Saturday 8 April 2023

மலம் என்ற ஊடகம் - ஜெயராம்

1961-ல் பியரோ மன்சோனி (Piero Manzoni) என்ற இத்தாலிய காண்பியல் கலைஞர் யாரும் எதிர்பாராத விதத்தில் தன் சொந்த மலத்தை டப்பாக்களில் அடைத்து அதை கலை படைப்பாக (Artist's Shit) ஒரு கலை காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தினார். அந்த டப்பாக்களில் உள்ள மலத்தின் எடைக்கு (30 கிராம்) நிகரான தங்கத்தின் விலையையும் அந்த படைப்புகளுக்கு நிர்ணயித்தார். அன்று அது பைத்தியக்காரத்தனமான செயல்பாடாகவும் சர்ச்சைக்குரியதாகவும் பார்க்கப்பட்டது. இருப்பினும் புகழ்பெற்ற மோனாலிசா என்ற ஓவியத்தின் பெயரை சொன்னால் லியானாடோ டாவின்சியும், டேவிட் சிற்பத்தை சொன்னால் மைக்கலாஞ்சலோவும் நினைவில் எழுவது போல 'மலம்' (shit) என்ற வார்த்தை பியரோ மன்சோனியை ஞாபகப்படுத்தும் அளவிற்கு இந்த படைப்பு பிரபலமானது. கலைஞர்களுக்கே உரிய துடுக்குத்தனத்துடன் நுகர்வு மற்றும் கலையுலகின் மீதான விமர்சனமாக மன்சோனியின் இந்த படைப்பு இருந்தது. 

பியரோ மன்சோனி

ஆனால் மலத்தை தன் படைப்பின் ஊடகமாக ஒரு மனிதன் பயன்படுத்துவது இது முதல் முறையாக நடைபெறுகிறதா? என்று யோசித்துப் பார்த்தால் அப்படி இல்லை என்று தெரியவரும். இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு முறையாவது இதை செய்திருக்கும். ஒரு கைக்குழந்தை தன் அம்மாவின், பெரியவர்களின் கண்காணிப்பில் இல்லாத நேரம் மலம் கழித்தால் உடனே அந்த மலத்தை தன் கையால் எடுத்து விளையாட ஆரம்பிக்கும். சிறிது நேரம் குழந்தையை அப்படியே விட்டால் கூட மலத்தில் தன் அம்மாவையும் அப்பாவையும் பொம்மைகளாக செய்து 'இத்து அம்ம்மா...அப்ப்பா' என்றெல்லாம் நம்மிடம் சொல்ல ஆரம்பிக்கும். அந்த குழந்தையின் வளர்ந்த பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கு இதெல்லாம் அருவருப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால் வளராத குழந்தைகளுக்கு களிமண்ணும், க்ரெயான்ஸும் (color crayons), மலமும் ஒன்றே. தன்னை வெளிப்படுத்துவதற்கான விளையாடுவதற்கான ஊடகங்கள் மட்டுமே (அல்லது உணவு பொருட்கள்). 

குழந்தைகள் தவிர மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களும் மலத்தை அருவருப்பாக பார்க்க தெரியாதவர்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு விதத்தில் உடல் வளர்ந்த குழந்தைகள். என் தாத்தா ஒரு முறை சொன்ன கதை ஞாபகம் வருகிறது. தாத்தாவின் இளமை காலத்தில் ஊரில் மனநலம் குன்றிய ஒருவரை வீட்டிற்கு வடக்கு பக்கம் வெளியே சங்கிலியால் கட்டிப் போடுகிறார்கள் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள். அன்று மனநலம் பாதிக்கப்பட்டவரை பேண வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் இல்லாத காலம். அந்த மனிதர் ஒரு சுமையாக குடும்பத்தாரால் ஒரு 'பைத்தியமாக' அல்லது 'கிறுக்கனாக' மட்டுமே பார்க்கப்பட்டிருப்பார். உணவு தட்டை கொடுப்பதற்கு மட்டும் அருகில் செல்வார்கள். மற்றபடி ஒரிரு நாளுக்கு ஒரு முறை உறவினர்கள் அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். இடைப்பட்ட நேரங்களில் அவர் மலம் சிறுநீர் கழித்தால் அதனுடனே புழங்க வேண்டிய கட்டாயம் அந்த மனிதருக்கு. முதலில் அருவருப்பூட்டும் எந்த ஒன்றுடனும் புழங்க ஆரம்பித்தால் சிறிது நாளில் அந்த அருவருப்பு இல்லாமலாவது சாதாரண மனிதர்களுக்கே கூட இயல்பானது. இவர் மனநலம் குன்றியவர் என்பதால் இயல்பாகவே தன் சொந்த மலம் சிறுநீருடன் புழங்க ஆரம்பிக்கிறார். தான் சாப்பிட்ட ஆயுர்வேத மாத்திரைகளின் வடிவங்களை தன் மலத்தில் உருவாக்கி 'இது கஸ்தூரி மாத்திரை'.. 'இது கோரோசனை மாத்திரை'... என்றெல்லாம் அவரை வேடிக்கை பார்ப்பவர்களிடம் காட்ட ஆரம்பித்தார். 

இங்கே ஒரு நல்ல புகழ்பெற்ற கலைஞனும், குழந்தைகளும், மனநலம் சரியில்லாதவரும் தன்னை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக மலத்தை பயன்படுத்துவதில் ஒரே நிலையில் இருக்கிறார்கள். இந்த மூன்று தரப்பினருக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது இவர்கள் வழக்கமான மனிதர்கள் யோசிப்பதை போல யோசிக்க தெரியாதவர்கள். அதனால் பொதுப்பார்வைக்கு பிறழ்வும், மீறலும் கொண்டவர்கள். மனபிறழ்வுக்கு அருகில் செல்லும் கலைஞர்களை அறிஞர்களை எழுத்தாளர்களை சிந்தனையாளர்களை உலகம் முழுவதும் பார்க்க முடியும்.  வான்கா மனநல காப்பகத்தில் சிறிது காலம் இருந்தவர். கே. ராமானுஜம் இங்கே பைத்தியக்காரனாகவே பார்க்கப்பட்டார்.  உண்மையில் மற்றவர்களை போல வழக்கமாக யோசிக்காமல் மாற்றி யோசிப்பதற்கு கொஞ்சம் 'பைத்தியம்' தேவை தான். ஆனால் சில நேரங்களில் சில கலைஞர்களிடம் இந்த 'பைத்தியக்காரத்தனம்' எல்லை மீறி வான்கா, ராமானுஜம் போல மனநலக் கோளாறாக இருப்பதும் உண்டு.

எப்படி பசியும் காமமும் மனித குலத்தின் பொதுவான தேவையாகவும் இயல்பாகவும் இருக்கிறதோ அதேபோல தன்னை சுற்றி கிடைக்கும் எந்த பொருளையும் ஊடகமாக பயன்படுத்தி தன்னை வெளிப்படுத்துவதும் மனிதர்களின் அடிப்படை இயல்பாக உள்ளது. அந்த ஊடகம் மலமாக இருக்கலாம் அல்லது கல்லாகவோ களிமண்ணாகவோ வண்ணங்களாகவோ இருக்கலாம். லாச்கஸ், பீம்பட்கா போன்ற வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியங்கள் அதை வரைந்த மனிதர்களுக்கு சுலபமாக அப்பகுதிகளில் கிடைத்த வண்ணக்கற்கள், தாதுக்கள், தாவரங்களின் சாறுகள், கரித்துண்டு, வேட்டையாடப்பட்ட மிருகங்களின் ரத்தம், கொழுப்பு போன்றவற்றை உபயோகித்தே வரையப்பட்டது. கைக்கு கிடைக்கும் கரியையோ கல்லையோ எடுத்துக் கிறுக்க ஆரம்பிப்பது எப்போதும் மனிதர்களிடம் இருக்கும் பண்பு தான். இந்த பண்பின் உச்சம் தான் கலைஞர்களிடம் வெளிப்படுகிறது. 

இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டதில் முதல் மனித கிறுக்கல் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கிடைத்த சிப்பி ஓட்டில் ஹோமோ எரக்டஸ் குரங்கு மனிதனால் நாலு லட்சம் வருடங்களுக்கு முன் வரையப்பட்ட கிறுக்கல்கள் ஆகும். அந்த சிப்பி ஓட்டு கிறுக்கல்களை உலகின் முதல் கலைப்படைப்பாக சொல்பவர்கள் உண்டு. ஆனால் மனிதன் குழந்தையாக இருக்கும்போதே படைக்க ஆரம்பித்திருப்பான் என்றால் உலகின் முதல் கலைப்படைப்பு மலத்தால் தான் உருவாக்கப்பட்டிருக்கும். ஏனெனில் தன் அம்மாவின் கண்காணிப்பில் இருக்கும் ஒரு குழந்தையின் கைக்கு முதலில் கிடைக்க வாய்க்கும் ஊடகம் அதன் மலமாகும். மலத்தில் உருவாக்கப்படும் படைப்புகள் சில மணிநேரங்களில் மட்கிப் போவதால் சிப்பி ஓட்டு கிறுக்கல்களை போன்று வரலாற்றில் இடம் பெறாமல் போயிருக்கலாம். தன் மலத்தில் படைப்பை உருவாக்க எத்தனிக்கும் குழந்தை வளர்ந்து பெரிய மனிதனானவுடன் தன்னை சுற்றி கிடைக்கும் கல்லையும் வண்ணத்தையும் ஊடகமாக பயன்படுத்த துவங்குகிறது. அப்படி மனிதன் பழங்குடிகளாக இருந்த போது நாட்டப்பட்ட பிரம்மாண்ட கல் தூண்கள் முதல் நாகரீகம் வளர்ந்த போது உருவான செவ்வியல் ஆக்கங்களான அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவில், கோபுரங்கள், சிலைகள் என்று பெரும் கலை படைப்புகள் எல்லாம்  கல், மண், உலோகம், தாவர சாறு போன்ற வெவ்வேறு ஊடகங்களில் உருவாகின. ஆனால் இந்த படைப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது மலத்துடன் விளையாட ஆரம்பித்த அந்த குழந்தையின் மனநிலை தான்.


என் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் மைலாடி என்ற பாரம்பரியமான சிற்ப கலைக்கூடங்கள் நிறைந்த ஊர் உள்ளது. அங்குள்ள சிற்பிகள் அருகில் உள்ள மலைகளில் பாறைகளில் இருந்து காலங்காலமாக சிற்பங்கள் செய்வதற்கான கற்களை எடுத்து வந்தார்கள். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கற்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கற்கள் வரவழைக்கப்பட்டு சிற்பங்கள் வடிக்கப்படுகிறது. கற்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவுகள் இப்போது அதிகமாக இருப்பதாக சிற்பிகள் கூறுகிறார்கள். ஒரு வேளை தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கற்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டால் இந்த சிற்பிகள் மற்ற மாநிலங்களில் இருந்து கற்களை வரவழைக்கலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கல்லையும் மண்ணையும் எடுக்க கலைஞர்களுக்கு தடை வந்தாலும் கலைச் செயல்பாடுகளை யாராலும் நிறுத்த முடியாது. கல் கிடைக்காவிட்டால் குப்பையில் படைப்பை உருவாக்குவார்கள் கலைஞர்கள். 

இன்று உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அந்த நாடுகள் உற்பத்தி செய்யும் குப்பைகளை நிர்வகிப்பது பற்றியது. ஒவ்வொரு பெரு நகரங்கள் வெளியேற்றும் பல்லாயிரம் டன் குப்பைகளை கையாள்வது சவாலாக மாறியிருக்கிறது. நம்மை சுற்றி இன்று குப்பை அதிகமாக கிடைப்பதால் கலைஞர்கள் குப்பையை ஊடகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். குப்பையில் படைப்புகள் உருவாக்கும் ஹச்.ஏ. ஷுல்ட்(H.A. Schult) போன்ற  கலைஞர்கள் உருவானார்கள். கழிவுப்பொருள்களால் ஷுல்ட் உருவாக்கிய ஆயிரம் ஆளுயர மனித சிற்பங்களின் தொகுதி(Trash people) புகழ்பெற்றது. 

Trash People by H.A Schult

இது போல அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி கிடைக்கும் பல்வேறு பொருள்களை உபயோகித்து படைப்புகள் செய்தார்கள் கலைஞர்கள். இந்தியாவில் சுபோத் குப்தா சமையலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை பயன்படுத்தி பெரிய படைப்புகள் செய்தார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த கலைஞரான பெனிட்டா பெர்சியாள் வளர்வதற்கான இடம் கிடைக்காமல் கடைசியில் குப்பைத் தொட்டியில் சேர்ந்து விடும் பறக்கும் தன்மை கொண்ட விதைகளை குப்பைத் தொட்டிகளில் இருந்தே சேகரித்து சில படைப்புகளை உருவாக்கினார். 

சமையல் பாத்திரங்களால் உருவாக்கப்பட்ட சுபோத் குப்தாவின் படைப்பு. டெல்லி National Modern Art Gallery-யில் உள்ளது

நிகழ்த்து கலைகளில் (Performance art) கலைஞர்கள் தங்கள் உடலை ஊடகமாக பயன்படுத்தி வந்தாலும் மரினா அப்ரமோவிச் (Marina Abramovic) போன்ற கலைஞர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்கள். ரிதம் 0 (Rhythm 0) என்ற அறியப்படும் படைப்பை 1974-ல் மரினா அப்ரமோவிச் நிகழ்த்தினார். மரினா தன் உடலை ஆறு மணிநேரத்திற்கு தாங்கள் விரும்பியதை செய்ய பார்வையாளர்களுக்கு கையளித்தார். பார்வையாளர்கள் பயன்படுத்த 72 வகை பொருட்களும் மேஜை மீது வைக்கப்பட்டது. துப்பாக்கி, ஆணிகள், கத்தி போன்ற அபாயகரமான பொருட்களும் தேன், பூக்கள், வைன், வாசனை திரவியம், போன்ற இனிமையான பொருள்களும் இதில் அடக்கம். கொடுக்கப்பட்ட ஆறு மணி நேரத்தில் இதில் எந்த பொருளையும் பார்வையாளர்கள் மரினாவின் உடலில் பயன்படுத்தலாம் அதற்கு மரினாவிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராது என்பது விதி. முதலில் பூ, தண்ணீர் அளித்தும் முத்தம் கொடுத்தும் சாதாரணமாக நடந்து கொண்ட பார்வையாளர்கள் நேரம் செல்ல செல்ல வன்முறையை பிரயோகிக்க ஆரம்பித்தார்கள். சிலர் அவரது கழுத்தை வெட்டி காயம் ஏற்படுத்தினார்கள். ரோஜா முட்களை உடலில் பதித்தார்கள், ஆடையை கிழித்தார்கள் சிலர், பாலியல் தொல்லை கூட நிகழ்ந்தது. ஒருவர் துப்பாக்கியை மரினாவின் கையில் திணித்து மரினாவின் விரல்களையே பயன்படுத்தி அவரை சுட முயற்சித்தார். ஆனால் துப்பாக்கி கலைக்காட்சிகூட நிர்வாகிகளால் பிடுங்கப்பட்டது. முழுமையான சுதந்திரம் அளிக்கப்படும் போது மனிதர்களின் செயல்பாடு எப்படியெல்லாம் இருக்கும் என்பதை காட்டுவதாக இருந்தது மரினா அப்ரமோவிச்சின் உடலை ஊடகமாக கொண்ட இந்த படைப்பு. ஒரு வேளை வேறு ஊடகங்கள் கிடைக்கவில்லை என்றால் இதுபோல தங்கள் உடலையே ஊடகமாக கலைஞர்கள் பயன்படுத்துவார்கள்.

Marina Abramovic

சில நாட்களிலோ நிமிடங்களிலோ உருகிவிடும் பனி கட்டிகள், கலைந்து விடும் மணல், மட்கிவிடும் இலை பூக்கள் போன்றவற்றை ஊடகமாக்கும் குறுகியகால கலை (Ephemeral art) இன்றைய சமகால காண்பியல் கலையின் முக்கிய பகுதியாக உள்ளன. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் குறுகியகால படைப்புகள் உருவாகிறது. நம் மரபில் வழிபாடுடன் கூடிய விநாயகர் சதுர்த்தி, துர்க்கா பூஜை முடிந்து நீர்நிலைகளில் கரைக்கப்படும் கடவுள் உருவங்கள், கோலம், தீபாலங்காரம், பூ அலங்காரங்கள் போன்றவை இந்த குறுகியகால கலை படைப்புகளின் வகையில் வருபவை. தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்து சூரிய ஒளி இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக துப்பி தெறிக்க விட்டால் வானவில்லின் ஏழு நிறங்களை பார்க்க முடியும். ஓரிரு நொடியில் மறைந்து விடும் இந்த வண்ணங்கள் அளிக்கும் பரவசம் அலாதியானது. இது மாதிரியான தருணங்களின் வெவ்வேறு பரிணாமங்களை குறுகியகால படைப்புகள் அளிக்கிறது. குறுகியகால படைப்புகளில் கூட பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்க முடியும். சை ஹோ சியாங்ஙின்(Cai Guo-Qiang) பிரம்மாண்ட வாணவேடிக்கை படைப்புகள் உதாரணம். குறுகிய காலத்தில் நம்மை நிலைகுலைய வைத்து நம்மில் கேள்விகளை எழுப்பும் படைப்புகளையும் உருவாக்க முடியும். 

BIGGEST FIREWORKS in the WORLD by Cai Guo Quiang

சூழியல் இன்று முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. சூழலை முடிந்தவரை மாசுபடுத்தாத குறுகியகால படைப்புகளை (Environmental art) ஆன்டி கோல்ட்ஸ்வொர்த்தி (Andy Goldsworthy) உருவாக்கினார். அதற்காக பனிக்கட்டி, சிறிது நாட்களில் மட்கிப்போகும் இலைகள், முட்கள், நாணல் ஆகியவற்றை தன் உருவாக்கங்களில் பயன்படுத்தினார் ஆன்டி கோல்ட்ஸ்வொர்த்தி. 


Andy Goldsworthy - environmental artist

Tree painted with black mud by Andy Goldsworthy

இடப்பற்றாக்குறை என்பது பெருநகரங்களில் மட்டுமல்ல கலையுலகிலும் இருக்கிறது. பல கலைகாட்சிக்கூடங்களில் இடம் இல்லை என்பதால் புதிய படைப்புகளை ஏற்க முடியாதவர்களாக உள்ளனர். அல்லது மிக அளவாக மட்டுமே புதிய படைப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் படைப்புகளை, கலை பொருட்களை பாதுகாப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமே அவர்களுக்கு சவாலாக இருக்கிறது. உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் கூட ஆங்காங்கே குப்பைகளை போல தேங்கிக் கொண்டிருக்கிறது. குறுகியகால படைப்புகள் ஒரு விதத்தில் இந்த இட நெருக்கடி பிரச்சனைக்கு பதில் சொல்லும் விதத்தில் இருக்கிறது. புகைப்படம், காணொளிகளில் மட்டுமே குறுகியகால படைப்புகளை ஆவணப்படுத்தி திருப்பி பார்க்க முடியும். 

பல நூற்றாண்டுகள் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் கோபுரங்கள் மற்றும் படைப்புகளுக்கு நேர்மாறாக குறுகிய நேரத்தில் இல்லாமல் போகும், மட்கிப் போகும், அழிந்து போகும் படைப்புகள் உள்ளன. பொது இடங்களில் கலைஞர்கள் உருவாக்கும் படைப்புகளின் மேல் யாராவது கிறுக்கி சூறையாடும் போது வருத்தமும் கோபமும் வரும். ஆனால் சிலருக்கு படைக்க வேண்டும் என்ற உந்துதல் இருப்பது போல மற்ற சிலருக்கு அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பது எதோ விதத்தில் ஆக்கமும் அழிவும் ஒருங்கே கொண்டு சமநிலையுடன் விளங்கும் பிரபஞ்ச சுழற்சியின் இரு வெளிப்பாடுகள் என்றும் தோன்றும். குறுகிய கால படைப்புகள் ஆக்கத்துடன் அழிவையும் எதிர்த்து தருக்கி நிற்காமல் இயல்பாக ஏற்றுக் கொண்டவை. காலங்களை தாண்டி தன் படைப்புகள் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் படைப்புகள் நிகழும் போதுள்ள அந்த விளையாட்டுத்தனமும் மகிழ்வும் வியப்பும் அகஊன்றுதலும் மட்டுமே இதுபோன்ற படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களுக்கு முக்கியமானது. குழந்தை விளையாட்டு போன்றது தான் இதுவும்.

டிஜிட்டல் சாதனங்கள் தொழில்நுட்பங்கள் இன்று குப்பைகளை போல பெருகிவிட்டதால் மின்னணு ஊடக தொழில்நுட்பங்களை தங்கள் ஊடகங்களாக பயன்படுத்தும் ரபீக் அனடோல் (Refik Anadol) போன்ற கலைஞர்கள் உருவாகி விட்டார்கள். ஜென்னி ஹோள்சர்(Jenny Holzer) தன் வெளிப்பாட்டிற்கு பொது இடங்களையும் டிஜிட்டல் விளம்பர தட்டிகளையும் பயன்படுத்துகிறார்.

Infinity Room by Refik Anadol

Refik Anadol Eriyen hatiralar

Private View: Jenny Holzer at Blenheim Palace

சமகாலத்தில் டிஜிட்டலில் உருவாக்கப்படும் படைப்புகளால் மனிதர்கள் விரும்பும் பிரம்மாண்டத்தையும் அதில் அமிழ்ந்து போகும் உணர்வையும் (Immersive experience art) கொடுக்க முடிகிறது. 

Immersive Art Installation by TUNDRA

இன்னும் சூழல்களுக்கேற்ப நாம் எதிர்பார்க்காத ஊடகங்களில் எல்லாம் படைப்புகள் உருவாகும். ஆனால் அதை உருவாக்குபவன் தன்னளவில் பைத்தியக்காரனாகவும் குழந்தையாகவும் நல்ல கலைஞனாகவும் இருப்பான்.

ஜெயராம். ஓவியர்/வடிவமைப்பாளர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.