Saturday 29 July 2023

ஆய்வுசெய்யும் பொருளும் அணுகுமுறையும் தான் ஆய்வுமுறைமையை தீர்மானிக்கிறது - எஸ்.ஜே.சிவசங்கர் நேர்காணல்

எஸ்.ஜே.சிவசங்கர் தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறுகதைகள், கவிதைகள் என புனைவெழுத்திலிருந்து தொடங்கி திறனாய்வு, விமர்சனம் ஆகியவற்றில் ஈடுபட்டு பின் சொல் ஆய்வை வந்தடைந்தார். சிறுவயதில் சொல்லாய்வின் மேல் ஆர்வம் ஏற்பட்டு பத்து வருடத்திற்கு மேலாக குமரியின் கல்குளம் வட்டாரச் சொற்களை சேகரித்துக்கொண்டிருக்கிறார். அவற்றை தொகுத்து வட்டாரச் சொல் அகராதியை உருவாக்கும் பணியில் உள்ளார். குமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்த போது இலக்கியம் மற்றும் ஆய்வுகளில் இருந்த ஈடுபாடு, கள ஆய்வுச் செயல்பாடு நோக்கி செலுத்தியது. அ.கா.பெருமாள், செந்தீ.நடராசன் ஆகியோருடன் பல இடங்களுக்கு தொல்லியல் சார்ந்த கள ஆய்வுகளுக்கு சென்று ஆவணங்கள் சேகரித்துள்ளார். காட்சியூடகம் மீதுள்ள ஈடுபாட்டில் குறும்படங்கள், எழுத்தாளர் பொன்னீலன், காணிப்பழங்குடிகள் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். முதல் நூல் ‘கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்‘ சிறுகதை தொகுப்பு 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. 2023ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்-விக்கி தூரன் சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது.

எஸ்.ஜே.சிவசங்கர்

எஸ்.ஜே.சிவசங்கர் டிசம்பர் 7, 1976-ல் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் பிறந்தார். தந்தை ஜோதிராஜ், தாய் பாக்கியம் ஜசக். தக்கலை அரசு மேனிலைப் பள்ளியில் பள்ளி கல்வி முடித்து, மருத்துவ ஆய்வகப் பயிற்சி மற்றும் இளங்கலை மருந்தாளுனர் (Pharmacist) பட்டப்படிப்பும் படித்தார். மனைவி எழிலரசி, மகன்கள் ராகேஷ் நந்தன், விஷ்வா நந்தன். தற்போது குமரிமாவட்டம் தக்கலையில் வசிக்கிறார். 

குடும்பத்துடன் சிவசங்கர்

ஒரு புனைவெழுத்தாளராக படைப்பாளராக சிறுகதைத்தொகுதிகளும், கவிதையும் குறும்படங்களும் செய்தவர் தாங்கள். பொதுவாக இந்த படைப்பாக்க மனநிலைக்கு அயலானது ஆய்வு மனநிலை. எவ்வாறு இந்த மாற்றம் நிகழ்ந்தது உங்களுக்கு?

பொதுவில் ஆய்வு புறவயமானதாகவும், புனைவு அகவயமானதாகவும் எண்ணப்படுகிறது. ஆனால் ஒரு புனைவை எடுத்துக்கொண்டால் அதில் புறவயமான விஷயங்கள் அகவயமானதாக ஆவதை பார்க்கமுடியும். புனைவுக்காக நாம் எத்தனையோ செய்திகள் தகவல்களை சேகரிக்கிறோம். புனைவே ‘ஓர் அகவய ஆய்வு’ என்று தான் நினைக்கிறேன். உலக, இந்திய, தமிழக அளவிலும் நிறைய புனைவுப்பிரதிகளில் எழுத்தாளர்கள் எத்தனை ஆய்வுகள் அந்த நூல்களுக்காக செய்திருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. 

ஆய்வை ஏன் தனித்து பார்க்கிறோம் என்றால் அதில் அகாடமிக் சென்ஸ் உள்ளே வருவதனால் இருக்கலாம். ஆய்வு என்ற சொல்லோடு தொல்லியல், சிற்பவியல், நாட்டார் வழக்காற்றியல், மருத்துவவியல், அறிவியல் என எந்த துறை எடுத்துக்கொண்டாலும் அதில் அகாடமிக் தன்மை வந்துவிடுகிறது. ஆனால் புனைவில் நம்மால் இத்தனைத் துறைகளையும் இணைக்க முடியும். எனக்கு ஆய்வுக்கும் புனைவுக்கும் பெரும் வித்தியாசங்கள் தெரிவதில்லை. அமைப்பாளராக இருந்தால் படைப்பில் செயல் பட முடியாது என்பார்கள். அதைப்போல் தர்க்கம், ஆய்வு மனநிலை உடையவர்களாக இருந்தால் புனைவெழுத்தாளனாக முடியாது என்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னால் இரண்டையுமே இணைத்து செய்ய முடியும் என்று நினைக்கிறேன். 

நீங்கள் உறுப்பினராக இருந்த கலை இலக்கியப் பெருமன்றம் பற்றி சொல்லுங்கள்.

கலை இலக்கியப்பெருமன்றம் இடதுசாரி கட்சியின் கிளை அமைப்பு. அதே சமயம் அதன் குமரிக்கிளை பண்பாடுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமைப்பாக இருந்தது. கலை இலக்கிய மன்றத்தில் சேர்வதற்கு முன் என்னுடைய வாசிப்பு என்னுடன் மட்டுமாகவே இருந்தது. நான் வாசிப்பது சரியா அவை சரியான முறையில் வாசிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியாது வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயம் 2005ல் மன்றத்தின் அறிமுகம் ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. அங்கே என் மனதொத்த நண்பர்கள் கிடைத்தனர். சொக்கலிங்கம், செந்தீ.நடராசன் ஆகிய ஆளுமைகள் அங்கே இருந்தனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

என்னை விட 25 வயது மூத்தவர் கலை இலக்கிய மன்ற நண்பர் சொக்கலிங்கம். என்றாலும் இப்போதும் நட்புடனே என்னுடன் இருந்து வருகிறார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவர் எந்த விஷயத்தையும் புகழ்ந்தோ பெருமையாகவோ ஆக்கிக்கொள்ளக்கூடாது, அதே சமயம் தாழ்த்திய நிலையிலும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லுவார். எதிர்க்கருத்தாளுருடன் நடந்துகொள்ளவேண்டிய விதமும் நம்மைவிட வயது குறைந்தவர்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதையும் அவரிடமே கற்றுக்கொண்டேன். மேடையில் இயல்பான மொழியில் பேசுதல், பேசும் பொருளை சட்டகப்படுத்திக் கொள்ளுதல் அவரிடம் கற்ற மற்ற விஷயங்கள். 

பண்பாட்டு பற்றிய பேச்சு எப்போதும் அங்கே நிறைந்திருக்கும், அவை இயல்பாகவே ஆய்வை நோக்கியும் செல்லும். கவிதை, சிறுகதை கலை விவாதங்களுடன் ஆய்வுகள் பற்றியும் தத்துவ கோட்பாடுகள் பற்றியும் விவாதங்கள் நடைபெறும். எப்போதுமே வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் அங்கே இணைந்து பேசும் தன்மை இருந்தது. அரசியல், உளவியல், சினிமா என வெவ்வேறு துறைகள் சார்ந்து பேசப்படும் போது அவற்றை கற்றுக்கொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. அந்த விவாதங்கள் என்னை வெளிப்படுத்த பெரிதும் உதவின. மானுடவியளாளர்கள் மனிதனை சமூக விலங்கு என்று சொல்கிறார்கள். அது உண்மை என்று தான் நினைக்கிறேன். நாம் சுவை கொண்ட விலங்கு என்று உடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தனை அளவு நாம் அறிந்தவற்றை பிறரிடம் பகிர்வதற்கு ஆவலாக இருக்கிறோம். எனக்கு நான் வாசித்தவற்றை யோசித்தவற்றை பிறரிடம் பகிரும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 

அங்கு பேசப்பட்ட விவாதங்களில் புரியாதவற்றை வீட்டிற்கு வந்து தேடி வாசித்து, மேலும் தெரிந்துகொள்வேன். அனைத்து வித இலக்கிய இதழ்களும் அங்கே வாசிப்பதற்கான அறிமுகம் கிடைத்து. அந்த இதழ்கள் சிலவற்றில் நான் எழுதியவையும் பிரசுரமாயிற்று. நவீன இலக்கியத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்று உடனே எனக்கு தெரிந்துகொள்ள உதவியது. அங்கு இருந்த போது தான் எழுத ஆரம்பித்தேன். மன்றம் பல துறைகளையும் எனக்கு அறிமுகம் செய்தது. நானும் நான் அறிந்த புதிய புலங்களை அங்கு அறிமுகம் செய்தேன். குறியியல் (Semiotics) குறித்த தொடர் வகுப்பு ஒரு உதாரணம். முன்னூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் முன்னூறு மேடைகளில் பேசியிருப்பேன். புனைவெழுத்தாளன் எத்தனை துறைகளை அறிந்துகொள்கிறானோ அத்தனை வலிமை அவன் எழுத்திற்கு வந்து சேர்கிறது. அதுவே ஆய்வாளனுக்கும் பொருந்தும். எனக்கு அந்த வாய்ப்பு மன்றத்தில் கிடைத்தது . 

கலை இலக்கிய மன்ற நிகழ்வில் சிவசங்கர்

நீங்கள் எழுத நினைக்கும் எழுத்தில் இவை ஆய்வு எழுத்து, இவை புனைவெழுத்து என்று எவ்வாறு பிரித்து அறிகிறீர்கள்?

நான் ஒருமுறை செந்தி.நடராசனுடனும் அ.கா.பெருமாளுடனும் ஆனைமலைக்குச் சென்றேன். அங்கே அச்சனந்தி என்ற சிற்பி பற்றிய குறிப்புள்ளது. அவர் என்னை ஏதோ விதத்தில் எழுதத் தூண்டிக்கொண்டே இருந்தார். புனைவாகவே எழுதலாம் என ‘நிழல்’ என்ற சிறுகதையாக அதை எழுதினேன். அந்தச் சிறுகதைக்குள்ளேயே நந்திகணம், திகம்பரர், சிற்பம், மனத்தின் நிழல் என தத்துவ ஆய்வுக்கான பல விஷயங்கள் உள்ளே இணைத்து தான் எழுதுகிறேன். அந்த கதையை ஆய்வாக எழுதியிருக்கலாம். ஆனால் அப்போது என் மனநிலை புனைவிலேயே அமிழ்ந்திருந்தது. சிதறால், கழுகுமலை, மாங்குளம் ஆகிய சமணத்தலங்களில் அச்சனந்தி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. அவரை மையப்படுத்தி ஒரு ஆய்வு இப்போதும் சாத்தியம்.

அதைப்போல் அ.கா.பெருமாள் ஒருமுறை சொன்ன ‘உண்டுகாட்டி’ பற்றிய குறிப்பையும் நவீன வாழ்வை இணைத்து புனைவாகவே எழுதினேன். வாசிப்பவர் அதில் வரும் குறிப்புகளை ஆய்வாக வாசிக்கலாம். புனைவாக வாசிப்பவர் புனைவாக வாசிக்கலாம். என் மன அமைப்பு ஆய்வுக்குத் தயாரானபோதுதான் நான் ஆய்வை முறையாகக் கைக்கொண்டேன். புனைவும் ஆய்வும் நாம் ஈடுபடும் களத்தின் தன்மையைப் பொறுத்ததே. இப்போது ஈடுபட்டு வரும் வட்டாரவழக்கு சொல்லகராதியை புனைவாக எழுதினால் பல தகவல்களை பதிவு செய்ய இயலாமல் போகும். சில ஆய்வுக் குறிப்புகளை புனைவாக்கும்போது விரிந்த தளத்தில் அதில் பயணப்பட முடியும், எல்லைகளை விரித்துக் கொள்ள முடியும். நம் தேர்வும் நம் விருப்பும் சில வேளைகளில் அதை தீர்மானிக்கும்.

புனைவு, ஆய்வு, சினிமா என பல துறைகளில் ஈடுபடும் போது நமது கவனம் பலவாறாக சிதறிவிடாதா?

சில வேளைகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்கிற குழப்பம் வரலாம். ஆனால் கவனச்சிதறலாக அதை கருத வேண்டியதில்லை. இங்கு புனைவில், ஆய்வில், சினிமாவில் ஈடுபடும் எல்லோருக்கும் பல்துறை அறிவு அவசியமானதாகவும் இருக்கிறது.

ஆய்வில் பல ஆய்வுகள் இருக்கும் போது நீங்கள் வட்டார பண்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்து வருகிறீர்கள். எவ்வாறு வட்டாரப் பண்பாட்டாய்வுக்குள் வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

என்னுடைய சிறு வயதில் அக்காவிற்கு பேக் வாங்குவதற்காக கடைக்கு சென்று வாங்கிவிட்டோம். ஆனால் அக்காவிற்கு அது பிடிக்காமல் போய் விட்டது. திருப்பிகொடுக்க வந்தபோது பேக் விற்ற கடைக்கார அக்கா ”என்ன பேக் மேவேலியா” என்று கேட்டார்கள். அந்த வார்த்தை எனக்கு புரியவில்லை. வீட்டிற்கு சென்றதும் அம்மாவிடம் அந்த வார்த்தை பற்றி கேட்டேன். அதற்கு அர்த்தம் ‘பிடிக்கவில்லையா’ என்றார்கள். மறுநாள் ஸ்கூலில் பாடம் படிக்கும் போது அதே வார்த்தையை கொண்ட வரிகளை ‘உயிரை மேவிய உடல் மறந்தாலும்’ இராமலிங்க அடிகளாரின் செய்யுளில் பார்க்கும் போது முந்தினநாள் கடைக்கார அக்கா சொன்ன வார்த்தை நியாபகம் வந்தது. முதலில் வட்டார வழக்குகள் மீது மெல்லிய கிண்டல் எனக்கு இருந்துவந்தது. ஆனால் குமரியில் வழங்கும் ‘மடி’ என்ற சொல் சோம்பல் என்ற பொருளிலேயே திருக்குறளில் மடியின்மை எனும் ஒரு அதிகாரமாகவே பயிலப்பட்டது ஆச்சரியம் தந்தது. காலங்கள் கடந்தும் நாங்கள் சற்றும் பொருள் மாறாமல் பழந்தமிழை பயன்படுத்துகிறோம் என்கிற ஓர்மை வந்தது.

தமிழகத்தின் பல இடங்களுக்குப் பயணப்படும்போதும் வேறு மாவட்ட நண்பர்களோடு பேசும்போதும் இந்த சொற்களை ஒப்பிட்டு தொகுத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் இலக்கிய உலகில் நுழைந்தபோது காட்சி ஊடகங்களை அணுகும்போதும் திறனாய்வு, பகுப்பாய்வு, விமர்சனம், கோட்பாட்டாய்வு என்றே என் பயணம் தொடங்கியது. புதிய காற்று, தாமரை, திணை, புத்தகம் பேசுது, காலச்சுவடு போன்ற இதழ்களிலும் இது தொடர்பான கட்டுரைகளே வெளியாயின. முறையாக ஒரு வேலையைச் செய்ய முடிவெடுத்தபோது ‘வட்டாரச் சொல் திரட்டு’ என்கிற தலைப்பில் வட்டாரச்சொற்களை சேகரித்தேன். அதனூடாக வட்டாரப் பண்பாட்டு செய்திகளும், ஏராளம் சேகரமாகியது. அப்படியாக வட்டாரப் பண்பாட்டு ஆய்விற்கு கடைசியாக வந்தடைந்தேன்.

மொழியின் அழிவு (language extinct), மொழிமாற்று தகவமைப்பு (language shifting) மொழியின் இறப்பு (language death) இவற்றை விளக்க முடியுமா?

2008 காலகட்டத்திலிருந்து நான் வட்டார மொழியை சேகரிக்கத் தொடங்கியபோதே மொழி குறித்த செய்திகள் எதுவென்றாலும் அதை உற்று கவனிப்பதுண்டு. 2010-ல் அந்தமானைச் சேர்ந்த போவா (Boa) என்கிற பாட்டி இறந்துபோனார். அதில் துயரார்ந்த விஷயம் என்னவென்றால் போவா என்கிற அந்தமான் பழங்குடி மொழியை பேசிவந்த கடைசி நபர் அவர்தான். அவருடைய மொழியின் பெயரைத் தான் அவருக்கும் வைத்திருக்கிறார்கள். உலகெங்கும் மக்கள் பேசும் மொழிகளில் எழுபது சதவீதம் பேர் பேசுவது பத்து அல்லது பன்னிரெண்டு மொழிகளே என்கிறார்கள். ஐநூறு பேர் பேசும் மொழிகள் உண்டு. லிபி இல்லாதவை, பேச்சு வழக்கில் இல்லாதவை என சில மொழிகள் இருக்கின்றன. முழுதுமாக அழிந்துபோன மொழிகளை extinct என்றும், அப்படி அழிந்ததை language death என்கிறார்கள். Shift என்பது முக்கியமான விஷயம். நீங்கள் யு.எஸ்ஸில் குடியுரிமை பெற்று வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் மொழியாக அமெரிக்க ஆங்கிலத்தையே முன்வைப்பீர்கள். எண்ணிக்கை பெரும்பான்மை, அதிகாரம் அல்லது பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்தல், குடியேறுதல் மொழியில் ஏற்படுத்தும் தலைமுறை மாற்றமே Shift.

அமெரிக்காவில் குடியேறிய கொரியப் பெற்றோர்களின் மகன் ஒருவன் கொரிய மொழியை கற்றுக் கொள்ளவில்லை. அதற்கான பள்ளிகள் இருந்தபோதும் உளவியலாக அமெரிக்காவில் அவன் கொரிய மொழியை மற்றமையாக உணர்ந்ததால் அதை புறக்கணிக்கிறான். பெற்றோருடன் பேசுவதேயில்லை. கல்லூரி முடிந்தபிறகு கொரியன் அடையாளம் அவனை ஈர்க்கிறது. தன் பெற்றோருடன் உரையாட அமர்கிறான். கொடுமை என்னவென்றால் பெற்றோருடன் பேச அவனுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். இதுதான் language shifting-ன் விளைவு. வட்டார வழக்குகள் இன்று மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளையும் போல தரப்படுத்துதல் மொழியிலும் நடந்துவருகிறது (Language standardization). பொது மொழிக்குள் நாம் நம்மை பொருத்திக் கொள்கிறோம். அவரவருக்கான துணி எடுத்து ஆடைகள் தைத்தது போய் ஆயத்த ஆடைகளுக்குள் பொருத்திக் கொண்டதைப்போல. அடுத்தடுத்த தலைமுறைகளில் dialects-கள் மெல்ல மெல்ல அழிந்துபோகும். இவற்றை அறிந்துகொண்ட பிறகு தான் நான் வட்டார சொற்கள் சேகரித்து ஆவணப்படுத்துவது உருப்படியான பணியைத் தான் செய்து வருகிறோம் என்று உணர்ந்தேன்.


உங்களுடைய வட்டார வழக்கு ஆய்வு குறித்து சொல்லுங்கள்?

வட்டார வழக்குகளை ஆங்கிலத்தில் SLANG அல்லது COLLOQUIAL அல்லது DIALECTS என்பார்கள். அதில் பல வகையான பிரிவுகள் உண்டு ஒரு குறிப்பிட்ட வட்டார வழக்கு என்றால் REGIONAL DIALECT அல்லது சுருக்கமாக REGIOLECT, அதைப்போல் குறிப்பிட்ட பகுதி என்றால் GEOLECT நிலவியல் பிரதேசம் என்றால் TOPOLECT, சமூக வழக்கு, இனவழக்கு, காலநிரை வழக்கு, தனிநபர் வழக்கு என பலவகைகள் {REGIOLECT, GEOLECT, TOPOLECT, SOCIOLECT, COMMUNOLECT, ETHNOLECT, CHRONOLECT, IDIOLECT}.

வட்டாரச் சொற்களை ஒரு குறிப்பிட்ட பகுதியின் சொற்கள் என்று வரையறை செய்வதில் பல சிக்கல்கள் இருக்கிறது. குமரியில் ஒவ்வொரு தாலுகாவிலும், வெவ்வேறு வட்டாரச் சொற்கள் இருக்கின்றன. ஒரே தெருவிலேயே வேறுவேறு வழக்குகள் இருக்கிறது. இவற்றோடு நாட்டரியல் ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் சாதி, மதம், பிரதேச எல்லை சிக்கல்கள் வேறு. நான் முதலில் தக்கலை வட்டாரச் சொற்கள் என்றே தலைப்பிட்டேன். பிறகு கல்குளம் வட்டார வழக்குகள் அல்லது இடைநாட்டு வழக்குகள் என தொகுத்துக் கொண்டேன். ஆனாலும் வட்டார வழக்கு சொல் அகராதி என பெயரிட ஒரு கூச்சம். சொல் திரட்டு என்றே அழைத்துக் கொண்டேன். பிறகு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் மொழியிலாளர் க.இராசாராம் என்னை வழிநடத்தினார். அகராதியியல் முறைமைப் படியே வட்டார வழக்கு சொல்லகராதியை உருவாக்க முடியுமென நம்பிக்கை அளித்தார். அவரது ஆலோசனையின் படி இப்போது அத்தொகுப்பை மறு உருவாக்கம் செய்து வருகிறேன்.

தமிழ்நாடு முழுக்க உள்ள வட்டார வழக்காறுகளைத் தொகுத்து வட்டார வழக்காற்று கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும். பெரியசாமி தூரனின் கலைக்களஞ்சியம்போல இல்லை என்றாலும் குறைந்த பட்சம் வட்டார வழக்குச் சொற்களஞ்சியமாகவேனும் தொகுக்க வேண்டும். கி.ராவுக்கும் இதே கனவு இருந்தது.

உங்களுடைய நூல்களில் ‘ஆய்வுப் புனைவு’ என்பதாக ஒன்றை முன்வைக்கிறீர்கள்? அதை விளக்க முடியுமா? 

மைய ஆய்வுகள், அகாடமிக் ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நாலைந்து வித ஆய்வு முறைமைகளுக்குள் தான் நடந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலும் analytic, descriptive, comparative, explanatory, critical. எளிமையாச் சொன்னா சாம பேத தான தண்ட ஆய்வுகள். எந்த துறைக்குள் ஆய்வு செய்கிறார்களோ அதற்குள்ளேயே இருந்து ஆய்வுகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. நான் துறைகளை இணைக்க முடியுமா என்று பார்க்கிறேன். அது காலத்தின் தேவையும் கூட. இசையில் நாட்டார் இசை, வெகுஜன இசை, செவ்வியல் இசை ஆகியவற்றை இணைக்கும்போது புதிய திறப்புகள் ஏற்பட்டன. அதுபோல் இசையில் ஒரு தத்துவம் இணையும்போது சூஃபி இசை உருவாகிவிடுகிறது. இப்போது இசையுடன் நகைச்சுவை ஏன் சமையல்கலையைக் கூட இணைக்கிறார்கள். Integrated, interdisciplinary ஆய்வுகள் தான் இனி தேவையானவை என நினைக்கிறேன். உதாரணமாக தமிழ் ஆய்வில் மானுடவியல் (anthropology) நுழைகிறது. நாட்டார்வழக்காற்றியலை (folklore) இணைக்கிறோம். அதுபோல் இனவரைவியலை (ethnography) இணைக்கிறோம். இவ்வாறு இரண்டு துறை சேரும் போது புதிய துறை உருவாகிறது. தமிழ் ஆய்வில் அது தன் பங்களிப்பை அளிக்க தொடங்குகிறது. அதே போல் பல துறைகளை சேர்த்தும், குறிப்பிட்ட இரண்டு துறைகளை சேர்த்தும் நாம் ஆய்வு செய்து பார்க்கலாம்.

நான் 'நீலகேசி' நூலை ஆய்வுப் புனைவு எழுத எடுத்துக்கொண்ட தளம் குமரியின் ஒரு சின்ன கிராமத்தின் பெண்தெய்வக் கோயிலைப் பற்றியது. அதை ஆய்வாக எழுதுகையில் சில பரிணாமங்கள் விடுபடுவதைப் போல் இருந்தது. குறிப்பாக சில அகவய பரிமாணங்கள். அதனுடன் சொல்ல நிறைய கோணங்களும், விஷயமும் இருந்ததால் அந்த ஆய்வில் சில கதாப்பாத்திரங்களை உலவ விட்டேன். இப்போது அதை ஆய்வென்றும் சொல்ல முடியாது, புனைவென்றும் சொல்ல முடியாது. ஆய்வுப் புனைவாக மாறிவிட்டது.

ஆவணப்பட இயக்கத்தில் எழுத்தாளர் பொன்னீலனுடன் சிவசங்கர்

மூத்த எழுத்தாளரான பொன்னீலன் குறித்தும், காணிப் பழங்குடியினர் குறித்தும் ஆவணப்படங்கள் இயக்கியுள்ளீர்கள். இரண்டு வெவ்வேறு தளங்கள். இப்படி தேர்ந்துகொண்டதற்கு காரணங்கள் இருக்கின்றதா? ஆவணப்படங்களுள் எவ்வாறு சென்றீர்கள்? 

நான் மூன்று வயதிலிருந்தே சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பதின்பருவத்தில் ஊரிலிருந்து அண்ணன்களுடன் விடியற்காலை கிளம்பி இரவு பன்னிரண்டு மணிவரை சினிமா பார்த்து விட்டு ஊருக்குத்திரும்புவோம். ஒரு மேலை நாட்டு அறிஞர் சொன்னது உலகில் அவரவர் வேலையை அவரவர் செய்வார்கள், கூடவே சினிமா விமர்சனமும் செய்வார்கள் என்று. நாங்களும் அவ்வாறு தான் இருந்தோம். தமிழ் சினிமாவை மோசமாகக் கிண்டல் செய்துகொண்டிருப்போம். அதனால் இயல்பாகவே உலக சினிமா மீது மோகம் இருந்தது. அவற்றை விரும்பி பார்ப்போம். 

எனக்கு பல வித நண்பர்கள் இருகிறார்கள், இலக்கியம் பேசுவதற்கு, சினிமா பேசுவதற்கு என்று தனிதனியாக நண்பர் குழு இருக்கிறது. அன்றைக்கு இருந்த சிறந்த சினிமாவிலிருந்து முன்னர் இருந்த மாஸ்டர்ஸ் வரை பார்த்தோம். Tarkovsky, Louis Malle, Ingmar Bergman ஆகியோருடைய சினிமாக்களை விரும்பி பார்த்திருக்கிறேன். அவர்களின் மூவி லாங்வேஜ் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனது சினிமாவின் மொழியும் என் எழுத்தின் மொழியும் வேறுவேறாக இருக்கவேண்டும் என்று பகுத்துக்கொண்டேன். எங்கள் ஊருக்கு டெக்னாலஜி எல்லாம் ரொம்ப பின்னாடி தான் வந்தது. அதனால் நான் குறும்படங்கள் எடுத்ததெல்லாம் கல்யாணத்திற்கு பயன்படும் கேமராதான். ஆடி மாதம் தான் கேமரா கிடைக்கும் என்பதால் ஷூட் செய்தது ஆடியில், எடிட் செய்ததும் கல்யாணம் ஷூட் செய்யும் கருவிகளைக்கொண்டும் ஆட்களைக்கொண்டும் தான். இருந்தாலும் என்னால் ஒரே மாதிரி சினிமாக்களை எடுக்கப்பிடிக்கவில்லை குறும்படங்களில் என் படங்களை மெட்டா பிலிம் என்று வரையறுத்துக் கொண்டேன். அவ்வாறு தான் பொன்னீலன் அண்ணாச்சியுடைய ஆவணப்படத்தையும் காணிக்கார்களை பற்றிய ஆவணப்படத்தையும் எடுத்தேன். பொதுவாக ஆவணப்படங்களில் வாய்ஸ் ஓவர் மூலம் ஆளுமைகளைப் பற்றிய அறிமுகம் இருக்கும். அண்ணாச்சி ஆவணப்படத்தில் அதைத் தவிர்த்தேன். .அவரது படைப்பு, குடும்பம் நட்பு, பொது வாழ்வு மூன்றாகப் பிரித்து மூன்று தலைப்புகளில் தொகுத்துக்கொண்டேன். தொழில்நுட்ப ரீதியாக என் குறும்படங்களும் ஆவணப்படங்களும் சற்று மாற்றுக் குறைவானவைதான்.

காணி பழங்குடிகள் பற்றிய ஆவணப்படத்துக்குள் எவ்வாறு சென்றீர்கள்?

காணி பழங்குடிகள் பற்றிய கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதே சமயம் ஒரு நிகழ்வில் பள்ளிக்கூடமொன்றில் கலைக்காட்சி போல காணிப் பழங்குடிகள் தாங்கள் பாத்திரங்கள் இல்லாமல் எவ்வாறு சமையல் செய்துகொள்கிறார்கள் என்று அனைவருக்கும் பார்க்கும் படி சமையல் செய்து நிகழ்த்திக் காண்பித்தார்கள். அதை பார்த்து அவர்கள் மேல் இருந்த ஆர்வம் மேலும் அதிகரித்தது. அவர்கள் பற்றிய பிறப்புச் சடங்கு முதல் இறப்புச் சடங்கு வரையான ஆவணங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு விட்டாலும் அவர்கள் எவ்வாறு பாம்பு கடிக்கு விஷமுறிவு செய்கிறார்கள், தண்ணீர் பாட்டில்கள் இல்லாமல் பெரிய மலைகளை எவ்வாறு ஏறி கடக்கிறார்கள் என்று இன்னும் நிறையவே சேகரிப்பதற்கு இருக்கிறது என்று தெரிந்தது. ஒரு கேமராவும் கைவசம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொல்ல காணிக்காரர் ஆவணப்படத்தை எடுத்தோம்.

உங்களின் ஆய்வுக் களம் பற்றி சொல்லுங்கள்? உங்களுடைய ஆய்வு முறைமைகள் என்னென்ன என்று சொல்ல முடியுமா? 

தமிழர்களின் மரபார்ந்த அறிவியல், அளவியல் பற்றி நல்ல அறிதல் எழுத்தாளர் வெள் உவனுக்கு உண்டு. பல விஷயங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்வார். அப்படி அவர் சொல்லும் சில விஷயங்களுக்கு சான்று (reference) இருக்கிறதா என்று மரபான ஆய்வாளர்கள் யாராவது அவரிடம் கேட்டால் நான் தான் சான்று என்று பதில் சொல்லுவாராம். எனக்கும் நான் சேகரித்துள்ள ஆய்வுகளுக்கு முறைமை இருக்கிறதா என்றால் என் சிந்தனைமுறைதான் அந்த முறைமை என்பேன். 

என்னுடைய ஆய்வுகள் ஆய்வுமுறைமைகள் (methodology) என்று சொல்லவதற்கு வெளியே உள்ளன. முன்னால் வரையறுக்கப்பட்டோ (predefined) விளக்கங்கள் (descriptive) கொடுக்கப்பட்டவையோ அல்ல. உதாரணமாக தமிழ் மக்கள் துண்டை எப்போது எந்தந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து பிறப்பில் தொடங்கி இறப்புவரை ஆய்வு செய்யலாம். கல்யாணத்தில், பொதுவெளியில், சாதி சமூகக் கட்டுப்பாடுகளில், இறுதி சடங்குகளில் எவ்வாறு எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள். அங்கவஸ்திரம், தலைப்பாகை, சும்மாடு இப்படி எந்ததெந்த சொற்களில் துண்டைக் குறிப்பிடுகிறார்கள் என்று சேகரித்து ஒரு சமூகவியல் ஆய்வு செய்யமுடியும். இவ்வாறு உதாரணங்கள் நிறைய சொல்ல முடியும். இந்த மாதிரி ஆய்வு செய்யப்படும்போது அதை எந்தத் துறையில் சேர்ப்பது. சமூகவியல் ஆய்வுகளில் அன்றாடங்களைக் குறித்து மேற்கில் நிறைய செய்திருக்கிறார்கள். உதாரணமாக காப்பி பற்றி அந்தோணி கிட்டன்ஸ் சோசியோலஜி ஆய்வில் சொல்கிறார். சலபதியின் ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’ காப்பி பண்பாட்டைப் பற்றிய ஆய்வுதானே. கழிவறை இலக்கிய (Latrinalia) ஆய்வு மேற்கில் உண்டு. இங்கே அதை ஆய்வு வரையறைக்குள்ளே எடுக்கமாட்டோம். ஆனால் அது மனித மனதின் ஆழ் உளவியலின் வக்கிரங்களின் ஆவணம். சிற்பவியலில் பாலியல் சிற்பங்கள் பற்றி வயது முதிந்த ஆய்வாளர் ”என்னிடம் சிற்பத் தரவுகள் இருக்கிறது, ஆய்வை உன் பெயரில் நீ செய், என் வயதுக்கு இதை செய்ய முடியாது” என்றார். இதுதான் ஆய்வு நிலை.

எனக்கு ஆய்வுப் புனைவு எழுதுவதற்கு முன்னோடி கார்லோஸ் காஸ்னோடாவைச் சொல்லலாம். அவர் மெக்சிகோ பழங்குடிகளை ஆய்வு செய்வதற்கு அங்கு சென்று அவர்களுடன் தங்கி எழுதினார். எனினும் அதை புனைவாகவே எழுதினார். அதில் தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்றாலும் அங்கு உள்ள மனிதர்களை சம்பவங்களை புனைவாக்கினார். அந்த ஆய்வை மரபான ஆய்வாளர்கள் இனவரைவியல் ஆய்வாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் அந்த நூல் அந்த மக்ககளுடன் தங்கி இருப்பது போன்ற அனுபவத்தை அளிப்பது மிக சுவாரசியமாக எழுதப்பட்டது. அந்த மாதிரியான ஆய்வையே நான் ஆய்வுப்புனைவு என எழுதியதாக நினைக்கிறேன்.

எனக்கும் முறைமைகள் தெரியும், ஆனால் அவற்றை மறக்கவே நினைக்கிறேன்.

ஒரு வசதிக்காக என் ஆய்வு முறையை ‘multi-disciplinary methodology’ என்று சொல்லலாம். ஏனென்றால் உலகமே இப்போது ஒன்றாகி விட்டது. தொழில்நுட்பம் மட்டுமல்ல. Ethnoscape / Ideoscape / Mediascape / Technoscape / Financescape போன்ற எல்லா வெளிகளும் உலகை ஊடுபாவி விரிந்து கிடக்கையில் ஆய்வு மட்டும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது. உங்கள் ஊரில் உள்ள மளிகை கடையில் வேலை செய்பவர் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வந்தவராக இருக்கலாம். அந்த மாற்றத்தை ஆய்வில் உள்ளே கொண்டு வந்து தானே ஆக வேண்டும். வரலாற்று ஆய்வுகளில் கூட இன்று வரலாற்று எழுதியல் ஆய்வுகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. கல்வெட்டு, தொல்லியல் ஆதாரங்கள் இல்லாதவற்றை மரபான வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அதிகார வர்க்கச் சான்றுகள். எளிய மக்கள் குறித்த சமூக ஆய்வு அவற்றிலிருந்து சாத்தியமில்லை. மரபான வரலாற்று ஆய்வாளரான ரொமீலா தப்பார் போன்றவர்கள் கூட இப்போது வழக்காறுகளைக் கருத்தில் கொள்கிறார்கள். ஆக வழக்காறுகளுக்கு கல்விப்புலத்தொடு இப்போது வரலாற்று முக்கியத்துவமும் கிடைத்திருக்கிறது. 

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் உலகில் முதல் முறை ஆய்வு செய்யும் போது ஆய்வாளர்கள் எவ்வாறு செய்திருப்பார்கள். அவர்களிடம் ஆய்வுமுறைமை என்று ஒன்று இருந்திருக்காதே. நாம் செய்யும் ஆய்வுகளில் ஆய்வுசெய்யும் பொருளும் நம்முடைய அணுகுமுறையும் தான் ஆய்வுமுறைமையை தீர்மானிக்கிறது. 

ஆய்வுகளில் உங்களுடைய முன்னோடிகள் யார்?

ஏராளம் பேர் உண்டு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் செந்தீ.நடராசன், அ.கா.பெருமாள் இருவரையும் சொல்லலாம். இருவரையும் அண்ணாச்சி என்றே அழைப்பேன். செந்தீ அண்ணாச்சி என் சிற்பவியல் ஆசான். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மூத்த உறுப்பினர். அவர் கல்வித்துறை பணி ஓய்வு பெற்றபின் அறுபது வயதுக்கு மேல் ஆய்வுக்கு வந்தவர். அண்ணாச்சியிடம் நான் கேட்ட ஒரு கேள்விதான் என்னை சிற்பவியலுக்கு இட்டுச் சென்றது. பிறகு நிறைய பயணங்கள். மதுரையைச் சுற்றி பயணித்த நாட்களில் நேரடியாக சிற்பவியலையும், பிராமி கல்வெட்டுகளையும் கற்றுக்கொண்டேன். சிற்பவியலில் அவரது முதன்மை மாணவன் நான்தான். சிற்ப அடையாளப்படுதல்களில் என்னை அழைத்து கேட்பார். பெரும்பாலும் சரியாகச் சொல்லிவிடுவேன். நான் கேள்வி கேட்டு அவர் பதில் சொல்வதாக கட்டுரைகளை திணை இதழில் தொடராக எழுதினார். வாழ்வு, உடல்நிலை சூழல் காரணமாக நான் சிற்பவியலைத் தொடர முடியாதபோது ரொம்பவும் வருந்தினார்.

அ.கா.பெருமாள் அண்ணாச்சி முதலில் நூல்கள் வழியே அறிமுகம். நாட்டார் வழக்காற்றியல், தோல்பாவைக் கூத்து, கோவில் ஆய்வுகள், தென்குமரியின் கதை, நாஞ்சில் வட்டார சொல் அகராதி, வயக்காட்டு இசக்கி இப்படி. இலக்கிய அமைப்பில் செயல்பட்டதால் கூட்டங்களில் கருத்தரங்குகளில் சந்தித்திருக்கிறோம், மேடைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நெருக்கமானது செந்தீ அண்ணாச்சியோடு சேர்ந்து பயணித்த பயணங்களின் போதுதான். இருவருமே பழக இனிமையானவர்கள், கூடுதலாக நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.

செந்தீ. நடராஜனுடன் சிவசங்கர்


நீங்கள் வருங்காலத்தில் செய்ய நினைக்கும் ஆய்வு பற்றி சொல்லுங்கள்?

ஆய்வு என் பிரதானத் துறையாக இல்லாமலிருந்தாலும் பல்வேறு பொருண்மைகளில் ஈடுபட்டு சொல்லாய்வை வந்தடைந்தேன். அதைப் போல தமிழின் வரிவடிவத்தின் தோற்றம் குறித்து விஞ்ஞான பூர்வமாக ஆய்வொன்றைச் செய்யத் தொடங்கினேன். உடல்நிலை காரணமாக அதை ஒத்திப் போட்டிருக்கிறேன். குமரி மாவட்டத்தில் பிராமி கல்வெட்டுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதைத் தேடி ஒரு பயணம் பாக்கியிருக்கிறது. முடிந்தால் தென்னிந்தியாவில் மட்டுமே இருக்கும் யாளி சிலைகள் பற்றி ஒரு ஆய்வு, சல்லேகனைப் பற்றிய ஆய்வு, தீமைச் சடங்குகள், தமிழகத்தில் ஆண்குழந்தைகளுக்கான சடங்குகள், துறைசார் நவீன வழகாக்காறுகள் (உதாரணமாக மருத்துவ வழக்காறுகள் - DOCTOR'S LORD, வக்கீல்கள் வழக்காறுகள் - ADVOCATE'S LORE) இவற்றை செய்ய வேண்டும் கூடவே குமரியின் பாலியல் கதைகள், தமிழ்குலங்களில் குறியியல், கல் பண்பாடு, ஊர் பெயர் ஆய்வுகளின் சில உப ஆய்வுகள் சாலைப் பெயர்கள் போன்றவையும் செய்ய எண்ணியுள்ளேன்.

இதுவல்லாது இலக்கிய, சினிமா, சமூக, கோட்பாட்டு விமர்சனத்தில் புதிய சொல்லாடல்களை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த தளங்களில் நவீன சாதியவாதம் போன்றவை.

புனைவெழுத்திலும் மொழிபெயர்ப்பிலும் தொடர்ந்து இயங்கி வருவதால் என் ஆய்வுப்பக்கம் பெரிதாய் யாருக்கும் தெரிவதில்லை. தமிழில் அ.கா.பெருமாள், செந்தீ, சலபதியின் நூல்கள், டி.தர்மராஜின் நூல்கள் புனைவைவிட சுவாரசியமானவை. அதைப் போன்று நடையில் என் பிறதுறை ஆய்வுகளை எழுதலாம் என நினைக்கிறேன். சொற்களைப் பற்றி சொன்மை பொருண்மை, சொல்மெய் பொருள்மெய் என இரண்டு நூற்கள். ஏற்கனவே பிரசுரமான இலக்கிய, சினிமா, ஆய்வுக் கட்டுரைகள் யாவற்றையும் புத்தகமாகத் தொகுக்க வேண்டும். பிறகு வட்டாரச் சொல்லகராதி.

ஒரு எழுத்தாளனாக எழுத்து, சொல், மொழி இவைதான் எனது துறை என நிறைவாக உணர்கிறேன். மற்றபடி மொழியோடு தொடர்புடைய யாதும் யாவரும் எனக்குப் பிரியமானவையே பிரியமானவர்களே. 

சந்திப்பு - அனங்கன், தாமரைக்கண்ணன் புதுச்சேரி

எஸ். ஜே. சிவசங்கர் தமிழ் விக்கி

சிவசங்கரின் சில நூல்கள்:

  1. கடந்தை கூடும் கேயாஸ் தியரியும் - சிறுகதை தொகுப்பு (என்.சி.பி.ஹெச் 2012) 
  2. சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை - சிறுகதைத் தொகுப்பு (காலச்சுவடு 2017)
  3. அம்பேத்கார் கடிதங்கள் - மொழியர்ப்பு (காலச்சுவடு 2022)

அகராதி

  1. தெரளி - குமரி கல்குளம் வட்டார வழக்கு சொல்லகராதி

சிவசங்கர் தொடர்புக்கு:
prismshiva@gmail.com