Saturday 29 July 2023

சம்பவங்கள், சொலவடைகள், தரிசனங்கள் - எஸ்.ஜே.சிவசங்கர்


சிறு வயதில் குடும்ப விவகாரங்களின்போதும் பொறுமையற்று எதையேனும் எதிர்பார்க்கும்போதும் அம்மா சொல்வார் ”மெல்லவே பாயும் தண்ணி கல்லையும் கரைக்கும்”.

ஏதேனும் கட்டுவதற்கு கயிறு எடுக்கையில் சமைக்கையில் அளவுகளில் ஏதேனும் சர்ச்சை வரும்போது ”கண்ணளக்காததா கையளக்கும்’’. வேசமாய் சாப்பிடும்போது “கண்டு நெறையாதததா உண்டு நெறையும்.” என்பார்.

தெருவின் பெரியவர்கள் ”ஆடு அறுக்குமுன்ன புடுக்கு சுடாத’’ என்பார்கள். இதெல்லாம் சொலவடைகள் என்பதோ அதன் அர்த்தமோ அப்போது தெரியாது. மொழியின் பகுதிகளாகவே இவற்றை குழந்தைகள் நாங்கள் புரிந்து வைத்திருந்தோம். ஆனாலும் நாங்கள் இவற்றை அதிகம் பயன்படுத்தியதில்லை. கிராமங்களில் தங்கள் பால்யதைக் கழித்த என் வயது நண்பர்கள் “ஒண்ணு சொன்னா ஒம்பதா சொல்லியான்”, “கண்டு ஒண்ணு காணாம ஒண்ணு” இதைப்போல சில வழக்குகளைச் சொல்வார்கள் அவற்றையும் மொழியின் அங்கமாகவே புரிந்துகொண்டிருந்தோம்.

”மெல்லவே பாயும் தண்ணி கல்லையும் கரைக்கும்” இந்த சொலவடை மலை ஓடையில் மெதுவாக ஓடும் தண்ணீர் கரைத்துப்போன கூழாங்கற்கள் என ஒரு காட்சியாக பதிந்திருந்தது. ஆனால் அது எத்தனை மெதுவாய் இருந்தாலும் பொறுமையாக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும், கல்மனதையும் பொறுமை கரைத்துவிடும் எனப் புரிய பல வருடங்கள் ஆனது. உணர்வுபூர்வமாக இன்னும் ஆழமாக புரிந்தது நீண்ட வருடங்களுக்குப் பிறகுதான். நட்பாக இருந்து பின்னர் காதலாக மலர்ந்த காதலில் அவள் எழுதிய கடிதத்தில் அதே சொலவடையைக் கண்டேன். அம்மா பயன்படுத்திய அதே சொலவடையை அவள் பயன்படுத்தியதாலா தெரியவில்லை. அதன் உள்ளடுக்குகளுக்கு பன்முகத் தளங்களுக்கு போக முடிந்தது. பாடல்கள் போல எல்லோருக்கும் இதுபோல் ஒரு சொலவடையும் வாழ்வின் நினைவுகளில் இருக்கலாம்

”அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” இதற்கான இணை சொலவடையாகப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

*******

ஒரு சம்பவம் அதிலிருந்து உருவாகும் சிந்தனை, அதன் சூழல், பிறகு அதை மொழியாக்கும்போது வெறுமனே அந்த சம்பவத்துக்கு மட்டும் உரியதாக இல்லாமல் உலகப் பொதுவான ஒரு தரிசனத்தை முன்வைக்கின்றன சொலவடைகள். 

முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், சொலவம் எனப் பல பெயர்கள் இருந்தாலும் தொல்காப்பியம் சொலவடையை முதுமொழி என்றும் அதற்கான வரையறையையும் தெளிவாகச் சொல்கிறது.

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப

என்கிறது தொல்காப்பிய நூற்பா. “ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக்கூடிய) நுட்பம் கூடிய ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி முதுமொழி எனலாம்.” என விளக்கம் அளிக்கிறார் தே.லூர்து.

சொலவடைகள் உண்மையில் தங்கள் கிடைத்தள அர்த்தத்தை [TEXTUAL MEANING] மீறி, சூழலிய அர்த்தம் [CONTEXTUAL MEANING] அதையும் தாண்டி பொதுச்சூழல் அர்த்தத்தையும் [EXTRA TEXTUAL MEANING] கொண்டிருக்கின்றன.

“ஆரு தொலிச்சா என்ன அரி வெளுக்கணும்”

”தீவாளிக்கு இல்லாதது தீக்கட்டைக்கா?“

“அண்டியோடு அடுக்கும்போதான் தெரியும் மாங்காய்க்க புளிப்பு”

“வக்கப் பிடிக்கதும் தெரியாது வளக்க பிடிக்கதும் தெரியாது”

குறைந்தது இரண்டு அடுக்கு அர்த்தங்களையாவது சொலவடைகள் கொண்டிருக்கின்றன.

சொலவடைகளில் ஒரே நேரத்தில் முதன்நிலை அர்த்தம் [FIRST ORDER MEANING] ஒரு பொருளிலும்; இரண்டாம் நிலை அர்த்தம் [SECOND ORDER MEANING] ஒரு பொருளிலும்; மூன்றாம் நிலை அர்த்தம் [THIRD ORDER MEANING] இன்னொரு பொருளிலும்; தரிசனம் போலவே நிகழ்கிறது.

மூன்றுவிதமான அர்த்தமும் தெளிவாகத் தெரியும் இன்னொரு சொலவடை:

மாமியார்:தட்டுவாரும் கொட்டுவாரும் இல்லேன்னா செதலு தலைக்கு மேல ஏறும்

மருமகள்:சாவப் போற நாய் ஏன் கூரைக்கு மேல ஏறுது?

{செதலு = கறையான்

வக்க =வதக்க (சமைக்க)}

”வரப்புல ஒரு காலு வாய்க்கால்ல ஒரு காலு”

ஒரு விவசாயி எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் செயல்படுத்திய ஒரு காட்சியை ஊசலாட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களுக்கான தரிசனச்சொல்லாய் இப்படி மாற்றிக் கொடுத்திருப்பத்துதான் சொலவடைகளின் சிறப்பு. எடுக்கவோ கோர்க்கவோ என்கிற கம்பராமாயணத் தொடருக்கு ஈடாக ஒரு தடுமாற்றத்தை குறிக்க இதே சொலவடையைப் பயன்படுத்தலாம். இதுவா அதுவா என முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சிக்கல்களின் போதும் இது பொருத்தமாயிருக்கும். ஒரு செயல், காட்சி, அனுபவம் சொல்லாகப் பரிணமித்து பிறகு காலத்துக்கும் நிலைத்து நிற்கிறது. இதே பொருள் தரும் ”மதில்மேல் பூனை” மரபுதொடராக வழங்கி வருகிறது.

பழமொழிக்கும் சொலவடை அல்லது சொலவத்திற்கான முக்கிய வேறுபாடு பழமொழிகள் எழுத்துத் தமிழிலும் சொலவடைகள் வட்டாரத் தமிழிலும் வழங்கப்படுகின்றன.

”குளிரும் பனியும் தனக்கு வந்தா தான் தெரியும்”

இந்த சொலவடை தலைவலியும் பல்லுவலியும் தனக்கு வந்ததான் தெரியும் என வேறு வேறு வடிவங்களில் சொல்லப்படுகிறது. நாட்டார் வழக்காற்றியலில் variants என அழைக்கப்படும் வெவ்வேறு வடிவ தரவுகள் சொலவடைகளிலும் உண்டு. ”ஜாடிக்கேத்த மூடி’’, ”ஒரே குட்டையில ஊறின மட்டை’’ இதே சாயலில் ”ரெண்டும் கலந்தாப்பை ரெண்டும் ஒட்டாப்பை’’ என்கிற வட்டார வழக்கு சொலவடையாக வழங்கப்படுகிறது. இதைபோன்று இணைச் சொலவங்கள் ஏராளம். 

சொலவங்கள் காலங்களிலிருந்து கடத்தி வந்திருக்கும் சொற்கள் எண்ணற்றவை. பொருள்சார் பண்பாடு, உணவுப் பண்பாடு, புழங்கு பொருட்கள், சமூக வழக்குகள், விலக்குகள், சடங்கியல் செய்திகள். இந்த பண்பாடுகளில் சில மறைந்துபோனாலும் இவற்றிலெல்லாம் புழங்கிய சொற்கள் இன்னும் அவற்றை நினைவில் மீட்டி வைத்திருக்கின்றன.

புனைவுகளில் பலருக்கும் அலுப்பைத் தரும் பகுதி சம்பவ விவரணையும், கதாப்பாத்திர குவிமையமும். வெறுமனே இந்த இரண்டு பகுதிகளுக்குள் சுழலும் புனைவுகள் அதை தரிசனமாக/கலையாக மாற்றாமல் தவிக்கின்றன. இந்தச் சிக்கலை பொது உணர்வாக நுட்பமாக மாற்றிக் கடக்கின்றன சொலவடைகள்.

தனிநபர் அனுபவம், வாழ்க்கை தரிசனம், அறநெறிகள், பொது நீதிகள், சமூக விதிகள். இவையல்லாமல் தனிமனித உளவியல், சமூக உளவியல், ராசி, நட்சத்திரம், சாதி தொடர்பான சொலவடைகளும் ஏராளம். வசைகள் சொலவடைகளில் இயல்பாக புழங்குகின்றன. சொலவடைகளின் புனைவு அம்சம் கச்சிதமாகவும் உலகப்பொதுவாகவும் இருப்பது பிரமிப்பைத் தருகிறது எனினும் இனவாதம், பெண் வெறுப்பு, அடித்தள மக்கள், பெண்கள், சில குறிப்பிட்ட சாதியினர் பெரும்பாலான சொலவடைகளில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்படுதல் ஆகியன பொதுப்பண்புகளாய்ப் பயின்று வருகின்றன. நிலவுடமைக்கால மதிப்பீடுகளே சொலவடைகளில் ஓங்கி நிற்கின்றன என்பதை கிராமப் பண்பாட்டின் ஓர் அங்கமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. சொலவடைகள் தோன்றிய காலத்தின் கருத்துருக்கள் அவற்றில் மேலோங்கி நிற்பது இயல்பே.

*******

வருடங்களுக்கு முன் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் ஒருசில காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் வசனங்களில் அத்துணை சொலவடைகள். எண்பதுகள் வரை திரைப்பட வசனங்கள் கூட சொலவடைகள், கிராமிய வழக்குகளைத் தன்னகத்தேக் கொண்டிருந்தன. யதார்த்தத்தில் இன்று பழம் பாட்டிகளோடு சொலவடைகளும் மறைந்து போயின. பண்பாட்டை, வரலாற்றை, தத்துவத்தை சுமந்து நின்ற சொலவங்கள் மெல்ல இயல்பு வாழ்வின் உரையாடல்களிலிருந்து மறைந்து அவற்றின் இடத்தைத் திரைப்பட வசனங்கள் எடுத்துக் கொண்டன. நவீன இலக்கியப் பிரதிகளும் சொலவடைகளை கவனத்தில் கொள்வதில்லை. அதன் தேவைகளும் இப்போது இல்லை. இன்னும் ஒருசில ஆண்டுகளில் முழுக்க புழக்கத்தில் இருந்து காணாமல் போகும் அழியும் நிலையில் இருக்கும் சொலவடைகளை பகுதிவாரியாக சேகரித்து வைப்பது பண்பாட்டு ஆய்வுகளுக்கு இன்றியமையாதது.


குமரியின் அருகிவரும் சொலவடைகள் சில:

1. ஆரு தொலிச்சா என்ன அரி வெளுக்கனும்

2. நமக்கு நட கஞ்சி தான கெட கஞ்சியில்ல

3. பையத் தின்னா பனையும் தின்னலாம்

4. மேல மினுக்கடி உள்ள புழுக்கடி

5. காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் அவரவர் வீட்ல சாப்பாடு

6. ஓலக்கைக்கு ஒரு பக்கம் இடி கொட்டுக்கு இரண்டு பக்கம் இடி

7. மலிஞ்சா சந்தைக்கு வரும்

8. சுரைக்கா காப்பணம் சொமட்டுக் கூலி முக்காப்பணம்

9. சொல்லிப் பாரு; தல்லிப் பாரு; தள்ளிக்களை

10. பெத்தம்மை செத்தா பெத்தப்பன் சித்தப்பன்

11. மேய மாட்டை தொழுத்தில கட்ட ஒக்குமா

12. சக்கையா மாங்காயா சூந்து பாக்க

13. அரைக்க அரைக்க அம்மியும் தேயும்

14. நடுக்கடல்ல உட்டாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்

15. ஆறுன கஞ்சி பழங்கஞ்சி

16. ஒடையான் பொறுத்தாலும் ஒடையானுக்க நாய் பொறுக்காது

17. நா கொலைச்சு நேரம் விடியுமா?

18. அண்டி தின்னா குண்டி பருக்கும்

19. சூடடிக்க மாடு வைக்கல்ல வாய் வைக்காம இருக்குமா?

20. ஊயி தொண்ட பான வயிறு

21. அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி

22. ஆன முண்டம் போடுதுன்னு ஆட்டுக்குட்டி போட்டா அண்டம் கீறிரும்

23. கா ஓலையில நா மோண்ட மாதிரி

24. தல்லி பழுக்கது பழமில்ல

25. மொந்தன் மூட்டுல ஏத்தன் காய்க்குமா

26. காணாதவன் கஞ்சியைக் கண்டா ஊத்தி ஊத்தி குடிப்பான்

27. குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சி

28. எலிக்கு பயந்து வீட்டை விக்க முடியுமா

29. இருந்து கொடுத்திட்டு நடந்து வாங்கணும்

30. குடுத்ததை கேட்டா அடுத்தது பகை

31. காக்கை குளிச்சாலும் கொக்காகாது

32. குளிரும் பனியும் தனக்கு வந்தா தான் தெரியும்

33. அறியாத பிள்ளை சொறியும்போ அறியும்

34. குலச்சிய நாய் கடிச்சாது

35. சொன்னவன் சொன்னா கேக்கவனுக்கு புத்தி எங்க போச்சி

36. ஒண்ணு சொன்னா ஒம்பதா சொல்லுவா

37. ஓட்டை பானையில வெள்ளம் விட்டது போல

38. வேலையில்லாத்தவன் சென ஆட்டுக்கு மயிரு புடுங்கினானாம்

39. ஒரு முழம் ஏறுனா ஒம்பது முழம் சறுக்கும்

40. பட்டி பீ தின்ன மாதிரி

41. ஒரு ஆளுன்னாலும் கல்லு மூணு தானே

42. செவிடனுக்க காதுல சங்கு ஊதின மாதிரி

43. பெறவிக் கொணத்தை பேய்க்கு குடுத்தாலும் போவாது

44. தண்ணிக்குள்ளே விட்டாலும் குசு வெளியவரத்தான் செய்யும்

45. தாயைக் கழிச்சாலும் தண்ணியை கழிச்சாதே (பழிச்சாலும்)

46. நாயைக் கழுவி நடுவீட்ல வச்சாலும் அது போகுமாம் குப்ப குண்டுக்கு

47. முன்ன பின்ன செத்தாத் தானே சுடுகாடு தெரியும்

48. வேலை கள்ளிக்கு பிள்ளை சாக்கு

49. கோழி கூவி நேரம் வெளுக்குமா

50. அறுத்த கைக்கு சுண்ணாம்பு தர மாட்டான்

51. சதை உள்ள இடத்தில தான் கத்தி அறும்

52. அஞ்சாமத்த பிள்ள கெஞ்சினாலும் கிட்டாது

53. கக்க (திருட) தெரிஞ்சாலும் நிக்க தெரியனும்

54. சீனிக்கிழங்கு தின்ன பண்ணி செவியறுத்தாலும் நிக்காது

55. எடுப்பும் நமக்குத் தான் கோப்பும் நமக்குத் தான்

56. வரப்புல ஒரு காலு வாய்க்கால்ல ஒரு காலு

57. நாய்க்கு பூழல்ல தேனு வடிஞ்சாலும் நக்கவா ஒக்கும்

58. ஒண்ணும் தெரியாத்தவ பானை தின்னுவாளாம் பண்ணிக்கறி

59. ரெக்க போனாலும் சிறக்க போணும்

60. கண்டு ஒண்ணு சொல்லுவான் காணாம ஒண்ணு சொல்லுவான்

61. கேசவன் உண்டெங்கில் கேஸ் டிஸ்மிஸ்

62. நடக்க மடிச்சு சித்தப்பன் வீட்ல பெண்ணெடுத்த கதை

63. ஒரலு மூட்டில தான் கப்பியறும்

64. பிள்ளை செல்லம்; பிள்ளைக்க பீ செல்லமில்லை

65. தட்டுவாரும் கொட்டுவாரும் இல்லேன்னா செதலு தலைக்கு மேல ஏறும்

66. சாவப் போற நாய் ஏன் கூரைக்கு மேல ஏறுது

67. அண்டியோடு அடுக்கும் போது தான் மாங்காய்க்கு புளிப்பு தெரியும்

68. பூ மலிஞ்சா பிண்டயிலையும் வைப்பினும்

69. கேப்பாரு வேளம் கேட்டு ப.....ன் கீக்கோலம் போனான்

70. காரியம் முடிஞ்சா க....ன் பொறத்த

71. ஆதாயம் இல்லாமையா செ...டி ஆத்தோட போவான்

72. சா.....க்க முற சட்டிக்குள்ளேயும் பொட்டிக்குள்ளேயும்

73. ப.....ன் உறவு பட்டையில சா....ன் உறவு சட்டியில

74. தாய்ப் பொன்னானாலும் காப்பொன்னு எடுப்பான் த....ன்

75. நேத்து பெஞ்ச மழையில இன்னைக்கு குருத்த காளான்

76. நான் திண்ணைய பிடிச்சு நடக்கும் பொது நீ குண்ணைய பிடிச்சு நடந்த

77. எலி மாடமானாலும் தனி மாடம் வேணும்

78. ஏறி வந்த ஏணியை மறக்கக் கூடாது

79. குடிக்க கஞ்சி வெள்ளமில்ல குண்டிக்கு பன்னீரு கேக்குதோ

80. எடுக்காத எடுப்பெடுத்து இடுப்பு முறிஞ்ச கத

81. கஞ்சிக்கு வழியில்லாத்தவ ஆப்பத்துக்கு போட்டாளாம்

82. வழியக் கண்ட குதிரைக்கு வைக்கப்பிரி கடிவாளம்

83. தெங்குக்கும் கமுகுக்கும் திளாப்பு வேற

84. தெங்கானாலும் பனையானாலும் திளாப்பு ஒண்ணு தான்

85. தெங்கமூட்டில அடிபட்டா பனைமூட்டிலையா பதக்களை கட்டும்

86. தீபாவளிக்கு இல்லாத்ததது தீக்கட்டையா

87. பாவி மட்ட பாத்தா தொலி ஏழும் வெந்திரும்

88. ஓக்க கொடுப்பாளாம் நக்க கொடுக்க மாட்டாளாம்

89. அவன் மட்டும் அப்பனுக்கு பொறந்தவன் நானென்ன சித்தப்பனுக்கு பொறந்தவனா

90. கோழி வளத்தாளாம் கோழி கண்டாரவோழி

91. பத்தினிப் பு...டை பரதேசம் போனா ஆயிரம் கு...ணை எதிரே வரும் இளக்கம் குடுத்தா ஏறி மேய்வா

92. மூணாவது பொண்ணு பொறந்தா முத்தமெல்லாம் பொன்னு

93. நாலாவது பொண்ணு நடையையும் பிடுங்கும்

94. ஆறாவது ஆறா பெருகினாலும் பெருகும் நீரு போனாலும் போகும்

95. சதயம் சதஞ்சு சதஞ்சு கிடக்கும்

96. அவிட்டதில பொறந்தா தவிட்டுப் பானையும் பொன்னாகும்

97. கேட்டை கோட்டை கட்டும்

98. மகத்து பெண் ஜெகத்த ஆளும்

99. பெண் மூலம் நிர்மூலம்

100. பரணியில பொறந்தா தரணி ஆளும்

101. சித்திரையில பிள்ள பொறந்தா அப்பன் தெருவுல

102. தள்ளையும் பிள்ளையும் ஒண்ணுன்னாலும் வாயும் வயிறும் வேற

103. வீட்ட கட்டிப்பாரு கல்யாணத்தை நடத்திப் பாரு

104. ஆன அசைஞ்சி தின்னும் வீடு அசையாம தின்னும்

105. ஆன வலமிருந்து இடம் போனாலும் பூன இடமிருந்து வலம் போகாது

106. தாய் வீட்டுக்கு போனாலும் தன்னைக் கருதனும்

107. தன்னை கருதாத மந்திரவாதி உண்டா

108. புது வெள்ளத்தில கைலி ஏறினது போல

109. குருவி அளவும் பனம்பழம் விழவும்

110. முற்றத்து முல்லைக்கு மணமில்ல

111. அப்பக்கார நாய்க்கு பூத்தானம் வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பான்

112. வக்க பிடிக்கதும் தெரியாது வெலிக்க பிடிக்கதும் தெரியாது

113. பழ ஓலை விழச்சில பச்ச ஓலை சிரிக்குமாம்

114. ஆடறுத்த கள்ளனுக்கு ஆக்கிப்போட்ட கள்ளி

115. நாயக் கழுவி நடு வீட்டுல வச்சாலும் அது குப்பைக்குண்டுக்குத் தான் போவும்

116. ஊரான் பிள்ளைய ஊட்டி வளத்தா தன் பிள்ளை தானே வளரும்

117. ஆடறுக்க முன்ன புடுக்கு சுடாத

118. பாத்திரம் அறிஞ்சு பயிர் செய் கோத்திரம் அறிஞ்சு கோளோடு ஆடு

119. அண்ணு கண்டத அண்ணு அழிக்காத

120. ஆடியும் ஆனியும் ஆனை புரட்டாசியும் வச்சு தின்னாதவன் தேசவழி போயிடுவான்

121. சீரும் சிறப்புமா பொண்ணு இருக்கணும் இருப்பறிஞ்சு நடக்கணும்

122. நட்டாரைக் கொல்லுமாம் நடு நாரந்தி விட்டாரைக் கொல்லுமாம் விடு வாதை

123. குலைச்சாத நாயும் இல்ல குறை சொல்லாத்த வாயும் இல்ல

124. பாக்கை மடியில கட்டிக்கலாம் தோக்கை மடியில கட்ட முடியுமா

125. பாண்டிக்கு பனைஏறப் போன பனையேறியும் பிழைச்சான் கூட மட்டக் கூட்டத்தில கெடந்த நாயும் பிழைச்சது

126. பாக்கா இருந்தான் மடியில கட்டினேன் கமுகா வளந்து நிக்கான் மடியில கட்ட முடியுமா

127. தானும் தின்ன மாட்டான் தரையிலையும் போட மாட்டான்

128. தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்

129. வஞ்சகம் நெஞ்ச பெளக்கும்

130. ஒரு வாக்கு கொல்லும் ஒரு வாக்கு வெல்லும்

131. வாடினப் பூ சூடினாலும் சூடினப் பூ சூடாதே

132. நா வெளையாட்டு கூரைய பிச்சுகிட்டு போச்சு

133. கொம்பறிஞ்சு கொடி படர விடணும்

134. அடைமழ உட்டாலும் செடிமழ வுடாது

135. கடல் மீனுக்கு நுளையான் இட்டதே பேர்

{69-74 சாதிப் பெயர்கள் கொண்ட சொலவடைகள்.}

எஸ்.ஜே.சிவசங்கர்


எஸ்.ஜே.சிவசங்கர் நேர்காணல்: ஆய்வுசெய்யும் பொருளும் அணுகுமுறையும் தான் ஆய்வுமுறைமையை தீர்மானிக்கிறது

எஸ்.ஜே. சிவசங்கர் - தமிழ்.Wiki