மனம்
மனதைக்கொண்டு செயல்படுதல் எளியதல்ல. அதனால்தான் ஆன்மீகப் பாதையில் மனம் எனும் அறையை மிகப் பிந்தியே அறிய முற்படுகிறோம். எப்போதுமே நாம் மனதின் மூலமே செயல்படுகிறோம் என்றாலும் மனம் பருப்பொருளல்ல. உடலைப்போல மூச்சைப் போல தொட்டுணரத் தக்கதல்ல. எனவேதான் அதனுடன் செயலாற்றுதல் கடினமானதாக உள்ளது.
இக்காரணத்தால் ஆன்மீகத் தேடல் கொண்ட பலரும் தங்களது சாதனையை (பயிற்சியை) உடலுடனோ சுவாசத்துடனோ தொடங்குகின்றனர். நம் உடலைத் தொடவும் உணரவும் நம்மால் முடியும். சுவாசத்தை நம்மால் உணரமுடியும். அது தன்னியல்பில் நிகழ்வதென்றாலும் தன்னுணர்வோடு அதை நம்மால் பயிற்றுவிக்கமுடியும்.
யோகப் பயிற்சிகளை ஒரே சமயத்தில் உடல், சுவாசம், மனம் ஆகிய மூன்று தளங்களிலும் செய்வதே உரிய முறை. இம்மூன்று தளங்களுக்கிடையேயான பிணைப்பே யோகத்தின் அடிப்படை. இவற்றின் ஒருமைக்கு வலிமை சேர்ப்பது யோகம். யோக அமர்வுநிலைகள் போன்ற உடல்சார் பயிற்சிகள்கூட உடலளவில் மட்டும் செய்யப்படுமேயானால் அவற்றின் உச்சபட்ச விளைவுகளைத் தருவதில்லை. ஆசனங்களை செய்யும்போதுகூட சுவாசத்தைத் தன்னுணர்வோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உடலிலும் சுவாசத்திலும் என்ன நிகழ்கிறது என்பது குறித்து மனம் அறிந்துகொண்டிருக்க வேண்டும். சுவாசப் பயிற்சிகளின் சிறந்த பலன்களைப் பெறவேண்டுமென்றால் உடலுக்கான ஓய்வும் இருப்புணர்வும் கட்டாயம் தேவை.
சாதனையில் முன்னேற்றம் ஏற்படுகையில் உடலில் இருந்து மனம் நோக்கி செல்வது அதிகரிக்கிறது. ஆசனங்கள் மூலமும் பிற உடற்பயிற்சிகள் மூலமும் உடலின் அறிதல் மேம்படும்போது நம் கவனம் சுவாசம் நோக்கிச் செல்கிறது. காலம் செல்லச் செல்ல சுவாசம் லயம்கொண்டதாக நெகிழ்வானதாக ஆகும்போது அறிதல் மனம் நோக்கிச் செல்கிறது.
மனம் குறித்த இந்திய ஆன்மீகத்தின் கோட்பாட்டை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். மரபார்ந்த இந்தியப் பார்வை, மனம் குறித்த மேற்கத்தியக் கருத்திலிருந்து அடிப்படையில் மாறுபடுவது. நமது பொதுவான அன்றாடப் புரிதலிலிருந்தும் அது வேறுபட்டது.
நாம் எதைக் கொண்டு சிந்திக்கிறோமோ அந்த மனம் என்பது நம்முள் இருக்கிறது என்பதே நம்மில் பலரும் எண்ணுவது. பொருட்கள் திகழும், நாம் செயல்படும் உலகம் நமக்குப் புறத்தே உள்ளது என்றும் எண்ணுகிறோம். அதாவது, மனம் என்பது அகவய மெய்மை, பொருள் நிறைந்த உலகம் என்பது புறவயமானது என்று. நாத்திகர்களும் உலகியல்வாதிகளும் மனதை உடலுக்குள்ளும், பொருள்சார் உலகை உடலுக்கு வெளியேயும், இவற்றிற்கிடையில் உள்ளதாக உடலையும் உணர்கின்றனர். ஆனால், அறிவியல்சார் பொருளியல்வாதத்தின்படி, நமக்குள்ளும் புறமும் உள்ள அனைத்துமே பொருள்தான். மனமென்பது பரிணாம வளர்ச்ச்சிபெற்ற பொருள்வடிவம். ஆத்திக சமயங்கள் என்றுமழியா ஆன்மாவும் முழுமுதற் கடவுளும் உண்டென்று நம்புகின்றன.
நாம் மனதைக் கொண்டே மனதை மேம்படுத்த முயன்றுகொண்டே இருக்கிறோம். மூடிய பாதையில் சென்று முட்டிக்கொண்டே இருக்கிறோம். நம்மில் பலருக்கும் மனம் நாம் சொல்வதற்கு எதிரானதையே செய்கிறது. அதைக் கட்டுப்படுத்த முயலும்தோறும் அது மேலும் தவறாக நடந்துகொள்கிறது. முடிவற்ற மனநிகழ்வுகளின் பெருக்கில் சிக்கிக் கொண்டதாக உணரும் நாம், இணங்காத மனதிடமிருந்து தப்பிச்செல்ல தேர்ந்தெடுத்த நினைவுகளையும், உளப்பதிவுகளையும், கடந்தகால அனுபவங்களையும் சார்ந்து ‘நான்’ எனும் உணர்வை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால் நம்முள் அடக்கிவைக்கப்பட்ட அச்சங்களும் ஏக்கங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடித்து மேலெழும்புகின்றன.
மனமென்பதற்கு சமஸ்கிருதத்தில் இணையான சொல் ‘சித்த(ம்)’ என்பது. பல இந்திய மொழிகளிலும் ‘மன(ம்)’ என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் சித்தமும் மனமும் சில நேரங்களில் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சித்தம் என்பது பதஞ்சலியின் யோக முறைப்படி மனதைவிட மேலும் விரிவான பொருள் கொண்டது. அவர் தனது சாங்கிய யோக முறையில் சித்தம் என்பதை எளிதாக விளக்குகிறார். அவரது கருத்துப்படி அது பின்வரும் பகுதிகளால் ஆன ஒரு இயல்நிகழ்வு:
* புற உலகின் உணர்வுகள் பெறப்படும் வாயிலான மனம்
* நம்மைச் சூழ்ந்துள்ள உலகில் உள்ள பொருள்களுக்கு அடையாளம் தரும் புலமான புத்தி
* நமது மொத்த மனச்செயல்பாடும் குவியும் புள்ளியான ‘நான்’ அல்லது தன்முனைப்பு எனப்படும் அகங்காரம்
இக்கூறுகளுடன் சேர்த்து சித்தம் ‘அந்தகரணம்’ - உட்புலனுறுப்பு - எனப்படுகிறது. யோகம் என்பது சித்த அலைவுகளின் நிறுத்தமே என்று வரையறுக்கிறார் பதஞ்சலி; சித்தத்தை அடங்கச் செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
சித்தமும் புற உலகும் மட்டுமே இருக்குமென்றால் எந்த அனுபவமும் நிகழாது. ஏனெனில் இரண்டுமே புலனறிவற்றவை. நம்முள் இருக்கும் புருஷன் - தன்னுணர்வுடன்கூடிய அறிவுத்திறம் - அக உலகையும் புற உலகையும் ஒளிரச் செய்வதனாலேயே அவற்றை நம்மால் புரிந்துகொள்ளவும் உணரவும் முடிகிறது. பிரகிருதியுடன் சேர்ந்து பொருள்சார் அண்டத்தை உண்டாக்கும் புருஷன் என்பது உயிர்ப்பூட்டும் கோட்பாடு. உள்ளுறையும் இருப்புணர்வும் அதுவே. அதன் மூலமே நாம் பிரகிருதியின் செயல்பாடுகளை, உருமாறும் கோட்பாட்டைப் புரிந்துகொள்கிறோம். மாறிக்கொண்டேயிருக்கும் உலகின் அசைவற்ற மையமே புருஷன். அது தன்னளவில் செயலற்றது. ஆனால அதனால்தான் அனைத்தும் இயங்குகின்றன.
ஶ்வேதாஶ்வதர உபநிடதத்தில்
ஶ்ருண்வந்து விஶ்வே அம்ருதஸ்ய புத்ரா
ஆ யே தாமானி திவ்யானி தஸ்து
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்
(அழிவற்றதன் குழந்தைகளே,
நான் சொல்வதைக் கேளுங்கள்
புனிதமான ஒன்றை நான் கண்டேன்
இருளுக்கு அப்பால் உள்ள
அகஞாயிறான பெருமைவாய்ந்த புருஷனை
நான் கண்டேன்
புருஷனை நான் உணர்ந்தேன்)
என்று கூறப்பட்டுள்ளது.
நம்முள் புருஷன் இருப்பதனால்தான் அக-புற நிகழ்வுகளையும் இயக்கங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முள் நிரந்தரமாக இருக்கும் அதற்கு வேதாந்தத்திலும் தாந்த்ரீக மெய்யியலிலும் ‘ஆத்மன்’ என்று பெயர். சமணத்தில் அது ‘ஜீவ(ன்)’ எனப்படுகிறது.
ஆன்மீகப் பயிற்சி, இடையறாது பெருகும் புலன்களின் கண்ணியிலிருந்தும் சித்தத்தின் கவர்ச்சிகளிலிருந்தும் நம்மை திசைதிருப்பும் என்று வேதாந்தமும் பதஞ்சலியின் யோகமும் கூறுகின்றன. புருஷனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இது நிகழ்கிறது. ஆன்மாவின் மாற்றமில்லாத மையமே புருஷன். பாசுபதம் போன்ற தாந்த்ரீகத்தின் துவைதப் பள்ளிகளும் தமிழ் சைவமும், பதஞ்சலியைப் போல சாதனைக்கான அதே அணுகுமுறையை கைக்கொள்கின்றன.
காஷ்மீர சைவம் அல்லது ஸ்ரீவித்யா போன்ற அத்வைத தாந்த்ரீகங்களின் அணுகுமுறை வேறு. அவை உள்ளுறையும் முழுமுதல் மூலம் புருஷனையும் கடந்தது என்று கருதுகின்றன. அவற்றைப் பொறுத்தவரை நமது மீஆழ் கூறான பரமசிவம் நிலைபேறுடையது. அவற்றின் சாதனை முறை நம்மை இருக்கும் எல்லாமாக விரிவடையச் செய்வது. ஏனெனில் கலக்கங்கள் உட்பட அனைத்துமே பரமசிவத்தின் - முழுமுதல் மெய்மையின் - வெளிப்பாடே. ஒரு மானுடன் மூலத்திலிருந்து துண்டாடப்படும்போது அவனுள் கலக்கங்கள் தோன்றுகின்றன. அவன் அகத்தை மூலத்துடன் மீட்டிணைக்கக் கற்றுக்கொள்ளும்போது அனைத்தும் ஒன்றே என்றும் தன்னையோ பிறரையோ நோகச் செய்வது இயலாது என்றும் கற்கிறான்.
மனதைக் குறித்த பௌத்தத்தின் பார்வை முற்றிலும் வேறானது. ‘அநித்யா’வை - நிலையாமையை - தனது கோட்பாடாகக் கொண்ட பௌத்தம் அனைத்தும் நிலையாதவை என்று கருதுவதால் பரமசிவம், புருஷன், ஆத்மன் போன்ற சாசுவத இயல்நிகழ்வுகள் அனைத்தையும் நிராகரிக்கிறது. பௌத்தத்தில் நிலையாமையே அடிப்படை மெய்மை. அங்கு சாதனையின் நோக்கம் தன்முனைப்பை கரைத்தல் மட்டுமல்ல, ஆத்மனுடனான பிணைப்பை அறுத்தலும். அறிதலை ஒருசீராக்கி கூர்மையடையச் செய்யும் உடல் மட்டுமே சுவாசப் பயிற்சிகள் மூலம் இதை எய்த முடியும்.
மனதைக் கையாள்வதற்கென யோகிகள் கண்டடைந்த பல்வேறு வழிகளைக் காண்பதற்கு முன்னால் அம்ருதபிந்து உபநிடதத்தின் முக்கியமான ஒரு பாடலை நாம் எண்ணத்தில் நிறுத்த வேண்டும்:
மன ஏவ மனுஷ்யானாம் கரணம் பந்த மோக்ஷயோ:
பந்தய பிஷ்யசக்தம் முக்தம் யே நிர்விஷயம் ஸ்ம்ருதம்
(பிணைப்புக்கும் விடுதலைக்கும் மனமே காரணம்
புலன்களிலும் பொருட்களிலும் பற்று கொண்ட மனம்
பிணைப்புக்கு இட்டுச் செல்கிறது
புலன்களையும் பொருட்களையும் ஒறுக்கும் மனம்
விடுதலைக்கு இட்டுச் செல்கிறது)
ஆகவே, பிணைப்புக்கும் விடுதலைக்குமான முதன்மைக் களம் மனமே. பிற வாயில்கள் மூலம் ஆன்மீகத்தை அணுகுவோர்கூட இறுதியில் வந்துநிற்பது மனமெனும் வாயில் முன். உதாரணமாக, சுவாசப் பயிற்சி அல்லது மந்திரப் பயிற்சியின் உச்சத்தில் சுவாச அலைகளும் மந்திரத்தின் ஒலியலைகளும் சாதாரண மனதின் உலைவுகளற்ற மீஆழ் மனதின் அடித்தளத்தில் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. உடற்பயிற்சியிலோ சுவாசப் பயிற்சியிலோ தொடங்குபவர் சாதனையில் முன்னேறும்போது உடல்சார் முறைகள் அகப்பண்பார்ந்தவையாக மாறுவதை காணுவார். பயிற்சியின் உயர்நிலைகளில் ஆசனங்களும் ப்ராணாயாமங்களும் மனதில் நிகழத் தொடங்குகின்றன. யோகி அவற்றை உடல்ரீதியாக செய்ய வேண்டியதில்லை. என்றாலும் விளைவுகள் மனதை மட்டுமல்லாமல் உடலையும் பாதிக்கும்.
மனப்பயிற்சிகளில் தியானம் ஒரு ஆற்றல்வாய்ந்த கருவி. பெரும் குருக்கள் பல்வேறு இயல்புகளுக்குப் பொருத்தமான எண்ணற்ற தியான வகைகளை உருவாக்கி அவற்றை நமக்குக் கையளித்திருக்கின்றனர். மேலும், பல்வேறு அமைப்புமுறைகளில் பலவகையான தியான உத்திகள் உள்ளன. உதாரணத்திற்கு, சுக்கில தாந்த்ரீக தியானக் கையேடான ‘விஞ்ஞான பைரவா’ 112 வகையான தியானங்களைக் கற்பிக்கிறது. அதேபோல், சமணமும் பௌத்தமும் தியானப் பயிற்சிகளின் பெரும் தொகையையே உருவாக்கி உள்ளன.
என்றாலும், பின்பற்றப்படும் பள்ளிகளைச் சார்ந்து, நோக்கம் சார்ந்து தியானத்தை சில அடிப்படை வகைமைகளாகப் பிரிக்கலாம். பதஞ்சலி யோகம், பௌத்தம், சமணம், வேதாந்தம் போன்ற ஆத்திகப் பள்ளிகளைப் பொறுத்தவரை சாதனையின் நோக்கம் என்பது, உலகியல் நிகழ்வுகளிலும் பொருட்களிலும் ஈர்ப்போ அல்லது வெறுப்போ ஏற்படுத்தும் மனதின் சூழ்ச்சிகளிலிருந்து அகத்தை விடுவித்தலே. அத்தகைய தியானத்திற்கு பதஞ்சலி கூறும் ‘பிரத்யாஹாரம்’ ஒரு முன் நிபந்தனை. பிரத்யாஹாரம் என்பதன் நேர்பொருள் ‘உட்கொள்ளாமை’. விரிந்த பொருளில், பிரத்யாஹாரம் என்பது மனம் அல்லது உலகின் உலைவுகளை விலக்குதல்.
அகத்தூண்டலுக்கோ புறத்தூண்டலுக்கோ எதிர்வினையாற்றாமல் இருக்கப் பழகும் முறையே பிரத்யாஹாரம் எனப்படுகிறது. உலகியல் இன்பங்கள் தெவிட்டப்பெற்றவருக்கும் விலக்க மனப்பாங்கு கொண்டோருக்கும் ஏற்ற முறை இது. உலகம் முழுவதிலும் உள்ள பெயர்பெற்ற யோகப் பள்ளிகளில் பெரும்பாலானாவை ஒருவரது இயல்பையோ பொருத்தப்பாடையோ கருதாமல் அனைவருக்கும் ஆத்திக ஆன்மீகத் தீர்வுகளை வழங்குகின்றன. இவை ‘பிரத்தியேக’ப் பள்ளிகள் (exclusivist schools) என்றும் அறியப்படுகின்றன.
பெரும்பாலும், இந்தத் தனிப்பட்ட அணுகுமுறை காலப்போக்கில் நன்மையைவிட தீங்கையே விளைவிக்கிறது. ஒருவர் தனது ஆழ்ந்த இயல்புக்கு எதிரான எதையும் நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொள்வது இயலாதது. நமது ஆளுமைக்கும் மனப்பாங்குக்கும் பொருத்தமான முறை தேவை. பிரத்தியேகப் பள்ளிகள் ‘நேதி’ அணுகுமுறை கொண்டவை, அனைத்தையும் மறுப்பவை. உள்ளடக்கப் பள்ளிகள் (inclusivist schools) ‘இதி’ அணுகுமுறை கொண்டவை, அனைத்தையும் புனிதப்படுத்துபவை.
உள்ளடக்கப் பள்ளிகள் வகுத்துள்ள தாந்த்ரீகம் போன்ற பயிற்சிகள் தமது உலகப் பற்றையும் உலகியல் இன்பங்களையும் செழுமைப்படுத்திக்கொள்ள விழைவோருக்கும் இறையை இவ்வுலகில் உணர விரும்புவோருக்கும் உதவுவன. வில்லியம் ப்ளேக் தனது ’Auguries of Innocence’ என்ற நூலில் இதனை
ஒரு மணற் பருவில் ஓருலகைக் காண
காட்டுப்பூ ஒன்றில் விண்ணுலகைக் காண
என்று எழுதுகிறார். இப்பள்ளிகள் கையாளும் வழிமுறைகள், தேடல் கொண்டோர் தம்மை இவ்வுலகுடன் பிணைக்கும் பாலியல் இன்பம், உணவிலும் மதுவிலும் விருப்பு, கலைகளிலும் அறிவியலிலும் கொண்ட பேரார்வம் போன்ற எதனையும் தமது சாதனைக்கான படிகளாக்கிக் கொள்ள உதவுவன. இவ்விருப்புகள் குறித்து விரிவாக பின்வரும் பகுதிகளில் காணலாம்.
முக்கியமான சில உதாரணங்களை அளிப்பதற்கு முன்பாகவும், உள்ளடக்க அணுகுமுறைக்கும் தனிப்பட்ட அணுகுமுறைக்கும் இடையே உள்ள இந்த முக்கியமான வேறுபாடு ஆன்மீகப் பயிற்சியில் எங்ஙனம் செயல்படுகிறது என்பதைக் காண்பதற்கு முன்பாகவும், இரண்டு அணுகுமுறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குதான் மனதை ஒழுங்குபடுத்துவதன் தேவை ஏற்படுகிறது. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட கவியோகி ஷண்முக சுவாமி இதை:
மனமெனும் குரங்கு
உடலெனும் மரத்தில் ஏறிவிட்டது
புலன்களெனும் கிளைகளில்
தாவித் தாவி
சிற்றின்பத்தின் கனிகளைக் கொய்துகொண்டு
அமைதியற்ற உலகுநோக்கி
சென்றுகொண்டிருக்கிறது
ஓ அகண்டேச்வரா
உன் நினைவெனும் கயிற்றில்
அக்குரங்கைப் பிணைத்து
என்னைக் காப்பாயாக
என்று நயம்படக் கூறுவார். இந்திய ஆன்மீக இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் மனமானது ஒரு குரங்குடன் ஒப்பிடப்படுகிறது. கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போலவே மனமும் எண்ணத்திலிருந்து எண்ணத்திற்கு, உருவத்திலிருந்து உருவத்திற்கு தாவிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு அமைதியற்றிருத்தல் அடிப்படையில் மனதின் படைப்பாற்றலின் ஒரு வெளிப்பாடுதான். இருப்பினும், இந்தத் தாவல்கள் ஆற்றலை சிதறடித்துவிடுவதால் பலன்கள் ஏதும் விளைவதில்லை. அந்தத் துடிப்புமிக்க ஆற்றல் மானுடச் செயல்வெற்றிக்குப் பயன்படும் வகையில் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
பிரபலமான குரங்குக் கடவுளான அனுமன், யோகம் மூலமாகவும் பக்தி மூலமாகவும் தன்னை ஒழுங்குபடுத்திக்கொண்டால் குரங்குமனம் யோகியாக, ஆற்றல்மிக்க கடவுளாக மாறக்கூடும் என்பதற்கான குறியீடு. பெரும் அறிவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் மனதை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தி தங்களது செயல்பாட்டில் அதைக் குவிக்கின்றனரோ அந்த அளவுக்கு வெற்றிபெறுகின்றனர். அவ்வாறிருந்தாலும், மனதின் ஒட்டுமொத்த இயல்பையும் அவர்களால் மாற்றிவிட இயலாது. பணி முடிந்ததும் அது மீண்டும் தாவத் தொடங்கிவிடும்.
மனதில் ஏற்படும் கலவரம் உடலிலும் சுவாசத்திலும் பிரதிபலிக்கும். மனதை அமைதிப்படுத்த ஆசனப் பயிற்சிகளும், பிராணாயமும் பெரிதும் உதவுகின்றன. இதனால்தான், எவ்வகையான தியானத்தை நாம் மேற்கொண்டாலும் முதலில் மனதை விரைவழியச் செய்து அமைதிப்படுத்துவது எவ்வாறு என்பதை கற்க வேண்டும். அதன் பிறகுதான் தியானத்தை மேற்கொள்ள மனம் தயாராகிறது.
சுவாசத்தையும் உடலையும் அறியும் உத்திகள் மனதை அமைதிப்படுத்த சிறந்த வழியாக உள்ளன. ஆனால், மனம் என்பது முழுவதுமாக உடலையோ சுவாசத்தையோ சார்ந்ததாக இல்லை. இந்திய ஆன்மீக ஆசான்கள், தியானத்தைத் தொடங்குவதற்கு முன்பாக மனதை அமைதிப்படுத்துவதற்கென மனதை அடிப்படையாகக் கொண்ட உத்திகள் பல அடங்கிய முழுமையான அமைப்புமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். பௌத்தத்தின் கவனப் பயிற்சிகளும் இதற்கு உதவுபவை.
சுவாசத்தையும் உடலையும் அறியும் உத்திகள் பதஞ்சலியின் பிரத்யாஹாரக் கோட்பாட்டுக்கு இணையானவை. அதில் அக-புற அனுபவங்களை, உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை அவற்றில் பங்குபெறாமல், எதிர்வினையாற்றாமல் கவனிக்க வேண்டும். வலிந்து மனதை நிறுத்த முயலாமல், சுவாசத்திற்கும் உடலுக்கும் என்ன நிகழ்கிறது என்பதை நோக்க வேண்டும்.
இத்தகைய பயிற்சிகள் வேறு பெயர்களில் பிற பள்ளிகளிலும் பின்பற்றப்படுகின்றன. சமணத்தில் இத்தகைய பயிற்சிகள் ‘பிரேக்ஷ தியான்’ - நோக்கும் தியானம் - எனப்படுகின்றன. வேதாந்தப் பள்ளிகளில் இது ‘அந்தர்மௌன(ம்)’ - அக அமைதி - என்றழைக்கப்படுகிறது.
தியானத்திற்கான முன்னேற்பாடுகள் மனதை அகவயமாகக் குவிப்பதில் - ‘நிமேஷா’-வில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், மனதை புறவயமாக செலுத்துவதும் - ‘உன்மேஷா’-வும் - அக அமைதியைத் தூண்டுவதில் உதவக்கூடும். இயல்பான மனதின் புறவயச் செயல்பாடும் அகவயச் செயல்பாடும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நமது தன்விருப்பால் அவை நிகழ்வதில்லை. ஆனால், தியானப் பயிற்சி முழுமையடைகையில் மனதை நம் விருப்பப்படி சுருக்கவோ விரிக்கவோ முடியும்.
காஷ்மீர சைவத்திலும், ஒன்றையொன்று முழுமை செய்யும் இவ்வெதிர்ப் போக்குகள் உன்மேஷா நிமேஷா என்றே அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டும் சேர்ந்து, அனைத்து நடைமுறைகளுக்கும் மூலகாரணமான அண்ட அதிர்வுகளை - ‘ஸ்பந்தா’வை - உருவாக்குகின்றன. காஷ்மீர சைவத்தின் முதன்மை நூலான ‘ஸ்பந்தகாரிகா’-வில்
யஸ்யோன்மேஷ நிமேஷாப்யாம் ஜகத: ப்ரளயோதயௌ
தம் சக்திசக்ர ப்ரபவ விபவம் சங்கரம் ஸ்தும:
(ஆற்றல் சுழற்சிகளின் செலுத்துவிசையாக இருப்பவனை
எவனது விழி இமைப்பால் அண்டம் தோன்றி மறைகிறதோ
அந்த சங்கரனை வணங்குகிறோம்)
என்று உரைக்கப்பட்டுள்ளது. பாவனா தியானத்தில் மனதை அமைதியான பார்வையாளராக நிறுத்தி வைக்காமல் ஒரு குறிப்பிட்ட திசையிலோ ஒரு குறிப்பிட்ட கற்பனை அனுபவத்தைச் சூழவோ செல்ல அனுமதிக்கிறோம். பாவனா என்பதற்கு ‘தோய்தல்’ என்பதும் ஒரு பொருள். உணர்ச்சி, கற்பனை ஆகியவற்றையும் அது குறிக்கும். பாவனா பயிற்சி என்பது நேர்மறையான அனுபவம் ஒன்றில் விருப்பார்வத்தோடு தோய்தல். அவ்வனுபவம் கற்பனை செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். நடைமுறை வழக்கில் அதனை நேர்மறை உருக்காட்சி எனலாம்.
புத்தர் மனதை நெறிப்படுத்துவதற்கென பல வகையான பாவனாக்களை கற்பித்தார். அவற்றில் மிக முக்கியமானவை மேத்த பாவனா, சாந்தி பாவனா என்பவை. மேத்த பாவனா என்பது அருள்நிலையை உருவகப்படுத்திக் கொள்ளுதல். சாந்தி பாவனா அமைதிநிலையை உருவகித்துக் கொள்வது. அருள் பாவனாவில் ஒருவர் தான் மீதன்னிறைவும் மீசெழுமையும் கொண்ட நிலையில் இருப்பதாக கற்பனை செய்துகொள்வதன் மூலம் முதலில் தன்னில் கருணையைப் படியச் செய்கிறார். பின்னர், அதே உருவகித்தலை தனது குடும்பத்தினர், நண்பர்கள், அறியாதவர்கள், பகைவர்கள் என மற்றவர்களுக்கும் செய்கிறார். இப்பயிற்சியில், நாம் நம்மையும் பழிப்பதில்லை, பிறரையும் பழிப்பதில்லை. அனைவரையும், மோசமான பகைவரையும்கூட ஏற்றுக்கொள்கிறோம், பொருத்தருள்கிறோம். தியானத்தின் உயர்நிலையில் அனைத்து புலனறிவுடைய உயிர்கள் மீதும் உயிரற்ற பொருட்கள் மீதும்கூட கருணை படிகிறது. எனது அனுபவத்திலும், எனக்கு நெருக்கமானவர்களின் அனுபவத்திலும் இது மிகமிக பயனுள்ள பயிற்சி என்பது மீளமீள உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெய்வ உருக்கள் முதன்மையான இடம்பெறும் இந்திய பக்தி மரபுகள், திபெத்திய பௌத்தம் போன்ற ஆன்மீகப் பள்ளிகளில் நேர்மறையான நிலைகளுக்கு தெய்வ வடிவம் அளிக்கப்படுகிறது. பொருத்தமான கட்புல வடிவங்களிலும், அத்தெய்வங்களுக்கான மந்திரங்களாக ஒலி வடிவங்களிலும் அவை வழிபடப்படுகின்றன, இதயத்திலும் மனதிலும் வைத்து போற்றப்படுகின்றன. இதைப்பற்றி தெய்வங்கள் குறித்த அத்தியாயத்தில் விரிவாகக் கண்டோம்.
மேலே சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ள அறிதல் தியானம் மற்றும் உருவக தியானம் ஆகிய இரண்டு பயிற்சி வகைகளும், ஆன்மீக வாழ்வில், மனதை எதிர்க்க வேண்டிய பகைவனாகப் பாராமல் வென்றெடுக்க வேண்டிய நண்பனாக நடத்த வேண்டும் என்ற கோட்பாட்டையே அடிப்படையாகக் கொண்டவை. இந்த அணுகுமுறை பாசுபதம் மற்றும் பிற சைவ வைணவ துவைதப் பள்ளிகளின் அணுகுமுறைக்கு நேர் எதிரானது. நம்பிக்கை சார்ந்த மதங்களின் அணுகுமுறையிலும் நாம் மனதுடன் முரண்படுகிறோம். இதில் தோல்வி நிச்சயம். ஏனெனில் நம்மில் ஒரு பகுதியுடன் முடிவிலாத ஒரு போரை நாம் துவக்கிவிடுகிறோம்.
போதுமான அளவு மன அமைதியை எய்திவிட்டோமெனில் பொதுவாக முரண்டு செய்யும் மனம் நமது நெருங்கிய நண்பனாகிவிடுகிறது. அதுவே தியானத்தை துவங்க சரியான தருணமாக அமைகிறது.
பதஞ்சலியின் யோக அமைப்புமுறையில், மனதை அசைவிழக்கச் செய்யும் பிரத்யாஹாரத்தைத் தொடர்ந்து தியானத்தின் முன்னேறிய மூன்று நிலைகள் உள்ளன. தாரண(ம்) (ஒருமுகப்படுத்தல்), தியானம், சமாதி (தன்னை மறத்தல்) என்பவை அவை. படிநிலைகளாக இவற்றை விவரித்தல் பயனுள்ள முறை என்றாலும் தியானம் எப்போதும் ஒரு நேர்கோட்டில் மலர்வதல்ல. 1984-இல் ஒரு சத்சங்கத்தில் சுவாமி சத்யானந்தா இவ்வாறு கூறினார்: மனதை விரும்பியபடி அசையவோ அசைவிழக்கவோ செய்யும் ஆற்றல் - பிரத்யாஹார(ம்) - கைகூடியபின் தானாகவே நிகழ்வது தியானம்.
ஆசனங்கள், ப்ராணாயாமம், பிரத்யாஹாரம் என படிப்படியான செய்முறைகள் ஏதுமின்றி குறிப்பிட்ட தெய்வ வடிவிலான இறைவன் மீதோ இறைவி மீதோ கொள்ளும் தீவிரமான காதலே ஒருவரை இறுதிப் படிநிலையான சமாதிக்கு இட்டுச் செல்லக்கூடியது என்பது பக்தி மரபுகளின் கருத்து. தகுதிவாய்ந்த குரு ஒருவர் மூலமாகப் பெறும் தீவிர சக்திபாத் வழியாகவே தாரண(ம்), தியானம், சமாதி ஆகியவை நிகழும் என்பது தாந்த்ரீக மரபுகள் கூறுவது.
மனதைப் பழக்குவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? அனைத்தையும் ஒறுத்து இருப்பின் தூய சாரத்திற்குள் செல்லும் நிமேஷாவை வலியுறுத்தும் ஆத்திகப் பள்ளிகள், ‘உலகிலிருந்து விடுதலை’ என்ற பொருள்தரும் ‘கைவல்யம்’, ‘நிர்வாணம்’, ‘மோக்ஷம்’ என்பனவற்றை அடிப்படை நோக்கமாகக் கூறுகின்றன. ஆனால், உள்ளடக்க நடைமுறைகளான அத்வைத தாந்த்ரீகம் அல்லது மஹாயான பௌத்தம் ஆகியவற்றின்படி மோக்ஷம் என்பது ஆற்றவேண்டியதில் பாதியே. அறிவொளி பெற்றவர் முழுமுதல் மெய்மை குறித்து தான் பெற்ற அறிதலை இழக்காது உலகிற்குத் திரும்புதல் அவசியம்.
உள்ளடக்கக் கொள்கையாளர் கருத்துப்படி, சமாதி நிலையை மட்டும் எய்துவோர் அகவய நோக்கின் அடிமைகளாகிவிடுவர். ஆனால் சமாதி எனும் பேரின்ப நிலைக்கும் மேலாக எழுந்து இவ்வுலகிற்குத் திரும்பி வருவோரே விடுதலை பெற்றோர். ஏனெனில், அவர்கள் தம் விருப்பத்திற்கேற்ப, முழு சுதந்திரத்தோடு உலகிலிருந்து விலகியிருக்கலாம் அல்லது அதில் பங்கெடுக்கலாம். இந்நிலை ஜீவன்முக்தி, பரசிவத்துவம், அனுத்தரம் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
மேற்சொன்ன அத்வைத தாந்த்ரீகம், மஹாயான பௌத்தம் போன்ற அமைப்புமுறைகளைப் பொறுத்தவரை, நாம் அறிவொளி பெறாது, அறியாமை எனும் இருளில் மூழ்கியிருக்கும் வரை மனமும் உலகும் துன்பகரமானதாகவோ அல்லது தடையாகவோதான் உணரப்படுகின்றன. எவ்வழியிலாயினும், நம்மை அறியாமையிலிருந்து விடுவித்துக் கொண்டுவிடுவோமென்றால், மனதையும் உலகையும் ஆனந்தமாக, எல்லையிலா இன்பமாக நம்மால் உணரமுடியும்.
அத்தகைய முழுமுதல் இன்பத்தை, முழுநிறைவைக் குறித்த தரிசனமே உபநிடதங்களின் மிகச்சிறந்த வாக்கியங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது:
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்
பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவாவஶிஷ்யதே
(ஓம். இது முழுமையானது, அது முழுமையானது.
முழுமையானதிலிருந்து முழுமை தோன்றுகிறது.
முழுமையிலிருந்து முழுமையை அகற்றினாலும்
முழுமையே எஞ்சுகிறது.)
சிவபிரகாஷ் |
தமிழில்: ஆனந்த் ஶ்ரீநிவாசன்
நன்றி: நற்றிணை பதிப்பகம்
(நற்றினை பதிப்பகம் 2019-ல் வெளியிட்ட 'பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்: குரு ' என்ற நூலிலிருந்து சில பகுதிகள்)
ஹெச். எஸ். சிவபிரகாஷ் (1954)
எச். எஸ். சிவபிரகாஷ் கன்னட இலக்கியத்தின் முன்னனி கவிஞர், நாடகாசிரியர். புது தில்லி ஜவஹர்லால நேரு பல்கலையில் கலை மற்றும் அழகியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர். இந்திய கலாசார உறவுகளுக்கான மன்றத்தின் கீழ் இயங்கும் தாகூர் மையம் என்றழைக்கப்படும் பெர்லின் கலாசார மையத்தின் இயக்குனர். ஒன்பது கவிதைத் தொகுதிகள், பன்னிரண்டு நாடகங்கள் மற்றும் பல நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிய, ஜெர்மன், போலிஷ், ஹிந்தி, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடம், இந்தி, மணிப்புரி, ராபா, அஸாமி, போடோ, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இவரது நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. வசன இலக்கியம், பக்தி இயக்கங்கள், சூஃபி முதலான மெய்யியல் மரபுகள் ஆகியவற்றில் நிபுணராக அறியப்படுபவர்.
ஆனந்த் ஶ்ரீநிவாசன்
தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.