என்று கூறுகிறார். காரி என்பது இயக்கத்தில் இருப்பது, கரணம் என்பது அசையாமல் நிற்பது.

வாதுளசுத்தாகமத்தின் படி மகேஸ்வரனின் ஆயிரத்தின் ஒரு பங்கில் இருந்து விஷ்ணுவும், விஷ்ணுவின் ஆயிரத்தில் ஒரு பங்கில் இருந்து பிரம்மாவும் தோன்றினர். எனவே விஷ்ணு பிரம்மா அனைவரும் சிவனின் வடிவம் என்றாகி விடுகிறது. அதனாலேயே மூன்று தெய்வங்களுக்கும் மூன்று கருவறை கொண்டு ஒரே கோவில் கட்டியுள்ளனர் அதற்கு திரிகுட கோவில் என்ற பெயர். இந்த மூன்று கருவறை மரபு கல்யாணி சாளுக்கியர் தொடங்கி ஹொய்சாளர் காலம் வரை தொடர்ந்தது.

ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட இரண்டு கோவில்களையும் விரிவான புகைப்படம் மற்றும் வரைபடங்களுடன் ஆசிரியர் விளக்குகிறார். இக்கோவில் கல்வெட்டுகள் குரு பரம்பரைகள் குறித்தும் அக்கோவில் குறித்தும் மன்னர்கள் குறித்தும் காவிய நடையில் எழுதப்பட்ட படைப்புகள். ஹரலஹள்ளி கோவிலில் உள்ள கல்வெட்டை எழுதியது உதயகவி கால்ய கவிஸ்வரா என்ற கவிஞர். ஹரலஹள்ளி மற்றும் ரத்திஹள்ளியில் கிடைத்த கல்வெட்டை கொண்டு அக்காலகட்டத்தில் இருந்து இப்போது மறைந்துவிட்ட மற்ற கோவில்களான தசேஸ்வரா, துளுவலேஷ்வரா மற்றும் பத்மலேஷ்வரா கோவில்கள் குறித்து தெரியவருகிறது. இக்கல்வெட்டுகளில் சிற்றரசர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் அவர்கள் செய்த கோவில் கட்டுமானங்கள் குறித்தும் அவர்களுக்கிடையே நிலவிய திருமண உறவும் தெரியவருகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ரத்திஹள்ளி கடம்பேஸ்வரா கோவில் சக்கரை கிடங்காக பயன்படுத்தபட்டு சேதமடைந்த செய்தியையும் ஆசிரியர் கூறுகிறார். இக்கல்வெட்டுகள் தான் ஆசிரியருக்கு இத்தனை தகவல்களை தந்த ஆதாரம். இந்த புத்தகத்தை கையேடாக கொண்டு இக்கோவில்களுக்கு சென்று பார்ப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். கர்நாடக வரலாற்றில் ஒரு காலகட்டத்தின் அரசியல், சமயம் மற்றும் கட்டிடக்கலை வரலாற்றை வாசித்தறிய தகுந்த புத்தகம் இது. 

Dr. Vasundhara Filliozat on Karnataka Samrajya: Art, Temples, Textiles & Heritage

Hidden History of Hampi | With Padma Shri Dr. Pierre-Sylvain Filliozat - YouTube

லால்குடி தினேஷ்
லால்குடி தினேஷ், பொறியாளர். பணிநிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார். வரலாறு, ஆலயக்கலை ஆர்வலர். தொடர்ந்து கர்நாடகத்தின் அரிய ஆலயங்களுக்கு பயணித்து அவற்றை பதிவு செய்து வருகிறார். தமிழ் விக்கியில் பங்களித்துள்ளார். பெங்களூரில் கலை வரலாறு சார்ந்து பாணர் முற்றம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.