Saturday 14 October 2023

அறிவியல் ரியலிசமும், ரியலிச மறுப்பும்: பகுதி 1 - சமீர் ஒகாஸா


தத்துவத்தில் புறயதார்த்தவாதம் (Realism) மற்றும் கருத்தியல்வாதம் (Idealism) என்ற இரு எதிர் சிந்தனை மரபுகளுக்கு இடையே புற உலகின் இயல்பைப் பற்றிய விவாதம் பலகாலமாக நடந்துவருகிறது. புறவுலகம் மனிதர்களுடைய சிந்தனையையும் பார்வையையும் சாராதது என புறயதார்த்தவாதம் சொல்கிறது. இதை கருத்தியல்வாதம் நிராகரிக்கிறது. புறவுலகம் மனிதர்களுடைய பிரக்ஞையை சார்ந்தது என்கிறது. புறயதார்த்தவாதம் கருத்தியல்வாதத்தை விட மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக தெரியலாம். ’உலகைப் பற்றிய உண்மைகள் புறவயமாக வெளியே உள்ளன, அவை நம்மால் கண்டறியப்படுவதற்காக காத்திருக்கின்றன’ என்ற பொதுச்சூழலின் பார்வைக்கு புறயதார்த்தவாதம் நன்கு பொருந்துகிறது. கருத்தியல்வாதம் பற்றி முதன்முதலில் கேள்விப்படும் போது அதுவொரு எளிய விளையாட்டுத்தனமான கருத்தாகவே தெரியும். ஏனென்றால் மனித இனமே அழிந்துவிட்டாலும் மரங்கள் பாறைகள் போன்றவை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அப்படியென்றால் ‘அவற்றின் இருப்பு எப்படி மனித மனதை சார்ந்ததாக இருக்கும்’ என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் இவ்விரு தரப்புகளுக்கும் இடையிலுள்ள பிரச்சனை மிகமிக நுட்பமானது. இன்றும் தத்துவவாதிகளிடையே தொடர்ந்து விவாதிகப்பட்டு வருவது. இந்த புறயதார்த்தவாத-கருத்தியல்வாத பிரச்சனை தத்துவத்தில் மீபொருண்மையியல் (metaphysics) பகுதியைச் சேர்ந்தது. இதற்கு அறிவியலுடன் எந்த தொடர்பும் கிடையாது. 

இங்கு நாம் பார்க்க இருப்பது ரியலிசம் என்று அதே சொல்லால் சுட்டப்படும் ஒரு சமகால அறிவியல் தத்துவ விவாதத்தை. இது ரியலிச தரப்பிற்கும் அதன் எதிர் தரப்பான ரியலிச மறுப்பாலர்களுக்கும் (Anti-realism) இடையிலானது. ரியலிச மறுப்புவாதம் கருவிவாதம் (Instrumentalism) என்றும் சொல்லப்படுகிறது.

அறிவியல் ரியலிசம் மற்றும் ரியலிச மறுப்புவாதம்

அறிவியல் ரியலிசத்தின் அடிப்படைக் கருத்து மிகவும் நேரடியானது. ’அறிவியலின் இலக்கு உலகை (அல்லது பிரபஞ்சம்) பற்றிய சரியான விவரணைகளைக் கொடுப்பது’ என்பது இந்த தரப்பின் வாதம். அந்த இலக்கில் அறிவியல் பெரும்பாலும் வெற்றியடைந்துள்ளது. இவர்களைப் பொருத்தவரை ஒரு நல்ல அறிவியல் கோட்பாடு என்பது இப்பிரபஞ்சம் இயங்கும் விதத்தை சரியாக வரையறை செய்வது. இப்படி சொல்வது இயல்பானதே, ஏனென்றால் அறிவியல் உலகைப் பற்றிய தவறான விவரணைகளை தருவதை இலக்காக கொண்டுள்ளது என யாரும் கருதமாட்டார்கள். மாறாக ரியலிச மறுப்பாளர்கள் ’அறிவியலின் இலக்கு புலனறிவுக்கு ஏற்ற (Empirically adequate) கோட்பாடுகளைக் கண்டுபிடிப்பது’ என வாதிடுகிறார்கள். அதாவது பரிசோதனை மற்றும் அவதானிப்பின் முடிவுகளை சரியாக கணிக்கும் கோட்பாடுகளை கண்டுபிடிப்பது மட்டுமே அறிவியலின் இலக்கு என்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை ஒரு கோட்பாடு மிகச்சிறப்பாக புலனறிவுக்கு ஏற்றதாக அமைந்துவிட்டால் அது இவ்வுலகை சரியாக வரையறுக்குமா என்ற மேலதிக கேள்வி தேவையற்றது, இந்த கேள்விக்கு நிஜமாகவே எந்த அர்த்தமும் இல்லை என்கின்றனர்.

அறிவியல் எங்கெல்லாம் அவதானிக்க-இயலாத விஷயங்களை பற்றி பேசுகிறதோ அங்கெல்லாம் ரியலிசத்திற்கும் அதன் மறுப்புவாதத்திற்குமான முரண் தெளிவாக துலங்கிவருவதை காணலாம். இதற்கு இயற்பியல் ஒரு நல்ல உதாரணம். அணுகள், எலக்ட்ரான்கள், குவார்க்குகள் (Quarks), லெப்டான்ஸ் (Leptons) போன்றவை பற்றி இயற்பியலாளர்கள் முன்வைத்த கோட்பாடுகள் எதையும் நம்மால் சாதாரணமான தளத்தில் அவதானிக்க முடியாது. மேலும் இவை கணித மொழியிலேயே பெரும்பாலும் இயற்றப்பட்டுள்ளன. இவை முன்வைக்கும் விஷயங்கள் விஞ்ஞானியல்லாதவர்கள் பேசும் பொது விஷயங்களில் இருந்து மிகவும் வேறுபட்டவை. எனினும் ரியலிஸ்ட்கள் இயற்பியல் கோட்பாடுகள் உலகை வரையறுக்கும் முயற்சி என்கின்றனர். உலகைப் பற்றி இவை சொல்வது உண்மையா என்பதே இவற்றின் வெற்றிக்கான அளவுகோல் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆகவே ரியலிஸ்ட்களின் பார்வைப்படி அறிவியல் கோட்பாடுகளும் உலகை (அல்லது பிரபஞ்சம்) பற்றிய விவரணைகளே.

ஆனால் ரியலிச மறுப்பாளர்கள் ‘புலனறிவுக்கு ஏற்றவாறு இருப்பதே அறிவியல் கோட்பாட்டின் நிஜமான இலக்கு, உண்மைத்தன்மை அல்ல’ என வாதிடுகின்றனர். இயற்பியல் அறிஞர்கள் அவதானிக்க-இயலா தனிப்பொருள் (entity) பற்றி பேசலாம் (அணுக்கள், எலக்ட்ரான்கள், குவார்க்குகள் போல), ஆனால் அவை அவதானிக்க-இயலும் தனிப்பொருளை கணிப்பதற்கு உதவும் பொருட்டு உருவாக்கப்பட்ட வசதியான புனைவு மட்டுமே என்கின்றனர். இதை விரிவாக பார்க்க வாயுக்களின் இயக்க கோட்பாடை (Kinetic theory) உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இக்கோட்பாடின் படி, ’வாயு என்பது வேகமாக இயங்கும் அதிக எண்ணிக்கையிலான மிக நுண்ணிய தனிப்பொருள்களை கொண்டிருக்கும்’. அந்த தனிப்பொருள்களே மூலக்கூறுகள், இவை அவதானிக்க இயலாதவை. இக்கோட்பாட்டில் இருந்து நாம் வாயுக்களின் அவதானிக்க-இயலும் விளைவுகளை பெற இயலும். உதாரணமாக, சிறிதளவு வாயுவை வெப்பப்படுத்தும் போது அதன் அழுத்தம் மாறாமலிருந்தால் அவ்வாயு விரிவடையும். இதனை பரிசோதனை மூலம் சரிபார்க்க முடியும். இதுபோன்ற விளைவுகளை பெறுவது மட்டுமே இயக்கக்கோட்பாடில் அவதானிக்க-இயலா தனிப்பொருளை (அதாவது மூலக்கூறுகளை) நாம் ஏற்றுக்கொள்வதன் ஒரே நோக்கம் என ரியலிச மறுப்பாளர்கள் வாதிடுகிறார்கள். இயங்கும் மூலக்கூறுகளை வாயுக்கள் உண்மையிலேயே கொண்டிருந்தால் கூட அது நமக்கு முக்கியமல்ல. இயக்க கோட்பாடின் நோக்கம் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ள மாறாவுண்மைகளை (fact) வரையறை செய்வதல்ல. அவதானிப்புகளை கணிப்பதற்கு ஏற்ற வழியை கொடுப்பது மட்டுமே. இதன்படி அறிவியல் கோட்பாடுகள் அவதானிக்க-இயல்பவற்றை கணிப்பதற்கான கருவிகளாக மட்டுமே பயன்படுகின்றன. அவை உண்மையை சொல்லும் முயற்சிகள் என எடுத்துக்கொள்ளக்கூடாது. ரியலிச மறுப்புவாதம் ஏன் கருவிவாதம் என அழைக்கப்படுகிறது என்பதற்கான காரணம் இதுவே.

ரியலிச மறுப்பாளர்களுக்கு ஒருவித உந்துதலாக பின்வரும் நம்பிக்கை உள்ளது: ’உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அவதானிக்க-இயலாத பகுதியை பற்றிய அறிவை நம்மால் அடைய முடியாது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது’. இந்த அவநம்பிக்கை (Pessimistic belief) புலனறிவுவாதத்தில் இருந்து வருகிறது. புலனறிவுவாதத்தின் படி மனிதர்களுடைய அறிவு அடிப்படையிலேயே அனுபவத்தால் எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புலனறிவாளர்களின் இந்த கோட்பாட்டை அறிவியலுக்கு பொருத்திப்பார்க்கும் போது அது பின்வரும் பார்வையாக மாறுகிறது: ’அறிவியல்-அறிவின் எல்லைகள் நம்முடைய அவதானிக்கும் திறனால் கட்டமைக்கப்பட்டுள்ளது, எனவே அறிவியல் புதை படிமங்கள், மரங்கள், பாறைகள் போன்றவைகளைப் பற்றிய அறிவைக் கொடுக்கும். ஆனால் எலெக்ட்ரான், மூலக்கூறு, அணுக்கள் போன்றவைகளைப் பற்றிய அறிவை கொடுக்காது’. இந்த பார்வை நம்பமுடியாத பார்வையல்ல. ஏனென்றால் புதை படிமங்கள், மரங்கள், பாறைகளின் இருப்பதை யாரும் தீவிரமாக சந்தேகப்படப் போவதில்லை. ஆனால் எலெக்ட்ரான்களும் மூலக்கூறுகளும் அப்படியல்ல. சென்ற பகுதிகள் ஒன்றில் பார்த்தது போல, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல முக்கியமான அறிவியலாளர்கள் அணுக்களின் இருப்பை சந்தேகப்பட்டனர். இந்த பார்வையை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் பின்வரும் கேள்விக்கு விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும். மனிதர்களின் அவதானிக்கும் திறனைப் பொருத்து அறிவியல் அறிவு எல்லைக்குட்பட்டுள்ளது என்றால் ஏன் அவதானிக்க-இயலாதவற்றை அடிப்படையாக கொண்ட கோட்பாடுகளை அறிவியலாளர்கள் முன்வைக்கின்றனர்? இதற்கு ரியலிச மறுப்பாளர்கள் கொடுக்கும் விளக்கம்: ’அவை வசதியான புனைவுகள். பருப்பிரபஞ்சத்தின் அவதானிக்க-இயலும் பகுதியில் இருப்பவற்றின் பண்புகளை கணிப்பதற்கு உதவும்பொருட்டு வடிவமைக்கப்பட்டவையே’. 

ரியலிசவாதிகள் ‘நம்முடைய அவதானிக்கும் திறனால் அறிவியல் அறிவு எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது’ என்பதை மறுக்கின்றனர். மாறாக, பருப்பிரபஞ்சத்தின் அவதானிக்க-இயலாத பகுதியை பற்றிய கணிசமான அறிவை நாம் ஏற்கனவே கொண்டிருக்கிறோம் என நம்புகின்றனர். அவதானிக்க-இயலா தனிப்பொருள்களைப் பற்றி மிகச்சிறந்த அறிவியல் கோட்பாடுகள் பேசுகின்றன. அக்கோட்பாடுகள் சரியாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு அணுக்களின் பருப்பொருள் கோட்பாடை எடுத்துக்கொள்ளலாம். இது அனைத்து பருப்பொருள்களும் அணுக்களால் ஆனவை என்கிறது. இக்கோட்பாடு பிரபஞ்சத்தின் பல மாறாவுண்மைகளை (fact) விளக்கும் தகுதி கொண்டது. இது அணுக்கோட்பாடு சரியானதாக இருப்பதற்கு நல்ல சான்று என ரியலிசவாதிகள் கருதுகின்றனர். அணுக்கள் அவதானிக்க-இயலாதவை என்பதாலேயே அணுக்கோட்பாட்டை பருப்பிரபஞ்சத்தை வரையறுக்கும் முயற்சியல்ல என சொல்லிவிட முடியாது. அணுக்கோட்பாடை பருப்பிரபஞ்சத்தை வரையறுக்கும் முயற்சி என எடுத்துக்கொள்வதே சரியானது என்கிறனர் ரியலிசவாதிகள்.

ரியலிச மறுப்பாலர்களுக்கு மற்றோரு உந்துதலாக பின்வரும் உண்மையும் உள்ளது. உலகைப் பற்றிய வழக்கமான விவரணைகளில் இல்லாத சில தனித்தன்மைகள் அறிவியல் கோட்பாடுகளில் உள்ளன. உதாரணமாக, அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கும் செயல்பாட்டில் மாதிரிகள் (model) கட்டமைக்கப்படுவது. அந்த மாதிரிகள் பெரும்பாலும் கணித மொழியில் இயற்றப்பட்டுகின்றன. மாதிரிகள் நிஜ உலகில் தவறு என அறியப்பட்ட சில ஊக-கருத்துக்களை உருவாக்கும். அந்த ஊகங்கள் மாதிரிகளை எளிதாக கையாள்வதற்கு அவசியமானது. உதாரணமாக பொருளியல் (economy) மாதிரிகள் வினையர்களின் (Agents) பண்புகளை பின்வருமாறு ஊகிக்கின்றன: வினையர்கள் முற்றிலும் பகுத்தறிவானவர்கள், மிகச்சரியான தகவல்களை வைத்திருப்பவர்கள், தங்களின் செயல்திறனை அதிகரிக்ககூடிய முடிவுகளை எடுப்பவர்கள். நிஜ மனிதர்கள் யாரும் இதுபோல இருப்பதில்லை என்பது பொருளியல் அறிஞர்களுக்கு தெரியும். இருந்தாலும் தங்களுடைய இந்த மாதிரி நிஜ உலக பொருளியலுக்கு உதவக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள். இதைப்போலவே பரிணாம உயிரியலின் மாதிரிகளும் உள்ளன. உதாரணமாக, ஒரு இனத்திலுள்ள உயிரிகளுக்கு இடையில் இனச்சேர்க்கை தற்போக்கில் (random) நடைபெறுகிறது என்ற ஊகம். இத்தகைய ஊகங்கள் கணிதத்தை மிகவும் எளிமைப்படுத்துகின்றன. நிஜத்தில் எந்த உயிரினங்களும் இந்த ஊகத்தை திருப்திபடுத்தாது. இருந்தாலும் தங்களுடைய மாதிரிகள் புறவுலகை போதுமான அளவில் தோராயமாக விளக்குவதற்கான திறன்களை கொண்டுள்ளன என உயிரியலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் ரியலிச மறுப்பாளர்கள் அறிவியலில் இத்தகைய மாதிரிகள் செல்வாக்குடன் இருப்பது தங்களுக்கு சாதகமானது என்கின்றனர். இதுபோன்ற மாதிரிகள் தவறு என அறியப்பட்ட ஊகங்களைக் கொண்டிருப்பதால் இவற்றை உலகை சரியாக வரையறுக்கும் முயற்சி என எடுத்துக்கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்த மாதிரிகளின் இலக்கு புலனறிவுக்கு ஏற்ற தன்மையே, உண்மைத்தன்மை அல்ல என்கின்றனர்.

ரியலிசவாதிகள் இதை உறுதியான வாதமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அறிவியல் கோட்பாட்டுகளில் மாதிரிகள் இருப்பது ’அறிவியல் உண்மையை இலக்காக கொண்டது’ என்ற கருத்தை முற்றிலும் நிராகரிக்கவில்லை என்கின்றனர். மாறாக, இதுபோன்ற மாதிரிகளின் இலக்கு தோராயமான உண்மையே தவிர துல்லியமான உண்மை அல்ல என வாதிடுகின்றனர். உதாரணத்திற்கு பருவநிலை மாற்றத்திற்கான கணித மாதிரியை எடுத்துக்கொள்ளலாம். இது துல்லியமான உண்மை அல்ல என அறியப்பட்ட பல எளிய ஊகங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக ’புதைபடிவ எரிபொருள்கள் (பெட்ரோல்) மட்டுமே கார்பன்-டை-ஆக்சைடுக்கு உருவாவதற்கு ஒரே மூலக்காரணம்’ என்பது போன்ற எளிய ஊகங்கள். மாதிரிகள் துல்லியமான கணிப்புகளை தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இவற்றின் நோக்கம் பருவ மாற்றத்தை பாதிக்கும் காரணிகள் பற்றிய தோராயமாக சரியான விவரணைகளை தருவதே. கருத்தியல் மாதிரி எப்போதுமே உலகைப் பற்றிய சரியான விவரணையாக இருக்காது, ஆனால் அது நல்ல தோராயமான விவரணையாக இருக்கலாம் என ரியலிஸ்ட்கள் வாதிடுகிறார்கள். 

‘அற்புதங்கள் அல்ல’ வாதம் (The 'no miracles' argument)

அவதானிக்க-இயலா தனிப்பொருள்களை அடிப்படையாக கொண்ட பல கோட்பாடுகள் புலனறிவுரீதியாக வெற்றியடைந்துள்ளன. அவை கண்களுக்கு புலப்படக்கூடிய பொருள்களின் (Macroscopic objects) பண்புகளை சரியாக கணித்துள்ளன. சற்றுமுன் பார்த்த வாயுக்களின் இயக்க கோட்பாடு இதற்கு ஒரு உதாரணம், வேறுபல உதாரணங்களும் உண்டு. இதுபோன்ற கோட்பாடுகள் பெரும்பாலும் தொழில்நுட்ப பயன்பாடுகளை கொண்டவை. உதாரணமாக, லேசர் தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு. இது அணுக்களில் உள்ள எலெக்ட்ரான்கள் அதிக ஆற்றல் நிலையிலிருந்து குறைந்த ஆற்றல் நிலைக்கு செல்வதால் என்ன நிகழும் என்பதை சொல்கிறது. லேசரைக் பயன்படுத்தி நமது கண் பார்வையை சரிசெய்கிறோம், நல்ல தரத்தில் எழுத்துக்களை அச்சிடுகிறோம், ஏவுகணைகளில் பொருத்தி எதிரிகளைத் தாக்குகிறோம். எனவே லேசர் தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு புலனறிவுரீதியாக நன்கு வெற்றியடைந்த ஒன்று.

அவதானிக்க-இயலாதவற்றை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளின் புலனறிவு வெற்றியானது ரியலிசத்தின் முதன்மையான ஒரு வாதத்திற்கு அடித்தளமாக உள்ளது. அது ‘அற்புதங்கள் அல்ல’ வாதம். இது முதன்முதலாக ஹிலாரி புட்னம் (Hilary Putnam) என்ற ஒரு முதன்மை அமெரிக்க தத்துவவாதியால் இயற்றப்பட்டது. இந்த வாதத்தின் படி, எலெக்ட்ரானும் அணுக்களும் நிஜமாகவே இல்லாவிட்டால் இவற்றை அடிப்படையாக கொண்ட கோட்பாடுகள் மிகச்சரியான கணிப்புகளைக் கொடுப்பது அசாதாரணமான தற்செயலே. எலெக்ட்ரான்களும் அணுக்களும் இல்லையென்றால் அந்த கோட்பாடுகள் புலனறிவு தரவுகளுடன் மிக நெருக்கமாக பொருந்துவதை எப்படி விளக்குவது? இது போலவே நாம் பல கோட்பாடுகளை தவறு என கருதுவோம் என்றால் அந்த கோட்பாடுகள் வழிவகுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை எப்படி விளக்கிக்கொள்வது? ரியலிச மறுப்பாளர்கள் சொல்வது போல எலெக்ட்ரான்களும் அணுக்களும் வசதியான புனைவாக இருக்கும்பட்சத்தில் எப்படி லேசர் செயல்படுகிறது? இதன்படி பார்த்தால் ரியலிச மறுப்பாளராக இருப்பது அற்புதங்களை நம்புவதற்கு ஒப்பானது. எனவே அற்புதங்களற்ற ஒரு மாற்று வாதம் இருக்குமானால் அதைப்பின்பற்றி அற்புதங்களை நம்பாமல் இருப்பதே சிறந்தது. அதாவது நாம் ரியலிசவாதியாக இருக்க வேண்டும்.

‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தின் நோக்கம் ரியலிசம் சரியானது, ரியலிச மறுப்புவாதம் தவறானது என நிரூபிப்பது அல்ல. இது ஒரு நம்பகமான வாதம் மட்டுமே - அதாவது சிறந்த விளக்கத்தின் அடிப்படையில் அனுமானம் செய்வது. இங்கு விளக்கப்பட வேண்டிய உண்மை: அவதானிக்க இயலா தனிப்பொருள்களை முன்வைத்து செயல்படுத்தப்பட்ட பல கோட்பாடுகள் புலனறிவு ரீதியாக நன்கு வெற்றியடைந்துள்ளன. இந்த உண்மைக்கு சிறந்த விளக்கமாக ‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தின் ஆதரவாளர்கள் தருவது: ’அந்த கோட்பாடுகள் சரியானவை, ஏனென்றால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட தனிப்பொருள்கள் நிஜமாக உள்ளன, அவை கோட்பாடுகள் சொல்வது போலவே செயல்படுகின்றன. இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளாத வரை நமது கோட்பாடுகளின் புலனறிவு வெற்றி ஒரு விளக்கப்படாத மர்மமாகவே இருக்கும்’. 

‘அற்புதங்கள் அல்ல’ வாதத்திற்கு ரியலிச மறுப்பாளர்கள் கொடுத்த எதிர்வினைகளில் ஒன்று அறிவியலின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. கண்டறியப்பட்ட காலத்தில் புலனறிவுரீதியாக வெற்றியடைந்த பல கோட்பாடுகள் பிற்காலத்தில் தவறானவையாக மாறியுள்ளன. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன. அமெரிக்க அறிவியல் தத்துவவாதி லாரி லாடன் (Larry Lauda) 1980ல் வெளிவந்த ஒரு புகழ்பெற்ற கட்டுரையில் இதுபோன்ற 30 கோட்பாடுகளை பட்டியலிடுகிறார். அவை அனைத்தும் வெவ்வேறு அறிவியல் துறைகள் மற்றும் காலகட்டத்தை சார்ந்தவை. அவற்றில் பிலோகிஸ்டன் கோட்பாடு ஒரு உதாரணம். இது 18ம் நூற்றாண்டின் இறுதி வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு. இதன்படி, எந்தப் பொருளை எரிக்கும் போதும் அது பிலோகிஸ்டன் (phlogiston) என்ற கருப்பொருளை (Substance) வளிமண்டலத்தில் வெளிவிடும். நவீன அறிவியல் இக்கோட்பாடை தவறு என்கிறது: பிலோகிஸ்டன் போன்ற கருப்பொருள் எதுவும் இல்லை. மாறாக, பொருள்கள் காற்றிலிலுள்ள ஆஸ்சிஜனுடன் வினைபுரியும் போது அவை எரிகின்றன என்கிறது. ஆனால் பிலோகிஸ்டன் என்ற கருப்பொருள் இல்லாமலும் பிலோகிஸ்டன் கோட்பாடு புலனறிவு ரீதியாக நன்கு வெற்றியடைந்தது - அதாவது அந்த காலகட்டத்தில் கிடைத்த தரவுகளுக்கு இக்கோட்பாடு நியாயமாக பொருந்தியது. 

‘அற்புதங்கள் அல்ல’ வாதம் அறிவியல்-ரியலிசம் கொடுத்த ஒரு உடனடி எதிர்வினை மட்டுமே என மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் காட்டுகின்றன. ரியலிச ஆதரவாளர்கள் ’இன்று இருக்கும் அறிவியல் கோட்பாடுகளின் புலனறிவு வெற்றியே அவைகளின் உண்மை தன்மைக்கான சான்று’ என்கிறார்கள். ஆனால் அறிவியலின் வரலாறு காட்டுவது என்னவென்றால் புலனறிவு சார்ந்து வெற்றியடைந்த பல கோட்பாடுகள் தவறானதாக மாறியிருக்கின்றன. ஆகவே இன்றுள்ள கோட்பாடுகளுக்கும் இதே நிலை ஏற்படாது என்பதை நாம் எப்படி அறிவோம்? உதாரணமாக, பருப்பொருள்களின் அணுக்கோட்பாடும் பிலோகிஸ்டன் கோட்பாடு போல ஆகாது என்பதை எப்படியாவது அறிவதுகொள்ள முடியுமா? அறிவியலின் வரலாற்றில் நாம் உரிய கவனம் செலுத்தினால் ’புலனறிவின் வெற்றி’யிலிருந்து பெற்ற அனுமானமான ’கோட்பாடின் உண்மை தன்மை’ உறுதியற்றது என்பதைப் பார்க்கலாம். எனவே அணுக்கோட்பாடை அறியொணாமைக் கொள்கையில் (agnosticism) ஒன்று எனக்கொள்வதே அதன் மீதான பகுத்தறிவு அணுகுமுறை. அதாவது அந்த கோட்பாடு சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம், அது நமக்கு தெரியாது என மறுப்பாளர்கள் கூறுகின்றனர். 

இது ‘அற்புதங்கள் அல்ல’ வாதத்திற்கு வலுவான எதிர்வினை, ஆனால் அறுதியானது அல்ல. ரியலிசவாதிகள் தங்களது வாதத்தை இரண்டு வழிகளில் திருத்தி இதற்கு எதிர்வினையாற்றுகின்றனர். முதலாவது திருத்தம்: ஒரு கோட்பாடின் புலனறிவு வெற்றி அக்கோட்பாடு தோராயமாக சரியாக இருப்பதற்கு சான்று, துல்லியமாக சரியாக இருப்பதற்கு அல்ல. இந்த திருத்தம் ரியலிசத்தை அதற்கு எதிரான வரலாற்று உதாரணங்களுக்கு முன் கொஞ்சம் தாங்கிப்பிடிக்கிறது. மேலும் இது மிதமான வாதம்: ரியலிசவாதிகள் தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்கும் அதேசமயம், அக்கோட்பாடுகள் அதன் இறுதி விவரம் வரை சரியாக இருக்காது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களை அனுமதிக்கிறது. சற்று முன்பு பார்த்த ’மாதிரிகளை மதிப்பிட ரியலிசவாதிகளுக்கு தோராயமான உண்மையே தேவைப்படுகிறது’ என்ற கூற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இரண்டாவது திருத்தம்: ’புலனறிவு வெற்றி’ என்ற கருத்தை கூர்மை செய்கிறது. சில ரியலிசவாதிகள் புலனறிவு வெற்றி என்பது தெரிந்த தரவுகளை பொருத்திப்பார்க்கும் விஷயம் மட்டுமல்ல, அது நாம் அறிந்திருக்காத புதிய அவதானிப்புகளை கணித்து முன்வைக்கிறது என்கிறார்கள். இது புலனறிவு வெற்றியை தீர்மானிக்கும் திடமான அளவுகோள். இந்த அளவுகோலை வைத்து வரலாற்றைப் பார்த்தால், புலனறிவு ரீதியாக வெற்றியடைந்து பின் தவறாக மாறிய கோட்பாடுகளுக்கான உதாரணங்களை தேடுவது சற்று கடினமானது. 

இந்த திருத்தங்கள் ‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தை காப்பாற்றுமா என்பது விவாதத்திற்குரியதே. இவை வரலாற்றிலுள்ள சில எதிர் உதாரணங்களை குறைக்குமே தவிர, முற்றிலுமாக நீக்கிவிடாது. அப்படி எஞ்சும் ஒரு உதாரணம் ஒளியின் அலைக் கோட்ப்பாடு. இது முதலில் கிருஸ்டியன் ஹுய்ஜின்ஸ் (Christian Huygens) என்பவரால் 1760ல் முன்வைக்கப்பட்டது. இந்த கோட்பாடின் படி, ஒளி என்பது ஈத்தர் என்ற கண்களுக்கு புலனாகாத ஊடகத்தில் ஏற்ப்படும் அலை போன்ற அதிர்வுகள், மேலும் ஈத்தர் ஊடகம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. (அலைக் கோட்பாடுக்கு எதிரானது நியூட்டன் சொல்லிய ஒளியின் துகள் கோட்பாடு. துகள் கோட்பாடின் படி ஒளி அதன் தோற்றுவாயால் உமிழப்பட்ட மிகச்சிறிய துகள்களைக் கொண்டுள்ளன.) அலைக் கோட்பாடுக்கு பிரஞ்சு இயற்பியலாலர் அகஸ்டின் ஃப்ரெஸ்னெல் என்பவர் 1815ல் கணிதவியல் கோட்பாடு ஒன்றை வரையறுக்கும் வரை அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின் அது சில ஆச்சரியமான புதிய ஒளியியல் நிகழ்வுகளைக் கணிக்க பயன்படுத்தப்பட்டது. அந்த ஒளியியல் சோதனைகள் ஃப்ரெஸ்னெலின் கோட்பாடை உறுதிசெய்தது. இதன் மூலம் அலைக் கோட்பாடு நிச்சயமாக சரியாக இருக்க வேண்டும் என 19ம் நூற்றாண்டின் பல அறிவியலாளர்கள் நம்பினர். ஆனால் நவீன இயற்பியல் இந்த கோட்பாடை தவறு என சொல்கிறது: ஈத்தர் என்ற ஒரு ஊடகம் உண்மையில் இல்லை, மேலும் ஒளி என்பது ஈத்தரில் ஏற்படும் அலை அதிர்வுகள் கிடையாது. மீண்டும் நமக்கு புலனறிவில் வெற்றியடைந்த அதேசமயம் தவறான கோட்பாடுக்கான ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. 

மேற்கூறிய உதாரணம் ‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தின் திருத்தப்பட்ட வடிவத்திற்கும் எதிராக இருப்பதே அதன் முக்கியமான அம்சம். ஃப்ரெஸ்னெலின் கோட்பாடு புதிய கணிப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே இக்கோட்பாட்டை புலனறிவு வெற்றிக்கான திடமான அளவுகோலுடன் ஒப்பிடும் போது வெற்றியடைவதற்கான தகுதியைப் பெறுகிறது. இக்கோட்பாடு ஈத்தர் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது, ஆனால் அப்படி ஒரு ஊடகம் நிஜமாக இல்லை. எனவே ஃப்ரெஸ்னெலின் கோட்பாடு ’தோராயமாக சரியானது’ என்று சொல்வது கடினம். ’ஒரு கோட்பாடு தோராயமாக சரியானது’ என சொல்வதற்கான பொருள் என்னவாக இருந்தாலும் ஒரு நிபந்தனை அவசியமாக இருந்தாக வேண்டும் - அந்த கோட்பாடு பேசக்கூடிய தனிப்பொருள் நிஜமாக இருக்க வேண்டும். சுருக்கமாக ஒருமுறை பார்க்கலாம்: புலனறிவு வெற்றிக்கு திடமான அளவுகோல் இருந்த போதிலும் ஃப்ரெஸ்னெலின் கோட்பாடு வெற்றியடைந்துள்ளது, ஆனால் தோராயமாக கூட சரியானது அல்ல. ஆகவே இந்த உதாரணம் தரும் நீதி என ரியலிச மறுப்பாளர்கள் சொல்வது என்னவென்றால் ’நவீன கோட்பாடுகள் புலனறிவு சார்ந்து நல்ல வெற்றியை அடைந்திருந்தாலும் அவை தோராயமாக சரியான வழியில் தான் செல்கிறது என கருதவேண்டாம்’.

‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தின் நிலை என்ன என்பது பதிலளிக்கப்படாத ஒரு கேள்வியாகவே உள்ளது. ஏனென்றால், ஒருபக்கம் இந்த வாதம் அறிவியல் வரலாற்றிலிருந்து வந்த கடுமையான சவால்களைச் சந்திக்கிறது. மறுபக்கம், எலெக்ட்ரான்களையும் அணுக்களையும் முன்வைத்த கோட்பாடுகளின் பிரம்மாண்டமான வெற்றியை கருத்தில் கொள்ளும்போது அவை இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். உள்ளுணர்வு சார்ந்த இந்த விஷயமே ‘அற்புதங்கள் அல்ல’ வாதத்தை ஆட்டுவிக்கிறது. ஆனால் அறிவியலின் வரலாறு நமக்கு காட்டுவது என்னவென்றால், இன்றைய அறிவியல் கோட்பாடுகள் என்னதான் நம்முடைய தரவுகளுக்கு நன்கு பொருந்தினாலும் அவற்றை சரி என கருத மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும். முன்பு பல அறிவியலாளர்கள் அது போன்ற கோட்பாடுகள் சரியானவை என நினைத்தனர், ஆனால் பிறகு அவை தவறு என நிரூபிக்கப்பட்டன. 

=================

அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir Okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி

மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவிநாசி

அறிவியல் தத்துவம் :: சமீர் ஒகாஸா - தொடர்